இமிழ் சிறுகதைகள்: உலக இலக்கியத்திற்குள் நுழையும் முயற்சிகள்

அ.ராமசாமி

ங்கிலத்தில் டையோஸ்போரா இலக்கியம் (Diaspora literature) எனும் வகைப்பாடு ஏற்கெனவே இருக்கும் ஒன்று. இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலக நாடுகள் பலவற்றில் சிதறிக் கிடந்த யூதர்கள் தங்களின் அடையாளத்தை மீட்கவும் தங்களுக்கென ஒரு தேசம் இல்லையென்றும் பேசிய அந்தப் பின்னணியைக் குறிக்கும் சொல்லாக டையோஸ்போரா இலக்கிய விவாதங்களில் இடம்பெற்றது. சிதறடித்தல், தேச அடையாளம் வேண்டல் என்ற அந்த மனநிலை ஈழத்தமிழர்களின் இன்றைய நிலைக்கு ஏறத்தாழப் பொருந்திப் போகும் என்ற அளவில் புலம்பெயர் இலக்கியம் என்ற சொல்லை ஆங்கில டையோஸ்போராவின் மொழிபெயர்ப்பாகக் கொள்ளலாம்.

புலம்பெயர் இலக்கியம் என்பதைப் புலம்பெயர்ந்தோரின் இலக்கியம் எனக் குறுக்கிப் பார்க்கும் நிலை இருக்கிறது. அதன் தொடர்ச்சியில் புலம் பெயர்வினால் ஏற்பட்டுள்ள பொருளாதார, பண்பாட்டு மாற்றங்களையும், அடையாளம் இழப்பையும் பேசுமளவிற்கு விவாதங்கள் சென்றுள்ளன. அதற்குப் பதிலாகப் புலம்பெயர்வதற்கான காரணம் என்ற மூலத்திலிருந்து தொடங்கினால், ஒட்டுமொத்தப் போராட்ட வரலாற்றையும் பேச வேண்டிய தேவை அதில் உள்ளது என்பது புரியவரும். அவ்வாறு பேசவில்லையென்றால் சொந்த ஊரையும் நாட்டையும் நினைத்து ஏங்கும் இழப்பின் துயரப் பதிவுகளாக (Nostalgia) மட்டும் புலம்பெயர் இலக்கியம் நின்றுபோகும் வாய்ப்புண்டு.

இந்திய மொழிகளில் இடம்பெற்றுள்ள புலம்பெயர் எழுத்துகளுக்கு மாறாகத் தமிழின் – குறிப்பாக, ஈழத் தமிழின் புலம்பெயர்வு அமைந்துள்ளது. உற்றாரையும் ஊரையும் நாட்டையும் இழந்து ஏதுமில்லாத – ஏதிலிகளாகப் பல நாடுகளுக்கும் செல்ல நேர்ந்தது பெரும் துயரம். அத்துயரம் – அனுபவம் – இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் பிற தேசிய இனங்களுக்குக் கிடைக்காத அனுபவம். அவற்றைத் தனது மொழியின் வளமான இலக்கியங்களாக மாற்றிக்கொண்டதின் மூலம் இலக்கியச் செல்வமாக மாற்றியிருக்கிறது. இழப்பில் கிடைத்த பெறுமதி. அதனால் அதனைத் துயரத்தின் பகுதியாகப் பார்ப்பதிலிருந்து விலகி, நேர்மறைப் பலனாகப் பார்க்கப் பழகிக்கொள்ளலாம். அப்படிப் பார்க்கத் தூண்டும் புலம்பெயர் தொகை நூல்களைக் கடந்த காலங்களில் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் தந்திருக்கிறார்கள். அவற்றுள் அண்மையில் வந்துள்ள ‘இமிழ்’ – வேறுபட்டது; ஒரு மைல்கல் என்ற நிலையில் வைத்துப் பேச வேண்டிய ஒன்று. இதற்கு முன் வெளிவந்த தொகை நூல்கள் இலக்கியப் பனுவல்கள் என்ற வகைப்பாட்டைத் தாண்டிப் பல படைப்புகளைக் கொண்டவை. இது மட்டுமே சிறுகதை என்ற ஒற்றை இலக்கிய வடிவத்தில் நடந்துள்ள சாதனைகளையும் போக்குகளையும் தொகுத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கிலான தொகை நூலாக வந்துள்ளது.

m

இலங்கைத் தமிழர்களின் கால்நூற்றாண்டுக் (1983 – 2009) காலப் போராட்டத்தை, வரலாற்றின் பக்கங்களில் எவ்வாறு எழுதுவீர்கள் என ஒரு வரலாற்றாசிரியரிடம் இப்போது கேட்டால், ‘அது தோல்வியின் வரலாறு’ எனச் சொல்லக்கூடும். ஆனால், மே 18, 2009க்கு முன்பு கேட்டிருந்தால் உடனடியாக எந்தப் பதிலையும் அவர் சொல்லியிருக்க மாட்டார். காரணம் ஈழத்தமிழர்களின் கனவான ஈழத் தனிநாடு கிடைக்குமா, கிடைக்காதா என்ற முடிவு தெரியாமல் வரலாற்றை எப்படி எழுதுவது என்ற குழப்பத்தில் அவரிடமிருந்து பதில் எதுவும் கிடைத்திருக்காது. எந்த ஒரு நிகழ்வையும் வெற்றி, தோல்வியைக் கொண்டே முடிவு செய்யும் அடிப்படைப் பார்வை கொண்டது வரலாறு. அதனால் அது நிகழ் காலத்தைப் பற்றிய கருத்துரைப்பை எப்போதும் தள்ளிப் போடவே செய்யும். ஆனால், இந்தக் கேள்விக்கு இலக்கிய ஆசிரியர் கூடத் தேவை இல்லை. இலக்கிய மாணவரே உடனடியாகப் பதில் சொல்லத் தொடங்கிவிடுவார். ஏனென்றால் இலக்கியம் முடிவுகளுக்காகக் காத்திருப்பதில்லை. எல்லா நிகழ்வுகளையும் நடந்துகொண்டிருக்கும்போதே பதிவுசெய்வதும், கருத்துரைப்பதும், விமரிசிப்பதும் தன்னுடைய வேலை என்று கருதுகிறது இலக்கியம்.

ஒவ்வொரு நிகழ்வையும் நேர்மறையாகவும் எதிர் மறையாகவும் சொல்லி வைத்துக் கட்டியங்கூறும் வேலையை இலக்கியம் தன்னுடைய குணமாகக் கொண்டிருக்கிறது. கூறும் கட்டியம் நடக்காமல் போய்விடுமோ என்ற தயக்கம் எல்லாம் இலக்கியத்திற்குக் கிடையாது. ஒரு நிகழ்வின் தொடக்க அசைவைக் கண்டறிந்து, கருக்கொள்ளும் நிலையில் முன்னறிவித்துவிடுவது இலக்கியவாதிகளின் வேலை. காத்திரமான நிகழ்வுகள் பலவற்றிற்கு முன்னறிவிப்பாக இலக்கியம் விளங்கியதற்கு உலக இலக்கியங்களில் பல உதாரணங்கள் உண்டு என்றாலும் பாரதியின் வரிகளை ஆகச் சிறந்த உதாரணம் எனச் சொல்லலாம். இந்தியா விடுதலை அடைந்த ஆண்டு 1947. ஆனால், பாரதி “ஆடுவோமே… பள்ளுப் பாடுவோமே… ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று” என எழுதிய காலம் 1920க்கும் முன் என்பதை நாம் அறிவோம்.

m

‘இன்றைய ஈழ – புலம்பெயர் சிறுகதைகள்’ என்ற துணைத்தலைப்போடு வந்துள்ள ‘இமிழ்’ தொகைநூலில் பத்து நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் இருபத்தைந்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. பொதுவாக, எழுத்தாளர் ஒருவரின் சிறுகதைத் தொகுப்பைப் பகுப்பாய்வு செய்து அவரது இலக்கியவியல் நோக்கங்களைப் பேச முடியும். அதே அடிப்படைகளைக் கொண்டு வெவ்வேறு எழுத்தாளர்களின் தொகுதியை மதிப்பிடவோ, பகுப்பாய்வு செய்யவோ முடியாது; கூடாது. அதற்கு மாறாகத் தொகுப்பாசிரியர்களின் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடுதல் அல்லது பகுப்பாய்வு செய்தல் சரியாக இருக்கும்.

இத்தொகைநூலில் இடம்பெற்றுள்ள கதாசிரியர்களிடம் குறிப்பிட்ட நோக்கம் எதையும் விவரித்து அல்லது விளக்கிக் கதைகள் தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. ‘கண்ணாடி விரிசல் கதைகள்’ என்ற குறிப்புரையில் தகவல் எதுவுமில்லை. மாறாக, “இன்றைய ஈழ – புலம்பெயர் இலக்கியத்தில் பன்முகத்தன்மையோடு வெளிப்படும் நிலமும் பண்பாடும் பழங்குடித் தொன்மங்களும் வேறானவை. அதுவே ஈழ – புலம்பெயர் இலக்கியம் சமகாலத்தில் தமிழ் இலக்கியத்திற்கு வழங்கியிருக்கும் தனித்துவமான பங்களிப்பு. இதன் குறுக்குவெட்டு முகம் இத்தொகுப்பு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை உள்வாங்கிக்கொண்டு இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளின் பன்முகத்தன்மையையும், புனைவு வெளிசார்ந்த நிலத்தையும் பண்பாட்டையும், பழங்குடித் தொன்மங்களின் இயல்பையும் அறிமுகம் செய்யலாம். அத்தோடு அதன் குறுக்குவெட்டு முகத்தில் ஈழத்துப் போர்க்கால நினைவுகளும் புலம்பெயர் அலைவுகளும் எவ்வாறு பதிவாகியிருக்கின்றன என்பதையும் விவாதிக்கலாம்.

கதைகளில் இடம்பெறும் பாத்திரங்களை, கதாசிரியர் உருவாக்கும் புனைவுக் காலத்திலும் புனைவு வெளியிலும் நிறுத்திப் பேசுவதாகவும், அதற்குக் கதாசிரியர் தெரிவு செய்யும் சொல் முறையின் பொருத்தத்தையும் போதாமையையும் சுட்டிக்காட்டுவதாக எனது வாசிப்பு முறையைக் கொண்டிருக்கிறேன். இது ஒருவிதத்தில் கல்விப்புல வாசிப்பு. அதனையே இங்கும் கைக்கொண்டு ‘இமிழ்’ கதைகளைப் பகுப்பாய்வு செய்துள்ளேன். ஈழம் – புலப்பெயர்வுக் கதைகளில் நடந்து முடிந்த போர்க் காலமும் புலம்பெயர் அலைவுகளும் முதன்மையான உரிப்பொருள்களாக – விவாதப்பொருளாக உள்ளன. பெரும்பாலான கதைகளின் புனைவுக்காலம், சமகாலத்தில் தொடங்கிப் பின்னோக்கிச் செல்லும் நினைவுகளின் வழியாகப் போர்க்காலத்து ஈழ நிலத்தையும், புலம்பெயர் நாடுகளின் பண்பாட்டு வெளியையும் தனதாக்கிக்கொண்டிருக்கின்றன.

தொகுக்கப்பட்டுள்ள 25 கதைகளில் இடம்பெறும் வெளிகளின் வழியாக இரண்டு முதன்மை வெளிகளை அடையாளப்படுத்த முடிகிறது. முழுமையும் புலம்பெயர் நாடுகளைக் களமாகக் கொண்ட கதைகள் முதலாவது. இரண்டாவது, இலங்கையின் பரப்பினைக் களமாக்கிய கதைகள். இதன் இன்னொரு பிரிவாக ஈழ யுத்தம் நடந்த பரப்பை நிகழ்வெளிகளாகக் கொண்ட கதைகள் எனவும், அவ்வாறு கொள்ளாத கதைகள் எனவும் பகுத்துப் பார்க்கும் வாய்ப்பினைக் கதைகள் தருகின்றன.

இக்கதைகளில் அ.முத்துலிங்கத்தின் ‘சைபர் தாக்குதல்’, சாதனா சகாதேவனின் ‘கரீத் தெமலோ’, நோயல் நடேசனின் ‘இமாலயத் தவறு’, பா.அ.ஜெயகரனின் ‘தடம்’, ஷோபாசக்தியின் ‘மரச்சிற்பம்’ ஆகியவை புலம்பெயர் வெளிகளில் பாத்திரங்களை நிறுத்தி விவாதிக்கும் கதைகளாக உள்ளன. இவற்றின் கதைசொல்லிகள் ஈழப்போரின் நினைவுகளைக் கொண்ட பாத்திரங்களாக இருக்கின்றன. மீதமுள்ள கதைகளின் பாத்திரங்கள் இலங்கையில் இருப்பவை. அக்கதைகளை எழுதியவர்கள் புலம்பெயர் தேசங்களில் வாழ்கிறவர்களாக இருந்தபோதிலும் கதைக்குள் இடம்பெறும் பாத்திரங்கள் இலங்கை / ஈழத்து வெளிகளிலேயே அதிகமும் இருக்கின்றன. அகரனின் ‘தாய்’, உமா வரதராஜனின் ‘அந்நிய மரம்’, கருணாகரனின் ‘வெண்சுடர்’, செந்தூரன் ஈஸ்வரநாதனின் ‘கோதுமை முகங்கள்’, டானியல் ஜெயந்தனின் ‘சிவப்புநிற உதட்டுச் சாயம்’, தமயந்தியின் ‘எட்டுக் கிழவர்கள்’, தர்மு பிரசாத்தின் ‘செவ்வரத்தை’, தேவகாந்தனின் ‘காத்திருப்பின் புதிர்வட்டம்’, தொ.பத்திநாதனின் ‘வடக்கத்தியான்’, நெற்கொழுதாசனின் ‘இராமன் வில்’, யதார்த்தனின் ‘தெய்யோ’ முதலான கதைகள் ஈழப்போர் பின்னணியில் ஈழத்தைக் கதைக் களமாக்கியுள்ளன. இலங்கையின் பிற பகுதிகளைக் களன்களாகக் கொண்ட ஒட்டமாவடி அராபத்தின் ‘மஹர்’, சப்னாஸ் ஹாசிமின் ‘கன்னிரத்தம்’, திருக்கோவில் கவியுகனின் ‘கௌரவம்’, நஸிகா முகைதீனின் ‘அக்கிமரத்தின் மீது சத்தியமாக’, றஷ்மியின் ‘சாயா’ ஆகிய கதைகள் உள்ளன. இவை இலங்கையின் இசுலாமியக் குடும்பங்களைக் கதை வெளியாக்கியுள்ளன. மேலும், போர்க்காலத்தையும் போரின் வெளிகளையும் தவிர்த்துள்ள கதைகளாகவும் இவை இருக்கின்றன என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும்.

இவையல்லாமல் கதைக்கான வெளி, காலம் என்பதில் குறிப்பான தன்மையில்லாமலேயே போர்க்காலத்தையும் போரின் நினைவுகளையும் விவாதிக்கும் கதைகளாகச் சிலவற்றைக் குறிப்பிடலாம். குறியீடுகளாகவும் நினைவோட்டங்களாகவும் எழுதப்பெற்ற இக்கதைகளுக்குக் காலம், வெளி போன்றன முதன்மையான தேவைகளாக இருக்க வேண்டியதில்லை. தாட்சாயணியின் ‘கொலைத் தருணம்’, சித்தாந்தனின் ‘சஹரானின் பூனைகள்’ ஆகியவற்றை இவ்வகைமையில் குறிப்பிடலாம். ஸர்மிளா ஸெய்யித்தின் ‘ஃபெர்ன்’ கதையையும் இத்தன்மையில் அமைந்ததென்றே சொல்ல முடியும்.

தமிழின் தொகை நூல் மரபு

ஒற்றை நோக்கமும் முன்வைப்பும் இல்லாமல் பன்மைத்துவ நோக்கில் தொகுக்கப்படும் தொகை நூல்களின் வரலாறு தமிழ் இலக்கிய வரலாற்றுக்குப் புதிதல்ல. செவ்வியல் கவிதைகளை அகம், புறம் என முதன்மையான பிரிவுகளாக்கித் தொகைநூல் செய்திருக்கிறார்கள். அதற்குள் வெளிப்படையாகத் தெரியும் பாடல்களின் அளவைக் கொண்டு குறுந்தொகை, நற்றிணை, நெடுந்தொகை கலித்தொகை எனப் பிரித்துக் காட்டும் தன்மை வெளிப்பட்டிருக்கிறது. அதற்கும் மேலாக அவற்றுக்குள் வெளிப்பட்ட திணைப்பொருளை முதன்மையாக்கி – உரிப்பொருள் அடிப்படையில் – குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற பாகுபாடுகளையும் தந்திருக்கிறார்கள். இப்பாகுபாடுகளும் அவற்றுக்குத் தரப்பட்ட துறைக் குறிப்புகளுமே அவற்றை விளக்கவும் விவாதிக்கவும் துணைசெய்கின்றன. இம்மரபு பின்னர் வந்த தொகை நூல்களிலும் பின்பற்றப் பட்டுள்ளன. ஆனால், அதை நவீன இலக்கிய வகைப்பாட்டைச் செய்த தொகை நூல்களில் காண முடியவில்லை. தமிழ்நாட்டில் தொகுக்கப்பட்ட கவிதை சார்ந்த தொகைநூல்களிலும் சிறுகதை சார்ந்த தொகை நூல்களிலும் எவ்வித மரபும் பின்பற்றப்படாமல் தொகுப்பாசிரியர்களின் மனச்சாயல் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. இமிழும் கூட அப்படியானதொரு தொகைநூலே. ஆனால், இந்நூலை விவாதிக்கப் பின்வரும் முறையைப் பின்பற்றலாம் என நினைக்கிறேன்.

நவீன இலக்கியங்களின் உரிப்பொருள்

மரபிலக்கியத் தடத்திலிருந்து விலகி நவீனத்திற்குள் நுழைந்த தமிழ் இலக்கியத்தின் தொடக்கம் பாரதி என்பதை ஏற்றுக்கொண்டால், நவீனத் தமிழ் இலக்கியத்தின் வரலாற்றுக்கு 200 ஆண்டுகால வரலாறு உண்டு. அதனை உலக மொழிகளுக்கு நகர்த்தினால் கால்நூற்றாண்டைத் தாண்டிய வரலாறு எனச் சொல்ல முடியும். இந்தக் கால் நூற்றாண்டு வரலாற்றில் கவிதை, நாடகம், புனைகதைகள் என எழுதிக் குவித்துள்ள நவீனத்துவ எழுத்தாளர்களின் பேசுபொருளை அல்லது உரிப்பொருளைப் பின்வரும் வகையில் அடையாளப்படுத்தலாம்: மனிதர்கள் என்னவாக இருக்கிறார்கள்; என்னவாக ஆக வேண்டும் என்ற கேள்விக்கான பதில்களைப் பேசுவனவாக இருக்கின்றன.

  1. மனிதர்களை இயக்குவது உலக வாழ்க்கையில் இருக்கும் சில அடிப்படையான நியதிகளே என்பதை முன்வைத்துப் பேசும் சமயவியல் முதன்மையான உரிப்பொருட்களைத் தந்துள்ளது. நியதிகளை விட்டு விலகக்கூடாது என வலியுறுத்தும் இவ்வகை எழுத்துகள், மனிதர்களின் மரணத்திற்குப் பின்னான நிலைக்கு, அவர்கள் வாழும் காலத்துச் செயல்களும் நடவடிக்கைகளும் காரணங்களாக இருக்கின்றன என்ற கருத்தியலை உருவாக்குகின்றன. அறவியல் சார்ந்த சொல்லாடல்களுக்குள் நுழையும் இவ்வகை எழுத்துகள், மனிதர்களின் மரணம், கொலை, போர், தற்கொலை, அமைப்புகளின் இருப்பு, அவற்றின் சார்புநிலைகள், அமைப்புகளின் விதிகள், விதிகளை மீறும் தனி மனிதர்களும் குழுக்களும், அமைப்புகளுக்குள் அடங்க மறுக்கும் போக்கு எனப் பல தளங்களில் இலக்கியப் பனுவல்களை உருவாக்கியுள்ளன.
  2. மனிதர்களை இயக்குவது எதிர்பாலின உடலின் மீதான ஈர்ப்பும் ஆதிக்க மனமும் இச்சையுமே என்ற நம்பிக்கையில் பாலியல் உறவுகளையும், அவற்றை ஒழுங்குபடுத்துதலையும், மீறல்களையும் எழுதுவது இன்னோர் உரிப்பொருள். இதன் பின்னணியில் ஃபிராய்டின் உளவியல் கண்டுபிடிப்புகள் இருக்கின்றன என்றாலும், மனிதர்களின் காமமும் அதுசார்ந்த நிகழ்வுகளும் அதற்கென உருவாக்கப்பட்ட அறங்களும் அறமீறல்களும் நவீனக் காலத்திற்கு மட்டும் உரியன அல்ல. ஆனால், நவீனத்துவ எழுத்து, காமத்தை அறிவுத்தளப் பார்வையுடன் எழுத நினைத்தது என்பதே புதுமை.
  3. மூன்றாவது, மனிதர்களின் வயிற்றுப் பசியும் அதன் தொடர்ச்சியான பொருளியல் தேவைகளும் பற்றியது. மனித உடலையும் உழைப்பையும் விளக்கிப் பொருளியல் முரண்பாடுகளைப் பேசிய மார்க்ஸின் கண்டுபிடிப்புகளோடு இவ்வகை எழுத்துகளின் தேவை வலியுறுத்தப்பட்டன. வர்க்க இலக்கியங்களாக அறியப்பட்ட எழுத்துகளுக்கு உலக இலக்கியத்திலும் தமிழிலும் தொடக்கமும் தொடர்ச்சியும் உள்ளன.
  4. வர்க்க இலக்கியத்தின் தொடர்ச்சியில் விவாதிக்கப்படும் அடையாள அரசியலும் அடையாளத்தைத் தேடும் எண்ணங்களும் ஏற்கெனவே விவரிக்கப்பட்ட மூன்றுக்குள்ளும் ஊடுபாவாகக் கிளைகளைக் கொண்டிருக்கின்றன.
  5. இவற்றைத் தாண்டிய போக்குகளாக மொழியின் சாத்தியங்கள், மொழி உருவாக்கும் உலகம், மொழியால் வாழ்வதாக நம்பும் மனிதத் தன்னிலைகள், வாழும் நிலவியல் உருவாக்கும் நெருக்கடிகள், நிலவியலும் பண்பாடும் தற்காலிகத் தன்மையோடு இருப்பதும் ஆழ்மனதிற்குள் அவை அழிக்க முடியாத நினைவுகளாகப் பதிந்து கிடப்பதும் நவீனத்துவ எழுத்துகளின் சாராம்சக் கீற்றுகளாக இருக்கின்றன.

நவீனத்துவ இலக்கியத்திற்குள் உரிப்பொருட்களாக – விவாதப்பொருட்களாக இருக்கும் இவற்றை உள்வாங்கிக் கொண்டு ‘இமிழ்’ தொகுப்பின் 25 கதைகளையும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தும்போது இக்கதைகளைக் கூடுதலாக விளங்கிக்கொள்ளவும் விவாதிக்கவும் முடிகிறது. அந்த விவாதங்கள் இக்கதைகள் எப்படி நவீனத்துவக் கதைகளாக இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுவதோடு, உலக இலக்கியப் பரப்பிற்குரியதாக மாறுகிறது என்பதையும் சொல்ல முடியும். ‘இமிழ்’ தொகுப்பை அறிமுகம் செய்யும் இக்கட்டுரையில் அதனைச் செய்யவில்லை. அதே நேரம் இத்தொகை நூலில் உள்ள இரண்டு தனித்த கூறுகளை மட்டும் சுட்டிக்காட்டி அறிமுகத்தை முடிக்கலாம் என நினைக்கிறேன்.

தமிழ்த்தேசியம், அதற்கான போராட்டங்கள், தனி ஈழத்துக்கான போர், புலம்பெயர்வு ஆகியவற்றின் விளைவாக எழுதப்பட்டுள்ள இத்தொகுப்பில் உடலுழைப்பு, கூலி, வர்க்க வேறுபாடு, அதன் காரணமான முரண் எனப் பேசும் கதைகள் ஒன்றுகூட இடம்பெறவில்லை. மற்றொன்று, இசுலாமிய எழுத்தாளர்களின் விவாதப் பொருண்மைகள். அக்கதைகள் அனைத்திலும் இசுலாத்தின் மீதான விமரிசனம் தீவிரமாக வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக, இசுலாமியச் சமயச் சடங்குகளும் நம்பிக்கைகளும் பெண்கள் மீது கடும் வன்முறையைக் கருத்தியல் ரீதியாகவும் நேரடித் தாக்குதலாகவும் நிகழ்த்துகின்றன எனப் பேசுகிறார்கள். அவர்களில் எவரும் பெண்கள் இல்லை என்பதும், ஆண் எழுத்தாளர்கள் இவ்வகை விமரிசனங்களை எழுப்புவதின் மூலம் தங்கள் சமயத்தை நவீன காலத்திற்குரியதாக மாற்றும் முயற்சிகளைத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதையும் கவனப்படுத்த வேண்டியுள்ளது.

l

இமிழ், 51ஆவது இலக்கியச் சந்திப்பு கதைமலர்,
வெளியீடு: கருப்புப் பிரதிகள்,
55, பப்பு மஸ்தான் தர்கா, இலாயிட்ஸ் சாலை,
திருவல்லிக்கேணி, சென்னை – 5.

[email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!