இஸ்லாம் பற்றி பெரியார்!

புதியபரிதி

“நான் ஒரு மதவாதி” என்று பெரியார் தன்னைத் தானே அறிவித்துக்கொண்டதை நீங்கள் எங்கேனும் கேட்டோ, கடந்தோ வந்திருக்கிறீர்களா? இல்லை என்றால் ‘இஸ்லாம் பற்றி பெரியார்’ நூலை (சீர்மை பதிப்பகம்) வாசிக்கும்போது நீங்கள் துணுக்குறலாம், அதிர்ச்சி கூட அடையலாம், ஆனால் அது நிலைக்காது.

ஏனெனில், பல கோடி வார்த்தைகளைப் பேச்சாகவும் எழுத்தாகவும் தமிழ்ச் சமூகத்திற்கு பெரியார் விட்டுச் சென்றிருக்கும்போது, அதிலிருந்து ஏதேனும் ஒற்றை வரியை உருவி அதற்குப் பொழிப்புரையும் விளக்கவுரையும் எழுதி, அதன் மூலம் பெரியார் யார் என்றொரு பிம்பத்தை உருவாக்கும் வேலையை ‘இஸ்லாம் பற்றி பெரியார்’ என்கிற இந்நூல் செய்யவில்லை. பதிப்புரை, அறிமுகவுரை, நூல் இறுதியில் வரும் ஒரு கட்டுரையைத் தவிர அனைத்துமே பெரியார் பேசிய, எழுதிய சொற்களே. எந்தத் திரிபுக்கும் இடமின்றி உருவாக்கப்பட்டிருக்கிறது.

இஸ்லாமியர்கள் குறித்து பெரியார் பேசியவற்றை இஸ்லாமியர்களின் அரசியல், இஸ்லாமியர்களின் மதம் என்று இரண்டாகப் பிரித்துக்கொள்ளலாம். இதில் மதத்தைவிட அரசியலைப் பற்றியே பெரியார் அதிகம் பேசியிருக்கிறார் என்றாலும் இந்நூல் முழுக்க முழுக்க மதம் பற்றிய அவரது கருத்துகளின் தொகுப்பாகவே இருக்கிறது. நிற்க, உங்களுக்கு இருக்கும் நேர நெருக்கடி, கவனச் சிதறல் ஏற்படுவதற்கென்றே உருவாக்கப்பட்ட புறச்சூழல் இவற்றுக்கு மத்தியில் இந்நூல் குறித்து இரண்டாயிரம் வார்த்தைகள் எழுதி உங்களைச் சிரமத்திற்கு உள்ளாக்க விரும்பவில்லை. முப்பது பக்கக் கோப்பு இருந்தாலே அதைச் செயற்கை நுண்ணறிவு சாதனத்திடம் கொடுத்து, குறுக்கு விசாரணை செய்த பின் அதைப் படிக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்கும் வழக்கமுடைய நான், 2000 வார்த்தைகள் எழுதுவது நேர்மையாக இருக்காது. ஆகையால் இந்நூல் முழுவதையும் வாசித்து, அனுபவித்து, இன்புற்ற என்னையே ஒரு செயற்கை நுண்ணறிவு சாதனமாகக் கருதி நூலை ஆராய்கிறேன்.

பெரியார் இஸ்லாம் மதத்தை ஆதரித்தாரா?

ஆம்.

நாத்திகவாதி என்று சொல்லிக்கொள்ளும் ஒருவர் ஏன் மதத்தை ஆதரிக்க வேண்டும்?

சமதர்மத்துடனும் சுயமரியாதையுடனும் மக்கள் வாழ வேண்டும் என்பதே தனது கொள்கை என்று பிரகடனப்படுத்திக்கொண்டவர் பெரியார். இக்கொள்கைகளை ஏற்றுக்கொண்டு இந்து மதம் செயல்படுமாயின் இந்து மதத்தை ஆதரிப்பதில் கூட தனக்குத் தயக்கமில்லை என்று கூறுகிறார்.

பெரியார் ஏன் இஸ்லாம் மதத்தை ஆதரித்தார்? மூன்று சுட்டிகளாகப் பதில் தரவும்.

இஸ்லாம் மதத்தை பெரியார் ஆதரித்ததற்கான காரணங்கள் பல இருக்கின்றன என்றாலும் பிரதானமாக மூன்று காரணங்களைச் சொல்லலாம்.

 1. இஸ்லாம் அனைவரையும் சமமாகப் பார்க்கும் மார்க்கமாக இருப்பது. ஒடுக்குவதற்கு மட்டுமே பயன்படுகிற சாதி என்கிற அடையாளத்திலிருந்து விடுதலை கொடுப்பது.
 2. இந்தியாவில் நிலைப்பெற்றிருக்கும் மதங்களில் மிக இளமையான மதம் என்பதால் இயல்பாகவே மற்ற மதத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகள், தவறான கொள்கைகளை விட இஸ்லாத்தில் மிகக் குறைவாக இருப்பது.
 3. பெண்களுக்கு மறுமணம், பெண்களுக்குச் சொத்துரிமை, ஈகை பண்பு, மது தவிர்த்தல் போன்ற கருத்துகள் வெறும் நூல் அளவில் இல்லாமல் நடைமுறையிலும் சாத்தியப்படுவது. பெரியார் முன்வைத்த சுயமரியாதைக் கொள்கையோடு இஸ்லாமியக் கொள்கைகள் ஒத்துப்போவது.

இஸ்லாமியர்கள் தங்களது விழாக்களுக்கு பெரியாரை அழைத்திருப்பார்கள். அதனால் அவர்களது மார்க்கத்தைப் புகழ்ந்து பேசியிருக்கக் கூடும். இதை வைத்து அவர் இஸ்லாமை ஆதரித்தார் என்று சொல்வது சரியா?

பெரியார் இஸ்லாமியர்கள் மாநாடுகளில் பேசினார் என்பது முற்றிலும் உண்மை. ஆனால், இஸ்லாமியர்களுக்குத் தொடர்பே இல்லாத தொழிலாளர் கூட்டம், ஆதிதிராவிடர் மாநாடு போன்ற இடங்களிலும், ‘இஸ்லாம் மதத்திற்கு ஒடுக்கப்பட்டவர்கள் ஏன் மாற வேண்டும்’ என்று பேசியிருக்கிறார். அதுபோக யாரும் அழைத்துவிட்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு உகந்ததைப் பேசுவது பெரியாரின் வாடிக்கை அல்ல. இன்னும் சொல்லப்போனால் இஸ்லாமியர்கள் கூடியிருக்கும் கூட்டத்தில் அவர்கள் மீதான விமர்சனத்தை பெரியார் எந்தத் தயக்கமும் இன்றி வைத்திருக்கிறார்.

அன்பு மார்க்கம் என்பதால் இஸ்லாமை பெரியார் பரிந்துரைத்தார் என்றால் அவர் கிறிஸ்தவத்தை ஏன் பரிந்துரைக்கவில்லை?

பெரியாரின் வார்த்தைகள்:

“இஸ்லாம் மார்க்கத்திலே பாப்பார முஸ்லீம், பற முஸ்லீம், நாயுடு முஸ்லீம், நாடார் முஸ்லீம் என இருக்கின்றதா என்று கேட்கிறேன். இங்குள்ள கிறிஸ்துவ சகோதரர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது, வேண்டுமானால் வெட்கப்படுங்கள் என்று வணக்கமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்”

பெரியார் ஒரு மதத்தைப் பற்றிப் பேசும்போது, அதன் வேதநூலில் என்ன குறிப்பிட்டிருக்கிறது என்பதைவிட நடைமுறையில் எப்படி இருக்கிறது என்பதை வைத்தே தான் பரிந்துரைப்பதாகக் கூறுகிறார் (வேத நூல்களில் இருப்பதை ஆராய்ந்து அதன்படி அம்மதத்தின் யோக்கியதையை நிர்ணயிப்பது பயனளிக்காது என்பதே அவர் கருத்தாக இருக்கிறது). இதுதவிர தனது பல்வேறு உரைகளில் கிறிஸ்தவர்கள் ஜாதியை ஏற்றுக்கொண்டதையும் சுட்டிக்காட்டி கண்டிக்கிறார். அதேபோல், வேத நூலிலேயே இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொண்டிருப்பது இந்து மதம்தான் என்பதையும் அவர் குறிப்பிடத் தவறியதில்லை.

இஸ்லாமில் பெரியாருக்கு முரணான விசயங்கள் எதுவுமில்லையா?

பெரியாருக்கு முரணான பல விசயங்கள் இஸ்லாத்தில் இருக்கின்றன.

 • பாவத்தைப் போக்கவும் மறு உலகில் இன்பத்தை அடையவும் ஒருவர் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதால் ஒரு பயனும் இல்லை என்கிறார் பெரியார். பாவம், மறு உலகம் போன்றவற்றை பெரியார் ஏற்கவில்லை. ஏழைகளுக்குக் கொடுக்காமல் பணத்தைச் சேமித்து வைத்து புனித யாத்திரைக்குச் செல்வதை விமர்சிக்கிறார். சமாதி வழிபாடு போன்ற சடங்குகளையும் பெரியார் எதிர்க்கிறார்.
 • இஸ்லாம் போதிக்கும் அன்பு நெறியிலிருந்து பிறழ்ந்துவிட்டு வெறும் ஐந்து வேளை தொழுகை செய்வது, தாடி வளர்த்துக்கொள்வது, குல்லா போட்டுக்கொள்வது போன்றவற்றை மட்டும் செய்துகொண்டு தன்னை இஸ்லாமியர் என்று சொல்லிக்கொள்பவர்களைக் கடுமையாக எதிர்க்கிறார்.
 • ஒருகட்டத்தில் பெரியார் பின்வருமாறு கூறுகிறார், “இஸ்லாம் சமூகக் கொள்கையை முழுவதும் (நான்) ஒப்புக்கொண்டதாகவோ, அவை எல்லாம் சுயமரியாதைக் கொள்கைகள் என்று சொல்லுவதாகவோ யாருந் தீர்மானித்துவிடாதீர்கள்”

புதிய மதம் ஒன்றைத் தோற்றுவித்து அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்குப் பதில் இருப்பதிலேயே ஓரளவு நல்ல மதம் என்றுதான் இஸ்லாம் மதத்தைப் பரிந்துரைப்பதாக பெரியார் விளக்குகிறார். அதே சமயம் இஸ்லாத்தில் இருக்கும் பழைமைவாத முல்லாக்கள் இஸ்லாத்தைக் காலத்திற்கேற்ப விரிவடையவிடாமல் தடுப்பதாகவும் குற்றம்சாட்டுகிறார்.

பெண் உரிமை பேசும் பெரியார், பெண் அடிமைத்தனம் இருக்கும் இஸ்லாம் மதத்தை ஏன் ஆதரிக்கிறார்?

கோஷா (புர்கா) முறையைக் கடுமையாக எதிர்ப்பவராக பெரியார் இருக்கிறார். அதுகுறித்து இஸ்லாமிய மாநாடுகளில் வெளிப்படையாகப் பேசுகிறார். கோஷா முறையை எதிர்த்துக் குடியரசில் தனித் தலையங்கமே எழுதுகிறார். மேலும், ஓர் உரையில் கீழ்க்கண்ட கருத்தைத் தெரிவிக்கிறார்.

“மலையாளத்தில் 100க்கு 75 மகம்மதிய பெண்களுக்குக் கோஷா இல்லை. தஞ்சை, திருச்சி, திருநெல்வேலி, ராமநாதபுரம் இந்தப் பக்கங்களில் காடுகளில் (கோஷா இல்லாமல்) வேலை செய்வதைப் பார்க்கிறேன். தனக்குத் தெரிந்தவரை கோஷா ஓர் அந்தஸ்தாகக் கருதப்படுகின்றதே தவிர முழுதும் மதக் கட்டளையாகக் கருதுவதாகச் சொல்ல முடியாது. இப்பொழுது அந்த மதத்தில் (இஸ்லாமில்) சேர்ந்த பெண்கள் கோஷாயில்லாவிட்டால் தள்ளிவிட மாட்டார்கள்.

விதவாவிவாகம், கல்யாண ரத்து, பெண்கள் படிப்பு, சொத்துரிமை ஆகியவைகள் பெண்களுக்கு அந்த மதத்தில் இருப்பதால் கோஷா ஒரு சமயம் இருந்தாலும் அந்தக் கஷ்டத்தை விட பலமடங்கு மேல்பட்ட அதிக லாபம் இருக்கிறது. அன்றியும், துருக்கியைப் போலும் ஆப்கானிஸ்தானத்தைப் போலும் இங்கும் சமீபத்தில் சீர்திருத்தம் ஏற்படலாம் என்கிற நம்பிக்கை இருக்கின்றது.”

அதாவது, புர்கா முறையை எதிர்க்கும் பெரியார் பெண்களுக்குக் கிடைக்கும் மற்ற நன்மைகளுக்காகத் தற்சமயம் சகித்துக்கொள்ளலாம் என்றும் விரைவில் அந்த நிலை மாறும் என்றும் கூறுகிறார். துருக்கி புரட்சி வீரரான கமால் பாட்சா, ஆப்கானிஸ்தான் புரட்சி வீரரான அமானுல்லா போல இஸ்லாமிய இளைஞர்கள் முன்வந்து பெண் விடுதலையை முன்னெடுக்க வேண்டும் என்று தொடர்ந்து அழைக்கிறார்.

அப்படி கோஷா அவசியம் என்று நினைக்கும் ஆண்கள் “ஓராண்டுக்காவது முகமூடி போட்ட வீட்டிற்குள் இருந்து பாருங்கள்” என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்கிறார்.

இந்தக் கோஷா விவகாரம் பெண் அடிமைத்தனம் சம்மந்தப்பட்டதே அன்றி மத சம்மந்தப்பட்டதல்ல என்று நம்பும் பெரியார், ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான் மாதிரியான நாடுகளில் பெண்கள் கோஷா இல்லாமலேயே இஸ்லாமியராக வாழ முடிவதை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுகிறார்.

Illustration : Elif Duman

இஸ்லாமியர்கள் பெரியாரின் விமர்சனத்தை, அறிவுரையை ஏற்றுக்கொண்டார்களா?

முழுவதும் ஏற்றுக்கொண்டார்கள் என்று கூற முடியாது என்றாலும், சில இடங்களில் இஸ்லாமியர்கள் தங்களை மாற்றிக்கொண்டனர். மதம் மாறிய பின்னும் நைவேத்தியம் செய்வது, இந்து திருவிழா போல அல்லாசாமி திருவிழா கொண்டாடுவது போன்றவற்றைச் சில இஸ்லாமியர்கள் செய்துவந்திருக்கின்றனர். இது தவறு என்று பெரியார் கூறியதையடுத்து அவர்கள் கைவிட்டிருக்கின்றனர். இதைத் தனது உரையில் சுட்டிக்காட்டி பெரியார் மகிழ்கிறார்.

ஆனால், இது குரானும் ஏற்காத விஷயம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதே சமயம், சேலம் நகர சபையின் சார்பாக முஸ்லிம் பெண்களுக்கு, ஆசிரியைகளுக்கு என்று பிரத்யேகமாக விடப்பட்டிருந்த கோஷா வண்டிகளை (திரை மூடப்பட்ட வண்டிகள்) நிறுத்திவிட்டார்கள் என்று சுட்டிக்காட்டிப் பாராட்டுகிறார்.

இந்துக்கள் அனைவரையும் இஸ்லாம் மதத்திற்கு மாறச் சொன்னாரா பெரியார்?

இஸ்லாம் மதம் யாருக்கெல்லாம் தேவை, யாருக்கெல்லாம் தேவையற்றது என்று ஒரு பட்டியல் இடுகிறார் பெரியார்.

இனி அவர் வார்த்தைகளில்,

“சுயமரியாதைக்காரருக்குக் (இஸ்லாம் மதம்) கூடாததாய் இருக்கலாம். மற்றும் பெண்ணுரிமை மாத்திரம் பேணுவோருக்கு மகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம். மூடநம்பிக்கையை அனுஷ்டிக்காதவர்களுக்கும் முகமத்திய மதம் வேண்டாததாய் இருக்கலாம், மதவேஷமும் பயனற்ற சடங்கும் வேண்டாதவர்களுக்கு முகமத்திய மதம் வேண்டாததாய் இருக்கலாம். நாஸ்திகருக்கும் பகுத்தறிவுவாதிகளுக்கும் முகமத்திய மதம் வேண்டாததாய் இருக்கலாம். சமதர்மவாதிகளுக்கும், பொது உடமைக்காரர்களுக்கும் மகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்.

ஆனால் தீயர்கள், பறையர்கள், புலையர்கள், நாயாடிகள் என்று அழைக்கப்படுகின்ற – ஒதுக்கப்படுகின்ற – தாழ்த்தப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு, நாயிலும், மலத்திலும் புழுத்த விஷக் கிருமிகளிலும் கேவலமாக மதிக்கப்பட்டு வருகிற மக்களிடம் – தங்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிந்தால் போதும் என்று கருதிக் கொண்டு இருக்கும் மக்களிடம் நமக்கு வேலை உண்டா? இல்லையா என்று கேட்கிறோம்”

இங்கே வேலை என்பது இஸ்லாமிற்கு மாறுங்கள் என்று எடுத்துரைப்பது.

பெரியார் என்றாலே Thug lifeதானே? இந்நூலில் ஏதேனும் Thug life Content இருக்கிறதா?

நிறைய இருக்கிறது. இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தது இதுதான். இஸ்லாமிய மன்னர்கள் இந்து கோயில்களை இடித்து, இங்கிருக்கும் அப்பாவி மக்களை இஸ்லாமியர்களாக மாற்றிவிட்டார்கள் என்றொரு குற்றச்சாட்டு பெரியார் முன் வைக்கப்படுகிறது. இதற்கு பெரியார் அளித்த பதிலின் சாரம் இதுதான். “இது உண்மையா பொய்யா தெரியல. ஆனா, உண்மையா இருந்து அந்த இஸ்லாமிய ஆட்சி இப்பவரைக்கும் நடந்திருந்தா தீண்டத்தகாதவங்க, ஒடுக்கப்பட்டவங்கனு யாரும் இருந்திருக்க மாட்டாங்கங்கிறது மட்டும் உறுதி”

பெரியார் ஏன் அம்பேத்கர் வழியில் புத்த மதத்தைத் தழுவ வேண்டும் என்று சொல்லவில்லை?

இதற்கான விடை நேரடியாகப் புத்தகத்தில் இல்லை என்றாலும் முன்னுரையில் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

பெரியார் இஸ்லாம் மதத்தை ஓர் ஆயுதமாகவே பயன்படுத்தினார். ஆளும் இந்து வர்க்கத்தை மிரட்ட உலகம் முழுக்கப் பரவியுள்ள, அதே சமயம் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் மதமாக இருக்கும் இஸ்லாம் மட்டுமே சரியானதாக இருக்கும் என்று கருதினார். ஆகையால்தான் இஸ்லாம் மதத்தைவிட பௌத்த மதமே தனது கொள்கைக்கு நெருக்கமாகவும் முன்னோடியாகவும் அவர் கருதியபோதும் இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்தார். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் பவுத்தத்திற்குள் சாதி புகுந்து பற பவுத்தன், சக்கிலிய பௌத்தன் என்று பிரிவு ஏற்பட்டுவிட்டதும் ஒரு காரணம்.

இஸ்லாம் பற்றிய தன் உரைகளில் அம்பேத்கர் குறித்து எங்கேனும் பெரியார் பேசியிருக்கிறாரா?

பேசியிருக்கிறார்.

அம்பேத்கரைத் தாக்கியா?

அம்பேத்கரை வழிமொழிந்துதான் சில இடங்களில் பேசியிருக்கிறார். 1925இலேயே மதம் மாறச் சொன்னேன். ஆனால், தாமதமாக மதம் மாறிய அவர் வென்றுவிட்டார் என்று சும்மா வருத்தப்படுவது போல் சொல்லிவிட்டு, இந்து மதத்தில் இருக்கும் இழிவுகளைத்தான் தாக்கியிருக்கிறார்.

காந்தி, காங்கிரஸுக்கு எங்கேனும் அடி விழுந்திருக்கிறதா?

விழுந்திருக்கிறது.

சமூக வலைதளங்களில் பகிர்வதற்கு நூலிலிருந்து சில வரிகளைச் சுட்டிக்காட்டவும்

 • மதத்துக்கும், நடத்தைக்கும் சம்பந்தம் இல்லை என்று கருதப்படுமானால் திராவிடர்கள் எல்லோரும் இஸ்லாமியர்களே ஆவார்கள். இஸ்லாமியர்கள் எல்லோரும் திராவிடர்களே ஆவார்கள்.
 • நாம் இந்த நாட்டை இந்து நாடாக – இந்துஸ்தானமாக ஆக்குவதை விடத் திராவிடஸ்தானாக அதாவது, இந்தப் பெயரைப் பார்ப்பனர் சகிக்கவில்லையானால் திராவிட நாடு கொள்கையையே கொண்ட பாக்கிஸ்தான் என்று வேறு பெயராக மாற்றிக்கொள்வதில் தப்பு என்ன?
 • திராவிட நாட்டில் நாம் (எல்லாம்) இஸ்லாம், ஆனால் நம் இஷ்டப்படிதான் இஸ்லாம் இருக்குமே தவிர யாரோ சாயபோ முல்லாவோ சொல்லுகிறபடி இஸ்லாம் இருக்காது. எனக்கு 10 நாட்டு முஸ்லீம்கள் அனுசரிக்கும் இஸ்லாம் தெரியும்.
 • சிலர் மகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குகின்றது என்று எனக்கு எழுதியிருக்கிறார்கள். அது வாஸ்தவமானால் தீண்டப்படாதவர்களுக்கு அவர்களது தீண்டாமை ஒழிய மகமதிய மதத்தைச் சிபாரிசு செய்வதற்கு அதுவே ஒரு நல்ல காரணம் என்று கருதுகிறேன்.
 • எந்த மதக் கொள்கைகளையும் ஒரு கடவுள் உண்டாக்கினார் என்றோ, அது எப்போதைக்கும் பொருத்தமானதென்றோ, அவற்றில் ஒரு சிறிது கூட கால தேச வர்த்தமானத்தை அனுசரித்து மாற்றக்கூடாது என்றோ நான் ஒருபோதும் ஒப்புக் கொள்ளுவதுமில்லை

இந்தக் கேள்வி பதிலே போதாதா? இத்தனைக்கும் மேல் நான் ஏன் நூலை வாசிக்கவேண்டும்?

செயற்கை நுண்ணறிவால் எப்போதும் முழுமையான அர்த்தத்தைக் கடத்திவிட முடியாது என்பது உண்மை என்று உங்களுக்கே தெரியும். இது மனிதனுக்கும் பொருந்தும்.

மேலே சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் அனைத்துமே எனது வாசிப்பனுபவத்திற்கும் எனது புரிதலுக்கும் உட்பட்டே சொல்லப்பட்டிருக்கிறது. வேண்டுமென்றே சில சர்ச்சையான விசயங்களையும், சில காத்திரமான விசயங்களையும் குறிப்பிடாமல் கடந்து போயிருக்கிறேன். அதை நீங்கள் வாசிக்கும்போது உணரமுடியும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, பெரியாரே சொல்வது போல், யாரும் சொல்கிறார்கள் என்று நம்பாமல் நீங்களே வாசித்து உணருங்கள்.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!