பூர்வகுடி வெளியேற்றமும் நவீன இன அழிப்பும்

- சவிதா முனுசாமி

சென்னை எனப்படும் பெரும்பறைச்சேரியை வெள்ளையர்கள் வருகைக்கு முன்பிருந்தே கொஞ்ச கொஞ்சமாய் நிலத்தை உழுது செப்பனிட்டு உழைத்து பாதுகாத்து வந்தவர்கள் பூர்வீகக் குடிகளான இப்போதைய சென்னைவாழ் சேரிமக்கள்தான். அதனால்தான் வெள்ளையன் கருப்பர் நகரம் ‘block town’ என்று இதனை அழைத்தார்கள். ஆனால் இன்று இவர்கள் உழைப்பில் உருவான இந்தச் சேரிகளை திராவிட இயக்கங்கள் தொன்று தொட்டு அழித்தே வந்திருக்கிறது.

சிங்காரச் சென்னை திட்டங்களெல்லாம் ஏதோ நேற்று கழகங்கள் ஆட்சியில் உருவானதல்ல, நீதிக்கட்சி ஆட்சியிலேயே ஒடுக்கப்பட்ட பட்டியல் மக்களைச் சென்னையை விட்டு வெளியேற்றும் படலம் ஆரம்பமாகிவிட்டது. அந்த வெளியேற்றத்தை நவீனப்படுத்தும் திட்டம்தான் சிங்காரச் சென்னை திட்டம் முதல் இப்போதைய “smart city” திட்டம் வரை.

ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பின்னிமில் தொழிற்சாலையில் தொழிலாளர்களிடையே ஏற்பட்ட பிணக்கின் காரணமாகவும், பின்னிமில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். அப்போது ஆங்கிலேய அரசு பட்டியல் மக்களின் தலைவராகவும் நீதி கட்சியில் அங்கம் வகித்தவராக இருந்த எம்.சி. ராஜாவின் உதவியினைக் கோரியது. எம்.சி. ராஜாவும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பட்டியல் மக்களால் இதனால் ஏற்படும் இழப்புகளைத் தாங்கிக்கொள்ள இயலாது என்பதாலும் இப்போராட்டத்தின் பயனை உயர் வகுப்பார் மட்டுமே அனுபவிப்பார்கள். எமது மக்கள் போராட்டங்களின் விளைவால் பஞ்சத்திற்கும், வேலை இழப்பையும், உயிர்ப்பலிகளை மட்டுமே பரிசாகப் பெறுவர் என்பதால் பட்டியல் மக்களைப் பின்வாங்க செய்தார்.

இதன் விளைவாக சென்னையில் பின்னிமில்லில் பணியாற்றும் உயர்சாதி இந்துக்கள், நீதிக்கட்சியின் தூண்டுதலால் 1921 ஜூன் 28 அன்று இரவு புளியந்தோப்பு சேரிமீது தாக்குதல் தொடுத்தார்கள். மீண்டும் ஆகஸ்ட் மாதம் பெரும் மோதலாக வெடித்தது அத்தாக்குதல். அதுவே புளியந்தோப்பு கலவரம் 1921 என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கலவரத்தில் பட்டியல் மக்களும் பட்டியல் அல்லாத சாதி இந்துக்களும் மோதிக்கொண்டனர்.

இதில் பட்டியல் மக்களின் குடிசைகளும் சொத்துக்களும் சூரையாடப்பட்டுச் சேதப்படுத்தப்பட்டன. மேலும், இதில் மூன்று பேர் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஆங்கிலேய அரசின் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஆறுபேர் சுட்டும் கொல்லப்பட்டனர்.

குடிசைகள் சேதப்படுத்தப்பட்டக் காரணத்தால் புளியந்தோப்பில் இருந்த சுமார் மூவாயிரத்திற்கும் அதிகமான பட்டியல் மக்களை ஆங்கிலேய அரசாங்கம் அங்கிருந்து வெளியேற்றி வியாசர்பாடி முகாம்களில் தங்க வைத்தது. இதில் ஏராளமானவர்கள் இறந்தார்கள். இதைப் பற்றியும் திரு.வி.க. தன் சுயசரிதையில், “பறையர் மக்கள் சென்னையின் மையப் பகுதியில் குடியிருப்பதுதான் கலவரத்துக்குக் காரணம் என்று சொல்லி நீதிக்கட்சி சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் பறையர் மக்களைக் குடியேற்றி சிதறடித்தது. புளியந்தோப்பு பறையர்கள் குடியிருப்பு முழுமையாகவே காலி செய்யப்பட்டது. அங்கே முஸ்லீம்களைக் பெருவாரியாகக் குடியேற்றினர். பின்னிமில்லில் பட்டியல் மக்களைச் சாதியக் கண்ணோட்டத்தில் அணுகியவர்களுக்கு ஒத்தூதாமல் ஆங்கிலேய அரசுக்கும் ஆதரவாக இருந்த பறையரின மக்களைத் திட்டமிட்டே அடித்துத் துன்புறுத்தி, அவர்களின் குடியிருப்புகளை சென்னை மையப்பகுதிகளிலின்றி அகற்றி எந்தவித வசதியும் அற்ற நிலைக்கு இம்மக்களைத்தள்ளி அவர்களை உளவியல் ரீதியாக ஊனமாக்கி ஒடுக்கியப் பெருமை நீதிகட்சியையே சாரும்.

இதற்கெல்லாம் யார் சாமரம் வீசியது.?! யாருடைய ஆட்சியில் இது பன்மடங்கு பல்கிப் பெருகியது.!? இன்னும் ‘Blockers street‘-களை paraiah தெருக்களின் பெயர்களை நீங்கள் கண்கூடாகப் பார்க்கலாம். ஆனால் அந்த மக்களை அங்கே அதிகம் பார்க்க முடியாது. ஏனெனில் அவர்கள் அங்கே இல்லை. அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு யாருக்காக யாரை வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள் சென்னை Day என்று.!?

பழைய Records ஆவணங்களைப் பார்த்தீர்களென்றால் சாக்கிய குளம் என்றும் ‘பெரியசேரி’ என்றும்தான் உள்ளது.!

நீதிக்கட்சியின் தொடர்ச்சியாகத்தான் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு அ.தி.மு.க. ஆட்சிகள் உட்பட திராவிட கட்சிகளால் சென்னைவாழ் பூர்வகுடி மக்களைச் சிங்காரச் சென்னை என்ற பெயரிலே சென்னையை விட்டு நவீன வதை முகாம்களான சென்னைக்கு வெளியே துரத்தப்பட்டார்கள். சென்னைக்கு வெளியே துரத்தப்பட்ட மக்களுக்கு அருகில் பள்ளிக்கூடம் இல்லை; ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லை; அவர்களுக்கு அங்கே வேலைவாய்ப்புகள் ஏதும் இல்லை; வெளியே பணிக்குச் சென்று திரும்ப போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாத ஏதோ ஒரு தீவில் அடைத்து வைக்கப்பட்ட கைதிகளைப்போல் இம்மக்களை வதைக்கிறது இந்த மானங்கெட்ட அரசுகள். இந்த அடிப்படை வசதிகள் எதுவும் வழங்க துப்பற்ற அரசுகள் சென்னையில் நடைபெறும் குற்ற வழக்குகளுக்குப் பொய்க்கேசு போட ஆட்களைத்தேடி இந்த வதைமுகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களிடம் போய் நிற்கிறது. ஏனெனில், இவர்களின் பார்வையில் ஒடுக்கப்பட்டவன், சேரிக்காரன், ஏழைகளெனில் அவன் குற்றவாளியாகத்தான் இருப்பான் என்கிறது, ஏவல்துறை கூட்டமும் கையாளாகாத அரசுகளும்.

சென்னையைச் சுற்றி எத்தனையெத்தனைப் பகுதிகள் ஆக்கிரமிப்புகளால் சூழ்ந்துள்ளது. மார்வாடி பனியா கைகளின் பிடியிலும், அரசியல்வாதிகளின் ஆக்கிரமிப்பாலும், உயர்சாதி இந்துக்களின் வசமும் இன்று இச்சென்னை உருமாறி நிற்கிறது.

மெட்ராசோட பழையப் பெயரே ‘கருப்பர் நகரம்தான்’. பெரியசேரி என்றும் பெயர். பறையர்கள் அதிகமாக இருந்த நகரமது. இம்மக்கள் உழைத்து உருவாக்கிய நகரம் இன்று பீடா வாயர்கள் கையிலும் ஆதிக்கச் சாதிகளின் பிடியிலும் இருக்கிறது. இதை உழைத்து வளப்படுத்தி உருவாக்கிய மக்கள் சென்னைக்கு வெளியே கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், எழில்நகர் எனத் தூக்கி தூர வீசப்பட்டுள்ளார்கள்.

இதற்கெல்லாம் யார் சாமரம் வீசியது..?! யாருடைய ஆட்சியில் இது பன்மடங்கு பல்கி பெருகியது..!?

சிங்காரச் சென்னைக்கு அசிங்கங்களாய்க் கருதி சென்னைக்கு வெளியே துரத்தப்பட்ட சென்னையின் பூர்வீக சேரிவாழ் மக்கள் கண்ணகி நகர், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி எனச் சென்னைக்கு வெளிபுறத்தே குப்பைகளைப் போல் கொட்டப்பட்டுக் கிடக்கின்றனர். எவ்வித அடிப்படை வசதிகள் ஏதுமற்று, அடுக்குமாடிக் குடியிருப்பு, குடிசைமாற்று வாரியத்தின் அடிப்படையில் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீடுகள் புறாக் கூண்டைப் போல காட்சியளிக்கிறது..! இம்மக்களின் பிரிதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்பி, எம்.எல்.ஏ-க்களின் வீட்டுக் கழிப்பறைகள் இருக்கும் அளவுகூட இந்தக் குடிசைமாற்று வாரியத்தால் வழங்கப்படும் வீட்டின் அளவுகள் இல்லை.

சென்னை தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து 22ஆம் தேதி சென்னை தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இதே நாளில் 1639-இல் கிழக்கிந்தியக் கம்பெனி, செயின் ஜார்ஜ் கோட்டை தொடர்பாக ஓர் ஒப்பந்தம் செய்துக்கொண்டது. அந்த நாளைதான் மெட்ராஸ் தினமாக இங்கு ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறார்கள். பழைய சென்னப்பட்டினத்தின் ரெக்கார்டுகளை எடுத்துப் பார்த்தால் பல இடங்களில் சாக்கிய குளம் என்றே காணக்கிடைக்கிறது. “பெரிய சேரி” எனவும், கருப்பர் நகரம் எனவும் அழைக்கப்பட்டு வந்திருப்பதைக் காணலாம். எந்தச் சேரி மக்களால் இச் சென்னைப் பட்டினம் உருவானதோ, அந்த மக்களையே வளர்ச்சி, டிஜிட்டல், சிங்காரச் சென்னை என்றப் பெயரில் சென்னைக்கு வெளியே நவீன தீண்டாமைச் சேரிகளை உருவாக்கி வைத்துள்ளது இந்த அரசுகள். எம்மக்களால் உழைத்து உருவாக்கப்பட்ட சென்னை இன்று அரசியல்வாதிகளின் உல்லாசப்புரியாகவும், பன்னாட்டு முதலாளிகளின் பணம் கொழிக்கும் நிறுவனங்களாகவும், மார்வாடிக்களின் அடிக்குமாடிக் குடியிருப்புப் பங்களாக்களாகவும், உருவெடுத்து நிற்கிறது.

யார் ஆக்கிரமிப்பாளர்கள்

தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 87 இலட்சம் வட இந்திய மார்வாடிக்கள் வாக்காளர்களாக இருப்பதாகக் கணக்கெடுப்புகள் சொல்கிறது. மத்திய பி.ஜே.பி. அரசுகளும் திட்டமிட்டே வட இந்தியர்களின் நகரமாகச் சென்னையை மாற்றிக்கொண்டிருக்கிறது. இப்படியே போனால் வாக்காளர் பட்டியல்களில் அவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயரும் ஆபத்தும் உள்ளது.

சென்னை சௌகார்பேட்டையை சின்ன குஜராத் என்று கூறும் அளவிற்கு வாழிடம், வணிகம் ஆகியவற்றில் மார்வாடிகளின் கை ஓங்கியுள்ளது. இங்குச் சென்னை வேப்பேரியும் மார்வாடிகளின் நகரமாக்கப்பட்டு வருகிறது. இந்த இலட்சனத்தில் இம்மாநகரை உழைத்து உருவாக்கிப் பாதுகாத்து வந்த மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்கிறது அரசுகள். ஏன் அதே அரும்பாக்கத்தில் அம்பானியோட “Skywalk mall” கூவத்தை ஒட்டி தானே கட்டப்பட்டுள்ளது. அங்கே கைவைக்கும் திராணி இருக்கிறதா இவர்களுக்கு.!? கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது பூர்வகுடி வெளியேற்றம் என்று செய்திகளை வாசித்த கலைஞர் தொலைக்காட்சி தங்களின் ஆட்சிக்காலத்தில் இம்மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்கிறது.

அரசு செய்ய வேண்டியவை:-

இவற்றையெல்லாம் தடுக்க இந்த அரசுகள் முயலவில்லையே ஏன்.? இதற்கு ஏன் புதிய சட்டங்கள் கொண்டுவரப்படவில்லை.? சிங்கப்பூரைப் போல் இங்கே சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். அச்சட்டத்தில் எவர் வேண்டுமானாலும் பஞ்சம் பிழைக்க, பொருளீட்ட தமிழ்நாடு சென்னையை நோக்கி வரலாம். ஆனால் சொத்தோ, நிலமோ வாங்க எவருக்கும் அனுமதியில்லை என்கிற சட்டம் கொண்டுவரப் படவேண்டும். சென்னையை உழைத்து உருவாக்கிய கருப்பர் மக்களை நவீன தீண்டாமைச் சேரிகளை அகற்றி சென்னையின் மையப்பகுதிகளில் குடியமர்த்தப்பட வேண்டும். நிலத்தில் அதன் வளத்தில் சமபங்கீடு வேண்டும். ஏனெனில், இது எங்க ஊரு மெட்ராசு, இதுக்கு நாங்கதான் அட்ரசு.

சாதி இந்துக்களின் சாதி சாம்ரீஜ்ஜியத்தில்
அழிந்துப்போன சேரிகள் ஆயிரமாயிரம் கிராமங்களில்
சேரிகள் கொளுத்தப்படுகின்றன.
நகரங்களில் அப்புறப்படுத்தப்படுகின்றது.
நாளைக்கு எந்தப் பகுதி அப்புறப்படுத்தப்படுமோ எனக்
களங்கி நிற்கும் என் சமூகமே..!
உன் சக்தி மின்சக்தியை விட மின்னல் வேகமானதுதான்.
எனினும் நீ சிதறிக் கிடக்கின்றாயே..!
எதிரிக்கே எடுபிடிகளாய் நிற்கின்றாயே என்ன செய்வது.!?
புத்தனையும் அண்ணல் அம்பேத்கரையும்
உமதிரு கண்களென நீ எப்போது ஏற்பாயோ
அவர்களின் கொள்கைவழிப் பற்றி
எப்போது நடப்பாயோ, அன்று மடியும் சாதி
மலரும் சமநீதி.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger