டேனியின் அம்மா

பிரபு தர்மராஜ்

“ஒரே ஹாஸ்டல்ல… அதுவும் ஒரே ரூம்ல இருக்குறவங்களுக்குள்ள என்ன சண்ட? கண்ணு மண்ணு தெரியாம அடிக்கிற அளவுக்கு பிரசாத் என்ன தப்பு செஞ்சான் டேனி? டுமாரோ மார்னிங் யூ ஷுட் மீட் மீ இன் மை கேபின்! கேட்ச் திஸ்?” என்று கத்திவிட்டுப் போனாள் அந்த விடுதியின் வார்டன் தாரா.

அறையில் படுத்திருந்த டேனிக்கு அவனுடைய அம்மா ஃப்ளோராவின் நினைவு வந்தது. டேனி எப்போதெல்லாம் தன்னுடைய தனிமையை உணர்கிறானோ அப்போதெல்லாம் ஃப்ளோரா நினைவுக்கு வருவாள். அப்படியான தருணங்களில் அவளது புடவைத் தலைப்பின் வாசனை அவனது மூக்கின் முன் வந்து நிற்கும்; அவளது தாலாட்டுப் பாட்டின் கொஞ்சும் குரல் அவனது காதுகளுக்குள் வந்து உரசும்; கூக்குரல்கள் நிறைந்தவொரு பெருங்கூச்சல் செவிப்பறையில் மோதி இரையும்; அவனது கைகள் உருண்டையான, மிருதுவான இரண்டு மார்புகளைத் தொட்டு உணரும்.

ஒப்பாரி என்பது மனிதர்களின் தொண்டைக்குழிக்குள் இருந்து வெளியேறும் ஒலியோடு கூடிய கொடுமையான வலி என்பது டேனிக்குச் சரியாகப் புரியாத வயது அது. அன்றுதான் ஃப்ளோரா செத்துப் போயிருந்தாள். சாலையில் ஓடும் தண்ணீர் லாரிகள் சில சமயங்களில் வானில் பறக்க முயலும்போது ஓரத்தில் நடந்துசெல்லும் பாவப்பட்ட ஆத்துமாக்களை அறுவடை செய்துவிடும். அன்றைய போணி கடைக்கு அரிசி வாங்கப்போன ஃப்ளோரா. பூட்டப்பட்டிருந்த தன்னுடைய வீட்டினுள் படுத்துறங்கும் மூன்று வயது பிள்ளையை யார் திறந்து வெளியேற்றுவார்கள் என்பதையறியாமல் பதைபதைப்பில் ஒரு ஏக்கப் பெருமூச்சோடு ஃப்ளோராவின் ஆவி அவளது நுரையீரலில் இருந்து வெளியேறியது. காதிலிருந்து வடிந்த ரத்தம் அவளது உயிர் பிரிந்துவிட்டதை உணர்த்தியது.

போஸ்ட் மார்ட்டம் முடிந்து ப்ளோராவின் உடல் வரும் முன்னரே அவளது வீட்டுக் கதவு உடைத்துத் திறக்கப்பட்டு உள்ளே அழுதுகொண்டிருந்த டேனி மீட்கப்பட்டிருந்தான். மூன்று வயதிலும் தன்னுடைய மார்க்காம்புகளை விடாமல் உறிஞ்சிக்கொண்டிருந்த தன் மகனைத் தவிக்கவிட மனதில்லாமல் பாலருந்த அனுமதித்ததையும், தங்கு தடையின்றிச் சுரந்த பாலினால் பிள்ளை பசியாறியதைக் கண்டு அமைதியாய் இருந்துவிட்டதையும் எண்ணி வருந்தும் நிலையில் இப்போது ஃப்ளோரா இல்லை. தாயின் மார்புக் காம்புகள் இல்லாததால் டேனி பசியில் அழுதுகொண்டிருந்தான். அக்கம் பக்கத்து வீட்டார்கள் எவ்வளவோ முயன்றும் அவனது பசி மட்டுமே ஜெயித்தது.

ஃப்ளோராவின் கணவன் ஜேம்ஸ் செத்துப்போனபோது மகன் டேனி வயிற்றுக்குள் இருந்தான். தகப்பன் என்றொரு முக்கியமான உறவு உண்டென்பதும் அது தனக்குக் கிடைக்கப் போவதில்லையெனவும் கர்ப்பப்பைக்குள் இருந்த டேனிக்குத் தெரியாது. இப்போது மிச்சமிருந்த ஓர் உறவையும் இழந்திருந்தான்.

எல்லோரும் ஏன் இத்தனை சத்தமாகக் கத்துகிறார்கள்? அம்மாவின் குரல் மட்டும் அங்கு ஒலிக்கவில்லையென்பதை அவன் உணர்ந்தாலும், தன்னைக் கைப்பிடித்து அந்தக் கூட்டத்துக்குள் அழைத்துச் செல்ல அம்மா தன்னருகில் இல்லையென்பது மட்டும் புரிந்தது. “அம்மீ!” என்று கத்தினான். வயதான தாத்தா ஒருவர் டேனியின் தோளைத் தொட்டுத் தூக்கி ஃப்ளோராவின் அருகில் கொண்டுபோனார். என்ன நடக்கிறது என்பது புரியாத டேனியின் கையில் முதலில் தட்டுப்பட்டது ஒரு மலர்மாலை. அதைத் தொட்டு முகர்ந்தவன் சுற்றிமுற்றிப் பார்த்தான். கூட்டம் இன்னும் சத்தமாய்க் கதறியழுததில் திடுக்கிட்டுப் போனான்.

டேனி யாரையும் சட்டை செய்யாமல் தன்னுடைய அம்மாவின் முகத்தைத் தொட்டுத் தடவி கழுத்துக்குக் கீழே கையைக் கொண்டுபோய் ஃப்ளோராவின் ரவிக்கையைக் கழற்ற முனைகையில் கூட்டத்திலிருந்தவர்கள் திடுக்கிட்டு ஆண்கள் கொஞ்சம்பேர் வீட்டின் வெளிப்பக்கம் நகர்ந்தார்கள். பெண்கள் கொஞ்சம்பேர் சேர்ந்து டேனியை வெளியில் இழுக்க முயற்சிக்க டேனியின் கத்தல் அதிகரித்தது. ஒரு பெண்மணி டேனியை விடுவித்துச் சொன்னாள்,

“பாவம்! கண்ணுதெரியாத புள்ள! கடைசியா ஒருவாட்டி தொட்டுப் பாத்துக்கட்டும்! பெத்த அம்மல்லா! ”

கூட்டத்தில் மீண்டும் அழுகைச் சத்தம் வலுத்தது. டேனி தன்னுடைய தாயின் மார்க்காம்பில் வாயை வைத்த அடுத்த வினாடியில் முகத்தைக் கோணியபடி மறுபடியும் கத்தத் துவங்கினான். பிரேதப் பரிசோதனை முடிந்த உடலாதலால் அதிலிருந்து எழுந்த மருந்து வாடையும், ஃபார்மால்டியெட் சுவையும் டேனியைக் குழப்பிவிட்டன. ஒரு பெண்மணி எழுந்து போய் டேனியைத் தூக்கினாள். அழுதுகொண்டேயிருந்தவனைக் கூட்டமே பரிதாபமாகப் பார்த்தது.

டேனியின் தகப்பன் ஜேம்ஸ் மின்சார வாரியத்தில் லைன்மேனாகப் பணிபுரிந்தான். மனசாட்சியற்ற மின்சாரத்துக்கு ஜேம்ஸின் கர்ப்பிணி மனைவியைக் குறித்த கவலை ஏனோ இல்லாதிருந்தது. காலையில் வேலைக்குப் போன கணவன் கரிக்கட்டையாய் வீடு திரும்பிய அதிர்ச்சியில் தலைகுப்புற விழுந்தாள் ஃப்ளோரா. தன் வயிற்றில் இருந்த சிசுவின் உலகம் இருளடைவதற்குக் காரணமாய் அந்த வீழ்ச்சி இருந்துவிடும் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை.

பனிரெண்டாம் வகுப்பு வரை படித்திருந்தாள் ஃப்ளோரா. அவளது வாழ்க்கையின் ஒளியை அணைத்துப் போட்டதற்குப் பிராயச்சித்தமாய் அவளுக்கொரு வேலை கொடுத்து மின்சார வாரியம் அவளை அணைத்துக்கொண்டது. மின்சார வாரியம் ஏற்றிய தீபத்தைக் குடிநீர் வாரியம் தங்களது துறையின் காலாவதியான வாகனச் சக்கரத்தில் வைத்து அணைத்து டேனியின் வாழ்வை நிரந்தர இருட்டாக்கியது.

ஃப்ளோரா வேலைக்குச் செல்லும் காலங்களில் குவார்ட்டர்சில் இருந்த சக ஊழியரின் மகள் அருணாவின் கைகளில் ஒப்படைக்கப்படுவான் டேனி. கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்த அருணாவும் டேனியைப் பார்த்துக்கொள்வாள். இனிமேல் டேனியை யார் பார்த்துக்கொள்வார்கள்? அடக்கம் முடிந்து வரும்போது தன் தகப்பனின் கைகளில் உறங்கிக்கொண்டிருந்த டேனியை ஓடிப்போய் தூக்கிக்கொண்டு அழுதாள் அருணா.

அன்றிலிருந்து டேனியைப் புட்டிப்பால் குடித்துப் பசியாறப் பழக்கினாள் அருணா. ஆனாலும் அடிக்கடி அவளுடைய நெஞ்சைத் தன்னுடைய பிஞ்சுக் கைகளால் துழாவிய டேனியிடம், அவனது தாய்க்கும் தனக்கும் இடையில் இருந்த வித்தியாசத்தைப் பழக்கத் தெரியாமல் போயிருந்தது. அடுத்த ஆறுமாதங்களில் அருணாவுக்குத் திருமணம் முடிந்து மதுரைக்குப் போனாள். டேனியைப் பார்த்துக்கொள்ள ஆளில்லாததால் பாதிரியார் ஒருவரின் உதவியோடு விடுதியில் டேனி சேர்க்கப்பட்டு இன்றோடு பதினொரு ஆண்டுகள் முடிந்திருந்தன. ஆச்சர்யம் என்னவென்றால் டேனி தன்னுடைய தாயை முன்னெப்போதும் கண்டிருக்கவேயில்லை! அவனைப் பொருத்தமட்டில் ஃப்ளோராவுக்கு உருவமில்லை! அவள் ஒரு பேராத்துமா! மரணம் என்பது உயிரற்றுப் போதல் என்பதைத் தாண்டிலும் மரித்தவர்களது இருத்தல் என்பது இல்லாமல் போவதுதான்.

அம்மாவின் குரல் அவ்வப்போது அசரீரியாய் ஒலிக்கும். “டேனிக்கண்ணு! அம்மா வந்துருக்கேன் பாரேன்!” என்று கேட்கும்போதெல்லாம் தன்னுடைய இயலாமை உறுத்த, “நீ எங்கம்மா இருக்க? என்னைய ஏன் விட்டுட்டுப் போன? கூட்டிட்டுப் போய்ருக்கலாம்லா?” என்று கதறியழுதுவிட்டு உறங்கிப் போவான். சக மாணவர்கள் இவனது குரல் கேட்டு மவுனமாக எங்கோ வெறித்துப் பார்ப்பர். அவர்களுக்கும் கண்ணீர் எட்டிப்பார்க்கும். கணேஷ் மாத்திரம் எழுந்து போய் டேனியைத் தேற்றுவான்.

அங்கிருக்கும் எல்லா மாணவர்களுக்கும் அப்பாவும் அம்மாவும், அப்பா மாத்திரம், அம்மா மாத்திரம் என்று உறவுகள் இருந்தார்கள். வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று தங்களுடைய பிள்ளைகளைப் பார்க்கவந்து அவர்களோடு அளவளாவுவார்கள். அப்போதெல்லாம் டேனி ஏதேனும் ஒரு மரத்தினடியில் தனியாகவே அமர்ந்திருப்பான். டேனியின் நண்பர்களது பெற்றோர் யாராவது வந்து அவனிடம் பேசிக்கொண்டு, தாங்கள் கொண்டுவந்த தின்பண்டங்களையோ அல்லது ஏதேனும் எழுது பொருட்களையோ தருவார்கள். டேனியும் அதை மிகுந்த மகிழ்வின் நிமித்தம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு நன்றி செலுத்துவான்.

நம்மைப் பார்க்க ஏன் யாரும் வருவதில்லை என்ற கவலை அவனுக்குத் தோன்றும். சொந்தபந்தங்கள், உடன்பிறப்புகள் என்றோர் உறவுக் கட்டுமானம் இந்தச் சமுதாயத்தில் இருப்பதே அவனுக்குக் கொஞ்ச காலத்துக்கு முன்னர்தான் தெரியும். ஏனென்றால் டேனியின் பெற்றோர் சாதி கடந்து திருமணம் செய்துகொண்டவர்களாதலால் அவர்களுக்குத் தத்தமது வீட்டினரின் ஆதரவு கிடைக்கவில்லை. ஊரைவிட்டு, உறவுகளைவிட்டு வெகுதூரம் வந்து, இந்தப் பூமியில் டேனியை மட்டும் விட்டுச் சென்றிருந்தார்கள். அதனால் டேனி என்றொரு ரத்தபந்தம் இந்த உலகில் தனித்து வாழ்வது கூட அவனது உறவினர்களுக்குத் தெரியாது.

டேனியின் பொழுதுபோக்கு பாடல்கள் கேட்பது. வெளிநாட்டு ஸ்பான்சர் ஒருவர் அவனுக்குக் கொடுத்திருந்த ஐ-பாட், அவனது தனிமையைத் தற்காலிகமாய்த் தள்ளி வைக்கும். ஒருநாள் எங்கோ தூரத்தில் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் ‘அம்மா அம்மா நீ எங்க அம்மா’ பாடல் ஒலித்ததைக் கேட்டு, வார்டன் தாராவிடம் போய் அந்தப் பாடலைத் தன்னுடைய ஐபாடில் பதிந்து தருமாறு வேண்டுகோள் வைத்தான். அவளுக்கும் டேனி மீது தனிக்கவனம் உண்டு. தாய் தகப்பனில்லாத பிள்ளையல்லவா! அவளும் அந்தப் பாடலைப் பதிவு செய்து கொடுத்தாள். அதற்குப் பின்னர் அந்தப் பாடல் மாத்திரமே அவனுக்குக் கதியாகிப் போனது. குறிப்பாகப் பாடகி எஸ்.ஜானகியின் உருக்கமான குரலில் வரும் வரிகள் டேனியை அசைத்துப் பார்த்துவிடும்.

தொடர்ச்சியாக நிகழ்ந்த இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு தாரா ஓடிவந்து ஆறுதல்படுத்திவிட்டுப் போனாள். அப்படிப்பட்ட தாராவா இன்று தன் மீது கோபப்பட்டாள் என்ற கேள்வி டேனியின் மண்டைக்குள் அரித்துக்கொண்டேயிருந்தது.

Illustration by Lara Vapnyar

 

‘ஆனாலும் தான் செய்தது தவறல்லவா? பிரசாத்தை அடித்திருக்கக் கூடாது! அவனும் அப்படிப் பேசியிருக்க வேண்டாம்!’ என்று கேள்வியும் பதிலுமாக ஆகிப்போனது. பிரசாத் அந்தப் பள்ளிக்கு வந்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்தன. நல்ல கண் பார்வையோடு பிறந்த பிரசாத்துக்குப் பதினேழு வயதில் அவனது தந்தை வாங்கிக்கொடுத்த 350 சிசி வாகனம் ஒரு விபத்தில் சிக்கியதில் பார்வையை இழந்திருந்தான். படிப்பு அவசியம் என்பதால் அவனை இங்கே கொண்டுவந்து சேர்த்திருந்தார்கள். அதுவரையிலும் எழுத்துகளைக் கண்களால் கண்டு படித்த பிரசாத்துக்குத் தொட்டுணர்ந்து கற்றுக்கொள்ளும் ப்ரெய்லி எழுத்துகள் சலிப்பைத் தந்தன. சக மாணவர்கள் அவனுக்கு ப்ரெய்லியைக் கற்றுக்கொடுத்திருந்தார்கள்.

இந்த நிலையில் யாரோ ஒருவரது கண்கள் தானம் செய்யப்பட்டு, அதைப் பெறுவதற்கான பட்டியலில் டேனியின் பெயர் முதலில் இருந்தது. அறுவை சிகிச்சைக்கான நாள், நேரம் எல்லாம் வந்த பிற்பாடு டேனிக்கு மிகுந்த மகிழ்ச்சி. மற்ற மாணவர்களுக்கும் பெருமை பிடிபடவில்லை. தாங்களும் குறுகிய காலத்திலேயே யாரோ ஒருவரது கண்களைப் பெற்றுக்கொண்டு எஞ்சிய காலத்தைப் பார்வையோடு கழிப்போம் என்னும் நம்பிக்கை அவர்களுக்கு வந்திருந்தது.

அன்றைக்குப் பள்ளி முடிந்து விடுதிக்கு வந்ததும் எல்லோரும் டேனியைச் சூழ்ந்துகொண்டு வாழ்த்தினார்கள். பிரசாத்தும் வந்தான். அப்போதுதான் கணேஷ் பிரசாத்திடம் கேட்டான், “பிரசாத்தண்ணே! நீ யானையப் பாத்துருக்கியா?”

பிரசாத் சிரித்துக்கொண்டே, “ஆமா நிறைய வாட்டி…! எங்க தெருவுக்கெல்லாம் பிச்சையெடுக்க வரும்!”

கணேஷ் அதிர்ந்து போய், “என்ன யானை பிச்சையெடுக்குமா? என்னண்ணே சொல்ற? ஆமா தெருவுல நடந்து போகும்போது யாரும் அத மிதிச்சிட மாட்டாங்களா? குட்டியுண்டு இருக்கும்ல!”

பிரசாத் சிரித்தான், “யான குட்டியுண்டு இருக்குமா? யார்ரா சொன்னது? இந்த ரூம் சைசுக்கு இருக்கும்டா அது! யானை யாரையாச்சும் மிதிக்காம இருந்தா சரிதான்! அது இருக்குற சைசுக்கு அதையெல்லாம் எப்புடி நாம மிதிக்கிறது? சின்னதா இருக்கும்னு சொல்றியே நீ இதுக்கு முன்ன அதப் பாத்துருக்கியா?”

“இல்ல!” என்றவாறே எழுந்து போய் தன்னுடைய பெட்டி ஒன்றைத் துழாவி ஒரு யானை பொம்மையை எடுத்துவந்து பிரசாத்திடம் கொடுத்தான் கணேஷ்.

பிரசாத் மீண்டும் சிரித்துக்கொண்டே, “டேய், இது யான பொம்மடா கணேஷு! யான ரொம்பப் பெருசா இருக்கும். ஒரு மிதி மிதிச்சுதுன்னு வையி… நேரா அடக்கம்தான்!”

வில்லியம் பிரசாத்திடம், “யானை காட்டுக்குள்ளதானே இருக்கும்? தெருவுல பிச்சையெடுக்கும்னு சொல்றீங்களே, பொய்தானே?”

பிரசாத், “யாருடா அது வில்லியமா கேட்டது?”

வில்லியம், “நாந்தாங்கண்ணா!”

“யானைன்னா காட்டுக்குள்ளதான் இருக்கும், இருக்கணும். ஆனா மனுசங்கதான் அதைப் பழக்கி கண்டதையும் திங்க வச்சி நாசமாக்கி எல்லார் தலையிலயும் ஆசீர்வாதம் கொடுக்க வச்சி காசு வசூல் பண்றாங்க. ஆனா, தான் ஆசீர்வாதம் கொடுக்குறோம்னு அந்த யானைக்கிச் சத்தியமா தெரியாது” என்று சொல்லி சத்தமாகச் சிரித்தான் பிரசாத்.

அவனது அந்த ஜோக் புரியாததால் யாரும் சிரிக்கவில்லை.

ஜோஸ் கேட்டான், “பிரசாத்தண்ணா நீ காடு பாத்துருக்கியா?”

“ஆமா! எங்கப்பா கூட ட்ரெக்கிங் போயிருக்கேன்!” என்று கண்கள் விரியச் சொன்னான் பிரசாத்.

“ட்ரக்கிங்கா… அப்டின்னா?” என்றான் கணேஷ்.

“ட்ரக்கிங்னா காட்டுக்குள்ள ரொம்ப தூரம் நடந்து அங்குள்ள மரங்கள், மிருகங்களப் பாக்குறது! அது ரொம்ப ஜாலியா இருக்கும்!” என்ற பிரசாத்தின் முகம் மலர்ச்சியடைந்தது. அப்போது பத்து வயது வில்லியம் எழுந்து போய் பிரசாத்தின் முகத்தை வாஞ்சையோடு வருடிக்கொடுக்க அவனது மூக்கின் கீழிருந்த முடிகள் வில்லியத்துக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கவே, “என்னண்ணே இது வாய்க்கு மேல முடி வளந்துருக்கு?” என்று கேட்டான்.

“அது மீசடா தம்பி! ஒங்கப்பாவுக்கு இருக்கும்ல?” என்றான் பிரசாத்.

“எனக்கு அப்பாவே கெடையாதுணே, இதுல மீசைக்கி எங்க போக!” என்று வில்லியம் சிரிக்க மற்ற மாணவர்களும் சிரித்தார்கள்.

“டேய், ஒருத்தனுக்க அப்பா செத்துப் போனதையாடா சொல்லிச் சிரிப்பீங்க? வாய மூடுங்கடா!” என்றான் பிரசாத். அதற்கு கணேஷ், “அண்ணே! அவங்கப்பா சாராயம்னு ஒண்ண குடிச்சி குடிச்சே செத்தார்ணே! அவரு இருந்த வரைக்கும் வில்லியத்தோட அம்மாவுக்கும் அக்காவுக்கும் நிம்மதியான உறக்கமே கிடையாதாம்! வில்லியம் பொறந்த ஒரு வருஷத்துல அவரு செத்துப் போய்ட்டார்! ஆமா, சாராயம்னா என்னண்ணே?” என்று கேட்க பிரசாத்திடம் ஒரு கனத்த மௌனம். பதிலே சொல்லவில்லை.

மீண்டும் கணேஷ், “அண்ணே! நா கேட்டது புரிஞ்சிதா? சாராயம்னா என்ன? அது குடிச்சா என்னாவும்?”

“கண்ணு போகும்!” என்றான் பிரசாத் கொஞ்சம் கனமான குரலில்.

“கண்ணா, அதுயெப்டி?” என்றார்கள் கோரசாக…

“எனக்கு அப்டிதான் போச்சி” என்றான் பிரசாத்.

“என்னண்ணே சொல்ற?” என்றான் டேனி.

அதுவரைக்கும் தனக்கு நிகழ்ந்தவற்றை யாரிடமும் சொல்லாத பிரசாத் வாயைத் திறந்தான். “எங்க வீட்ல எங்கப்பாம்மாவுக்குக் கல்யாணம் முடிஞ்சி பன்னெண்டு வர்ஷம் கழிஞ்சி நா பொறந்தேன்! அப்பா காலேஜ் ப்ரொஃபசர், அம்மா ஸ்கூல் ஹெச்செம். நா என்ன கேட்டாலும் வாங்கித் தருவாங்க. அப்டி நா கேட்டதுதான் என்னோட பைக். சின்ன வயசுலயே நா எப்பவும் தனியாத்தான் இருப்பேன். அம்மா அப்பாவுக்கு என்கூட ஸ்பெண்ட் பண்ண இருக்காது. மோஸ்ட்லி நா தூங்கினப்புறம்தான் வருவாங்க. ஹாலிடேஸ்லயும் பிசியா இருப்பாங்க. ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் வீட்லதான் எப்பவும் இருப்பேன். அப்டியொரு நாள் எனக்குப் பியர் குடிக்கிற பழக்கம் வந்துச்சி. பைக் வாங்கினதுக்கு என்னோட ஃப்ரண்ட்சுக்கு ட்ரீட் குடுத்துட்டு வீட்டுக்கு வரும்போது நா நிறைய குடிச்சிருந்தேன். அப்ப என்ன நடந்திச்சின்னு தெரியல! கண்ணு முழிக்கும்போது ஒரே இருட்டா இருந்திச்சி. உடம்பெல்லாம் வலி. அப்போதான் தெரியும். என்னோட பைக் முன்னாடி ஒரு பசுமாடு குறுக்கே வந்து நா அதுல மோதி எலெக்ட்ரிக் போஸ்ட்ல தலை அடிபட்ட விஷயம். ஒன்றரை மாசமா கோமால இருந்தேன். நிறைய காசு செலவழிச்சி என்னையக் காப்பாத்திருக்காங்க. ஆனா என்னோட கண்ணக் காப்பாத்த முடியல” என்று அவன் சன்னமாகச் சொல்லி முடிக்கும்வரை அங்கே எந்தவோர் அனக்கமுமில்லை.

“ச்சே! பாவம், எவ்ளோ வலிச்சிருக்கும்ல!” என்று உச்சுக் கொட்டினான் வில்லியம்.

பிரசாத் அந்த இறுக்கமான சூழலைக் கலைத்துவிட்டு “சரி கண்ணு கெடச்சா நீ எத மொதல்ல பாப்ப?” என்று வில்லியத்திடம் கேட்டான்.

“கலர்ஸ்னு சொல்றாங்கல்ல… அது என்னன்னு எனக்குப் பாக்கணும்! அப்புறம் பட்டர்ஃப்ளை! அது ரொம்ப அழகாப் பறக்கும்னு என்னோட தங்கச்சி சொல்லுவா!” என்றான் வில்லியம்.

பிரசாத், “ஓ நல்லது! ஆனா பட்டர்ஃப்ளை எக்கச்சக்கமான கலர்ஸல இருக்கு!”

வில்லியம், “க்ரீன் கலர் எப்டி இருக்கும்ணா?”

பிரசாத், “மரத்தோட இலைகள்லாம் அந்தக் கலர்லதான் இருக்கும்! கலர்ச வாயால சொல்லிட முடியாது வில்லி! அதப் பாத்துதான் தெரிஞ்சிக்கணும்!”

“நா கடல்ல போற கப்பலப் பாக்கணும்! மொதல்ல கடல்தான்! அது நம்ம குளிக்கிற தண்ணித் தொட்டிய விட பல மடங்கு பெருசாமே?” என்று ஆச்சர்யத்தோடு கேட்டான் கணேஷ்.

“ஆனா, நீ நினைக்கிற மாதிரி கடல்ங்குறது அவ்ளோ சின்னதெல்லாம் கிடையாது. நம்ம பூமியில தண்ணிதான் அதிகமா இருக்கு.” என்றான் பிரசாத்.

அதுவரைக்கும் சப்தமில்லாமல் இருந்த ஜோஸ் கேட்டான், “எண்ணே நீ பேயப் பாத்துருக்கியா?”

“சினிமாவுல பாத்துருக்கேன். நிஜத்துல பேயெல்லாம் கிடையாது, அது பேயி இல்ல பொய்யி” என்றான் பிரசாத்.

“சரி நீங்க எல்லாரும் கேட்டீங்க. நாம டேனிகிட்ட ஒண்ணு கேக்கலாம்!” டேனி உட்பட எல்லாரும் ஆர்வமாகவே, பிரசாத் டேனியிடம், “நீ சொல்லு டேனி! உனக்கு ஆபரேஷன் முடிஞ்சதும் யாரைப் பாப்ப? என்றான்.

டேனி உடனடியாக, “கடவுளப் பாப்பேன்!”

“ஹே! கடவுளா! எந்தக் கடவுளக் கண்ணாலப் பாக்க முடியும்? பாத்தாலும்தான் என்ன கேப்ப?” என்றான் பிரசாத்.

“எல்லாருக்கும் மாதிரி கையுங் காலும் குடுத்தியே, கண்ண மாத்திரம் ஏன் குடுக்கலைன்னு கேப்பேன்!” என்றான் டேனி.

மற்றவர்களுக்கும் அது நிஜமாகவும் நியாயமாகவும் பட்டது. “அதானே! என்னவோரு ஓரவஞ்சனை இந்தக் கடவுளுக்கு?” என்றான் வில்லியம்.

“அப்ப உனக்கு உன் அம்மாவப் பாக்கணும்னு ஆசையில்லியா?” என்ற பிரசாத்திடம் டேனி, “அதான் அவங்க செத்துட்டாங்களே. அவங்களப் பாக்க முடியுமான்னு தெரியலை! ஆனா தொட்டாத் தெரியும்!” என்ற டேனியை எல்லாரும் வித்தியாசமாக உணர்ந்தார்கள்.

“உயிரோட இல்லாதவங்கள எப்டித் தொடுவ?” என்றான் பிரசாத்.

கடைசியாக ஸ்பரிசித்த அவளது மார்பகங்களைத் தொட்டால் தன்னுடைய தாயை உணர முடியும் என்பதைக் குறிப்பிட்டான் டேனி. பிரசாத்துக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

“என்னடா ஜோக் பண்ற! உங்கம்மா செத்தாச்சி! அதுவும்போக வேற யாரோட பூப்ஸையும் தொட விட மாட்டாங்க! அப்டியே தொட்டாலும் உனக்கு உங்கம்மாவோட நினைவு வராது! வேற ஒண்ணுதான் வரும்!” என்று பிரசாத் சொல்லவும் டேனிக்கு அதிர்ச்சி.

“நீ என்ன சொல்ற?” என்றான் டேனி.

“டேய், அது நம்ம அம்மாவோடதுன்னா நமக்கு வேற எந்த எண்ணமும் வராது. ஆனா, வேற யாரோடதையாச்சும் தொட்டா உனக்குப் பம்பி நட்டுக்கும்! பூப்ஸோட அட்ராக்ஷனே வேறடா டேனி” என்று சொல்லி மீண்டும் சிரித்தான் பிரசாத். டேனிக்குக் கோபம் வந்துவிட்டது.

“எங்கம்மாவயே தப்பா பேசுறியா?” என்று சொல்லி தன் கையிலிருந்த அலுமினியத் தட்டை பிரசாத்தின் குரல் கேட்ட இடத்தை நோக்கி வீச, அது மிகச் சரியாக பிரசாத்தின் நெற்றியைக் கிழிக்க, பிரசாத்தின் அலறல் சப்தம் கேட்டு வாட்ச்மேன் மணி ஓடி வந்தார். பிரசாத்தை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போனார்கள். மற்றவர்கள் என்ன நடந்ததென்றே தெரியாமல் ஒருவித அதிர்ச்சிக்குள்ளாகி நின்றிருந்தார்கள். பிரசாத்தின் நெற்றியில் இரண்டு தையல்கள் போடப்பட்டு, பெற்றோரை வரவழைத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

மறுநாள் காலை விடிந்தது. டேனி மெதுவாகத் தன்னுடைய வாக்கிங் ஸ்டிக்கை எடுத்துக்கொண்டு வார்டன் ரூமுக்குப் போனான். அங்கே வார்டன் தாரா அமர்ந்திருந்தாள். டேனியைக் கண்டதும் உள்ளே அழைத்து உட்கார வைத்தவள், “டேனி, நீ இவ்ளோ ஷார்ட் டெம்பரான பையனில்லியே! நீ இவ்ளோ கோபப்படற அளவுக்கு அங்க என்னடா நடந்துச்சி?” என்று மிகவும் தன்மையாகக் கேட்டாள். டேனி அமைதியாக முந்தைய நாள் நிகழ்ந்ததைச் சொன்னான். தாராவுக்கு ஆச்சர்யம்,

“அது எப்படி ஒரு மார்பகத்துல கைய வச்சா உன்னால உங்க அம்மாவ ஃபீல் பண்ண முடியும்?”

“முடியும் மேம்” என்றான் தீர்க்கமாக…

“அது எப்பவும் முடியாது டேனி, உங்கம்மா இப்ப நேச்சர்ல இருக்காங்க. அவங்களோட நினைவுகள உன்னால ரீ கால் பண்ண முடியுமேயொழிய டச்சிங் ஃபீலிங்கையெல்லாம் உன்னால உணர முடியாது.”

“இல்ல முடியும், என்னால எங்கம்மாவ உணர முடியும்” என்று மீண்டும் அதே உத்தரவாதத்துடன் பதிலளித்தான் டேனி.

தாரா மிக நீண்ட மவுனத்தில் ஆழ்ந்தாள். இது என்ன மாதிரியான விஷயம் என்பதை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. டேனி அமைதியாக இருந்தான். முப்பத்தைந்து வயது மற்றும் இரண்டு குழந்தைகளின் தாயான தாராவுக்கு டேனியின்மேல் பரிதாபம் ஏற்பட்டது. பதினான்கு வயது குழந்தை தொடுவதால் என்ன ஆகிவிடப் போகிறது என்று தன்னுடைய மேலாடைகளை விலக்கி டேனியின் கைகளைப் பிடித்துத் தன்னுடைய நெஞ்சின் மீது வைத்து, “டேனிஞ் இப்ப சொல்லு, உன்னோட அம்மாவ ஃபீல் பண்றியா?” என்று கேட்டதும் சில வினாடிகள் தொட்டுப் பார்த்துவிட்டுக் கையை விடுவித்துக்கொண்டு சப்தமாக அழுதான் டேனி. தாரா பதறிப்போனாள்.

“என்னாச்சி டேனி?”

டேனி அழுகையை நிறுத்தவில்லை. தாரா விலக்கியிருந்த தனது மேலாடையைச் சரி செய்துகொண்டு கேட்டாள், “உங்கம்மாவ ஃபீல் பண்ணியா டேனி?”

டேனி தன்னுடைய தலையைக் குறுக்கும் நெடுக்குமாக அசைத்தவாறே ‘இல்லை’ என்று சைகை செய்தான். தாராவுக்கு என்ன கேட்பதேன்றே தெரியாமல், “நீ போய் பிரசாத்கிட்ட ஒரு சாரி சொல்லு! இனி அவன்கூட சண்டை போடாதே!” என்றாள்.

டேனி வெடுக்கென எழுந்து “மேம் எனக்கு ஆபரேஷன் வேணாம்! எனக்குக் கிடைக்க இருக்குற கண்கள பிரசாத்துக்குக் கொடுத்துருங்க! நா பொறந்து கொஞ்சநாள் என்கூட இருந்துட்டுச் செத்துப்போன என் அம்மாவோட இழப்பு எனக்கு எப்படியோ அப்படித்தான் பிரசாத்தோட கண்களும்! இனி பாக்க யாரும் எதுவும் இல்லாத எனக்குப் பார்வை எதுக்கு?” என்றவாறே வாக்கிங் ஸ்டிக்கைத் தட்டியவாறே திரும்பி நடக்கத் துவங்கினான்.

l [email protected]

Subscribe
Notify of
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Sunitha Manikandan
8 months ago

அற்புதம். பிறந்ததிலிருந்தே பார்வை இல்லாதவனுக்கு கண்கள் தேவையில்லைதான். ஆனால் இடையில் பார்வை பறிபோவது மிகப்பெரிய கொடுமை. சிரிப்பு வரவைக்கும் பிரபுவின் கதைகளிலிருந்து மாறுபட்டு , மனம் நெகிழ்ச்சியாகும் கதை இது. எவ்வளவு சிரிக்க வைப்பாரோ அவ்வளவு அழவும் வைப்பார் பிரபு. அட்டகாசமான கதை.

Sunitha Manikandan
8 months ago

பிறந்ததிலிருந்தே பார்வை இல்லாதவனுக்கு கண்கள் தேவையில்லை. ஆனால் இடையில் பார்வை பறிபோனது துயரம்தான். சிரிப்பு வரவைக்கும் பிரபுவின் கதைகளிலிருந்து மாறுபட்டு நெகிழ்ச்சி தரும் கதை இது. எவ்வளவு சிரிக்க வைப்பாரோ அவ்வளவு அழவும் வைப்பார் பிரபு. அட்டகாசம் ❤❤💐💐💐

MOOSAA
8 months ago

@பிரபு ..யப்பா செம ரைட்டிங். வேற எமதர்மராஜனை பார்க்கறேன். இப்படி எழுதற இலக்கியவாதிதான் கோலப்பனின் அடவுகளையும் எழுதினார்னா நம்ப முடியல..

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!