சமூக வலைதளத்தில் உலவிக்கொண்டிருந்தபோது காணொளி ஒன்று கண்ணில் பட்டது. பிரித்விராஜ், அமலாபால், வினித் ஸ்ரீநிவாசன் ஆகியோர் நடிப்பில் இயக்குநர் ப்லெஸ்சி இயக்கிய படத்தின் முன்னோட்டம்தான் அது. பிறகுதான் தெரிந்துகொண்டேன், ‘ஆடு ஜீவிதம்’ என்ற மலையாள நாவலை மையமாக வைத்து அதே தலைப்பில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்று. இவ்வாறாக அந்நாவலைப் படிக்க நேர்ந்தது. படங்கள் பார்ப்பதிலும் கதைகள் படிப்பதிலும், அதுவும் உண்மைக் கதைகள் என்றால் அதிக ஈடுபாடு உண்டு. உதாரணத்திற்கு ‘12 Years of Slave’, ‘Papillon’, ‘In to The Wild’, ‘The Boy Who Harnessed The Wind’ போன்ற சில திரைப்படங்களைச் சொல்லலாம். இங்கு குறிப்பிட்டுள்ள ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், இந்நாவலைப் படிக்கும்போது அதன் வெப்பம் என் நாக்கை வறண்டு போகச் செய்துவிட்டது. வெளிநாடுகள் என்றாலே செவிவழிச் செய்திகளும் சினிமாக்களில் பார்த்த காட்சிகளும் மனதில் ரீங்காரமிடுவது வழக்கம். அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டு வாழ்க்கை என்றால் சுகபோகமாக வாழலாம், நினைத்த இடங்களுக்குச் செல்லலாம் என்ற எண்ணங்கள் எழுவதும் வழக்கம். ஆனால், ‘உண்மை கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது’ என்று சொல்வதைப் போல், இந்த ‘ஆடு ஜீவிதம்’ நாவல் புதிய பரிமாணத்தையும், காதலையும், அறியாமையையும், ஏமாற்றத்தையும், நம்பிக்கையையும், போராட்டக் குணத்தையும் ஒன்றுசேர என் மனதில் விதைத்துவிட்டது.
நண்பர்கள் இருவர் தங்களைக் கைது செய்துகொள்ளுங்கள் என்று அரபு நாட்டுச் சாலைகளில் சுற்றித் திரிகிறார்கள். ‘யாராவது இப்படி அலைவார்களா, அதுவும் அயல் நாட்டில்’ என்ற எண்ணம் எனக்கு எழுந்தது. ஆனால், அவர்கள் சிறை செல்ல விரும்பிய காரணம் தாய் நாடு திரும்ப வேண்டும் என்பது. தனக்குக் கீழ் வேலை செய்ய வரும் அண்டைநாட்டு ஊழியர்களை விலங்குகளை விட மோசமாக நடத்தும் அரபு அர்பாப்பிடமிருந்து [காவலர்கள்] தப்பி, சிறைச்சாலையில் தஞ்சமடைந்து தாய்நாடு சென்றடைவோர்தான் 1990களில் அதிகமாக இருந்திருப்பார்கள் என்று கருதுகிறேன். ஏஜெண்டுகளை மட்டும் நம்பி, தன் சக்தியை மீறி கடன் பெற்று, வெளிநாடுகளில் வேலைக்குச் சென்று தமது குடும்பப் பொருளாதாரத்தை மீட்க வேண்டும் என்ற கனவுகளுடன் வந்தவர்கள்தான் நஜீமும் ஹக்கீமும். அரபு சிறைச்சாலை கூட மிகவும் சௌகரியமானதுதான் போல என்று நினைத்திருந்தார்கள். சாதாரண குற்றம் புரிந்தோருக்கான சிறைச்சாலையில்தான் ஹக்கீமும் நஜீமும் அடைக்கப்பட்டிருந்தனர். மன்னிக்க முடியாத குற்றங்களுக்கு வேறொரு சிறைச்சாலை உண்டு என்பதை உள்ளே சென்ற பிறகுதான் நஜீம் தெரிந்துகொள்கிறான். ‘வெளியில் இருப்பதை விட உள்ளே இருப்பது எவ்வளோ மேல்’ என்ற எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது அந்த நாள். தனது எஜமானர்களிடமிருந்து தப்பி வந்த ஊழியர்கள் கண்டிப்பாகச் சிறைச்சாலையில்தான் இருக்க வேண்டும் அல்லது இந்தப் பாலைவனத்தில் மண்ணோடு மண்ணாக மக்கியிருக்க வேண்டும் என்பது அந்த அரபு அர்பாப்களுக்குத் தெரிந்ததே. ஆகையால், இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அவர்கள் முன் சிறைவாசிகள் வரிசைப்படுத்தி நிற்கவைக்கப்படுகிறார்கள். அப்போது யாரேனும் அடையாளப்படுத்தப்பட்டால், தனது தாய்நாடு பற்றிய எண்ணங்களை அவர் அங்கேயே புதைத்துவிட வேண்டியதுதான். அந்த நாள் இரக்கமற்றதாக, வசவுகளாலும், கசையடியாலும் முடியும் என்பது அங்கிருந்த பாதி கைதிகளுக்குத் தெரிந்திருந்தது. இந்தப் பயமும் பதற்றமும் முதல் நாளிலிருந்தே இவர்களைத் தொற்றிக்கொள்கிறது. இத்தனை ஆண்டுகள் ஒன்றாக இருந்து, தனது சந்தோஷம், துக்கம் எல்லாவற்றையும் நஜீமோடு பகிர்ந்த ஹக்கீமும் ஒருநாள் அவனது அர்பாப்பால் அடையாளப்படுத்தப்பட்டு, ஒரு குழந்தையைப் போல அவனின் அழுகுரல் சிறைச்சாலை சுவர்களில் எதிரொலிக்க அடித்து இழுத்துச் செல்லப்படுகிறான். நஜீமால் அதை வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடிந்தது. அடுத்த சில நாட்களில் நாடு கடத்தப்படுவோரின் பெயர்களை அறிவிக்கும்போது ஹக்கீம் பெயரைக் கேட்டவுடன், இனி அவனைப் பார்ப்போமா இல்லையா என்பதை யோசிக்கக் கூட முடியாத நிலைக்கு நஜீம் தள்ளப்பட்டிருந்தான். மனித உரிமை மீறல்கள் அங்கு சாதாரணமாக நடைபெறுகிறதா, அல்லது அந்தக் காலகட்டத்தின் சட்டத்திட்டங்களுக்கு அவ்வளவுதான் மதிப்பா என்று குழம்பிப் போயிருந்தேன். சிறையில் நஜீம் தனது கதைகளால் மிகவும் பிரபலமாகியிருந்தான். நாம் துயரங்களிலிருந்து வெளிவர ஒரே வழி நம்மைவிட மிகவும் மோசமான தருணங்களைக் கடந்து வந்தவர்களின் கதைகளைக் கேட்பதுதான்.
Illustration by : Sabareesh Ravi
நஜீமை நீங்கள் எளிமையாக அடையாளம் கண்டுகொள்ளலாம். நீண்டவரிசையில் காத்திருந்த பின்பும் தனக்கு முன் எவரேனும் அனுமதியின்றி நுழைந்ததைக் கண்டுகொள்ளாமல் இருந்தால் அவர்தான் நஜீம்; மனிதர்களை விட விலங்குகளை அதிகம் நேசித்தால் அவர்தான் நஜீம்; தன்னைத் திட்டியவர்களிடமும், சண்டைக்கு வருபவர்களிடமும் அன்பு பாராட்டினால் அவர் பெயர்தான் நஜீம். மொத்தத்தில் தனது வாழ்வில் நடக்கும் நல்லது, கெட்டது அனைத்திற்கும் கடவுள்தான் காரணம் என்று நம்பக் கூடிய எளிய மனிதன். தன் வீடு, மனைவி என்று வாழ்ந்த நஜீம் பல கனவுகளுடன் 1992இல் தன் நண்பனின் உறவுக்காரரான ஹக்கீமுடன் ரியாத்தில் தரையிறங்குகிறான். தான் எங்கு வேலைக்குப் போகப் போகிறோம் என்பதைக் கூட தெரிந்து வைத்திருக்காத நஜீம், அவர்களின் அழைப்பு எண் கூட இல்லாமல் காலையிலிருந்து மாலை வரை தம்மைக் கூட்டிவர ஆள் வருவார்கள் என்று காத்துக்கொண்டிருக்கிறான். கதை முழுக்க, ‘இப்படி ஒருத்தன் எப்படி இருக்க முடியும்’ என்ற கேள்வி எனக்குள் அடிக்கடி எழுந்துகொண்டிருந்தது. புது நிலப்பரப்பும் புது மனிதர்களும் புது மொழியும் அவனை அப்படி மாற்றியிருக்குமோ என்ற எண்ணங்களும் இருக்கத்தான் செய்தன. புது இடம் என்றால் மிடுக்கான மனிதர்கள் கூட கொஞ்சம் மிரண்டுதான் போவார்கள், அதுவும் மொழி தெரியவில்லை என்றால் சுத்தம். “நான்தான் நஜீம், இவன் ஹக்கீம் என்று பார்க்கும் ஒவ்வொருத்தரிடமும் கண்களாலும் உடல்மொழியாலும் வெளிப்படுத்த முயற்சித்தேன்.” அவரது நிலைமையை விவரிக்க இந்த இரண்டு வரிகள் போதும். சூரியன் மறையும் வேளையில் ஓர் அர்பாப் வந்து, “அப்துல்லாவா?” என்று கேட்கிறார், “நஜீம்” என்று பதிலளிக்கிறார். ஹக்கீமிடம் கேட்கிறார், இல்லை என்று அவர் தலையசைக்க, கோபத்தில் கத்திக்கொண்டு அங்குமிங்கும் நடந்த அர்பாப், அவர்களின் பாஸ்போர்ட்டைப் பிடுங்கிக்கொண்டு வண்டியை நோக்கிச் செல்ல, இவர்களும் ‘இவர்தான் தமது அர்பாப்’ என்று வேகமாகப் பின்தொடர்கிறார்கள். எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை, அதை எப்படிக் கேட்பது என்பதும் தெரியவில்லை. துருப்பிடித்த வண்டியில் ஆடுகளைப் போல பின்னால் தொற்றிக்கொண்டு சென்றனர். ‘தனது அர்பாபைப் பார்த்துவிட்டோம். இனி எல்லாத் துன்பங்களும் பறந்துவிடும். நாம் நினைத்த மாதிரி நம் வாழ்க்கை மாறப்போகிறது’ என்று நகரத்தைவிட்டு வெகுதொலைவில் இருட்டினுள் சென்றுகொண்டிருக்கும் வாகனத்தில் பயணித்தபடி தன் நினைவுகளை நட்சத்திரங்களுடன் பகிர்ந்துகொண்டிருந்தான் நஜீம்.
வந்திருக்கும் இடம், கண்களுக்குப் புலப்படும் தூரம் வரை நீண்டிருக்கக் கூடிய பாலைவனம். மணற் குன்றுகளைத் தவிர்த்து அங்கு எதுவும் இல்லை என்பதைப் புரிந்துகொண்ட பிறகு, நஜீமால் அழுகையை அடக்க முடியவில்லை. நிராயுதபாணியாக, கேட்பாரற்றுப் போகும் மனிதரின் கண்ணீர் இந்தப் பிரபஞ்ச வெளியை விட நீண்டதாகவும் கனமாகவும் இருந்திருக்கும். பல கனவுகளுடன் வந்த நஜீம், ரியாத்தில் ஆடுகளையும் ஒட்டகங்களையும் வளர்க்கும் வனாந்தர பாலைவன மந்தைக்கு வந்திருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்கிறான். தன்னுடன் இருந்த ஹக்கீமும் பத்து மைல்களுக்கு முன்பே இம் மாதிரியான இடத்தில்தான் இறக்கிவிடப்பட்டிருக்கிறான் என்பதையும் அறிந்துகொள்கிறான். நஜீமை வரவேற்க அங்கு முன்கூட்டியே ஒருவன் படுத்திருந்தான். கதை முழுக்க அவனைப் பயங்கர மனிதன் என்றுதான் குறிப்பிடுகிறான். ஏனென்றால் அவன் பெயர், எந்த நாட்டைச் சேர்ந்தவன், எப்போது இங்கு வந்தான், எப்படி வந்தான் என எதுவுமே தெரியாது. செதில் செதிலாய்ப் புழுதி அழுக்குப் பிடித்த தோரணையுடன் அவனைப் பார்த்த நஜீமுக்குத் தன்னுடைய நிலைமையை அறிய வெகுநேரம் எடுத்துக்கொள்ளவில்லை. அங்கிருக்கும் ஆடுகளைப் பராமரிப்பதும் அதை இறைச்சிக்கு வளர்ப்பதும்தான் அவர்களுக்கான வேலை. அவர்களுக்கான உணவு, குபூஸ் எனும் அராபிய ரொட்டியைத் தண்ணீரில் தொட்டுச் சாப்பிட்டுக்கொள்ள வேண்டியதுதான். அவர்களைவிட அங்கிருந்த ஆடுகள் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தன. அங்கு விலைமதிப்பில்லாதது இரண்டுதான். ஒன்று தண்ணீர், மற்றொன்று ஆடுகள். குடிப்பதற்குத் தவிர வேறெதற்கும் அவன் நீரைப் பயன்படுத்த முடியாது. இந்தக் கடுமையான சூழலில், மூன்று மாதங்களுக்குப் பிறகு தினசரி வேலைகளை நஜீமுக்குப் பழக்கிக்கொடுத்துவிட்டு அந்தப் பயங்கரமான மனிதன் அங்கிருந்து தப்பிவிடுகிறான். அப்போதுதான் அங்கிருந்து தப்பிக்க முடியும் என்ற எண்ணமே நஜீமிற்கு எழுகிறது. ஆனால், எப்படித் தப்பிப்பான். இந்தப் பாலையின் ஆழமும், அகலமும், தீவிரமும், முரட்டுத்தனமும் அவனது உடலை நடுங்கச் செய்கின்றன. சூழ்நிலை ஒரு மனிதனை அங்கீகரிக்க முடியாதபடி மாற்றும் என்பதை மறுபடி ஹக்கீமைச் சந்திக்கும்போது அவன் உணர்ந்துகொள்கிறான். ஒருவரையொருவர் அடையாளப்படுத்திக்கொள்ள முடியாத அளவிற்கு இருவரும் மாறிப் போயிருந்தார்கள். அந்தப் பயங்கரமான மனிதனின் நிலையில் இப்போது ஹக்கீம் இருந்தான். கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் இந்தக் கொடுமைகளை அனுபவித்த பிறகு, ஹக்கீமின் கூடாரத்திற்குப் புதிதாய் வந்த இப்ராஹிம் கதிரி என்ற ஆப்பிரிக்க மனிதனின் உதவியால் ஓர் இரவு தப்பிக்கின்றனர். இந்தப் பாலைவனம் தனக்கென்று தனி விதிமுறைகளைக் கொண்டது, இங்கு எவ்விதமான சட்டத்திட்டங்களும் செல்லாது என்பதை ஒவ்வொரு நாளும் புரிந்துகொண்டான் நஜீம். வீங்கிய கால்களோடும் தீரா தாகத்தோடும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு நெடுஞ்சாலையை அடைகிறார்கள்.
இக்கதை முழுக்க, தனிமைதான் நஜீமுக்குக் கொடுமையாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. தனது எண்ணங்களை வெளிப்படுத்த அந்த ஆடுகளை விட்டால் அவனுக்கு வேறு யாரும் இல்லை. அந்த ஆடுகளும் இல்லாமல் இருந்திருந்தால் நஜீம் மனநலம் பாதிக்கப்பட்டவனாய் மாறியிருப்பான். தனது கர்ப்பிணி மனைவியின் எண்ணங்களும் பிறக்கப் போகும் குழந்தையின் எண்ணங்களும் அவனை எவ்வாறு குடைந்திருக்கும் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அங்கிருந்து தப்பிக்க வாய்ப்புக் கிடைத்தும், அதைப் பயன்படுத்தாத அவனை நினைத்துத் திட்டவும் செய்தேன். எளிய மனிதர்களின் வாழ்வு ஏன் இவ்வளவு போராட்டம் நிறைந்ததாக இருக்கிறது? அக்காலகட்டத்தில் எத்தனை நஜீம்களையும் ஹக்கீம்களையும் அந்தப் பாலைவனங்களும் சிறைச்சாலைகளும் கண்டிருக்கும். இன்று நஜீமின் நிலை யாருக்கும் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இல்லை என்று கொஞ்சம் தைரியமாகச் சொல்லலாம். சமூக வலைதளங்களும் கைபேசியும் உலக நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ளவும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னைத் தகவமைத்துக்கொள்ளவும் ஏதோவொரு வகையில் நமக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றன. குறைந்தபட்சம் தவறுகள் நடக்காமல் தடுப்பதற்கான சிறு அங்கமாக இருக்கின்றன. எது சரி, எது தவறு என்பதைக் கூட யோசித்துப் பார்க்க முடியாத அளவுக்கு, ‘எல்லாம் கடவுளின் லீலை. கடவுள்தான் நமக்கு இப்படியோர் அனுபவத்தைத் தந்திருக்கிறார்’ என்று மதங்களும் சமூகமும் நஜீமின் மூளையை நம்ப வைத்திருக்கின்றன. இங்குதான் கல்வியின் முக்கியத்துவம் தெரிகிறது. இன்றைய காலத்திலும் கோயிலும் மண்டபங்களும்தான் முக்கியம் என்று யாராவது கிளம்பினால், இதுபோல் ஆயிரம் நஜீம்கள் அறியாமையில் சிக்கும் வாய்ப்புள்ளது.