ஆஸ்திரேலிய வலைப்பதிவில் ஒருவர், “எனது பெரியம்மா (பிறப்பு – 1872) 1950களில் சமைத்த ஆட்டுக்கறி குழம்பினை மீண்டும் உருவாக்க விரும்பினேன், ஆனால் வெங்கடாசலம்ஸ் இப்போது கிடைக்காததைக் கண்டு ஏமாற்றமடைந்தேன். நான் 70 வயதை நெருங்கும்போது கூட எனக்கு அதன் சுவை நன்றாக நினைவில் இருக்கிறது” என்கிறார். புதிய சமையல் குறிப்பு புத்தகங்களிலும் இதே கருத்துச் சொல்லப்பட்டிருப்பதும் கூட உணவிற்குச் சுவை சேர்ந்த ஆதிதிராவிடர் ஸ்தாபனத்தின் மீது மக்களுக்கு இருந்த நன்மதிப்பையே பறைசாற்றுகிறது.
இந்திய வணிக நிறுவனங்கள் பன்னாட்டு அளவில் விரிவடைவதற்கு முன்பே, ஓர் இந்திய நிறுவனம் உலகளாவிய நிறுவனமாகத் திகழ்ந்திருக்கிறது என்றால் அது, ‘வெங்கடாசலம் மெட்ராஸ் கறிமசாலா தூள்’ (Vencatachellum Madras Curry Powder) என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்குத் தரத்திலும் சுவையிலும் மக்களிடத்தில் நம்பிக்கையைப் பெற்று திகழ்ந்திருக்கிறது. கறிமசாலா பொடி (Curry Powder) மற்றும் ஊறுகாய் தொழிலை செய்த வெங்கடாசலம் காண்டிமெண்ட்ஸ் எனும் இந்நிறுவனம் உலக அளவில் சுமார் 100 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட மக்கள் மனதில் நிலைத்திருக்கிறது என்பது வியப்பிற்குரியதே! இத்தகைய பெருமைக்குரிய இந்நிறுவனம் சென்னையைச் சேர்ந்த ஆதிதிராவிடர் வகுப்பினரான பி.வெங்கடாசலம் என்பவரால் தொடங்கப்பட்டது. ‘மெட்ராஸ் கறிமசாலா தூள்’ என்றாலே அது வெங்கடாசலம் மெட்ராஸ் கறிமசாலா தூள்தான் என்கிற அளவிற்கு உலகெங்கிலும் பிரபமடைந்து புகழ்பெற்றிருக்கிறது. அதன் காரணமாகவே சுமார் நூறாண்டுகள் கடந்தும் பேசுப்பொருளாகிறது. அதேவேளையில் இன்றும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் அந்த வணிகக் குறியீடு நினைவுகூரப்படுவதும் அதன் நம்பகத்தன்மைக்குச் சான்றாகிறது.
Curry என்ற ஆங்கில வார்த்தைக்கான மூலம் தமிழ் வார்த்தையான ‘கறி’யிலிருந்து சென்றிருக்கிறது. இந்த வார்த்தை முதலில் மிளகு என்பதைக் குறிப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், பிற்காலத்தில் அது மிளகு கொண்டு செய்யப்படும் உணவுப்பொருட்கள் அனைத்தையும் குறிப்பதாக மாறியிருக்கிறது. தற்போதைய பொருள் இடைக்கால தோற்றமாக இருக்கலாம். கறி என்ற சொல் இந்தியாவிலிருந்து திரும்பிய ஐரோப்பியர்கள், குறிப்பாக ஆங்கிலேயர்கள் மூலம் உலகம் முழுவதும் சென்றது. கறி என்ற இந்தச் சொல் பரவுவதற்கு மற்றொரு காரணம் ரெடிமேட் கறிமசாலா தூள். கறிமசாலா தூள் என்பது சரியான விகிதத்தில் கலந்து அரைக்கப்பட்ட மசாலாப் பொருட்களின் கலவையாகும்.
பி.வெங்கடாசலம்
நிறுவனம் தொடங்கிய பின்னணி
கறிமசாலா தூளை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியது பி.வெங்கடாசலம், அவரது மகன் பி.வி.சுப்ரமணிய பிள்ளை ஆவர். பி.வெங்கடாசலம் 1860ஆம் ஆண்டு ‘பி.வெங்கடாசலம் காண்டிமெண்ட்ஸ்’ (P.Vencatachellum Condiments) என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அதற்கு முன்பு சென்னை பிஷப் இல்லத்தில் பணிபுரிந்தார். இவ்விடத்தில் வேறு விசயங்களையும் இணைத்துப் பார்க்க வேண்டும். 19ஆம் நூற்றாண்டின் மெட்ராஸ் நகரத்தில் ஆதிதிராவிடர்கள் ஊக்கமுடையவர்களாக இருந்தனர். ஒப்பீட்டளவில் கிராமங்களைவிட இங்கு ஜாதிய கெடுபிடிகள் குறைவாக இருந்ததால் கட்டாயக் கூலி போன்றவற்றிலிருந்து விடுபட்டு, பலர் இராணுவத்தில் பணிபுரிந்தனர். கிழக்கிந்தியக் கம்பெனியின் முதல் படைப்பிரிவு, மைனர்ஸ் மற்றும் சேப்பர்ஸ் (Miners and Sappers) பறையா ரெஜிமென்ட் என்றே அழைக்கப்பட்டது. பருத்தி ஆலைகள், இரயில்வே, அரசாங்கம் போன்ற பணித்தளங்களிலும் ஐரோப்பிய குடியிருப்புகளில் பட்லர்களாகவும் பணியாற்றினர்.
பட்லர்களாகப் பணிபுரிந்தபோது நம்முடைய உணவு முறையையும், புதியவர்களான ஐரோப்பியர்களின் உணவு முறையையும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. எனவே, ஐரோப்பியர்களின் சுவைக்கேற்ப சமைத்ததோடு புதிய உணவைக் கண்டுபிடிப்பவர்களாகவும் இருந்தனர். இன்று உலகம் முழுவதும் விரும்பப்படுகிற Mulligatawny Soup உருவானது அப்படித்தான். அரிசி வடிக்கட்டிய தன்ணீரோடு மிளகையும் இறைச்சியையும் கலந்ததால் அது மிளகு தண்ணி (Mulligatawny) சூப்.
இந்நிலையில் வெங்கடாசலம் பணிபுரிந்த பிஷப் ரூ.500 கொடுத்து அவரின் விருப்பப்படி கறிமசாலா தூள் விற்பனை செய்யும் நிறுவனம் தொடங்க உதவினார். சென்னை மயிலாப்பூரில் அந்நிறுவனம் அமைந்தது. பிறகு, சென்னை மாகாணத்தின் முக்கியமான வணிகத்தலமான 1-3 பிராட்வேவுக்கு மாறியது. அந்தச் சாலைக்குப் பின்புறம் அம்பர்சன் தெருவில் தொழிற்சாலை இருந்தது. கறிமசாலா தூள் மட்டுமல்லாது கறி பேஸ்ட்கள், ஊறுகாய்கள், ஜாம், ஜெல்லி ஆகியவற்றையும் நிறுவனம் தயாரித்தது. பி.வெங்கடாசலத்தின் தயாரிப்புகள் இந்திய பகுதிகளிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் பெறப்பட்ட மிகச்சிறந்த பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்டவை. ஒரிசாவிலிருந்து சிவப்பு மிளகாய், சிட்டகாங்கிலிருந்து மஞ்சள், கேரளாவிலிருந்து கொத்தமல்லி மற்றும் வேறு சில இரகசிய பொருட்களையும் பயன்படுத்தி கறிமசாலா தூள் தயாரிக்கப்பட்டது.
வெளிநாடுகளில் பரவிய நிறுவனம்:
ஆசிய உணவுகளில் நிபுணத்துவம் பெற்ற பிரிட்டிஷ் நிறுவனமான ஜே.ஏ.ஷார்வுட் அண்ட் கோ லிமிடெட்டின் திரு. ஷார்வுட் இந்தியாவிற்கு வருகை தந்தபோது, கவர்னர் ஜெனரல் லார்ட் டஃப்ரீனைச் சந்தித்து அவருடன் மதிய உணவு அருந்தியதாகவும், மேசையில் பரிமாறப்பட்ட கறியின் சுவையில் வியந்து சமையல்காரரிடம் விசாரித்ததாகவும், அதன்மூலம் சென்னையிலுள்ள பி.வெங்கடாசலம் கறிமசாலா தூள் பற்றி தெரிந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. மெட்ராஸ் வந்த ஷார்வுட் இங்கிலாந்தில் பி.வெங்கடாசலம் காண்டிமென்ட்களின் ஒரே முகவர்களாகவும் விநியோகஸ்தர்களாகவும் தனது ஜே.ஏ.ஷார்வுட்ஸ் & கோ லிமிடெட் நிறுவனத்தைக் கொள்ளுமாறு பி.வெங்கடாசலத்தை வற்புறுத்தினார். இதன்படி 1893ஆம் ஆண்டு முதல் ஷார்வுட்ஸ்வுடனான அரை நூற்றாண்டுப் பயணம் தொடங்கியது. 1894ஆம் ஆண்டு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தங்களின் வணிகக் குறியீடுகளான Vencatachellum Madras Curry Powder பெயரும் மயில் ஓவியமும் இருக்கும் தனித்துவமானதொரு வணிக முத்திரையைப் பதிவு செய்தனர். ஷார்வுட்ஸ் உடனான இந்தக் கூட்டணி வெங்கடாசலம் மெட்ராஸ் கறிமசாலா தூளை இங்கிலாந்தின் வீட்டுப் பெயராக மாற்றியது. இதற்கு முன்பே பி.வெங்கடாசலம் தனது தயாரிப்புகளைச் சோதனை முயற்சியாக இங்கிலாந்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் அனுப்பியிருந்தார். மேலும், இந்த நாடுகளுக்குச் சென்னையிலிருந்து செல்லும் தனிநபர்களும் பி.வெங்கடாசலம் தயாரிப்புகளை அள்ளிச் சென்றிருக்கிறார்கள். இந்நிலையில், 1887ஆம் ஆண்டு பி.வெங்கடாசலம் மறைவுக்குப் பின் அவர் சொத்துகள் வாரிசுகளால் பிரித்துக்கொள்ளப்பட, அவரின் ஐந்து மகன்களில் ஒருவரான பி.வி.சுப்ரமணிய பிள்ளைக்குத் தந்தையின் தொழில் கிடைத்தது. அவர் ஏற்கெனவே தந்தைக்கு உதவியாகத் தொழிலைக் கற்றுத்தேர்ந்திருந்தார். பி.வி.சுப்ரமணிய பிள்ளை இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட இயந்திரங்கள் மூலம் வணிகத்தை மிக உயரத்திற்குக் கொண்டுசென்றார்.
பி.வி.சுப்ரமணியம் பிள்ளை
கறிமசாலா தூள், ஊறுகாய் மட்டுமல்லாது சட்னி, சாஸ், தின்பண்டம் முதலான பல பொருட்களை உற்பத்தி செய்தார். உற்பத்தி பன்மடங்கு அதிகரித்து, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களிலும் சிறுகடைகளிலும் இந்நிறுவனத் தயாரிப்புகள் கிடைத்தன. கறிமசாலா தூள் டின், அதன் மீது ஒட்டப்பட்ட வண்ண லேபிள் ஆகியவை எளிதில் அடையாளம் காணக்கூடியவையாக இருந்தன. ஊறுகாயும் ஜாமும் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட கண்ணாடி பாட்டில்களில் விற்கப்பட்டன. இந்த டின்களையும் பாட்டில்களையும் இன்றும் பலர் நினைவுப் பொருட்களாகச் சேகரித்து வைத்திருக்கின்றனர். அவற்றில் சில ஏலத் தளங்களில் கிடைக்கின்றன. அடுத்த 20 ஆண்டுகளில் இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் வெங்கடாசலம் கறிமசாலாத் தூளைக் குறிப்பிடுவதற்கு வெறும் Vencat’s என்பதே போதுமானதாக இருந்தது. பக்கிங்ஹாம் அரண்மனையிலும் வெங்கடாசலத்தின் மெட்ராஸ் கறிமசாலா தூள் விரும்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு நிறுவனத் தயாரிப்புகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து பாரிஸ் வரை நூற்றுக்கணக்கான சர்வதேச விருதுகளை வென்றன. அவை தயாரிப்பு லேபில்களில் பெருமையுடன் அச்சிடப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டன.
ஐஸ் தொழிற்சாலை:
பி.வி.சுப்ரமணியம் பிள்ளை வியாபாரத்தை விரிவுபடுத்தினார். 1889ஆம் ஆண்டில், மெட்ராஸில் ஒரு பழைய ஐஸ் தொழிற்சாலையை விலைக்கு வாங்கினார். இன்று ஆல்பர்ட் தியேட்டர் மற்றும் அதனையொட்டி உள்ள இடத்தில் அந்த ஆலை இருந்தது. பழைய இயந்திரங்களை அகற்றி நாளொன்றுக்கு 5 டன் ஐஸ் கட்டியை உருவாக்கும் திறன் கொண்ட நவீனமான பிரிட்டிஷ் லிண்டே – கம்ப்ரஷன் சிஸ்டத்துடன் தொழிற்சாலையைக் கட்டினார். குளிரூட்டப்பட்ட சேமிப்பு வசதியும் இருந்தது. இவை இந்தப் பகுதியில் புதியவை. அரசாங்க இல்லம், தனியார் கிளப்புகள், உணவகங்கள் ஆகியவற்றிற்கு தொழிற்சாலை ஐஸ் சப்ளை செய்தது. மேலும், மாகாணத்தின் தொலைதூர நகரங்களுக்குக் கூட ஐஸ் அனுப்பியது. இதில் 250 பவுண்டு ஐஸ் கட்டிகளைச் சென்னையிலுள்ள மருத்துவமனைகளுக்குத் தினமும் இலவசமாக வழங்கியது.
உலகெங்கிலும் உள்ள முக்கிய செய்தித்தாள்களிலும் உள்ளூர் முகவர்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தினர். அவை அழகாகவும் வித்தியாசமாகவும் இருந்தன. அனைத்து விளம்பரங்களிலும் வெங்கடாசலம் என்ற பெயர் பெரிதாக இருந்தது. நிறுவனத்தின் முகவரியான 1-3, போப்ஹாம்ஸ் பிராட்வே முக்கியமாகக் குறிப்பிடப்பட்டுவந்தது. உற்பத்தி செய்த இடமே நன்மதிப்பைப் (goodwill) பெற்ற முதல் நிகழ்வாக இது இருக்கலாம். பத்திரிகைகளில் வெளியாகும் சமையல் குறிப்புகளிலும் சமையல் குறிப்பு புத்தகங்களிலும் கறி மசாலா என்று வரும்போது வெங்கடாசலம் மசாலா கலவையையே பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டது. காலப்போக்கில் வெங்கடாசலத்தின் கறிமசாலா தூள் உள்ளூர்க் கலாச்சாரத்தில் ஒன்றாக மாறியதையே இவை காட்டுகின்றன.
நிறுவனத்தின் அபரிதமான வளர்ச்சி நூற்றுக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பைக் கொடுத்தது. ஐஸ் தொழிற்சாலையில் மட்டும் 200 பேர் பணியாற்றினர். பி.வி.சுப்ரமணிய பிள்ளை பிறருக்கு உதவக்கூடிய மனம் படைத்தவராக இருந்தார் என்று அக்காலத்திய அரசு பதிவுகள், செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன. அவர் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்காகச் சிந்தாதிரிப்பேட்டையில் “வெங்கடாசலம் ஏழைப் பள்ளி” என்ற பள்ளியை நடத்தினார். அங்கு 150 குழந்தைகளுக்கு இலவசமாகக் கற்பிக்கப்பட்டது. மேலும் அவர் பல தொண்டு நிறுவனங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், மருத்துவமனைகள், ஆதரவற்றவர்களுக்காகப் பணியாற்றும் அமைப்புகள் போன்றவற்றிற்கு உதவிக்கரமாக இருந்திருக்கிறார். அவர் பணிகளைப் பாராட்டி வழங்கப்பட்ட இந்திய அரசாங்கத்தின் சான்றிதழில், “மாண்புமிகு வைஸ்ராய் மற்றும் கவுன்சிலின் கவர்னர் ஜெனரல் கட்டளையின்படி இந்தச் சான்றிதழானது விக்டோரியா மகாராணி இந்தியப் பேரரசியின் பெயரில் வழங்கப்படுகிறது. வணிகர் பி.வி.சுப்ரமணிய பிள்ளை தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு ஆற்றிய தொண்டுகளை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு வழங்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தி இந்து நாளிதழில் “தனது தொழிலில் புகழைப் பெற்ற திரு. பி.வி.சுப்ரமணிய வெங்கடாசலம் பிள்ளை ஒரு பொது மனிதராக முதலில் முன்வந்தமை பஞ்சம சமூக உயர்வுக்கான இயக்கத்தின் மூலமே. அவர்தம் நலனுக்காகப் பள்ளிகளைத் திறந்து நடத்தினார். அவர்களுடைய முன்னேற்றமே அவரின் குறிக்கோளாக இருக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளது.
பிற பணிகள்
பி.வி.சுப்ரமணிய வெங்கடாசலம் பிள்ளை சென்னை வண்ணாரப்பேட்டையில் அனைத்துச் சாதியினரும் கூடும் வகையில் தட்சிணாமூர்த்தி கோயிலைக் கட்டினார். இன்றும் வண்ணாரப்பேட்டை மெட்ரோ நிலையம் பின்புறம் இந்தக் கோயில் பரந்து விரிந்திருக்கிறது. மேலும் சென்னை மாகாணத்தில் உள்ள பல கோயில்களில் அன்னதானம் செய்தார். காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கோயில் திருவிழாவில் ஒருநாளுக்கான செலவுகளை ஏற்றார். அந்தக் கால செய்திக் குறிப்பிலிருந்து, அவர் விசுவாசமான பிரிட்டிஷ் குடிமகனாக இருந்தார் என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது. 1897ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணியின் வைர விழா கொண்டாட்டத்திற்காகவும், பின்னர் ஏழாம் எட்வர்ட் மன்னரின் முடிசூட்டு விழாவை நினைவுகூரும் விதமாகவும் அவர் ஏற்பாடு செய்த கொண்டாட்டங்கள் பல ஆண்டுகள் பேசப்பட்டன. நாடு முழுவதும் உள்ள நாளிதழ்கள் இக்கொண்டாட்டங்களைப் பிரமிப்புடன் பதிவு செய்தன.
20ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் பி.வி.சுப்ரமணிய பிள்ளை சென்னையில் மிக முக்கியமான முகவரிகளில் நிலங்களையும் அரண்மனை போன்ற பங்களாக்களையும் வாங்கினார். அடையாறு ஆற்றின் கரையில் மட்டும் பிராடி கோட்டை வீடு (Brodie Castle), கிரேஞ்ச் கோட்டை வீடு (The Grange), சோமர்ஃபோர்ட், மோரிசன் கார்டன்ஸ், கிரேம்ஸ் கார்டன்ஸ், ‘பிஷப் கார்டன்ஸ்’ என்றழைக்கப்படும் பகுதி முழுவதும் அவருக்குச் சொந்தமானவை. இந்தக் குடியிருப்புகளில் உயர் பதவியில் இருந்த காலனிய அதிகாரிகள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, பிற நீதிபதிகள், பெரிய தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோர் வாடகைக்கு இருந்தனர். இன்று க்ரீன்வேஸ் சாலை என்றழைக்கப்படும் வீதியிலிருந்த இந்தப் பங்களாக்கள் பெரும்பாலானவை இப்போது அரசாங்கத்திற்குச் சொந்தமானவையாக இருக்கின்றன. இன்றைக்கு அமைச்சர்களின், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் வீடுகளாக மாறியிருக்கின்றன. இவற்றின் இன்றைய சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடிகள் வரை வரும். இதுமட்டுமல்லாது எழும்பூரிலும் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் அவருக்குக் கணிசமான அளவில் சொத்துகள் இருந்தன. அவர்கள் குடும்ப வீடான ‘கல்யாண்’ சமீப காலம் வரை இருந்திருக்கிறது. அவரின் இந்த வீட்டிற்குப் பெரும் அரசியல் தலைவர்கள் வருகைப் புரிந்திருக்கிறார்கள்.
அரசியலில் ஈடுபாடு
ஆதிதிராவிடர்கள் அரசியலிலும் தீவிரமாக இருந்தனர். 1850 முதல் திராவிடர், பறையர், ஆதிதிராவிடர் என்கிற அடையாளங்களோடு அரசியல் அமைப்புகளை உருவாக்கி மாநாடுகள் நடத்தினர். அரசிடம் தங்கள் குறைகளை முன்வைத்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெரும் வணிகர் என்று போற்றப்படும் பி.எம்.மதுரை பிள்ளை அவர்களின் தந்தையார் மார்க்கண்டன் பிள்ளை, ஜான்ரத்தினம், அயோத்திதாசர், ரெட்டமலை சீனிவாசன் போன்ற தலைவர்கள் தலித்துகளின் உரிமைகளைப் பெறுவதில் தீவிரப் பங்காற்றினர். சொந்தமாக அச்சகங்களை நடத்தி, செய்தித்தாள்களையும் புத்தகங்களையும் வெளியிட்டனர்.
வெங்கடாசலம் குடும்பம் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதலே அரசியலில் தீவிரமாகப் பங்கேற்று வந்திருக்கிறது. பி.வி.சுப்பிரமணிய பிள்ளை பெருந்தலைவர் எம்.சி. இராஜாவின் தந்தை மயிலை சின்னதம்பி பிள்ளையுடன் இணைந்து 1892இல் மெட்ராஸ் ஆதிதிராவிட மகாஜன சபை தொடங்கி பதிவு செய்திருக்கிறார்கள். பல்வேறு மாநாடுகளுக்கும் அவர்தான் பொருளுதவி செய்திருக்கிறார். பின்னர் 1917இல் எம்.சி.இராஜா தலைமையில் அவரும் பிற ஆதிதிராவிட தலைவர்களும் இணைந்து மாண்டேகு – செம்ஸ்போர்ட் குழுவிடம் தங்கள் சமூகத்தை ஆதிதிராவிடர்கள் என்று பெயர் மாற்றம் செய்யும்படி கோரிக்கை வைத்தனர். பி.வி.சுப்பிரமணிய பிள்ளையின் சகோதரர் மகன் பி.வி.எஸ்.சுந்தரமூர்த்தி பிள்ளை சென்னை சட்ட மேலவையில் ஆதிதிராவிடர் நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நியமன உறுப்பினராக எம்.சி.இராஜா, ரெட்டமலை சீனிவாசன், வீரய்யன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். அதோடு பி.வி.சுப்ரமணிய பிள்ளையின் பேரன் பி.வி.எஸ்.வெங்கடாசலம் சென்னையின் ஷெரீப் ஆகவும் இருந்திருக்கிறார். இவரின் மனைவி ஜோதி வெங்கடாசலம். காங்கிரஸ் உறுப்பினராக இல்லாத சூழ்நிலையிலும் ராஜாஜி அவரைத் தம் அமைச்சரவையில் மதுவிலக்கு மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சராக 1952இல் சேர்த்துக்கொண்டார். தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் அவர்தான். பிறகு காமராஜர் அமைச்சரவையிலும் பொது சுகாதார அமைச்சராகப் பணிபுரிந்தார். அவர் காலத்தில்தான் கோவை, செங்கல்பட்டு, திருநெல்வேலி பகுதிகளில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. ஸ்டான்லி மருத்துவமனைக்கு நிலங்களைத் தானமாக அளித்தார். 1974இல் அவருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 1977 முதல் 1982 வரை கேரள ஆளுநராகவும் இருந்தார் ஜோதி வெங்கடாசலம்.
பி.வி.சுப்ரமணியம் பிள்ளை அவர்களின் வீடுகளில் சில
தேக்கம்
பி.வி.சுப்ரமணியம் பிள்ளையின் காலத்திலிருந்தே குடும்ப உறுப்பினர்களுக்கிடையே சொத்துப் பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருந்தன. அவரது சகோதரர் மகன் அதே பெயரில் கறிமாசாலா தூளை ஏற்றுமதி செய்திருக்கிறார். அதன் காரணமாக நீதிமன்ற வழக்குகளைச் சந்தித்திருக்கிறார். பி.வி.சுப்பிரமணிய பிள்ளையின் மறைவுக்குப் பிறகு இப்பிரச்சினைகள் தீவிரமடைந்தன. பல சொத்துகள் நண்பர்களால் அபகரிக்கப்பட்டிருக்கின்றன. தொழில் விரிவாக்கத்திற்காக வாங்கிய கடன்கள் சுமையாக மாறின. வாரிசுகளிடையே ஏற்பட்ட சொத்துப் பிரச்சினை காரணமாக நிறுவனம் நீதிமன்றம் நியமித்த ஆணையரால் சில காலம் நிர்வகிக்கப்பட்டிருக்கிறது. கடன்களை வசூலிக்கச் சொத்துகளும் நிறுவனமும் ஏலம் விடப்பட்டிருக்கின்றன. பி.வி.சுப்பிரமணிய பிள்ளையின் பேரன் பி.வி.எஸ்.வெங்கடாசலம் ஏலத்தில் வியாபார உரிமையை வாங்கினார். பிறகு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக முந்தைய இடத்திலேயே அவர் நிறுவனத்தை நடத்தினார். அவர் சிறப்பாக நடத்தியபோதும் வெளிநாட்டு முகவர்களுடன் விட்டுப்போன தொடர்புகள் முளைப்பதில் இடர்பாடுகள் இருந்தன. வணிக ரீதியான தகராறுகள் இருந்தன. இவற்றோடு இந்தியா மற்றும் இங்கிலாந்தில் வணிக முத்திரை பிரச்சினையும் சேர்ந்துகொண்டது. இவையெல்லாம் சேர்ந்து மெட்ராஸ் கறிமசாலா தூள் மீதான ஏகபோகத்தை இழக்கச் செய்தன. நிறுவனத்தின் இங்கிலாந்து விநியோகஸ்தர்களாக இருந்த ஷார்வுட்ஸ் நிறுவனம், வெங்கடாசலம் நிறுவனத்தில் நிலவிய பிரச்சினையைச் சாதகமாகக் கையாண்டு ஷார்வுட்ஸ் வெங்கட் என்ற பெயரில் கறிமசாலா தூள் ஒன்றினைச் சில காலம் விற்றார்கள். வெங்கடாசலம் பெயர் மசாலா உலகிற்கு எவ்வளவு இன்றியமையாததாகத் தேவைப்பட்டது என்பதை இது காட்டுகிறது. இவ்வாறு சென்னை மாகாணத்தின் மிகவும் வெற்றிகரமான வணிக நிறுவனம் ஒன்றின் வீழ்ச்சி படிப்படியாக நடந்தது. இருந்தும் பி.வி.எஸ்.வெங்கடாசலம் மறைந்தபோது “ஊறுகாய் அதிபர் மரணம்” என்று பத்திரிகைகள் எழுதின. நிறுவனம் அவர் வரையிலும் பிரபலமாக இருந்ததற்கான சான்று இது. பிறகு வெங்கடாசலம் வழித்தோன்றல்களால் அந்நிறுவனம் இன்றும் நடத்தப்படுகிறது. இது பி.வெங்கடாசலம் வழிதோன்றல்களில் இன்றும் மசாலா தூள் விற்பனையில் இருக்கும் குடும்பக் கிளையின் கதை மட்டும்தான். அவரின் பிற வழித்தோன்றல்கள் பற்றிய தகவல்கள் குறைவாகவே கிடைக்கின்றன. அவர்களில் பலர் இன்று அரசு அதிகாரிகளாகவும் தொழிலதிபர்களாகவும் மாறியிருப்பதாகத் தெரிகிறது.
19ஆம் நூற்றாண்டில் சாதிபேதமற்ற தமிழர் ஒருவரால் இவ்வளவு பெரிய உலகளாவிய நிறுவனம் கட்டமைக்கப்பட்டது என்பது அசாத்திய சாதனை. தலித்துகளின் தொழிற்முனைவோர் மனப்பான்மைக்கு இதுவோர் எடுத்துக்காட்டு. வெங்கடாசலம் என்ற வணிகக் குறியீடு இன்றும் அங்கீகரிக்கப்பட்டு, உலகெங்கிலும் நினைவுகூரப்படுவது அந்நிறுவனம் உருவாக்கிய நல்லெண்ணத்தைத் தெரிவிக்கிறது.
புகைப்படங்கள் : கபிலன் சௌந்தரராஜன்