சூழலியலாளர்களை தலித்துகள் ஏன் வெறுக்கிறார்கள்?

கெய்ல் ஓம்வெத்

(காலப்பொருத்தம் கருதியும் இதழியல் துறையில் வெளிப்பட்ட மாற்றுக் குரல்களை ஆவணப்படுத்தும் தேவை கருதியும் ஏற்கெனவே சிற்றிதழ்களில் வெளியான படைப்புகளை அவ்வப்போது மறுபிரசுரம் செய்துவருகிறோம். அந்த வகையில் நிறப்பிரிகை (நவம்பர் 1997) இதழில் வெளியான கட்டுரை உங்கள் வாசிப்புக்கு…)

லித்துகள், பழங்குடியினர் முதலானோர் சூழலியத்தை வெறுப்பதென்பது பலரும் அறிந்த, ஆனால் அதிகம் விவாதிக்கப்படாத ஓர் உண்மை. பெரிய தன்னார்வ நிறுவன மாநாடொன்றில் பங்குபெற்ற பல தலித் செயல்வீரர்கள் “அவர்களது நகரங்களுக்குச் சென்று நாங்கள் அவற்றை மாசுபடுத்துவோம்” என அழுத்தந் திருத்தமாக உரைத்ததைக் கண்டபோது எனக்கு இந்த உண்மை முதன்முதலாக உறைத்தது.

இதேபோன்ற உணர்வுகளைப் பழங்குடியினரும் வெளிப்படுத்தியுள்ளனர். “காடுகளை நீங்கள் அவ்வளவு நேசிக்கிறீர்கள் என்றால் உங்களது நகரத்து வீடுகளை எங்களுக்குக் கொடுத்துவிட்டு காடுகளுக்கு வந்து வசியுங்களேன்!”

உண்மையில் இந்தியாவின் இரு ஆற்றல் வாய்ந்த சமூக இயக்கங்களாகிய சாதி எதிர்ப்பு இயக்கம், சுற்றுச்சூழல் தூய்மை இயக்கம் இரண்டிற்குமிடையேயான இத்தகைய அந்நியமான உறவு தீவிரமாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். சென்ற ஆண்டு ஒரிசாவில் தலித் – பழங்குடியினரை மையப்படுத்திக் கொஞ்சம் குழப்பமான முறையில் இயங்குகிற ‘நிஸ்வாஸ்’ என்னும் தன்னார்வ அமைப்பில் பணியாற்றியபோது இதனை நான் அதிகமாக உணர்ந்தேன். புவனேஸ்வரத்திற்கு வந்த கையோடு டாடா ஆதரவில் நிறுவப்பட்ட இறால் பண்ணைகளுக்கு எதிராக இயக்கங்கள் நடைபெறும் சில்கா ஏரிப் பகுதிக்குச் செல்ல விரும்பினேன். நிஸ்வாஸ் வட்டத்தைச் சேர்ந்தவர்கள் இதனை எதிர்க்காதபோதும் அதிக ஆர்வம் காட்டாமலிருந்த நிலையை நான் எதிர்பார்க்கவில்லை. இருந்தபோதிலும் அந்த நிறுவனத்தின் வாகனமொன்றில் இரண்டு உள்ளூர் தலித்துகளை வழிகாட்டியாக அழைத்துக்கொண்டு ஒருநாள் முழுவதும் மூன்று மீனவப் பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டோம்.

டாடா நிறுவனத்திற்கு எதிரான அவர்களது போராட்ட அனுபவங்களை மட்டுமின்றி எங்கே வசிப்பது, எங்கே மீன் பிடிப்பது எனக் கட்டுப்பாடுகள் விதிக்கும் அரசுடனான அவர்களது மோதல் அனுபவங்களையும் அம்மக்கள் சொல்லத் தொடங்கினர். தங்களது மீன்பிடி உரிமைகளை ‘வெளியாட்கள்’ கைப்பற்றுவது குறித்து அவர்கள் புகார் செய்தனர். டாடா போன்ற கம்பெனிகளும் ஆக்கிரமிப்பாளர்களும் மட்டுமின்றி அரசு கூட்டுறவு நிறவனங்களும் தங்கள் வாழ்க்கையில் குறுக்கிடாதிருந்த முந்தைய காலத்தில் தங்களுக்கிருந்த உரிமைகளையும் விடுதலையையும் மீட்பது பற்றிப் பேசினார்கள். வங்கத்தைப் போலவே ஒரிசாவிலும் மீனவர்கள் என்போர் அட்டவணைச் சாதிகளில் (எஸ்.சி) ஒரு பிரிவாகக் கருதப்படுகின்றனர். எனது வங்க மீனவ நண்பர்கள் தமது போராட்டத்தை ‘தலித் போராட்டம்’ என்றுதான் குறிப்பிடுவார்கள். சில்காவிலும் கூட எங்களிடம் பேசிக்கொண்டிருந்த ஒருவர் தம்மைத் ‘தலித்’ என்றே குறிப்பிட்டுக்கொண்டார்.

‘நிஸ்வாஸ்’ தலைவர் ஒருவரோடு பின்பு பேசிக்கொண்டிருந்தபோதுதான் இந்தத் தலித் அடையாளம் ஒரு பிரச்சினையாக்கப்பட்டது. “இவர்கள் தங்களை எஸ்.சி பட்டியலில் சமீபமாகத்தான் இணைத்துக்கொண்டார்கள். அவர்களைப் பற்றி ரொம்பக் கவலைப்படாதீர்கள். மீனவர்கள் இங்கே வலிமையான அமைப்பாகத் திரண்டிருக்கிறார்கள். அவர்களுக்காகப் பேசுவதற்கும் இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள்.”

இதனைப் புரிந்துகொள்வது கஷ்டமில்லை. ஒரிசா கடற்கரையில் வாழும் முக்கிய மீனவச் சாதியாகிய ‘கியூட்டா’கள் சமீபமாகத்தான் தம்மை அட்டவணைச் சாதிப் பட்டியலில் சேர்த்துக்கொண்டுள்ளனர். எந்தக் காலத்திலும் அவர்கள் தீண்டத்தகாதவர்களாகவோ தீட்டுக்குரியவர்களாகவோ கருதப்பட்டதில்லை. இந்தப் பகுதியில் இருக்கிற முன்னாள் – தீண்டத்தகாத சாதியினரின் பெயர் ‘ஹாதி’கள். ஒரு ஹாதி பட்டதாரி என்னிடம் விளக்கியதுபோல ஹாதிகள் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டதில்லை. ‘சட்ட’ ரீதியான தடை ஏதும் இல்லாவிட்டாலும் சமூக ரீதியான தடை அவர்கள் மீது செயல்படுத்தப்பட்டது. அதில் அவர்கள் ‘திறமை’யற்றவர்களாகக் கருதப்பட்டார்கள்!

ஹாதிகள் தீட்டுக்குரிய வேலைகளைச் செய்யும் கிராமப் பணியாளர்கள். இந்தப் பிரச்சினையில் அவர்களின் பார்வை வேறுவிதமாக இருந்தது. லாபகரமாக ஆகிக்கொண்டிருக்கும் மீன்பிடித் தொழிலின் பயன்களை ‘வெளியாட்கள்’ கைப்பற்றிவிடுகிறார்கள் என்பது கியூட்டாகளின் குற்றச்சாட்டு. கியூட்டாகள் அனுபவித்துவரும் பலன்களிலிருந்து தாங்கள் விலக்கி வைக்கப்படுவதாக ஹாதிகள் திருப்பிக் குற்றம் சாட்டுகின்றனர். ‘நவீன’ மீன்பிடி முறைகளுக்கு எதிராக ‘மரபுவழி மீன்பிடி முறைகள்’ நீடிக்க வேண்டும் எனக் கோருகிற சுற்றுச்சூழலியலாளர்கள் யாரும், எனக்குத் தெரிந்தவரை, இத்தகைய பிரச்சினைகளை இதுவரை விவாதத்திற்கு எடுத்துக்கொண்டதில்லை. இதுபோன்ற சாதியை அடிப்படையாகக் கொண்ட மரபு வழிப்பட்ட கைவினைத் தொழில்நுட்பங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன என்பது உண்மைதான். ஆனால், இத்தகைய மரபுவழிப்பட்ட தொழில்நுட்பங்களுடன் இணைந்துள்ள சாதி ஒதுக்கங்களைக் கண்டுகொள்ளாமல் இதனைச் செய்ய முடியுமா?

மரபுவழிப்பட்ட உற்பத்தியாளர்கள் இத்தகைய உற்பத்திகளில் தனித்துவ உரிமை பெற வேண்டும் அல்லது முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது அப்பாவித்தனமான கோரிக்கை அல்ல. ‘விவசாயம் சாராத சாதிகளுக்கு’ நிலம் மாற்றப்படக் கூடாது என்கிற பிரிட்டிஷ் சட்டத்தின்படி பஞ்சாப்பிலுள்ள தலித் மக்கள் நில உரிமை பெறுவது தடுக்கப்பட்டிருந்தது நினைவிற்குரியது.

illustration : Audrey Helen Weber

மரபுவழிப்பட்ட நீர் சேமிப்பு முறை பற்றி இன்று அதிகம் பேசப்படுகிறது. இதற்கொரு எடுத்துக்காட்டு மராட்டிய மாநிலத்தின் ‘பாட்’ முறை. இதுகுறித்து சுற்றுச்சூழலியலாளர்கள் சொல்வது: “சூழலியல் ரீதியாகப் பாதுகாப்பான முறை. எல்லாச் சாகுபடியாளர்களும் சமமான முறையில் நீரைப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பளிப்பது.” இதில் சொல்லப்படாத விசயம் என்னவெனில், ‘சாகுபடியாளர்கள்’ மட்டுமே நீரைப் பயன்படுத்த முடியும் என்பதுதான். இதர பிற்படுத்தப்பட்ட கைவினைச் சாதிகளைச் சேர்ந்தவர்களும் தீண்டத்தகாதவர்களும் சமூக ரீதியாகச் சாகுபடியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர்கள் என்கிற அடிப்படையில் நீரைப் பயன்படுத்தும் உரிமையிலிருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டனர். சமமான நீர் உரிமைகள், உழுபவனுக்கு நிலம் என்பன போன்ற பிரச்சினைகளை எழுப்புவதென்பது மரபை மட்டுமல்ல நிலவும் முதலாளிய ஆதிக்க முறையையும் ஒருசேர கேள்விக்குள்ளாக்குவதாகும். ஆனால், பெரும்பான்மையான சுற்றுச்சூழல் விவரணங்களில் இவை குறித்து மேற்கொள்ளப்படும் மவுனம் என்பது கவலைக்குரிய ஒன்று.

வெள்ளையருக்கு முந்தைய இந்திய கிராமங்கள் பற்றிய தலித்திய விவரணங்களையும், சுற்றுச்சூழலிய விவரணங்களையும் வாசிப்புக்குள்ளாக்கும்போது முற்றிலும் வேறுபட்ட இரு உலகங்கள் நமக்கு வெளிப்படுகின்றன. ஒன்று இயற்கையோடு ஒத்திசைந்த உலகம்; வெவ்வேறு சிறப்புத் தொழில்திறன் வாய்ந்த சாதிகள் இணைந்து உருவான சூழலியல் ரீதியான பாதுகாப்பான பெட்டகங்கள் (மாதவ் காட்கில், ராமச்சந்திர குகா போன்றவர்கள் இப்படித்தான் சொல்கிறார்கள்); ஒன்றோடொன்று போட்டியற்ற (அதாவது அமைதியான) உறவு கொண்டுள்ள சாதிகளின் சங்கமம், கிட்டத்தட்ட சுயேச்சையான குட்டிக் குடியரசுகள்! இன்னொரு காட்சி வேறுபட்டது. இந்த உலகம் ஆதிக்கங்களும் கொடுமைகளும் நிரம்பியது; இதில் குறிப்படத்தக்க அளவிலான கிராமத்து மக்களுக்கு மனித சமூகத்தில் உறுப்பினராகும் உரிமையே மறுக்கப்பட்டிருந்தது; கிட்டத்தட்ட இவர்கள் அனைவரும் மிகவும் குறுக்கப்பட்ட சிதறுண்ட வாழ்க்கைக்கு நிர்பந்திக்கப்பட்டிருந்தனர். மனித மனங்களின் சிறைக்கூடம் பற்றிய மார்க்ஸின் கருத்துகளோடு நெருங்கிவரும் காட்சி இது. காந்தி ‘ராமராஜ்யம்’ பற்றிப் பேசியபோதுதான் அம்பேத்கர் ‘மலக்குழிகள்’ பற்றிப் பேசினார். இந்த முரண் ஒப்பீடு ஐம்பதாண்டுகளுக்கு முன்பு எத்தகைய அதிர்ச்சியை அளித்ததோ அதே அதிர்ச்சி இன்றும் தொடர்கிறது.

இத்தகைய பிரச்சினைகள் பேசப்படாததென்பது வெறும் கவனக் குறைவின் விளைவுதானா? ஒரிசாவில் சுற்றுச்சூழல் பற்றி எழுதப்படுகிற கிட்டத்தட்ட அனைத்து எழுத்துகளுமே மேற்சாதியினருடையதுதான். ஒரு பார்சியை மணந்துகொண்டதற்காக இந்திரா காந்தியையே அனுமதிக்காத பூரி ஜகன்னாதர் கோயில் குருக்கள் ஆகிற தகுதி பெற்ற பார்ப்பன சாதியில் பிறந்த இளைஞர்தான் சில்கா இயக்கத்தின் முன்னாள் மாணவர் தலைவர்! இத்தகைய சாதியில் பிறப்பதென்பது மட்டுமே ஓர் இயக்கத்தில் பங்குபெறுவதற்கும் தலைமை வகிப்பதற்குமான தகுதியை மறுத்துவிடாது என்பது உண்மைதானெனினும், புலே முதல் அம்பேத்கர் வரை சாதி எதிர்ப்புப் போராளிகள் அனைவரும் பார்ப்பனர்கள் இத்தகைய இயக்கங்களில் பங்குபெறுவது குறித்து ஒரு நிபந்தனையை விதித்திருக்கின்றனர். சாதியை நியாயப்படுத்துகிற புனித வேதங்களையும் புராணங்களையும் தூக்கி எறிவதுதான் அது. ஆனால், இதைத்தான் யாரும் கடைபிடித்ததில்லை. மாறாக ஒரிசாவிலும் பிற இடங்களிலுமுள்ள சுற்றுச்சூழல் இயக்கங்களின் பெரும்பான்மைத் தலைமை வேதங்களைத்தான் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

வரலாற்று ரீதியாக வலிமையான சாதி எதிர்ப்புப் பாரம்பரியம் உள்ளதும், சமீப காலத்தில் ‘பார்ப்பனியம்’ பற்றி இடது வட்டங்களில் அதிகம் விவாதிக்கப்படும் சூழல் உள்ளதுமான மராட்டியத்தில் நிலைமை எப்படி? இங்கே மேற்சாதிகளைச் சேர்ந்த சுற்றுச்சூழலியலாளர்கள் இதுகுறித்துக் கூடுதல் புரிதலுடையவர்களாக இருப்பார்கள் என்றுதானே எதிர்பார்க்கிறீர்கள். துரதிர்ஷ்டவசமாக நிலைமை அதுவல்ல. ‘நர்மதா பச்சோ அந்தோல’னைச் சேர்ந்த சஞ்சய் பங்கவியும் வேறு சில பிரதிநிதிகளும் சமீபத்தில் புனே பல்கலைக்கழகம் நடத்திய இரு கருத்தரங்குகளில் பங்குபெற்றனர். ஒன்று ‘புதிய சமூக இயக்கங்கள்’ பற்றிய கருத்தரங்கு. மற்றது ‘அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள்’ பற்றியது. அவர்களின் இதழான ‘அந்தோலன்’, இரண்டாவது கருத்தரங்கு பற்றி மட்டுமே செய்தி வெளியிட்டிருந்தது. தலித்துகள் மத்தியில் சுயவிமர்சனம் வளர்வது பற்றிப் பாராட்டுத் தெரிவித்திருந்த அக்கட்டுரை, ‘ஜோதிபா புலே’யின் பெயரைப் பார்ப்பனிய நோக்குடன் திரித்து எழுத்துக் கூட்டியிருந்தது. ஆனால், முந்தைய கருத்தரங்கில் பழங்குடி இயக்கத் தலைவர் வகாடு சோனாவானே, அந்தோலன் இயக்கத்தைப் பற்றி முன்வைத்த வெளிப்படையான விமர்சனங்கள் குறித்து அக்கட்டுரை மூச்சு விடவில்லை.

வகாடுவின் கேள்வி இதுதான்: “அந்தோலன் இயக்கத் தலைமையில் பழங்குடியினர் யாரும் இல்லாததேன்?” சங்கவி கீழ்க்கண்டவாறு பதிலளித்திருக்கலாம் – “ஆம். இது ஒரு நியாயமான கேள்விதான். இது விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றுதான்.” ஆனால், சங்கவி அதைச் செய்யவில்லை. மாறாக அதை முற்றிலுமாகப் புறக்கணித்து, “கிராமப்புற மட்டங்களில் எங்கள் தலைவர்களெல்லாம் பழங்குடியினர்தான்” என்று அலட்சியப்படுத்தினார்.

சாதி எதிர்ப்பு இயக்கங்கள் இன்று எழுப்பும் முக்கியப் பிரச்சினைகள் தலைமை மற்றும் அடையாளம் பற்றியவையாக உள்ளன. இந்த இரு பிரச்சினைகளையும் எழுப்புகிற தலைவர்களில் காஞ்சா அய்லய்யா ஒருவர். ‘நான் ஏன் இந்துவல்ல’ என்கிற தனது சமீபத்திய நூலில் தலித் பகுஜன் சமூக – கலாச்சார – மத நடைமுறைகள் முற்றிலும் வேறுபட்டவை என்கிறார். உண்மையில் மராட்டியத்தில் மக்கள் மத்தியில் பிரபலமான தேவதைகள் விதோபா, கந்தோபா, பிரோபா, ஜோதிபா போன்றவைதான்.

புலே தனது பெயரை ‘ஜோதிபா’ என்கிற கருப்பு விவசாயத் தேவதையிடமிருந்துதான் எடுத்துக்கொண்டார்; ‘ஜோதி’ (ஒளி) என்பதிலிருந்து உருவாக்கவில்லை. JOTIBA என்கிற பெயரை JYOTI BA என எழுத்துக் கூட்டுவது பார்ப்பனியத் திரிபு ஆகும். புலேயின் பெயரை எழுத்துக் கூட்டுவது மராத்தி மொழியில் பார்ப்பன ஙீ பார்ப்பன எதிர்ப்புப் பார்வைகளின் எல்லைக் கோட்டை வெளிப்படுத்துவதுதான். இதனைத் தவறாகப் புரிந்துகொள்வது அடிநிலை மக்களின் பெயர்கள் பற்றிய அறியாமையின் விளைவு. இயக்கத் தலைமை என்பது முற்றிலும் மேற்சாதியால் நிரப்பப்பட்டிருப்பதைக் கண்டுகொள்ளாமல் கிராமத் தலைவர்கள் பழங்குடியினர்தான் (பழங்குடி கிராமங்களில் வேறு யார் கிடைப்பார்கள்!) எனப் பதிலளிப்பது பழங்குடி இயக்கத்தவர் எழுப்பும் பிரச்சினைகளையே புரிந்துகொள்ளாததன் விளைவு. தலித் இயக்கங்களுக்கு மட்டும் சுயவிமர்சனம் தேவை என நினைப்பது போலித்தனமான தலித் ஆதரவை வெளிப்படுத்துவது மட்டுமல்ல, ஒருங்கிணைந்த மக்கள் இயக்கம் தோன்றுவதற்கு இத்தகைய சிந்தனைகள் பெரும் தடையாகவும் விளங்கும். இதனால்தான் தலித்துகள் சூழலியலாளர்களை வெறுக்கின்றனர்.

தமிழில்: நிறப்பிரிகை

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!