சிதறிய கண்ணாடித் துண்டுகளே இந்தியா

இலஞ்சி.அ.கண்ணன்

ந்திய அரசியல் வரலாற்றில் சற்று மாறுபட்ட கூட்டணியாகவே காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமைந்திருக்கிறது. வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாசிச பாஜகவை வீழ்த்த 26 எதிர்க்கட்சித் தலைவர்களுடன் அமைந்த இக்கூட்டணிக்குப் பெயர் ‘இந்தியா’ (INDIA  – Indian National Developmental Inclusive Alliance). ‘இந்திய தேசத்தின் அனைவருக்குமான முன்னேற்றக் கூட்டணி’ என்பதுதான் இதன் பொருள்.

கடந்த ஜூன் 23ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அதன் பின்னர் பெங்களூருவில் கூடிய ஆலோசனைக் கூட்டத்தில் மொத்தம் 26 எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, இராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ், இந்திய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதீஷ் குமார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். நாட்டில் சமூக ஜனநாயகத்தை நிலைநாட்ட விரும்புகிற யாவரும் இத்தகைய கூட்டணிக்கு ஆதரவளிப்பார்கள். ஏனெனில், தற்போது ஆட்சியில் இருக்கும் பாசிச பாஜகவினால் இந்திய இறையாண்மைக்குப் பேராபத்துக் காத்துக்கொண்டிருக்கிறது. எனவே, இவர்களின் பிடியிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றுவதற்கு ஜனநாயகச் சக்திகள் ஒன்றிணைய வேண்டும். அத்தகைய சக்திகளாகவே இக்கூட்டணி இருக்க வேண்டும். அதுவே, மதத்தின் மூலம் வெறுப்பரசியலை விதைத்துக்கொண்டிருக்கும் பாஜகவை வீழ்த்தும்.

அதேவேளையில் இக்கூட்டணிக் கட்சிகள் யாரைப் பிரதமர் வேட்பாளராக முன்மொழிகின்றன என்பதையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அதில் காலதாமதம் ஏற்படுமாயின் ஒருவேளை கூட்டணியின் சிதைவுக்குக்கூட அது வழி வகுக்கும். எனவே, பிரதமர் வேட்பாளரை அறிவிப்பதில் காலதாமதம் கூடாது என்பதை உணர்ந்து செயல்படுவது உத்தமம். பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்துவதில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்குள் முரண்பாடு ஏற்படாமலிருக்க வேண்டும். ஒருவேளை முரண்பாடு ஏற்படுமாயின் அதைச் சுமுகமாகக் கையாள வேண்டும். அப்போதுதான் மக்களின் நம்பிக்கையைப் பெறமுடியும்.

மோடி தலைமையிலான பாஜக கூட்டணியை எதிர்ப்பதற்கு 26 கட்சிகளின் தலைமையில் ஒரு மாபெரும் கூட்டணி தேவையா என்கிற கேள்வி எழலாம். ஆனால், இந்திய தேசத்தின் அத்தனை அரசு அதிகாரிகளையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது பாஜக. குறிப்பாக, அமலாக்கத்துறை முதல் தேர்தல் ஆணையம்வரை தன் கட்டுக்குள்தான் வைத்திருக்கிறது. எத்தனையோ தேர்தல்களில் வாக்குப் பெட்டிகளைத் தூக்கிச் செல்வதையும் வாக்குச்சாவடியில் உள்ள முகவர்களே வாக்கைச் செலுத்துவதையும் நாம் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். தமிழகத்தில் குறைவாக இருக்கலாம். ஆனால், பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் இது சர்வ சாதாரணமாகவே அரங்கேற்றப்படுகிறது என்பதை மறுக்க முடியாது. எனவே, கடந்த ஒன்பதாண்டுகளில் மீண்டும் மீண்டும் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு என்னென்ன யுத்திகளைக் கையாள வேண்டுமோ அவை யாவற்றையும் பாஜக மிக கச்சிதமாகவே செய்துவருகிறது. அதன் காரணமாகவே அமலாக்கத்துறை மூலமாக எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கிக்கொண்டிருக்கிறது.

இத்தகைய சூழலில் ஜனநாயகச் சக்திகள் எல்லாம் ஒன்றுகூடி அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் பாஜகவை வீழ்த்த ஓரணியில் திரள்வது காலத்தின் கட்டாயம். இல்லையென்றால் நாட்டின் அமைதிக்குக் குந்தகம் ஏற்படும். இதற்காகவாது மேற்கண்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் தங்களுக்குள் நிலவுகின்ற வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும்.

மாயாவதி தனித்துவிடப்படுகிறாரா?

உத்தரபிரதேச அரசியலில் நான்கு முறை முதல்வராக இருந்தவர் மாயாவதி. அங்குள்ள 80 லோக்சபா தொகுதிகள்தான் மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அப்படியிருக்கையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியையும் இக்கூட்டணியில் இணைப்பதற்கு முயற்சித்திருக்கலாம். இனியும் காலம் கடந்துவிடவில்லை. அவ்வாறான முயற்சி வெற்றியடைந்தால் அது கூட்டணிக்குக் கூடுதல் பலமாகவே இருக்கும். ஒருவேளை பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் தரம்வீர் சௌத்ரி கடந்த ஆண்டு “2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் மாயாவதியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணையத் தயாராக இருக்கிறோம்” எனக் குறிப்பிட்டதன் காரணமாகவோ அல்லது ஒரு தலித்தை நாட்டின் பிரதமர் வேட்பாளராக நியமிப்பதா என்று நினைத்தோ புறக்கணித்திருக்கலாம். ஆனாலும், 2024 மக்களவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று மாயாவதி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் இக்கூட்டணியில் மாயாவதி மட்டுமல்லாது, தெலங்கானாவில் சந்திரசேகர ராவ், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிஸாவில் நவீன் பட்நாயக் போன்ற முக்கியமான மாநிலக் கட்சித் தலைவர்களையும் சேர்த்தால் இன்னும் கூடுதல் பலம் கிடைக்கும். அந்த முயற்சியில் இக்கூட்டணியை அமைத்த காங்கிரஸ் தலைமை ஈடுபட வேண்டிய தேவை இருக்கிறது. அதுவும் நிறைவேறினால் பாஜகவை வருகின்ற மக்களவைத் தேர்தலில் வீழ்த்துவது எளிது.

பதற்றமடையும் பாஜக

எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியைப் பார்த்து பாஜக பதற்றமடைய ஆரம்பித்துவிட்டது. அதனாலேயே இன்னும் கூடுதலாக வெறுப்பரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அரசியலமைப்புச் சட்டத்திலிருந்தே இந்தியா என்கிற சொல்லை நீக்க வேண்டும் எனக் கொக்கரிக்கிறார்கள். கடந்த 28.07.2023 அன்று மாநிலங்களவையில் பாஜகவைச் சேர்ந்த எம்.பி நரேஷ் பன்சால் கூறியதாவது: “பிரிட்டிஷார் பாரதத்தின் பெயரை இந்தியா என்று மாற்றினார்கள். இதனை 1ஆவது பிரிவின் கீழ் அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் நாடு பாரத் என்ற பெயரில்தான் அறியப்பட்டுவந்தது. இது, நாட்டின் பண்டைய பெயர் என்பதுடன் பழங்கால சம்ஸ்கிருத நூல்களில் அதற்கான சான்றுகளும் உள்ளன” என்றவர், “இந்தியா என்ற பெயர் இன்றளவும் அடிமைத்தனத்தின் சின்னமாகவே விளங்குகிறது” என்றார். பொதுவாக நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் அக்கறை இல்லை என்பதைத்தான் இவர்களுடைய நடவடிக்கைகளின் மூலம் அறியமுடிகிறது. இத்தனை ஆண்டுகாலமாக இல்லாத அக்கறை திடீரென வருவதற்குக் காரணம் தேர்தல்தான் என்பதை மக்களுக்குப் புரியவைக்க வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவதொரு பிரச்சினையைக் கிளப்பி, மக்களை நம்பவைத்து ஏமாற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்கள். மேலும், சம்ஸ்கிருதத்திலிருந்து மேற்கோள் காட்டுவதன் மூலம் அதற்கு இவர்கள் அளிக்கும் முக்கியத்துவத்தையும் உணர வேண்டும். சம்ஸ்கிருத நூலிலிருந்து சான்றுகளைக் கூறுகின்றவர்கள், ‘ஹிந்து’ என்கிற சொல் எங்கிருந்து வந்தது என்பதற்கும் விளக்கமளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

காங்கிரஸிற்கு இருக்கும் பிரதான சிக்கல்கள்

இந்த 26 கட்சிகளும் இணைந்து, பாஜகவை எந்தெந்தக் காரணங்களுக்காக எதிர்க்கிறோம் என்று தெரிவிக்கையில், கொள்கை, சமூக விலக்கல், பொருளாதார நெருக்கடிகள், சர்வாதிகார அரசியல் ஆகியவை தொடர்பாக பாஜக கூட்டணியை எதிர்க்கும் முடிவை எடுத்திருக்கிறோம் என அறிவித்தன. இந்தப் பிரச்சினைகள் யாவுமே நடப்பில் உள்ள பிரச்சினைகள் என்று சொல்வதைவிட, உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகள் என்றே சொல்ல வேண்டும். எனவே, இப்பிரச்சினைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து மேற்கண்ட கட்சிகள் செயல்படுவதோடல்லாமல், மக்களிடம் இவற்றை எடுத்துரைத்து அவர்களுக்கு நம்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டும். அதேவேளை, இந்தக் கூட்டணியை ஒருங்கிணைத்ததன் மூலம் காங்கிரஸ் மிகப்பெரிய தியாகங்களைச் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கும் தள்ளப்பட்டிருக்கிறது.

குறிப்பாக, தலைநகர் டெல்லியிலும் பஞ்சாப் மாநிலத்திலும் ஆம் ஆத்மி கட்சியோடு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதைப்போல் கேரளத்தில் தற்போது ஆளும் மார்க்சிஸ்ட் கட்சிக்குப் பிரதான எதிர்க்கட்சி மட்டுமல்ல போட்டியாளரும் காங்கிரஸ்தான். மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸோடு மார்க்ஸிஸ்ட் கட்சி இணைந்துபோக வாய்ப்பிருக்கிறதா என்பதும் சந்தேகம்தான். இவற்றையும் சமரசம் செய்ய வேண்டிய கூடுதல் பொறுப்பும் காங்கிரஸ் தலைமைக்குதான் இருக்கிறது. ஓரிடத்தில் சில கட்சிகளோடு இணங்கிச் செயல்பட வேண்டும், மற்றோரிடத்தில் கூட்டணிக் கட்சிகளுக்குள் இருக்கும் முரண்களைச் சுமுகமாகத் தீர்த்து வைக்க வேண்டும். இவைதான் தற்போது காங்கிரஸிற்கு உள்ள பிரதான சிக்கல்கள். மேலும், மக்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான வேலைகளில் கவனம் செலுத்துவதில்தான் இக்கூட்டணியின் ஒற்றுமை இருக்கிறது. எனவே, இந்த மெகா கூட்டணி எந்த அளவிற்கு இச்சிக்கல்களைக் கையாண்டு சாதிக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

போலியாகக் கட்டமைக்கப்பட்ட மோடி பிம்பம்

இந்திய ஊடகங்கள் மோடி குறித்து மக்கள் மனங்களில் ஏற்படுத்திய செல்வாக்கையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த மாய பிம்பம்தான், இந்தியாவின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தியவராக மோடியைப் பார்க்க வைத்துள்ளது. மோடி மீது பூசப்பட்டிருக்கும் இத்தகைய போலி பிம்பத்தைக் கட்டுடைக்கும் வேலையை மேற்கண்ட கூட்டணி செய்ய வேண்டும். அதன்மூலமே மோடியின் உண்மை முகம் என்ன, அவரைப் பகடைக்காயாக வைத்துச் சதி வேலையில் ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார்களின் நோக்கம் என்ன என்பது தெரியவரும்.

“இன்று நீங்கள் செல்லும் திசை வலியை விட, நீங்கள் கடந்துவந்துள்ள தொலைவு குறைந்த முக்கியத்துவம் உடையதே” என்கிற டால்ஸ்டாயின் கூற்றை இக்கூட்டணி கருத்தில் கொண்டு செயல்பட்டால் நன்மை பயக்கும்.

வெறுப்பரசியல் செய்யும் பாஜக

மத்தியில் கடந்த 2014 முதல் இன்றுவரை ஆட்சியிலிருக்கும் பாரதிய ஜனதா கட்சியானது தொடர்ந்து சிறுபான்மை மக்கள் மீதும், கிறிஸ்தவ மக்கள் மீதும், தலித் மக்கள் மீதும், பழங்குடியின மக்கள் மீதும் வெறுப்பு அரசியலை செய்து நாட்டின் இறையாண்மைக்குக் களங்கம் விளைவித்துக்கொண்டிருக்கிறது. உண்மையைச் சொல்லப்போனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்து மனுதர்ம சட்டத்தை நடைமுறைப்படுத்த முயல்கிறது. இதன் காரணமாகவே ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்கிற கொள்கையை முன்மொழிகிறது, அதுவும் பல்வேறு இனக்குழுக்கள் வாழுகிற ஒன்றிய தேசத்தில். மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம், வேளாண் திருத்த மசோதா சட்டம், பொது சிவில் சட்டம், காஷ்மீர் பிரச்சினை, தேசியக் கல்விக் கொள்கை ஆகியவற்றைச் சாத்தியப்படுத்துவதன் மூலம் நாட்டு மக்களைப் பதற்ற நிலையிலேயே வைத்துக்கொண்டிருக்கிறது.

குறிப்பாக, மதவாத அரசியலை முன்வைத்து மாட்டிறைச்சி உண்பவர்கள் மீதும், சிறுபான்மை சமூகத்தினர் மீதும், தலித் மக்கள் மீதும் வன்கொடுமைகளை நிகழ்த்தி, கொலைவெறி தாக்குதல்களை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது. இதில் சமூகச் செயற்பாட்டாளர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்; பலர் மீது பொய் வழக்குகள் புனையப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவை யாவற்றுக்கும் ஒரே காரணம் தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்திருக்கிறோம் என்கிற ஆணவப் போக்குதான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு என்கிற எண்ணத்தை மறந்து செயல்பட வைப்பதும் இதுதான். இதை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால் நாட்டின் இறையாண்மை கேள்விக்குறியாகிவிடும், நாட்டில் பெண்கள் வாழவே முடியாது. இவர்களால் அரங்கேற்றப்பட்ட எத்தனையோ கலவரங்களை நாம் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். அதுவும் பெண்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கலவரங்கள் குஜராத் முதல் இன்று அரங்கேறிக்கொண்டிருக்கும் மணிப்பூர் கலவரம் வரை, எல்லாம் இவர்களின் சாதி, மத, இனவாத அரசியலின் விளைவுதாம்.

தேக்கமடைந்த பொருளாதாரம்

பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் மக்களின் பொருளாதார நிலை கேள்விக்குறியாகி உள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது; விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது; வறுமை, விலைவாசி உயர்வு ஆகியவையும் நாட்டு மக்களை வெகுவாகப் பாதித்துள்ளன. பொருளாதார முன்னேற்றத்தில் இந்தியா பின்தங்கியே உள்ளதென்று பொருளாதார நிபுணர்களின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட அமைப்பு (யுஎன்டிபி), ஆக்ஸ்ஃபோர்டு மனிதவள குறியீட்டு எண் அமைப்பு ஆகியவை 17 அக்டோபர் 2022 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை, 2020இல் இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கும் கீழே உள்ள ஏழைகளின் எண்ணிக்கை 22.8 கோடி என்கிறது. இது பற்றியெல்லாம் நிதியமைச்சகத்திற்கோ, நாட்டின் பிரதமருக்கோ எந்தவோர் அக்கறையுமில்லை. நாடு மீதும், நாட்டு மக்கள் மீதும் அக்கறை கொண்டவருக்குத்தானே இதுபற்றிய கவலை இருக்கும். நாடு நாடாகச் சுற்றிக்கொண்டிருப்பவர்களுக்கு இதுபற்றிய கவலை எவ்வாறு வரும்.

உலக அரங்கில் தனக்கான உணவைத் தானே சம்பாதித்துச் சாப்பிட முடியாமல் பட்டினி கிடக்கும் மக்கள் அதிகமுள்ள 121 நாடுகளின் பட்டியலில் இந்தியா 107ஆவது இடத்தில் இருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் இந்தியா இதில் வீழ்ச்சியடைந்துவருகிறது. இந்த எட்டு ஆண்டுகளும் பாஜகதான் ஆட்சி செய்திருக்கிறது, செய்துகொண்டிருக்கிறது. இதைச் சரிசெய்வதற்கான எந்த முயற்சியையும் எடுக்காமல், நாட்டை வளர்ச்சிப் பாதையை நோக்கிக் கொண்டுசெல்வோம் என்பது ‘பார்வையிழந்தவர்கள் இருட்டறையில் கருப்புப் பூனையைத் தேடுவதற்கே’ ஒப்பாகும். மீண்டும் இத்தகையவர்களிடம் நாட்டைக் கொடுத்தால் நாடும் நாட்டு மக்களும் படுகுழிக்குள் தள்ளப்படுவார்கள். ஆதலால்தான் சமூக ஜனநாயகத்திற்கே எதிரானவர்கள் என்று இவர்களைச் சொல்கிறோம். இவர்கள் தங்களுடைய இலட்சியத்தை (ராம ராஜ்ஜியம்) அடைவதற்கு நாட்டு மக்களின் அமைதியையும் சீர்குலைக்கக் கூடியவர்கள்.

இந்தியாவின் ஜிடிபி (நிலையான விலைகளின் அடிப்படையில்) 2004 – 2009 ஆண்டுகளில் ஆண்டுக்கு 8.5% ஆகவும், 2004 – 2014 வரையிலான பத்தாண்டு காலத்தில் சராசரியாக 7.5% ஆகவும் இருந்தது. தற்போதைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் 2014 – 2023 வரையிலான ஒன்பதாண்டு ஆட்சியில் ஒட்டுமொத்த ஜிடிபி சராசரி 5.7%ஆகவே இருக்கிறது. ஆனால், நிதியமைச்சகமோ பொருளாதாரத்தில் இந்தியா வளர்ச்சியடைந்துள்ளது என்று உண்மைக்கு மாறாகச் சொல்லிவருகிறது.

சிறுபான்மை சமூகங்களைப் புறக்கணிக்கும் பாஜக

“பொது சிவில் சட்டம் முஸ்லிம்கள் மீது பலவந்தமாகத் திணிக்கப்படாது. தனிநபர் சட்டங்கள் எதையும் ரத்து செய்யும் உரிமை அரசுக்கு இல்லை. அரசுக்கு அதிகாரம் வந்தவுடனே விதி 35ஐ சட்டமாக்கும் என்றோ, தனது அதிகாரத்தைப் பலவந்தமாகத் திணிக்கும் என்றோ யாரும் அச்சப்படத் தேவையில்லை. முஸ்லிம் சமூகத்தைக் கலவரப்படுத்தும் செயலை எந்தவோர் அரசும் செய்யாது. அவ்வாறு செய்தால் அதுவொரு பைத்தியக்கார அரசாகத்தான் (A Mad Government) இருக்கும்” என்றார் புரட்சியாளர் அம்பேத்கர். அதன் பிறகுதான் விதி 35ஐ அரசியல் சட்டத்தின் வழிகாட்டுக் கொள்கையில் இணைத்துக்கொள்ள வரைவுக் குழு உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டார்கள். ஆனால், புரட்சியாளர் சொன்ன அந்தப் ‘பைத்தியக்கார அரசு’ நாங்கள்தான் என்பதை நிரூபிக்கப் பாஜக துடித்துக்கொண்டிருக்கிறது. சிறுபான்மை சமூக மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் வேலையைச் செய்துகொண்டிருக்கிறது.

தற்போது அமைந்திருக்கும் பாஜகவின் ஒன்றிய அமைச்சரவையில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. அதேபோன்று பாஜகவுக்கு மக்களவையில் இருக்கும் 303 உறுப்பினர்களிலும், மாநிலங்களவையில் உள்ள 92 உறுப்பினர்களிலும் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. ஜனநாயக நாட்டின் இறையாண்மையை இது சீர்குலைத்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்படுகிறது. இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டுமென்றால், ‘இந்தியா’ கூட்டணியில் பிளவு ஏற்படாமல் இருக்க வேண்டும். ஏனெனில், இத்தகைய வேலைகளைச் செய்வதென்பது பாஜகவிற்குக் கைவந்த கலை. எனவே, இதில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மிகவும் கவனமாகச் செயலாற்ற வேண்டும்.

பாஜக ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிவதற்குள் மதமாற்ற தடைச் சட்டத்தை இயற்ற வேண்டுமென பாஜக தலைவர் அமித் ஷா கூறினார். தற்போதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால், மீண்டும் (2024) ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக மதமாற்ற தடைச் சட்டத்தை நிறைவேற்றிவிடுவார்கள். தேசத்தை மதவெறிப் பிடித்த வேட்டைக் காடாகவும் மாற்றிவிடுவார்கள். இதற்கு உதாரணம் பாஜகவின் ஓராண்டு ஆட்சி (2014-15). அந்த ஓராண்டில் நாடெங்கும் தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன, வகுப்புவாத கலவரங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. முஸ்லிம்களுக்கு எதிராகவும் கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் ஏற்பட்ட கலவரங்களில் பலர் கொல்லப்பட்டனர்.

தலித் – பழங்குடியினரின் நலன்களுக்கு எதிரான பாஜக

தலித்துகளுக்கும் பழங்குடி மக்களுக்கும் பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டிய நிதியில் மிகப்பெரிய மோசடியைப் பாஜக அரசு செய்துள்ளது. மேலும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கக்கூடிய உயர்கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்களுக்குரிய இடஒதுக்கீடும் முறையாகக் கடைபிடிக்கப்படுவதில்லை. இடஒதுக்கீட்டை நீர்த்துப்போகச் செய்வதற்கு இந்தியத் தொழிற்நுட்பக் கல்வி நிறுவனங்களை உயர்கல்வி அமைப்பாக (Centre for Excellence) உருவாக்குவதற்கு ராம் கோபால் ராவ் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது பாஜக அரசு. இதற்குப் பல தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் வந்ததும் குறிப்பிடத்தக்கது. இக்குழுவானது தனது அறிக்கையில், தொழிற்நுட்பக் கல்வி நிறுவனங்கள் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதால், ஐஐடி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியினருக்குத் தற்போதுள்ள இடஒதுக்கீடு முறை தேவையில்லை என்று பரிந்துரைத்துள்ளது. மேலும், ஆசிரியர் பணியிடங்களிலும் இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்றும் அதே ராம் கோபால் ராவ் குழு தெரிவித்திருக்கிறது.

தாழ்த்தப்பட்டோர் துணைத் திட்டத்தின் (எஸ்சிஎஸ்பி) அடிப்படையில் 77,236 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கியிருக்க வேண்டும். மாறாக, 30,850 கோடி மட்டுமே ஒதுக்கியது. இச்செயல் தலித் மக்கள் மீதுள்ள பாஜகவின் வெறுப்பரசியலையே காட்டுகிறது. ஆனால், சில தலித் அமைப்புகள், பாஜகவிற்கு ஆதரவளிப்பது வேதனையளிக்கிறது.

தலித் மாணவர்களின் இடைநிற்றல் மற்றும் தற்கொலைகள்

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் கல்வி நிலையங்களில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தலித் மாணவர்களின் இடைநிற்றல் மற்றும் தற்கொலைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. அண்மையில் ஒன்றிய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில், இந்திய தொழிற்நுட்பக் கழகத்தில் பட்டியலின மாணவர்கள் 2019இல் 186 பேர்களும், 2020இல் 287 பேர்களும், 2021இல் 318 பேர்களும், 2022இல் 229 பேர்களும் தங்களது படிப்பைத் தொடரமுடியாமல் இடைநிற்றல் ஏற்பட்டுள்ளதாகக் கூறியிருக்கிறார். மேலும், இதே காலகட்டத்தில் பட்டியலின, பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த 33 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவிக்கிறார். ஆனால், இவை நடைபெறாமலிருக்க எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காமலிருப்பது அதிர்ச்சியளிக்கிறது, அதேவேளையில் இதுபற்றி யாரும் அதிகமாகப் பேசாமலிருப்பதும் வேதனையளிக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது. ஆகையால், தற்போது அமைந்திருக்கிற ‘இந்தியா’ கூட்டணி இதுபற்றியெல்லாம் பேச வேண்டும். ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கக்கூடிய கல்வி நிலையங்கள் யாவற்றிலும் அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்திய முறையான இடஒதுக்கீட்டை அமுல்படுத்த குரல்கொடுக்க வேண்டும். அதன்மூலமே விளிம்புநிலை மக்களின் நம்பிக்கையைப் பெறமுடியும்.

பட்ஜெட்டைக் குறைத்தல்

தலித் – பழங்குடியின மாணவர்களின் கல்விக்காக முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது ஒதுக்கிய நிதியைக் கூட ஒதுக்காமல், திட்டமிட்டுப் புறக்கணித்துக்கொண்டிருக்கிறது பாஜக அரசு. ப்ரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப் என அழைக்கப்படும் திட்டத்துக்காக காங்கிரஸ் தலைமையிலான அரசு 2013 – 14இல் ஒதுக்கிய தொகை 882 கோடி ரூபாய். பாஜக ஆட்சிக்கு வந்ததும் அதை உயர்த்துவதற்குப் பதிலாக 2014 – 15 பட்ஜெட்டில் 834 கோடியாகக் குறைத்தது. அதிலும் 499 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டது. 2015 – 16ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் மேலுமது 663 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டது. அதிலும் 370.45 கோடி ரூபாயை மட்டுமே செலவிட்டது. 2017 – 18ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் அத்தொகையானது வெகுவாகக் குறைக்கப்பட்டு 50 கோடி ரூபாய் மட்டும்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொகையைக் கொண்டு 37 இலட்சம் மாணவர்களுக்கு மட்டும்தான் ஸ்காலர்ஷிப் வழங்க முடியும். ஆனால் இந்தியா முழுவதும் இந்த ஸ்காலர்ஷிப் பெறுவதற்குத் தகுதியான சுமார் அறுபத்தைந்து இலட்சம் தலித் மாணவர்கள் இருக்கின்றனர்.

பழங்குடி துணைத் திட்டத்தின் (டிஎஸ்பி) அடிப்படையில் 40,014 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதற்குப் பதிலாக வெறும் 19,980 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியது. இத்தகைய சூழலில்தான் நாங்கள் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரைக் குடியரசுத் தலைவராக நியமித்திருக்கிறோம் என்று மார்தட்டிக்கொள்கிறார்கள், மனிதாபிமானமற்ற முறையில் அம்மக்கள் மீது வன்முறையைச் (மணிப்பூர் கலவரம்) செய்துகொண்டேஞ்

கருப்புப் பண விவகாரத்தில் பாஜகவின் பித்தலாட்டம்

தேர்தலுக்கு முன்பாக வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்த கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வோர் இந்தியரின் வங்கிக் கணக்கிலும் 15 இலட்சம் செலுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார் பிரதமர் மோடி. இன்றைக்கு அந்த வாக்குறுதி என்னவானது என்பது மக்களுக்கே வெளிச்சம். இதைப் போன்றுதான் மதுரையில் அடிக்கல்லே நாட்டப்படாத நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டதாகக் கூறிப் பொய் பிரச்சாரம் செய்தார். அதனால் பல்வேறு அரசியல்வாதிகளின் விமர்சனத்திற்கும் பகடிக்கும் உள்ளானார். லீஷீடென்ஸ்டைன் வங்கியில் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் 1,400 பெயர்கள் கொண்ட பட்டியலைத் தருவதற்குத் தயாராக இருப்பதாக ஜெர்மன் அரசு அறிவித்தபோதிலும் அந்தப் பட்டியலைக் கேட்டுப் பெறுவதற்கு இதுவரை பாஜக அரசு நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. மேலும், எச்.எஸ்.பி.சி வங்கியின் ஸ்விஸ் நாட்டுக் கிளையில் 25,420 கோடி ரூபாய் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ள இந்தியாவைச் சேர்ந்த 1,195 பேரின் பட்டியல் 2015 பிப்ரவரியில் ஊடகங்களால் அம்பலப்படுத்தப்பட்டது. இதுவரை அவர்களில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை, கருப்புப் பணமும் பறிமுதல் செய்யப்படவில்லை. இத்தகைய சூழலில்தான் நடு இரவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சொல்லி நாட்டு மக்களை அலைக்கழிய வைத்த பிரதமர் மோடியை, கருப்புப் பணத்தை மீட்கவந்த அவதாரப் புருஷன் என்றெல்லாம் பாஜகவினர் புகழ்ந்துரைத்தனர்.

தேசியக் கல்விக் கொள்கை

தேசியக் கல்விக் கொள்கை 2020 என்பது சாதியின் பெயராலும் பொருளாதாரத்தின் பெயராலும் அடிமைப்படுத்தப்பட்ட விளிம்புநிலை மக்களை மீண்டும் அடிமைப்படுத்தும் விதமாக மனுதர்ம கொள்கைகள், அதனுடைய தத்துவங்கள் இவை யாவற்றையும் உள்ளடக்கியதாகத்தான் இருக்கிறது என்று கல்வியாளரும், மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த பேராசிரியர் ஜவகர் நேசன் குறிப்பிடுகிறார். இதைத்தான் இந்தியக் கலாச்சாரம் என்று சொல்லி அதைச் செயல்படுத்தியும் கொண்டிருக்கிறார்கள். இதன்படியே காந்தியைக் கொலை செய்தது கோட்சே இல்லை என்று பள்ளிப் பாடத்திட்டத்தில் கொண்டுவந்து உண்மையை மறைத்து குழந்தைகளை நம்ப வைக்கிறார்கள். இது நடைமுறையில் சில மாநிலங்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருக்கிறது. மேலும் கர்நாடகத்தில் எட்டாம் வகுப்புப் பாடத்திட்டத்தில் புல்புல் பார்வை மீது சாவர்க்கர் பறந்து வந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் சாத்தியப்படுத்துவதுதான் புதிய கல்விக் கொள்கையின் திட்டமாக இருக்கிறது.

நம்பிக்கை தரும் ராகுலின் பாரத் ஜோடி யாத்திரை

ராகுல் காந்தியின் இந்த யாத்திரையைக் கண்டு பாஜகவிற்கு அச்சம் ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் அவர் செல்லும் இடமெல்லாம் அலை அலையாக அவரைப் பின்தொடரும் மக்கள் கூட்டமும் அவர்களிடத்தில் எளிமையாக உரையாடும் ராகுலின் முதிர்ந்த பக்குவமும் நிச்சயமாக காங்கிரஸின் வெற்றிக்கு வழி வகுக்கும். காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை பாமர மக்கள் முதல் படித்த அறிஞர்கள் வரை அவர்மீது வைத்திருந்த அன்பும் ஆதரவும் மெய்யானது என்பது பாரத் ஜோடி யாத்திரையைப் பார்த்தவர்களுக்குப் புரியும். இந்த யாத்திரைக்குப் பிறகு ராகுல் காந்திக்கு ஆதரவு கூடியிருக்கிறது. இதைப் பயன்படுத்திக்கொண்டு மோடி அரசின் மோசடிகளை அதாவது, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்தது, அதானி – மோடி நெருக்கம், ரஃபேல் விமான பேர ஊழல் இவை யாவற்றையும் இந்திய மக்களிடத்தில் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.

இதன்மூலமே ஊடகங்கள் மூலமாக மோடி பற்றி வெகு கவனமாகக் கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பம், பாஜகவிடம் உள்ள பணபலம், கட்சியின் அமைப்பு பலம் ஆகியவற்றை உடைத்தெறிய முடியும். மேலும் அவர்கள் யாரை வேண்டுமானாலும் மிரட்டி விலைக்கு வாங்கிவிடும் வல்லமைப் படைத்தவர்கள் என்பதையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். ஏனெனில், அமலாக்கத்துறையை அவர்களின் கைப்பாவையாகவே வைத்திருக்கிறார்கள். அவர்களின் மிரட்டலுக்கு அடிபணியாதவர்களை அமலாக்கத்துறை மூலம் மிரட்டுகிறார்கள். நாட்டின் பல மாநிலங்களில் உள்ள நீதித்துறை கூட பாஜகவின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகிறது.

பல்வேறு மகாணங்களின் கூட்டே இந்தியா

கூட்டாட்சி என்றாலே தீங்கானது, மோசமானது என்பதற்கு மேல் அந்தக் கூட்டாட்சியின் தன்மை என்பது பற்றி பொதுமக்களுக்குத் தெளிவானதொரு கருத்துக் கிடையாது. ஆதலால், கூட்டாட்சிப் பற்றிய தெளிவான விளக்கத்தினைக் கூட்டணிக் கட்சிகள் செய்ய முன்வர வேண்டும்.

இந்திய ஒன்றியம் என்பது பல்வேறு சமஸ்தானங்களின் கூட்டுதான். எனவே, அதனுடைய மாண்புகள் காக்கப்பட வேண்டும். இல்லையென்றால் கண்ணாடி மாளிகைக்குள்ளிருந்துகொண்டே கல்லெறிவது போலாகிவிடும். இதைத்தான் பாஜக செய்துகொண்டிருக்கிறது. வருங்காலங்களில் கண்ணாடி மாளிகையில் விரிசல் ஏற்படாமலிருக்க, பாஜகவை 2024 மக்களவைத் தேர்தலில் தோல்வியடையச் செய்ய வேண்டும். புரட்சியாளர் அம்பேத்கர், “என்னுடைய அபிப்பிராயத்தில் இந்தியக் கூட்டாட்சி ஒரு நிரந்தர ஒன்றியம் அல்ல. இந்திய சமஸ்தானங்களுக்குப் பிரிந்து செல்லும் உரிமை உண்டு” என்கிறார். அதாவது, ஒன்றியத்திலிருந்து பிரிந்து மீண்டும் தனது பழைய நிலைக்குத் திரும்பும் வலிமையை இந்திய சமஸ்தானங்கள் கொண்டுள்ளன என்பதுதான் மேற்கண்ட கூற்றின் அடிநாதம். ஒருவேளை பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் புரட்சியாளரின் இக்கூற்று மெய்யாகும் என்பதில் சந்தேகமில்லை.

“மக்கள் தங்கள் இலட்சியங்களை வருங்காலத்தில் காண்பதற்குப் பதிலாகப் பழைமைக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் காலம் இது; மக்கள் சொந்தமாகச் சிந்தனை செய்வதை நிறுத்திவிட்ட காலம் இது. போலவே, அவர்கள் படிப்பதையும் வாழ்க்கையின் உண்மைகளை ஆராய்வதையும் நிறுத்திவிட்டார்கள். கல்வியும் அனுபவமும் காட்டும் பாதையைப் பின்பற்ற மறுத்து, யோகிகளும் பெருமைப் பித்துக் கொள்பவர்களும் கூறும் இருண்ட பாதைகளில் தட்டுத்தடுமாறி செல்ல விரும்பும் அறியாமை நிறைந்த ஜனநாயகத்தின் வருங்காலத்தை நினைத்துப் பார்க்க வருத்தமாக இருக்கிறது” என்று அன்றே கணித்திருக்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர். கொடூரமானவர்களின் கையில் நிச்சயம் ஒருநாள் நாடு சிக்கிச் சீரழியும் என்பதை அன்றே சொல்லியிருக்கிறார். அது பாஜகவால் சாத்தியப்படப்போகிறது.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பின்மை, சமூக நீதி, பொருளாதாரச் சமத்துவம் ஆகியவற்றை நீர்த்துப்போகச் செய்யும் பாசிச பாஜகவின் உண்மை முகத்தை இந்த 26 கூட்டணிக் கட்சிகளும் ஒன்றிணைந்து தோலுரித்துக் காட்ட வேண்டும். அதன் மூலமே வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாசிச பாஜகவை வீழ்த்த முடியும், நாட்டின் இறையாண்மையையும் காப்பாற்ற முடியும்.

 உசாத்துணைகள்

  1. ‘உண்மைக்கு முகம் கொடுக்காத நிதி அமைச்சகம்’, ப.சிதம்பரம், அருஞ்சொல் (மின்னிதழ்), 31அக்டோபர் 2022.
  2. ‘கும்பல் ஆட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு’, ரவிக்குமார்.
  3. நீலம் ஜூன் 2023 இதழ்.
  4. டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுதி – 2.
  5. இந்து தமிழ் திசை நாளிதழ். (28, 29.07.2023)

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!