ஓட்டல்கள்
தேவதைகள் தங்கியிருக்கும் அந்த ஜீரோ ஸ்டார் ஓட்டல்களைப் பற்றி
நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்
கடினமான நாளுக்குப் பிறகு வாடிக்கையாளர்களைப் திருப்திப்படுத்த முயற்சிக்கும்
பயணித்துக்கொண்டேயிருக்கும் விற்பனையாளர்களுடனும் கிராமத்து வணிகர்களுடனும்
ஒரே கட்டடத்தைப் பகிர்ந்துகொள்கிறார்கள் தேவதைகள்.
அவர்களோ
மதுவிடுதிகளின் ஓரிரவு உறவுக்காக வெளியே செல்ல
சவரத்துக்குப் பிறகான லாவண்டர் திரவத்தைத் தெளித்துவிட்டு
தலைமுடியில் மினுங்கும் ஜெல்லை தேய்த்துவிட்டு
முதலில் தங்கள் மனைவிகளை அழைக்கிறார்கள்
வியாபாரம் நன்றாக இருந்ததாகவும்
விரைவில் வீட்டிற்கு வந்துவிடுவதாகவும் சொல்கிறார்கள்.
ஆனால், தேவதைகளோ வேறு காரணங்களுக்காக
நகரங்களுக்குள் இறங்குகிறார்கள்.
ஊடுருவ முடியாத இடங்களிலிருந்து வரும் தூதர்களாக
அல்லது மக்கள் அவர்களை வேண்டிப் பிரார்த்திப்பதுபோல காவல் தெய்வங்களாக
ஒருவேளை அவர்கள் அரசியல் காரணங்களுக்காகக்கூட
சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கலாம்.
தேவதைகள்
தங்கள் அறைகளில் இருக்கவே விரும்புகிறார்கள்
ரேடியோ கேட்பார்கள், டிவி பார்ப்பார்கள்
அல்லது கால் நகங்களை அழகுப்படுத்துவார்கள்
அல்லது தங்கள் பிரமாண்ட வெள்ளை இறக்கைகளைச் சலவை செய்வார்கள்
பின்னர்
அடுத்த நாள் அவர்கள் அணியும் ஆடைகளுக்கு அடுத்ததாக அவற்றைச்
சிறப்பு ஹேங்கர்களில் தொங்கவிட்டுவிடுவார்கள்.
அவர்கள் மனிதர்களாக மாறுவேடமிட்டுள்ளனர்
கண்டுபிடிக்க முடியாதபடி
இல்லையெனில் மக்கள் அவர்களைக் கேலி செய்வார்கள்.
இரவின் தனிமையில்
அவர்கள் கடந்த காலத்தை நினைவுபடுத்துகிறார்கள்
ஒரு கீழ்த்தரமான கிரகத்தில் வாழ நேர்ந்ததைக் கண்டு வருந்துகிறார்கள்
அவர்கள் அறைச் சேவகரை அழைக்கிறார்கள்
ஆனால், வரவேற்பறையில் யாரும் அழைப்பை ஏற்பதில்லை
கரப்பான் பூச்சிகள் தாழ்வாரங்களில் ஓடாத
குடிகாரர்கள் யாரும் கத்தாத
கழிவறை காகிதங்கள் அபரிதமாக இருக்கும் அந்த இடத்தில்
தாங்கள் சொர்க்கத்திலிருந்து வந்தவர்கள் என்று நம்பிவிட்டுப்
பசியுடன் படுக்கைக்குச் செல்கிறார்கள்.
அந்த நாளின் கடும் சோதனைகளால் மனமுடைந்து அவர்கள் நிர்வாணமாகப் படுக்கையை
நிரப்புகிறார்கள்.
தூங்குவதற்கு முன் தங்கள் தளர்ந்த கண்களால் மேற்கூரையை நோட்டமிடுகிறார்கள் உழுவதற்குத் தயாராக இருக்கும் வயல் போல ஆகாயவானம் இருக்கிறது.
ஆனால், அது ஒரு பாழடைந்த கட்டடத்தின்
விரிசல் கூரை
பலர் நம்புவதுபோல்
இடிந்து விழும் நிலையில் உள்ளது.
தேவதைகள்
மௌனமாகப் பார்க்கிறார்கள்
தங்களை நினைத்து வருந்துகிறார்கள்
அந்த விரிசல்கள்
மனிதர்களை நினைவூட்டுகின்றன.
அந்த விரிசல்கள்
அவர்களுக்கு
மனிதர்களை நினைவூட்டுகின்றன.
l
Courtesy: Tafadzwa Gwetai
தெய்வாம்சமற்ற தேவதைகள்
பின்னர் கண்ணாடி தன் சீடர்களிடம் கூறியது:
யாரும் யாரையும் ஆள மாட்டார்கள்.
உலகம் முணுமுணுப்புகளாலும் வெறுமையாலும் நிறைந்தது.
தூரத்தில் குதிரைகள் சீறிப்பாய்ந்தன.
எல்லாம் அழிந்தன.
இங்கே ஒரு சிறு கீற்று மின்னல் மட்டுமே இருக்கிறது
காலத்தின் இலைகளை மெல்லும் சில்வண்டுகள்.
நான் இன்னும் பழைய பரந்த காலத்தின்
முந்தைய சகாப்தத்தின் சின்னங்கள்
கற்பனையால் ஆளப்பட்ட
ஒரு உலகளாவிய மூளையைக் கற்பனை செய்தேன்
ஆனால், நிலா இல்லாத ஒரு நீண்ட இரவில்
ஒளி வானத்திலிருந்து பாயவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன்.
அது அதன் சொந்தக் குகையில் ஒளிந்து கொள்கிறது.
இருப்பினும், அது தவறிவிழுந்த ஒரு தேவதை.
உபாகமம் உருவப்படங்களைத் தடை செய்கிறது
ஒரு கற்பனையான பிதாவின் பெயரிடுதலையும் மனப்படிமத்தையும் கூட.
கடவுளைப் பிரதிநிதித்துவப்படுத்த ஒரே வழி
கண்ணாடிக்குள் ஊடுருவிப் பார்ப்பதே.
பின்னிப்பிணைந்த என் கனவுகளில்
பெரும் பேரிடர்களுக்கு எதிராகப் போரிட
விரைந்து செல்லும் தேவதைகளைக் கண்டேன்
அநீதியான கடவுள் பூரணமாக இருக்க முடியாது,
என் கனவில் அவர்களில் துணிச்சலானவரை வலியுறுத்தினேன்.
நதிகள் எங்கே முடியும் என்று ஒரு கடவுள் அழுதார்.
பிதாவானவரிடம் பேசும் நம்பிக்கை இல்லாமல்
அவர்கள் தனியாக இருந்தார்கள் என்பதே உண்மை.
கண்ணீரின் பள்ளத்தாக்கில் வீழ்ந்தவர்களை அவர் கைவிட்டது போல்,
அவர்களைக் கைவிட்ட திருமிகு.கடவுள்
அங்கு இல்லை.
கலைந்த மௌனம் இப்போது கண்ணாடியின் உதடுகளைப் பற்றிக்கொண்டது
விடியும் வரை இலைகளை ஈரப்படுத்தும் சோகம் தணிந்துகொண்டே சென்றது
மனசாட்சி உள்ளூரத் தனியாக எரியும் இடத்தில்
நெருப்பருகே இறக்க ஒரு நேரம் இருக்கிறது.
ஜெய்ம் பேரியோஸ் கரில்லோ: 1954இல் குவாதமாலா நகரில் பிறந்தார். 1981 முதல் ஸ்டாக்ஹோமில் வசித்துவருகிறார். கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர். குவாதமாலாவில் உள்ள Universidad de San Carlos பல்கலையில் தத்துவம், சமூக மானுடவியலில் பட்டம் பெற்றுள்ளார், அங்கு அவர் பேராசிரியராகவும் இருக்கிறார். Ciudades errantes எனும் கவிதைத் தொகுப்பு, Anti-ensayos எனும் கட்டுரைகளின் தொகுப்பு அல்லாமல் தற்போது Tiempo develado என்ற தலைப்பில் மற்றொரு கவிதைத் தொகுப்பு 2023இல் வெளிவந்துள்ளது.