பொது அறிவுடன் நரகத்தை நோக்கி
பிராயசித்தங்களை விட அதிக தண்டனைகளை
நாம் நமது பொது அறிவிலிருந்துதான் பெறுகிறோம்;
அதன் கதவில் எழுதப்பட்டுள்ளது
எல்லா நம்பிக்கையும் கைவிடப்பட்டதாக.
பரிசுத்த ஆவியின் தேதியிட்ட காசோலையை
மறுக்கும் வங்கி இது.
எனவே நான் நரகத்தை நோக்கிச் சொல்கிறேன்,
எல்லா நியாயமான கவிதைகளிலும்;
குறிப்பாக அக்கறையுள்ள முட்டாள்களால்
மதச்சார்பற்ற ஞானம் ஒன்றுபடுவதை
நாங்கள் விரும்பவில்லை என.
உருளும் கற்களில் பாசி இருப்பதில்லை,
வெளிச்சத்தில் பூச்சிகள் எதுவும் பறக்கவில்லை
என்பதற்காகவெல்லாம் பரிகாரங்கள் என்று ஏதுமில்லை.
நரம்பும் எலும்புமாய் நோய்ந்து கிடந்தவர்கள்
இறுதியில் விழித்தெழுந்து அதிர்ச்சியடையப் போவதைத் தவிர.
வேறு எதையும் அவர்கள் சாதித்துவிடவில்லை.
மேலும், நான் நம்புகிறேன்
கல்லூரிக்குச் செல்லாமலேயே
பகுத்தறிவின் மேற்கூரையிலிருக்கும்
துவாரத்தின் வழியாக நாம் அறிவை நோக்கிப்
பறந்துசெல்ல முடியும் என.
l
குளிர்காலம்
யாரோ குறிப்பிட்டதுபோல்,
கிறிஸ்மஸ் கிட்டத்தட்ட நம்மை நெருங்கிவிட்டது,
என் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன்,
சாம்பல் நிற ஆடையில் மற்றும்
வெற்று மரங்களின் பாடலென
முழங்கால்களுக்குக் கீழே தொங்கும் பட்டையின் சுருளைக்
கண்டுகொண்டவன்
குளிர்காலம் முழுவதுமாகத் தரையிறங்கியதைக் கண்டேன்,
முற்றத்தில் இருந்த சரளைக் கற்கள்
சிந்தனையில் ஆழ்ந்திருந்தன,
பிரச்சினைகளைச் சுமந்த முகத்துடன்
மக்கள் வாகனங்களை ஓட்டிச் செல்கையில்,
நான் இன்னும் என்னைச் சுற்றி இத்தகு பெருமிதத்துடன்
இருக்க மறுத்தேன்,
உண்மையில், நான் மதுக்கடைகளுக்குச் செல்ல விரும்பினேன்.
ஆம், அந்தக் குளிர்கால வருகையில்
என்னை இளமையாக உணரவைத்த விஷயங்கள்
அங்குதான் இருந்தன,
மேலும்
தோல்வியைக் குறைத்ததோடு, அது உண்மையில்
பலர் நினைத்ததை விட மேம்பட்டிருந்தது;
அத்துடன்
அங்கே பலவற்றிற்கான சாத்தியக்கூறுகள் இருந்தன.
காதலிப்பது, தென்னாப்பிரிக்க சாகசம்,
ஒரு குழந்தைக்குத் தந்தையாவது,
ஏதாவதொன்றில் பொறுப்பேற்றுக்கொள்வது,
அது என்னைப் பயமுறுத்திவிடாமல் பற்றிக்கொள்வது
அல்லது
உலகப் போரில் பங்கேற்பது,
ஒரு பகையின் துவக்கத்தில் இணைந்துகொள்வது.
l
illustration : yazed al johani
வாழ்க்கையிடம் ஒரு கேள்வி
நிச்சயமாக நீங்கள் என்னிடம் கேட்க மாட்டீர்கள்
இந்த மே மாதத்தில் ஒருவர் ப்ரிம்ரோஸ்களின் மீது மட்டும்
வேட்கையுறுவதைப் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்று,
அவை வெறுமனே நாடகத்திற்கானதொரு துவக்கப்புள்ளிதான்
மேலும் அவற்றை உடைமைகொள்ள ஏங்கும்போதெல்லாம்
கசப்பே எஞ்சுகிறது.
இன்னும் எல்லாவற்றையும் குறித்துச் சொல்லி முடிக்கும்போது
உயிரின் கணிசமான பகுதி மரித்துவிடுகின்றன.
ஆனால்,
விதி என்றோ இதைத் திட்டமிட்டு முடிவு செய்திருக்கும் பட்சத்தில்
இயற்கையும், மனிதனும் இவற்றைத்
துக்கமாக உணர வேண்டியதில்லை.
அந்த அரசுப் பணியாளர் பிரிவிலிருக்கும் அலுவலகப் பெண்ணால்
பெருங்கருணையின் சாளரத்தின் வழியே
எப்போதும் தூக்கியெறியப்படும்
அந்த அன்பின் பரிசுகள்,
அவையெதுவும் வெறுக்கத்தக்க பொருட்கள் அல்லவே.
நிதானமாக இருங்கள்
பாராட்டுங்கள், பாராட்டுகள், பாராட்டிக்கொண்டே இருங்கள்
நடந்ததையும், நடந்த விதத்தையும்
ஐரிஷ் கவிஞரான பேட்ரிக் கவனாஹ், ஐரிஷின் மாகாணமான உல்ஸ்டரில் உள்ள வடக்கு மாவட்டமான கவுண்டி மோனகனின் கிராமப்புறப் பகுதியைச் சேர்ந்தவராவார். 12 வயதிலேயே பள்ளியைவிட்டு வெளியேறிய காவனாஹ், தனது எழுத்து வாழ்க்கையை ‘ஐரிஷ் இலக்கிய மறுமலர்ச்சி’யின் கடைசி ஆண்டுகளில் தொடங்கி கவிதை, புனைகதை, சுயசரிதை மற்றும் ஏராளமான கட்டுரைகளையும் எழுதினார். ஐரிஷின் மூத்தக் கவியான வில்லியம் பட்லர் ஈட்ஸ்க்குப் பின்னே, கவிதையின் போக்கினை மடைமாற்றியவர்களில் பேட்ரிக் கவனாஹ் குறிப்பிடத்தகுந்தவர். மரபை மீறுதல், எளிமையான வாழ்வினைக் கவிதைப்படுத்துதல் போன்றவை இவரது கவிதைகளுக்கேயான சிறப்பம்சங்களாகும். மேற்கண்ட கவிதைகள் யாவும் பெங்குவின் வெளியீடான ‘Collected Poems of Patrick Kavanagh, edited by Antoinette Quinn’ என்ற புத்தகத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதாகும்.