மணிமண்டபங்களிலிருந்து உயிர் பெற்றெழும் சாதி

- வாசுகி பாஸ்கர்

சமூகரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பல தலைகீழ் மாற்றங்களைச் சந்தித்தது இருபதாம் நூற்றாண்டு. அதுவரை இந்தியச் சமூகத்தில் நிலவி வந்த பண்பாடு மற்றும் மக்கள் நம்பிக்கைகளும் அடையாளங்களும் கேள்விக்குள்ளாயின. சாதி, சமய உள்ளிட்ட அடையாளங்களும் அவற்றுள் அடக்கம். ஆய்வுரீதியாகவும் சமூக சீர்திருத்த கருத்தாக்கங்களின் அடிப்படையிலும் சாதிய அமைப்பும் சாதியச் சிந்தனையும் கடும் விமர்சனங்களுக்கு உட்பட்டன. அதன் தொடர்ச்சியாகச் சாதியொழிப்பு என்பது பரவலான பிரகடனமானது. அவற்றை ஒழிக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தது. ஆனால், அவற்றின் அமைப்பியக்கத்தை முழுமையாகப் புரிந்துகொள்வதோ எதிர்கொள்வதற்கான உள்ளார்ந்த செயல்பாடுகளோ இல்லாது போயின. பிறப்பிலிருந்து இறப்பு வரை பண்பாட்டுரீதியாக மக்களிடையே ஆழமாக வேரூன்றி இருக்கும் சாதிய அமைப்பை அழித்தொழிப்பதின் நடைமுறைச் சாத்தியங்களைக் குறித்து யோசிக்காமல் `சாதியை ஒழிப்போம்’ என்கிற கோஷம் மட்டுமே புரட்சிகர மனநிலையைக் கொடுக்குமளவு இங்கு மாறிப் போனது. கடந்த நூறாண்டுகளில் பல்வேறு தலைவர்கள் பல்வேறு காலகட்டங்களில் சாதியொழிப்பைக் குறித்துப் பேசி வந்திருந்தாலும், அதன் அடுத்தடுத்த நகர்வாக நாம் இயல்பாக அதன் விளைவை நோக்கி நகர்ந்திருக்க வேண்டும். ஆனால், சாதியொழிப்பு குறித்த கருத்தாக்கங்கள் தொடங்கப்பட்ட இடத்திலிருந்து முன்னோக்கிச் செல்லாமல் இன்னும் பின்னோக்கிப் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதே சமகால அரசியல் எதார்த்தமாக இருக்கிறது. சாதி தவறில்லை, அதில் உள்ளடக்கமாக இருக்கும் பாகுபாடுகளும் தீண்டாமைக் கொடுமைகளும் மட்டுமே தவறு என்கிற தொடக்க காலத்திற்குச் சமூகம் திரும்பியிருக்கிறது. மேலே குறிப்பிட்டபடி கடந்த நூற்றாண்டில் சாதியொழிப்புப் பிரச்சாரத்தால் சாதியை ஒழிக்க முடியாமல் போயிருந்தாலும், சாதியாக இயங்குவதும் சாதியாய்த் திரள்வதும் பொதுவெளியில் அவமானகரமான ஒன்றாகப் பார்க்கப்பட்டது. குடும்ப அமைப்பில் சாதிய இறுக்கத்தோடு இருந்தாலும் பொதுவெளியில் தங்களை வேறொன்றாக முன்னிறுத்திக்கொள்ளுவதற்கான அழுத்தம் உருவாகியிருந்தது. தற்போது இந்நிலையும் கூட மாறி சாதியால் திரண்டால் மட்டுமே இங்கு அதிகாரப் பலன்களை அறுவடை செய்ய முடியும் என்று அரசியல்ரீதியாகச் சாதிகள் குழுக்களாகத் திரட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு நடப்பதற்கான தர்க்கத்தை நாம் இருவேறு நிலைகளிலிருந்து புரிந்துகொள்ள வேண்டும். அதாவது இங்கு சாதியாக இயங்குவதும் திரள்வதும் சமுகப்பரப்பில் பெரிய குற்றமாகப் பார்க்கப்படுவதில்லை. சாதி அதற்கேயுரிய எதார்த்ததோடு இயங்கி வருகிறது. ஆனால், அறிவுசார் தளத்தில் அதற்குப் போதிய ஆதரவு கிடைப்பதில்லை. சமூக நிலையை எழுதவும் பேசவும் விவாதிக்கவும் கூடியவர்கள் கருத்தியலாளர்களாகவும் கோட்பாட்டு- வாதிகளாகவுமே இருப்பதால் அறிவுசார் தளங்களில் சாதியாக இயங்குவது தர்க்கரீதியாக நியாயப்படுத்தப்படுவதில்லை. ஆனால், எதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது. சாதிக்குழுக்களுக்குச் சமகாலத்தில் கொடுக்கப்படும் அரசியல் அங்கீகாரத்தால் அவை தர்க்கரீதியாக நியாயம் பெறத் தொடங்கியிருக்கின்றன. இவை உரிய அளவில் இங்கு விவாதிக்கப்படுவதில்லை. உண்மையில் இந்த எதார்த்தம் இங்கு பேசப்பட வேண்டும்.

சாதியொழிப்பு என்பது ஓர் இரவிலோ அல்லது ஒரு நூற்றாண்டிலோ சாத்தியப்படக் கூடியதில்லை என்கிற எதார்த்தம் நமக்குப் புரியாமலில்லை. அது பல படிநிலைகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்று. அதில் முக்கியமானதாகவும் முதன்மையானதாகவும் இருப்பது ஒருவரோ – ஒரு குழுவோ சாதியாக இயங்குவதை விமர்சனத்திற்குப்படுத்துவது. ஆனால் தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழலில் சாதியை விமர்சனம் செய்வது என்பது என்றுமே சாத்தியமில்லை என்கிற நிலையை எட்டியிருக்கிறது. தேர்தல் அரசியல் நடைமுறையில் இதுவே எதார்த்தம் என்பதை ஒரு தர்க்கத்துக்காக நாம் ஒப்புக்கொண்டாலும் இம்மாதிரி இக்கட்டான சூழலில் அவற்றைக் கண்டும் காணாமல் நகர்ந்து போவதுமே கூட ஒரு செய்திதான். சாதிக்கு நண்பனும் இல்லை; எதிரியுமில்லை என்கிற நிலைப்பாட்டைச் சொல்லாமல் சொல்வதைப் போல. தமிழக அரசியல் வரலாறு இதில் விசித்திரமானது. தலித்துகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளை ஆளும் தரப்பு மௌனமாகக் கடப்பதும் மாறாக வன்முறையை அரங்கேற்றும் சாதிக் குழுக்களை ஏதோவொரு வகையில் அங்கீகரிப்பதும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. வரலாற்றிலிருந்து பல உதாரணங்களை வரிசைப்படுத்த முடியும். அதிலொன்றுதான் திமுக அரசின் சமீபத்திய நடவடிக்கை. கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர், 1987 ஆண்டில் வன்னியர் இட ஒதுக்கீட்டிற்காக நடந்த வன்முறையில் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இறந்து போன 21 வன்னியர்களுக்கு 4 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்தார். 1987 ஆம் ஆண்டு 20% இட ஒதுக்கீடு என்கிற கோரிக்கையோடு வன்னியர்கள் போராட்டத்தைத் தொடங்கினார்கள். சுமார் ஒரு வாரம் நடந்த அப்போராட்டத்தில் 21 வன்னியர்கள் எம்.ஜி.ஆர் அரசால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இட ஒதுக்கீட்டுக்காகப் போராடியவர்கள் கொல்லப்பட்டதால் வன்னியர் சமூகம் அவர்களைத் தியாகிகளாகக் கருதுகிறது. இந்த 21 பேருக்குத் தற்போது மணி மண்டபத்தை அறிவித்திருக்கும் திமுக அரசு கூட அவர்களைத் தியாகிகளென்றே குறிப்பிட்டிருக்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட வன்னியர் சங்கங்கள் மத்தியில் அரசு அறிவிப்புக்குப் பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரனான வன்னியர் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு கட்டாயம் தேவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை. இந்தியாவைப் போல ஏற்றத்தாழ்வுகொண்ட ஒரு சமூகத்தில் விகிதாச்சாரப் பிரிதிநித்துவம் அவசியம். அதன் அடிப்படையில் தமது கல்வி மற்றும் தொழில் சார்ந்த பிரதிநிதித்துவத்தைக் கோரும் எந்தப் போராட்டமும் அங்கீகரிக்கப்பட வேண்டியதே. இந்த அளவில் மட்டும் இப்போராட்டம் தொடங்கப்பட்டு முடிவை எட்டியிருக்கு- மேயானால் இதில் மேற்கொண்டு கருத்துரைக்க ஏதுமில்லை. ஆனால், வன்னியர்களுக்கான 20% இட ஒதுக்கீடு போராட்டம் என்கிற பெயரில் நடந்தது திட்டமிட்ட வன்முறை. சுமார் ஒரு வாரத்திற்கும் மேல் நீடித்த இந்த வன்முறையால் இழப்பைச் சந்தித்தது யார்?. சமூக மற்றும் அரசியல்ரீதியாக அதன் சாதகப் பாதகங்கள் என்னென்ன போன்றவை ஆராயப்பட வேண்டியவை.

17.9.1987 ஆம் ஆண்டு வன்னியர் சங்கப் போராட்டம் தொடங்கியது. இப்போராட்டம் தொடங்குவதற்கு ஒரு வருடத்திற்கு முன் காட்டுமன்னார்கோவிலில் வன்னியர் சங்க மாநாடு நடந்தது. 1987 ஆம் ஆண்டின் போராட்டம் தொடங்கப்படுவதற்கு இம்மாநாடு உந்துதலாக இருந்திருக்கிறது. 17.9.1987 அன்று தொடங்கிய போராட்டம் 23.9.1987 வரை நடந்தது. போராட்டம் என்று எழுதி வந்தாலும் அது போராட்டமாகத் தொடங்கி வன்முறையில் முடியவில்லை. தொடக்கமே வன்முறையிலிருந்துதான் ஆரம்பித்தது. வன்னியர் சங்கப் போராட்டம் தொடங்குவதற்கு ஒரு நாள் முன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறிவாலயக் கட்டடத் திறப்பு விழா நடந்தது. தமிழ்நாடு முழுவதிலுமிருந்து திமுகவினர் சென்னை நோக்கிப் பயணமாகினர். அறிவாலயத் திறப்பு விழாவில் பங்குபெற்ற பின்னர் பல வாகனங்களில் திமுகவினர் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அதற்கடுத்த நாள் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி – கும்பகோணம் நெடுஞ்சாலை அருகே உள்ள சுந்தரிப்பாளையம் பகுதியைக் கடந்த போது சென்னையிலிருந்து வந்த வாகனங்களை வன்னியர்கள் அடித்து நொறுக்க ஆரம்பித்தனர். இதில் கடுமையான தாக்குதலுக்குள்ளான மக்கள் அப்பகுதியில் இருந்த சுந்தரிபாளையம் கிராமத்தில் தஞ்சமடைந்தனர். அங்குள்ள தலித் – பறையர் சமூகத்திடம் தஞ்சமடைந்தவர்களில் கணிசமானோர் திமுகவினர். தாங்கள் தாக்குதல் தொடுத்தவர்களுக்குத் தஞ்சம் கொடுத்ததாலும் ஏற்கெனவே உள்ள தலித் – வன்னியர் மோதலைக் கருத்தில் கொண்டும் வன்னியர் சங்கங்கள் பறையர்களின் குடியிருப்புகள் மீது வன்முறையை ஏவின. அங்கு தொடங்கிய குடிசை எரிப்பு வன்முறை 36 தலித் கிராமங்களுக்குப் பரவியது.

கள ஆய்வில் சுமார் 12,000 பறையரின மக்களின் குடிசைகள் வன்னியர்களால் கொளுத்தப்பட்டன. ஒரு நிலப்பரப்பின் இரு பெரும் சமூகங்களிடையே இயல்பாக நிகழும் போட்டி மனோபாவத்தை வன்னியர்கள் அரசியல்ரீதியாக வளர்த்தெடுக்க 1987 கலவரத்தைப் பயன்படுத்திக்கொண்டனர். இட ஒதுக்கீடு போராட்டம் என்கிற பெயரில் தொடங்கப்பட்ட அப்போராட்டம் தலித் – பறையர் சமூகத்தவரைக் கண்மூடித்தனமாகத் தாக்குவதின் மூலம் தங்களது சாதிய பலத்தை நிரூபிப்பதாக மாற்றப்பட்டது. அது மட்டுமல்லாமல் அப்போது தலித் – பறையர் குடிசைகள் எந்நேரமும் எரிக்கப்படும் என்கிற பதற்றமான சூழல் வட மாவட்டம் முழுக்கப் பரவியது. பேருந்து எரிப்பு, கடைகள் நொறுக்கப்படுதல், சரக்கு லாரிகளை மறித்துச் சூறையாடல் உள்ளிட்ட பொதுச் சேதாரங்களைத் தவிர்த்து, ஆழங்கால் மழைவராயனூர் தலித் பகுதிக்குப் போகும் பாலத்தை வெடி வைத்துத் தகர்த்தனர். 36 கிராமங்கள் எரிக்கப்பட்டன, கண்ணில்படும் தலித்துகளெல்லாம் தாக்கப்பட்டனர். சிறுவர்கள் உள்ளிட்ட தலித் பெண்கள் கடும் தாக்குதலுக்கு உள்ளாகினர். தலித்துகளின் வாழ்வாதாரமும் உடைமைகளும் பெரும் கேள்விக்குள்ளாகின. அதுவரை மௌனம் காத்து வந்த அதிமுக அரசு, வன்னியர்கள் மரங்களை நடு ரோட்டில் வெட்டிப் பொதுச் சேதாரத்தில் ஈடுபட்ட போதுதான் தடியடியைத் தொடங்கியது. பிறகு அதன் வினையும் எதிர் வினையும் சேர்ந்து துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது. அரசு மற்றும் காவல்துறையின் உதவியை நாடாமல் தலித்துகள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொண்டனர். ஒவ்வொரு பகுதி இளைஞர்களும் தங்களது பகுதியில் ரோந்து போவது, எதிர்த்தாக்குதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளினூடே தங்களது இருப்பைத் தக்கவைத்துக்கொண்டனர். அன்றைய சூழலில் தென்னாற்காடு பகுதி மக்களுக்கு அரணாகத் திகழ்ந்த இளையபெருமாள் எம்.ஜி.ஆர் அரசுக்குக் கடும் அழுத்தத்தைக் கொடுத்ததின் காரணமாக வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கிடைத்தது. தமது சொந்த முயற்சியால் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளை நிகழ்த்திச் சமாதானமான சூழலைக் கொண்டு வந்தார்.

சமூகரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் வன்னிய சமூகத்தவர் இன்று பெற்றிருக்கும் பலத்தின் தொடக்கப்புள்ளி 1987 இல் நடந்த வன்முறைதான். தங்களது உரிமைகளுக்கான போராட்டம் என்பதைவிட சாதிரீதியாகத் தங்களைத் திரட்டிக்கொள்ளவும் அதிகார மையத்திற்குத் தங்களது பலத்தை நிரூபிக்கவுமான சந்தர்ப்பமாக அதைப் பயன்படுத்திக்கொண்டனர். தென் தமிழகத்தில் இம்மானுவேல் சேகரன் படுகொலைக்குப் பின்னர் தங்களை அரசியல்ரீதியான சாதியாக தேவர் சமூகங்கள் நிலைநிறுத்திக்கொண்டதைப்போல, வட மாவட்டத்தில் வன்னியர்களின் 1987 கலவரத்தைக் குறிப்பிடலாம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை சாதிரீதியாக ஒரு சமூகம் மேலெழும் போது அது தனியொரு நிகழ்வாக நடப்பதில்லை. தனக்குக் கீழ் என்று கருதும் சாதியை அல்லது எண்ணிக்கைப் பெரும்பான்மையால் போட்டியாகக் கருதும் சாதிகளின் மீது வன்முறையைப் பிரயோகித்து, அவர்களது அடிப்படை வாழ்வாதாரத்தைச் சிதைத்துதான் முன்னேறி வந்திருக்கிறது.

இதிலிருந்து நமக்கெழும் அடிப்படைக் கேள்வி என்னவென்றால் அடக்குமுறையைச் செலுத்தும் சாதிகளின் மீது அரசியலுக்காகப் பரிவு காட்டும் கட்சிகள், அடக்குமுறைக்கு ஆளான சாதிகளின் மீது ஏன் வருவதில்லை? 12 ஆயிரம் தலித் குடிசைகள் கொளுத்தப்பட்டதும் 36 கிராமங்கள் சூறையாடப்பட்டதும் சாதாரணமாகக் கடக்கக்கூடிய நிகழ்வல்ல. தமிழகத்தில் நடந்த கலவரங்களில் 1987 ஆம் ஆண்டின் கலவரம் தலித்துகளுக்கு எதிரான கலவரம். தற்போதைய அரசு அப்போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மணி மண்டபத்தை அறிவித்த போதே அதனால் பாதிப்படைந்த தலித் சமூகத்தவரும் அரசின் நினைவில் வந்திருக்க வேண்டும். ஆனால், அதையெல்லாம் கணக்கிலெடுக்க வேண்டிய அவசியமில்லாத அளவிற்கான சாதிய அரசியல்தான் இங்கு நிலவுகிறது. தேர்தல் அரசியல் நடைமுறை என்பது இங்கு நமக்குச் சொல்லப்படும் சமாதானம், இதன் பொருட்டுக் கரை வேட்டி அரசியல்வாதிகளுக்கு இதிலிருந்து நாம் விலக்குக் கொடுத்தாலும் திராவிடச் சிந்தாந்தத்தைத் தினம் பரப்பும் கருத்தியலாளர்களை எது தடுத்தது? சாதியாகத் திரண்டு வன்முறை செய்பவர்கள் வரலாற்றில் தியாகிகளாக்கப்படுவார்கள் என்றால் அவை சமூகப் பரப்பில் மோசமான முன்னுதாரணமாக மாறக்கூடும் என்று எச்சரிக்காதவர்கள் எப்படி இங்கு கோட்பாட்டுவாதிகளாக இருக்க முடியும்? சாதியாகத் திரண்டு மற்றொரு சாதியை அடக்குவதின் மூலம் நலன் பெறுகிறவர்களை அனுசரித்துக்கொண்டே சாதியொழிப்பைப் பேசும் தமிழக முற்போக்காளர்கள் உலகின் எந்தத் தத்துவப் பிரிவிலும் நாம் இதுவரை பார்த்திராதவர்கள்.

1987 கலவரத்தில் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு 4 கோடியில் மணி மண்டபம் அறிவிப்பு வந்த அடுத்த தினத்திலேயே அயோத்திதாசப் பண்டிதருக்கு மணிமண்டம் கட்டும் அறிவிப்பு வெளியானது. முதல் நாள் அறிவிப்பை மௌனமாகக் கடந்த அநேகமானோர் அயோத்திதாசப் பண்டிதருக்கு மணி மண்டபம் கட்டும் அறிவிப்பு வெளியானதும் அதற்கெனத் தங்களது வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டனர்.

அயோத்திதாசப் பண்டிதருக்கு மணி மண்டபம் என்கிற அறிவிப்பைத் தனிச்செய்தியாக அல்லது தனிச் செயல்பாடாகப் பார்த்தால் நமக்கு அதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது. இந்தியாவின் இந்து மத அரசியலுக்கு எதிராக நூறாண்டுகளுக்கு முன்பே மாற்று வரலாற்றை எழுதியவர் அயோத்திதாசப் பண்டிதர். மணிமண்டபம் என்கிற அடையாளத்தைத் தாண்டி வெகுஜன மக்களிடம் அவரது சிந்தனைமுறைகளைக்கொண்டு சேர்ப்பதும்கூட நம் கடமைதான். இப்படிப்பட்ட மகத்தான மனிதர் இங்கு ஏதோவொரு வகையில் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறார் என்கிற அளவில் பண்டிதர் குறித்த எந்தவொரு புதிய அறிவிப்பும் வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால், சாதிக்குழுக்களைத் திருப்திப்படுத்தும் வரிசையின் அடுத்தடுத்த அறிவிப்புகளில் ஒன்றாகவே பண்டிதருக்கான மணிமண்டபமும் அறிவிக்கப்பட்டிருப்பதைத்தான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 21 வன்னியர்களுக்கான 4 கோடி மணி மண்டப அறிவிப்பும் அதற்கடுத்த நாள் அறிவிக்கப்பட்ட பண்டிதருக்கான அறிவிப்பும் சாதிய சமநிலையை உணர்த்துவதற்காக என்றால் அது சமநிலையும் ஆகாது, சமூக நீதியும் ஆகாது.

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட வன்னியர்களுக்கான நினைவுச் சின்னம் கலவரம் தொடங்கப்பட்ட பகுதிக்கு அருகிலேயே அமைக்கப்பட்டிருக்கிறது. சிறிய அளவில் நடக்கும் வன்னியர் சங்கக் கூட்டங்களில் தொடங்கி, வருடத்திற்கு ஒரு முறை சித்ரா பௌர்ணமி அன்று பிரமாண்டமாக நடக்கும் வன்னியர் சங்க மாநாடு வரை இவர்கள் தியாகிகளாகப் போற்றப்படுகிறார்கள்.

இதன் மூலம் இட ஒதுக்கீட்டின் தேவைகளையும் அதன் வரலாற்றையும் வன்னியர் இளைஞர்கள் புரிந்துகொள்வதை விட, போர்க்குணம் கொண்ட ஷத்ரிய வீரர்களாகத் தமது முன்னோர்கள் இருந்திருக்கிறார்கள் என்கிற சாதியப் பெருமிதங்களை வளர்க்கவே இந்த அடையாளங்கள் பயன்படுத்தப்பட்டு வந்திருக்- கின்றன. 2012, 2013 ஆண்டுகளில் சித்ரா பௌர்ணமி அன்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் சங்க மாநாடுகள் குறிப்பிடத்தகுந்தவை. 21 வன்னியர்கள் ராணுவத்தையே எதிர்கொண்டு உயிரைவிட்டவர்கள் என்று பேசிய காடுவெட்டி குரு, அப்படிப்பட்ட சமூகத்தினர் வெகுண்டு எழுந்தால் தமிழகம் தாங்காது என்று தனது சமூகத்தவரைக் கூர்தீட்ட மட்டுமே அதைக் கேடயமாகப் பயன்படுத்தியிருக்கிறார். அதைத் தொடர்ந்து தலித் – பறையர் சமூகத்தை இழிந்த சொல்லில் சாதிரீதியாக வசை பாடினார். இத்தகைய வெறுப்புப் பிரச்சாரங்களின் தொடர் செயல்பாடாக 2013 ஆம் ஆண்டு வன்னியர் சங்க மாநாடு நடத்துவதில் கடுமையான சட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் தொடர்ச்சியாக வன்னியர் மாநாட்டுக்குச் சென்று திரும்பியவர்கள் மரக்காணம் பகுதியின் தலித் குடியிருப்புகளில் புகுந்து மிகப் பெரிய கலவரத்தை ஏற்படுத்தினர். தமிழக வரலாற்றில் இப்படியாகப் பதிவான எல்லாச் சாதியக் கலவரங்களிலும் ஒரு சாதி மற்றொரு சாதியை வீழ்த்தி முன்னேறியே வந்திருக்கிறது என்பதற்கு இது இன்னும் அழுத்தமான சாட்சி.

வட தமிழகத்தைப் பொருத்தமட்டும் பறையர் – வன்னியர் சமூகங்களுக்கிடையேயான முரண்பாடு என்பது வரலாறு நெடுக இருந்த முரணல்ல. அரசியல் காரணங்களுக்காகவும் சாதித் திரட்சிக்காகவும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. வட தமிழகத்தின் இரு பெரும் சமூகங்களுக்குள் நிகழும் போட்டி மற்றும் உரசல் காரணமாகச் சாதிரீதியான பிளவுகள் இருந்து வந்திருக்கிறதேயொழிய, கடந்த 35 ஆண்டுகாலமாக இருந்து வரும் பிரச்சனைகள் நீண்ட வரலாற்றுத் தொடர்புடையதன்று.

தொலைத்தொடர்பு கருவிகள் மற்றும் தொழில்நுட்பச் சாதனங்கள் வளர்ந்து வந்த காலத்தில் சாதி இன்னும் இறுக்கமான ஒன்றாக உருமாறியது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில்தான் அரசியலும் வேறொன்றாகப் பரிணமித்துக்கொண்டிருந்தது. சாதிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசியல் தரப்பில் கொடுக்கப்பட்ட எல்லா முக்கியத்துவமும் அரசியல் செய்வதற்கான நடைமுறையாக இங்கு உருமாறியது. `உற்றத் தோழன் யார்’ என்பதில் சாதிக்குழுக்களுக்குள் கடும் போட்டி நிலவியது. இதன் விளைவாக இக்குழுக்கள் அரசியல்ரீதியாக வளர்த்தெடுக்கப்பட்டன. தலித்துகளுக்கு எதிராகக் காடு வெட்டி குரு வெளிப்படுத்திய கருத்துகளுக்கு நியாயமாக நூறு முறை அவரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்திருக்கலாம். இரு பெரும் சமூகத்திற்கிடையே உருவான பிளவை ராமதாஸுடன் சேர்ந்து வளர்த்தெடுத்ததில் காடுவெட்டி குருவுக்கு முக்கியப் பங்குண்டு. எந்தவகையிலும் ஒரு முன்னுதாரண நாயகனாக அவரைப் பொதுச் சமூகத்தின் முன் நிறுத்த முடியாது. காடு வெட்டி குரு மட்டுமல்ல; அவரைப் போன்ற எந்தச் சாதியப் பிம்பங்களுமே சமத்துவம் பேணும் சமூக அமைப்புக்கு எதிரானதுதான். இதனடிப்படையில் காடு வெட்டி குருவின் குறிப்பிட்ட செயல்பாடுகளை நாம் விமர்சிக்கக் கூடத் தேவையில்லை, மௌனமாகக் கடக்க முடியாதா? தமிழகத்தில் அது சாத்தியப்- பட்டதில்லை. மாறாகக் காடு வெட்டி குரு இறந்த பின்னரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூன்றாம் தலைமுறையாக அறியப்படும் உதயநிதி ஸ்டாலின் தேர்தலுக்குச் சில காலத்திற்கு முன் குருவின் வீட்டிற்கே சென்று அவரது புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தி வந்திருக்கிறார். சென்னை போன்ற ஒரு மாநகரத்தில் பிறந்து நவீன வாழ்க்கைச் சூழலில் வளர்ந்தவரான உதயநிதி ஸ்டாலின் தன் தனிப்பட்ட அரசியல் தேர்வின் அடிப்படையில் இதைச் செய்திருக்க வாய்ப்பில்லை. மாறாக இதுதான் அரசியல் என்றும் நடைமுறை என்றும் பயிற்றுவிக்கப்படுகிறார். இம்மாதிரியான வலுவான சாதியப் பிம்பங்களைத் தக்கவைப்பதாலும் வளர்த்தெடுக்கப்படுவதாலும் சமூகரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் உருவாகும் பாதகங்களைக் கணக்கில் கொள்ளாமல் பேசுவதுதான் தமிழகத்தின் சாதியொழிப்பு நடைமுறையாக இருக்கிறது.

சாதி இந்துக் குடும்பத்தால் வளர்க்கப்பட்டுச் சாதியின் எல்லா மூலதனங்களையும் அனுபவித்து வளர்ந்த ஒருவரது வாழ்க்கைச் சூழலில் என்றேனும் ஒரு நாள் அவர் தலித் என்று தெரிய வந்தால் அவரது மனநிலை என்னவாக இருக்கும்? அல்லது தலித் குடும்பத்தில் வளர்ந்து தன்னையொரு தலித் என்று நம்பிய ஒருவர் தான் மாற்றுச் சாதியென்று தெரிய வந்தால் அவரது மனநிலையும் ஊடாட்டமும் என்னவாக இருக்கும் என்கிற கற்பனையைக் குறித்து நான் எப்போதும் சிந்திப்பதுண்டு. எஞ்சிய வாழ்க்கையில் அதை யாரிடமும் வெளிப்படுத்தாமல் கடந்து போனாலும் உள்ளுக்குள் நிகழும் ஊடாட்டம், கேள்விகள், அதற்குப் பின் அவர் சமூகத்தை அணுகும் விதம் என அனைத்துமே நூதனமானது. `சாதி என்பது ஒரு மனநிலை’ என்ற பாபாசாகேப் அம்பேத்கரின் கூற்று இங்கே நம் நினைவுக்கு வருகிறது. சாதிக்குப் புற வடிவமில்லை, நீர் ஊற்றி ஒரு மரத்தை வளர்ப்பதைப் போல நேரடியான சாட்சியங்களைக்கொண்டு அவை வளர்வதில்லை. சாதி என்பது அகத்திலிருந்து தன்னை விரித்துக்கொள்வது. பிறப்பு, வளர்ப்பு, கல்வி, சூழல், அரசியல் என்று வாழ்வின் பல்வேறு நிலைகளில் நிகழ்பவை நேரடியாகவும் மறைமுகமாகவும் மூளையில் பதிவாகின்றன. தேவைப்படும் போது அவை அவனது உளவியலில் இருந்து வெளிப்படுகின்றன.

இதன் அடிப்படையைப் புரிந்துகொண்டால் இக்கட்டுரை திமுக அரசின் ஒற்றை அறிவிப்புக்காக எழுதப்படுவதல்ல என்பது புரியும். தன் சாதியை மீறி இங்கு அரசியல்ரீதியாகவும் சமூகரீதியாகவும் எதுவும் நிகழ்ந்து விட முடியாது என்கிற மனநிலையை ஒருவனுக்குக் கொடுத்தால் அது அவனுக்குள் என்னவாக மாறும் என்பதைக் கணக்கிலெடுக்காத போக்கு, சாதிய சமூகத்தின் ஆதரவு நிலைப்பாடு என்றுதான் நாம் எடுத்துக்கொள்ள முடியும். காடு வெட்டி குரு அதை நேரடியான வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார். ஆனால், அரசியல் கட்சிகள் தனது தொடர் செயல்பாடுகளினூடே செய்கின்றன என்பதுதான் இவை இரண்டுக்குமான வேறுபாடு.

சாதியின் இயங்கியலைப் பொறுத்தவரை ஓர் சமூகம் அதிக முக்கியவத்துவம் பெற்று வளர்ந்துகொண்டிருந்தால் மற்றொரு சமூகம் பின்னடைவைச் சந்தித்துக்கொண்டேயிருக்கும் என்பது இயல்பு. தமிழகத்தில் கடந்த ஒரு நூற்றாண்டாகச் சாதி ஒழிப்பு அரசியல் பேசப்பட்டு வருகிறது. இந்த இடைபட்ட கால அளவில் சமூகத்தளத்தில் சாதி எதிர்ப்பு மனநிலையும் சாதியத் திரட்சிக்கு எதிரான சூழலும் உருவாகியிருக்கவேண்டும். ஆனால், இதற்கு மாறாகச் சாதியாகத் திரள்வது அதிகரித்திருக்கிறது. ஓர் அரசே அத்தகைய திரட்சியை அங்கீகரிக்கக்கூடிய சூழ்நிலையும் உருவாகி- யிருக்கிறது. எனில் இங்கு இதுவரை பேசப்பட்டு வந்திருப்பதாகச் சொல்லப்படும் சாதிய ஒழிப்பு என்பதன் அர்த்தமும் விளைவும்தான் என்ன? அது மட்டுமல்ல சாதி ஒழிப்பு அரசியலின் அங்கமாகச் சொல்லப்பட்டு வரும் திராவிட இயக்கக் கட்சிகளே இச்சாதியத் திரட்சிகளை அங்கீகரிக்கிறது, ஊக்குவிக்கிறது என்றால் இதனை எவ்வாறு புரிந்துகொள்வது? உள்ளீடாக நடந்து வந்திருப்பது என்ன? என்கிற கேள்விகளை எழுப்பிப் பார்த்தால் நமக்கு ஏற்படுவது ஏமாற்றமே.

லட்சியவாதம், எதார்த்தம் இரண்டுக்கும் பாரதூரமான இடைவெளி இருக்கிறது.

திராவிட இயக்கத்தின் அடிப்படைப் பார்வையிலே கோளாறு இருப்பதைப் பார்க்கிறோம். பிராமணர்களை மட்டும் எதிர் நிலையில் வைத்து அரசியல் பேசிய அவ்வியக்கம் பிராமணர் அல்லாதோரிடம் செயல்படுகிற சாதியத்தை இனங்காட்டியதில்லை. தொடர்ந்து பிராமண எதிர்ப்பை மட்டுமே குறிவைத்து வந்ததால் பிராமணர் அல்லாதோரிடம் காலந்தோறும் ஏற்பட்டு வந்த சாதிய ஆதிக்கங்களை மறைக்கவும் கூட அச்சித்தாந்தம் உதவிவிட்டது. பிறகு திராவிட இயக்கத்திலிருந்து திமுக அதிமுக உதயமாகித் தேர்தல் அரசியலுக்கு வந்த போது சிந்தாந்தரீதியாக நியாயப்பட்டிருந்த பிராமணர் அல்லாத அரசியல், எண்ணிக்கைப் பெரும்பான்மை கருதி தேர்தல் அரசியலுக்கும் உதவியது. சாதிய அரசியலைப் பயன்படுத்துவதில் சித்தாந்தரீதியாக எந்தத் தடையும் இல்லாமல் போனது. இருபதாம் நூற்றாண்டின் சாதியைக் கைவிடுதல் என்ற அரசியல் நம்பிக்கை, சாதியத் திரட்சியை அங்கீகரித்தல் என்ற எதார்த்தத்தால் உள்வாங்கப்பட்ட வரலாறு இதுதான்.

எனவே சாதியத் திரட்சி ஏன் அங்கீகரிக்கப்- படுகிறது என்பதைத் தேர்தல் அரசியலோடு மட்டும் இணைத்துப் பார்க்காமல் இருபதாம் நூற்றாண்டு நவீன அரசியல் இங்கு எவ்வாறு உள்வாங்கப்பட்டது? சாதிய அடையாளத்தை உள்மெய்யாக மறுத்தொதுக்காமல் புறமெய்யாக வரித்துக்கொள்ளப்பட்டது என்பதை விமர்சனபூர்வமாக ஆராய்ந்து பார்த்தால்தான் புரிந்துகொள்ள முடியும். ஆனால், கட்சி விசுவாசிகள் போல் மாறிவிட்ட இன்றைய அறிவுஜீவிகளாலும் ஊடகவியலாளர்களாலும் நேர்மையான பரிசீலனைகளை மேற்கொள்ள முடியவில்லை என்பதுதான் பேரவலம். இதனை ஒடுக்கப்பட்ட வர்க்கத்திலிருந்து எழுந்து வருவோரால் பரிசீலிக்கவும் புதிய கேள்விகளை எழுப்பவும் முடியும்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!