எனக்கொரு
துப்பாக்கி வேண்டும்
அம்மாவின் மோதிரத்தை விற்றேன்
என் பையை
அடகுவைத்தேன்
துப்பாக்கி வாங்க
நான் கற்ற மொழி
வாசித்த புத்தகங்கள்
மனனமிட்டக் கவிதைகள்
ஒரு திர்ஹம்கூட பெறவில்லை
துப்பாக்கி வாங்க
இப்போது என்னிடம்
ஒரு துப்பாக்கி இருக்கிறது
என்னையும் உங்களுடன்
அழைத்துச் செல்லுங்கள்
ஃபலஸ்தீனுக்கு
பெண்ணின் முகத்தைப் போன்ற
வாடிய மலைகள்
பச்சைக் குபாக்கள்
எழுச்சிக் கற்கள்
இவற்றிடம்
என்னை அழைத்துச் செல்லுங்கள்
எனது பூமியை
எனது அடையாளத்தை
எனது வீட்டை
முள்வேலிகளால் சூழப்பட்ட
எனது நாட்டை
இருபது ஆண்டுகளாகத்
தேடிக்கொண்டிருக்கிறேன்
எனது குழந்தைப் பருவத்தை
பால்யகால நண்பர்களை
புத்தகங்களை
புகைப்படங்களை
வெதுவெதுப்பான பகுதிகளை
பூந்தொட்டிகளை
இருபது ஆண்டுகளாகத்
தேடிக்கொண்டிருக்கிறேன்
இப்போது என்னிடம்
ஒரு துப்பாக்கி இருக்கிறது
மனிதர்களே!
மற்றவர்களைப் போல
நான் வாழ வேண்டும்
அல்லது சாக வேண்டும்
ஸைத்தூன் மரத்தை நட வேண்டும்
அல்லது ஆரஞ்சுத் தோட்டத்தை
உருவாக்க வேண்டும்
அல்லது வாசனை மலர்களை
வளர்க்க வேண்டும்
ஃபலஸ்தீன் மண்ணில்
எனது பிரச்சினையைப் பற்றி
யாராவது விசாரித்தால்
துப்பாக்கிதான்
எனது பிரச்சினை என்று
அவர்களிடம் கூறுங்கள்
இப்போது என்னிடம்
ஒரு துப்பாக்கி இருக்கிறது
புரட்சிக்காரர்கள் பட்டியலில்
என் பெயர் இடம்பெற்றுவிட்டது
இனி
புழுதியும் முட்களுமே என் படுக்கை
மரணமே என் ஆடை
விதி நினைத்தாலும்
என்னைத் தடுத்து நிறுத்த முடியாது
நான் விதியையே மாற்றப்போகிறேன்
பைத்துல் முகத்தஸ்
ஹெப்ரான்
பிசான்
ஜோர்டன்
பெத்லகேம்
நகரங்களில்
விடுதலைக்காகப் போராடும்
போராளிகளே!
முன்னேறிச் செல்லுங்கள்
அமைதி
நீதி
எல்லாம்
வெறும் நாடகம்
இனி
ஃபலஸ்தீனுக்கு
ஒரேயொரு பாதைதான் உண்டு
துப்பாக்கிக்குழல் வழியாகச்
செல்லும் பாதை.