ஆதிதிராவிடர்களும் சாதி நூல்களும்

ஞா.குருசாமி

காலந்தோறும் ஆதிதிராவிடர்கள் மீது எதிர்மறையான பிம்பம் அரசியல் மட்டத்திலும் சமூக மட்டத்திலும் எப்போதுமே இருந்துவருவது மாதிரி சாதி இந்துக்களால் பார்த்துக்கொள்ளப்படுகிறது. ‘அரசியலின் மைய நீரோட்டத்தில் ஆதிதிராவிடர்கள் இணைந்துவிடக் கூடாது’ என்பது ஒரு திட்டமிடலாக இருக்குமோ என்று யோசிக்கிற அளவுக்குச் சில சம்பவங்கள் சாதி இந்துக்களால் நிகழ்த்தப்படுகின்றன. உதாரணமாக, பொதுப் பங்கீட்டில் புறக்கணித்தல், கல்வி பெறுவதில் இடையூறு ஏற்படுத்துதல், பொய் வழக்குகளில் சிக்க வைத்தல், உளவியல் ரீதியாகத் தொந்தரித்தல் என நிறையச் சொல்ல முடியும். ஓர் ஆதிதிராவிடருக்கு எப்போது வேண்டுமானாலும் வாழும் உரிமை மறுக்கப்படலாம் என்கிற ரீதியில்தான் அன்றாடம் செய்திகள் வெளிவருகின்றன.

பாதிக்கப்பட்ட ஓர் ஆதிதிராவிடர் சட்டப்படி நியாயம் கோர முடியுமென்றாலும் அதில் ஏற்படுத்தப்படும் தடைகள் சொல்லி மாளாது. இதையெல்லாம் தாண்டி ஆதிதிராவிடர்கள் மேலெழுந்து வந்துகொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களை அதிகம் கொண்டிருப்பதாக ஆதிதிராவிடர் சமூகம் இன்றைக்கு மாறியிருக்கிறது. இதற்கெல்லாம் அடிப்படையாகக் காலனிய காலத்தில் வாழ்ந்த ஆதிதிராவிட முன்னோடிகளின் செயல்பாட்டைச் சொல்ல முடியும். அவர்கள் செய்த பல வேலைகளுள் ஒன்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஒட்டி ‘ஆதிதிராவிடர்’ அடையாளம் குறித்த முன்னெடுப்புகளும் தொடர்ச் செயல்பாடுகளும். அவற்றைத் தொட்டுக்காட்டுவதாக இக்கட்டுரை அமையும்.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பையொட்டி ஏராளமான சாதி நூல்கள் எழுதப்பட்டன. ஒவ்வொரு சாதியினரும் தங்கள் சாதி குறித்துப் புராணங்களாக / கதைகளாகச் சொல்ல ஆரம்பித்தார்கள். ஆதிதிராவிடர்களும் தங்கள் சாதி குறித்து எழுதினார்கள். அந்த வகையில் ‘பறையர் உற்பத்தி விளக்கம்’ (1894), ‘ஆதிதிராவிடர் வரலாறு’ (1922) என்னும் நூல்களைக் குறிப்பிடலாம். அவை ஒப்பீட்டளவில் சாதி இந்துக்கள் எழுதிக்கொண்ட சாதி நூல்களைக் காட்டிலும் வேறுபட்டிருந்தன. அந்நூல்கள் சொல்லிய செய்திகள், அதற்கு அக்காலத்திய அரசியல் தேவைகள், சமூக மதிப்புகள், சமூகத்தில் அந்நூல்கள் உருவாக்கிய தலைகீழ் மாற்றம் ஆகியவற்றை இவ்விடத்தில் யோசித்துப் பார்க்கலாம்.

 

பறையர் உற்பத்தி விளக்கம்

சென்னை ஒற்றுமை கல்வி கைத்தொழிற்சாலை சபையின் தலைவராகிய  பா.இராகவமூர்த்தி பிள்ளை எழுதிய இந்நூல் முன்வைக்கும் செய்திகளுள் முக்கியமானது பறையர்கள் மீது எவ்வாறு இழிவு சுமத்தப்பட்டது, உண்மையில் பறையர் என்பவர் யார் என்கிற கேள்விகளுக்கான விடைகள்தாம். பறையர்களைப் பற்றிச் சொல்லும் முன் இந்தியாவின் பூர்வீக, வந்தேறிய குடிகள் பற்றி விரிவாகச் சொல்கிறது. அந்நூலின் செய்திகளைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

நான்கு வகை பொன்னும் ஒன்பது வகை ரத்தினங்களும் விளையும் இவ்விந்திய தேசத்தில் ஆதியில் பீலர், கோந்தர், சண்டாளர், தொதுவர் முதலிய சாதிகள் வாழ்ந்துவந்தனர். தார்த்தாரி தேசத்தின் மத்திய மாகாணத்தின் மங்கோலிய சீக்கிய வம்சத்தவர்களான துராணியர் என்போர் இமயமலைச் சரிவின் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தனர். இந்தியாவில் ஏற்கெனவே வசித்துவந்த தொதுவர்களை மலைகளுக்கும் காடுகளுக்கும் விரட்டிவிட்டனர். தொதுவர்களின் நிலப்பரப்பில் துராணியர்கள் தமக்கான ஆட்சியை அமைத்துக்கொண்டனர்.

துராணியர் என்போர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளை அறிந்திருந்தனர். அவர்களிடம் சாதிபேதம் இல்லை. (நூலில் இரண்டாம் பக்கம் இல்லை. ஆதலால் துராணியர் பற்றிய செய்தித் தொடர்சியையும் ஆரியர்கள் பற்றிய தொடக்கச் செய்தியையும் அறிய முடியவில்லை) முன் திருஷ்டி போல் கூறினதைத் திராவிட ஆதியோர் ஆரியர்களை இவ்வுலகத்து மனிதர்கள் அல்லாது தெய்வப்பிறவிகள் என மதித்து அவர்கள் சொல்லும் வஞ்சக வார்த்தைகளை நம்பினார்கள். திராவிடர்களின் அறியாமையைத் தெரிந்துகொண்ட ஆரியர்கள் தங்களைப் பிரம்மனின் தலையில் தோன்றியவர்கள். மனிதர்களில் தாங்களே முதன்மையானவர்கள். முதல் சாதியினர். மனிதர்களின் கண்ணுக்குத் தெரியும் தேவதைகள் தாங்கள்தான் என்றும் பிரம்மன், வேதியர், பார்ப்பாராதி என்ற பெயர்களில் தங்களை அழைக்க வேண்டும் எனப் பேசியதை அக்காலத்தில் இருந்த அறிவில்லாத அரசர்களும் மக்களும் ஒப்புக்கொண்டனர்.

சமூகத்தைப் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று ஆரியர்கள் வகைப்படுத்தினர். ஒவ்வொரு பிரிவினருக்கும் தொழில்களைப் பகுத்து வழங்கினர். அனுலோமர், பிரதிலோமர் என மக்களை வகைப்படுத்தியவர்கள், முறைகேடாகப் பிறந்தவர்களையும் கைம்பெண்கள் பெற்ற பிள்ளைகளையும் விராத்தியர், குண்டகர், கோளகர் என்றனர். விராத்தியார் உள்ளிட்ட மூவர் பெற்ற பிள்ளைகளைக் ‘கலப்புச்சாதி’ என்றும் ‘சங்கரசாதி’ என்றும் குறிப்பிட்டார்கள்.

ஆரியர்களின் கொள்கையை ஏற்காமல் ஆட்சி செய்தவன் இராவணன். விஸ்வாமித்திரனின் ஏவலால் ராமன் இராவணனைக் கொன்று இலங்கையைக் கைப்பற்றி ஆண்டான். இரணியன், மகாபலி முதலிய அரசர்களைப் பிராமணர்கள் (ஆரியர்) கொலை செய்திருக்கிறார்கள். பிராமணர்கள் தங்களுக்குக் கட்டுப்படாதவர்களை ‘ராட்சசன்’, ‘கொடும்பாவி’ என்றும் கட்டுப்பட்டவர்களை ‘அவதாரப் புருஷன்’ என்றும் கதை கட்டி புராணங்களை எழுதினார்கள்.

இந்துக்களின் கோயில்களில் நடப்பவை எல்லாம் ஓர் அரசருக்கு நடப்பது போலவே நடந்துவருகின்றன. சாமி சிலைகள், யானை, குதிரை, ரதம் முதலியவற்றில் ஊர்வலம் வருவதும், உண்பன படைப்பதும், வாத்தியங்கள் முழங்க திருமணம் முடிப்பதுமான அனைத்து கோயில் ஒழுங்குகளைப் போலவே அரசர்களுக்கும் நடக்கின்றன. அதாவது அரசர்கள் கோயிலோடும் கோயில் அரசர்களோடும் சடங்குகள், நம்பிக்கைகள் சார்ந்து பிணைப்புடன் இருக்கின்றன. அரசர்கள் இறந்தபின் அவர்களது சமாதியில் அவர்களின் பிள்ளைகளைக் கொண்டு கோயில் கட்டிக் கோயிலின் பேரில் சொத்துகளைப் பெருக்கி அவற்றையெல்லாம் ஆரியர்களாகிய பார்ப்பார்கள் (ஆரியர், பிராமணர், பார்ப்பார் ஆகிய சொற்களை ஒரே பொருளில் பயன்படுத்தியிருக்கிறார் ஆசிரியர்) அனுபவிக்கிறார்கள். நாகரிக காலத்தில் பிறந்தவர்களும் இதைத்தான் நம்புகிறார்கள்.

ஆரியர்களை ஏற்றுக்கொண்ட அரசர்களால் பூர்வகுடிகள் துரத்தப்பட்டனர். ஆரியர்களின் ஆதரவு பெற்ற அரசர்கள் பூர்வகுடிகளின் அரசர்கள் இறந்ததும் அவர்களது ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டனர். துரத்தப்பட்ட குடிமக்கள் மலைகளிலும் கெபிகளிலும் குடியேறினர். அவர்கள் சாதியை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆதலால் அவர்களை ஆரியர்கள் ‘பரயர்’ என (அந்நியர் என்னும் பொருளில்) அழைத்தனர். மலைகளில் வசித்ததால் ‘மலைப்பரயர்’ எனவும் ஐந்தாவது சாதியினர் என்றும் அழைத்தனர். அதனால் பார்ப்பனச் சேரிக்கும் பரயர் சேரிக்கும் போக்குவரத்து இல்லை. முரண் அதிகரித்தது. பரயர்கள் காடுகளிலும் மலைகளும் வசித்துவந்தனர்.

பரயர்கள் காடுகளுக்கும் மலைகளுக்கும் குடிபெயர்ந்து சென்ற பின் அவர்கள் விட்டுச்சென்ற வழிபாட்டுத் தளங்களான பௌத்தக் கோயில்களையெல்லாம் ஆரிய ஆதரவு பெற்ற அரசர்கள் அழித்துச் சைவ, வைணவக் கோயில்களாக மாற்றினர். அதற்கேற்றார் போல் அரசர்களின் ஆதரவோடு புலவர்கள் புராணங்களை எழுதினார்கள். பின்னாளில் சாதியை ஏற்றுக்கொண்டவர்களுக்குள் சண்டை மூண்டு வலங்கை, இடங்கை எனப் பிரிந்தார்கள். இருவரும் அடிக்கடிச் சண்டையிட்டனர். இடங்கையர் வலங்கையரின் கிராமங்களையும் பண்ட பாத்திரங்களையும் கொள்ளையடித்துத் துன்புறுத்தி வந்தமையால், தமக்குப் பாதுகாப்பாக இருக்குமென்று கருதி வலங்கையர் தீர யோசித்து மலைகளில் தங்கியிருந்த பரயர்களைக் கெஞ்சி அழைத்து வந்து தமது குடியிருப்புக்கு அருகே வசிக்க வைத்தனர். வலங்கையருக்குத் துணையாக இருந்தமையாலும் கலப்புச் சாதிகளில் கலவாமல் தனித்து இருந்தமையாலும் பரயருக்கு ‘முதல் பிறந்தோர்’ எனப் பெயரிட்டுப் பெருமைப்படுத்தினார்.

சூத்திரர்களின் தொழில்களில் ஒன்று பறை வாசிப்பது. சூத்திரர்களான வலங்கையர் தமது பறையைப் பரயர்களிடம் கொடுத்து இடங்கையர் தங்களைத் தாக்க வரும்போது பறையடித்தால் தாங்கள் எதிர்த் தாக்குதலுக்குத் தயாராவதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கத்தில் பரயர்களை நியமித்துக்கொண்டார்கள். அதன்படி பரயர்கள் இடங்கையர் தாக்குதலுக்கு வரும்போதெல்லாம் பறையடித்து வலங்கையரைக் காப்பாற்றினார்கள். இதனால் பரயர்களுக்கும் இடங்கையருக்கும் இடையே பகை உண்டாயிற்று. ‘பரயர்கள் பறையடித்துக்கொண்டு கம்மாள வீதியில் வருகையில் தட்டுங்கோல் தரையில் விழ கம்மாளப் பெண்கள் ஓடிவந்து எடுத்து மரியாதையுடன் கொடுக்க அதைப் பரயர் தனது இடது காலால் வாங்கினார்’ என்று சொல்லுமாறு கதை கட்டப்பட்டது. இது இடங்கையரான கம்மாளரை மேலும் சினம் கொள்ளச் செய்தது.

நீண்ட காலத்திற்குப் பின் வலங்கையாரும் இடங்கையாரும் பகை மறந்து ஒன்றுபட்டனர். வலங்கையர் பரயர் செய்த உதவியை மறந்தனர். ஆனால், இடங்கையர் பரயர்களோடான முன்விரோதத்தை மறக்கவில்லை. இருவகைச் சாதியாரும் சேர்ந்து ஆதியில் ‘அந்நிய சாதி’ எனப் பொருள்படும் பரயர் என்பதை மாற்றி, வலங்கையார் கொடுத்து அடிக்கச் செய்த ‘பறை’ எனும் வாத்தியத்தைக் கொண்டு ‘பறையர்’ எனவும், ‘தாழ்ந்த சாதியார்’ எனவும் சகலரும் அழைக்க ஆரம்பித்தனர். அதைப் பரயர்கள் தொடக்கத்திலேயே மறுக்காமல் விட்டுவிட்டனர். இன்னும் இவர்கள் செய்த உதவியை மறந்து பரயர்களை அடிமையாக்கிக்கொண்டது மட்டுமல்ல, செத்த மாடுகளை உண்ணுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள் என்பதை ஞானவெட்டி 459ஆவது பாடல் உணர்த்தும்.

 

மலைகளில் இருந்த பரயர்களில் சிலர் வலங்கையார் அழைப்பின் பேரில் குடியிருப்புப் பகுதிக்கு வந்த பின், மலையிலேயே தங்கிவிட்ட பரயர்களில் ஒருவர் பரயர்களுக்கு அரசரானார். அவருக்குப் ‘பர்வதராசன்’ என்று பெயர். அவரின் மகள் பார்வதி. அவளைச் சாம்புவமூர்த்தி என்னும் பிராமணன் திருமணம் செய்துகொண்டான். அதனால் இன்றுவரை பரயருக்கு ‘சாம்புவந்த குலத்தார்’ எனப் பெயர் வழங்கிவருகிறது. சாம்புவமூர்த்தி இமயம் வழிவந்த ஆரியர்களில் ஒருவனாகையால் சாம்புவமூர்த்தி இமயத்தில் வெள்ளியங்கிரியில் வசிக்கிறான் எனவும் சொன்னார்கள்.

ஆரியர்கள் குளிர்ந்த தேசத்திலிருந்து வந்தமையால் வெளுத்த நிறமாக இருந்தார்கள். பரச்சியாகிய பார்வதி பச்சை நிறமுடையவராக இருந்தாள். பிராமணனான சாம்புவமூர்த்தி பார்வதியைத் திருமணம் செய்துகொண்டது பொறாமல் ஆரியர்கள் சாம்புவமூர்த்தியையும் பார்வதியையும் துரத்த அவர்கள் இடுகாட்டில் தஞ்சம் புகுந்து அங்கு கிடைக்கும் மண்டை ஓட்டை எடுத்து அதில் பிச்சை வாங்கி உண்டார்கள். பிராமணர்கள் சாம்புவமூர்த்தியால் தமது குலத்திற்கு இழிவு வரும் என்று கருதி அதை நீக்க சாம்புவமூர்த்தியை ‘ஜெகதீசன்’ என்றும், பார்வதியை ‘மகாசக்தி’ என்றும் பிச்சை வாங்கி உண்ட மண்டை ஓட்டை ‘பிரம்ம கபாலம்’ என்றும் இதுபோன்ற கதைகளைப் புராணங்களாக எழுதி அதற்கு வேண்டிய கோயில்களை உண்டாக்கினார்கள். அனைவரும் அங்கு சென்று வணங்கிவருகின்றனர். பரயர்கள் மலைகளிலிருந்து வந்து சமவெளிகளில் குடியேறிய பின் பரச்சியைத் தமக்குத் தேவதையாக்கி இருந்தமையால் இன்றுவரை சேரிகளில் பெண் தெய்வங்களை அதிகமாகக் காணலாம்.

பெண் தெய்வங்கள் எல்லாம் பரச்சி என்பதற்குச் சான்றாகச் சென்னை முத்தியாலுபேட்டையில் உள்ள ‘ஏகாத்தாள்’ என்னும் தெய்வத்தைச் சுட்டலாம். இது ஊர்வலம் வருகையில் இரண்டு ஈஸ்வரன் கோயில்களில் தங்கும். அதனால் கோயில் மூலவருக்குத் தீட்டு ஏற்பட்டுவிட்டதாகக் கருதி, பரச்சியாகிய பெண் தெய்வத்தை எடுத்துக்கொண்டு சென்ற பிறகே அங்கிருக்கும் மூலவருக்குப் பூசைகள் செய்யப்படும். இதனால் பரயர் தேவதையின் கோத்திரத்தார் என்பது விளங்கும். காலப்போக்கில் மற்ற சாதியார் சேரிகள் இருந்தவிடத்தில் குடியேறிய பின்னும் சேரிகள் இருந்தபோது வழிபட்ட தேவதைகளின் பெயர் கொண்டே தெருக்கள் அமைந்திருக்கின்றன. உதாரணமாக, திருவள்ளுவர் பரயர்களுக்குக் குலகுரு. அவரைச் சமாதி செய்த இடம் சேரியாகவே இருக்க வாய்ப்புண்டு. சென்னை மயிலாப்பூரில் வள்ளுவரின் சமாதி இருக்கும் இடமாகச் சொல்லப்படும் வீதிக்கு ‘முண்டகண்ணி அம்மன் கோயில் வீதி’ எனப் பெயர் வழங்கிவருவதைக் குறிப்பிடலாம்.

பிராமணப் பெண்ணுக்கும் சூத்திர ஆணுக்கும் பிறந்தவர்களே பரயர், சண்டாளர் என்று பரயர் மீது பொறாமை கொண்டவர்களால் மனுநூல், அம்ரம், சூடாமணி, சூதசங்கிதை முதலியவற்றில் சொல்லப்பட்டிருக்கிறது. சண்டாளர் என்றால் ‘கொலைகள் புரிபவர்’ என்று பொருள். அப்படிக் கொலை, சிசுவதை, கரு அழித்தலைச் செய்துவந்தவர்கள், வருபவர்கள் எந்தச் சாதியார் என்று இதை வாசிப்பவர்கள் உணரலாம். மேலும் சூடாமணி நிகண்டு குறிப்பிடும் மக்கள் பெயர்த் தொகுதியில் சண்டாளருக்கு உண்டாகிய ஏழு பெயர்களில் பரயர் அல்லது பறையர் என்பது இல்லை.

பரயர்கள் ஆதியில் சைவ, வைணவத்தை ஆதரிக்கவில்லை. சாதி அமைப்பையும் ஆதரிக்கவில்லை. உதாரணமாக, திருவள்ளுவர் மதுரைத் தமிழ்ச்சங்கம் போயிருந்தபோது அவர்கள் உன் சாதி என்ன என்று கேட்டதற்கு அவர் ‘சாதி, சமயம், புராணம் ஆகியவை எமக்கு இல்லை’ என்று கூறியுள்ளதைக் குறிப்பிடலாம்.

தாழ்ந்த சாதியார் என தற்காலம் மற்றவர்களால் அழைக்கப்படும் பரயர்கள், ஆதியில் அரசு செலுத்தின வம்சத்தவர்கள் என்பது இந்நூல் வழி தெரிந்துகொள்ளலாம். இத்தகைய காரணங்களினால் பரயர் அல்லது பறையர் எனும் சொல் யாதொரு இழிவையும் தராமல் இருக்க, இந்தச் சாதியில் சிலர் இவர்களுக்குப் பொருந்தாத பலவித பெயர்களைக் கொண்டு வெளிவருவதினால் அவர்களே தங்களைத் தாழ்வுபடுத்திக்கொள்வது அல்லாமல் அப்பறையர் என்னும் சொல்லுக்கும் இழிவை உண்டு செய்கிறார்கள். பல சாதிகளிலும் உடுக்கைப்பறை, மத்தளப்பறை வாசிப்பவர்கள் இருக்க, இந்தச் சாதியார் மட்டும் ‘பரயர்’ என வெளிவருவதற்கு வெட்கப்படுவது அறியாமையாக இருக்கிறது. இச்சாதியாரில் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள், செல்வந்தர்கள், பண்டிதர்கள், பாமரர்கள், யாவரும் ‘பரயர்’ என்றே வெளிவந்து ஒற்றுமையுடன் ஏழைகளுக்கு உதவுவார்களேயானால் இச்சாதியார் ஆங்கிலேய ஆட்சியில் மற்ற சாதியாரைப் போல சீரும் சிறப்புக் கல்வியும் மேன்மையும் அடைவார்கள் என்பது உறுதி என்பதாக நூலின் நுவல் பொருள் அமைந்திருக்கிறது.

பறை சூத்திரர்களுக்கு உரியது. எல்லாச் சாதியிலும் பறை இசைப்பவர்கள் இருக்கிறார்கள் என்பன நீண்ட காலமாக ஆதிதிராவிடர்கள் தரப்பிலிருந்து சொல்லிவரும் விஷயம். அயோத்திதாசரிடத்திலும் இத்தகைய சிந்தனைகளைக் காணமுடியும். இந்நூலாசிரியர் ‘பரயர்’ என்று சொல்வதற்குத் தயக்கம் வேண்டாம். சாதி அமைப்புக்கு வெளியே இருந்தவர்கள் என்பதைச் சுட்டும் பெயர் ‘பரயர்’ என்கிற செய்திகள் ஆதிதிராவிடர்களுக்குச் சொல்லப்பட்டுவந்த கதையாடலை மறுத்து ஒதுக்குகிறது.

 

ஆதிதிராவிடர் வரலாறு

இந்நூலைத் திரிசிரபுரம் ஆ.பெருமாள் பிள்ளை எழுதியிருக்கிறார். எழுதும்படி கேட்டுக்கொண்டவர் எம்.சி.ராஜா. 1911 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பெரும்பான்மை இந்தியர்களைத் திராவிடர் என்று பொது இனப் பெயரில் கெயிட் குறிப்பிட்டிருந்தார். இது திராவிடர் குறித்த மீள்பார்வையை ஆதிதிராவிடர்களிடமும் ஏற்படுத்தியது. இதுபோன்றே ஹண்டர் (William Wilson Hunter) திராவிடர்கள் ஆரியர்களிலிருந்து பிரிந்தவர்கள். அவர்களிலும் இருவகை உண்டு. ஒருவர் கொலேரியா மற்றொருவர் திராவிடர். இவர்கள் ஆரியருக்கு முன்பே சிந்து கணவாய் வழியாக இந்தியாவிற்குள் வந்தவர்கள் என்கிறார். தென்னிந்தியாவில் பூர்வமாய்க் குடியிருந்தவர்களே ஆதிதிராவிடர்கள். மற்றையோருக்குத் ‘திராவிடர்’ பெயர் வந்தமைக்குக் காரணம் ஆதிதிராவிடர்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்திக் காட்டும் பொருட்டே ஆகும் என்பார் திரிசிரபுரம் ஆ.பெருமாள் பிள்ளை (தி.ஆ.பெ.பி). திராவிடர்களும் ஆரியர்களும் வருவதற்கு 4000 – 5000 ஆண்டுகளுக்கு முன்னமே ஆதிதிராவிடர்களின் தேசமாகத் தென்னிந்தியா இருந்தது எனச் சொல்லும் தி.ஆ.பெ.பி, 6000 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் இட்சுவாகு என்பவனின் வசமிருந்த இடமே ‘ஆதிதிராவிடம்’ என்கிறார்.

ஆதிதிராவிடம் என்னும் தேசம் இருந்ததாகக் குறிப்பிடுவது திராவிடக் கருத்தியலை மறுப்பதாக அமைந்திருக்கிறது. ஆதிதிராவிடத்தின் எல்லையாகத் தண்டகநாடும் விந்தியத்தின் தென்பகுதியும் குறிப்பிடப்படுகிறது. ஆதிதிராவிடத்தின் அரசனாக இராவணன் குறிப்பிடப்படுகிறான். ‘பறையர் உற்பத்தி விளக்க’த்தில் பா.ராகவமூர்த்தி பிள்ளையும் இராவணனை ஆதிதிராவிடத்தின் அரசனாகச் சுட்டுவது இவ்விடத்து ஒப்பிட்டுப் பார்க்கத்தக்கது.

ஆதிதிராவிடர்கள்தாம் தமிழ் மக்கள். அவர்களிடம் தமிழ் கற்றுக்கொண்டவர்களே திராவிடர்கள். ஆதிதிராவிடர்களிடம் தமிழ் கற்றுக்கொண்ட குடிகள் ஏராளம். முதலில் கற்றுக்கொண்டவர்கள் ஆரியர்கள். ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்குமான முரணில் ஆரியர்கள் திராவிடர்களையே ‘வானரர்’ என அழைத்தனர் எனக் குறிப்பிடும் தி.ஆ.பெ.பி., ஜி.யு.போப் தனது திருவாசக மொழிபெயர்ப்பில் ‘சைவ சமயமானது மிகவும் பழைமையானது. அதுதான் தென்னிந்தியாவின் மார்க்கம். ஆரியர் வருவதற்கு முன்பே இந்தியா முழுமையும் இருந்தது சைவ மார்க்கமே’ எனக் கூறிய கூற்றை மேற்கோள்காட்டி ஆதிதிராவிடர்களைச் ‘சைவர்’ என்கிறார்.

ஆரியர்கள்தான் தமிழுக்கு மூலவர்கள் என்னும் கருத்தை மறுக்கும் தி.ஆ.பெ.பி, இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றைக் காலந்தோறும் தம் விருப்பப்படி மாற்றி மாற்றி எழுதி வாசிக்கிறவர்களுக்கு மயக்கம் தரும்படி உண்மைத் தன்மையை மயங்கச் செய்துவிட்டனர் என்கிறார். இதற்கு வரலாற்றில் ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. தமக்குச் சாதகமாக இல்லாத வரலாற்றைத் திரித்து எழுதிய சம்பவங்கள் நிறைய நடந்திருப்பது தி.ஆ.பெ.பி கூற்றை உறுதிப்படுத்துகிறது.

ஆரியர்கள் மதபேதம் ஏற்படுத்தியதே சாதிபேதத்தைக் காப்பாற்றத்தான். ஆரியர்கள் மதமருள் சாத்திரங்கள் எழுதியதாலேயே ‘மறையோர்’ எனப் பெயர் பெற்றனர் எனச் சொல்கிறார் தி.ஆ.பெ.பி., மறை ஓதியதால் பறையர்களுக்கும் மறையர், மறையோர் என்ற பெயர் இருந்ததாகச் சொல்லப்படுவதும் உண்டு. 2018இல் கூட தேனி கிறித்தவ ஆதிதிராவிடர்கள் ‘இராஜமறையர் மகாஜன சங்கம்’ என்ற பெயரில் சில முன்னெடுப்புகளைச் செய்தனர். ஆதிதிராவிடர்கள் யாவர் என்பதை வரையறை செய்யும் தி.ஆ.பெ.பி ‘சாதிபேதமற்ற ஆதி சைவ சமயிகளான இராவணன் ஆதியோரன்றி வேறெவருமல்ல’ என்கிறார்.

ஆதிதிராவிடர்களை அருவாளர், வானவர், காட்டுச்சாதி என்று வகைப்படுத்தக் கூடாது என்கிறார். இது மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது ஆதிதிராவிடர்களைச் சாதி மாற்றிக் குறிக்கும் போக்கிற்கான எதிர்வினையாகத் தெரிகிறது. இதே காலத்தில் அயோத்திதாசரும் ‘சாதிபேதமற்ற திராவிடர்கள்’ என்று குறிக்க வேண்டுமெனக் கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் கோரிக்கை வைத்தார்.

தி.ஆ.பெ.பி ஆதிதிராவிடர்கள் ‘நாகர்கள்’ எனவும் சுட்டுகிறார். நாகர்களை இழிவுக்குள்ளாக்கியவர்கள் சேர, சோழ, பாண்டியர்தாம். நாகர், நகர நாகரிகம் உடையவர்களாகவும் திருந்திய மொழியைக் கைக்கொண்டவர்களாகவும் இருந்தனர். நெசவுத்தொழில் செய்து வாழ்ந்தவர்களான ஆதிதிராவிடர்கள் என்னும் நாகர்கள் தண்டகவனத்தை வெட்டியதால் ‘வெட்டியார்’ எனவும் கிணறு தோண்டியதால் ‘தோட்டி’ எனவும் பெயர் உருவானது. பிற்காலத்தில் இழிவுதொழில் செய்தவர்களுக்கு அப்பெயரைச் சூட்டி அவர்கள்தான் நாகர்கள் எனச் சித்திரித்துவிட்டனர் என்கிறார் தி.ஆ.பெ.பி. இது வெட்டியார், தோட்டி குறித்துச் சமகாலத்தில் இருந்துவரும் புரிதலை நேர்செய்வதாக அமைந்திருக்கிறது.

‘பொறையார் என்ற சொல் திரிந்து பறையர் ஆனது. பொறையர் வம்சத்தைச் சேர்ந்த தகடூரெறிந்த கணைக்கால் இரும்பொறை வாழ்ந்த காலத்தில் பொறையராக இருந்தவர்கள் பறையராகி இருக்கலாம். இந்தக் காலத்தில்தான் ‘பறையர்’ என்ற சொல் உருவாகியிருக்க வேண்டும்’ என்பதான சீனிவாச ஐயங்காரின் செய்தியைக் காட்டிச் சேரர்களில் பொறையர் பிரிவினர் பறையராக இருந்திருக்க வேண்டும் என்கிறார் தி.ஆ.பெ.பி. மேலும் அவர், பறையடித்ததால் பறையர் என்று பெயர் வந்ததாகச் சொல்வதில் நியாமில்லை. காரணம் நெசவு, உழவு செய்துவந்தவர்களுக்கும் ‘பறையர்’ என்று பெயர் வழங்கப்பட்டிருக்கிறது என்ற தகவலையும் தருகிறார்.

பறையர்கள் கோயிலில் நுழைய முடியாமல் இருப்பது சில நூற்றாண்டுச் சிக்கலாக இருக்கலாம். அதற்கு முன்னால் பல நூற்றாண்டுகள் அவர்கள் கோயிலுக்குள் போய் வர தடைகள் இருந்ததாகத் தெரியவில்லை. 1910இல் அன்றைய சென்னை மாகாண ஆட்சியில் முடிப்பக்காவூர் கிராம கோயில் உரிமை மறுக்கப்பட்டமை தெரியவருகிறது. அதை மறுத்து வழக்குத் தொடுத்து 16ஆம் நூற்றாண்டுச் சாசனங்களைச் சான்று காட்டி பறையர்களுக்கான உரிமையை வென்றிருக்கும் ஒருவரைப் பற்றிய செய்தியைக் குறிப்பிட்டிருக்கிறார் தி.ஆ.பெ.பி.

சிவபெருமான் உடுக்கைப்பறை உடையவர் ஆதலின் சிவனும் பறையர். சிவகணமாகிய நந்தி மத்தளப்பறை வாசிப்பவன் ஆதலால் நந்தியும் பறையரே.   பறையர் என்ற சொல்லை ஆராய்ந்தால் பண்டைத் தமிழ் நிலப் பகுப்பாம் ஐவகை நிலங்களிலும் வெவ்வேறு பறைகள் இருந்துள்ளன. ஆக, அவற்றை முழக்கிய மக்கள் அனைவரும் பறையர்களே என்று பறையருக்குத் தரப்படும் விளக்கம் ‘பறையர்’ என்பது தொழில்பெயராக எல்லா நிலத்தும் வழக்கில் இருந்ததும் அது இழிசொல்லாகக் கருதப்படவில்லை என்பதும் தெரிகிறது.

வருணாசிரமம் ஆரியர்களால் ஏற்படுத்தப்பட்டது எனக்கூறும் ஆசிரியர், ஆதிதிராவிடர்கள் திராவிடர்களுமல்ல, சூத்திரர்களுமல்ல. ஆரியரும் திராவிடரும் வருவதற்கு முன்னமே இந்தேசத்தில் இருந்த பூர்வகுடிகள் என்பது தி.ஆ.பெ.பி.வின் முதன்மைக் கூற்றாக இருக்கிறது.

வாயுபுராணம் எழுதப்பட்ட காலம் வரை சாதிபேதம் இருந்ததாகத் தெரியவில்லை. சாதிக் கதைகள் ஒரே மாதிரியாகவும் எழுதப்படவில்லை. ஒரு சாதியின் கதையும் இன்னொரு சாதியின் கதையும் முட்டிமோதிக் கொள்வதாகவே இருக்கிறது என்கிற மியூர் (Mure) கூற்றை மேற்கோள் காட்டும் தி.ஆ.பெ.பி.,  வாயுபுராணத்தின் காலமான கி.பி.320 வரை சாதிபேதம் இல்லை எனக் குறிப்பிடுகிறார்.  இது தீண்டாமை உருவான காலமாக அம்பேத்கர் குறிப்பிடும் 4ஆம் நூற்றாண்டோடு ஒத்துள்ளது.

இராவணனின் சந்ததியோர்களான ஆதிதிராவிடர்கள் அரசியல் முறைமை, சைவ சமயம், தமிழ்மொழி, சங்கீத நாகரிகம் முதலிய நாற்குணமுடையோராக இருந்த சைவர்கள் ஆவர். அதனாலேயே 1143ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சிவஞானபோதம், சைவத்தை ஆதிதிராவிடர்களுக்கும் போதிக்கலாம் என்று சிவபிரானே கனவில் தோன்றிக் கட்டளை இட்டதாக ஒரு செய்தியைச் சொல்கிறது என்கிற செய்தியையும் சொல்லிச் செல்கிறார் தி.ஆ.பெ.பி. அயோத்திதாசரின் நிலைப்பாட்டிலிருந்து விலகுவதாக இக்கருத்து அமைந்திருக்கிறது. தி.ஆ.பெ.பி. ஆதிதிராவிடர்களைச் சைவர்களாக நிறுவியதற்கான தேவை குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டும்.

‘புலையர்’ என்னும் சொல் ஆதிதிராவிடருக்கு உரியதாகச் சொல்லப்படுகிறது. அது தவறு. புலால் சாப்பிடும் அனைவரும் புலையர். அந்த வகையில் எல்லாச் சாதியிலும் புலையர் இருக்கிறார்கள். பறையர், வெட்டியார், பாதகர், கயவர், நீசர், சண்டாளர் என்னும் பெயர்களையும் ஆதிதிராவிடர்களுக்கே உரியது என்பதை மறுத்து அவை அனைத்துச் சாதியினருக்கும் உரியவை என்கிறார் தி.ஆ.பெ.பி. மேலும் அவர் பாதகர், கயவர், நீசர் ஆகியன பல்லவர்களைக் குறிக்கப் பயன்படுத்திய சொற்கள் என்று சொல்லி அதற்குப் பிங்கல நிகண்டைச் சான்று காட்டுகிறார்.

பிராமணர்கள் பிற்காலத்தில் பௌத்த, சமண மதங்களைத் தழுவியது போல ஆதிதிராவிடர்களும் பிற்காலத்தில் பௌத்தம் தழுவினர் என்று கூறும் தி.ஆ.பெ.பி., கி.பி.11ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் படையில் வீரர்களாகவும் குதிரையேற்றம், யானையேற்றம், வேட்டையாடுதல் முதலியவற்றில் திறமையானவர்களாகவும் ஆதிதிராவிடர்கள் இருந்ததைச் சுட்டுகிறார். இது 11ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் தீண்டாமை உருவானது எனச் சொல்லும் அயோத்திதாசர் உள்ளிட பலரின் கருத்தோடு ஒத்துப்போவதாக இருக்கிறது. அம்பேத்கர் மற்றும் வாயுபுராணத்தில் சொல்லப்பட்ட செய்தியோடு பொருத்திப் பார்க்கும்போது கி.பி.நான்காம் நூற்றாண்டில் தீண்டாமை உருவாகியிருந்தாலும் அது தமிழ்நாட்டில் பறையர்களைப் பாதித்தது 11ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் என்ற முடிவுக்கு வரமுடிகிறது.

தென்னிந்தியாவில் ராட்சசர் என்று சொல்லும் சாதிகளுள் ஆதிதிராவிடர் சாதியும் ஒன்று. இச்சாதியினர் தம் பிணங்களைப் புதைக்கும் பழக்கமுடையவர்கள். இவர்களைச் சுடுகாட்டுடன் தொடர்புபடுத்தித் தென்னாட்டு அரசராகிய வீரவாகு என்பாரைச் சுடுகாட்டில் இருந்து காவல் புரிபவர் எனச் சொல்வது பொருத்தமற்றது என அரிச்சந்திர புராணத்தின் கூற்றை மறுத்துரைக்கும் தி.ஆ.பெ.பி., ஆதிதிராவிடர்களுக்கும் ஆரியர் எனும் பிராமணர்களுக்கும் இருந்த முரணை, ‘ஆதிதிராவிடர் குடியிருப்புக்குள் ஆரியர்கள் நுழைவார்களேயானால் அவர்கள் கால் வைத்த இடம் கெட்டதென்று கருதி ஆரியர்கள் ஆதிதிராவிடர் குடியிருப்பை விட்டு அகலும் வரை சாணம் தெளித்துச் சுத்தப்படுத்துவார்கள்’ என்பதான ஒரு காட்சியைத் தான் முப்பது வருடங்களுக்கு முன்பு திருச்சி பகுதியில் கண்டதாகக் கூறுகிறார். இதேபோன்றதொரு சம்பவத்தை அயோத்திதாசரும் குறிப்பிட்டிருக்கிறார். ஆரியர் என்னும் பார்ப்பாரும் ஆதிதிராவிடரும் மட்டுமே இயற்கை சாதி எனக் குறிப்பிடும் தி.ஆ.பெ.பி. சாதியின் இயல்பு பற்றிக் கூறும்போது ‘இந்தியாவின் சாதி பேதமானது இந்தியர் தொட்டிலில் இருந்து சுடுகாடு போகும் காலம்வரை ஒருவரையொருவர் தாழ்த்திக்கொள்ளும் முறைமையினை உடையது’ என்கிறார்.

ஆதிதிராவிடர் சைவர் என்பதைத் தற்காலத்திலும் காண முடியும் எனச் சொல்லும் தி.ஆ.பெ.பி., சிலரின் பெயர்களைத் தருகிறார். உதகமண்டலத்தைச் சேர்ந்த சிவாகாரமாய ஏகாம்பர சுவாமிகள், ஓம் பிரகாச சுவாமிகள், இரத்தின அம்மையார், சென்னை பாலதேசிக நாயனார், பிருங்காசலம் மாங்குளம் கிராமத்தில் சமாதி கொண்டுள்ள ஸ்ரீலஸ்ரீ சிவலிங்கநாயனார், சென்னை சேத்துப்பேடு சிவப்பிரகாச தேசிக சுவாமிகள் ஆகியோர் சைவ சமயத்தின் பெரியோர்களாக விளங்கியவர்கள். ஆங்கிலக் கல்வி கற்று ஆங்கில அரசில் பணியாற்றியவர்கள். வேளாண்துறையில் நிபுணத்துவம் கொண்டவர்களாகவும் ஜோதிடம், மருத்துவம் ஆகியவற்றில் தேர்ந்தவர்களாகவும் இருந்தவர்கள் என்பதைச் சுட்டும் தி.ஆ.பெ.பி. கீழ்வரும் செய்திகளைத் தொகுத்துரைக்கிறார்.

அயோத்திதாசர், சுகிர்தவசனி பத்திரிகை நடத்திய நாராயணசாமிப் பிள்ளை ஆகியோர் ஆதிதிராவிடர்களைப் ‘பறையர்’ என அழைப்பதை மறுத்துவந்தனர். சென்னை காசிமேடு வைரக்கண் வேலாயுதப் புலவர், அரங்கையதாசப் பண்டிதர் முதலியோர் சேர்ந்து ஆதிதிராவிட மகாஜன சபையை 1890இல் தொடங்கினர். இதற்கு வாழ்நாள் தலைவராக இருந்தவர் ஷாப்பு P.V.சுப்பிரமணியம் பிள்ளை. இன்னொரு புறம் இரட்டைமலை சினிவாசன் ‘பறையன்’ என்னும் பெயரில் பத்திரிகை நடத்திய அக்காலத்தில் சென்னை கவர்னராக இருந்த வென்லாக் பிரபுவிடம் ஆதிதிராவிடர்களின் தேவையை எழுதிப் பெற்றார்.

ஜான் ரத்தினத்தின் ‘திராவிடப் பாண்டியன்’, வே.ரத்ன முருகேச பண்டிதர், வேலூர் து.முனிசாமிப் பண்டிதரும் இணைந்து நடத்திய ‘ஆன்றோர் மித்திரன்’, பூஞ்சோலை முத்துவீர நாவலர் நடத்திய ‘பூலோகவியாசன்’, அயோத்திதாசரின் ‘தமிழன்’ ஆகிய பத்திரிகைகள் ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டன. ஆதிதிராவிட மகாஜன சபைதான் பின்னாளில் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்தது. அக்காலத்தில்தான் ஆதிதிராவிட மகாஜன சபைக்குக் கௌரவச் செயலராக எம்.சி.ராஜா நியமனம் ஆனார்.

ராஜரத்தினம், ம.க.சின்னத்தம்பிப் பிள்ளை, சைவச் சொற்பொழிவாளர் கி.ஊ.பா.கங்காதர நாவலர், சகஜானந்தர், மதுரைவாசகம் பிள்ளை, முனியசாமிப்பிள்ளை, அத்வைதானந்தர், வீ.ஏ.முனிசாமி பிள்ளை, தேசிகானந்தம், பழநிசாமி பிள்ளை, பெ.மா.வெங்கடபதி நாவலர், இராஜகோபால், வரதராஜலு, கங்காதர பாலதேசிகர், பொ.ரத்தினப்பிள்ளை ஆகியோர் கிராமங்கள் தோறும் சென்று ஆதிதிராவிட சபையின் செயல்பாடுகள் பற்றி எடுத்துச் சொன்னார்கள்.

சென்னை விக்டோரியா பொதுக்கூடத்தில் இராகவதாசர் தலைமையில் கூடிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் ஆதிதிராவிடர் பெயர் பற்றியும் ஆதிதிராவிடர் முன்னேற்றம் குறித்தும் விண்ணப்பம் ஒன்றை 1917ஆம் ஆண்டு இந்தியா வந்திருந்த சேம்ஸ்போர்டு, மாண்டேகு ஆகியோரிடம் வழங்கினர். அதில் P.V.சுப்பிரமணியன் பிள்ளை, முக்குந்து பிள்ளை, ஓங்காரம், சண்முகம் பிள்ளை, எம்.சி.ராஜா, திருப்புகழ் அம்மாளாக இருக்கலாம் (பெயரில் பாதி தெளிவில்லை), முனிசாமிப்பிள்ளை, வாசுதேவப்பிள்ளை, இராஜரத்தினம் பிள்ளை, வேணுகோபால பிள்ளை ஆகிய ஆதிதிராவிடர்கள் கையொப்பமிட்டிருந்தனர்.

இந்த விண்ணப்பத்திற்குப் பிறகு வில்லிங்டன் பிரபு சென்னை மாகாண சட்டசபையில் ஆதிதிராவிடர்களின் பிரதிநிதியாக எம்.சி.ராஜாவை நியமனம் செய்தார். அதன் தொடர்ச்சியாக ‘ஆதிதிராவிடர்’ என்னும் பெயரை அரசிதழில் இடம்பெறச் செய்திட வேண்டுமென்ற நோக்கத்துடன் 1922 ஜனவரி 20ஆம் தேதி எம்.சி.ராஜா ‘ஆதிதிராவிடர்’ பெயரை முன்மொழிய, நம்பெருமாள் செட்டியார் வழிமொழிந்தார். மதுரைப் பிள்ளை ஆதரித்துப் பேச ‘ஆதிதிராவிடர்’ என்னும் பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதாக அந்நூலில் இறுதிச் செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன.

‘ஆதிதிராவிடர்’ என்பது ஆதிதிராவிட முன்னோடிகளின் செயல்பாடுகளால் அரசின் அங்கீகரிக்கப்பட்ட சொல்லாக ஆனது பற்றிய வரலாற்றைச் சொல்லும் விதத்தில் இந்நூல் முக்கியமானது. இன்று பறையர்களுக்கு ஆதிதிராவிடர் எனச் சாதிச் சான்றிதழ் வழங்கப்படுவதற்கு எம்.சி.ராஜா முதலிய முன்னோடிகளின் செயல் காரணமாக இருந்திருக்கிறது. ‘பறையர்’ என்பதற்குச் சொல்லப்பட்டிருக்கும் கதையாடல்களில் இருந்து விடுபடுவதற்கான சொல்லாக இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் ‘ஆதிதிராவிடர்’ இருந்திருக்கிறது. சொல் வழியாகக் கற்பிக்கப்பட்ட இழிவை வேறொரு சொல் வழியாக இல்லாது செய்தல் ஒருவிதமான பண்பாட்டு அரசியல் உத்தி. அந்தச் செயல்பாட்டைச் சரியாகப் பதிவு செய்திருக்கிறது இந்நூல். அயோத்திதாசர் ஆதிதிராவிடர்களுக்குப் பல்வேறு சாதிப் பெயர்கள் உருவானதற்கான காரணத்தைச் சொல்லும்போது ‘… இவர்களுக்குச் சாதியே கிடையாது. ஆதலின் அதுபற்றி சாதிகளின் பெயரும் நிலையாகக் கிடையாது. என்பார். அதுதான் ஒரே பிரிவினருக்குப் ‘பறையர் உற்பத்தி விளக்கம்’, ‘ஆதிதிராவிடர் வரலாறு’ என இரு பெயர்களில் சாதிநூல் உருவானதற்கான காரணமாகவும் இருக்க முடியும். ‘ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்’ என்றொரு நூல் உண்டு. அது ஆதி திராவிடர் அல்லாதவர் எழுதியது. இப்படி ஆதிதிராவிடர் அல்லாதவர்கள் ஆதிதிராவிடர்கள் பற்றி எழுதிய நூல்களும் பாடல்களும் உண்டு. அவை கட்டுரையின் விரிவஞ்சி பயன்கொள்ளப் பெறவில்லை.

ஆதிதிராவிடர் சமூகத்தின் பெயரைப் பொறுத்தமட்டில் ஆதிதிராவிட முன்னோடிகளிடம் நான்கு விதமான பார்வைகள் இருந்திருக்கின்றன. பா.ராகவமூர்த்திப் பிள்ளை போன்றவர்கள் ஆதிதிராவிடர்களைப் ‘பரயர்’ என்று சொல்ல, அயோத்திதாசர் ‘சாதிபேதமற்ற திராவிடர்கள்’ என்று சொல்லியிருக்கிறார். எம்.சி.ராஜா, ஷாப்பு சுப்பிரமணியம் போன்றவர்கள் ‘ஆதிதிராவிடர்’ என்ற அடையாளத்தை விரும்பியவர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பெயரை முன்வைத்தாலும் ‘பறையர்’ என்ற சொல்லை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்கள். இரட்டைமலை சீனிவாசன் ‘பறையர்’ என்ற சொல்லை ஏற்றுக்கொண்டவராகவும் அந்த அடையாளத்தோடு செயல்பட்டவராகவும் இருந்திருக்கிறார். இதன் வழி அரசுக்கு இரண்டிற்கும் மேற்பட்ட பெயர்களுக்காக ஆதிதிராவிடர்கள் கோரிக்கை வைத்திருப்பார்கள் போலத் தெரிகிறது. என்றபோதும் 1901ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை ஆதிதிராவிடர்களைத் ‘தமிழ் பறையன்’ எனவும் 1911, 1921 அறிக்கைகள் ‘பறையன்’ எனவும் குறித்திருக்கின்றன.

[email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!