இந்து தேசியத் தன்னிலை

நிஷாந்த்

தேசியம் எனும் கற்பனையான அரசியல் / மக்கட் திரளை உருவாக்க இலக்கியங்களும் நாளிதழ்களும் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டன என்கிறார் பெனடிக்ட் ஆண்டர்சன். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தேசியவாதத்தையும் தேசிய உணர்வையும் பரவலாக எடுத்துச்சென்றவர்களுள் இலக்கியவாதிகளும் அடங்குவர். குறிப்பாகக் கவிஞர்கள் பெரும் பங்காற்றினர்.

சமகாலத்தில் அச்சு ஊடகங்கள் தொடங்கி சமூக வலைத்தள ஊடகங்கள் என தேசியத் தன்னிலை உருவாக்கம் பரிணமித்தபடியே உள்ளது. இக்கட்டுரை இந்து தேசியத் தன்னிலை உணர்வாக்க ரீதியில் உற்பத்தியாகும் வெளிகளை அடையாளப்படுத்துகிறது. அதனூடாக, இந்தியாவின் பொதுவெளி இந்து தேசியத் தன்னிலைகளை வெகு இயல்பாக உற்பத்தி செய்யும் வெளியாக அதன் தொடக்க காலத்திலிருந்தே இருந்துவந்துள்ளதையும் கவனப்படுத்துகிறது.

இலக்கியம் : மத்திய காலப்பகுதியில், மத்திய ஐரோப்பாவை மையமாகக் கொண்டு இயங்கிய ஐரோப்பியப் பொருளாதாரம் அதே காலப்பகுதியின் இறுதியில் அட்லாண்டிக் கடல் பகுதியையொட்டிய நிலங்களைச் சார்ந்து இயங்கத் தொடங்கியது. இதனால் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலம் பெற்றிருந்த ஜெர்மனியின் முக்கியத்துவம் கேள்விக்குள்ளாகியது. “படித்த மேட்டுக்குடி ஜெர்மானியர்கள் இங்கிலாந்தில் தொழிற்புரட்சி ஏற்படுத்திய பொருளாதார வளர்ச்சிகளையும் பிரான்ஸிலும் அமெரிக்காவிலும் நடந்த அரசியல் புரட்சிகளையும் கூர்மையாக கவனித்துவந்தனர்.”1 அவர்கள் ஜெர்மனியையும் வளர்ச்சிப்பாதை நோக்கி இட்டுச்செல்ல விரும்பினர்.

மேற்கு ஐரோப்பாவின் சமூக – பொருளாதார வளர்ச்சியினாலும், பிரெஞ்சு புத்தொளி சிந்தனைகளின் தீவிரமான பகுத்தறிவு மற்றும் தனிநபர்வாதத்தினாலும் தாங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டதாகக் கருதிய ஜெர்மன் சிந்தனையாளர்கள், ‘வோல்க்’ (Volk) எனும் கருத்துருவாக்கத் தொன்மத்தின் மீது தனித்தன்மைவாய்ந்த மொழி, சிந்தனை, ஆன்மீகம் போன்றவற்றை உள்ளடக்கிய முழுநிறைவான ஒரு தேசிய நிலத்தையும் மக்களையும் இலக்காக்கம் செய்யத் தொடங்கினர்.”2 ஒருபடித்தான உலகப் பண்பாடு நோக்கிய சிந்தனைகளான வர்த்தகம், பெருநகர வளர்ச்சி, ஆடம்பரம் ஆகியவற்றின் எதிர் முகமாக ஜெர்மன் புராதன விழுமியங்களை முன்னிறுத்தும் தொன்மமாக ‘வோல்க்’ உருப்பெற்றது. பிரெஞ்சு சமூகத்தால் காட்டுமிராண்டித்தனம் எனக் கருதப்பட்ட உள்ளூர் பண்பாடுகள், சிறப்புக்குரிய அறங்களையும் மேன்மையான விழுமியங்களையும் உடையதாக முன்வைக்கப்பட்டன.

பிரெஞ்சு சமூகத்தினர் ஜெர்மானியர்களைப் பண்படாதவர்களாகவும், மூர்க்கமானவர்களாகவும் பார்த்தனர். பிரெஞ்சு சிந்தனையாளர்கள் கோத்திக் (Gothic) பாணியைக் காட்டுமிராண்டித்தனத்தின் கூராக அடையாளப்படுத்தினர். அதையே பின்னாட்களில் ஜெர்மானியர்கள் தங்களுடைய தனித்தன்மை வாய்ந்த அடையாளமாக வலியுறுத்தத் தொடங்கினர். ஜெர்மன் அடையாளத்தின் பெருமையை நிலைநாட்டுவதற்கான கூறுகளைச் சமகாலத்திலும் வருங்காலத்திலும் தேடிய ஜெர்மன் சிந்தனையாளர்கள், இறுதியாகத் தங்களுடைய தேசிய அடையாளத்தின் மூலத்தைக் கடந்த காலத்தில் இடப்படுத்தினர்.

“ரோமானிய வரலாற்று ஆசிரியர் டாசிடஸ் எழுதிய ‘ஜெர்மானியா’ நூலில் ரோமானியர்களை வென்ற அர்மினியஸின் கதை இடம்பெற்றிருந்தது. அக் கதையைப் பிற்காலத்தில் ஜெர்மானியர்கள் தங்களுடைய புராதன வரலாற்றுப் பெருமையை நிலைநாட்டப் பயன்படுத்திக்கொண்டனர்.”3 ரோமானியப் பண்பாட்டின் நீட்சியாகத் தங்களை முன்வைத்துக்கொண்ட பிரெஞ்சு சமூகத்தின் ஆதிக்கத்திற்கு எதிரான தொன்மத்தை உருவாக்க அர்மினியஸின் கதை மிகுந்த பொருத்தப்பாட்டை உடையதாய் இருந்தது. 1761இல் ஜேம்ஸ் மேக்பெர்சன் எனும் ஸ்காட்டிஷ் மொழிபெயர்ப்பாளர் பதிப்பித்த ஓஸியானின் கவிதைகளும் ஜெர்மானியர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அக்கவிதைகள், சமூகத்தில் அடிநிலையில் உள்ள மக்கள் ஆகச்சிறந்த விழுமியங்களின் சொந்தக்காரர்களாக இருக்க முடியும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தின. மனதளவில் தளர்ந்தும் சமூகத்தோடு அந்நியப்பட்டும்போன ஜெர்மானிய இளைஞர்களிடையே அக்கவிதைகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. மாகாணங்களாகச் சிதறிக்கிடந்த இத்தாலியை ஒன்றிணைத்த தேசியவாதியான மாஸினியும் அக்கவிதைகளின் தீவிர ரசிகர் என்று குறிப்பிடுகிறார் பங்கஜ் மிஸ்ரா.

ஜெர்மானிய நிலங்களை நெப்போலியன் ஆக்கிரமித்தபோது, ஜெர்மானிய கலாச்சார ரொமான்டிஸிஸமானது தேசியவாத அரசியலாக உருமாற்றம் கண்டது. அதேசமயம் பிரெஞ்சின் மேலாதிக்கத்திற்கு எதிராக ஜெர்மன் தனித்தன்மையை நிலைநாட்டுவதன் தேவையும் கற்பிதமான புராதன ஜெர்மானிய நிலத்தின் உருவாக்கத்தை அவசியமாக்கியது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜெர்மன் ரொமாண்டிக் சிந்தனையாளர்களான ஜோஹன் காட்லீப் ஃபிச்டேவும் (Johann Gottlieb Fichte), ஜோஹன் காட்ஃபிரைட் ஹெர்டரும் (Johann Gottfried Herder) மொழிதான் தேசியத்தின் அடிப்படையென முன்வைத்தனர். ஜெர்மன் ரொமாண்டிக் ஆளுமைகள் ஜெர்மானிய தேசியவாதத்தின் மலர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றினார்கள். ஜெர்மனியைத் தொடர்ந்து இத்தாலி, ஹங்கேரி, போலந்து என மொழியையும் கலாச்சாரத்தையும் இணைத்து அதனடிப்படையில் தேசியவாத உணர்வை வளர்த்தெடுத்தனர். அரசியல் காரணங்களுக்காகக் கவிஞர்களும் கலைஞர்களும் புதிய தொன்மங்களையும் வரலாற்று நாயகர்களையும் உற்பத்தி செய்தனர். இவ்வாறு தொன்மங்களை உற்பத்தி செய்வதற்குக் கவிதைகளும் அடித்தளம் ஏற்படுத்திக்கொடுத்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஐரோப்பியக் கவிஞர்களைப் போலவே காலனியாதிக்கத்திற்கு எதிராகத் தேசிய உணர்வை வளர்த்தெடுக்க விரும்பிய காலனி நாடுகளின் கவிஞர்களும் தொன்மங்களையும் கற்பிதமான வரலாற்று நாயகர்களையும் உற்பத்தி செய்தனர். இந்தியச் சூழலில் தேசியத் தன்னிலை உருவெடுத்த விதங்களையும் இங்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

பிரிட்டிஷ் இந்தியாவிலும் படித்த உயர்சாதி மற்றும் மேட்டுக்குடி கவிஞர்களும் இலக்கியவாதிகளும் தேசியவாதத்தை நிலைநிறுத்த முயன்றனர். இந்திய தேசத்தைத் ‘தாயாக’ உருவகிக்கும் சாத்தியத்தை ஏற்படுத்தியவர்களும் அவர்களே. இந்தியாவை ஒரு தேசியமாகக் கற்பனை செய்யும் சாத்தியப்பாட்டைக் காலனிய ஆட்சிதான் ஏற்படுத்தியது. ஆனால், மேட்டுக்குடி தேசியவாதிகள் இந்திய தேசத்தின் (பாரதம்) மூலமானது வேத காலத்தில் இருப்பதாக நிறுவ முற்பட்டனர்.

தேசியவாதிகள் இந்தியப் பொதுவெளியை அரசியல்மயப்படுத்திய பிறகு ஒவ்வொரு சாதியினரும் தங்களுக்குரிய அரசியல் வெளியைக் கோருவதற்குத் தங்களுக்கேயுரிய பெருமைமிகு கடந்தகால வரலாறைக் கட்டமைக்கத் தொடங்கினர். அதன் விளைவாகவே ஒவ்வொரு சாதியினரும் தங்களை ஒரு வீரமிகு அரச குலத்தின் நீட்சியாகக் கற்பிதம் செய்துகொண்டனர். மெட்ராஸ் மாகாணத்திலுள்ள பிராமணரல்லாதோர் தங்களை ஆரிய மேலாதிக்கத்திற்கு முந்தைய அரசர்களின் வரலாற்றுத் தொடர்ச்சியாக முன்வைத்ததை காங்கிரஸின் அனைத்திந்திய தேசியவாதத்திற்கான எதிர்ப்பாகப் பார்த்தாலும் கற்பிதமான கடந்தகாலத்தை அரசியல்படுத்தும் தேசியவாதத் தர்க்கத்தையே அது மீள் உருவாக்கம் செய்தது.

வங்காள நாவலாசிரியர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ‘வந்தே மாதரம்’ இந்தியா முழுக்கப் புகழ்பெற்ற பாடலாகும். பாடலின் முதல் பத்தி இயற்கை அழகையும் வளமான சுற்றுச்சூழலையும் போற்றிப் பாடுவதாக அமைந்துள்ளது. இந்த வளமான நிலப்பகுதியானது கொடையுள்ளமும் சந்தோஷமும் நிறைந்த ‘தாயாக’ உருவகப்படுத்தப்படுகிறது. மூன்றாம் பத்தி முற்றிலும் வேறொரு பரிமாணத்தை வழங்குகிறது. ஏழு கோடி மக்கள் தங்களுடைய தாயான பாரத நாட்டை எதிரிகளிடமிருந்து காக்க வாள் ஏந்தியபடி நிற்கிறார்கள் என்பதை அப்பத்தி உணர்த்துகிறது. அதனால்தான் ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகள் ‘வந்தே மாதர’த்தைத் தேசிய கீதமாகக் கருதுகின்றனர். வங்காளத்தின் தேசிய கீதமெனப் பாராட்டிய அரவிந்தர், இப்பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். தேசிய கீதமான ‘ஜன கன மன’ அளவிற்கான மரியாதையை நாம் ‘வந்தே மாதரம்’ பாடலுக்கும் செலுத்த வேண்டும் என்றார் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத். 1997இல் ஐம்பதாவது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ‘வந்தே மாதரம்’ எனும் இசை தொகுப்பை வெளியிட்டார். அது உலகளாவிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. ஆல்பம் வெளியான ஆண்டில் 1.5 மில்லியன் பிரதிகள் இந்தியாவில் விற்றுத் தீர்ந்தன.

1875ஆம் ஆண்டிலேயே பங்கிம் சந்திர சாட்டர்ஜி ‘வந்தே மாதரம்’ பாடலை எழுதி முடித்திருந்தார். ஆனால், 1882ஆம் ஆண்டில்தான் ‘ஆனந்தமாத்’ நாவலின் கதைக்குள் இணைத்து அப்பாடலை வெளியிடுகிறார். அக்கதையோடு சேர்த்து வாசிக்கும்போது பாடலுக்கு அரசியல் பொருத்தப்பாடுகளும் கிடைக்கிறது. இந்து மதத்தை வீழ்ச்சியிலிருந்து மீட்க மத அடிப்படையிலான தேசியத்தை உருவாக்க எண்ணினார் பங்கிம். இந்து சமூகத்தின் பெருமையை நிலைநாட்ட விழையும் இந்துக்களின் முழக்கமானது ‘வந்தே மாதரம்.’ இலட்சிய இந்து சமூகமென்பது இஸ்லாமியர்களின் வருகைக்கு முன்பானதென்று அவர் நம்பினார்.

“பார்ப்பனிய மேலாண்மைவாத அடையாளத்தைப் பாரத அடையாளமாக முன்வைத்தவர்களுள் ஒருவர் பங்கிம்.”4 தன்னுடைய வாழ்நாளின் கடைசி நாட்களில் ‘சீதாராம்’, ‘மிர்னாளினி’, ‘ஆனந்தமாத்’ என மூன்று நாவல்களை எழுதினார். அவை யாவும் இஸ்லாமிய வெறுப்பை உள்ளடக்கியிருந்தன. பெருமைவாய்ந்த இந்து சமூகத்தை மீட்டெடுக்க மிலிட்டண்ட் (militant) இந்துக்களை உருவாக்க விழைந்தார். அதன் வெளிப்பாடாகவே ‘ஆனந்தமாத்’ நாவலில் இந்து சனாதனிகள் இஸ்லாமியர்களின் வீடுகளைச் சூறையாடுவது பெருமைமிகு செயலாக உயர்த்திப்பிடிக்கப்படுகிறது. இஸ்லாமியர்கள் மீதான வன்முறையை வெளிப்படையாகக் கோரும் மிலிட்டண்ட் பாடலான ‘வந்தே மாதரம்’ பின்-காலனிய இந்தியச் சமூகத்தில் இயல்பாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆகையால்தான் எந்தக் கேள்வியும் இன்றி இந்திய வெகுஜன வெளியில் இன்றுவரை ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்திய தேசியத் தன்னிலை உருவாக்கத்தில் இப்பாடல் அளப்பரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

காட்சி ஊடகம்: மாத / வார இதழ்கள், நாளிதழ்கள் முதலான அச்சு ஊடகங்கள் தேசியத் தன்னிலை உருவாக்கத்தில் செயலாற்றியதைப் போல பின்-காலனிய இந்தியாவில் காட்சி ஊடகங்களும் மிகப்பெரிய பங்காற்றுகின்றன. இந்து தேசியவாதத் தன்னிலையின் உள்ளடக்கங்களான இந்திய நாகரிகம், வேதகாலப் பெருமை, வடமொழி மேன்மை, வருணாசிரமம் உள்ளிட்ட கருத்தாக்கங்கள் ஊடகங்கள் மூலம் வெகுஜன வெளியை நிரப்பின. “1904இல் இந்திய சமூகத்தை ஆரிய தேசிய இனம் (Aryan Nationality) என்றே இந்து ஆங்கில நாளிதழ் எழுதியது.”5

ஒளிபரப்புச் சாதனங்களின் வருகை இந்தியப் பொதுவெளியையும் விரிவாக்கியது. “இந்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தேசிய உணர்வை நிலைநாட்டுவதற்குத் தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தியது. அதன் பெயரிலேயே ராமாயணம் என்கிற தொலைக்காட்சித் தொடரை ஒளிபரப்பியது.”6 அவ்விதமே ராமாயணத் தொடரானது ராம ஜென்ம பூமி இயக்கத்திற்கான சாதி இந்துக்களின் ஏற்பை உருவாக்கியது. “ராமாயணம் என்கிற பெருங்கதையாடல் அரசுத் தொலைக்காட்சியின் மூலம் ‘prime-time’இல் பரவலாக்கப்படுகிறது. இந்த ராமாயணத்தைப் பார்க்கச் செய்வதற்காகப் பத்திரிகைகள் உருவாக்கிய கதையாடல்கள் ஏராளம். இதற்காக அறுவை சிகிச்சைகள்கூட மாற்றி வைக்கப்பட்டன. ஒளிபரப்பப்படும் அந்தக் குறிப்பிட்ட நேரம் நாடே உறைந்து போன ஓர் அமைதி, போர்த் தயாரிப்புகளில் நிலவுவதைப் போன்று. ராமாயணத் தொடர் முடிந்த பிறகு, அதன் கதாபாத்திரங்கள் சமகால அரசியலுக்குள் வருகிறார்கள் தேர்தல் வேட்பாளர்களாக. பின், நாடெங்கும் ‘கரசேவை’க்கான கல் சேகரிப்பு இயக்கம். ‘பாரத வரலாறு’ மக்களிடம் பரவலாக்கப்பட்டு, கல்லின் வழியாகப் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. சாதாரண ‘கல்’ வலிமையானதொரு குறியீடாகி, ராமர் கோயில் கட்டப்படும் ‘தேசியப் பணியில்’ மக்கள் அனைவரும் பங்கு பெறவும், அதற்கான பொறுப்பை ஏற்கவும் மக்களது மனநிலையைத் தயார் செய்ய முயன்றது. இக்கற்கள் ஒவ்வொரு குடிமக்களையும், பாரத கட்டடக் கற்களாக, வரலாற்றுத் தன்னிலைகளாக மாற்றியது. இவ் ஊர்வலம் மூலம், தேசிய எல்லைப் பரப்பும் ஒரு சுற்றுவட்டம் இடப்பட்டு, பல்வேறு இன, மொழி, கலாச்சார அடையாளங்கள் ‘பாரதவாசி’ என்கிற ஒற்றைக் குறியீடுக்குள் சுருக்கப்படுகிறது.”7

அதனைத் தொடர்ந்து தேசியக் கலாச்சாரத்திற்கு நவீனத்தன்மையை ஊட்டுவதற்குப் பெண்களின் சமூக முன்னேற்றம் சார்ந்த உரையாடல்கள் பொதுவெளியில் மேலெழுந்தன. 1980களின் இறுதியிலும் 1990களின் தொடக்கத்திலும் தூர்தர்ஷனில் வெளியான தொலைக்காட்சித் தொடர்கள் மத்தியத் தர வர்க்கப் பெண்களின் வாழ்க்கையை மையமிட்டிருந்தன. “தூர்தர்ஷனின் தொடர்களில் தொழிற்பட்ட பெண் தன்னிலை மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்ததாக இருந்தது.”8 இந்தியப் பெண் தன்னிலை மேற்கத்தியப் பெண் தன்னிலையிலிருந்து மேலானதாய்க் காட்டப்பட்டது. தூர்தர்ஷனில் வெளியான தொடர்கள், பின் காலனிய இந்தியாவின் பெண் தன்னிலை நவீனமாய் இருக்க வேண்டும். ஆனால், மேற்கத்தியத் தன்னிலையாக இருக்க வேண்டியதில்லை என்கிற கருத்தை வலியுறுத்தின.

1950களில் உருவான இந்திய சினிமாக்களும் தேசியத் தன்னிலைகளை உற்பத்தி செய்வதிலும் தேசப்பற்றுள்ள குடிமக்களை உருவாக்குவதிலும் ஈடுபட்டிருந்தன. தமிழ்ச் சூழலில் தேசியவாதக் கற்பனையை வலுவாக்கிய திரைப்பட இயக்குநர்களுள் முக்கியமானவர் மணி ரத்னம். “1995ஆம் ஆண்டு வெளியான மணிரத்னத்தின் ‘பம்பாய்’ திரைப்படம்தான் முதன்முதலில் ‘உலகப் படவிழாக்களில்’ அதிகமும் திரையிடப்பட்ட படம். இதற்கு முன்பாக, ‘அகில இந்திய அளவில்’ மணி ரத்னம் அறியப்பட்டது காஷ்மீர் பிரச்சினை பற்றிய அவரது ‘ரோஜா’ படத்தின் மூலம்தான். உலக அளவிலும் இந்திய அளவிலும் மணி ரத்னத்தை முக்கியமான திரைப்பட இயக்குநராக முன்னிறுத்திய இரண்டு படங்களும் இந்து – முஸ்லிம் பிரச்சினை குறித்த படங்கள்தாம். கெடுபிடிப் போர்க்காலம் முடிந்து உலக அளவில் இஸ்லாத்தின் இருத்தல் மேற்கத்திய – அமெரிக்கச் சமூகங்களில் பிரச்சினைக்குரியதான காலம் இது. பிஜேபியின் இந்துத்துவ தேசியம் வீறுகொண்ட காலமும் இதுதான். ‘ரோஜா’வை அத்வானி பார்த்துவிட்டுப் பாராட்டினார். ‘பம்பாய்’ படத்தை அதிகம் பாராட்டிய கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.”9 ‘ரோஜா’, ‘பம்பாய்’, ‘உயிரே’ போன்ற திரைப்படங்கள் குறிப்பிட்ட எந்த அரசியலையும் சாராமல் இந்தியாவை ஒன்றிணைக்கும் இந்தியத் தேசிய உணர்வையும் தேசப் பற்றையும் ஊட்டுவதாகச் சொல்லப்பட்டுவந்துள்ளது. ஆனால், அவருடைய படங்களில் இந்து தேசியவாதத் தர்க்கங்களே திரைக்கதைகளாகின்றன. ‘பம்பாய்’ திரைப்படம் இந்து – முஸ்லிம் இருமையை இந்து பெரும்பான்மைவாத சட்டகத்தின் வழியாகப் பார்க்கிறது என்கிறார் ராஜேஷ் ராஜாமணி. ஏனெனில், பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்குப் பின்னர் தலையெடுத்த பம்பாய் வன்முறைகளில் இந்துக்களின் பங்கு இரண்டாம் பட்சமானதாகவும் இஸ்லாமியர்கள்தான் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வன்முறையைத் தூண்டியவர்கள் என்றும் சித்திரிக்கப்படுகிறது. தூண்டப்பட்ட வன்முறைக்குப் பதில் சொல்லும் விதமாகவே இந்துக்கள் வன்முறையில் ஈடுபடுவதாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளது. புனைவு எழுத்தாளர்கள், சினிமா இயக்குநர்கள் தங்களுடைய படைப்புகளில் அழகியல் ரீதியான இணைப்புகள் என்கிற பெயரில் அல்லது ஒரு காவியத்தன்மைக்காக வேண்டி, அசமத்துவமான அதிகாரத் தொடர்புகளுடைய இரு நிகழ்வுகள், இரு மனிதர்கள், அல்லது இரு சிக்கல்களிடையே ‘போலியான சமன்’ (false equivalency) ஒன்றை உருவாக்கி முடிவு காண்பர்.

‘தி கஷ்மீரி ஃபைல்ஸ்’ திரைப்படத்திற்கு முன்னோடியாக ‘ரோஜா’ திரைப்படத்தைச் சொல்லலாம். அத்திரைப்படம் கஷ்மீரி பண்டிட்களின் மனிதநேயத்தைப் புரிந்துகொள்ளுமாறு கஷ்மீரி முஸ்லிம்களிடம் வலியுறுத்துகிறது. ‘ரோஜா’ வெளியாவதற்கு முன்புவரை கஷ்மீர் அரசியல் சார்ந்த உரையாடல்கள் தமிழ் வெகுஜன வெளியில் அநேகமாக இல்லை என்றே கூற வேண்டும். தமிழ்ச் சூழலில் இந்தியத் தேசியத் தன்னிலை உருவாக்கத்தில் மணி ரத்னத்தின் திரைப்படங்கள் தவிர்க்கவியலா இடத்தைப் பெற்றுள்ளன. எந்த மதச் சாயமும் இல்லாமல் இரண்டு பக்கங்களினதும் நியாயங்களைக் கூறி, அவர்களுக்கிடையேயான பிரச்சினைக்குத் தீர்வு இந்தியத் தேசியத்தோடு கலப்பதுதான் என்பதையே மணி ரத்னத்தின் திரைப்படங்கள் முன்வைத்தன.

பெரும்பாலான தேசியவாதப் படங்களின் பாணியும் இதுவே. 2022ஆம் ஆண்டு வெளியான தேசியவாத திரைப்படங்களான ‘RRR’, ‘சீதா ராமம்’ போன்ற திரைப்படங்களும் இந்து பெரும்பான்மைவாத தர்க்கத்தையே எடுத்தாளுகின்றன. ‘RRR’ திரைப்படத்தில் நடிகர் ராம் சரண் நடித்திருந்த ராம் கதாபாத்திரம் அம்பின் முனையில் வெடிகுண்டு ஒன்றைப் பொருத்தி எய்தும் காட்சியானது தயானந்த சரஸ்வதி, விவேகானந்தர் முதலான இந்து தேசியவாதிகள் முன்வைத்த மிலிட்டண்ட் (militant) ராம ராஜ்ஜியத்தை மிகத் துல்லியமாகச் சித்திரிக்கிறது.

தேசியத் தன்னிலைகள் முற்றுப்பெற்ற நிலையில் இருப்பதில்லை. மாறாக, அவை பொதுவெளியின் ஊடாக உருவாக்க நிலையில் புதிய குறியீட்டு அர்த்தங்களைப் பெற்றபடி உணர்வுப்பூர்வமான நிலையிலும் ஆக்கப்பூர்வமான நிலையிலுமே இருக்கின்றன. ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப், டிக்-டாக் போன்ற சமூக வலைதள ஊடகங்களின் வருகை பொதுவெளியின் எல்லைகளை விஸ்தரித்த சமீபத்திய வரலாறை இங்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. துரிதமான ‘பகிர்வு’ செயல்பாட்டின் மூலம், இந்து தேசியவாதச் சொல்லாடல்கள் தேசியத் தன்னிலைகளைத் தாங்கிய உடல்களை உருவாக்கும் வெளியாகச் சமூக வலைதளம் செயல்படுகிறது.

Design: Negizhan

கிரிக்கெட்: விளையாட்டுப் போட்டிகள் என்பதும் தேசியத் தன்னிலைகளைக் கட்டமைக்கும் வெளியாகச் செயல்பட்டுவருகின்றன. விளையாட்டுப் போட்டிகள் அரசியல்மயப்படுத்தப்படும்போது அடிப்படையிலேயே ஓர் எதிரியை, ஒரு மற்றமையை எளிதாகக் கட்டமைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. விளையாட்டுத் தொடர்பான உருவகங்களைப் போர்முழக்கம் போன்ற தொனியில் அரசியல் தலைவர்கள் பயன்படுத்துவதை மைக்கல் பில்லிங் சுட்டிக்காட்டியுள்ளார். (பார்க்க: Banal Nationalism) உலகளவிலான ஒவ்வொரு விளையாட்டு அணியும் ஒரு தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜெயிக்கவும் தோற்கவும் செய்கின்றன. அது தேசத்தின் வெற்றியாகவோ தோல்வியாகவோ வாசிக்கப்படுகிறது. ஒரு விளையாட்டுச் செய்தியை வாசிக்கும் வாசகர் அச்செய்தியோடு குறியீட்டு ஒன்றுதல் (symbolic identification) அடையும்போது அங்கு ஒரு தேசியத் தன்னிலை உருவாகிறது. ஆகையால்தான் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான திரைப்படங்கள் பெரும்பாலும் தேசியவாதச் சட்டகத்தினுள்ளிருந்தே கதை சொல்கின்றன. இந்தியாவில் இந்து தேசியவாதம் தொழிற்படும் முக்கியமான வெளிகளுள் ஒன்று கிரிக்கெட் மைதானமாகும்.

1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்ற பிறகு தேசிய அடையாளமாக கிரிக்கெட் போட்டியாளர்கள் (‘வீரர்கள்’) ஆக்கப்பட்டனர். அதற்கு வண்ணத் தொலைக்காட்சிகளின் பெருக்கமும் வழியேற்படுத்திக்கொடுத்தது. அதைத் தொடர்ந்து, அதுவரை பாலிவுட் நாயகர்களுக்கு அளிக்கப்பட்ட இடம் சச்சின், தோனி, விராட் கோலி முதலான கிரிக்கெட் ‘வீரர்களுக்கு’ அளிக்கப்பட்டுவருகிறது. 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளின்போது இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல் குழந்தை பிறந்தது. “குழந்தை பிறந்தபோது இந்தியாவில் இருந்திருக்க வேண்டுமென்று நினைத்தீர்களா?” என்று கேட்டபோது “இல்லை, நான் தேசியப் பணியில் இருக்கிறேன். மற்ற சமாச்சாரங்கள் அனைத்தும் அது முடியும்வரை காத்திருக்கட்டும்” என்று பதிலளித்தார். இதனை தோனியின் தனிப்பட்ட கருத்தாகப் பார்ப்பதைக் காட்டிலும் விளையாட்டு என்பதே தேசியப் பணியாகக் குறியீட்டாக்கம் அடைந்துள்ளதைக் கவனிக்க வேண்டும். தோனிக்கு எல்லையோர இராணுவப்படையில் லெப்டினன்ட் கர்னல் கௌரவ பதவி அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ஒருவகையில் இராணுவமும் தேசிய கிரிக்கெட் அணியும் குறியீட்டு ரீதியாக ஒரே பணியைச் செய்கின்றன.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டிகள் நிகழும்போதெல்லாம் இந்திய அணிக்கு ஆதரவளித்துத் தேசப்பற்றை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கும் மன நெருக்கடிக்கும் இந்திய முஸ்லிம்கள் ஆளாக்கப்படுவதைப் பார்த்துள்ளோம். இந்தியா பாகிஸ்தான் போட்டியையொட்டிப் பல்வேறு தேசியவாதச் சொல்லாடல்கள் உருவெடுக்கும். இந்திய முஸ்லிம்களையும், இந்திய அணியில் உள்ள முஸ்லிம் போட்டியாளர்களையும் ‘துரோகி’களாகச் சித்திரித்துச் செய்திகள் வெளியாவதை கவனிக்க முடியும். பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை போட்டியில் (2022) இந்தியா தோல்வியடைந்தபோது இந்திய அணியின் சீக்கிய வீரரான அர்ஷதீப் சிங் ‘காலிஸ்தானி’ என்றழைக்கப்பட்டார். 2021ஆம் ஆண்டு இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடைந்தபோது இந்திய அணி வீரரான முகமது ஷமியைத் ‘துரோகி’ என்றும் பாகிஸ்தான் அணிக்கு விலை போய்விட்டார் என்றும் வசைபாடினார்கள். அப்போட்டியின் தோல்வியை அடுத்து பஞ்சாப் கல்லூரியொன்றில் படித்த காஷ்மீரி மாணவர்கள் உட்பட இந்தியா முழுவதும் 14 காஷ்மீரி மாணவர்கள் தாக்கப்பட்டனர்.

2008ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதல்களை ஒட்டி இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. இன்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படுவதில்லை. Inside Sport பத்திரிகைக்குப் பேட்டியளித்த ஐபிஎல் அணியொன்றின் உரிமையாளர் பின்வருமாறு கூறினார்: “முதலில், சட்டரீதியாக நிறைய சிக்கல்கள் உள்ளன. இரண்டாவது, இந்திய ரசிகர்கள் அதற்குக் கடுமையாக எதிர்வினையாற்றுவார்கள் என்று நினைக்கிறேன். யாரும் தங்களுடைய வாடிக்கையாளர்களைப் புண்படுத்த விரும்ப மாட்டார்கள். அவ்வகையில் இந்திய ரசிகர்களைப் புண்படுத்த விரும்பவில்லை.” இங்கு இந்திய ரசிகர்கள் என்பவர்கள் யார்? பஞ்சாப் கல்லூரியில் படித்த காஷ்மீரி மாணவர்களை அடித்துக் காயப்படுத்திய இந்து பெரும்பான்மைதான் அந்த ரசிகர்கள். பாகிஸ்தான் அணியினர் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடினால் அவர்களைப் பின்னர் ‘எதிரி’களாகச் சித்திரிப்பதற்குத் தடையாகவும் இருக்கும். மைதானத்தில் ஆர்ப்பரிக்கும் உடல்கள் ஒன்றித்து இன்பத்திளைப்பை அடையுந்தோரும் அவை இந்து தேசிய உடல்களாக உற்பத்தியாகின்றன. இவ்வாறு நாடுகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் கூட்டுப் பரவசத்தின் (collective effervesce) ஊடாக தேசியத் தன்னிலையை உருவாக்கியும் உசுப்பியும் விட்டுப் பெரும்பான்மைவாதத்தை நிலைநாட்டிக்கொள்ளும் வெளியாக உள்ளது. “மக்கள் குழுமங்கள் கூட்டுப்பரவசத்தில் ஆட்படுவதற்கு அவர்களுக்கு இடையூறாக உண்மையான அபாயங்கள்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மாறாக, இது நமது சமூக உடலைத் தாக்கும் ஆபத்து கொண்டது என்று அவர்கள் வசதியாக நம்பினாலே போதுமானது.”10

இந்து தேசியத் தன்னிலையின் ஆன்மீகம்: இந்து தேசியத் தன்னிலையை விமர்சிக்குபோது அதனை மேலோட்டமான உணர்வுநிலையாகவும் மெய்யான உணர்வுநிலைகளுக்கு எதிர்மையிலும் இடப்படுத்தும் போக்கு உள்ளது. அவ்வாறு செய்யும்போது பொதுவெளியில் தொழிற்படும் தேசியவாதத்தின் உணர்வாக்கப் பரிமாணங்களைத் (affective dimensions) தவறவிடுகிறோம். உதாரணமாக, ராமர் கோயில் என்கிற பௌதீகமான ‘கட்டடம்’ ராம ராஜ்ஜியத்தைக் குறிக்கும் ‘உணர்வாகத்’ தொழிற்படுகிறது. கோயில் என்பதைத் தாண்டி மேலதிகமாக அது இஸ்லாமியர்களை வென்று இந்து பெருமிதத்தைப் பறைசாற்றும் ராம ராஜ்ஜியத்தை நிலைநாட்டியதன் உணர்ச்சிப் பூர்வமான புள்ளியாக இந்து தேசியவாதிகளுக்கு அர்த்தப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ் செயற்பாட்டாளர்கள் தங்களுடைய இயக்கம், கலாச்சார அமைப்பாகவும் ‘சுய மேம்பாட்டு / அடையாள’ உருவாக்கத்தோடும் தொடர்புடையது என்கின்றனர். சாதி, வகுப்பு வித்தியாசங்களை எளிமையாக உட்செரித்து அணிகளை ஒருங்கிணைத்து இந்துத்துவம் வலுப்பெற காரணம் அதனுடைய செயற்பாடுகள் முதன்மையாகக் கலாச்சார தளத்தைக் குறி வைப்பவை. அதன் கருத்தியல் மேலாதிக்கம் கலாச்சார மட்டத்தில் ஆழப் பதிந்துள்ளதால் ஆட்சி மாற்றத்திற்கு அப்பாலும் மேலாண்மை வாய்ந்த கருத்தியலாக நீடிக்கக் கூடிய தன்மையை உடையது. ‘பிஜேபி ஆட்சியதிகாரத்திலிருந்து விலகிவிட்டால் இந்துத்துவம் ஒழிந்துவிடும்’ என்பது, தேர்தல் அரசியலுக்கு அப்பால் தினசரி வாழ்முறைகளும் சமூக அமைப்புகளும் பாசிசத் தன்மையுடையனவாக மாறியுள்ளதைக் கவனிக்கத் தவறுவதாகும். ஆகையால்தான், நாடாளுமன்றத் தேர்தலையொட்டி நிகழ்த்தப்படும் அரசியல் காரியமாக மட்டுமே ராமர் கோயில் திறப்பை அடையாளப்படுத்துவது இந்து தேசியத்தை அமைப்பதில் சாதி இந்து சமூகத்திற்கு உள்ள ஏற்பைப் புறந்தள்ளும் நடவடிக்கையாகும்.

2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையையொட்டி வேளச்சேரி வணிக வளாகமொன்றில் ‘The Cup that Unites the Nation’ (தேசத்தை ஒன்றிணைக்கும் கோப்பை) என்று எழுதப்பட்டிருந்த ஃப்ளெக்ஸ் போர்டானது கோப்பை என்கிற பௌதீகமான ‘பொருளை’ தேசியத்தை ஒன்றிணைக்கும் ‘உணர்வாக’ குறிப்பிடுகிறது. கோப்பை என்பது சாதி, மத பேதங்களைக் கடந்து இந்தியர்கள் என்கிற தேசிய உணர்வைச் சுட்டும் உணர்ச்சிப் பூர்வமான புள்ளியாக வாசிக்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்கிற விழைவின் அடிப்படையில் ரசிகர்கள் ஒருமித்தத் தேசிய உடலாகின்றனர். அவ்வாறே அயோத்தியில் இந்து தேசியத் தன்னிலைகள் ராம ராஜ்ஜியம் என்கிற விழைவின்கீழ் ஒருமித்தத் தேசிய உடலாகின்றனர். தேசத்தின் வெற்றியைச் சுட்டும் களனாக எவ்வாறு கோப்பையானது தொழிற்படுகிறதோ அவ்வாறே அயோத்தியில் ராமர் கோயிலானது ராம ராஜ்ஜியத்தினதும் (ஹிந்து ராஷ்டிரம்) இந்து பெருமிதத்தினதும் குவியமாகிறது. தேசிய அணிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் விளையாட்டு மைதானமே (தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும், சமூக ஊடகங்களும்) கூட்டுப் பரவசத்திற்கும் இன்பத்திளைப்பிற்குமான மாபெரும் வெளியாக உருப்பெறுவதைப்போல அயோத்தி ராமர் கோயிலும் இந்து தேசியத் தன்னிலைக்கான இன்பத்திளைப்பிற்கான வெளியாக ஆகிறது.

“ஒரு கட்டடம் கோயிலாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதால் மட்டுமே அது தெய்வீகத்தன்மை எதையும் அடைவதில்லை. அதன் பின்னணியில் இருக்கும் கதைதான் ஒரு கோயிலைத் தெய்வீகத்தன்மை கொண்ட ஒன்றாக்குகிறது. மக்கள் அந்தத் தெய்வத்தோடு நடத்தும் உரையாடல்கள்தான், கொள்ளும் உறவுதான் அதற்கு உயிர் கொடுக்கிறது. மக்களோடான உறவின் ஊடாகவே தெய்வம் தெய்வீகத்தன்மை பெறுகிறது. இந்து என்ற கருத்தமைவின் குறியீடாக பிர்லா மந்திர்கள் இருப்பது போன்று, இந்து தேசியத்தின் குறியீடாக மட்டுமே அயோத்தி ராமர் கோயில் இருக்க முடியும். அது, திருப்பதி, பழனி கோயில்கள் போல் உயிருள்ள கோயிலாக மாற முடியாது; உயிரற்ற பிரமாண்ட கட்டடமாக, இந்து தேசிய அகங்காரத்தின் திரளுருவாக மட்டுமே அது தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முடியும்!”11 என்று சீனிவாச ராமானுஜம் ‘மோடி மந்திர்’ கட்டுரையில் கூறுகிறார். அவர், பாபர் மசூதியை இடித்துக் கட்டப்பட்ட ரூ.1800 கோடி மதிப்பீட்டில், நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பில் உருவான ‘பௌதீகமான’ கட்டடம் ஒன்றைப் பற்றித்தான் பேசுகிறாரேயொழிய, அயோத்தி ராமர் கோயிலின் ஆன்மாவான இந்து தேசிய உணர்வாக்கத்தைத் (affect) தவறவிடுகிறார். தெய்வீகத்தன்மையென்பது மக்களோடான உணர்வுரீதியான உறவின் ஊடாகச் சாத்தியப்படுவதாயும் இந்து தேசியவாதம் மக்களோடு உணர்வுரீதியிலான உறவு இல்லாததும் என்கிற அர்த்தப்பாட்டை அக்கட்டுரை வழங்குகிறது. இந்து தேசிய உணர்வு தெய்வீகத்தன்மையின் எதிர்நிலையில் வைக்கப்படுகிறது. இதன் விளைவாக, ராமர் கோயிலானது ஆன்மீகமாக அல்லாமல் ‘அகங்காரத்தின்’ வெளிப்பாடாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. கொலை செய்பவன் உண்மையான ஆன்மீக அனுபவத்தைப் பெற இயலாதவன் என்று நாம் நினைப்பதன் அடியோட்டத்தில் ஆன்மீகம் என்பதை எப்போதும் அற மேன்மையை நோக்கியதாகப் பார்க்கும் கண்ணோட்டமே உள்ளது. இக்கண்ணோட்டத்தைக் கேள்விக்குட்படுத்தும் ஸ்லாவோ ஜிசெக், பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொல்லும் இயந்திரமாக இருக்கும் ஒருவன் தன்னளவில் ஆன்மீக முழுமை பெற்றவனாகவும் இருக்க முடியும் என்கிறார். அவனுடைய ஆன்மீகத்தைப் போலியானது என்றோ மேலோட்டமானது என்றோ கூற முடியாதென்கிறார். இங்கு, இந்து தேசியத் தன்னிலையின் ஆன்மீக உணர்வு இந்து தேசியவாதத்தின் மூலம் கட்டமைகிறது. அயோத்தி ராமர் கோயில் பல்லாயிரக்கணக்கான இந்து தேசியத் தன்னிலைகளின் தெய்வீகத்தன்மையைப் பறைசாற்றி நிற்கிறது. அது இந்து தேசியவாதத்தின் ஊடாக விளைந்ததாலேயே தெய்வீகத்தன்மையற்றதாய் ஆகாது. அக்கட்டுரை, அரசியலானது உணர்வுப்பூர்வமான பங்கேற்புக்கு அப்பாற்பட்டதான அனுமானத்தைக் கொண்டிருப்பதால் இந்து தேசியவாதம் வெகுமக்களோடு உணர்வுப்பூர்வமான பிணைப்பில் இல்லை என்று வாதிடுகிறது. ஆனால், ‘ராம கோஷம்’ போட்டுக்கொண்டு பரவசநிலையில் அயோத்திக்கு யாத்திரை செல்லும் இந்து தேசியத் தன்னிலையின் ஆன்மீக முகமை இந்து தேசியவாதத்தின் ஊடாக மலர்வதேயாகும்.

ராமர் கோயிலானது இந்துத்துவ அரசியலின் வெற்றியாக மட்டுமல்லாது அது பல்வேறு ஊடகங்களின் மூலம் வெகுஜன நுகர்வுக்கானதாய் ஒளிபரப்பப்பட்டு அனைத்து இந்துக்களும் அந்த வெற்றியைப் பகிரும்படியான நிகழ்வாகிறது. இதுபோன்றே முஸ்லிம் குடியிருப்புகளைப் புல்டோசர்கள் கொண்டு இடிப்பதும் இந்துக்களுக்கான ஒளிபரப்புகளின் அரசியல் செயல்திறன் குறித்து ஆஷிர் முஹம்மது எழுதுவதாவது: “பல்வேறு ஊடகங்கள் – நிகழ்த்துகள் வழியாக அன்றாடம் எண்ணிடற்கறிய துளிகளாக உற்பத்தி செய்யப்படும் இந்த முஸ்லிம் இடையூறைக் களைய முயற்சிப்பதன் மூலம் பெறப்படும் இன்பத்துய்ப்பு எல்லாவற்றையும் பிடித்து ஒரு பெரிய இயந்திரத்துக்குள் அடைத்து, அதை நாடே பார்க்குமாறு முஸ்லிம் குடியிருப்புகள் மீது ஓடவிடுவது உச்சபட்ச இன்பத்தைச் சமீபகாலங்களில் அரசியல் பெரும்பான்மைக்கு வழங்கிக்கொண்டிருக்கிறது… இந்தப் புல்டோசர் இடிப்புகளின் அரசியல் செயல்திறன் முஸ்லிம்களைக் கடுமையாகத் தண்டிப்பதில் மட்டுமில்லை. அவ்வாறு கடுமையாகத் தண்டிப்பதை நாடு முழுக்க இருக்கும் அரசியல் பெரும்பான்மையினரின் இல்லங்களில் ஒளிபரப்பப்படுவதன் மூலம் – அக்காட்சியின் மூலம் அவர்கள் முகத்தில் மலரும் மகிழ்ச்சியிலும் கிளர்ச்சியிலுமே அது பெறப்படுகிறது. அது குறித்து மிகுந்த வெற்றிக்களிப்போடு விவாதம் நடத்தும் தேசிய ஊடகங்களின் பெருமிதக் கூச்சல்கள் ஒட்டுமொத்த தேசத்தின் பெரும்பகுதியின் வீடுகளை நிறைப்பதிலேயே இருக்கிறது. இவ்வாறாக, முஸ்லிம்களைத் தாக்குவது என்பது பெரும் மக்கள்திரளின் சத்தும் சாரமுமற்ற வாழ்வில் ஓர் உந்துசக்தியைத் தருவதாக உணர்கிறார்கள். அகத்திலும் புறத்திலும் இருக்கும் வாழ்க்கைப் பாரத்தைத் தாங்க முடியாத மக்களுக்கு அவர்களது வலியைக் குணப்படுத்துவதற்குப் பதிலாக வலியை மறத்துப்போகச்செய்யும் போதை வஸ்துகளைக் கொடுத்துப் பிறழ்வான இன்பத்திளைப்பில் இலயிப்பதற்கு எந்தவகையிலும் மாறுபட்டதல்ல இந்து தேசியவாத அரசியல்.”12 இத்தகைய இன்பத்திளைப்பே இந்து தேசியத் தன்னிலையின் ஆன்மீக உணர்வாகிறது.

இந்தியப் பொதுவெளியினது அங்கமான தேசிய ஊடகங்கள் இந்து தேசியத் தன்னிலைகளை உருவாக்கும் வெளியாகவும் இந்தியாவில் அரசியல் பெரும்பான்மையினரான இந்துக்களுக்கு இன்பத்திளைப்பை அனாயசமாகத் தங்குதடையின்றி வழங்கும் திரையாகவுமே செயலாற்றிவருகின்றன. பொதுவெளியானது ஜனநாயகப்படுத்தப்பட்டால் ஆரோக்கியமான அரசியல் பங்கேற்பைக் கோரும் மக்கட்திரளை உருவாக்க இயலும் என்கிற நவீனத்துவக் கருத்தானது நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இந்துக்களை அரசியல் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் இந்திய தேசிய – அரசின் அரசியல் ஏற்பாட்டை (political arrangement) மாற்றியமைக்காமல் இந்துத்துவ ஃபாசிச போர்னோவை பாப்கார்னோடு ரசிப்பதற்கான திரையாகச் செயல்படும் இந்தியப் பொதுவெளியை ஜனநாயகத்திற்கான கருவியாக்க முடியாது.

2023 அக்டோபர் 14 அன்று அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் முகமது ரிஸ்வான் அவுட்டானபோது மைதானமே “ஜெய் ஸ்ரீ ராம்.. ஜெய் ஸ்ரீ ராம்..” என்று கூச்சலிட்டுக் கூட்டுப் பரவசத்தில் ஆர்ப்பரித்தது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் “பாரத் மாதா கி ஜே” என்கிற முழக்கமும் கிரிக்கெட் மைதானத்தில் எழுப்பப்படும் “ஜெய் ஸ்ரீ ராம்” கோஷமும் ஒரே நேரத்தில் இந்து தேசியவாதத் தன்னிலையை உருவாக்கவும் அதனை உசுப்பவும் செய்கின்றன.

குறிப்புகள்:

  1. Pankaj Mishra, Age of Anger, p.182
  2. Pankaj Mishra, Age of Anger, p.169
  3. Pankaj Mishra, Age of Anger, p.183
  4. https://countercurrents.org/2017/04/bankims-bharat-pro-british-anti-muslim-and-pro-brahminical/
  5. தொ.பரமசிவன், பார்ப்பனியமும் இந்திய தேசிய உருவாக்கமும், p.55
  6. Arvind Rajagopal, Politics after Television, p.151
  7. ஜமாலன், உடலரசியல், p.57
  8. Purnima Mankekar, The Indian Public Sphere, p.139
  9. மணிரத்னத்தின் பூர்வ வேர்கள், யமுனா ராஜேந்திரன்
  10. ஆஷிர் முஹம்மது, ‘புல்டோசர் அழகியலும் இந்து தேசியக் களியாட்டமும்’
  11. https://www.arunchol.com/srinivasa-ramanujam-article-on-ayodhi-ram-temple
  12. ஆஷிர் முஹம்மது, ‘புல்டோசர் அழகியலும் இந்து தேசியக் களியாட்டமும்’

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger