கௌதமக் குழந்தைகள்
ஒரு புத்தனைப் பரிசளித்தேன்
சில முத்தங்களை
எனக்களித்தான்
சிறு ரொட்டித்துண்டை நீட்டினேன்
பிய்த்து மென்றவாறே
புத்தனின் காது குடையத்
தொடங்கினான்
கொண்டையைத் திருகி
புத்தனின் மூடியிருக்கும் விழிகளைக் குத்தியவனுக்குப்
பொரித்த மீனெடுத்து ஊட்டினேன்
மென்று கூழாக்கிய மீனை
புத்தனுக்கு ஆசையாய்
ஊட்டினான்
அன்னையான என் மகன்.
நம்புங்கள்
பிள்ளையாகி வாய் திறந்தான்
மரப்பாச்சி புத்தன்.
பெயரிலி
யாரோ
என் பழைய பெயர் சொல்லி
அழைத்தார்
பித்தியருத்தியின் கூந்தலைப்போல
கரடுமுரடான அந்தப் பெயரை.
எப்போதோ
கழுத்தைத் திருகிக்
கொன்றொழிக்க முயன்ற
கழிவிரக்கம் தொனிக்கும் பெயரை.
உச்சி வெயிலில்
மொட்டைப் பாறையேறி
மூன்று முறை தலைச்சுற்றி
வீசியெறிந்த அந்தப் பெயரை.
எந்தப் பெயரைக் கேட்டால்
என் மூச்சுமுட்டுமோ
எந்தப் பெயர் என் அகத்தில்
யானைகளாகிப் பிளிறிடுமோ
எந்தப் பெயர்
என் எல்லா அழுக்காறையும்
ஒருங்கே கொண்டுவந்து ஊற்றுமோ
எந்தப் பெயர்
என் மாறிய நிலையின் மீது
மலத்தைக் கொட்டுமோ
எந்தப் பெயர்
எனது அடிமை வாழ்வை நினைவுறுத்துமோ
அதே பெயரைச்சொல்லி
யாரோ அழைத்தார்.
ஒரு திடமான முடிவோடு
திரும்பிப் பார்த்தேன்.
அந்த யாரோ ஒருவருக்குக்
கடந்த காலத்தின்
காப்பு காய்ச்சிய முகம்.
அறியாமையை ஏற்றுக்கொள்ளாத
அடிமையின் உடல்.
பேதலித்துப் பித்துப்பிடித்து
அகந்தையில் பைத்தியமான
நாக்கின் கொடுக்கு.
எனது பழைய பெயரைச்
சொல்லச் சொல்லி
சுழலும் கொடுக்கை
கடித்து மென்று விழுங்கினேன்.
நடந்தேன்.
நடக்கிறேன்.
நடப்பேன்.