நான் வட தமிழக கிராமமொன்றில் பிறந்து வளர்ந்தவன். எட்டாவது படிக்கும்போதென்று நினைக்கிறேன், அடுத்தடுத்த மாத இடைவெளிகளில் ‘தேவர் மகன்’ படமும் ‘எஜமான்’ படமும் வெளியாயின. ரஜினி ரசிகராயிருந்து விஜயகாந்த் ரசிகராய் மாறியிருந்த நேரம் அது. எங்கள் வகுப்பில் எங்களிடமிருந்து வித்தியாசமாகக் காட்டிக்கொள்ள விரும்பிய ஒருவனைத் தவிர வேறு கமல் ரசிகர் இல்லை. எங்கள் கணித ஆசிரியர் கடுமையாக அடிக்கக்கூடியவர் என்பதால் அவர் பற்றி மிகுதியான பயம் எங்களுக்கு இருந்தது. நான்கைந்து நாட்களாகத் தாடியோடு வந்தவர் திடீரெனக் கிருதா மீசைக்கு
மாறியிருந்தார். ஒரு வருடத்திற்கு மேல் அந்தக் கெட்டப்பில் இருந்தார். அவர் கமல் ரசிகர் என்பதால் அப்போது வந்திருந்த ‘தேவர் மகன்’ கமல் போல் மீசை வைத்திருப்பதாக மாணவர்களிடையே பேச்சு இருந்தது. சில நாட்களில் மாணவர்கள் சிலர் தலையில் ‘பங்க்’ வைத்து வந்தனர். அதனையும் ‘தேவர் மகன்’ பங்க் என்றனர். தியேட்டரில் பார்க்காத படங்களைத் தெருவில் திரையிடும் வீடியோவில் இலவசமாகப் பார்த்துவிடுவோம். நான் ‘தேவர் மகன்’ படத்தை அப்படித்தான் பார்த்தேன். இந்த அளவில் தவிர ‘தேவர் மகன்’ படம் பற்றி வேறெந்தப் பேச்சையும் அப்போது எங்கள் பகுதியில் கேள்விப்பட்டதில்லை.
தென் மாவட்டக் கலவரங்கள் சற்றே ஓய்ந்த 1990களின் இறுதியில் கல்லூரிப் பயில மதுரை சென்றேன். ‘தேவர் மகன்’ வெளியாகி சில ஆண்டுகள் ஆகியிருந்தாலும் அந்தப் படம் பற்றிய ஏதோவொரு சுட்டலை இங்கு நான் சந்தித்தேன். ‘தேவர் மகன்’ பற்றி மட்டுமல்ல படத்தில் இடம்பெற்ற ‘போற்றிப் பாடடி பெண்ணே, தேவர் காலடி மண்ணே’ பாடல் பற்றியும் அதிருப்தி நிலவியதைப் பார்க்க முடிந்தது. அப்போது வெளியான மக்கள் களம் இதழில் தலித் சுப்பையா ஒரு கட்டுரை எழுதியிருந்தார். தலித் மேடைகளில் அவர் பாடல்கள் பிரபலமாகியிருந்தன. இளையராஜாவின் சமூக அடையாளம் பற்றி ஏற்கெனவே அறிந்திருந்தாலும் அது அரசியல் அடையாளமாக மாறியிருந்ததை மதுரை வந்த பின்னர்தான் அறிந்தேன். அந்த வகையில் தலித் சுப்பையா இளையராஜா பற்றி எழுதிப் பாடியிருந்த ‘சேரியிலே பூத்த கருப்பு ரோஜா’ என்ற பாடல் மீது பெருவிருப்புக் கொண்டிருந்தேன். அதேவேளையில் இப்பாடல் பற்றிய வேறொரு புரிதலை தலித் சுப்பையா மக்கள் களம் இதழில் எழுதியிருந்ததைப் படித்தபோது பெற்றேன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்
தொடக்கக்கால நிர்வாகிகளில் ஒருவரான மதுரை முடக்கத்தான் பாண்டியன் கொல்லப்பட்டபோது (2001) அவரைப் பற்றி எழுதப்பட்ட இரங்கல் கட்டுரை அது. முடக்கத்தான் பாண்டியனோடு நடந்த அனுபவமொன்றை அக்கட்டுரையில் சுப்பையா விவரித்திருந்தார். அதாவது 1990களின் ஆரம்பத்தில் மதுரைப் பகுதி கிராமமொன்றில் நடந்த கூட்டத்தில் இளையராஜா பற்றிய மேற்கண்ட பாடலைப் பாடியபோது தன்னைப் பின்னாலிருந்து சட்டையைப் பிடித்து இழுத்து “போற்றிப் பாடடி பாடலுக்கு இசையமைத்த இளையராஜா பற்றிய பாடலைப் பாடாதே” என்று பாண்டியன் கூறியதாக எழுதியிருந்தார். இதற்கிடையில் நடிகர்கள் சாதிவாரியாகப் புரிந்துகொள்ளப்படுதல், அதற்கேற்ப ரசிகர் மன்றங்கள் அமைக்கப்படுதல் போன்ற விசயங்களையும் புரிந்துகொள்ள முடிந்தது. முக்குலத்தோர் தொடர்புடைய விழாக்களில் கார்த்திக் நடித்த ‘அமரன்’ படப் பாடல்கள் பிரபலமாக ஒலித்த காலம் அது.
இந்நிலையில் மதுரைக்குச் சென்ற சில மாதங்களிலேயே இடதுசாரி குழுக்களோடு தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் நடத்தும் கருத்தரங்குகள், தெருமுனைக் கூட்டங்கள், நாடகங்கள் ஆகியவற்றின் பார்வையாளராய் மாறியிருந்தேன். அவற்றில் ஒன்றாக மதுரை ‘அறிவுச்சுடர் நடுவம்’ என்ற அமைப்பு நடத்திய சிறுநாடகம் ஒன்றைப் பார்த்தேன். ஒரு திரைப்படப் பாடலை ஒலிக்கவிட்டார்கள். அப்பாடல் வரிகளையே கதையாகக் கொண்டு வரிகளுக்கேற்ப நடித்தனர். பாடல் முடியும்போது நாடகமும் முடிந்தது. அந்தப் பாடலின் வேறெந்தப் பூர்வமும் எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. ‘போராடடா ஒரு வாளேந்தடா’ என்ற பாடல் அது. இரண்டு பண்ணையார்கள் உழைக்கும் கூலிகளை வந்து அடிப்பார்கள். பிறகு கூலிகள் ஒன்றுசேர்ந்து பண்ணையார்களை அடித்து வீழ்த்தி முஷ்டியை உயர்த்தி நிற்பார்கள். பாடலின் கடைசிவரி ‘மலைகளும் சாய்ந்து போகுமோ’ என்று முடியும். பிறகு இந்தப் பாடலை கோ.புதூர், பந்தல்குடி போன்ற தலித் பகுதிகளில் பலமுறை கேட்டுக்கொண்டே நடந்திருக்கிறேன்.
இங்கு விசயம் வெளிப்படையாக இருக்கிறது. குறிப்பிட்ட இயக்கங்கள் / வகுப்பினர் / பகுதியில் குறிப்பிட்ட பொருளில் ஒரு பாடல் ஒலித்தால் இன்னொரு பகுதியில் இன்னொரு வகுப்பினரிடையே அப்பாடல் ஒலிக்காது. அதேபோல அங்கு ஒலிக்கும் பாடல் இங்கு ஒலிக்காது. ஒரு திரைப்படப் பிரதி நிலவும் சமூக முரண்பாட்டிற்கேற்ப பொருள் கொள்ளப்படுவதை இங்கு பார்க்கிறோம். இந்த வகையில் ‘போராடடா ஒரு வாளேந்தடா’, ‘போற்றிப் பாடடி பொண்ணே’ ஆகிய இரண்டு பாடல்களையும், இரண்டு தரப்பு முரண்பாட்டில், எதிரும் புதிருமாக மக்கள் வரித்துக்கொண்டவர்கள் எனலாம். மக்கள் தங்களை எவ்வாறு வெளிப்படுத்திக்கொள்ள விரும்புகின்றனர் என்பதற்கான கூறுகள் இந்தப் பாடல்களிலேயே இருக்கின்றன. எனவே, அவை திரைப்படப் பாடல்கள் என்பவற்றைத் தாண்டி இருவேறு சமூகக் குழுக்களுக்கான அரசியல் விருப்பப் பிரதிகளாக மாறி நின்றதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
m
முதலில் இரண்டு பாடல்களும் இடம்பெற்ற திரைப்படங்கள் வெளியான காலம், அதில் நடந்துவந்த மாற்றங்கள், கதை போன்றவற்றைப் பார்க்கலாம். ‘போராடடா ஒரு வாளேந்தடா’ பாடல் இடம்பெற்ற படத்தின் பெயர் ‘அலைஓசை’ (1985). சிறுமுகை ரவி இயக்கத்தில் விஜயகாந்த் நாயகனாக நடித்த படம். படத்தின் கதை எளிமையானது. மைனர், பிரசிடெண்ட், மணியக்காரர் ஆகிய மூவர் கட்டுப்பாட்டில் ஒரு கிராமம் இருக்கிறது. மூவரும் பண்ணையாதிக்க நிலையிலிருக்கும் அதிகாரச் சாதியினர். இந்நிலையில் நகரத்திலிருந்து கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு ஊர் திரும்புகிறான் முத்து என்ற இளைஞன். அவன் ஊரில் நிலவும் மூவரின் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராட ஆரம்பிக்கிறான். இந்த வகையில் போராடும் மக்கள் கொளுத்தப்படுகிறார்கள். நாயகனான முத்து தலைமையில் மூவரையும் பழிதீர்ப்பதோடு படம் முடிகிறது. படம் வெளியானபோது ஓரளவு வணிக வெற்றியைத் தாண்டி கவனம் பெற்றதாகத் தெரியவில்லை. படத்தில் இடம்பெற்ற பாடல்களால் மட்டுமே இன்றளவும் பொது நினைவில் இப்படம் இருக்கிறது. கதையாகவும் காட்சி ரீதியாகவும் பலகீனமாக இருந்தாலும் அரசியல்ரீதியாகக் குறிப்பிடத்தக்க நிலைபாட்டைக் கொண்டதாகப் படம் விளங்கியது.
அரசியல் நிலைபாடு என்று எடுத்துக்கொண்டால் ஆழமாக இல்லாவிட்டாலும் இடதுசாரி சாகசவாதத்தைத் தீர்வாகவும் அதையே உரையாடல்களாகவும் படம் கொண்டிருக்கிறது. இடதுசாரி சாகசவாதம் என்றாலும்கூட சுரண்டப்படும் கிராமப்புற ஏழைகளைச் சேரி மக்களாகக் குறிப்பிட்டதன் மூலம் சாதி முரண்பாட்டையும் இணைத்தே சமூக முரண்பாடாக இப்படம் வெளிப்படுத்தியது எனலாம். நாயகன் முத்து சேரி இளைஞன் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக மாற்றம் என்பது திரைப்படக் கதையாடல்களின் வழியாக வலியுறுத்தப்பட்ட காலம் இது. அந்தச் சமூக மாற்றம் என்பது இடதுசாரி சாகசத்தால் நிகழும் சமத்துவமாக இவ்வகை படங்களில் விவரிக்கப்பட்டது. இக்காலகட்ட படங்களில் இடம்பெற்ற சிவப்புநிற உடைகள், சிவப்புக் கொடிகள், சிவப்பைக் குறிக்கும் படத் தலைப்புகள், ‘புதிய’ என்ற ஒட்டோடு அமைந்த படத் தலைப்புகள் என யாவும் இவ்வகை மாற்றங்களைக் குறிக்கும் அடையாளங்களேயாகும். இதன்படி பண்ணையார், முதலாளி போன்றோர் சுரண்டும் வில்லன்களாகவும், ஏழைகள் சேரி மக்கள் நாயகர்களாகவும் – வெற்றிபெறுவோராகவும் காட்டப்பட்டுவந்தனர். மேலோட்டமான வணிக அம்சங்களால் பின்னப்பட்ட கதைகளாக இருந்தாலும் ‘அரசியல்’ என்ற அளவில் மேற்கண்ட அம்சங்கள் இருந்ததை மறுக்க முடியாது. 1970-80களில் இவ்வாறிருந்த நிலை 1990களில் அப்படியே தலைகீழாக மாறி பண்ணையார்கள் நாயகர்களாகவும் – பண்ணையாதிக்க மதிப்பீடுகள் கதையாடல்களாகவும் ஆனதைப் பார்க்கிறோம். இந்த இடத்தில்தான் 1992இல் வெளிவந்த ‘தேவர் மகன்’ படத்தின் கதையைப் பார்க்க வேண்டும்.
நாயகனான சக்திவேல் ‘அலைஓசை’ முத்துவைப் போலவே இலண்டனில் படிப்பை முடித்து (தன் காதலியோடு) ஊர் திரும்புவதிலிருந்து ‘தேவர் மகன்’ தொடங்குகிறது. முத்து சேரி இளைஞன், ஏழை குடும்பம்; சக்திவேலோ பெரியதேவர் என்னும் ஊர் பெரிய மனிதரின் மகன், உடைமைச் சமூகப் பின்புலம். முத்து ஊர் பெரிய மனிதரோடு முரண்படுகிறான். சக்திவேலுவோ தன் தந்தை பெரியதேவர் அவர் பங்காளிகளோடு கொண்டிருக்கும் பகையுணர்ச்சிக்குப் பொறுப்பேற்க வேண்டியவனாக இருக்கிறான். முத்து ஊரின் ஏழைகள் பண்ணையாரால் கொளுத்தப்பட்ட பின்னால் ஆயுதப் போராளியாக மாறுகிறான். சக்திவேலுவோ பங்காளி தந்த அவமானத்தால் தந்தை இறந்துபோன பின்னால் ஊர் பெரிய மனிதன் ஆகிறான். ‘அலைஓசை’ புற முரண்பாடுகளோடு மோதி சமத்துவம் கோருவதோடு முடிகிறது. ‘தேவர் மகன்’ அக முரண்பாடுகளோடு மோதி படிக்கப் போகச் சொல்லுவதோடு முடிகிறது. இரண்டு படங்களிலும் கதை வரிசையில் ஒத்த தன்மை இருக்கிறது. ஆனால், திரைப்பட ஆக்கம் என்ற முறையில் ‘தேவர் மகன்’ தமிழின் முன்னுதாரண படமாக இருக்கிறது. படம் வணிக ரீதியாகப் பெருவெற்றி பெற்றது. பாடல்களும் படத்திற்கான அடையாளத்தை உருவாக்க உதவின. சாதியை நேரடியாகச் சாடிய ‘அலைஓசை’ படத்தைவிட சாதிய சட்டகத்தை உள்ளீடாகக் கொண்ட ‘தேவர் மகன்’ படம் பல்வேறு வகைகளில் கூடுதல் தாக்கம் செலுத்தியது. அதேபோல ‘தேவர் மகன்’ வெளிவந்த 1990கள் என்னும் காலகட்டமும் முக்கியமானது. அதிகார சாதிகள் – தலித்துகளுக்கிடையிலான நெருக்கமான முரண்பாடுகள், அம்பேத்கர் நூற்றாண்டையொட்டித் தலித் சொல்லாடல்களின் அறிமுகம், அவற்றை எதிர்கொள்வதற்காக உண்டான எதிர்வினைகள் போன்றவை இக்காலகட்டத்தில் முக்கியமாயின. இந்தப் பின்னணியில்தான் ‘தேவர் மகன்’ படத்தில் இடம்பெற்ற ‘போற்றிப் பாடடி பொண்ணே’ பாடல் கவனம் பெற்றது. பாடலின் உள்ளடக்கத்தோடு தொடர்புடைய சாதிகள் அப்பாடலை ஒலிபரப்புவது அப்போது நிலவிய ஒருவித அரசியலோடு இணைந்து அர்த்தம் பெற்றது. உள்ளடக்கத்தைக் கொண்டாடும் சாதியினரோடு முரண்படுவோர் அப்பாடலைப் புறக்கணித்தனர். இவ்விடத்தில் அப்பாடல் படத்திலிருந்து வெளியேற்றப்பட்டுச் சமூகத்தால் நிகழ்த்தப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால் படத்திலிருந்து விலகி அரசியல் பிரதியானது. ‘போற்றிப் பாடடி’ பாடல் மட்டுமல்ல, சாதி பிம்பங்களைப் போற்றும் நிறையப் பாடல்கள் 1990களில் வெளியாயின. சமயங்களில் ‘போற்றிப் பாடடி’ பாடலைவிட அவை அதிகம் ஒலித்தன.
‘போற்றிப் பாடடி பொண்ணே’ போல, ‘போராடடா ஒரு வாளேந்தடா’ பாடல் வெளிவந்தபோது இதே அர்த்தத்தில்தான் வாசிக்கப்பட்டதா, பரவலாகியதா என்று தெரியவில்லை. காலகட்டத்தைப் (1985) பார்க்கும்போது 1990கள் அளவிற்குச் சமூக அர்த்தம் தரப்பட்டிருக்காது என்றே தோன்றுகிறது. கள தரவுகளிலும் இது உறுதியாகிறது. ‘போற்றிப் பாடடி பொண்ணே’ அல்லது அதனையொட்டிப் பிற பாடல்கள் வெளிவந்த பின்னர் ‘போராடடா’ பாடலுக்குக் கூடுதல் கவனம் உண்டானதும் நடந்திருக்கிறது. ஒரு பிரதியின் அரசியல் அர்த்தம், அதற்கு முன்னர் வந்து மறந்த பிரதியை அதன் அரசியல் கருதி மீண்டும் நினைவுக்குக் கொணருகிறது எனலாம். இதனை, இருவேறு சாதிகள் தங்கள் முரண்பாட்டை இரண்டு பாடல்கள் வழியாக வெளிப்படுத்திக்கொண்டன அல்லது நிகழ்த்திக்கொண்டன என்றும் கூறலாம். இனி அவ்விரண்டு பாடல்களின் உள்ளடக்கங்கள் கொண்டாடப்பட்டதற்கான காரணத்தையும், அதன் மூலம் கொண்டாடிய குழுக்கள் முன்வைக்க விரும்பிய அரசியலையும் பார்க்கலாம்.
m
முதலில் ‘போராடடா ஒரு வாளேந்தடா’ பாடலைப் பார்ப்போம். பாடலின் பல்லவி இவ்வாறு தொடங்குகிறது:
போராடடா ஒரு வாளேந்தடா
வேங்கைகளோ இனி தூங்காதடா
விழியோ கனலாய் இனி மாறிடுமோ?
வழியோ புதிதாய் உருவாகிடுமோ?
பொன்உதயம் கண்டிடவே
உதிரம் முழுதும் உதிரும் வரையில் போராடடா…
இந்த வரிகளில் கோடிட்ட சொற்களைப் பார்க்கலாம். போராடத் தூண்டக்கூடிய அல்லது போராடுபவர்களை உற்சாகப்படுத்தும் வரிகள். உடைமையமைப்பைக் கூறவில்லை. மாறாக அதற்கெதிராகக் கிளர்ந்தெழ வேண்டியதைக் கூறுகிறது. அதாவது, முதலில் போராட்டம் (போராட்டம், வாள் ஏந்தல், வேங்கை, கனல், உதிரம்) கூறப்பட்டுப் பிறகு அதன் விளைவு (புதிய வழி, பொன் உதயம்) முன்வைக்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் பாடலின் வழியே ‘மாற்றம்’ வலியுறுத்தப்படுகிறது. இடதுசாரி உள்ளடக்கம் என்றாலும் பாடல் சேரி மக்களின் குரலாய் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிணையாக ‘போற்றிப் பாடடி பெண்ணே’ பாடலின் பல்லவியைப் பார்க்கலாம்.
போற்றிப் பாடடி பொண்ணே
தேவர் காலடி மண்ணே
தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான்
முக்குலத்தைச் சேர்ந்த தேவர்மகன்தான்…
என்றமைந்திருக்கிறது.
இதில் கோடிட்ட சொற்களில் நிலவுடைமை மதிப்பீடுகள் இருப்பதைப் பார்க்கலாம். இந்த வரிகளை ஒரு குழு தூக்கிப்பிடிப்பதன் மூலம், அது எத்தகைய அரசியலை முன்வைக்க விரும்புகிறது என்பதைத் தெரிந்துகொள்கிறோம். இன்னும் சொல்லப்போனால் தங்களுடைய அதிகாரம் போய்விடக்கூடாது என்றும் அதனைத் தக்கவைப்போம் என்றும் கூற விரும்பும் மரபின் குரல் இது.
தொடர்ந்து ‘போராடடா’ பாடலின் இரண்டு சரணங்களையும் பார்க்கலாம். “எத்தனையோ ரத்த வரிகளை எங்கள் முதுகினில் தந்தவரே / அத்தனையும் வட்டி முதலுடன் உங்கள் கரங்களில் தந்திடுவோம் / எட்டுத்திக்கும் வெற்றி எழுமே மண்ணில் ஒளிவெள்ளம் வரும்வரை / வேர்வை குலம் வீறுகொண்டே போரிடும் போரிடும் வெல்லும் வரை / அலைகளும் ஓய்ந்து போகுமோ” என்றமைகிறது முதல் சரணம்.
இரண்டாவது சரணம் “இன்னும் இங்கு பள்ளுப் பறையென சொல்லும் மடமைகள் உள்ளதடா / நித்தம் இரு சேரி சிறுகுகள் வெள்ளி சிறகென ஆகுதடா / சின்னப் பொறியே பெரும் அனலாகுமே / சிங்க இனமே எழுமே / அஞ்சி நின்ற
பஞ்சபடையே கொஞ்சமாவது நெஞ்சம் நிமிர்கையில் / எங்கள் மனம் பொங்கி அழுகையில் குங்கும கங்கையும் பொங்கிடுமே / மலைகளும் சாய்ந்து போகுமோ” என்றமைந்திருக்கின்றன. உழைக்கும் வர்க்கமாய் இருப்பதையும் ஒடுக்கப்பட்டவர்களாய் இருப்பதையும் இணைத்து இப்பாடல் வரிகள் ஒலிக்கின்றன.
கீழத்தஞ்சை பகுதியிலிருந்த சவுக்கடி, வெண்மணியில் தீ வைத்தமை ஆகியவை நினைவுப்படுத்தப்படுகின்றன. பள்ளு, பறை என்று சொல்லி ஏய்ப்பதை மடமை என்றும், அவர்களின் குறியீடாக நந்தனைச் சொல்லி அவர்கள் அதிகாரம் (அரியாசனம்) பெறுவார்கள் என்றும் பாடல் அடுக்கப்பட்டுள்ளது. உழைக்கும் மக்களின் போர்க்குணத்துக்கான குறியீடாக, சிங்கஇனம், பெரும் அனல் போன்றவை சொல்லப்பட்டுள்ளன. அவர்கள் கிளர்ந்தெழுந்துவிட்டால் அடக்க முடியாதென்பதை ஓயாத அலைகள், சாயாத மலை என்று சொல்லியுள்ளனர். கிளர்ந்தெழுவதன் விளைவாக ஒளிவெள்ளம் பிறக்கும் என்றும் சொல்லியுள்ளனர்.
இந்த இடத்தில் ‘போற்றிப் பாடடி’ பாடலின் சரணங்களைப் பார்க்கலாம். முதல் சரணம்,
“என்ன சொல்ல மண்ணு வளம்
மத்தவங்க கண்ணு படும்
அந்த கதை இப்ப உள்ள
சந்ததிங்க கேட்க வேணும்
நம்முயிர்க்கு மேலே மானம் மரியாதை
மானம் இழந்தாலே வாழத் தெரியாதே
பெரிசல்லாம் சொன்னாங்க
சொன்னபடி நின்னாங்க
குணத்தால் மனத்தால் கலைமான் ஆனாங்க”
என்றமைகிறது. தொடர்ந்து அடுத்த சரணத்தில்,
முன்னோருக்கு முன்னோரெல்லாம்
இன்னாருன்னு கண்டு கொள்ள
ஏடெடுத்து எழுதிச் சொல்ல
ஒண்ணு ரெண்டு மூணு அல்ல
முக்குலத்தோர் கல்யாணந்தான்
முத்து முத்துக் கம்பலந்தான்
எக்குலமும் வாழ்த்துச் சொல்லும்
எங்களுக்கு எக்காளம்தான்
அழகான சரிஜோடி ஆன மேல அம்பாரி
கணக்கா வழக்கா கடல்போல் ஏராளம்”
என்றமைகிறது.
குடும்பக் கதையின் வழியாக ஒரு குழுவின் பாரம்பரியம் பாடலில் சொல்லப்படுகிறது. மானம், மரியாதை என்னும் சொல்லாடலை முன்வைத்து அதனை இழந்துவிடாத கலைமான் பரம்பரை என்கின்றனர். பிற குலங்களும் வாழ்த்தும் குலமாக இருக்கிறது. கிராமத்தைப் பொறுத்தவரையில் இவை உடைமை சாதியின் சொல்லாடல்களாகும். கிராம அளவிலான பாகுபாடுகளோடும் தொடர்புடையவை.
மொத்தத்தில் இரண்டு பாடல்களின் உள்ளடக்கமும் முற்றிலும் எதிரும் புதிருமான மதிப்பீடுகளை முன்வைக்கிறது. ‘போற்றிப் பாடடி பொண்ணே’ பாடலின் மதிப்பீடுகள் சந்தேகமே இல்லாமல் ‘போராடடா ஒரு வாளேந்தடா’ பாடலில் உடைபடுகின்றன. ‘போராடடா’ பாடலில், நிலவும் மோசமான நிலை சொல்லப்பட்டுப் பிறகு அதனை மாற்ற வேண்டுமெனக் கூறி மக்களைப் போராட அழைக்கிறது. அதோடு போராட்டத்தின் விளைவுகளையும் சொல்கிறது. மொத்தத்தில் அப்பாடல் ‘மாற்றம்’ என்பதை முன்வைக்கிறது. மற்றபடி பாடல் எந்த இடத்திலும் ஆதிக்கத்தை நியாயப்படுத்தவில்லை.
அடுத்து, இவ்விரண்டு பாடல்களின் காட்சியமைப்புகளைப் பார்க்கலாம். பெரிய தேவர் கம்பீரமாக அமர்கிறார். பிறகு சட்டை அணியாத கடம் வாசிப்பாளர்கள் ‘போற்றிப் பாடடி பொண்ணே’ என்று பாடத் தொடங்குகிறார்கள். பாடல் ஆரம்பித்ததும் கம்பீரத்தின் அடையாளமாக ஒரு காலைத் தூக்கி மறுகால் மீது போடுகிறார் பெரியதேவர். குடும்பமே மகிழ்ச்சியில் திளைக்கிறது. அடுத்த வாரிசு என்பதற்கான குறியீடாக சக்திவேல் பெரியதேவர் பின்னால் சென்று கைகட்டி நிற்கிறார். பாடலின் இரண்டு இடையிசையின்போதும் சக்திவேலின் காதல் காட்சிகளைக் காட்டினாலும் பாடல் வரிகள் ஒலிக்கும்போது கேமரா பெரியதேவருக்கு வந்துவிடுகிறது. அவற்றில் அவர் உட்கார்ந்தபடி ஏழைகளுக்குத் துணிமணி கொடுக்கிறார்; மெத்தையில் படுத்திருக்கிறார்; ஏழைகளுக்கு உணவு வழங்குகிறார்; பாடலின் இறுதியில் அவரைப் போற்றுவதன் குறியீடாகக் கைகொட்டி, உலக்கை குத்தி பெண்கள் பாடுகிறார்கள்.
‘அலைஓசை’ படத்தில் ‘போராடடா பாடல்’ துவங்கும் இடம் இதற்கு நேரெதிரானது. உழைக்கும் தலித் மக்கள் கோயிலுக்கு வருகிறார்கள். பாரம்பரிய பெருமையோடு தொடர்புடைய பண்ணையார் அவர்களைத் தடுக்கிறார். இரண்டு தரப்புக்கும் விவாதம் எழுகிறது. “உங்க பிற்போக்குத்தனத்துக்கு முடிவு கட்டத்தான் வந்திருக்கிறோம்” என்று கூறும் நாயகன் “ஆதியில சாதி பாகுபாடு கிடையாது. இது பாதியில் வந்தவங்க செஞ்ச கொடுமை” என்று ஆவேசப்படுகிறான். “இப்போ என்ன செய்வீங்க” என்று கேட்கும்போது முஷ்டியை முறுக்கிப் ‘போராடடா’ என்று பாடத் தொடங்குகிறான். நாயகனுக்கு ஆதரவாக மக்கள் ஆடுகிறார்கள், பண்ணையாரைப் பார்த்து எக்காளமிடுகிறார்கள்.
அடுத்து, இவ்விரண்டு பாடல்களின் இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் ஆகியோரைப் பற்றிப் பார்க்கலாம். ‘போற்றிப் பாடடி’ பாடலுக்கு இசையமைத்ததால் சாடப்பட்ட இளையராஜாதான் அப்பாடலுக்கு எதிர்வாசிப்பான ‘போராடடா’ பாடலுக்கும் இசையமைத்தார் என்பது சுவையான முரண். இவ்விரண்டு பாடல்களின் உள்ளடக்கம் முரணாக இருப்பினும், இவை தமிழில் பாடல்களாக நிலைப்பெற்றமைக்கு இளையராஜாவின் இசையே காரணம். அவரைப் பொறுத்தவரையில், இசையமைப்பாளராக அப்பாடல்களை எவ்வளவு சிறப்பான ஆக்கமாகத் தர முடியுமோ அந்த அளவிற்குத் தந்திருக்கிறார் என்றே சொல்ல முடிகிறது. ‘போராடடா ஒரு வாளேந்தடா’ பாடலுக்குப் பாடகரைத் தேர்ந்தெடுத்ததிலிருந்தே அவரின் ஆக்கம் தொடங்கிவிடுகிறது. அது அவலத்தைச் சொல்லி ஆவேசமாகக் குரலெழுப்பிப் போராட அழைக்கும் பாடல். அதற்குப் பெருங்குரல் தேவை. பொதுவாகக் கோபத்தை – எழுச்சியை – போராட்டத்தைக் கூறும் பாடல்களுக்கு மலேசியா வாசுதேவன் குரலையே பயன்படுத்திவந்த இளையராஜா இந்தப் பாடலுக்கும் அவரையே பாட வைத்திருக்கிறார். பாடலின் வெற்றியில் வாசுதேவன் குரலுக்குப் பிரதான இடமுண்டு. பாடலின் முதல் வார்த்தையே எழுச்சி – ஆவேசம் என்ற முறையில் ‘போராடடா’ என்று உச்சத்தில் ஆரம்பிக்கிறது. சிந்துபைரவி ராகம். ‘விழியோ கனலாய்’ எனும் வரும்போதும் குரல் உச்சம் பெறுகிறது. அதேபோல எழுச்சியூட்டும் பாடல் என்ற முறையில் குழுவினரின் கோரஸ் அமைக்கப்பட்டிருக்கிறது. படத்தில் ஒயில் ஆடுகிறார்கள். அதில் ஆண்களின் கும்மிவகை வருகிறது. இசைக்கருவிகள் என்ற விதத்தில் எழுச்சியூட்டுவதற்காகப் பறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கோயிலில் ஆவேசமான சாமியாட்டத்திற்கு அடிக்கப்படும் உடுக்கையும் வருகிறது.
பிரச்சினையில் இருப்பவனிடமும் – போராடுபவனிடமும் கோபமும் எழுச்சியும் இருக்கும். எனவே, அதனைப் பாடும் குரலும் இசைக்கருவிகளும் அதற்கேற்பத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஆனால், ‘தேவர் மக’னில் உடைமை பின்புலத்தில் இருக்கும் பெரியதேவர் போராடும் நிலையில் இருப்பவரல்ல. பங்காளி விரோதம் போன்ற உள்பிரச்சினை தவிர வேறில்லை. போற்றிப் பாடும் அளவிற்கு அமைதியான நிலையில் இருப்பவர்தான். ஒருவகையில் போற்றிப் பாடுதல் தாலாட்டுப் பாடலுக்கு இணையானதாக இருக்கிறது. அதில் நிம்மதிக்கான இடமிருக்கிறது. வேகமோ, எழுச்சியோ இல்லாமல் நிதானம் இருக்கிறது. பாடலை டி.கே.எஸ்.கலைவாணனும் மனோவும் பாடியுள்ளனர். இதே பாடல் பெரியதேவர் இறப்பதற்கு முன் பேரக் குழந்தைகளால் பாடப்படுகிறது. துடிப்பான கருவிகள் கையாளப்படவில்லை.
‘போராடடா’ பாடலை இளையபாரதியும், ‘போற்றிப் பாடடி’ பாடலை வாலியும் எழுதியுள்ளனர். இதில் வாலி வழமையான திரைப்படக் கவிஞர். படத்திற்கும் இசைக்கும் ஏற்றதைத் தருவதில் வல்லவர். அவர் வரையறையை மிஞ்சமாட்டார். ஆனால், இளையபாரதி திரைப்படப் பாடலாசிரியர் அல்ல, கவிஞர். இதற்கு முந்தியும் பிந்தியும் திரைப்படப் பாடலை எழுதியவரல்ல. அக்காலகட்டத்திற்கேற்ப இடதுசாரி கருத்தை ஏற்றிருந்த இளையபாரதி தன் பாடலில் அதனைப் பிரதிபலித்துள்ளார். வழமையான திரைப்படப் பாடலாசிரியர் எழுதியிருந்தால் இவ்வாறு நேரடியான வரிகளை எழுதியிருக்க முடியாது. அவர் தொடர்ந்து ஏன் எழுதவில்லை என்று தெரியவில்லை.
m
இவ்வாறு முற்றிலும் எதிரெதிர்ப் பிரதிகளாக இப்பாடல்கள் இருக்கின்றன. இதைவிட முக்கிய விசயம் என்னவென்றால் இந்த எதிரெதிர்ப் போக்கை அப்படங்களோ, பாடல்களோ, அரசியல் உலகமோ கண்டுபிடிக்கவில்லை. சமூகத் தளமே அத்தகைய வாசிப்பை ஏற்படுத்திக்கொண்டது என்பதுதான் முக்கியம். அதற்கு அப்பாடல்களின் வடிவமும் உள்ளடக்கமும் இடங்கொடுத்தன என்பதும் உண்மை. ‘அலைஓசை’ படம் ‘தேவர் மகன்’ போல கதாபாத்திரங்களின் உளவியல் பிரச்சினைகளின் நுட்பம் சார்ந்து அமைக்கப்பட்ட திரைக்கதைக் கொண்ட படமல்ல. ‘போற்றிப் பாடடி’ பாடலிலும் ஒருவகை அமைதி நிலைபெற்றிருக்கும். ஆனால், அரசியல் உள்ளடக்கத்தைப் பொறுத்தவரையில் ‘அலைஓசை’ படத்தின் நோக்கம் ‘தேவர்மக’னைவிட மேலானது. சமூகத்தில் ‘போற்றிப் பாடடி’ பாடல் பயன்படுத்தப்படும் சூழலைவிட ‘போராடடா’ பாடல் பயன்படுத்தப்படும் களமும் சூழலும் முக்கியமானது.
‘போற்றிப் பாடடி’ பாடலுக்கு முன் சாதாரணமாகவோ ஓரளவு அரசியல் பிரக்ஞையுடனோ ‘போராடடா’ பாடல் இருந்திருக்கலாம். ஆனால், 1990களுக்குப் பின்பே அப்பாடல் உச்சம் பெற்றது என்கிறார்கள். ஏனெனில், 1990களில்தான் ‘போற்றிப் பாடடி’ பாடலும் அதனையொத்த பாடல்களும் வெளியாயின. சமூகத் தளத்தில் இப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டமை சாதிகளுக்கிடையிலான போட்டி என்பதைத் தாண்டி மோதலாக இருந்தது. அம்மோதலில் இரண்டு தரப்பும் என்ன சொல்ல விரும்புகின்றன என்பதைப் பாடல் வரிகளில் தேடித் தரித்துக்கொண்டனர் என்பதே உண்மை. இப்பாடல்களைக் குறிப்பிட்ட தரப்பார் மிகுதியாகக் கொண்டாடும்போது, எதிர்த்தரப்பார் முற்றிலும் கைவிடுகின்றனர்.
m
2000த்தின் தொடக்கத்தில் தென்மாவட்ட நண்பர் ஒருவரின் கிராமத்திற்குச் சென்றபோது இரவு திருவிழா மேடையில் ‘போராடடா’ பாடல் ஒலிபரப்பப்பட்டது. அதுவரை நடனமாடுபவர்களின் நடனங்களை வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த உள்ளூர் இளைஞர் கூட்டம் ஒன்று, மேடையில் ஏறி இப்பாடலுக்கு ஆடிவிட்டு இறங்கியதைப் பார்த்தேன். நண்பரிடம் விசாரித்தபோது ‘இப்பாடலை எப்போதும் ஒலிபரப்புவார்கள். இதே மாதிரி ஆடுவார்கள்’ என்றார். ‘சில நேரங்களில் இப்பாடலை மட்டும் திரும்பத் திரும்பப் போடச் சொல்வதும் நடக்கும்’ என்றார். திருவிழாவின்போது வீதி ஒலிபெருக்கிகளிலும் திருமண வீடுகளிலும் இப்பாடலுக்குச் சிறப்பு இடமுண்டு. இதற்கான சான்றாக இப்பாடலை யூடியூப்பில் தேடினால் கிராமங்களில் பாடல் ஒலிபரப்புகளும் பின்னணியையும் தெரிந்துகொள்ள முடியும். இப்பாடல் பற்றிச் சுவாரஸ்யமான தகவல்களைச் சொல்லும் நிறையக் காணொளிகளையும் காணமுடியும். இப்பாடலை எழுதியதற்காகவே விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பாடலாசிரியரைப் பார்க்க விரும்பியதாகக் கூறும் காணொளி நிறையப் பேரால் பார்க்கப்பட்டிருக்கிறது.
இதற்கிணையாக மற்றொரு சம்பவத்தையும் கூற வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் பரமக்குடி சென்றிருந்தபோது ஊர் திருவிழாவுக்காகக் கட்டியிருந்த ஒலிபெருக்கியில் பருத்திவீரன் படப் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. ‘டங்கா டுங்கா’ பாடல் ஒலிக்கத் தொடங்கியதும் பாடல் நிறுத்தப்பட்டு அடுத்த பாடல் ஒலிபரப்பானது. பிறகுதான் அப்பாடலில் ‘எங்கள்குல தங்கம்’, ‘தேவர்குல சிங்கம்’ என்று வரி வருகிறது என்பது புரிந்தது. இந்த மரபு உருவானது ‘போற்றிப் பாடடி’ பாடல் வந்ததற்குப் பின்னால்தான் என்றார் நண்பரொருவர். இவ்விரண்டு சம்பவங்களும் நடந்தது பட்டியல் வகுப்பு பகுதியில். மற்றபடி ‘போராடடா’ பாடல் முக்குலத்தோர் தளத்தில் பாடிப் பார்த்ததில்லை. தேவர் ஜெயந்தியை ஒட்டி வீதிகளில் பாடும் ஒலிபெருக்கிகளிலும், செல்போன் ரிங்டோனாகவும் ‘போற்றிப் பாடடி’ பாடலை இப்போதும் கேட்க முடிகிறது. இவ்வாறு இப்பாடல்கள் வழியாகக் கண்ணுக்குப் புலப்படாமல் மோதல் நடந்துவருகிறது என்று கூறமுடியும்.
தென்மாவட்டங்களின் இத்தகைய எதார்த்தத்தையே நெல்லை, தூத்துக்குடி மாவட்டப் பகுதிகளைக் களமாகக் கொண்டு மாரி செல்வராஜ் இயக்கிய முதலிரண்டு படங்களிலும் பார்க்கிறோம். பட்டியல் வகுப்பு மக்களின் போராட்ட வாழ்வைக் காட்டிய ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய இரண்டு படங்களிலும் ‘போராடடா’ பாடல் கதைப் பகுதியோடு இணைந்தும், கதை நடக்கும் நிலப்பரப்பின் பண்பாகவும் காட்டப்பட்டுள்ளளது. ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் நாயகனைத் தாக்க சாதிக் கூட்டம் விரட்டி வருகிறது. கடைசியில் ஒரு வாழைத்தோப்பு. அதைத் தாண்டிவிட்டால் நாயகனின் குடியிருப்பு. அவர்களிடமிருந்து தப்ப வாழைத்தோப்புக்குள் நுழைகிறான். ஒரு கட்டத்தில் அவர்களைத் திருப்பித் தாக்கிவிட்டு வாழைத்தோப்பைவிட்டு வெளியே வருகிறான். வெளியேறும் இடத்தில் ஒரு மரத்தடியில் நாயகனின் ஊர் இளைஞர்கள் ஒரு பாடலை ஒலிக்கவிட்டு ஆடிக்கொண்டிருக்கிறார்கள். அது ‘போராடடா’ பாடல். அவ்விடத்தில் நாயகன் போய் அமரும்வரை பாடல் ஓரிரு நிமிடங்கள் ஒலிக்கிறது. நாயகன் தன்னைச் சிலர் துரத்தி வந்ததை அவர்களிடம் கூறுகிறான். அவர்கள் ஆவேசம் கொள்கிறார்கள். நாயகன் அவர்களை அமைதிப்படுத்துகிறான். படத்தில் இப்பாடல் இடம்பெறும் சூழல் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது. விரட்டல், தாக்குதல், கோபம், ஆவேசம் என்கிற சூழலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிராமத்தில் இளையராஜா பிம்பத்தோடு ஒரு மன்றம் இருப்பதுபோல காட்டப்பட்டிருப்பதும் அவர் தந்த பாடலின் காரணமாகத்தான். அரசியல் களமும் திரைப்படக் களமும் இளையராஜாவை எப்படிப் பொருள் கொண்டாலும் இப்பாடல் வழியாகச் சமூகம் அவரை எவ்வாறு பொருள்கொள்கிறது என்பதைப் பார்க்க முடிகிறது.
‘போராடடா’ பாடல் ‘கர்ணன்’ படத்தில் பாடலாக இடம்பெறவில்லை. கிராமத்தில் இயல்பாக ஒலிக்கும் விதத்தில் இருக்கிறது. படத்தின் முதல் காட்சியில் ஊரில் மீன்வெட்டும் சடங்கு நடக்கிறது. ஊரே திரண்டிருக்கிறது. நாயகன் வாளை எடுத்துக்கொண்டு தயாராக நிற்கிறான். மீன் தூக்கியெறியப்படுகிறது. நாயகன் பாய்ந்து சென்று மீனை இரண்டு துண்டாக வெட்டிவிடுகிறான். கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. அவன் வெற்றி பெற்றவனாகிறான். வெற்றியின் அடையாளமாக நாயகனை யானைமீது ஏற்றி ஊருக்குள் ஊர்வலமாக மேளதாளத்தோடு அழைத்து வருகிறார்கள். மீன் வெட்டிய இடத்திலிருந்து ஊருக்குள் வரும் ஓரிரு காட்சி வரையிலும் நாதஸ்வரத்தில் ‘போராடடா’ பாடல் வாசிக்கப்படுகிறது. பாடல் வரிகள் இல்லாவிட்டாலும் இது ‘போராடடா’ பாடல் என்பது அனைவருக்கும் தெரிந்துவிடுகிறது. பெரும்பாலான தென்மாவட்ட பட்டியல் வகுப்பினர் பகுதிகளில் ஏதாவதொரு விழாவையொட்டி இப்பாடல் இவ்வாறு ஒலிக்கும். அதனை இப்படம் மீன்வெட்டும் விழா பின்னணியில் பயன்படுத்தியிருக்கிறது. இந்த விதத்தில் பாடல் வாள், வெட்டுதல், வெற்றி, ஆர்ப்பரிப்பு, யானை மேல் ஊர்வலம் என்ற பின்னணியில் படத்தில் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. ‘கர்ணன்’ கதை 1990களின் ஆரம்பத்திலும், ‘பரியேறும் பெருமாள்’ கதை 2000த்தின் தொடக்கத்திலும் நடப்பதாகக் காட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
‘மாமன்னன்’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் கமல்ஹாசனை முன்னிட்டுப் பேசிய பேச்சு விவாதமானது. கமல்ஹாசன் திரைக்கதை எழுதி நடித்த ‘தேவர் மகன்’ பற்றியதொரு குறிப்பினைத் தன் பேச்சில் மாரி செல்வராஜ் வெளிப்படுத்தினார். தான் பார்த்த சமூக எதார்த்தத்தைச் சொல்லவும் வேண்டும், திரையுலக எதார்த்தத்தைக் கைக்கொள்ளவும் வேண்டும் என்ற ஊடாட்டத்தால் பேச்சில் ஒருவித தடுமாற்றம் இருந்தாலும் அவர் என்ன சொல்லவந்தார் என்பது நன்றாகவே புரிந்துகொள்ளப்பட்டது. தென் தமிழகத்தின் முப்பதாண்டுக்கால சாதிப் பற்றிய சொல்லாடலில் ‘தேவர் மகன்’ படம் எதிராகவும் ஆதரவாகவும் ஒரு தரவாக இருந்துவருகிறது. அது மட்டுமல்லாமல் படத்திற்கு வெளியேயும் அதன் தாக்கம் இருந்தது. இத்தகைய நிலையில்தான் தென்மாவட்டத்தைச் சேர்ந்த மாரி செல்வராஜ், ‘தேவர் மகன்’ படம் உருவாக்கிய சொல்லாடல்களின் தாக்கத்தை மேடைப் பேச்சில் பிரதிபலித்தார் எனலாம். ஒருவகையில் ‘தேவர் மகன்’ படத்திற்கான எதிர்வினையாக ‘மாமன்னன்’ அமையும் என்பதுபோல சொல்ல முயன்று முடித்தார். ‘தேவர் மகன்’ படத்தின் இசக்கி பாத்திரம் மட்டுமல்ல, ‘போற்றிப் பாடடி’ பாடலுக்கும் சமூகத் தாக்கம் இருந்தது. மாரி செல்வராஜ் வருகைக்கு முன்பே சமூகம் ‘போராடடா’ பாடல் மூலம் எதிர்வினையை நிகழ்த்தியது என்பது உண்மை. அதனை மாரி செல்வராஜ் ‘மாமன்ன’னுக்கு முந்தைய படங்களின் கதைப் பகுதிகளிலேயே காட்டியும்விட்டார்.
ஒரு பாடல், ஒரு காட்சி, ஒரு பெயர், ஒரு வசனம், ஒரு பிம்பம் படத்தின் மொத்தப் பின்புலத்தில் இடம்பெறும்போது ஓர் அர்த்தத்தையும், தனித்தனியாகக் கையாளப்படும்போது சூழலின் அர்த்தத்தையும் பெறுகிறது. இதனை வேறு படங்களுக்கும் பொருத்திப் பார்க்க முடியும். ‘போற்றிப் பாடடி’ பாடல் வந்தபின்பே ‘போராடடா’ பாடல் பரவலானது என்று சொன்னோம். இதன்மூலம் ‘போராடடா’ பாடல் ஆதரவாளர்களே தொடக்கம் என்பது போல தெரியலாம். உண்மையில் இதனைத் திரைப்பாடலில் நடந்துவந்த மாற்றங்களோடு இணைத்துப் பார்க்கலாம். திரையில் ‘போராடடா’ பாடல் வகைமையைக் கொண்ட படங்களுக்கு எதிர்வினையாக உருவான சூழலின் விளைபொருள்தான் ‘போற்றிப் பாடடி’ பாடல். எப்போதும் ஓரிடத்திலிருந்து மட்டும் எதிர்வினை தோன்றித் தொடருவதில்லை. எங்கிருந்து யாரிடமிருந்து தோன்றினாலும் எதிர்வினையென்பது ஓரிடத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல. ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு தரப்பிடமிருந்தும் புதிதுபோலவே பிறக்கிறது. அப்படித்தான் ‘போற்றிப் பாடடி’ பாடல் வந்தபின் ‘போராடடா’ பாடலின் சமூக இயக்கம் புதிதுபோல ஆரம்பித்தது. பாடல் படத்திலிருந்து நகர்ந்து களத்தின் அர்த்தம் பெற்றது. ஏனெனில், ‘போற்றிப் பாடடி’ பாடல் பிறக்கும்போதே சினிமாவிலிருந்து நகர்ந்துவிட்டது. பிறகு கிராமங்களில் ‘போராடடா’வோடு சேர்ந்து மாறி மாறி ஒலிக்கிறது. இந்தப் பின்புலத்திலிருந்த வந்த கதைகளில் இப்போது (2010களின் இறுதியில்) மீண்டும் சமூகக் கதையாக இப்பாடல் ஒலிக்கிறது.