கிராமத்துப் பணியிலுள்ள ஆபத்து குறித்து எனக்குத் தெளிவாகவே தெரியும். மஹர்களின் கழுத்தை இறுக்கிக்கொண்டிருக்கும் ஒரு நிரந்தரக் கயிறு அது. இந்தப் பணியால் எனது அப்பாவின் உடல் முழுவதுமாகத் தளர்ந்திருந்தது. அவருடைய கிராமியப் பணி அனுபவங்களில் அசௌகர்யமூட்டக்கூடிய ஒன்றை இப்போதிங்குப் பகிர்ந்துகொள்ளப் போகிறேன். இப்போது நினைத்தால் கூட எனது உடலை நடுக்கமுறச் செய்யும் அனுபவம் அது.
எங்கள் கமத் கிராமத்தில் சுழற்சி முறையில் மஹர்கள் கிராமியப் பணியில் ஈடுபடுவார்கள். அன்றைய நாளில் எங்கள் குடும்பம்தான் அப்பணியை மேற்கொள்ள வேண்டியிருந்தது. எங்களுக்கு அங்கு ஒரு வீடு இருந்தது. அது கோடை காலம் என்பதால், விடுமுறையைக் கழிப்பதற்காக நான் வீட்டிற்கு வந்திருந்தேன்.
கிராமத்திற்கு அருகிலிருந்த கைவிடப்பட்ட கிணற்றில் சடலம் ஒன்று மிதந்துகொண்டிருந்தது. அது உப்பிய நிலையில் நீரின் மேற்பரப்பிற்கு வந்திருந்தது. கிராமத் தலைவரான பட்டீலுக்கு, இத்தகவல் மாலையிலேயே தெரிவிக்கப்பட்டிருந்தது. மஹர்களும் ராமோஷிகளும்கூட இத்தகவலை அறிந்திருந்தனர். கிராமியப் பணியில் ஈடுபட்டிருந்த எனது அப்பாவும், ராமோஷியில் ஒருவரும் சடலம் கிடந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டார்கள். இருவரும் முழு இரவும் கிணற்றின் அருகில் அந்தச் சடலத்தைப் பாதுகாத்தனர்.
பிறகு அடுத்த நாள் காலையில், முதற்கட்ட விசாரணையை மேற்கொள்வதற்காகக் காவல் நிலையத்திலிருந்து தலைமைக் காவலரும் மற்றொரு காவலரும் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அவர்கள் வரும் வரையில், நடைமுறையில் இருப்பதைப்போல, மஹர் சாதியைச் சேர்ந்தவரும் ராமோஷியைச் சேர்ந்தவரும் அதைக் காவல் காக்க வேண்டும். இது இவ்வாறுதான் நிகழும் என்பது என் அம்மாவுக்கும் தெரியும். ஆனால், இருள் விலகி, காலைச் சூரியனின் பொன்னொளி கீழிறங்கி, மதியமும் கடந்துகொண்டிருந்தது. அதுவரையிலும் அப்பா வீடு திரும்பியிருக்கவில்லை. அதனால், அவர் சாப்பிடுவதற்காக அம்மா பக்ரி பிரெட்டை ஒரு துணியில் சுற்றி என்னிடம் கொடுத்துக் கிணற்றடிக்கு அனுப்பிவைத்தார். நானொரு மானைப்போலக் கிணற்றடிக்குத் தாவிச் சென்றேன். அங்கு அமர்ந்திருந்த அப்பாவைப் பார்த்து, “அப்பா! மறுநாளாகிவிட்டது, இன்றைய பொழுதும் கிட்டத்தட்ட முடியும் தறுவாயில் இருக்கிறது. அம்மா உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார், நீங்கள் எப்போது வீட்டிற்கு வருவீர்கள்?” எனக் கேட்டேன்.
கிணற்றைப் பார்த்தபடியே, “தலைமைக் காவலரும் மற்றவரும் இன்னமும் இங்கு வரவில்லை. அவர்கள் வந்தபிறகு விசாரணை மேற்கொள்வார்கள். அதன்பிறகுதான் மஹர் இங்கிருந்து நகர முடியும். அதனால் நான் வருவதற்குத் தாமதமாகும் என்று அம்மாவிடம் போய்ச் சொல்!” எனப் பதிலளித்தார். தனது பாக்கெட்டில் இருந்து பைப்பை வெளியிலெடுத்த அவர், அதில் புகையிலையை நிரப்பினார். ஒரு தீக்குச்சியால் அதைப் பற்றவைத்துப் புகைக்க ஆரம்பித்தார். தனது பசியைப் புகைப்போக்கியின் மூலம் கடந்துகொண்டிருக்கிறார் என்பதை என்னால் உணர முடிந்தது. அதை உணர்ந்தவுடனேயே, “உங்களுக்காக நான் பக்ரி எடுத்துவந்திருக்கிறேன். சாப்பிடுங்கள்!” என்றேன்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then