எருமை மறம் – மௌனன் யாத்ரிகா

Image Courtesy: arthearty.com

 

ஒரே பாய்ச்சலில்
சில ஆண்டுகளைத் தாண்டிவிடுகிறது காலம்;

இளங்காற்றுக்கு ஆலோலம் போட்ட
சிறிய கன்றுகள் எல்லாம்
அணைப்புக்கு அடங்காத
பெரிய மரங்களாகிவிட்டன;
புழுதியில் விளையாடிக்கொண்டிருந்த
முதிரா விடலைகள் எல்லாம்
தமது குதிகால்களால் கல்லாங்குத்துக் காட்டைப்
பிளந்துகொண்டு ஓடுகிறார்கள்;
அல்லி மலர்களைக் காமுற்றுத் திரிந்த
இளைய குமாரத்திகள் எல்லாம்
தன் மதலைகளுக்கு
முலையூட்டிக்கொண்டிருக்கிறார்கள்;
முதுகணியர்களின் புதைமேடுகளில்
கொத்துக் கொத்தாய்
ஆவாரை மலர்ந்திருக்கிறது;
உயரமான புற்களின் தோகைகளைச் சூடி

விறலியர்கள் ஆடும் கூத்துகளில்

துன்பியலின் பகுதி மிகுந்திருக்கிறது;
பாணர்கள் புனையும்
பாடலின் கருப்பொருளில்
குதிரைகளும் துப்பாக்கிகளும்
கூடுதலாகச் சேர்ந்துள்ளன;
விலங்குகளின் கண்களைக் கூசச் செய்யும்
முகப்பு விளக்குப் பொருத்திய எந்திரங்கள்
குடியிருப்புகள் வழியே
கடந்து போகின்ற செய்தியைக்
குறிப்பு மொழியில் அறிவிக்கின்ற
சக பழங்குடிகளின் கண்களில்
மிரட்சித் தெரிகிறது.

கருங்கால்கள் நான்கின் பாய்ச்சலில்
சருகுகள் பறக்கின்றன;
விடைத்து விரிந்த காதுகளை
மோதிச் சிதறுகிறது காற்று;
தரையில் பின்னிக்கிடக்கும்
காட்டுக் கொடிகளை
அறுத்தெறிகின்றன குளம்புகள்;
மரங்களின் வேர்களை
நடுக்கமுறச் செய்யும் விலங்கின் ஓட்டம்
எந்த நொடியும் நிறுத்தப்படலாம்;
ஓரிடத்திலிருந்து அம்பும்
மற்றோர் இடத்திலிருந்து துப்பாக்கியும்
தம்மைக் குறி பார்க்கின்றன என்பதைக்
கண்டுணர்ந்த பன்றி
மூர்க்கத்தை மேலும் கூட்டுகிறது;

சரிவான நிலத்தில் பாய்ந்தோடும்
அதன் கழுத்துச் சதைக்கு
அம்பின் குறி வைக்கப்பட்டிருந்த அதே நேரத்தில்
அதன் தொடையெலும்பை முறிக்கும் ரவை
துப்பாக்கியில் நகர்ந்துகொண்டிருந்தது.
கழுத்தை நெருங்கும் தூரத்தில்
அம்பு வந்துவிட்ட கணத்தில்
தொடையை நோக்கி வரும்
ரவையின் ஒலி கேட்டது;
‘சதக்’ என்று கறி பிளந்ததன் பிறகே
‘மடக்’ என்று எலும்பு முறிந்தது;

காட்டின் அகத்துக்குரியவன்
பன்றியைத் தொட்டபோது
அவனது முதுகில் அழுந்தியது
துப்பாக்கிக் குழலின் முனை;

நிறம், முகம், வாகு
எதுவுமே பொருந்தாத
இரண்டு மனித இனத்தை
இறந்துகொண்டிருக்கும் விலங்கு
கண் மூடுவதற்கு முன் பார்த்தது;

குதிரையில் அமர்ந்திருந்தவர்கள்
கசப்பும் வெறுப்பும் கலந்து வெளிப்படுத்திய
துச்சம் பொதிந்த வார்த்தைகள்
பழங்குடியை அச்சுறுத்தவில்லை;
தன் நெஞ்சுக்கு முன்னே
உயர்ந்திருக்கும் துப்பாக்கியை
அந்தக் கருத்த மனிதன்
பொருட்படுத்தாது நோக்கினான்;

காடு இறுக்கமாக இருந்தது.

“நிமிர்ந்து தெரியும்
இந்தப் பன்றிக்கு
ஒரேயொரு துப்பாக்கி ரவையை மட்டும்
செலவு செய்தால் போதும்.
காலில் சுட ஒன்று;
முதுகில் சுட ஒன்று;
மண்டையில் சுட ஒன்றென்று
ரவைகளை விரயம் செய்வது
வெள்ளையினத்துக்கு அழகன்று;
விலகி நில்;
நான் வேட்டையாடுவதைக் கவனி;
பிறகு,
ஒருமுறை மட்டுமே வெடிக்கும்
என் துப்பாக்கியை நீ வணங்குவாய்.
காலனி நாடுகளில்
விலங்கையும் மனிதனையும்
பிரித்துப் பார்க்காதே;
துரையாக இருப்பதற்கு
விதியும் தகுதியும் அதுவே.”

துப்பாக்கியின் கருந்துளையிலிருந்து
புகை வெளியேறியபோது
காட்டுக்கு மேலே போய்
பறவைகள் ஓலமிட்டன.
ஆயிரக்கணக்கான குரல்கள்
ஒன்று சேர்ந்த ஆகாய வெளியைத்
தன்னுடைய கிராமத்திலிருந்து
கரியன் பார்த்தான்.

துர் சகுனம் என்று
முது மறவோர்கள் கூறினார்கள்;
தீய சக்திகள்
நம்மை நெருங்குவதற்கான
அறிகுறி இஃதென்றாள் பண்டுவச்சி;

புதைந்துள்ள எலும்புகள்
புரண்டு படுக்குமளவுக்கு
அழுந்த ஓடிய காளையர் கூட்டம்
கரியனின் பின்னால்
காட்டை அடைந்தது;
அங்கே, அவர்கள்
சருகுகளில் தெறித்திருந்த குருதியையும்
சக இனக்குழுவில் ஒருவனது சடலத்தையும்
குதிரையின் ஈர மலத்தையும்
கண்டார்கள்.

இறந்தவனைப் புரட்டிப் பார்த்தான் கரியன்.
நெற்றிப்பொட்டில் குண்டடிபட்டிருந்தவனுக்கு
அகவை இருபது இருக்கலாம்;
காட்டின் நிறம் அவனுக்கு;
அவனது தொடையில்
வரையப்பட்டிருந்த குலக்குறிச் சின்னம்
கரியனைப் பார்த்து உறுமியது;

சருகுகளில் மறைந்திருந்த
குதிரைகளின் குளம்படித் தடங்களைக்
கண்டறிய முடியாமல்
ஓங்கிக் கத்திய கரியன்
காட்டின் விளிம்பில் நின்று
பரந்து விரிந்திருந்த வெளியைக்
கூர்ந்து பார்த்தான்;
தொலைவில்
இரண்டு குதிரைகளின் பிருட்டங்கள்
கலங்கலாகத் தெரிந்தன.

 

(தொடரும்….)

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger