தமிழக முதலாளித்துவ வரலாற்றின் பக்கங்களைப் புரட்டும் கை: எஸ்.ஜெயசீல ஸ்டீபனின் ‘நெசவாளர்களும் துணிவணிகர்களும்’

கார்த்திக் ராமச்சந்திரன்

மிழக இடைக்காலத்தை நீள அகலங்களாகவும் குறுக்கு வெட்டாகவும் வரலாற்று ஆய்வு செய்தவர் ஜெயசீல ஸ்டீபன். பொதுவாக, தமிழக வரலாறை எழுதும் தமிழாய்வாளர்கள் மிக இயல்பாக உணர்ச்சிவசப்பட்டு விதந்தோம்புவர். அவர்களால் எழுதப்படும் வரலாறு அறிவியல்பூர்வமானது என ஏற்றுக்கொள்ள ஆய்வுலகம் தயங்குவதற்கு அனுமானங்களைக் கூட தரவுகளைப் போல முன்வைக்கப்படுவதே முக்கியக் காரணம். தமிழக வரலாற்றை உணர்வுக்கொந்தளிப்பான அரசியல் கருவியாக மட்டுமே இவ்வாறான ஆய்வுகள் சுருக்கிவிடுகின்றன என்பதும் முக்கியமான காரணம். அவ்வகையில் எவ்வித உணர்வெழுச்சிக்கும் ஆட்படாமல் வெவ்வேறு நாடுகளில் உள்ள ஆவணக் காப்பகங்களுக்குச் சென்று சேகரித்த தரவுகளைத் தொகுத்துத் தமிழக இடைக்கால வரலாற்று நூல்களை எழுதியுள்ளார் ஜெயசீல ஸ்டீபன். ஆனால், தமிழக ஆய்வுலகிற்கும் கூட இவரது நூல்கள் பற்றிய விரிவான அறிமுகம் கிடைத்திருக்கவில்லை என்பதால் அவரது முக்கிய ஆய்வான ‘நெசவாளர்களும் துணிவணிகர்களும்’ நூலை அறிமுகப்படுத்துவது அவசியமாகிறது. இந்நூலைத் தமிழில் ந.அதியமான் கச்சிதமாக மொழிபெயர்த்துள்ளார்.

ஜெயசீல ஸ்டீபன், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வின்போது கடல்சார் வரலாறு மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக போர்ச்சுகீசு, பிரெஞ்சு, டச்சு மொழிகளைக் கற்று, போர்ச்சுக்கல் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கிடைத்த ஆவணங்களையும் தமிழ் கல்வெட்டுகள் மற்றும் எழுத்தாவணங்களையும் முதன்மை சான்றாகக் கொண்டு இந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

மேலும், தமிழ் வணிகக் குடும்பங்களின் ஆவணங்கள், கணக்குப் பதிவேடு, நாட்குறிப்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்தியும், நெசவாளர்கள், வணிகர்கள், தரகர்கள், முகவர்கள் போன்றோர் ஐரோப்பியர்களுக்கு ஏற்ப எப்படித் தங்களைத் துணி வணிகத்தில் ஈடுபடுத்திக்கொண்டார்கள் என்பதை ஆய்வுக்குட்படுத்துகிறார்.

தரவுகளின் வழியே துணி வெளுப்பவர்கள், சாயமிடுவோர், துணிகளில் வண்ணம் தீட்டுவோர், துணியில் அச்சுப்பணியில் ஈடுபட்டோர் ஆகியோருக்கு இடையிலான உறவுகளையும் துணி உற்பத்தி, மொத்த வணிகம், சில்லரை வணிகம், உள்ளூர் – அயல்நாட்டு வணிகம் ஆகியவை வழியே தமிழகத்தில் வணிக மூலதனம் உருவானதையும் விவரிப்பதே ஆவணங்களின் தொகுப்பிற்குள் நம்மை வழிநடத்துகிறது. வணிகம் மட்டுமல்லாமல் அதன் விளைவான தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் கருத்துப் பரிமாற்றம் தமிழகத்திலிருந்து ஐரோப்பாவிற்கு ஏற்பட்டதைப் பற்றிய விரிவான சித்திரத்தைத் தருகிறார்.

மேலும், இந்த ஆய்வு நூல் ஐரோப்பிய, ஆசிய துணி வணிகத்தில் தமிழகக் கடற்கரைப் பகுதி எவ்வகையில் ஆதிக்கம் செலுத்தியது; தமிழகக் கடற்கரைப் பகுதி துணிவணிகப் போக்குவரத்தில் ஐரோப்பா மற்றும் ஆசியா உடனான உறவு; காலனியாதிக்கம், தனிமனித குழுக்களின் ஆதிக்கம், ஐரோப்பிய உறவு ஆகியவற்றால் தமிழக துணி வணிகப் போட்டி எவ்வாறு விவேகமடைந்தது போன்றவற்றைக் கேள்விகளாகக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முதல் பகுதி

அடிப்படையில் இந்நூல் மூன்று மையப்பகுதிகளைக் கொண்டுள்ளது. முதல் பகுதியான காட்சியமைப்பு, தமிழகம் – இந்தியா பற்றிய தொன்மையான நூல்களில் நெசவுத்துணி உற்பத்தி, வணிகம் பற்றிய குறிப்புகளை வரிசைப்படுத்தி விவரிக்கிறது.

இப்பகுதி சோழமண்டலக் கடற்கரைப் பகுதியை வரையறுக்க வேண்டியதன் அவசியத்தைத் தெளிவுபடுத்துகிறது. அதன் ஊடாக முந்தைய ஆய்வுகளில் சோழமண்டலக் கடற்கரை பற்றி நிலவும் குழப்பங்களை வரிசைப்படுத்துகிறது. ஸ்டீபன், வரலாற்று நிலவரைவியல் அடிப்படையில் அப்பகுதியின் எல்லைகளை வரையறை செய்வதன் வழியே தமிழகப் பொருளாதார வரலாறு மற்றும் கடல்சார் வரலாறு பற்றிய தெளிவு பிறக்கும் என்கிறார்.

தமிழக – தெலுங்குப் பகுதிகளில் உற்பத்தியில் இருந்த துணி வகைகள், அதற்கேற்றத் தறி வகைகள் பற்றிய பொருள்சார் சமூகப் பின்னணியை விவரிக்கிறது. தறிகள் துவக்கத்தில் ஊர் பொதுவுடைமையாக இருந்து காலப்போக்கில் தனியுடைமையானது என்பன போன்ற வரலாற்றுத் தரவுகள் தமிழக சமூகப் பொருளாதார பரிணாம வளர்ச்சிப் பற்றிய ஆய்வுகளுக்குக் கூடுதல் தரவுகளை வழங்கக்கூடும்.

சோழர் காலத்தில் பறையர், சாலிய நெசவாளர்களுக்கெனத் தனித்தனி தறி புழங்கப்பட்டதை எடுத்துரைக்கிறார். சோழ, பாண்டிய மன்னர்கள் தத்தம் பகுதிகளில் துணி, நெசவு, பஞ்சு, நெசவாளர், வணிகம் உள்ளிட்ட எல்லாவற்றிற்கும் தனித்தனி வரி விதித்தமையை விவரிக்கிறது. கடுமையான வரி விதிப்புகள் காரணமாக நெசவாளர்கள் இடப்பெயர்வு நிகழ்ந்ததைப் பற்றி ஆங்காங்கே சில குறிப்புகளைக் கொடுக்கிறது. தமிழர்கள் இடப்பெயர்வு குறித்த விரிவான நூல் ஒன்றை ஸ்டீபன் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கி.பி. 1080 – 1360க்கு இடைப்பட்டக் காலத்தில் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான தமிழகத்தின் வணிகத் தொடர்பு, பாண்டிய ஆட்சியில் 12 -13ஆம் நூற்றாண்டில் கைகோளர்கள், சாலியர் போன்ற சமூகங்கள் நெசவுத் தொழிலில் ஆளுமை செலுத்தியுள்ள வரலாற்றுத் தரவுகள் போன்றவை தமிழ்ச் சமூக வளர்ச்சியைக் காட்டுகிறது. அதன் தொடர்ச்சியாக பாண்டியர்கள் 13 -14ஆம் நூற்றாண்டுகளில் புதிய நெசவாளர் குடியிருப்புகளை உருவாக்கியது, கோயில் நிருவாகங்கள் நெசவாளர்களுக்கெனத் தனிக்குடியிருப்பைக் கோயில் வளாகங்களுக்குள் உருவாக்கியது தொடர்பான குறிப்புகளும் காணப்படுகின்றன. இக்காலகட்டத்தில் கோயில்கள் நிறுவனமயப்பட்டிருந்ததால் அதன் மூலதனங்களை விஸ்தரித்துக்கொள்ள வருவாய் தரக்கூடிய புதிய தொழில்களைக் கோயில்கள் பயன்படுத்திக்கொண்டுள்ளன.

விஜயநகரப் பேரரசுக் காலத்தில் கைகோளர்கள் வசதி படைத்தவர்களாக விளங்கியுள்ளனர். நிலவுடைமையாளர்கள். ஆனதால் கைகோள் முதலி என அழைக்கப்பட்டனர். ஓர் எளிய நெசவாளர் சமூகம், துணி வணிகத்தால் அதன் சமூக – பொருளாதாரச் சித்திரமே மாற்றமடைந்து சமூகத்தை மேலாண்மை செய்யும் பிரிவினராக உருப்பெற்றுள்ளனர் என்ற குறிப்பு தமிழ்ச் சமூக வரலாற்றில் புதிய அணுகுமுறையை வழங்குகிறது.

இடைக்காலத் தமிழகப் பகுதிகளில் உற்பத்தியான துணி வகைகள் உள்ளூர் சந்தைகளில் விற்பனையானதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகியுள்ளது. தமிழக வணிகர்கள் அரசின் கீழ் இயங்காமல் தன்னாட்சிப் பெற்று தனித்து இயங்கியுள்ளனர் என்பது தமிழக, சமூகப் பொருளாதார வரலாற்றில் புதிய தரவுகளாக உள்ளன.

மேலும், நூலின் இப்பகுதியில் கலை வரலாற்று ஆய்வாளர்கள் இதற்குமுன் செய்த ஆய்வுகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. துணிவணிகம், துணி வகைகள், வெளிநாட்டு வணிகத் தொடர்புகள், வண்ணத் துணி வேலைப்பாடுகள் குறித்த ஆய்வுகளிலும், நெசவுத்தொழில் சார்ந்த பொருளாதார – வரலாறு – சமூக வரலாற்று ஆய்வுகளிலும் உள்ள போதாமைகளை விளக்குகிறது. இதற்கு முந்தைய ஆய்வுகளில் ஐரோப்பிய வணிகமே மையப்பொருளாக இருந்தமையால் இந்திய, தமிழக வணிகம் பற்றிய சான்றுகள் அதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றனவே ஒழிய, தமிழக வணிக வரலாற்றைக் கருப்பொருளாகக் கொண்ட ஆய்வுகள் செய்யப்படவில்லை. இந்த இடைவெளியின் பொருட்டே, தான் ஆய்வு மேற்கொண்டதாக ஜெயசீல ஸ்டீபன் குறிப்பிடுகிறார்.

இரண்டாம் பகுதி

இப்பகுதியில் நெசவு சமூகங்களில் நிகழ்ந்த மாற்றங்கள், வெளிநாட்டுக் கடல் வணிகம் பற்றிய விவரணைகள் ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன.

நெசவாளர்களுக்கு வழங்கப்பட்ட கோயில் வளாகக் குடியிருப்புகள் ‘திருமடைவிளாகம்’ எனவும், தறிகள் நிறைந்திருந்ததற்கு ஏதுவாக அகலமாக இருந்த தெருக்கள் ‘பெருந்தெரு’ எனவும் அழைக்கப்பட்டன. நெசவாளர்களைக் குடியமர்த்தியதால் கோயிலின் வருமானம் பெருகியதுடன் கோயில் நெசவு மையமாகவும் நிறுவனமாகவும் செயல்பட்ட வரலாற்றுத் தரவுகளை ஸ்டீபன் தொகுக்கிறார்.

“16ஆம் நூற்றாண்டில் முதலாளித்துவக் கூறுகள் தமிழகப் பகுதியில் துவக்கம் பெற்றதன் சான்றாக, நெசவாளர்களாக இருந்த கைகோளர்கள் இந்தக் காலகட்டத்தில் வணிகர்களாக வலுப்பெற்றதனால் ‘முதலி’ என்ற பின்னொட்டுடன் குறிக்கப்பட்டனர். தொழிலாளர்களாக இருந்த பிரிவினர் இக்காலகட்டத்தில் தொழிலுக்கான மூலதனத்தைப் பெற்ற சமூகமாக மாறினார்கள். வணிகர்களாக மாறிய நெசவாளர்கள் ‘செட்டி’, ‘நாயக்கர்’ ஆகிய பின்னொட்டைப் பெற்றிருந்தனர். இக்காலகட்டத்தில் நெசவு மையங்களுக்குத் தனியுரிமையாளர்கள் வரப்பெற்றனர். சந்தை நிலவரம் குறித்த போதிய அறிவை நெசவாளர்கள் பெற்றிருக்கவில்லை. இந்த நிலையை வணிகர்கள் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு நெசவாளர்களிடம் தங்கள் ஆளுமையைச் செலுத்தினர். துணிகளின் தேவை அதிகமாக இருந்தமையால் வணிகர்கள் முகவர்களாகச் செயல்பட்டனர். இக்காலகட்டத்தில் தமிழகப் பகுதியில் நெசவாளர்கள் மீது வணிகர்களின் ஆளுமை மிகக் கடுமையாக இருந்தது.”

இந்தியாவில் பண்டைய முதலாளித்துவம் நிலவியது குறித்து ரொமிலா தாப்பர் போன்ற வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுவதும், சங்க காலத்தில் பாடல் பாடி பரிசு பெறும் முறையை விளக்குவதன் வழியே முதலாளித்துவச் சாயல்கள் தெரிவதாக டி.தருமராஜ் குறிப்பிடுவதை ஜெயசீல ஸ்டீபன் சமூக – பொருளாதார – வரலாற்று அடிப்படையில் விளக்குவதும் வேறு வேறு வகையான ஆய்வுகள். இவை பண்டைய இந்திய தீபகற்பத்தில் நிலவிய முதலாளித்துவச் சமூகக் காரணிகளைக் கவனப்படுத்துவது தெற்காசியா பற்றிய ஆய்வுகளில் புதிய திறப்புகளை அளிக்கிறது.

இடைக்கால சமுதாய நிலை

கைகோளர், தேவாங்கர், சாலியர், பட்டுநூல்காரர் போன்ற நெசவு சமுதாயத்தில் கைகோளர்கள் கோயில்களுடன் தொடர்புடையவர்களாக இருந்ததால் உயர்நிலையில் இருந்தனர். கைகோள முதலிகள் உயர்பதவிகளை வகித்ததுடன் பல கோயில்களின் நிர்வாகிகளாகவும் இருந்துள்ளனர்.

நெசவாளர்கள் தங்கள் வாழ்க்கை வட்டச் சடங்குகளில் பல்லக்கில் செல்லும் உரிமை, சங்கூதிக்கொள்ளும் உரிமை, இருமாடி வீடு கட்டிக்கொள்ளும் உரிமை, இரட்டைக் கதவுகள் வைத்துக்கொள்ளும் உரிமை போன்றவற்றை அரசு அளித்திருந்தது. ஒரு பகுதி நெசவாளர்களுக்கு அளிக்கப்பட்ட உரிமையைப் பிற பகுதி நெசவாளர்களும் கோரிக்கை விடுத்துப் பெற்றுள்ளனர். நெசவாளர்களுக்கிடையே ஒற்றுமை இருந்ததால் இது சாத்தியமாகியுள்ளது. அதாவது, வணிக முக்கியத்துவம் பெற்ற துணி நெசவாளர் சமூகம் பொருளாதார வளர்ச்சி பெற்றதுடன் பண்பாட்டளவிலான மாற்றத்தைப் பெற்றுள்ளனர் என்பதாக ஜெயசீல ஸ்டீபனின் தரவுகள் விளக்குகின்றன.

துணிவணிகத்திற்கு மாற்றாக, போர்ச்சுகீசியர்கள் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் இருந்து சாதிக்காய்களைப் பண்டமாற்றாகப் பெற்றதால் வணிக மூலதனம் அவசியமில்லாததாக இருந்ததாக ஸ்டீபன் குறிப்பிடுகிறார்.

சோழ மண்டலப் பகுதியில் பதினைந்து – பதினாறாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பஞ்சம் துணிவணிகத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளதையும், தொடர் பஞ்சத்தால் ஏற்பட்ட கடல் வணிகக் குழப்பங்கள் போர்ச்சுகீசியர்களின் துணி வணிகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதையும் விவரித்துள்ளார்.

மேலும், டச்சுக்காரர்களுக்கும் போர்ச்சுகீசியர்களுக்குமான வணிகப் போட்டி, துறைமுகங்களைக் கைப்பற்றுவதில் உள்ள முரண்பாடுகள் பற்றிய விரிவான விவரணைகளைக் குறிப்பிடுகிறார்.

மூன்றாம் பகுதி

தமிழ்த் துணி வணிகம் எப்படிச் சமூகப் பொருளாதாரத்தில் அசாத்திய மாற்றங்களைக் கொண்டுவந்தது என்பதை இப்பகுதி விவரிக்கிறது.

பதினாறாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சமூகங்கள் இடங்கை – வலங்கை சாதிகளாகப் பிரிந்திருந்த காலகட்டம். அப்போது இவ்விரு சாதிகளுக்கும் இடையிலான மோதல் துணிவணிகத்தில் எப்படி வெளிப்பட்டது என்பதையும் விளக்குகிறது.

கி.பி. 1660இல் இடங்கை – வலங்கை சாதிகளைச் சேர்ந்த செட்டியார்களுக்கு இடையே மோதல் இருந்துள்ளது. புதிதாக வணிகம் மேற்கொண்டவர்கள் இடங்கை சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்ததால், கி.பி. 1707ஆம் ஆண்டு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுகையின் கீழ் வலங்கை இடங்கை வேறுபாடு பாராமல் வணிகம் மேற்கொள்ள அரசு நடைமுறைப்படுத்தியது. அதனால் மரபான துணி வணிகர்களான வலங்கை வணிகர்கள் இடங்கை வணிகர்கள் மீது எதிர்ப்புணர்வோடு இருந்துள்ளனர். துணி வணிகத்தின் வருமானத்தால் வேறு தொழில்களைச் சார்ந்த இடங்கை வணிகர்கள் அதை நோக்கி வந்தனர் என்பதாக ஆவணங்கள் வழி குறிப்பிடுகிறார்.

துணி வணிகத்தில் துவக்கத்தில் இருந்த மரபுசார் நடைமுறையான, தேவையான துணி வகைகளுக்கேற்ப முன்பணம் அளித்துத் துணியை உற்பத்தி செய்ய நெசவாளர்களிடம் கோருவது காலப்போக்கில் மாற்றம் பெற்று, வணிகர்கள் நெசவாளர்களிடம் கடுமையாக நடந்துகொண்டதாக ஸ்டீபன் குறிப்பிடுகிறார். இவ்வாறான வரலாற்றுத் தரவுகளைச் சமகால முதலாளித்துவச் சூழலுடன் பொருத்திப் பார்க்க இயலும்.

கி.பி. 1642இல் கடுமையான வரி மற்றும் கடன் சுமை காரணமாகத் தமிழக டச்சுப் பகுதியிலிருந்து வணிகர்கள் இடம்பெயர்ந்ததால் ஒப்பந்தத்தை மீறியவர்களுக்கு டச்சுக்காரர்கள் தண்டனை அளித்ததாகக் குறிப்பிடுகிறது.

டச்சுக்காரர்கள் தனிவணிகர்களை ஊக்குவிக்காமல் வணிகக் கூட்டினை ஊக்குவித்தனர். குழு வணிக நடவடிக்கைக்குத் தலைமை வணிகரை நியமிக்கும் முறை இருந்துள்ளது. இந்தத் தலைமை அதீத அதிகாரத்தைப் பெறுவதாகத் தெலுங்கு வணிகர்கள் போராடிய செய்தியும் நூலில் வருகிறது.

கூட்டுச் சரக்ககங்களை டச்சுக்காரர்கள் துவங்கினர். துணி வணிகத்தின் எளிய முதலீட்டை விட வணிகக் குடும்பத்தினரின் மூலதனம் அளவில் மிகுந்ததாக இருந்ததாலும், ஆபத்து நிறைந்த கடல் வணிகத்தால் உண்டாகும் நன்மை தீமைகளைப் பகிர்ந்துகொள்வது எளிதாக இருந்தமையாலும் கூட்டுச் சரக்கக வணிகத்திற்குத் தமிழ் வணிகர்கள் உடன்பட்டார்கள். இதன் காரணமாகப் பழவேற்காட்டில் கி.பி. 1658, 1659, 1660, 1661, 1662, 1664, 1665 ஆகிய ஆண்டுகளிலும் நாகப்பட்டினத்தில் கி.பி. 1665ஆம் ஆண்டிலும், தூத்துக்குடியில் கி.பி. 1682, 1691, மணப்பாட்டில் கி.பி. 1697 ஆகிய ஆண்டுகளிலும் கூட்டுச் சரக்ககங்கள் துவங்கப்பட்டன என்ற தரவு வணிக முறைமைகளில் ஏற்பட்ட மாற்றங்களை விளக்குகிறது.

கடல் துணிவணிகம் தமிழகப் பகுதிகளில் பெருமளவு வளர்ச்சிப் பெற்றிருந்ததாலேயே கூட்டுச் சரக்ககங்கள் தோற்றம் பெற்றுள்ளன. மேலும், வணிகக் குழுக்களிடையே ஒருங்கிணைப்பு இருந்துள்ளதையும் இந்தக் கூட்டுச் சரக்ககங்கள் பற்றிய தரவுகள் காட்டுகின்றன.

போர்ச்சுகீசியர்கள் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பொருள் வணிகம் பரிமாற்றத்திற்கான பதிலீட்டு வணிகமுறை அப்போதும் நடைமுறையில் இருந்தது. ‘பதிலீட்டு வணிகமுறை’ என்பது ஒரு வணிகர் அல்லது கப்பலின் தலைவன் கப்பலை அடமானமாக வைத்துப் பண மூலதனம் உள்ள ஒருவரிடம் கடன்பெற்று, கடல்கடந்து வணிகத்தை மேற்கொண்டு திரும்பி தாயகம் வரும்போது ஒப்பந்தப்படி முடிவு செய்த கடனையும் வட்டியையும் திரும்பச் செலுத்தும் முறையாகும். எதிர்பாராத விதத்தில் கப்பல் திரும்பிவராமல் பொருளுக்குச் சேதம் விளைந்தால் அவர் கடனைத் திருப்பித் தரத் தேவையில்லை. இவ்வாறான தகவல், நவீன பொருளாதார கடன்முறையைப் போல தீவிரமான வளர்ச்சி பெற்ற பொருளாதார முறைமைகளை அக்கால வணிகச் சமூகம் கையாண்டுள்ளது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

செட்டியார்கள், பிள்ளைமார்கள்

மூன்றாவது பகுதியின் பிற்பகுதியில் வணிகத்தில் ஈடுபட்ட தமிழ்ச் சாதிகளின் பொருளாதார நிலை, பெரும் வணிகர்களின் வளர்ச்சி பற்றிக் குறிப்பிடப்படுகிறது.

துணி ஏற்றுமதி தொழிலில் கால் பதிக்கத் துடித்த டச்சுக்காரர்கள் அப்பகுதியில் முன்னணியில் இருந்த வணிகர்கள் குறித்த கணக்கெடுப்பை நடத்தியது பற்றிய குறிப்பில், செட்டி வணிகர் ஒருவர் 6,00,000 பகோடாக்கள் அளவிற்கு மிகப்பெரிய மூலதனத்தைப் பயன்படுத்தினார் என்கிறது. அக்காலகட்டத்தில் இது மிகப்பெரிய மூலதனமாகும்.

அதேபோல் ஆண்டியப்ப முதலியார் என்பவர் கி.பி. 1730 – 1777 காலத்தில் வணிகம் மேற்கொண்டு பெரும்செல்வந்தரானார் என்ற தகவலும் அக்காலகட்டத்தில் பெருவணிகர்கள் எழுச்சிப் பெற்றதைக் காட்டுகிறது.

தமிழகக் கடற்கரைப் பகுதியில் பெரும்பாலான வெள்ளாள முதலியார்கள் தம் மரபுத் தொழிலான தானிய வணிகத்தில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தனர். ஆனால், பல வெள்ளாள முதலியார்கள் துணி வணிகத்தை மேற்கொண்டு மிகுந்த வளமையுடன் விளங்கினர். பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து முதலியார்களும் பிள்ளைமார்களும் நிலக்குத்தகை உரிமையைப் பெற்றனர். மேலும், தஞ்சாவூர் மராத்திய மன்னர்கள் நாகூர் துறைமுகத்தில் சுங்கவரி வசூலிக்க முதலியார் பிரிவைச் சார்ந்த பலருக்குக் குத்தகைகள் அளித்தனர். கடல் சுங்கம் வசூலித்தத் தொகையில் குறிப்பிட்ட பங்கைத் தஞ்சாவூர் மராத்திய மன்னர்களுக்கு அளித்துவிட்டு ஏனைய தொகையைத் தமதாக்கிக்கொண்டனர். பிள்ளைகளும் முதலியார்களும் அரசுடன் இணக்கமாக இருந்ததால் அரசுசார் நிர்வாகப் பொறுப்புகளில் இருந்துள்ளதாகக் குறிப்புகள் விளக்குகின்றன.

அதே காலகட்டத்தில் பிரெஞ்சு இயேசு சபை மத அடிப்படையில் துபாஷி பதவி அளிக்க வேண்டும் என வலியுறுத்தியது. போலிக் குற்றச்சாட்டின் அடிப்படையில் அப்போது துபாஷியாக இருந்த நைனியப்ப பிள்ளையைச் சிறையிலடைத்துத் துன்புறுத்தியதால் நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கிறார். அவரது நண்பர்களும் கடுமையாகத் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர். இதனால் வணிகத்திற்கு யாரும் வர இயலாத நிலை ஏற்பட்டதால் பிரெஞ்சு அரசு தன்னளவில் பெரும் இழப்பைச் சந்தித்தது. நைனியப்பப் பிள்ளை என்ற மிகமுக்கியமான வணிகருக்கு நடந்த மத அடிப்படையிலான அநீதி பிரெஞ்சுப் பகுதியில் வணிக வீழ்ச்சிக்குக் காரணமானது என்ற குறிப்பு வருகிறது. பின்னர் பிரெஞ்சு துணிவணிகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும் துணிவணிகம் வீழ்ந்த பின்னர் பவள வணிகத்திற்குத் தமிழ் வணிகர்கள் மாறியுள்ளதாகவும் ஸ்டீபன் குறிப்பிடுகிறார்.

ஆனந்தரங்க பிள்ளை

ஆனந்தரங்க பிள்ளையின் நாட்குறிப்பு நூல் தொகுதிகளை முழுவதுமாகப் படிக்க இயலாதவர்கள் இப்பகுதியைப் படிக்கும்போது அவரது தொழில், வணிகத் தொடர்பு, அரசுடனான நெருக்கம், குத்தகை உரிமைகள், அவரிடம் இருந்த கப்பல், அவரின் கடன் முறை, வணிக முதலீடு, அவரின் சொத்து மதிப்பு என விரிவானதோர் அறிமுகம் கிடைக்கும்.

“கி.பி.1761ம் ஆண்டு சனவரி 12ம் நாள் கணக்கின்படி பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் மட்டும் ஆனந்தரங்க பிள்ளையிடம் 13 லட்சம் ரூபாய் கடன்பெற்றிருந்தது. இப்பெருங்கடனை ஆனந்தரங்க பிள்ளையின் வாரிசுகளுக்கு பிரெஞ்சு அரசு முழுவதுமாகத் திரும்ப வழங்கவில்லை” என ஸ்டீபன் குறிப்பிடுவதன் வழியே ஆனந்தரங்க பிள்ளையின் செல்வாக்கு, செல்வ வளம் பற்றிய சித்திரம் விரிவடைகிறது.

“தமிழகக் கடற்கரைப் பகுதியில் பிள்ளை என்னும் வேளாளர்கள் ஆடு, மாடு மேய்க்கும் தொழில் மேற்கொண்டபோது பலர் துணி வணிகத்தையும் நிலவரி வசூல் தொழிலையும் மேற்கொண்டு வளம்மிகு செல்வந்தராக விளங்கினர்” என்ற குறிப்பு முழு வேளாளர் சமூகமும் வணிக எழுச்சி பெற்றுச் செல்வந்தக் குடிகளாகவில்லை என்பதைத் தெரிவிக்கிறது.

மரக்காயர்கள்

மரக்காயர்களின் தமிழகக் குடியேற்றம், அவர்களின் வணிகத்திறன், அவர்களுக்கும் ஏனைய இஸ்லாமியர்களுக்கும் இடையிலான திருமண உறவு போன்றவை இப்பகுதியில் விளக்கப்படுகின்றன.

மரக்காயர்களுக்கும் போர்ச்சுகீசியர்களுக்குமான வணிக மோதல் அவர்களை டச்சுக்காரர்களுடன் இணைத்ததால் போர்ச்சுகீசியர்களால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். மரக்காயர்கள், பரங்கிப்பேட்டை, பாண்டிச்சேரி, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் குடியிருந்து அச்சே, டாந்தம், கேதா, ஜோஹோர் ஆகிய தென்கிழக்காசியத் துறைமுகங்களுக்குக் கப்பலில் சென்று வணிகம் மேற்கொண்டனர் எனவும், பல மொழிகள் பேசத் தெரிந்தவர்களாக இருந்ததால் ஐரோப்பியர்களால் ஏமாற்ற இயலாதவர்களாகவும் போட்டியாளர்களாகவும் இருந்தனர் என்று இப்பகுதி விளக்குகிறது.

மரக்காயர்கள் பதினேழாம் நூற்றாண்டில் பரங்கிப்பேட்டை துறைமுகத்திலிருந்து இருபது கப்பலில் தென்கிழக்கு ஆசியாவிற்கு வணிகம் செய்துள்ளனர் என்ற குறிப்பும், துணிவணிகத்தால் மரக்காயர்களின் சொத்து மதிப்பு இரண்டு லட்சம் பக்கோடாக்களுக்கு மேல் இருந்தது என்ற குறிப்பும் அவர்களின் செல்வநிலையைக் காட்டுகின்றன. மேலும், மரக்காயர்கள் புதிய கடல் வழிகளைக் கண்டறிந்து வணிகம் மேற்கொள்பவர்களாகவும் இருந்துள்ளனர். டச்சுக்காரர்களின் நேர்மையின்மையாலும் ஊழலாலும் பாதிக்கப்பட்ட மரக்காயர்கள் நாகூரிலிருந்து பிளாங்கிற்குக் குடிபெயர்ந்துள்ளனர்.

ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக் குழுமத்தின் குறிப்பொன்று கி.பி. 1780 – 82 ஆண்டுகளில் தமிழ் இசுலாம் வணிகர்களும் செட்டியார்களும் 32,120 எண்ணிக்கையிலான பலவகையானத் துணிகளை மலாக்காவிற்கு ஏற்றுமதி செய்தனர் எனவும், அது கி.பி. 1791 – 1793 ஆண்டுகளில் 40,060 துணிகளாக உயர்ந்தது எனவும் குறிப்பிடுகிறது. கி.பி. 1828 – 1829 ஆண்டில் மலாக்காவுடனான தமிழக துணிவணிகம் 39 சதவீதமாக இருந்துள்ளது என்ற குறிப்பு தமிழ் வணிகர்கள் தெற்காசியப் பகுதியில் செலுத்திய ஆதிக்கத்தைக் குறிக்கிறது.

இடைக்கால முதலாளித்துவம்

17ஆம் நூற்றாண்டில் தமிழகப் பகுதியில் துணிவணிகம் எழுச்சியடைந்தது. அதனால் துணி, நெசவு சாராத சமூகங்களும் துணிவணிகத்தில் கவனம் செலுத்தின. ஐரோப்பிய வணிக ஆர்வத்தின் காரணமாகப் பொருளாதாரத் தளத்தில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக முதலாளித்துவப் பொருளாதாரமான தனிமனித வளப் பெருக்கம், சந்தைப் போட்டிகள் போன்றவற்றை இடைக்கால வணிகச் சமூகம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று குறிப்பிடுவதன் வழியே, அக்காலகட்டத்தைத் தமிழக முதலாளித்துவச் சமூகக் காலம் என்று வரையறுக்க முயல்கிறார் ஜெயசீல ஸ்டீபன்.

துணிவணிகத்தில் முகவர்களையும் இடைத்தரகர்களையும் மூன்று படிநிலைகளில் வகைப்படுத்துகிறார். முதல் படிநிலையில் உள்ள முகவர்கள் வணிகர்களின் உறவினர்கள், நண்பர்கள். இரண்டாவது நிலை முகவர்கள் முதல் நிலை முகவர்கள் கீழ் பணிபுரிபவர்கள். மூன்றாம் நிலை முகவர்கள் புதிய ஒருவர் பணிக்கு அமர்த்தப்பட்டுத் துணி கொள்முதலைக் கற்றுத் தேர்ச்சி பெறும் வகையில் பணிபுரிபவர் என்பதாகப் பிரிக்கிறார். அக்காலகட்டத்தில் முகவர்கள், இடைத்தரகர்களுக்கு முன்பணம் அளிக்கப்பட்டுத் துணி கொள்முதல் செய்வதும், ஊதியம் வழங்குவதும் நடைமுறையில் இருந்துள்ளன. வணிக மையங்களுக்கான துணி கொள்முதலை முகவர்களும் இடைத்தரகர்களும் கவனித்துக்கொள்ளுமாறு அன்றைய வணிக நடைமுறை இருந்துள்ளது. தரகர்கள் சொந்தப் பணத்தைக் கொண்டு துணி கொள்முதல் செய்து தரகு பெற்று வணிகர்களிடமும் ஐரோப்பியர்களிடமும் விற்பார்கள் எனவும், முகவர்கள் ஐரோப்பியர்களின் வணிகக் குழுமத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றியுள்ளனர் எனவும் விவரிக்கிறார். முகவர், தரகர் போன்ற வணிகம், வணிகக் கூட்டு, கூலி முறை, இடப்பெயர்ச்சி, உழைப்புச் சுரண்டல், பெருந்தனக்காரர்கள் சார்ந்த கூறுகள் முதலாளித்துவச் சமூகச் செயல்பாட்டின் காரணிகளாக ஸ்டீபன் எடுத்துரைப்பது அவரின் கருதுகோளுக்குக் கூடுதல் வலுசேர்க்கிறது.

இறுதியாக ஜெர்மானிய சமூகவியல் ஆய்வாளரான மேக்ஸ் வெபரின் “முதலாளித்துவப் பொருளாதார உருவாக்கத்திற்குச் சமய – பண்பாட்டுக் கூறுகள் முக்கியக் காரணிகளாக அமையும்” என்ற கருத்தைத் தமிழக இடைக்கால முதலாளித்துவச் சூழலைக் கொண்டு ஜெயசீல ஸ்டீபன் மறுக்கிறார். அதாவது, தமிழக வணிக வளர்ச்சிக்கு அரசியல், பொருளாதாரம் போன்ற காரணிகளே முக்கியமானதாக அமைந்ததே ஒழிய சமய – பண்பாட்டுக் கூறுகள் அல்ல என்கிறார். இந்தக் கருத்திற்காக அவர் எடுத்துக்கொண்ட தரவுகளும் விசாலமானவை. ஜெயசீல ஸ்டீபன் தமிழக, சமூகப் பொருளாதார வரலாறு பற்றிய ஆய்வில் ஆச்சரியப்படத்தக்க வகையில் முக்கியமான ஆய்வு முடிவை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், தமிழகக் கடல் வணிகம் குறித்த ஆய்வுகள் மிகமிகக் குறைவு என்பதாலும் ஜெயசீல ஸ்டீபனின் இந்நூல் மிகவும் இன்றியமையாததாக உள்ளது.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger