நகரத்தின் திரியில் நெருப்பினை வைத்துவிட்டு
ஓடி ஒளிந்துகொண்டார்
எப்போது வேண்டுமானாலும் சுக்குநூறாகலாம்
பொறுத்துப் பார்த்தார்
எவ்வளவு நேரமாகியும் வெடிக்கவில்லை
புகையும் வரவில்லை
பத்தியை ஊதிக்கொண்டே குனிந்து பார்த்தார்
குத்த வைத்துக் கூர்ந்தார்
சம்மனமிட்டு வெறித்தார்
அவருக்குப் பார்ப்பது மிகவும் பிடித்துப்போக
பார்த்துக்கொண்டே இருந்தார்
பார்த்துக்கொண்டே இருந்தார்
பார்த்துக்கொண்டே இருந்தார்
l
தலையிலிருந்து குருதி கொட்ட
உதவியென்று ஓடிவந்தார் ஒருவர்
ஆபத்துகளில் உதவக்கூடியவன்தான் நான்
எங்கேயும் போகாமல் இங்கேயே இருங்கள்
அலுவலகத்திற்கு மட்டும் போய்விட்டு
மாலையில் வந்து காப்பாற்றுகிறேன்
நிச்சயமாகக் காப்பாற்றுவேன் எங்கும் போய்விடாதீர்கள்.
l
அப்பாவின்
பெயரையொத்த ஒலியைக் கீச்சிடும்
குருவியை அடிக்கடிப் பார்ப்பேன்
என்னால் முடியாத ஒன்றை
அசால்ட்டாகச் செய்கிறது
மிகவும் பிடித்துப்போன அதை
ஒருநாள் பொறிவைத்துப் பிடித்தேன்
வீட்டிற்குள் யாரைவிடவும்
அமைதியாக இருக்கும் ஜீவனை
வாழ்நாளில்
அப்போதுதான் பார்க்கிறேன்