ஏனவனைக் கொன்றாய்
பொதுவெளியில் நின்று புகைத்துக்கொண்டிருந்தான்
ஏனவனைக் கொன்றாய்
பதிலுக்குப் பதில் பேசினான்
ஏனவனைக் கொன்றாய்
அவன் சும்மா நின்றுகொண்டிருந்தான்
ஏனவனைக் கொன்றாய்
என்னைக் கண்டு அஞ்சி நகர்ந்தான்
ஏனவனைக் கொன்றாய்
காதலியை விடுதியில் புணர்ந்துகொண்டிருந்தான்
ஏனவனைக் கொன்றாய்
அவனிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை
ஏனவனைக் கொன்றாய்
அவனிடம் ஆதார் இல்லை
ஏனவனைக் கொன்றாய்
நள்ளிரவில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தான்
ஏனவனைக் கொன்றாய்
சாலையோரம் படுத்துக்கிடந்தான்
ஏனவனைக் கொன்றாய்
அவனொரு நாடோடி
ஏனவனைக் கொன்றாய்
அவனொரு அகதி
ஏனவனைக் கொன்றாய்
அவனொரு முஸல்மான்
ஏனவனைக் கொன்றாய்
அவனொரு கிறித்துவன்
ஏனவனைக் கொன்றாய்
அவனொரு தலித்
ஏனவனைக் கொன்றாய்
ஐயா,
இதுபோன்று இன்னும்
இலட்சோப இலட்சக் காரணங்கள் உண்டு
இதைக் கொஞ்சம் பச்சையாகவும்
இன்னும் தெளிவாகவும் சொல்வதானால்
ஒரு காரண மயிரும் தேவையில்லை
எல்லாமே உல்லுல்லாயிதான்
சரி ஐயா,
போதும், இத்தோடு நிறுத்திக்கொள்வோம்
இவ்விளையாட்டு ரொம்பவும் சலிப்பூட்டுகிறது
நான் சென்று
அதோ தூரத்தில் தெரிகிறானே
மஞ்சள் பையோடு ஒரு மாக்கான்
அவனைக் கொன்றுவிட்டு வருகிறேன்.
m
ஒருவனைப் போட்டு
ஒரு கூட்டம் வெட்டிக்கொண்டிருந்தது
அதைக் கண்ட ஒவ்வொருவரும்
ஆளுக்கொரு அரிவாளை எடுத்துக்கொண்டு
அதில் இணைந்துகொண்டார்கள்
ஒருவனுக்கு மட்டும் ஆயுதம் கிடைக்கவில்லை
அங்கிங்கென அலைந்து
பெருங் கல்லைத் தூக்கிச் சென்று
அந்த நபரின் தலைமீது போட்டான்
தலை நன்றாகவே நசிந்துவிட்டது
இனி யாராலும் அடையாளங் காண முடியாது
என்று ஊர்ஜிதமான பின்
எல்லோரும் ஆளுக்கொரு திசையில் சிதறினார்கள்
காகங்கள் கொத்தத் தொடங்கின
எறும்புகளும் ஈக்களும் மொய்க்க ஆரம்பித்தன
பெருக்கான் தனது பங்குக்குக்
கட்டைவிரலைக் கவ்விக்கொண்டு
பொந்துக்குள் மறைந்தது.
எப்போதும் போல
போலீஸ் தனது சைரனோடு வந்தது,
அவன் முடிந்தவரை தன்னை வெட்டிக்கொண்டான்
அப்போதும் உயிர் போகாததால்
தனது தலையில்
தானே கல்லைப் போட்டுக்கொண்டு
தற்கொலை செய்துகொண்டான்
என்ற மாபெரும் உண்மையைக் கண்டுபிடித்து
நீதியை நிலைநாட்டியது.
இனி யாராலும் அதைப் புடுங்க முடியாது.
m
Illustration : Elif Duman
நான்கு பேர் சுற்றி வளைத்து
அவனைக்
கையும் களவுமாகப் பிடித்துவிட்டார்கள்
கை கால்களைக் கட்டிப்போட்டு
இனிமேல் இத் தவறைச்
செய்வாயா செய்வாயா என்று
அடியோ அடியென அடித்தார்கள்
அவனை நல்வழிப் படுத்தவே
இதைச் செய்தார்கள் என்றாலும்
அவன் ரோசத்தில்
உயிரை விட்டுவிட்டான்
அங்கங்கே கன்றிப்போன உடலை
வீங்கிய முகத்தை
நன்கு பார்த்துவிட்டு
நடந்த கதையை விசாரித்த போலீஸார்
தங்களுக்குள்ளேயே முணுமுணுத்துக்கொண்டனர்
“என்ன இருந்தாலும்
அவனந்த ஒரு கவளச் சோற்றைத் திருடியிருக்கக் கூடாதுதான்”
m
அவர்தான் சிங்கம்
தெரியவில்லை
அவர்தான் புலி
தெரியவில்லை
அவர்தான் புல்டவுஸர்
தெரியவில்லை
அவர்தான் டிராகன்
தெரியவில்லை
அவர்தான்
கவசகுண்டலத்தோடு பிறந்த
கர்ணனுக்குப் பிறகு
கத்தி எனும் குஞ்சோடு பிறந்தவர்
இப்போது தெரிகிறது
இப்போது தெரிகிறது.