இந்த உலகின் ஒவ்வொரு அம்சங்களும் அறிவியல் ரீதியாகப் புவியியலோடு தொடர்புடையவை என்கிறபோது மக்களின் வாழ்வியலோடும் கலாச்சாரத்தோடும் பின்னிப் பிணைந்திருக்கிற சடங்குகளும் நம்பிக்கைகளும் மட்டும் எப்படி விலகிவிட முடியும். ஆம், புவியியலுக்கும் மதங்களுக்கும் பெரும் தொடர்பு உண்டு. நாம் அனைவரும் ஏதேனும் ஒரு மதத்தால் பிணைக்கப்பட்டிருக்கிறோம். எனக்கு எந்த மதத்தின் மீதும் நம்பிக்கை இல்லை என்று சொல்பவர்களைப் பார்த்திருப்போம். ஆனால், அதுகூட நிறுவனமயமாக்கப்பட்ட சமயங்கள் மீதான எதிர்நிலைப்பாடே ஒழிய, மதத்திலிருந்து தொடர்பற்றிருப்பது என்று பொருளில்லை. அப்படி நிறுவனச் சமயங்கள் மீது எதிர்நிலை நோக்கு இருக்கும்போது அவர்கள் இயற்கையையும் சுற்றுச்சூழலையும் அடிப்படையாகக் கொண்ட பழங்குடி மரபையும் அது சார்ந்த சடங்குகளையும் நம்பிக்கைகளையும் பெரிதாக மறுப்பதோ புறக்கணிப்பதோ கிடையாது. வெளிப்படையாகச் சொல்வதானால் வைதீகச் சமயங்கள் மீதான வெறுப்போ, அதிருப்தியோ அல்லது நம்பிக்கையின்மையோதான் அவைதீகச் சமயங்களைத் தூக்கிப் பிடிக்கும் உந்துதலையும் மனநிலையையும் கொடுக்கிறது என்று சொல்லலாம். இப்படித்தான் இந்த உலகத்திலுள்ள உயிர்களையெல்லாம் அதனதன் நிலவியல் தன்மைகளுக்கேற்ப மதம் பிணைத்துவைத்திருக்கிறது. அந்த வகையில் மதம் என்பதைப் பண்பாட்டுப் புவியியலின் (cultural geography) மிக முக்கிய அங்கமாகப் பார்க்கிறேன்.
மனிதனே மதத்தின் உள்மெய்களையும் புறமெய்களையும் அதன் மீதான திரிபுகளான புரட்டுக்களையும் தான், தன் குடும்பம், சுற்றத்தார், ஊர், நாடு, அடுத்த தலைமுறை எனக் கடத்திக் கொண்டேயிருக்கிறான். அதனால்தான் அவற்றில் குறியீட்டுத் தன்மைகளும் குறிப்பான்களும் மிக அதிகம். குறிப்பிட்ட நிலவியற் பகுதிகளில் தோற்றம் பெறுகிற ஒரு மதம், அது சார்ந்த நம்பிக்கை, அந்த நிலப்பரப்பின் தன்மை மற்றும் புவியியல் அம்சங்களோடு தொடர்புடையதாகத்தான் பிணைக்கப் பட்டிருக்கும். உதாரணமாக வேம்பு, அரச மரம், ஆல மரம், வில்வம், பனை, துளசி, பசு, யானை, குரங்கு எனச் சில தாவரங்கள் மற்றும் விலங்குகளின் மீது புனித அம்சங்கள் ஏற்றப்பட்டிருக்கும். அதேபோல வாழைப்பழம், மஞ்சள், மாவிலை, தேங்காய், எள் போன்ற பொருள்கள் வழிபாடுகளில் முக்கியத்துவம் பெற்றிருக்கும். தெய்வங்கள் மீதான நம்பிக்கைகளில் மட்டுமல்ல, பேய்கள் குறித்த நம்பிக்கைகளிலும் அந்தந்தப் புவியியற் தன்மைகளின் கூறுகள் படிந்திருக்கும். அப்படித்தான் தென்னிந்தியப் பகுதிகளில் பேய் என்றால் வெள்ளை நிற ஆடையில் தலைமுடியை விரித்துப் போட்டபடி ஜல் ஜல் சத்தத்துடன் அர்த்த ஜாமத்திலும் பகல் உச்சிப் பொழுதிலும் உலவும் என்கிற கற்பிதமுண்டு. இதே பேய்கள் அருணாச்சலப் பிரதேசம் போன்ற பகுதிகளில் கறுப்புப் பன்றிகளின் மேல் உலா வருவதாக நம்பப்படுகிறது. தெய்வங்களைப் போல பேய்க் கதைகள் பெரும்பான்மை ஒருமித்தத் தன்மையுடன் இருப்பதில்லை.
பேய்கள் எல்லை தாண்டாது. எத்தனை புளிய மரங்கள் தாவிச் சென்றாலும் தன் ஊர் எல்லையைத் தாண்டி அடுத்த ஊர் எல்லையிலிருக்கும் புளிய மரத்திற்குப் பேயால் தாவ முடியாது. இதுகுறித்து ‘நாட்டுப்புற நிகழ்த்துக்கலைகள்’ நூலில் ‘பேய் முறைப்பாடு’ என்னும் கட்டுரையில் கே.ஏ.குணசேகரன், ‘அது ஏனோ தெரியவில்லை. என்னென்னவோ வித்தைகள் செய்யும் இந்தப் பேய்களுக்கு ஏனோ டவுன் பஸ் ஏறி பக்கத்து ஊர்களுக்கு மட்டும் போகவே தெரியவில்லை’ என்று பகடியாகச் சொல்லியிருப்பார். அதேபோல மார்க்கோபோலோ தன்னுடைய பயணக் குறிப்புகளில் தென் தமிழகம் குறித்தும் கடவுள் ஜ் பேய் குறித்தான நம்பிக்கையைப் பற்றியும் கருத்துத் தெரிவித்திருப்பார். “கறுப்பு நிறத்தில் இருக்கும் மக்கள், வெள்ளை நிறத்தில் இருக்கும் பல இன மக்களைக் காட்டிலும் நாகரிகம் உடையவர்களாக இருக்கிறார்கள். இந்த மக்களின் தெய்வங்கள் கறுப்பு நிறத்திலும் பேய்கள் வெள்ளை நிறத்திலும் இருக்கின்றன. இது ஒரு வித்தியாசமான முரண்பாடு” என்று குறிப்பிடுவார். இப்படி மக்களின் நம்பிக்கை சார்ந்த எல்லா விஷயங்களிலுமே அந்தந்தப் பகுதியின் புவியியற் கூறுகள் குறியீட்டுத் தன்மையுடன் உலவிக்கொண்டுதான் இருக்கும். அதனால்தான் தாங்கள் வழிபடும் இடத்தை பதி என்றும் அவ்விடத்தில் உறைந்திருப்பதகாகத் தான் நம்பும் ஒன்றை தெய்வம் (தேயம்) என்றும் அழைக்கிறார்கள்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then