உயிர்பெறும் நட்சத்திரங்கள்
ஊறவைத்த மண்ணை
சக்கரத்தில் வைத்துச் சுற்றச் சுற்ற
மேலெழும்பி வரும்
பானையில் தெரிகிறது
பிசைதலின் கை வண்ணம்….
சூரியக் காய்ச்சலில்
கெட்டிப்படும் உறுதித்தன்மையை
அவ்வப்போது குலைக்க முயல்கின்றன
கா(ர்) மேகங்கள்….
சக்கரத்தின் கட்ணீடைகளை
அடிக்கடி சரிசெய்கின்றன சுத்தியல்கள்…
மணிகளை உதிர்த்து
கூலமாக மாறிய கதிர்களைப்
பற்றவைத்ததில் வரும் நெருப்பை
பானைகளெங்கும் பரவச்செய்து
பலமேற்றுகின்றன அரிவாள்கள்… பானைவனைதலில்
விழுந்த வியர்வைத்துளிகள்
உயிர்பெறுகின்றன நட்சத்திரங்களாய்….
வெளுத்த வானம்
டூரிங் டாக்கீஸின் கடைசி ரெக்கார்டும் போட்டாச்சு. தெரு விளக்ககோடு ஆங்காங்கே ஒன்றிரண்டு விளக்குகள் எரிந்துகொண்டிருக்கின்றன. எங்கோ ஒரு மூலையில் வெடிச்சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. நட்சத்திரங்களுக்கு இணையாக அவ்வப்போது தோன்றி மறையும் வாணவெடிகள். அணைத்து வைத்திருந்த ஒட்டுப் பீடியைப் பத்தவைத்து உன்னி உன்னி இழுத்துக்கொண்டிருந்தார் அப்பா. கடன் வாங்கி வைத்த கலர் பொடியைக் கோல மாவுடன் கலந்துகொண்டிருந்தாள் அக்கா. வெடிச்சத்தங்களுக்கிடையே மிரட்டிக்கொண்டு போனது இடிச் சத்தம். நானும் அண்ணனும் தெருவிளக்குக்கும் வீட்டுக்குமாய் நடந்துகொண்டிருந்தோம். அங்கே யாரோ நடந்துவரும் நிழல்கண்டு வேகமாக ஓடிப் போய்ப் பார்த்து அது அவள் இல்லையெனத் திரும்பி வந்தோம். நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. தலையில் ஓலைக்கொட்டான் கையில் மஞ்சப்பை, இடுப்பில் காய் வித்த கூடையென உள்ளே நுழைந்தவள் காதலுக்காய்க் காவு வாங்கப்பட்ட அண்ணன் போட்டாவின் முன்வைத்து முகத்தில் வழியும் வியர்வையையும் கண்ணீரையும் துடைத்தபடி எங்களுக்கானதைப் பிரித்துக் கொடுத்து நாங்கள் துள்ளிக் குதித்து ஓடுவதைப் பார்த்து விரியும் அவளின் உதட்டிலிருந்து வெளுக்கத் துவங்கியது வானம்.