குப்பைகளை எரிப்பதற்காக
வெட்டிய குழியில்
எப்போதோ புதைத்த
நாயின் எலும்புகள்.
துருவேறியிருந்தாலும்
கழுத்தெலும்பிலிருந்து
பிடி விடாமல்
சங்கிலியும்.
அரிய ஜீவன் அது
புத்தியுள்ளது
இரவிலிருந்து வீட்டைக் காக்கும்
குரைப்பும்
உண்ட சோற்றுக்கு வெளிப்படுத்தும்
நன்றியும் அலாதியானது போன்ற
கதைகளை
வேலையாட்களோடு
அப்பா பேசுகிறார்.
என்றாலும்
சங்கிலியோடு புதைத்த காரணம் மட்டும்
நினைவில்லை.
‘உனக்கு ஞாபகமிருக்கிறதா’
கேட்டதற்குத்
தாலிக்கயிற்றை இறுகப் பிடித்தபடி
இல்லையெனத் தலையாட்டுகிறாள்
அம்மா.
எரியும் குப்பையிலிருந்து மூண்டெழும்
புகையில்
ஒலியற்ற குரைப்புச்
செவி நிறைக்க
சாய்வு நாற்காலியிலிருக்கிறார் அப்பா.
மறுநாள்
ஆக்கர் கடைக்காரன்
அந்தச் சங்கிலியைக் கொண்டு போனான்