அஞ்சலி: கு.தர்மலிங்கம்
2006ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மாமல்லபுரத்தில் பஞ்சமி நில மீட்பு மாநாடு நடத்தியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அப்போது கட்சிக்குக் கருத்தியல் பலம் திரட்டும் அரங்குகளில் பரவலாகப் பங்கேற்று வந்ததால் அம்மாநாட்டில் பேச நானும் அழைக்கப்பட்டிருந்தேன். இரவு தங்குவதற்காக இருவரோடு சேர்த்து எனக்கு அறை போடப்பட்டிருந்தது. ஒருவர் அப்போது திருவாரூர் மாவட்டச் செயலாளராக இருந்த தமிழினியன். பின்னாட்களில் அவர் படுகொலை செய்யப்பட்டார். மற்றவர் கு.தர்மலிங்கம். தர்மலிங்கத்தை அறிவேன் என்றாலும் ஒன்றாகத் தங்கும் வாய்ப்பானது எனக்கு வேறு வகையில் உதவியது. வெண்மணி பற்றி நூலெழுதுவதற்காக நீண்ட பயணங்கள், சந்திப்புகள் என்றிருந்த எனக்கு அதில் முக்கியமான தகவல்களைச் சொல்லக் கூடியவராக தர்மலிங்கம் இருப்பார் என்பதை அவரோடு பேசும்போது எதேச்சையாக அறிந்தேன். குறிப்பாக, வெண்மணி குற்றவாளி அழித்தொழிப்புப் பற்றிச் சொல்வதற்கு அவரிடம் செய்திகள் இருந்தன. அவரை நீண்ட பேட்டி கண்டேன். அதன் பிறகு அவருடைய அரசியல் பயணம் பற்றி நிறைய சொன்னார். எந்தவிதத்திலும் தன்னை முன்னிறுத்தாத முக்கால் நூற்றாண்டு அனுபவங்களின் சுருக்கமாக அது இருந்தது. ஆனால், தர்மலிங்கம் உள்ளிட்டோரின் பேட்டிகளைப் பதிவுசெய்த கருவி பின்னாட்களில் தொலைந்துபோன விரக்தியில் வெண்மணி திட்டத்தையே கைவிட்டேன். இந்நிலையில் வயது மூப்பு காரணமாகக் கடந்த ஏப்ரல் மாதம் கு.தர்மலிங்கம் காலமானார். அவரின் நேர்காணல், பேச்சு ஆகியவற்றின் நினைவுகளிலிருந்து இந்த அஞ்சலிக் கட்டுரை அமைகிறது.
கு.தர்மலிங்கம் குடும்பப் பின்னணி குறித்து அதிக செய்திகள் தெரியவில்லை. தலித் குடும்பத்தில் பிறந்து, போராடி கல்வி கற்று, தலைமை ஆசிரியர் பணிக்கு உயர்ந்தவர். அவர் பிறந்து பணியாற்றிய புதுக்கோட்டை, திருச்சி தஞ்சாவூர் மாவட்டங்களை ஒத்த பகுதியாகும். இப்பகுதிகளில் நிலவுரிமைப் போராட்டங்களினூடாக கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்திருந்தது பலருக்கும் தெரியும். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்க காலத்திலிருந்தே கட்சியில் இடம்பெற்றவர் தர்மலிங்கம். 1970களில் மார்க்சிய லெனினிய (எம்.எல்) அரசியல் செல்வாக்கு பெற்றபோது அதில் செயற்பட்டார். குறிப்பாக, 1968 கீழ்வெண்மணிக்குப் பிறகு கம்யூனிஸ்ட்டுகள் பலரை மாலெ அரசியல் ஈர்த்திருந்தது.
அதேபோல வர்க்கக் கண்ணோட்டத்தோடு சாதிப் பிரச்சினைகள் பற்றிய விவாதங்களும் அழுத்தம் பெற்ற காலமாகவும் அது இருந்தது. பொதுவாக இடதுசாரி அமைப்புகள் கருத்தியல் சார்ந்த அமைப்புகளாக இயங்கியதால் மாலெ அமைப்பிலும், அவை பிளவுபட்டுத் தனித்தனி அமைப்புகளாக இயங்கத் தொடங்கியபோதும், அந்த அமைப்புகளில் விவாதங்கள் மையமாக இருந்துவந்தன. இத்தகைய விவாதங்கள் நடப்பதற்கான இடமாக பெரும்பாலும் கு.தர்மலிங்கம் வீடு அமைந்தது. பிறகு, மாலெ இயக்கம் மூன்றாகப் பிளவுபட்டபோது வினோத் மிஸ்ரா தலைமையிலான இந்திய மக்கள் முன்னணியில் தர்மலிங்கம் செயற்பட்டார். பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை பகுதி அவர் அதிகம் இயங்கும் களமாக இருந்தது. இந்த அமைப்பின் கூட்டங்கள் பலவும் கூட இவர் ஏற்பாட்டில் – இவர் வீட்டிலேயே நடந்தன. பணி வாய்ப்பும், வருமான உத்தரவாதமும் இதற்குக் காரணமாக இருந்தது. அமைப்பின் ஆசிரியர் அணியிலும் செயற்பட்டார்.
இந்திய மக்கள் முன்னணி, விவாதங்கள் கள எதார்த்தம் சார்ந்து கிழக்கு முகவை, புதுக்கோட்டை பகுதிகளில் தீவிரமான சாதி எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்தது. ஆசிரியர் பணியில் இருந்துகொண்டே கட்சியின் தீண்டாமை எதிர்ப்புக்கான வெகுஜன போராட்டங்களில் நேரடியாகப் பங்கேற்றவர் தர்மலிங்கம். வெண்மணி படுகொலை, வெண்மணி கொலையாளி விடுதலை என்று அப்பிரச்சினை இடதுசாரிக் குழுக்களின் தொடர் கவனத்தை ஈர்த்துவந்தது. வெண்மணி கொலையாளியைப் படுகொலை செய்தவர்களை இவர் அறிந்திருந்தார். அமல்ராஜ், ஐ.பால்ராஜ், ஞா.தேவராஜ் ஆகியோரோடு இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டார்.
கு.தர்மலிங்கம்
1980களில் இரண்டு விசயங்கள் இடதுசாரி அரசியலைப் பாதித்தன. ஒன்று ஈழத்தமிழர் பிரச்சினை, மற்றொன்று தமிழரசனின் தனித்தமிழ்நாடு முழக்கம். இரண்டும் ஒன்றிற்கொன்று தாக்கம் செலுத்திக்கொண்ட நிகழ்வுகள் ஆகும். தமிழரசனுக்கு நெருக்கமாக இருந்த தர்மலிங்கம், கம்யூனிஸ்ட் தலைமறைவு தோழர்களுக்கு அடைக்கலம் தந்துவந்தது போலவே, தமிழரசனுக்கும் அடைக்கலம் தந்தார். விடுதலைப் புலிகள் ஆதரவாக இருந்ததன் காரணமாகச் சிறை, சித்திரவதை போன்றவற்றைச் சந்தித்த அவர், ஆசிரியர் பணியிலிருந்தும் நீக்கம் செய்யப்பட்டார். பணியைத் திரும்பப் பெற போராடியும், கடைசியாக ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவை மட்டும் பெற்றார். தொடர்ந்து இடதுசாரி குழுவினரோடு செயற்பட்டுவந்தார்.
1980களில் ராஜீவ் காந்தியால் கொணரப்பட்ட புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக இடதுசாரிகள் கடும் பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். அதன் பல்வேறு தொடர்ச்சிகளில் ஒன்றாக 1989ஆம் ஆண்டு திண்டிவனத்தில் தமிழ்வழிக் கல்வி மாநாடு நடத்தப்பட்டது. பிறகு, மக்கள் கல்வி இயக்கம் தொடங்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேறியிருந்த பேராசிரியர் கல்யாணியும் அவர் நண்பர்களும் இதனைத் தொடங்கினாலும் மாலெ இயக்க அபிமானிகளாக இருந்த கல்வியாளர்களும் பிறரும் இதில் பங்கெடுத்தனர். அந்த வகையில் தர்மலிங்கமும் மக்கள் கல்வி இயக்கத்தில் சேர்ந்து செயற்பட்டார். இயக்கத்தின் முதல் அமைப்பாளராக கல்யாணியும், செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக தர்மலிங்கமும் இருந்தனர். தொடர்ந்து இரண்டாவது அமைப்பாளரானார் தர்மலிங்கம். மக்கள் கல்வி இயக்கம் சார்பாக கல்யாணி எழுதிய ‘பயிற்றுமொழி தமிழா? ஆங்கிலமா?’, பேராசிரியர் விஜயலட்சுமி எழுதிய ‘பெண் கல்வி’ ஆகிய இரு நூல்களுக்கும் புதுக்கோட்டையில் வெளியீட்டு அறிமுக நிகழ்ச்சியை நடத்தினார் தர்மலிங்கம். இக்காலத்தில் எஸ்சி – பிசி ஒற்றுமை பேசிய பாமகவில் சில காலம் இருந்துவிட்டு அதன் சாதிய உள்ளீடு காரணமாக வெளியேறினார். தர்மலிங்கம் எழுத்தாளர் இல்லை என்றாலும் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விவாதங்களில் விரிவாகப் பேசக் கூடியவராக இருந்தார். மக்கள் கல்வி இயக்கப் பிரச்சார அணுகுமுறைகளின் தொடர்ச்சியில் நிறப்பிரிகை இதழ் உருவாக்கியிருந்த விவாதங்கள் முக்கியமானவை. தேசிய இனம், பெண்ணியம், பெரியாரியம் சார்ந்து அவ்விதழில் ஒழுங்கமைத்திருந்த விவாதங்களைக் குறிப்பிடலாம். அவற்றின் பல உரையாடல்களில் அவர் பங்கு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கல்வி இயக்கம் சார்பாக நிறப்பிரிகையின் பெரியார் பற்றிய விவாதத்தில் பங்கெடுத்த தர்மலிங்கத்தின் கருத்துகள் அவரது அரசியல் பார்வையைப் புலப்படுத்தும். அதாவது “பெரியார் தீண்டாமையை எதிர்த்தார் என்று இங்கே சிலர் சொன்னார்கள். அதற்கு வைக்கம் போராட்டம் உதாரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அது தன்னெழுச்சியாக நடைபெற்ற ஒன்று. ஏனெனில், தொடர்ந்து சாதிக் கொடுமைக்கு எதிராக பெரியார் எதையும் செய்யவில்லை. காரணம் என்ன? இந்து மத ஆதிக்க நிலப்பிரபுகளும் முதலாளிகளும் அவரைத் தன்வயம் இழுத்துக்கொண்டார்களா? புத்த மதத்திற்கு ஏற்பட்ட கதி பெரியாருக்கு ஏற்பட்டதா? எடைக்கு எடை தங்கம் கொடுத்து அவரை இழுத்துவிட்டார்களா? கீழ்வெண்மணி கொடுமை பற்றி அவர் ஏதும் அறிக்கை விட்டாரா? இங்கே தீண்டாமை கொஞ்சம் ஒழிந்திருக்கிறது என்றால், பொருளாதார மாற்றங்கள் குறிப்பாக, சிறு முதலாளித்துவம் வளர்ந்திருப்பதுதான் காரணம். தாழ்த்தப்பட்டவர் சைக்கிளில் போகக் கூடாது என ஊர்க் கட்டுப்பாடு. ஆனால், தாழ்த்தப்பட்டவரைச் சைக்கிளில் போக அழைக்கிறார் சைக்கிள் கடை வைத்திருக்கும் உயர்சாதி சிறுமுதலாளி. பஸ் முதலிய நவீன மாற்றங்களும் தீண்டாமை ஒழிப்பிற்குக் காரணமாகியுள்ளன. பிரபல தி.க. தலைவர் திருவாரூர் தங்கராசு வீட்டில் பள்ளு, பறையர்கள் கையைக் கட்டிக்கொண்டு வெளியே நின்றுகொண்டிருந்ததை 1950களில் நானே நேரில் பார்த்திருக்கிறேன்.
பிராமணர்களோடு சூத்திரர்களுக்குச் சமத்துவம் வேண்டும் என்றுதான் திராவிடர் கழகம் போராடியது. பஞ்சமர்களுக்காக பெரியார் இயங்கியதில்லை. கடவுள் மறுப்பு என்கிற விஷயத்தில் கூட பிள்ளையார் சிலையைச் செய்துதான் உடைக்கச் சொன்னாரே ஒழிய, கோயில்களில் உள்ள சிலைகளை உடைக்கச் சொல்லவில்லை. ஏழைகள் இருக்கும்வரை சாமியை ஒழித்துவிட முடியாது. எனவே, நாத்திகப் பிரச்சாரத்தில் பெரியாருக்குத் தோல்விதான். அரசியலதிகார பிரச்சினையிலும் அவருக்குக் குழப்பம் தான். ஆனால், அம்பேத்கர் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்” என்றார். சாதிப் பிரச்சினையை உணர்ந்திருந்தாலும் பெரியார் பற்றிய பார்வையில் இடதுசாரி கண்ணோட்டமே அவரிடம் செல்வாக்கு செலுத்தியிருக்கிறது. அன்றைக்கு இடதுசாரிகள் பலர் இக்கருத்தில் உடன்பட்டவர்களே. பெரியார் பற்றிய இக்கண்ணோட்டமே தலித் அரசியலின் பார்வையாகவும் இருக்க முடியும் என்பதை அவரோடு உரையாடியதிலிருந்து தெரிந்துகொள்ள முடிந்தது.
பின்னர், விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் பரவலாகி வந்தபோது அதில் இணைந்தார். கட்சியின் தமிழ்ப் பெயர் மாற்றும் ஏற்பாட்டின்போது திருமாவளவனால் அறச்செல்வம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டார். கட்சியின் அரசியல் தலைமைக் குழு செயலாளர் ஆக்கப்பட்டார். ஆனால், இடதுசாரியாகப் பயணித்துவந்த தருமலிங்கத்திற்கு விசிகவின் அரசியல் வடிவம் மீது அதிருப்தி இருந்தது. கட்சி கருத்தியல் ரீதியாகவும், திட்ட ஒழுங்கோடும் இல்லை என்ற கருத்து அவருக்கு இருந்தது. இதனைத் தனி உரையாடல்களில் பதிவு செய்துவந்தார். கட்சியில் இருந்தாலும் அதனோடு ஒத்துப் போகாமலும் இருந்தார். எனவே, இவர் போன்றோரின் பெயர்கள் இயல்பாகவே பின்னுக்குப் போயின. தலித் அரசியல் இடதுசாரி பண்போடு இருக்க வேண்டுமென்று விரும்பியவர்களில் அவரும் ஒருவர். இந்நிலையில், 14 ஆண்டுகளுக்கு முன் அவர் மனைவி காலமானார். கடந்த 10 ஆண்டுகளில் அவர் இயக்கம் படிப்படியாக குறைந்து வயது மூப்பின் காரணமாகக் காலமானார். அவரது இயக்கப் பணிகளுக்கு அவர் மனைவி முழுமையாக இடமளித்திருக்கிறார். அதே போல பணி நீக்கப்பட்டபோதிலும் குழந்தைகளைப் படிக்க வைப்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார். குடி, புகை போன்ற எந்தப் பழக்கமும் இல்லாதிருந்தவர். 95 வயது வரை இருந்ததைக் கணக்கெடுத்தால் முக்கால் நூற்றாண்டு தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றோடு அவர் பிணைந்திருந்ததைப் பார்க்க முடிகிறது. நீண்ட பயணம், நிறைய அனுபவங்கள் அவருக்கு இருந்தன. நிலவுரிமை, தலித் பிரச்சினைகள், கல்வி பிரச்சினை, மனித உரிமைப் பிரச்சினை எனப் பல தளங்களிலும் செயற்பட்டிருக்கிறார். ஆனால், அவை பதிவாக இல்லை என்பது மாபெரும் குறை. விசிக சார்பாக ஒரு படத்திறப்பு விழா நடத்தப்பட்டிருக்கிறது. பேராசிரியர் கல்யாணி திண்டிவனத்தில் இரங்கல் கூட்டம் நடத்தினார். தர்மலிங்கம் போன்றோர் பற்றிய செய்திகள் அரசியலில் ஆர்வமுடைய இந்தத் தலைமுறையினரிடம் முக்கியமான செய்தியாகக் கடத்தப்படும் சூழ்நிலை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவர் போன்றோர் உரிய அளவில் தெரியப்படாமல் போவதற்கு நபர்கள் மட்டுமல்ல, அவர்கால அர்ப்பணிப்பு அரசியலுக்கான தேவை குறைந்துவிட்ட தற்போதைய அரசியல் சூழலும் ஒரு காரணம்.