பாட்டி சாகும்வரை அந்த அறைக்குள் என்னை அனுமதித்ததில்லை. இன்று அவள் இறந்த ஒரு வாரத்திலேயே நான் ஒளித்துவைத்திருந்த சாவிக்கொத்தைக் கொண்டு அறைக்குள் நுழைந்திருந்தேன். நுழைந்ததும் உமியின் நெடி, கோணிச்சாக்கின் நெடி இரண்டும் கலந்தடித்தது. அந்த அறை வீட்டுக்கு வெளியே அமைந்திருந்தது. வீட்டின் நீளத்துக்கு நீளவாக்கில் இருபதடி இருக்கும். அறையின் நடுவில் ஒரு மரச்சுவர். இரு பக்கமும் வரிசையாகக் கோணியில் பொதிந்து மிகக் கவனமாக வைக்கப்பட்ட கண்ணாடிகள்.
உயரே சுவரில் கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள். எல்லாவற்றிலும் தாத்தா பொருட்காட்சிகளில் தனது அரங்கில் கம்பீரமாக இருக்கும் புகைப்படங்கள். நடுவே மரச்சுவரில் சாய்த்து சாக்கால் மூடி வைக்கப்பட்ட கண்ணாடிகள், தாத்தா அமைக்கும் அரங்குகளைப் போலவே சமச்சீராக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அநேகமாக அந்த அறையில் வேறு எதுவும் இல்லை. தாத்தா, அப்பா இருவரும் இதை ஒரு காட்சியரங்காகவே தொடர்ந்து பராமரித்து வந்திருக்கிறார்கள். பொருட்காட்சி நடைபெறாத நாட்களில் அவர்கள் இங்கே இருந்து கண்ணாடிகளை மெருகேற்றிக் கொண்டிருந்திருப்பார்கள். சின்னவயதில் அப்பா வைத்திருக்கும் பொருட்காட்சி கண்ணாடி அரங்கில், அப்பா உணவருந்தும் நேரங்களில் சிலநேரம் நுழைவுக் கட்டணம் வாங்கி பார்வையாளர்களை அனுமதித்திருக்கிறேன். அப்போது மக்கள் கூட்டம் பொருட்காட்சிகளில் அலைமோதும். வேறு பொழுதுபோக்குகள் குறைவு. தாத்தா மாட்டுவண்டியில் இந்தக் கண்ணாடிகளைக் கொண்டு ஊர் ஊராய் போவாராம். அப்பா வாடகை வண்டிகளில் ஏற்றிச் செல்வார். தாத்தா காலத்தில் தொடங்கினதுதான் என்றாலும் பரம்பரை தொழில் போலாகிவிட்டது. வெறும் இரண்டு தலைமுறை தொழில். அதற்குள் வழக்கொழிந்து அதுவே காட்சியகப் பொருளாகிவிட்டது. அப்பாவின் இறுதி நாட்களில் தினமும் இந்த அறைக்குள் காலை பதினோரு மணியிலிருந்து பன்னிரண்டு வரை இருந்துவிட்டு வருவார். எங்களுக்கு அனுமதியில்லை. அப்போது உட்பக்கமாகப் பூட்டிக் கொள்வார். பாட்டியின் காலம் வரை இதே நிலை தொடர்ந்தது. இன்றுதான் அதற்கான வாய்ப்பு அமைந்தது.
நானந்த அறைக்குள் நுழைந்ததும் என்னைத் தவிர அங்கு யாரோ சிலர் இருக்கிறார்கள் என ஒரு முதுகு சில்லிடும் உணர்வு தோன்றியது. கண்ணாடிகளை மூடியிருந்த ஒவ்வொரு சாக்காய் திறந்து உதறினேன். படிந்திருந்த தூசி, வெளிச்சப் பட்டைகளில் ஒளிர்ந்து பறந்தது. ஒவ்வொரு கண்ணாடியும் மூன்றடி அகலமும் ஐந்தடி உயரமும் கொண்டவை. ஓரங்களில் பெரிய தேக்கு மரச்சட்டம். வடக்குப்பக்கம் நான்கு கண்ணாடிகளும் தெற்குப் பக்கம் நான்கு கண்ணாடிகளுமாய் மொத்தம் எட்டுக் கண்ணாடிகள். நான் பொருட்காட்சி அரங்குகளில் பார்த்த அதே சாய்ந்த வரிசை. வரிசை ஆரம்பத்திலும் முடிவிலுமாய் இரு ஓரங்களிலும் கிழக்குப் பார்த்தும் மேற்குப் பார்த்தும் சாதாரண நிலைக்கண்ணாடிகள். பிறகு, இடைவெளியோடு அடுக்கி வைக்கப்பட்ட குழி, குவி, ஆடிகள் அதன்பிறகு உருவங்கள் குட்டை, நெட்டை, குண்டு, ஒல்லி, பெரிய தலை சிறிய உடல், சிறிய தலை பெரிய உடலாகத் தெரியும் ஆடிகள். குழி, குவி, குட்டை, நெட்டை வடக்குப் பக்கம் மீதியுள்ளவை மறுபக்கம். நான் திரைகளை விலக்கிவிட்டு, தூசிகளைத் துடைத்துவிட்டு முதலில் வரிசைப்படி கிழக்குப் பார்த்த நிலைக்கண்ணாடி முன் வந்து நின்றேன். யாரோ என்னை இயக்குவதுபோல ஒரு முழு நிமிடம் அப்படியே அசையாமல் நின்றேன். கண்ணாடியில் சிறிய அசைவு தென்பட்டது. புகை மண்டியது. கண்ணுக்குள் ஒரு வெண்படலம் தோன்றி மறைய நிலைக்கண்ணாடியில் மெல்ல ஓர் உருவம் தென்பட ஆரம்பித்தது. நான் போய் கதவுகளை மூடிவிட்டு வந்தேன். இளமைக்கால தாத்தாவின் உருவம் அது. நான் கவனிக்கிறேனா எனக் கவனிக்காமல் அவர் போக்குக்கு கண்ணாடிகளின் வரலாற்றைப் பேசிக்கொண்டிருந்தார். “ஆதிகாலத்தில் மனிதன் நீரில் தன் பிரதிபலிப்பைக் கண்டு வியந்து நின்றான். முதலில் அது யாரோ வேறொருவர் என்றுதான் நினைத்தான். மெல்ல உடனிருப்பவரின் பிரதிபலிப்பு தெரிந்ததும் புரிந்துகொண்டான். அவனுக்கு, தான் இப்படி இருக்கிறோம் என ஒரு மனப்படிமம் உருவாகியது. தன்னைப் பிரதி செய்யும், தானென்றால் உருவகித்துக் கொள்ள ஓர் உருவம் இருப்பது அவனுக்குப் பெரும் விநோதத்தைத் தந்தது. நீர்க்கண்ணாடியிலிருந்து பிறகு மெல்ல மெல்ல நிரந்தரமாக உருவம் கலையாமல் இருக்க கல்கண்ணாடியை வந்தடைந்தான். வழுவழுப்பாக தேய்க்கப்பட்ட கல். படிப்படியாக வெண்கலக் கண்ணாடி, பாதரசக் கண்ணாடி, வெள்ளி, அலுமினியம் என அவன் உருவப்பயணம் தொடர்ந்தது.’’ தாத்தா தொடர்ந்தார். நான் அவர் உருவம் பேசுவதை அப்போதுதான் கவனித்துக் கேட்க ஆரம்பித்தேன். இப்போது தாத்தா குரலில் வேறொரு பாவம். தொடர்ந்தார் “நான் உருவங்களை வெறும் உருவங்களாகப் பார்க்கவில்லை. அது உள்நிழல். இருட்டான வெளிச்ச நிழல் போல இது உண்மையின் நிழல். ஒருவகையில் நீயே அது. அதில் தெரியும் உருவங்களைச் சுற்றி சில அரூபங்கள் தெரியும். அது தெரியும் நாளில் உன்னால் கண்ணாடியிடம் பொய் சொல்ல முடியாது.
“கண்ணாடி ஒரு கடும் உண்மை”
உருவம் மறைந்துவிட்டது.
அடுத்து, குழி ஆடியின் அருகில் நின்றேன். முந்தைய கண்ணாடி போல இதில் தாத்தாவின் உருவம் தோன்றியது. ஆனால், உள்ளொடுங்கி. “கண்ணாடி என்பது ரகசியம்.” அவர் பேசத் தொடங்கினார். “ஒரு நிமிடத்துக்கு மேல் கண்ணாடியில் உன் உருவத்தை உன்னால் கண்ணிமைக்காமல் பார்க்க முடியாது. அதன் உண்மை உன்னைத் தாக்கத் தொடங்கும். நீ யார் என்ற கேள்வி பலமாய்த் தொடர்ந்து வரும். ஏன் இந்தத் தலை, ஏன் இந்த முடி, ஏன் இந்தக் கண்கள், ஏன் இந்த மூக்கு, ஏன் இந்தக் காதுகள், ஏன் இந்த உதடு. அதுவரை நீ நினைக்காத உன் மொத்த உடலின் உறுப்புகளை நீ உற்றுக் கவனிக்க ஆரம்பிப்பாய். அப்படிப் பார்க்கும் தருணம் உன் ஆதிஅந்தத் தோற்றத்துக்குள் விழுவாய். சட்டென சுதாரித்து மீளவில்லையென்றால் உன்னால் அதிலிருந்து எழ முடியாது. அதுதான் நார்சிஸக்கு நேர்ந்தது. கண்ணாடியைச் சாதாரணப் பொருளாய்ப் பார்க்காதே. அதுவொரு மாயவலை.”
“கண்ணாடி என்பது போதிக்காத தத்துவம்”
உருவம் மறைந்துவிட்டது.
குவி ஆடியில் தாத்தா வெளியொடுங்கி முகத்தைத் தவிர எல்லாம் வீங்கித் தெரிந்தார். “புறத்தோற்றம் மட்டும் கண்ணாடியில் தெரிவதில்லை. கண்ணாடி காட்டுவது உன் அகத்தையும். அந்த வகையில் அது உன் முகம் போன்றது. உடைந்த கண்ணாடிகளில் ஓர் அமானுஷ்யம் இருப்பதைக் கவனித்திருக்கிறாயா? அதில் உன் உருவம் பிளவுபடுவதைக் கண்டிருக்கிறாயா? அதையே பார்த்துக் கொண்டிருந்தால் பித்து தலைக்கேறிவிடும்.” தாத்தாவின் உருவம் ஒரு முறை தலையைச் சிலுப்பிக் கொண்டது. “நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட கண்ணாடி எளிதில் உடையாது. மனம் ஒருமுகப்படாமல் செய்யப்படும் யாவற்றையும் போல கண்ணாடியும் உடையும். அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் தேங்காய்க் குலைகள் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டே வீழாமல் இருக்கின்றன. உடைந்த கண்ணாடிகள் கைகளில் கீறிவிட்டால் அது செய்யப்பட்ட நேரம் சரியில்லை என உணர். தாக்குவதற்கும் கொலை செய்யவும் ஒரு கண்ணாடி பயன்படுகிறதென்றால், அந்தத் தருணம் மண்ணில் எங்கோ குருதி சிந்திய தருணத்தின் ஒத்திசைவு கண்ணாடிக்குள் நேர்ந்திருக்கிறதென்று அர்த்தம். தன் ஆயுசுக்குள் ரசமெல்லாம் உதிரும்வரை உடைந்து போகாத கண்ணாடிகளைக் கண்டிருக்கிறாயா? அவை சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவை.”
“கண்ணாடியே ஒரு சத்தியம்.” தாத்தா முடித்துக் கொண்டார்.
தாத்தாவின் உருவம் குட்டையாய்த் தெரிந்த அடுத்த ஆடியில் தாத்தா ஒரு மந்திரவாதியைப் போல உடை அணிந்திருந்தார். “கண்ணாடிகள் மாயம் கொண்டவை. பல் முளைக்காத குழந்தைகள் கண்ணாடி பார்த்தால் அவற்றுக்கு சிங்கப்பல்களும் தெற்றுப் பல்களும் முளைக்கும். படுக்கையறையில் கண்ணாடி வைத்தால் சண்டை வரும். உடைந்த கண்ணாடி தரித்திரம். தவறுதலாகக் கண்ணாடி உடைந்துவிட்டால் சிறு பிசிறுமில்லாமல் சாணத்தால் ஒற்றி எடுத்துக் கல்லறைத் தோட்டங்களில் புதைக்க வேண்டும். நல்ல நாட்களில் கண்ணாடி உடைந்துவிட்டால் ஏதேனும் இடுகாட்டுக்குச் சென்று ஒரு கல்லறை மேல் உடைந்த பிசிறை தொட்டுத் தடவிவிட்டு அங்கேயே புதைத்துவர வேண்டும்.” தாத்தாவின் குரல் இப்போது ஒரு ரகசியமாக ஒலித்தது. “கண்ணாடிகளுக்குள் இருப்பவை உருவங்களல்ல உயிரும் உருவமும் சேர்ந்த கூட்டுருவம். உயிரற்ற ஆவிகளைக் கண்ணாடிகள் பிரதிபலிக்காது.”
“கண்ணாடி என்பது ஆன்மா”
Illustration : Negizhan
நெட்டை ஆடியில் தாத்தா வெண் உடையில் பிரகாசித்தார். தன் வாழ்நாளில் அணியாத எல்லா அணிகளையும் அணிந்து ஓர் அரச தோற்றத்தில் அமர்ந்திருந்தார். புன்னகையோடு ஆரம்பித்தார். “முன்பெல்லாம் உண்மைக்கும் பொய்க்குமான வித்தியாசங்கள் பாரதூரமானவை. உண்மையின் உலகுக்கும் பொய்யின் உலகுக்கும் வித்தியாசங்களைக் காலம் அழித்துக் கொண்டிருக்கிறது. பொய் போலவே தோற்றமளிக்கும் உண்மைகள். உண்மை போலவே தோற்றமளிக்கும் பொய்கள்.” தாத்தா இந்த இடத்தில் லேசாகச் சிரித்துக்கொண்டார். “பொய்கள் திரண்டு ஓர் உண்மையைக் கட்டமைக்கின்றன. அந்த உண்மை உண்மையான உண்மையைவிட உண்மையாயிருக்கிறது. உண்மைகள் பல்வேறு உண்மைகளாக மாறி ஒற்றை உண்மைகளை அழித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு பொய்யை உண்மையிலிருந்து பிரித்தறிவது இனிமேலும் சாத்தியமில்லை. அதைப்போலவே உண்மையைவிட பொய் அழகாய் மாறியிருக்கிறது. பொய்யையும் உண்மையும் பிரித்தறிய ஒரேயொரு சாத்தியமிருக்கிறது” தாத்தா ஒரு சின்ன இடைவெளி விட்டார்.
“கண்ணாடி உண்மைக்கும் பொய்க்கும் இடையேயான கதவு”
தாத்தாவின் உருவம் நெட்டை ஆடியின் மையத்தில் குவிந்து பிறகு ஒரு சுருளாய் மாறி மறைந்தது.
மேற்குப் பக்க நிலைக்கண்ணாடியில் முன்பு போல ஒரு முழு நிமிடம் நின்றுவிட்டுத் தெற்குப் பக்க வரிசையின் முதல் ஆடியின் முன் நின்றேன். இத்தனை குண்டாய் அப்பாவின் உருவத்தைப் பார்த்ததும் முதலில் சிரிப்பு வந்தது. அப்பா சின்ன வயதில் என்னை உறங்க வைக்க கதைசொல்லும் அதே தொனியில் ஆரம்பித்தார். “அப்போது பூமியில் உயிர்கள் இல்லாதிருந்த காலம். வெறும் மண்ணும் நீரும் மலையும். சூரியன் எரியும். நிலா ஒளிரும். கடல் கொந்தளிக்கும். பூமி பிளக்கும். எந்த உயிரும் இல்லை. ஆகவே, அழிவுகள் என எதுவும் இல்லை. எல்லாம் நிகழ்வுகள். ஒருநாள் வானிலிருந்து அந்த விண்கல் பூமியில் மோதியது. பிறழ் லயம் உருவாகியது. பரப்பெங்கும் தூசி. எங்கெங்கினாதபடி ஒரே இருட்டு. சூரியன் மறைந்துபோனது. தூசிப்படலம் அடங்க பலநூறாண்டுகள் ஆயிற்று. சூரியன் மீண்டும் வானில் தோன்றியபோது வெளிச்சமும் வெப்பமும் மீண்டும் பூமியை அடைந்தது. விண்கல் மோதியதில் பூமியின் தாதுக்களோடு விண் தாதுக்களின் இரசாயன கலப்புகள் ஓர் அதிசயத்தைப் பூமியில் தோற்றுவித்தது. அதுவே உயிர்கள். ஓர் அணு உயிர் முதலில் உருவாகி அசைந்தது. பிறகு, ஒன்று பலவாகி பல்கிப் பெருகி பரவி கலந்து பூமி உயிரினங்களின் வெளியானது. நிலா எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தது. தன் துணையான பூமியில் ஏதோ ஒன்று குறைவதாய் அதற்குத் தோன்றியது. அடுத்த நாள் பூமியின் பல்வேறு இடங்களிலுள்ள மனிதர்கள் உடைந்த நிலாவின் துண்டுகளைப் பொறுக்கி பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டனர். பூமிக்கு அழகு சேர்க்க நிலா தன்னை உடைத்துக் கொண்ட துண்டுகள்தான் கண்ணாடி. கண்ணாடியை வழிபடுபவர்கள் நிலாவை வழிபடுபவர்கள். அழகை வழிபடுபவர்கள். வளர்வதும் தேய்வதுமான இளமையை வழிபடுபவர்கள்.”
“கண்ணாடி என்பது அழகின் வழிபாட்டு வடிவம்”
அப்பா அமைதியாகிவிட்டார்.
அடுத்த கண்ணாடியில் ஒல்லியான அப்பா இப்போது ஒரு தத்துவஞானியின் தோற்றத்தில் முகம் முழுக்கப் பரவியிருந்த தாடியோடு பேசத் தொடங்கினார்.” யாரேனும் இருவரோ பலரோ சேர்ந்து கண்ணாடியில் பார்ப்பது அபூர்வமானது. காரணம் கண்ணாடி ஆன்மாவோடு தொடர்புடையது.” தாத்தா சொன்னதை இன்னும் விரிவாக அப்பா சொன்னார். “ஆன்மாவின் உலகத்தில் கண்ணாடிகளுக்கு முக்கிய இடம் உண்டு. ஒருவர் தனியே கண்ணாடி பார்க்கையில் அவரது ஆன்மா உள்ளிருந்து ஆழமாக அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இருவர் சேர்ந்து கண்ணாடிப் பார்க்கையில் இருவர் ஆன்மாவும் ஒன்றுடன் ஒன்று கலந்து ஒன்றாகிறது. மணமான தம்பதிகளைக் கண்ணாடி பார்க்கச் சொல்வது இதற்குத்தான். ஒரு குடும்பத்தின் எல்லா உறுப்பினர்களும் அடிக்கடி சேர்ந்து கண்ணாடிப் பார்த்தால் அந்த வீட்டின் ஆன்மா ஒன்றாகி அங்கே ஒருமித்த தன்மை நிறைந்திருக்கும்.
“கண்ணாடி ஆன்மாவின் பிரதி” அப்பா வாயை மூடிக் கொண்டார்.
பெரிய தலை சிறிய உடல் அப்பாவுக்குப் பொருத்தமாகவே இருந்தது. அவரது உண்மையான உருவத்துக்குக் கொஞ்சம் நெருக்கமாக உணர்ந்தேன். “மரண வீடுகளில் கண்ணாடிகளை மூடிவைக்கச் சொல்லி வலியுறுத்தும் பழக்கம் உலகில் பல இடங்களில் இருக்கிறது அறிவாயா?” அவர் குரல் ரகசியம் போல் ஒலித்தது. “இறந்தவர்களின் உடலிலிருந்து பிரிந்து வரும் ஓர் உயிர் கண்ணாடிகளைக் கண்டால் அதற்குள் அடைக்கலமாகிவிடும் தெரிவாயா? மூன்று நாட்கள் வரை இறப்பு வீடுகளில் கண்ணாடிகளை மூடி வைத்துவிட வேண்டும்.
“கண்ணாடி ஆன்மாக்களின் உலகத்துக்கும் நமது உலகத்துக்குமான பாலம்”
சிறிய தலை பெரிய உடலாகக் காட்டும் கண்ணாடியில் அப்பா ஒரு கனவானைப் போல உடையணிந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார். அவர் பேசுகையில் இயல்பில் இல்லாத ஒரு பேராசிரியர் தொனி இருந்தது. “மனிதர்களிடம் கண்ணாடிப் பருவம் என ஒன்று இருப்பதாக தத்துவவாதிகள் விவாதித்திருக்கிறார்கள். கண்ணாடிகளுக்கும் பருவம் உண்டு. முதிராத கண்ணாடிகள் சீக்கிரம் உடைந்துவிடும். வயது முதிர்ந்தவை இளமையின் தற்காலிகத்தை சதா வலியுறுத்திக் கொண்டேயிருப்பவை. அடர்த்தி கூடியவை வலு கொண்டவை. அதில் விழும் உருவங்கள் அடுக்குப் பரிமாணங்கள் கொண்டவை. ரசம் உதிர உதிர ஒரு கண்ணாடி மரணத்தை நெருங்குகிறது. ரசத்தை விட ரசத்துக்கு மேல் பூசப்படும் அடுக்கு வண்ணம்தான் கண்ணாடியின் ஆயுளைக் காப்பவை. என் அனுபவத்தில் கண்ணாடிகளைப் போல் ஆசான்களை நான் கண்டதேயில்லை. என் அப்பா உன் தாத்தா எனக்குத் தந்த பெரும் பரிசுகள் இவை. இவற்றோடு பேசுவதைப் போல வாழ்க்கையை அறிய வேறு நல்ல வழிகள் எனக்குத் தெரியவில்லை. ஒரேயொரு கண்ணாடி ஆயிரம் புத்தகங்களுக்குச் சமம். ஆனால், கவனமாகக் கையாள வேண்டிய ஆசான். கொஞ்சம் அசந்தால் குத்திக் கிழித்துவிடும். உள்ளையும் புறத்தையும். உனக்கு இன்றைக்குக் கண்ணாடிகளிடம் நான் கற்றுக் கொண்ட என் முதல் பாடத்தைச் சொல்கிறேன்.
“அளிப்பதை திருப்பியளி என்பதுதான் ஆடிகள் சொல்லும் முதல் பாடம்.”
அப்பா ஒரு புள்ளியாய் கரைந்து போனார். நான் கதவைத் திறந்து அறையிலிருந்து வெளியேறி அறையைப் பூட்டி ஒருமுறை பூட்டைச் சோதித்துவிட்டு அடுத்தநாள் காலை பதினோரு மணிக்கு மீண்டும் அங்கு வரவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.