அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்களைக்
கலைத்துப்போடும் உரிமையைத்
தாமாகவே எடுத்துக்கொள்கின்றன பூனைகள்.
மீண்டும் மீண்டும் லாவகமாக அடுக்கிவைத்துவிட்டுக்
காத்திருப்பவர்களிடம்
அவற்றிற்குத் துளியும் அச்சமில்லை.
பூனைகளிடம் கோபத்தைக் காட்டாமல்
பதுங்கும் சூஃபிக்களும்
முன்னங்கால்களை உயரே தூக்கிப்
பின்னங்கால்களால் சூஃபி நடனமாடும் பூச்சைகளும்
வீடுகளில் வசிக்கத்தான் செய்கிறார்கள்.
குறுக்கும் நெடுக்குமாக
ஓடித்திரியும் பூனை
பாங்கின் ஒலி கேட்டவுடன்
தியானத்தில் அமர்ந்துவிடுகிறது.
கணீர் துவாக்கள்
செவிகளறையப் பாய்ந்தோடி
புறாக்களின் மாடத்தையும்
வுளு செய்யும் குளத்தையும் மாறி மாறிப் பார்க்கிறது.
ஃபஜருக்குப் பிறகு சடசடத்துப்
பறந்தமரும் புறாக்களும்
சற்று வேகமாக நீந்தும் மீன்களும்
விழிகளில் பதிவாக
விறைத்து நிமிரும் அதன் வால்
காற்றில் நடனத்தைத் தொடங்கும்போது
தொழுகை முடிந்து
இறங்கிக்கொண்டிருந்தான் சூஃபி.
எங்கிருந்தோ காற்றில் வருகிறது
கவ்வாலி இசை.
இருளையும் பொருட்படுத்தாமல்
எழுந்து ஆடத்தொடங்குகிறான்.
சன்னமாக ஒலியெழுப்பும் பூனையின்
காதுகள் சிலிர்த்து
பளிங்கு போன்ற அதன் கண்கள்
இரண்டு பூமியாய்ச் சுழல்கின்றன.
ஒன்று சூஃபிக்கானது
மற்றொன்றும் சூஃபிக்கானது.
பூனையின் உலகத்தில்தான்
சூஃபியின் நடனம்.