“நீங்கள் எங்கள் எஜமானர்களாய் இருக்க விரும்பலாம்; ஆனால், நாங்கள் உங்கள் அடிமைகளாய் இருக்க விரும்பவில்லை” எனும் கிரேக்க அறிஞர் துசிடிடீஸின் வாசகங்களைத் தாங்கி மாதமிருமுறை இதழாக வெளியானது உரிமை (பதிவு எண்:5073). இதழின் ஆசிரியர், பதிப்பாளர் ஆ.இரத்தினம், செட்யூல்ட் காஸ்ட் பெடரேஷனின் (தமிழில் தாழ்த்தப்பட்டோர் சம்மேளனம் என்று அறியப்பட்டு வந்தது) தமிழ்நாடு தலைவராகப் பணியாற்றியவர். இரட்டை உறுப்பினர் முறையில் இந்தியக் குடியரசுக் கட்சி சார்பில் 1952 முதல் 1957 வரை கடலூர் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர். இந்த இதழ் முழுக்கவும் அம்பேத்கர் தொடங்கிய செட்யூல்ட் காஸ்ட் பெடரேஷன் கருத்துகளையும் செய்திகளையும் தாங்கி வெளியானது. இதழின் வரிசை எண்களை வைத்துப் பார்த்தால் இவ்விதழ் பிப்ரவரி 1947இல் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். முதலில் மாத இதழாகவும் 15 அக்டோபர் 1948 முதல் மாதமிருமுறை இதழாகவும் வெளியானது. பத்திரிகை தொடங்கப்பட்டதின் நோக்கத்தை “நமது பத்திரிகை தொடங்கப்பட்டது, ‘பிஸினஸ்’ நோக்கமாகக் கொண்டல்ல; அரசியல், சமூக, பொருளாதாரத்தில் நமது சமுதாயம் முன்னேறவும் பெடரேஷனின் திட்டம் நடைமுறைக்கு வரவும், அதற்காக உறங்கிக் கிடக்கும் நம்குல மக்களுக்கு உரிமை யுணர்ச்சியூட்டி சமுதாயத்தைச் செப்பனிடவும், சமூகப் பணியில் இளைஞர்களை ஊக்குவிக்கவும், ‘அரசியல் கழைக்கூத்தாடிகளுக்கு’ கசையடிக் கொடுக்கவும், அரசியல் தகிடுதத்தங்களுக்குச் சமாதி கட்டவும், சாதி, பேத அகம்பாவத்திற்குச் சாவோலை தீட்டவும், உயர்வு தாழ்வுகளுக்கு – உதவாக்கரை கொள்கைகளுக்கு – உயிரையே பிடுங்கித் திண்ணும் பேய்க் கொள்கைகளுக்குச் சாப்பறைக் கொட்டவும் நாம் பத்திரிகை தொடங்கினோம்” (15.10.1948) என்று வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆ.இரத்தினம் ‘உரிமை அச்சகம்’ என்ற பெயரில் சொந்தமாக அச்சகம் ஒன்றை 257, தங்கசாலை தெரு, சென்னை என்ற முகவரியில் நடத்திவந்தார். உரிமை அச்சகம் வணிகரீதியிலான அச்சகமாகச் செயல்பட்டுவந்துள்ளது. விளம்பர நோட்டீஸ்கள், காலண்டர்கள், நோட்டுப் புத்தகங்கள், லெட்டர் ஹெட்டுகள், ரசீது புத்தகங்கள் போன்ற அச்சு வேலைகளையும், ரூலிங், பைண்டிங், பிளாக் மேக்கிங் போன்ற அச்சு சார்ந்த வேலைகளையும், கமிஷன் ஏஜெண்ட் போன்ற வேலைகளையும் செய்துவந்துள்ளனர் (உரிமை, 1 நவம்பர் 1948). உரிமை இதழ் சில மாதங்களுக்குப் பின்பு குட் ஆர்ட் பிரிண்டர்ஸ், 18 – 19 தம்பு செட்டி தெரு என்ற முகவரியிலிருந்து வெளியாகியுள்ளது. கட்டுரைகள், செய்திகள், கவிதைகள், சமூகச் சீர்திருத்தப் பாடல்கள் போன்றவை வெளியிடப்பட்டுள்ளன. பெடரேஷன் மாநாடுகள், பொதுக்கூட்டங்களின் செய்திகள் புகைப்படங்களுடன் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
உரிமை இதழின் ஒவ்வொரு பக்கத்திலும் புரட்சிகர முழங்கங்களை வெளியிட்டுள்ளனர். உதாரணமாக “அடிமையும் கொடுமையும் ஒழிக”, “அடிமை படுத்துகிறவர்கள் ஜாதி இந்துக்கள்”, “சிதையா நெஞ்சுகொள்”, “உன்னைத் திருத்தி ஊரைத் திருத்து”, “சாகவில்லை சாக்கடையில் வாழ்கிறோம்”, “விழி, எழு, உரிமைபெற போராடு”, “முதலில் இனம் பிறகு கட்சி”, “தீண்டாதே என்பது திமிர் பிடித்தவனின் வழக்கு, தாழ்த்தப்பட்டவனே போர்த்துந்துபி முழங்கு”, “குன்றெடுக்கும் பெருந்தோளே கொலைவாளை எடு, குலமுறைக் கொடுமையை கூறுபோடு”. இதுமட்டுமல்லாமல் எழுச்சிமிகுந்த வரிகளைக் கொண்ட பல பாடல்கள் வெளியிடப்பட்டன. ‘கையில் எடு வாளை’ என்ற தலைப்பில் ஆற்காடு இளம்புலவர் மணிஎழிலன் என்பவர் எழுச்சி மிகுந்த பாடல் ஒன்றை எழுதியுள்ளார்:
தாழ்ந்துவிட்டோம் வீழ்ந்துவிட்டோம் தரணி தன்னில்
தலைநிமிர வழியின்றி தவிக்கிறோம் நாம்
ஆழ்ந்திதனைக் கணநேரம் அலசிப் பார்த்தால்
அறிந்திடுவோம் ஓரினத்தார் சூழ்ச்சி என்று
வீழ்ந்திட்டுக்கிடந்த நாம் விழிச்சி கொண்டு
விறுவிறுப்பாய் புறப்பட்டோம் வாழ்வுகாண
வாழ்ந்திட்ட உயர்சாதி வம்பர்; நம்
வளங்கண்டு நகைக்கின்றார் கையில் எடுவாளை!
****
நாட்டினிலே நம் இழிவை நீக்கவேண்டி
நம் டாக்டர் அம்பேத்கார் நம்மிடையே
வீட்டினிலே இருட்டறையே வீழ்ந்திருந்த
வீரரிடை விழிவிழிப்பை உண்டு செய்தார்
தீட்டியநல் திட்டத்தால், திகிலை விட்டு
திரண்டெழுந்தோம் எம்உரிமை தாரீர் என்று
வாட்டி எமை வருத்தமுறச் செய்யவேண்டி
வம்பர் பலர் வருகின்றார் கையில் எடுவாளை!
****
உத்தமனாம் இரத்தினத்தின் உண்மை உழைப்பால்
‘உரிமை’ இதழ் உரிமையுடன் உலவும் போது
முத்தமிழை மூவேந்தர் வளர்த்த நாட்டில்
முன்னணியில் புதுவாழ்வு காண்போம் வாரீர்
வித்தைபல கற்றுலகில் விளங்க வேண்டும்
வீணரல்ல நாமென்று விளங்கவேண்டும்
எத்திறத்தார் எமை நோக்கி எதிர்த்திட்டாலும்
எமக்குநிகர் இல்லையெனக் கையில் எடுவாளை!
கவிதைகள்
க.மாணிக்கவாசகன் என்பவரின் சமூகச் சீர்திருத்தக் கவிதைகள் உரிமை இதழில் தொடர்ந்து வெளியிடப்பட்டுவந்தது. சாதிமறுப்புத் திருமணத்தை ஆதரித்துக் ‘கலப்புமணம்’ எனும் கவிதை வெளியாகியுள்ளது.
கலப்புமணம்
தலைவரே! தமிழரே! தாய்மாரேகேள்!
தம்பதிகள் உங்களுக்கு வணக்கம் சொன்னோம்
அலைதாண்டி புயல்தாண்டி சமூகம்தாண்டி
அன்பினிலே யாமிருவர் கூடும்போது
கொலையாளிக் கூட்டத்தார் சாதிக்காரர்
குற்றமென்று எங்களையே பிரிக்கப்பார்த்து
மலையென்று எதிர்த்தார்கள்; அவர்மேலேறி
மன்றலையும் முடித்திடவே இங்குவந்தோம்!
நான்வேறு, அவள்வேறு சாதிஎன்று
நட்டுவிட்ட காதலை வெட்டவந்தார்!
கூன்விழுந்த சமூகத்தைக் குறித்துக்காட்டி
கூடாது திருமணமும் செல்லாதென்றார்!
வீணான பொய்க்கதைகள்; விளையாடல்கள்
விரும்புகின்றார்; வேற்றுமையை வரவேற்கின்றார்!
ஏன் இன்னும் நாட்டார்க்கு அறிவேஇல்லை?
எத்தனைநாள் தமிழருக்குள் சாதிபேதம்?
அவளுடலில் என்னுடலில் சிவப்புரத்தம்
அணுவளவும் பிசகில்லை ஆண்பெண் நாங்கள்
கவலைக்குக் கடுகளவும் கருத்தில் மாற்றம் கண்டதில்லை!
பிறர்க்கென்ன இதிலே வாட்டம்?
எவருடலில் இன்னஇவர் சாதியென்று
எந்த ஒரு மூடனுமே எழுதக்காணோம்
தவறுண்டோ தாய்மாரே தமிழ்நாட்டாரே
‘தம்பதிகள்வாழ்க’வென முழக்கம்செய்வீர்! (1.11.1948)
நாடு சுதந்திரம் பெற்றுவிட்டால் சாதியக் கொடுமைகள் எல்லாம் சட்டத்தால் சரிசெய்யப்பட்டுவிடும் என்ற தேசியவாதிகளின் வாக்குறுதிகள் பொய்யாகிப்போனதை நாட்டில் தினந்தோறும் தலித்துகளுக்கெதிராக நடக்கும் வன்கொடுமைகளைச் சுட்டிக்காட்டி எழுதிவந்தது ‘உரிமை’ இதழ். அதன் ஒரு வெளிப்பாடாக ‘யாரே உள்ளார்?’ என்ற கவிதையை க. மாணிக்கவாசகன் எழுதியுள்ளார்.
யாரே உள்ளார்?
வீரமிக்க இளைஞர்களே எந்தன் ஆதி
வள்ளுவனார் பரம்பரையின் இளஞ் சிங்கங்காள்!
நீரோடை நிலங்கிழிக்க, குன்று டைத்து
நன் புன்செய் நிலந்திருத்தி, பயிர்கள் செய்து
கோராப்பசிக் காளானோர் நாமே யென்றால்
கொண்டுவந்த சுதந்திரத்தில் நலமேயில்லை!
வேரோடு சமுதாய மாற்றம் இன்றேல்
வஞ்சகர்கள் நமைநாளும் ‘பறைய’ ரென்பார்!
உழைக்கின்றோம் உணவில்லை கேட்பார் உண்டா?
ஊர்த்தெருவில் தடையுண்டே எவர்தான் கேட்டார்?
பிழைக்கின்றார் நம்முழைப்பால் அறிந்தாரில்லை!
பேசுவரோ நம்நலிவை இல்லை! இல்லை!
இழைக்கின்றார் கொடுமைநூறு கிராமந் தோறும்
இழிநிலையை எடுத்துரைக்க எவர்தான் வந்தார்?
மழைத்துளியாக கண்ணீரை ஏழைச்சிந்தி
மாளுகின்றார் பட்டினியால் எவர்தான் கேட்டார்?
புரட்சிப்பூ பூக்கவேண்டும் எல்லார்மாட்டும்
பொதுவுடமை தழைக்கவேண்டும் ஆள வந்தோர்
இரக்கத்தைக் காட்டவேண்டும்! சட்டம்தீட்டி
ஏழ்மைதனை ஒழித்துவிட்டால் இன்றே மக்கள்
கரங்குவிப்பர் ஆள்வோரை இதுவே உண்மை?
கண்மூடி வழக்கத்தைத் தூள்தூளாக்கி
அரசாட்சி செய்பவர் யார் அவரைநாடு
அண்ணலென போற்றிடுமே யாரே உள்ளார்?
இலவச விடுதி
ஆதிதிராவிட மாணவர்களுக்கான இலவச விடுதி ஒன்றைச் சென்னை கொருக்குப்பேட்டையில் 1945இல் தொடங்கி நடத்திவந்துள்ளார் ஆ.இரத்தினம். இந்த விடுதிக்காக நன்கொடை வேண்டி 15 நவம்பர் 1948 இதழில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில்;
நிதி அளியுங்கள்! எதிர்கால தளபதிகளை உருவாக்குங்கள்!
தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் இளந்தாத்தா ராவ் சாகிப் வி.தர்மலிங்கம் பிள்ளையின் நினைவாக அவர் எந்தச் சமுதாயத்திற்காக உழைத்தாரோ, எந்தச் சமுதாயத்தின் மாணவர்களைக் கல்வியின் கலைஞர்களாக ஆக்க எண்ணினாரோ, எதற்காகப் பாடுபட்டாரோ அந்தக் கொள்கையை பலிதமாக்க, அவரது அபிலாஷையை நிறைவேற்றுவதற்காக அவரது பெயரால் சென்னை, கொருக்குப்பேட்டை காக்ரேன் பேஸின் ரோடில் 1945ம் ஆண்டு முதற்கொண்டு பழங்குடி இலவச மாணவ இல்லம் மிக சிறப்புடன் அவரின் புகழின் தீபமாக ஆசிரியர் ஆ.இரத்தினம் அவர்களின் முயற்சியால் நடைபெற்றுக்கொண்டுவருகிறது.
தமிழ்நாட்டின் பல ஜில்லா தாலுகாக்களில் இருந்து, பல ஏழை பழங்குடி மாணவர்கள் வசதிபெற்றுக் கல்வி பயின்று வருகிறார்கள். அவ்விடுதியைக் கட்டடமாகக் கட்ட, விடுதியை நல்ல முறையில் மாணவர்கட்கு நன்மை பயக்கும் வகையில் வசதிகள் செய்ய ரூ.50,000 ஆகும். எனவே, தாழ்த்தப்பட்ட பொது பிரமுகர்கள் நிதி அளிக்குமாறு வேண்டுகிறோம். இன வளர்ச்சிக்கு, மாணவர் உயர்விற்கு முன்வந்து நிதி அளியுங்கள்.
என்று வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. இதை ஏற்று பம்பாய்வாழ் தமிழர்கள் 41 நபர்கள் டாக்டர் அம்பேத்கர் இளைஞர் கழகத்தின் சார்பாக ரூ. 45.10 பைசா நன்கொடை அளித்துள்ளனர். இதில் நாங்குநேரி தாலுகாவில் நடைபெற்றுவந்த தாழ்த்தப்பட்டோர் விடுதிக்காக நிதி வேண்டி அந்தத் தாலுகாவைச் சேர்ந்த ஆதிதிராவிடர்கள் பம்பாயில் கச்சேரி ஒன்றை நடத்தியுள்ளனர்.
பெடரேஷன் செய்திகள்
தமிழ்நாடு ஷெட்யூல்ட் காஸ்ட் பெடரேஷனின் நடவடிக்கைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டன. சில பதிவுகள் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ளன. உதாரணமாக 24.10.1948 அன்று வட ஆற்காடு ஜில்லா, மைசூர் சமஸ்தான பெடரேஷனின் ஊழியர் மாநாட்டின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் மறைவுற்ற சமூகத் தலைவர்கள் ஆர்.சீனிவாசன், எம்.சி.ராஜா, ஆர்.வீரையன் ஆகியோரின் படங்கள் திறந்து வைக்கப்படும் என்ற அறிவிப்பு காணப்படுகிறது. அடுத்ததாக 1 டிசம்பர் 1948 இதழில் “தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் பெடரேஷன் ஊழியர்கள் மகாநாடு” செய்தி நான்கு புகைப்படங்களுடன் பதிவாகியுள்ளது.
- மகாநாடு பந்தலுக்கு பழந்தமிழர் படை ஊர்வலமாக பெடரேஷன் பேரொலியோடு அணிவகுத்துச் செல்லுகிறது.
- மகாநாட்டின் தலைவர் டாக்டர் டி.டி.ராஜன், கொடியேற்றியவர் திரு. பூ.பார்த்தசாரதி, திறப்பாளர் திரு. ஆ.இரத்தினம் (உரிமை ஆசிரியர்), வரவேற்பாளர் திரு. எம்.தனபால் மற்றும் படத்திறப்பாளர்கள், சொற்பொழிவாளர்களைக் காணலாம்.
- வெள்ளம்போல் பழந்தமிழர் கூட்டம் பெடரேஷன் மாநாட்டுப் பந்தலில் அமர்ந்து ஆர்வத்துடன் மகாநாட்டு நடவடிக்கைகளைக் கவனிக்கின்றனர்.
- குடியாத்தம் டவுண் எம்.முனுசாமி தலைமையில், பெடரேஷன் கொடி தாங்கி ஊர்வலம் செல்லும் முன்னணி.
மற்றோர் அறிவிப்பில்;
தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் பெடரேஷன் பொதுக்கூட்டம்
வருகிற 12.12.1948 ஞாயிறு மாலை 5 மணிக்கு சென்னையில் தங்கவயல் தமிழ் பண்டிதர் ஜி.அப்பாதுரையார் அவர்கள் தலைமையில் ஓர் பொதுக்கூட்டம் நடைபெறும். அப்போது திரு. பெ.இராமச்சந்திரனார், எம்.கிருஷ்ணசாமி, எம்.ஆதிமூலம், திருச்சி டாக்டர் டி.டி.ராஜன், தஞ்சை ஏ.சிவராமசாமி முதலியவர்கள் ‘தாழ்த்தப்பட்டவர்களும் தற்கால அரசியலும்’ என்பதைப் பற்றி பேசுவார்கள். கூட்டத்திற்கு ஒலிபெருக்கி அமைக்கப்படும். இங்ஙனம் ஆ.இரத்தினம், கே.எம்.சாமி, கே.ஆர்.தாஸ்.
என்றுள்ளது.
இதுபோக பெடரேஷனின் அமைப்புக்கூட்டம், மகாநாட்டின் கமிட்டிக் கூட்டம் போன்ற அறிவிப்புகளும் அதே இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்து சட்டத் தொகுப்பு மசோதாவுக்கு ஆதரவாக “கொடுங்கள் தந்தி! அம்பேத்கரியத்தை வலுப்படுத்துங்கள்” அதாவது நாடாளுமன்றத்தில் இந்து சட்டத் தொகுப்பு மசோதா அறிமுகப்படுத்தவிருந்த நிலையில் இந்து மதத்தைச் சீர்திருத்த வேண்டுமென்றால், இந்த மசோதா நிறைவேற வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளது (உரிமை, 1 ஜனவரி 1950).
பெடரேஷனும் கழகமும்
பாபாசாகேப் அம்பேத்கர் ஷெட்யூல்ட் காஸ்ட் பெடரேஷனை 1942இல் தொடங்கினார். ஈ.வெ.ரா.பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் திராவிடர் கழகமாக 1943இல் தோற்றுவித்தார். இந்த இரண்டு இயக்கங்களுக்கு மத்தியில் கருத்தியல் கொடுக்கல் வாங்கல்கள் இருந்ததைப்போல் கருத்து முரண்களும் இருந்ததை ‘உரிமை’யின் பதிவுகளிலிருந்து காண முடிகிறது. அந்தக் கருத்து முரண் என்பது அம்பேத்கரியர்கள் கொண்ட சாதி ஒழிப்புக் கருத்தியலுக்கும் திராவிட அரசியலார் கொண்ட பார்ப்பன எதிர்ப்பு என்பதற்குமான முரணாக இருந்ததைக் காண முடிகிறது. மேலும் தலித்துகள் சாதி இந்துக்களிடமிருந்து அன்றாட சாதிய ஒடுக்குதல்களை அனுபவித்தனர். ஆனால், திராவிடர் கழகம் பார்ப்பனிய எதிர்ப்பில் மட்டுமே கவனம் குவித்துள்ளது, சாதி இந்துக்கள் தலித்துகளுக்குச் செய்யும் கொடுமைகளைப் பற்றிப் பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டை உரிமையில் வெளியான கட்டுரைகள் முன்வைத்தன. இந்த அரசியல் சூழலில் இருதரப்பினருக்குமிடையே நடந்த கருத்து மோதல்கள் பலவற்றை இவ்விதழின் பதிவுகளில் காண முடிகிறது.
‘அம்பேத்கரைப் பற்றி பெரியார்’ எனும் தலைப்பில் விடுதலை தலையங்கத்தை வெளியிட்டுள்ளனர் (15 அக்டோபர் 1948).
28-9-48 செவ்வாய்க் கிழமை, “விடுதலை” தலையங்கத்தில் “தேர்தலும் செட்யூல், முஸ்லீம் கடமையும்” என்ற தலைப்பில் பெரியார் எழுதியவைகளில், நமது தலைவர் டாக்டர் அம்பேத்காரைப் பற்றி எழுதியதைக் கீழே தருகிறோம். அம்பேத்காரை ‘காங்கிரஸ்தாஸர்’, ‘பதவிப்பித்தர்’, ‘காட்டிக் கொடுத்தவர்’ என்று குறை கூறும் ‘அரசியல் சூன்யங்களின்’ தெளிவில்லாத நெஞ்சம் தெளிவதற்காக இதோ! “டாக்டர் அம்பேத்கார் அவர்கள் தன்னை காங்கிரசுக்கு எதிரி என்று சொல்லிக்கொள்ளுவதில் சிறிதும் வெட்கமோ பயமோ அறியாதவர்….”
செட்யூல் வகுப்பு உண்மைத் தலைவரான டாக்டர் அம்பேத்கார் “காங்கிரஸில் சேராதீர்கள், காங்கிரஸை பலப்படுத்தாதீர்கள், காங்கிரஸ் மணல் வீடு போல் சரிந்து கொண்டு வருகிறது” என்று செட்யூல் வகுப்பு மக்களுக்குச் சொல்லியிருக்கிறார். அவர் (டாக்டர் அம்பேத்கார்) மற்ற ஐந்தாம்படை கருங்காலிகள் போல் உங்களைக் (செட்யூல் வகுப்பாரை) காட்டிக்கொடுத்துப் பதவி பெற்றவரல்ல. காங்கிரஸ் சர்க்காரால் கெஞ்சி அழைக்கப்பட்டவர். உங்களுக்குச் சிறிதாவது யோசனை, அரசியல் ஞானம் இருந்தால் நீங்கள் டாக்டர் அம்பேத்கார் சொன்னதைக் கவனிப்பதா அல்லது கூலி ஐந்தாம் படை, உங்களைக் காட்டிக்கொடுப்பவர்கள் சொல்லுகிறபடி குரங்குபோல் ஆடுவதா என்று கேட்குறேன்” ஈ.வெ.ராமசாமி.
ஆம் திராவிடத் தலைவர் என்று போற்றப்படும் பெரியார் ராமசாமி அவர்களே விடுதலையில் இவ்வாறு தீட்டியிருக்கிறார். இந்த உண்மைகளை அறியாத தோழர்கள் – பரிதாபத்திற்குரிய நண்பர்கள் நம்மை கிண்டல் செய்யும் ‘மகா பிரபுக்கள்’ – அரசியலில் கரை கண்டுவிட்டதாக அங்கலாய்த்துத் திரியும் ‘அரசியல் சூன்யங்கள்’ – அனைவரும் அறிந்து கொள்வதற்காக உரிமையில் எடுத்துக்காட்டியுள்ளோம். இனியேனும் சீர்திருந்துவார்கள் என்ற நோக்கத்துடன் அவர்களின் கட்சி கண்களுக்கு இவ்வுரைகளைச் சமர்ப்பணம் செய்கிறோம்.
அதாவது, அம்பேத்கர் சுதந்திரத்திற்குப் பின்பு அமைந்த முதல் காங்கிரஸ் அமைச்சரவையில் சட்டம் மற்றும் நீதி அமைச்சராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து அவரைக் காங்கிரஸ் தாஸர், பதவிப்பித்தர், காட்டிக் கொடுத்தவர் என்று விமர்சித்துள்ளனர். அப்படி விமர்சித்தவர்களுக்குப் பதில் கூறும் விதமாக பெரியாரின் கூற்றை மேற்கோள் காட்டியுள்ளனர். அம்பேத்கருக்கு ஆதரவான இந்த மேற்கோள் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தோருக்குப் பதில் கூறும் விதமாகவே அமைந்துள்ளதை அறிய முடிகிறது. அதாவது, பெரியாரே அம்பேத்கரை இவ்வாறு பாராட்டியிருக்கிறார். ஆனால், பெரியாரைப் பின்பற்றும் நீங்களோ அம்பேத்கரை விமர்சிக்கிறீர்கள் என்று கேள்வியெழுப்பியுள்ளனர்.
மீனாம்பாள் சிவராஜ் அறிக்கை
அப்போது ஆண்டுக்கு ஒருமுறை மேயரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறையாக இருந்தது. கவுன்சிலர்கள் வாக்களித்து மேயரைத் தேர்ந்தெடுப்பர். தந்தை என். சிவராஜ் 1945 – 1946இல் சென்னை மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1948 மேயர் தேர்தலில் மீனாம்பாள் சிவராஜ் போட்டியிட்டார். இத்தேர்தலில் ஜாதி இந்து கவுன்சிலர்கள் குறிப்பாக திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் மீனாம்பாள் சிவராஜுக்கு வாக்களிக்காததால் அவர் தோல்வியைத் தழுவினார். இந்தச் சூழலில் உரிமை இதழுக்கு மேயர் தேர்தல் குறித்து அவர் ‘மேயர் தேர்தல் – தன் கூன் அறியாத ஒட்டகம்’ என்ற தலைப்பில் எழுதிய அறிக்கை வெளியானது. அதில்;
நான் ஆல்டர்மேன் தேர்தலில் தோல்வியுற்றதைப் பற்றி திராவிடகழக பத்திரிகைகள் பொறுப்பற்ற முறையில், சிந்தனையைச் செலுத்தாமல், பகுத்தறிவை உபயோகிக்காமல் பலவாறு எழுதியதை நான் குறிப்பிட ஆசைப்படுகிறேன். திராவிடர்களை நான் பகைத்துக்கொண்டதால் இரண்டு பெரிய கட்சிகள் ஆதரித்தும் தோல்வியுற்றேனாம். இவ்வாறு கூறுகின்றன திராவிட கழக பத்திரிகைகள்.
இரண்டு பெரிய கட்சிகள் ஆதரித்தது என்று கூறுவது உண்மை என்றாலும் அதிலுள்ள ஜாதி ஆணவம் பிடித்த ஜாதி இந்து கவுன்சிலர்கள் (திராவிடர்கள்) என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, ஜாதி அகம்பாவம் தலைக்கேறியிருந்ததால் என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்று கருதி வாக்குகளை அளிக்காமல், நாணயத்தை மறந்து, பொறுப்புணர்வை உணராமல், மக்கள் மன்றத்தால் கவுன்சிலர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட மண்ணைக் கவ்விய மதிப்பிற்குரிய திராவிட தோழியர் – விடுதலை கண்களுக்குச் சீர்திருத்தவாதியாகத் தெரியும் திருமதி இந்திராணி பாலசுப்பிரமணியம் ஜாதி இந்துவாக இருப்பதால் வெற்றிபெற சூழ்ச்சிகள் செய்தார்கள், ஆரிய முறையைப் பின்பற்றி ஆரியத்தை எதிர்க்கும் அன்பர்கள். அந்த அம்மையார் வெற்றி பெற்றது நாணயத்தை மேற்கொண்டல்ல; ஜாதி வேற்றுமையை அடிப்படையாகக் கொண்டு.
நான் தோல்வியுற்றதற்குக் காரணம் எனது சமூகமாகிய – அவர்கள் கண்களுக்குக் கீழ்த்தரமாகத் தெரியப்படுகிற – சதிகார சமூகம் தாழ்ந்த சாதி என்று தள்ளி வைத்தது ஓர்புறமிருக்க, ஜாதியத்தை ஒழிக்கும் திராவிடர் கழக தினசரியான விடுதலை கூறியதே ‘அம்பேத்கர் சாதி’ என்று அச்சமூகத்தில் பிறந்த காரணத்தால். எனக்கு ஆதரவு தந்து ஓட்டு தந்தவர்கள் அமோகமாக ஐரோப்பியர், முகமதியர், பிராமணர், எங்கள் இனத்தவர் ஆகிய சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த கவுன்சிலர்கள்தான்.
சென்னை நகரசபை தேர்தலில் 8 பழங்குடி மக்களைச் சேர்ந்த தோழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதைக் குறித்து ஜாதி இந்து கவுன்சிலர்களுக்குப் பொறாமை ஏற்படுகிறது. அதைப் பின்பற்றி வஞ்சகம் உருவாகியது. அந்த உருவே நான் தோற்றதற்குக் காரணம். நிற்க, நான் திராவிடத் தோழர்களைப் (திராவிடக் கழகத்தை) பகைத்துக்கொண்டதால் தோற்றேன் என்று கழக பத்திரிகைகளின் கலங்கிய கண்களுக்கு மேயர் தேர்தல் நிகழ்ச்சியைச் சமர்ப்பணம் செய்கிறேன்.
டாக்டர் கிருஷ்ணசாமி மேயர் தேர்தலுக்கு நின்றபோது திராவிடக் கழக தலைவர் என்.ஜீவரத்தினம் காரில் சுற்றிச் சுற்றி வேலை செய்தும், அவர் மாத்திரமென்ன, திராவிடர் கழகமே வேலை செய்தும், தோல்வியுற்றதேன்? திராவிடத் தோழர் டாக்டர் கிருஷ்ணசாமி மேயர் தேர்தலில் நின்றது திராவிடக்கழகத்தாரின் பெருத்த ஆதரவோடு நிற்பதாகத் தெரிந்தும், திராவிடக் கவுன்சிலர்கள் (ஜாதி இந்துக்கள்) ஆதரிக்காததது ஏன்? திராவிடக் கழகத்தின் தலைவர் வேலை செய்தும் இதற்கு யார் காரணம்?
நகர சபையில் ஜாதீய கோட்பாட்டை ஆதரிக்கும் கவுன்சிலர்கள்தான் நிரம்பியிருக்கிறார்கள். உள்ளபடியே திராவிடக் கொள்கையை ஆதரிக்கும் கவுன்சிலர்கள் இருக்கிறார்களா என்பது சந்தேகமே! இருந்திருந்தால் கிருஷ்ணசாமி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார். ஜாதி இந்துக்களெல்லாம் உண்மையிலேயே திராவிடக் கொள்கைப்படி நடந்துகொள்வது கிடையாது. ஆதலால், திராவிடர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஜாதி இந்துக்களையும் அவர்கள் கட்சியாகிய திராவிடர் கழகத்தையும் பழங்குடிகளாகிய நாம் நம்புவது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கும் கதைதான். ஜாதி அடிப்படையில் ஜாதி இந்துக்கள் (திராவிடர்கள்) ஆரிய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். ஆரிய கலாச்சாரத்திற்கு அடிபணிந்தவர்கள்; அன்று மாத்திரமல்ல இன்றுங்கூட! சமுதாய அமைப்பு இருக்கும் வரையிலும் கூட!
ஜாதி வித்தியாசத்தை வளர்ப்பவர்கள் திராவிடர்கள். பழங்குடிகள் திராவிடர் என்று கூறிக்கொள்ளும் ஜாதி இந்துக்கள் வலையில் சிக்கக்கூடாது. திராவிடர்கள் – அவர்கள் பத்திரிகைகள் பழங்குடிகள் விஷயத்தில் கலவரத்தை உண்டு பண்ணும் ஆதாரமற்ற பிரச்சாரங்களை எழுதியும் பேசியும் வருகிறார்கள். இத்தகிடுதத்தத்தைக் கட்சிக்குப் பலம் சேர்ப்பதாக எண்ணிக்கொள்கிறார்கள். ஆரிய வித்தையைத் திராவிடர்கள் காட்டுகிறார்கள்.
மீனாம்பாள் சிவராஜ் இந்த அறிக்கையில் திராவிடக் கொள்கை பேசிக்கொண்டு சாதியைப் பின்பற்றக்கூடியவர்களைக் கடுமையாகச் சாடுகிறார். இது மீனாம்பாள் சிவராஜ் தேர்தலில் தோற்றதினால் தனிப்பட்ட பகைமைக் கொண்டு எழுந்த விமர்சனம் அல்ல, இது கொள்கை நடைமுறையின் தோல்வியைச் சுட்டிக்காட்டும் விமர்சனம். அதாவது, சாதி ஏற்றத்தாழ்வைத் தோற்றுவித்த ஆரியத்தை எதிர்க்கும் திராவிடர்கள், தலித்துகள் மீது மட்டும் சாதியப் பாகுபாட்டைக் காட்டுவது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திராவிடர் கழகத்தால் ஆதிதிராவிடர்களுக்கு என்ன பயன்? அம்பேத்கரியர்களின் அடுத்து ‘பித்தலாட்டப்பீடிகை’ எனும் தலைப்பில் “திராவிடர் என்று அழைத்துக்கொள்ளும் ஓர் இயக்க தினசரி தாழ்த்தப்பட்டோர் துயர் கண்டு ஏங்கி முதலைக் கண்ணீர் வடிக்கிறது” என்று தொடங்கும் தலையங்கத்தில் விடுதலை நாளேட்டில் வெளியான செய்திகளை மேற்கோள் காட்டி சாதி இந்துக்கள் தலித்துகளுக்குச் செய்யும் கொடுமைகளைக் கேள்வி கேட்காமல் கோயில் நுழைவு, வேதக்கல்வி போன்றவற்றைத் தாழ்த்தப்பட்டோருக்குக் கொடுப்பதால் என்ன பயன் என்று கேள்வி கேட்கிறது. அத்தலையங்கத்தில்
சாதி இந்துக்கள் தெருக்களில் முழங்காலுக்குக் கீழ் வேட்டி அணிய முடியாது, குடை பிடிக்க முடியாது, தாழ்த்தப்பட்டவன் குடிக்கும் கிணற்றில் மலம் மிதக்கிறது இதையெல்லாம் கேட்காமல் “அக்கிரகாரத்தில் உள்ள தபாலாபீஸ் ஓரமாக நாயும் பன்றியும் செல்கிறது. ஆனால், தாழ்த்தப்பட்ட தோழன் செல்ல முடியவில்லையே” என்று திராவிட தினசரி அங்கலாய்த்துக்கொள்கிறது. எங்களால் ஜாதி இந்துக்கள் வசிக்கும் ஊர்பகுதிக்குப் பயமின்றிச் செல்ல முடியுமா? ஊரைத்தாண்டிதானே அக்கிரகாரத்துக்குச் செல்ல முடியும். உமது ஊர் எனும் இரும்புக் கோட்டையைத் தாண்டியல்லவா அக்கிரகாரத்துக்குச் செல்ல முடியும், இந்தத் தடையை நீக்க திராவிட இயக்கம் என்ன செய்தது? ……அக்கிரகாரத்திற்கும் சேரிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? வண்டிச் சக்கரத்தில் கட்டி மொட்டையடித்து, சூடு போட்டு வாட்டி வதைத்தவன் திராவிடனா, பார்ப்பானா?… தங்கள் ஊர் எனும் ஆணவக்கோட்டையை அழித்து சேரியிலுள்ள முனியனை முனிசீப்பாக்கி தங்கள் வீதியிலே வசிக்க அனுமதி தரக்கூடாதா? பார்ப்பனிய தாய்ப்பாம்புகள் ஒரு சிலவேதான், படமெடுக்கும் கருவிஷ நச்சுகொண்ட திராவிட நாகங்கள் பலவுண்டே, இவைகள் ஒழிந்தாலன்றோ சாதியும் உயர்வு தாழ்வும் உடனே ஒழியும். …சூத்திரன் என்றால் ஆத்திரத்தோடு அறை என்று கூறும் நீங்கள், பறையன் என்றால் பதைத்து அடி என்று என்றேனும் பகர்ந்ததுண்டா? காரணம் (சூத்திர) தக்ஷிண ஆரியரே பறையன் என்று கூறுகின்றனர் என்ற தயக்கமா…?
என்று தலையங்கம் விரிந்து செல்கிறது. தலையங்கத்தை இதழின் ஆசிரியரே எழுதியிருக்கக்கூடும். இத்தலையங்கத்தின் “தாழ்த்தப்பட்டவன் குடிக்கும் கிணற்றில் மலம் மிதக்கிறது” எனும் வரி மூலம் அன்றிலிருந்து இன்றுவரை தலித்துகள் குடிக்கும் குடிநீரில் மலம் கலக்கும் காட்டிமிராண்டி செயல்களைச் செய்யும் சாதி வெறியர்கள் இருந்துள்ளனர் என்பது புலனாகிறது. இதனாலேயே இத்தலையங்கம் பார்ப்பனர்களை எதிர்த்து சாதி இந்துக்களின் உரிமை கோரும் திராவிட சித்தாந்தவாதிகளைச் சாடுகிறது.
மற்றொரு கட்டுரையில், பெரியாரை வரவேற்கப் பெரும் மக்கள் திரள் கூடியிருக்கிறது. அக்கூட்டத்தைப் பார்த்து என்ன கூட்டம் என்று கேட்கிறார், அதற்குக் கூட்டத்திலொருவர், “ஆரியத்தை வைகுண்ட யாத்திரைக்கு அனுப்பிக் கொண்டு வரும் வைக்கம் வீரர், தமிழ் காத்த தலைவர், அறிவியக்கத் தந்தை, ஆரியத்தின் வைரி ஈ.வெ.ராமசாமிபெரியார் அவர்களை வரவேற்கும் கூட்டம் அது” என்கிறார். அதற்குப் பதிலாக, “அடேயப்பா! நீங்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன! அவர்கள் [பிராமணர்] எங்களைக் கண்டாலே தீட்டு ஒட்டிவிட்டதென்பார்கள். நீங்களோ கைப் பட்டால் தீட்டு என்பீர்கள். அவர்கள் ‘ஹரி’ என்று சொல்லி ஆலயத்தில் சுரண்டுவார்கள். நீங்கள் ‘தொழில் வளர்ச்சி’ என்று சொல்லி வியாபாரத்தில் சுரண்டுவீர்கள். நீங்கள் உங்களைவிடத் தாழ்ந்த ஒரு வகுப்பு இப்படி இருக்கிறதென ஒப்புக்கொள்ளுகிறவர்கள். இவ்வளவுதானே வேறுபாடு” என்று சாதியைப் பின்பற்றுவதில் பிராமணர்களுக்கும் சாதி இந்துக்களுக்கும் சிறிதளவு மட்டுமே வித்தியாசம் என்று விமர்சிக்கிறார் கட்டுரையாளர். ஆனால், கட்டுரையாளர் காத்திருந்து பெரியாரின் உரையைக் கேட்டுள்ளார். “பெரியாரின் பேச்சைக் கேட்ட பின்பு என் மனதில் குடிகொண்டிருந்த கோழை மனப்பான்மை அகன்றது. எனது இன்றைய இழிநிலைக்கு முன் ஜென்மம் காரணம் என்று நினைத்திருந்தேன். ஆனால், என்று பெரியாரின் பேச்சைக் கேட்டேனோ அன்றே இந்த முன் ஜென்மத்தை மூட்டைக்கட்டி, தலைவிதிக்கும் சீட்டுக் கொடுக்க ஆரம்பித்தேன்” என்கிறார். பெடரேஷன்காரர்களுக்கு பெரியார் இயக்கத்துடனான உறவு என்பது விமர்சனத்துடன் ஏற்றுக்கொண்ட ஒன்றாக இருக்கிறது. நடைமுறையில் சாதிஇந்துக்களே தலித்துகள் மீது அன்றாட ஒடுக்குமுறைகளை நிகழ்த்துகின்றனர். ஆனால், திராவிட அரசியலாளர்கள் பிராமணர்களை மட்டுமே குற்றம் சாட்டுகின்றனர். சாதியைப் பின்பற்றுவதில் பிராமணர்கள் ஒருவிதம் என்றால் இவர்கள் மற்றொருவிதம் என்பதே இந்தத் தலையங்கத்தின் சாரம்சமாகக் காணமுடிகிறது.
‘சிறந்த வாழ்வு எய்த’ எனும் தலைப்பில் எஸ்.துரைமாணிக்கம் என்பவர் எழுதிய கட்டுரையில் (15.3.1949) ஆதிதிராவிடர்கள் ஏன் திராவிடர் கழகத்தில் சேர்ந்து தங்கள் உழைப்பை வீணாக்குகிறார்கள். ஆதிதிராவிடர்கள் திராவிடர் கழகப் பத்திரிகைகளை வாங்குகின்றனர், அவர்களின் கூட்டங்களுக்குச் செல்கின்றனர். ஆனால், அவர்கள் யாரும் நமது பத்திரிகைகளைச் சீண்டிப்பார்ப்பது கூட கிடையாது, நமது இயக்கத்தின் கூட்டங்களுக்கும் வருவது கிடையாது. மேலும், திராவிடர் கழகத்தின் திராவிட நாடு கோரிக்கையானது தமிழ்நாட்டிலுள்ள பள்ளர், பறையர்களை மட்டுமே விடுதலை செய்யும், வடமாநிலங்களில் உள்ள தாழ்த்தப்பட்டோரை விடுதலை செய்யுமா? தீண்டாமை என்பது இந்தியா முழுமைக்கும் உள்ளதே. இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்திய இவர்கள் என்றைக்காவது தீண்டாமை ஒழிப்புப் போரை நடத்தியுள்ளனரா? நமது தலைவர் அம்பேத்கரைத் திராவிடர் கழகப் பத்திரிகையான விடுதலை “பேசாது கெடுத்த அம்பேத்கார் பேசியும் கெடுத்தார்” என்று தலையங்கம் எழுதுகிறது. ஆனால், அப்படி விமர்சிக்கப்பட்ட அம்பேத்கரைத்தான் அண்மையில் பெரியார் “நீங்கள் உங்கள் அருமையான தலைவரும் இனிமேல் நீங்கள் பெறமுடியாதவருமான டாக்டர் அம்பேத்காரோடு சேர்ந்து உங்கள் உரிமைக்குப் போராடுங்கள் அதுதான் உங்கள் முதல் கடமை” என்று புகழ்ந்திருக்கிறார். அவரே அப்படிச் சொல்லியிருக்கும்போது நாம் திராவிடர் கழகத்தில் சேருவதற்கு என்ன அர்த்தம் இருக்கிறது என்று கேள்வி கேட்கிறது இக்கட்டுரை.
ஆதிதிராவிடர்களின் இந்தக் கேள்விக்கு, பெரியார் திருச்சி வாமடம் திராவிடர் வாலிபர் கழக முதலாண்டு விழாவில் பேசியபோது “திராவிடர் கழகத்திலே ஆதிதிராவிடர்கள் சேர்ந்தால் என்ன லாபம் என்று மீண்டும் சிலர் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். நான் அவர்களைக் கேட்கிறேன், நீங்கள் கழகத்தில் சேர்ந்தால் அதற்கு என்ன லாபம் என்று” என பதிலுரைத்துள்ளார். இது 7.5.1949 தேதியிட்ட விடுதலை நாளேட்டில் 3ஆம் பக்கத்தில் வெளியிடப்பட்டதாக உரிமையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரியாரின் இந்தக் கூற்றுக்கு இரண்டு பக்கங்களில் பதில் எழுதியுள்ளனர்.
“நாம் எதிர்பார்த்த பதில். எனவே ஆச்சரியமோ கோபமோ படவில்லை. பல ஆண்டுகளுக்குப் பின்னால் இன்றைக்காகிலும் உள்ளத்தில் ஊடாடிக்கொண்டிருந்த கருத்தைக் கக்கிவிட்டார். அதற்காக ‘ஐயா’ வுக்கு நன்றி கலந்த வணக்கம். இதற்கு முன்னால் பெரியாரை ஆதிதிராவிடர்களுக்கு திராவிடர் கழகத்தால் என்ன நன்மை என்ற கேள்வியைக் கேட்டால், நன்மையில்லை நஷ்டம்தான், ‘ஆதி’ என்ற இரண்டு எழுத்துகளும் வெட்டப்படும் என்று பதில் கூறுவார். தற்போது வேறுவிதமாக பதிலுறுக்கிறார்”
என்று தொடங்கும் இந்தப் பதிலில் சுயமரியாதை இயக்கமாக இருந்த காலத்தில் அதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் ஆதிதிராவிடர்களே, சாதி இந்துக்கள் யாரும் வரவில்லை. அதேபோல அன்று சு.ம. இயக்கத்தை வளர்த்தெடுத்தவர்கள் பட்டம் பெற்றவர்களல்ல, படிப்பறிவில்லா பாமரர்கள், நீங்கள் கழகத்தில் சேர்ந்தால் என்ன லாபம் என்று பெரியார் எந்தச் சமூகத்தைக் கேட்கிறாரோ அந்தச் சமூகத்தைச் சார்ந்தவர்களே. இந்த வரலாற்றைத் தெரிந்தவர்கள் இதை மறுக்கமாட்டார்கள். அன்றைய சுயமரியாதை இயக்க ஏடுகளைப் புரட்டினால் ‘பரிதாபத்திற்குரிய பஞ்சமர்கள்’, ‘தாழ்த்தப்பட்டவர்களும் இந்து மதமும்’ போன்ற தலைப்புகளைத்தான் காண முடியும். ஆனால், இன்றோ அப்படி இல்லை. அவர்கள் வளர்ச்சியடைந்துவிட்டார்கள். சேரியில் பறந்த கொடி இன்று ஊரிலே பறக்கிறது. எந்தக் கைகளால் கல்லைக் கொண்டு எரிந்தார்களோ [சாதி இந்துக்கள்] அந்தக் கைகளாலேயே மாலை சூட்டுகின்றனர். எந்த வாயால் திட்டித் தீர்த்தார்களோ அந்த வாயால் வாழ்க வாழ்கவென முழங்குகின்றனர். அன்று யாருடைய உழைப்புத் தேவைப்பட்டதோ அவர்களுடைய உழைப்பு இன்று தேவையில்லை. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நடராசனைப் பறிகொடுத்தோமே அது யாருக்கு லாபம் என்றெல்லாம் பெரியாருக்கு எதிர் கேள்வி கேட்டு இறுதியாக, “பெரியார் கூறியது போல நாம் கழகத்தில் சேர்ந்தால் அதற்கு லாபம் இல்லாதிருக்கலாம். அதைப்போலவே திராவிடர் கழகத்தால் நமக்கும் -தாழ்த்தப்பட்டோர்களுக்கும் லாபம் இல்லையென பகருகின்றோம்” (உரிமை, 15.5.1949) என்று முடிகிறது.
ஆதிதிராவிடர்களின் உழைப்பில் வளர்ந்த சுயமரியாதை இயக்கம் இன்று திராவிடர் கழகமாகி வளர்ந்த பின்பு பிற்படுத்தப்பட்டோரின் கைகளுக்குச் சென்றுவிட்டது. ஆகவே, இனி திராவிடர் கழகத்திற்கு ஆதிதிராவிடர்கள் தேவையில்லை எனவும் உரிமை தனது கட்டுரையில் விமர்சிக்கிறது. இதுவரை பெயர் குறப்பிடப்படாமல் நிகழந்துவந்த பெடரேஷன் திராவிடர் கழகம் கருத்து மோதல், பெரியாரின் பதிலால் நேரடி கருத்து மோதலாகியுள்ளது.