தேசிய கல்விக் கொள்கையைத்தான் இவர்களும் எதிர்பார்க்கிறார்கள்

நேர்காணல் : ஜவகர் நேசன் ; சந்திப்பு : வாசுகி பாஸ்கர்

கல்வியாளர், முன்னாள் துணைவேந்தர் (ஜே.எஸ்.எஸ். பல்கலைக்கழகம், சவீதா பல்கலைக்கழகம்), இந்திய – அயல் நாடுகளின் கல்விப்புல அனுபவம் உடையவர் என பன்முக அடையாளம் கொண்ட பேராசிரியர் ஜவகர் நேசன், ‘தேசிய உயர்கல்வித் தகுதி கட்டமைப்பு: எதேச்சதிகார தேசியவாதத்தின் குறியீடு’, ‘In search of Education’ ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார். திமுக அரசு பொறுப்பேற்றவுடன் மாநில கல்விக் கொள்கை உருவாக்கக் குழு அமைக்கப்பட்டு, அதன் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார் பேராசிரியர் ஜவகர் நேசன். அண்மையில் அக்குழுவிலிருந்து விலகிய ஜவகர் நேசன், மாநில கல்விக் கொள்கை குறித்தும், அதன் உருவாக்கத்தில் இருக்கும் நிர்வாகச் சிக்கல்கள் குறித்தும் பகிர்ந்துகொள்கிறார்.

 

ஒவ்வொரு காலகட்டத்திலும் பள்ளிக் கல்வி, உயர்கல்வி குறித்தான கொள்கைகள், விதிகள், பாடத்திட்டங்கள் முதலியன பல்வேறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டே நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சமீப காலமாக அதாவது, நான்கைந்து வருடங்களாக இந்தத் தேசியக் கல்விக் கொள்கை, அளவுக்கு அதிகமாகப் பேசப்பட்டுவருகிறது. அப்படி இருக்கையில் இந்தத் தேசியக் கல்விக் கொள்கை என்றால் என்ன? அதை நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல்?

தேசியக் கல்விக் கொள்கை என்பதைப் பல காலகட்டங்களிலும் பல அரசுகள் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த வகையில், முதல் கல்விக் கொள்கை 1949இல் டாக்டர் ராதாகிருஷ்ணன் குழு, உயர்கல்விக்காகக் கொண்டுவந்தது. பின்னர் 1952இல் எல்.லட்சுமணசாமி இடைநிலைக் கல்விக் குழு வந்தது. இவ்வாறு அந்தந்தக் காலகட்டங்களில் பல்வேறு குழுக்கள் அமைத்துக் கொள்கைகள் வகுத்தார்கள். அதேமாதிரி கோத்தாரி கமிஷன். 1986இல் புதியக் கல்விக் கொள்கை. அதன்பிறகு தற்போதைய 2020 தேசியக் கல்வி கொள்கை. இதுபோன்ற பல கல்விக் கொள்கைகள் உருவாக்கப்படுவதென்பது இயற்கை. இதற்குப் பெரிய சட்டத் திட்டம் எதுவும் கிடையாது. ஓர் அரசு தன்னுடைய மக்களுக்குக் கல்வி வழங்குவதில் என்னென்ன சிக்கல்கள் இருக்கிறது என்பது பற்றி அந்தந்தக் காலங்களில் ஆய்வு செய்வார்கள். எந்தப் பாதையை நோக்கி அதைச் செயல்படுத்த வேண்டும், இன்னும் இருபது, ஐம்பது வருடங்கள் கழித்து என்னென்ன சிக்கல்கள் நேரும், என்பதையெல்லாம் கருத்திற்கொண்டு தயார்படுத்துவது இயற்கை.

ஆனால், இதுவரை எந்தக் கல்விக் கொள்கையும் அது ராதாகிருஷ்ணன் குழுவாக இருக்கட்டும், கோத்தாரி குழுவாக இருக்கட்டும் அவற்றில் உள்ள பரிந்துரைகளில் பத்து சதவீதம்தான் செயல்படுத்தியிருப்பார்கள். ஏனென்றால், ஒரு கல்விக் கொள்கையை வகுத்து நிபுணர்கள் மூலமாக அதைப் பரிசீலித்து அரசிடம் கொடுத்துவிடுவார்கள். அரசு, இதைச் செய்ய முடியுமா முடியாதா, இதில் பலன் இருக்கிறதா இல்லையா, அதை எந்தெந்தக் காலகட்டத்தில் செய்ய முடியும், இவற்றை ஆய்வு செய்துதான் செயல்படுத்தும். அப்படிச் செயல்படுத்தும்போது அதில் கொஞ்சம் செயல்படுத்தி, மீதியை விட்டுவிடுவார்கள். இதுதான் முதல் கல்விக் கொள்கை இந்தியாவில். இதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

ஏன் இந்தத் தேசியக் கல்விக் கொள்கை 2020 பிரதானமாகப் பேசப்படுகிறது என்றால், அவர்கள் இதைச் சித்தாந்த ரீதியில் கொண்டுபோகிறார்கள். கல்வி என்று வரும்போது, அந்த மக்கள், அந்தப் பகுதி, அவர்களுடைய தேவைகள், அங்கு இருக்கின்ற வளங்கள் இவை எல்லாவற்றையும் கருத்திற்கொண்டு எந்த வகையான தத்துவத்தின் மூலம் செயல்படுத்தினால் அது பயனுள்ளதாக இருக்கும் என்பதை அந்தக் கல்விக் கொள்கை பேசும். இதில், இந்திய அறிஞர்கள் என்கிறார்கள்; இந்தியாவை மையப்படுத்தி என்கிறார்கள்; இந்திய மரபு என்கிறார்கள்; இந்திய விழுமியம் என்கிறார்கள்; இதன் அடிப்படையில்தான் நாங்கள் ஒரு கல்விக் கொள்கையைக் கொண்டுவருகிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால், இந்த விழுமியங்கள் யாருடையவை என்பதுதான் நம்முடைய பிரச்சினை. யாருடைய வாழ்வியலைப் பிரதிபலிக்கிறது, யாருடைய ஆசைகளை வெளிப்படுத்துகிறது என்று பார்த்தால், இந்திய மக்களை ஆயிரம் ஆண்டுகளாக அடிமைப்படுத்தி வைத்திருக்கக்கூடிய சனாதன சக்திகளின் திட்டங்கள், கொள்கைகள், தத்துவங்களைத்தான் இந்திய மரபு என்று சொல்கிறார்கள்.

உதாரணங்கள் ஏதாவது சொல்ல முடியுமா?

தற்போது என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டம் கொண்டுவந்திருக்கிறார்கள். அது தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் கொண்டுவந்ததுதான். அதில் வரலாற்றில் அவர்களுக்கு எந்தெந்தப் பாடங்கள் பிடிக்கவில்லையோ அதை நீக்கி விடுவார்கள். எது அவர்களுக்குத் தேவையோ அதைக் கொண்டுவருவார்கள். சாவர்க்கரைக் கொண்டு வருவார்கள், கொலை செய்தவர்களைக் கொலை செய்யவில்லையென்று கொண்டுவருவார்கள்.  காந்தியைக் கொலை செய்தது கோட்சே இல்லையென்று எழுதுகிறார்கள். சில மாநிலங்களில் அது பாடத்திட்டத்திலேயே இருக்கிறது. இதைத்தான் இந்திய வரலாறு என்று சொல்கிறார்கள். இந்தியாவில் மிகப்பெரிய தொழிற்நுட்ப பல்கலைக்கழகங்களில் கல்கத்தாவில் உள்ள ஐஐடி கோராக்பூர் குறிப்பிடத்தக்கது. அந்த ஐஐடி, பிதாகரஸ் தியரியை நாங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கண்டுபிடித்துவிட்டோம் என்கிறது. பிதாகரஸ் கண்டுபிடித்தே இரண்டாயிரம் ஆண்டுகள்தான் ஆகின்றன. அதற்கு முன்பே கண்டுபிடித்துவிட்டோம் என்கிறார்கள். இதை ஐஐடி சொல்கிறது. இதற்கு ஆதாரம் கேட்டால், ரிக் வேதத்தில் ஏதோ படம் இருக்கிறதென்று சொல்கிறார்கள். இதுதான் இந்தியர்களை மையப்படுத்திய கல்வி என்கிறார்கள். அது வேத கலாச்சாரங்களை முன்னிறுத்துகிறது. அந்த வேத கலாச்சாரத்தை, வேத வாழ்வியலை அறிவியல் தத்துவமாகப் பாடத்திட்டங்களில் கொண்டுவருகிறார்கள். சமீபத்தில் கேள்விப்பட்டிருப்பீர்கள், கர்நாடகத்தில் எட்டாம் வகுப்புப் பாடத்திட்டத்தில் புல்புல் பறவை மீது சாவர்க்கர் பறந்து வந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது.

இந்திய விழுமியங்களைப் பாடத்திட்டத்தில் நுழைப்பதிலுள்ள பிரச்சினைகள் என்ன?

அறிவியல், சமூக அறிவியல் இரண்டையும் மாற்றுகிறார்கள். அதாவது பிதாகரஸ்க்கு முன்பே நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம், எங்களுடைய சமஸ்கிருதத்தில் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அறிவியல், தொழிற்நுட்பம், சமூகம், வாழ்வியல் என எதை நீங்கள் எடுத்துக்கொண்டாலும் அவை அனைத்துமே எங்கள் அறிவினால்தான் இருக்கிறது என்று சொல்கிறார்கள். கல்வி, கல்வியாக இருந்தால் பிரச்சினை இல்லை. அதுவொரு சித்தாந்தத்தின் அடிப்படையில் செயல்படும்போது அச்சித்தாந்தம் அனைத்து மக்களுக்குமானதாக இருந்தால் சரி என்று சொல்லிவிடலாம். ஆனால், அது ஒருவருக்கானது. மீதி தொன்னூறுபேருக்கானதாக இல்லாதபோது அதை எப்படி நாட்டுக்கானதாகவும் மக்களுக்கானதாகவும் ஏற்றுக்கொள்ள முடியும்.

ABC(அகடாமி பேங்க் ஆப் கிரெடிட்) என்றொரு திட்டத்தைக் கொண்டுவருகிறார்கள். யாரும் எந்தப் பல்கலைக்கழகத்திலும் படிக்கலாம். நாற்பது சதவீத பேர் இணையத்திலேயே படித்துக்கொள்வார்கள். நூற்றுக்கு நாற்பது படிப்புகள் இணையத்தில் படித்துக்கொள்ளலாம். இந்தக் கொரோனா காலகட்டத்தில் இதைச் சட்டமாகவே ஆக்கியிருக்கிறார்கள். ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்கப் போகிறீர்கள், பல்கலைக்கழகம் உங்களுக்கொரு வரையறை வைத்திருக்கும், இந்தப் பாடத்தை எல்லாம் படித்து நீங்கள் தேர்ச்சி பெற்றீர்களானால், பட்டம் பெற்றுக்கொள்ளலாம் என்று. ஆனால், இனி எப்படி இருக்கப் போகிறதென்றால், பல்கலைக்கழகத்தில் ஒருசில படிப்புகள் படிப்பீர்கள். பிற நகரங்களில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் படிப்பீர்கள். ஒருநாள் உங்கள் பல்கலைக்கழத்திற்குச் சென்று, “நான் படிப்ப முடிச்சுட்டேன். சர்டிபிகேட் கொடுங்க” என்று சொல்வீர்கள். அவர் உடனே, “இல்லை. நீ படிச்சிட்டு இருக்கிற” என்று சொல்வார். அதற்கு நீங்கள், “அகடாமிக் பேங்க் ஆப் கிரெடிட் (ABC) டெல்லியில் என் படிப்புக்கான எல்லா கோர்ஸையும் நான் பாஸ் பண்ணிட்டேன். அதற்கான ஆதாரம் மட்டும் இருக்கு. எனக்கு சர்டிபிகேட் கொடுங்க” என்று கேட்பீர்கள். ஒரு பல்கலைக்கழகம் தன் மாணவரைத் தயார்படுத்துவதில், அந்தக் கலைத்திட்டத்தில என்னென்ன பாடங்கள் இருக்கின்றன, அது அவருக்கு ஏற்புடையதாக, அவர் வாழ்வியலை, அவர் பின்புலத்தை, வாழ்க்கையைச் செம்மைப்படுத்தக் கூடியதாக, அதிலிருந்து அவருடைய அறிவின் தன்மையைப் பெருக்கிக்கொள்ளக் கூடியதாக இருக்கிறதா என்றெல்லாம் பார்த்துதான் ஒரு கலைத்திட்டத்தை உருவாக்க வேண்டும். (அதன் மூலம் அவரது அறிவைப் பொறுத்து அவரிடமிருந்து ஒரு பிரதிபலிப்பை எதிர்பார்க்கக்கூடிய திறமையை வளர்த்தெடுப்பது.) ஆனால், இவர்கள் இப்படிச் செய்துகொண்டிருக்கும்போது மாணவர் வந்து ஏதோவொரு பட்டம் வாங்கிக்கொண்டு போவார். அப்படியான பட்டம், நான்கு பன்னாட்டு நிறுவனங்களிடம் கையேந்தி நிற்கக்கூடிய நிலைக்கு அவரைத் தயார்படுத்தும். இப்படியாக, முதலாளிகளுக்காகவும் சனாதன சிந்தனையையுடைய மேல்தட்டு மக்களின் தேவைகளுக்காகவும் கொண்டுவரப்பட்டதுதான் இந்தத் தேசியக் கல்விக் கொள்கை. இதில் நிறையக் கவர்ச்சிகரமான வார்த்தைகள் இருக்கும். critical thinking, நீங்கள் விமர்சனப்பூர்வமாக சிந்திக்க வேண்டும். இது சரிதானே என்று நினைப்போம். ஆனால், விமர்சனப்பூர்வமாகச் சிந்திப்பதற்கு அங்கு ஒன்றும் இருக்காது, இல்லாது ஆக்கிவிடுவார்கள்.  நான் சொல்வதைத்தான் நீங்கள் படிக்க வேண்டும்

என்பார். இப்படி முரண்களுடன் கூடியதொரு கொள்கையைக் கொண்டுவருவதில், ஆட்சியாளர்களுக்கு ஒரு நோக்கம் இருக்கும். இந்த நாட்டில் நாம் நல்ல குடிமகனாக இருக்க வேண்டும். நல்ல குடிமகன் என்பவன் யாரென்றால் ஒழுக்கமுள்ளவனாக இருப்பவன். அதாவது அடிமையாய் இருக்க வேண்டும். பேசக் கூடாது, உரிமைகள் எல்லாம் கேட்கக்கூடாது என்று தனக்கு அடிமைப்பட்டவனாக ஒரு குடிமகனை உருவாக்குவதே அரசின் நோக்கம். அதைத்தான் இவர்களும் செய்கிறார்கள். ஆண்டான் அடிமை காலத்துச் சிந்தனை இது. தேசியக் கல்விக் கொள்கையில் இன்னொரு முக்கியமான விஷயம், சந்தை. சந்தை ரொம்ப வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. இந்த இந்த திறமை உள்ளவர்தான் எனக்குத் தேவை. அப்போதுதான் நான் வியாபாரம் செய்ய முடியும் என்று சந்தை சொல்வதும் இந்த மூவருடைய தேவைகளுக்காகவும் உருவாக்கப்படக்கூடிய கல்விக் கொள்கை

தான் இந்தத் தேசியக் கல்விக் கொள்கை. இந்த மூன்றுபேருக்கும் கட்டுப்பட்ட ஒரு சமூகத்தை வார்த்தெடுப்பதற்குக் கல்வியைத் தவிர எந்தவொரு ஆயுதத்தையும் பயன்படுத்த முடியாது. எந்தச் சட்டம் இயற்றினாலும் ஒன்றும் செய்ய முடியாது. சட்டங்களோ, திட்டங்களோ மக்களைக் கட்டுப்படுத்தாது. குழந்தையிலிருந்தே இச்சிந்தனையை வார்த்தெடுப்பார்கள். பன்னிரண்டு வயதிலேயே அவன் அடிமையாகிவிடுவான். அவர்கள் நினைக்கிற குடிமகனாக இருப்பான். காலங்காலமாய் இது தொடரும்.

இந்தத் தேசியக் கல்விக் கொள்கை முழுமையாக நடைமுறைக்கு வந்துவிட்டதா?

ஆம், வந்துவிட்டது. அது நடக்கக் கூடாது என்றுதான் நாங்கள் அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தோம், அவர்கள் நடைமுறைப்படுத்துவதற்குள் நாம் மாநில கல்விக்கொள்கையைக் கொண்டுவந்துவிடலாம் என்று வலியுறுத்தினோம், நம்முடைய எதிர்பார்ப்பு அதுவாகத் தான் இருந்தது. முதல்வர் முதல் கையெழுத்தாக அதைத்தான் போடுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் ஒருவருடம் கழித்துத் தான் அதற்கான முயற்சிகளைச் செய்தார். இப்போது இரண்டாம் வருடத்தை கடந்து விட்டோம். இன்னமும் அது தேக்க நிலையிலையே இருப்பதுதான் வருத்தத்திற்குரியது.

எந்தப் பிரச்சனைகளைக் களைவதற்காக மாநில கல்விக்குழு உருவாக்கப்பட்டது? இதனுடைய தனித்துவமாக நீங்கள் நினைப்பது என்ன? தேசியக் கல்விக்கொள்கையில் இருந்து இது எந்தவகையில் வேறுபட்டதாக இருக்கும், இதைத் தொடங்கும்போது அரசனுடைய நோக்கம் என்னவாக இருந்தது?

‘ஏன் மாநிலத்திற்கென்று ஒரு கல்விக் கொள்கை தேவை’ என்று பல கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். கல்வி என்பது அடிப்படையில் ஒரு சமூகப் பண்பு என்கிறபோது, அது சமுதாயத்திற்கானதாகத்தான் இருக்க வேண்டும். யாரோ ஒருவர் டெல்லியில் உட்கார்ந்துகொண்டு அதைச் செய்ய முடியாது. இங்கே தமிழ்ச் சமூகம் இருக்கிறது. இதிலேயே பல சாதிகளும் இருக்கின்றன. இவற்றை உள்ளடக்கி அம்மக்களுடைய தேவைகளுக்காக இந்தக் கல்விக் கொள்கை செயல்பட வேண்டும். கல்வி இயற்கையிலேயே பகுதிகளுக்கானது (மாநிலத்திற்கானது), மையத்திற்கானது (மத்திய அரசிற்கானது) அல்ல. மாநிலத்திற்கென ஒரு கல்விக் கொள்கை இருக்க வேண்டும். அப்போதுதான் நம் மக்களுக்கான கல்வியைக் கொடுக்க முடியும் என்கிற தீர்வுக்கு வருகிறார்கள். அப்போது சில நிபந்தனைகளை விதிக்கிறார்கள். அதாவது, மாவட்டக் கல்விக் கொள்கை இருக்க வேண்டும், தனித்துவம் வாய்ந்த கல்விக் கொள்கை வேண்டும் என்கிறார்கள். அது ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கான கொள்கையாக இருக்காது. அதே நேரத்தில் ஒரு மனிதன் தன்னுடைய அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்தி அதன்மூலம் தன்னை முன்னிறுத்தி, தன்னைத் தானே வளர்த்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு இருக்கும். தமிழ்நாட்டிற்கென்று ஒரு கல்விக் கொள்கை தேவை என்கிற முடிவுக்கு வரும்போது, தமிழ்நாட்டில் உள்ள நிலைமைகள், பிரச்சினைகள், இங்கிருக்கிற கேள்விகள் எல்லாவற்றையும் உள்வாங்கினால்தான் அதைத் தனித்துவம் வாய்ந்த கல்விக் கொள்கை என்று சொல்ல முடியும்.

அதே நேரம், பன்னிரண்டு பேர் கொண்ட குழு எப்படி அதை உருவாக்க முடியும்? இந்தப் பன்னிரண்டு பேர்தான் அறிவாளி, மீதம் இருக்கிற எல்லோரும் முட்டாள்கள் என்று பொருள் கிடையாது. இங்கு எட்டு கோடி மக்கள் இருக்கிறார்கள். விவசாயிகளாக, தொழிலதிபர்களாக, பணியாளர்களாக, கல்வியாளர்களாக, ஆசிரியர்களாக, பொது மக்களாக, மாணவர்களாக எனப் பல அங்கத்தினர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோருடைய கருத்துகளையும் உள்வாங்கி, அவர்களிடம் ஏதாவது கேள்விகள், சந்தேகங்கள் இருந்தால் அதையும் தொகுத்துக்கொண்டு, ஆரம்பத்தில் சொன்னது போல் தமிழ்நாட்டின் பிரச்சினைகளையும் கருத்திற்கொண்டு ஆய்வுகளைச் செய்ய வேண்டும். இதற்கு நிபுணர்களைக் கொண்ட துணைக் குழுக்கள் வேண்டும். அவற்றை வைத்து ஆய்வுகள் செய்து, அதிலிருந்து பெறப்படும் தரவுகளைக் கொண்டு அந்தப் பன்னிரண்டுபேர் கொண்ட குழு சரி, தவறுகளை முடிவு செய்யும்.

பலதரபட்ட மக்களிடமும் மாணவர்களிடமும் சென்று கருத்துக் கேட்கும் பணியைச் செய்துகொண்டிருந்தீர்கள். இப்பணியைத் தொடங்குவதற்கு முன் உங்கள் ஆய்வு முறைமை என்னவாக இருந்தது?

இந்தக் கல்விக் கொள்கையை எப்படி உருவாக்குவது, எப்படி அணுகுவது, அதில் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், அதை எந்தெந்தக் காலகட்டத்தில் செய்ய வேண்டும், எவற்றை ஒரேசமயத்தில் செய்வது, எதை அடுத்துதடுத்துச் செய்வது. இதையெல்லாம் ஆய்வுசெய்து அதற்குக் குறிப்புக் கொடுத்தேன். அதை ஏற்றுக்கொண்டார்கள். நாம் என்னென்ன திட்டத்தின் அடிப்படையில் எந்தெந்த முறைகளில் அந்த ஆய்வுகளையும் ஆதாரங்களையும் அந்த உள்ளடக்கங்களையும் பெற முடியும் என்று நினைக்கிறோமோ, அதையெல்லாம் இறுதி செய்து அதனடிப்படையில்தான் ஆய்வு செய்தோம். என்ன பிரச்சினை என்றால், நாம் எதையெல்லாம் செய்யத் திட்டமிட்டோமோ அதற்கான சுதந்திரம் இல்லை. சர்கம்டி குழு எல்லாம் போட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று வரும்போது, அதைச் செய்யவிடாமல் தடுத்துக்கொண்டே இருந்தார்கள். இறுதியாகப் பத்தாவது மாதம் செய்துகொள்ளலாம் என்கிறார்கள். அப்படியாவது செய்யலாமென்று வரும்போது அதையும் வேண்டா வெறுப்பாக நினைத்துப் பின்னர்தான் அனுமதி கொடுத்தார்கள். அடுத்த மாதமே “இந்த வேலையெல்லாம் முடித்து நீங்க குறிப்பு எழுதிக்கொடுத்துட்டுப் போங்க” என்றார்கள். நாம் ஆரம்பத்திலிருந்து செய்யக்கூடிய வேலைகள், அதில் உள்ள சிக்கல்களை எல்லாம் விவாதித்திருக்க வேண்டும். அப்படி விவாதங்கள் செய்து அதிலிருந்து பெறப்படும் தரவுகளைக் கொண்டு இறுதி முடிவு எடுத்துத்தான் கொள்கை எழுத வேண்டும். அப்படிப்பட்ட எந்த நடவடிக்கையும் இல்லை. பதினொரு மாதங்கள் முடிந்துவிட்டன. பன்னிரண்டாவது மாதம்தான் விவாதமே செய்கிறார்கள். இப்படிச் செயல்படும்போது இது சந்தேகத்தை உருவாக்குகிறது. அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யாதபோது எதை வைத்து எழுதுவது? இருந்தாலும் ஒருங்கிணைப்பாளராக எனக்கு அளிக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் (டேட்டா கலெக்ஷன் ஆய்வுகள்) முறையாக நான் செய்துகொண்டே வருகிறேன். மேலும், குழுவினர் பெரும்பாலும் பாதிப் பேர் வருவதில்லை. அப்படி வருகிறவர்களும் இந்த அளவுக்குப் பங்களிப்பது இல்லை. இதை வருத்தமாகச் சொல்வில்லை. இயற்கையிலே அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் நாம் செய்ய வேண்டியவற்றை முறையாகச் செய்ய வேண்டுமென்று நினைத்து 150 பக்கப் பிரச்சினை அறிக்கை (problem statement) எழுதி, இதையெல்லாம் நாம் விவாதிக்க வேண்டும் என்று சொன்னேன். விவாதம் எதுவும் செய்யவில்லை. ஆனால், இதுதான் எங்களுடைய வழிகாட்டும் அறிக்கை என்று ஒத்துக்கொண்டார்கள். ஆயினும் அதைச் செயல்படுத்த விடமாட்டார்கள். அதன் பின்னர் முதன்மை அறிக்கை, பதிமூன்று பிரிவுகள் இருக்கின்றன. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு துணைக் குழு என பதிமூன்று துணைக் குழுக்கள், நூற்றுப்பதிமூன்று நபர்கள் அந்த ஆய்வுகளைச் செய்தோம். திடீரென்று சில காரணங்களுக்காக, அவர்களுடைய திட்டங்கள், சிந்தனைகள் உள்ளே வர வேண்டும் என்று இடைமறிக்கிறார்கள். அவர்கள் விரும்புவது தேசியக் கல்விக் கொள்கை. இதுவொரு முதலாளித்துவக் கல்விக் கொள்கையாக இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கும்போது, அதற்கெதிராக இருப்பதால் நம்மை விலக்குகிறார்கள் அல்லது குறி வைக்கிறார்கள். இதிலிருந்துதான் வேறுபாடுகள் வருகின்றன.

தேசியக் கல்விக் கொள்கையிலிருந்து தனியாக ஒரு கொள்கையை வரைவு செய்யும்போது உங்களுக்குள் ஒரு கற்பனை இருந்திருக்குமல்லவா. அது எந்த அளவுக்கு வேறுபட்டதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?

தேசியக் கல்விக் கொள்கை ஒன்றும் நமக்குத் தீண்டத்தகாதது கிடையாது. அதில் நல்லது இருந்தால் நாம் அதை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அப்படி ஏதாவது அதில் இருக்க வேண்டுமே! எந்த வகையில் இது வேறுபட்டதாக இருக்க வேண்டும் என்று கேட்டீர்கள் இல்லையா. அவர்கள்  இந்திய மையம், இந்திய மரபு, இந்திய சித்தாந்தம் என்கிறார்கள். நம் கொள்கைப்படி அவை சமூக நற்கூறுகளுடனும், அறிவியல் நற்கூறுகளுடனும், அறிவியல் தன்மைகளுடனான கல்வியாக, சமத்துவக் கல்வியாக, ஜனநாயகக் கல்வியாக, மதச்சார்பற்ற கல்வியாக இருக்க வேண்டும். இதுதான் நம் கல்விக் கொள்கையாக இருக்க வேண்டும்.

ஜனநாயகப்பூர்வமான கல்வி முறையே இங்கு இல்லை. அப்படி இருக்கும்போது அது எல்லோருக்குமானதாக இருக்காது. உள்ளடக்கிய கல்வி (Inclusive education) என்று சொல்கிறோம். எல்லோருக்கும் கல்வி கொடுத்தால் அது உள்ளடக்கிய கல்வியாக ஆகிவிடுமா? இங்கே பல சாதியினர் இருக்கிறார்கள்; பல சாதியினருக்கும் பல அனுபவம் இருக்கிறது; அறிவு இருக்கிறது; பாரம்பரியம் இருக்கிறது. அந்த அறிவு பாரம்பரியத்தையும் ஒரு கல்வி உள்வாங்க வேண்டுமல்லவா! தன்னுடைய பாரம்பரியத்தையும் கேள்விகளையும் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்யாத அந்தக் கல்வி அவனைக் கரையேற்றாது. அதில் அவன் புலமைப் பெறவும் முடியாது. கல்வியானது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றால், மனிதனை உள்ளடக்கியதாக அல்ல, அதையும் தாண்டி அவனுடைய அறிவையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அங்கே சமூக அறிவு இருக்கிறது, அது அறிவியலாகவும் இருக்கிறது. பன்முகத்தன்மைக் கொண்ட கல்வி கலைத்திட்டமாக அல்லது பாடத்திட்டமாக மாறும்போதுதான் அது அனைவருக்குமான கல்விக் கொள்கையாக இருக்கும். அம்மாதிரியான ஒரு திட்டத்தை இங்க வரவழைக்க வேண்டும்.

நீங்கள் வரைவு செய்ய நினைத்த கல்விக்கொள்கைக்கான யோசனைகளும், எளிய மக்களிடம் கருத்துக் கேட்ட பிறகான அனுபவமும் எப்படி இருந்தன, அவை ஒத்துப் போனதா?

எது தேவை என்பதில் மக்கள் ரொம்பத் தெளிவாக் இருக்கிறார்கள், மாணவர்கள் உட்பட. ஐஏஎஸ் அதிகாரிகளும், பேராசிரியர்களும்தான் குழப்பத்தில் இருக்கிறார்கள். ஆங்கிலமும் தமிழும் வேண்டும் என்கிறார்கள். “தேவையில்லாம ஏன் தேர்வு வச்சுட்டிருக்கீங்க? நீங்க வைக்கிற தேர்வில் நாங்கள் அறிவை அடையப் போவதில்லை. அது அறிவைப் பரிசோதனை செய்வதும் இல்லை. யாரோ பரீட்சை வைக்கிறாங்க, அதுக்கு நீங்க பயிற்சி கொடுக்குறீங்க. அதனால தேர்வுகளின் சுமைகளைக் குறைங்க, பாடத்திட்டங்களைக் குறைங்க, தேவையில்லாம அவன் மேல நிறையச் சுமையை ஏத்தி படிக்கணும்னு அவனுக்குள் இருக்கிற ஆர்வத்தைக் கெடுத்துவிடாதீங்க.” என்றெல்லாம் பொதுமக்கள் சொல்கிறார்கள். மதச்சார்பற்ற கல்வி, ஜனநாயகத் தன்மைக் கொண்ட கல்வி, அனைத்துச் சமூகத்தையும் உள்ளடக்கிய கல்வியாக இருக்க வேண்டும் என்று சொல்கிறோமே, அதைத்தான் மக்களும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். மக்களுடைய தேவைகள் என்னவென்று தெரிகிறது. அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதில்தான் பிரச்சினை. இந்த கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கென்று ஒரு தத்துவம், வழிமுறைகள் இருக்குதல்லவா? அதையெல்லாம் விட்டுவிட்டுப் பத்துப் பேர் கூடிப் பேசி இறுதியில் “எல்லோரும் வாங்க உட்காருவோம். பத்து மீட்டிங் போடுவோம். எல்லாம் முடிஞ்சு போச்சு, கையெழுத்துப் போடுவோம்” என்பது கல்விக் கொள்கை கிடையாது. துல்லியமாக எழுத வேண்டும். பிரச்சினை என்ன, பிரச்சினைகளுக்கு என்னென்ன காரணிகள், எப்படிக் கையாள வேண்டும், ஒரே பிரச்சினைக்கு என்னென்ன தீர்வுகள் இருக்கின்றன, அதில் எது சிறந்தது, அதை நடைமுறைக்கேற்றவாறு அமைதியாக அமல்படுத்த முடியுமா என நீண்ட செயல்திட்டம் அது. இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒரே மாதத்தில் எழுதிக்கொடுத்துவிட்டு முடித்துவிட்டோம் என்று சொல்வதில் எனக்கு விருப்பமில்லை.

இந்தச் சூழலில் நீங்கள் அக்குழுவிலிருந்து வெளியே வந்திருக்கிறீர்கள். இந்த ஒருவருட காலத்தில் அரசினுடைய ஆதரவு எப்படி இருந்தது?

முதலில் அரசுக்கும் நமக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது. அரசு ஒரு குழுவை அமைத்துவிட்டார்களெனில் அவர்கள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். அப்படிச் செயல்பட ஒருவருடம் கொடுத்திருக்கிறார்கள். அதற்குள் இதுமாதிரி ஒரு கொள்கையை எழுதி அவர்களிடம் கொடுத்துவிட வேண்டியதுதான். அதற்குப் பின் அரசு அதை விரும்பினால் நடைமுறைப்படுத்தலாம். அதுவொரு பரிந்துரைதான். அரசுதான் முடிவெடுக்க வேண்டும். அதனால் அரசு நமக்கு ஆதரவாக இருக்கும் என்பதும் இல்லை. ஆனால், இதற்கு வேண்டிய அனைத்து ஆதாரங்கள், கட்டமைப்பு வசதிகள், துணை அமைப்புகள் இவற்றையெல்லாம் செய்துகொடுத்திருக்க வேண்டும். அதை ஏதும் செய்யவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் தங்கும் இடத்தையே கொடுத்தார்கள். பத்து மாதங்களாக எனக்கு அலுவலகம் கிடையாது. இதுபோன்று அரசு செய்ய வேண்டிய உதவிகள் எதையும் செய்யவில்லை. அதைத் தாண்டி தற்போது சொல்ல வேண்டிய ஒரு குறைபாடு என்னவென்றால், அரசு அதிகாரிகள் தங்களுடைய சிந்தனைகளை, இலக்குகளை உள்ளுக்குள் கொண்டு வரக்கூடாது. அது தேசியக் கல்விக் கொள்கையாக இருக்கட்டும், அதிகார வர்க்கத்தின் முதலாளித்துவக் கல்விக் கொள்கையாக இருக்கட்டும், எதையும் உள்ளுக்குள் கொண்டு வரக் கூடாது. சட்டப்படி அரசு அதிகாரிகள் இதனுள் வரவே கூடாது. இம்மாதிரியான பிரச்சினைகளை நாங்கள் சந்தித்திருக்கிறோம்.

இறுதியாகக் குழுவிலிருந்து வெளியேறி பத்திரிகைகளுக்கு அறிக்கையும் கொடுத்திருக்கிறீர்கள், இப்பிரச்சினைகளின் தொடக்கப்புள்ளி எது?

ஆரம்பத்திலிருந்து இந்தக் கல்விக் கொள்கையை வகுப்பதற்கு உண்டான வடிவத்தையும், அதற்கான செயலாக்கத் திட்டத்தையும், அதை எப்படியெல்லாம் செய்ய முடியும் என்ற அட்டவணையையும் சேர்மனிடம் கொடுத்துக் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு அது இறுதி செய்யப்பட்டது. பிறகு ‘ஏன் தமிழகத்திற்கு என்று தனியான கல்விக் கொள்கை’ என்ற ஆய்வுக் கட்டுரை ஒன்றும் கொடுத்திருக்கிறேன். அதற்குப் பிறகு, வழிகாட்டும் நெறிமுறைகளையும் கொடுத்திருக்கிறேன். ஆனால் எதையுமே விவாதிக்கவில்லை. கொடுக்கக் கொடுக்க எல்லாவற்றையும் வாங்கிக்கொள்வார்கள், எந்தவொரு விவாதமும் இருக்காது. பிறகு இதிலுள்ள பிரச்சினைகளைத் தொகுத்து நூற்றைம்பது பக்க அறிக்கை கொடுத்திருக்கேன். இந்தப் பிரச்சினைகளைக் கையில் எடுத்தால்தான் தனித்துவம் வாய்ந்த கல்விக் கொள்கையைக் கொண்டு வர முடியும். என்ன பிரச்சினை என்று தெரியாமல் அதை எப்படி உருவாக்க முடியும்? அதையும் கொடுத்தேன், அதுவும் விவாதிக்கப்படவில்லை. அதற்குப் பிறகுதான் இந்த உள்ளீட்டில் ஆரம்பக் கொள்கையை (initial policy in input) உருவாக்கினேன். இதில் பிரச்சினை என்று எதைச் சொல்வது. ஆரம்பத்திலிருந்து எதை எதையெல்லாம் செயலாக்க வேண்டும் என்று திட்டத்தில் இருந்ததோ அதை எதையுமே செய்யவில்லை.  நான் சேர்மனிடம் வலியுறுத்திக்கொண்டே வந்தேன். அவர் “அப்புறம் பார்க்கலாம், அப்புறம் பார்க்கலாம்” என்று சொல்லிக்கொண்டே வந்தார். அவருக்கும் ஏதும் பிரச்சினை இருப்பதாகத் தெரியவில்லை. எப்போது இந்தத் தேசியக் கல்விக் கொள்கையை அவர்கள் பிரதானமாகப் பேச ஆரம்பித்தார்களோ, அதுவும் அரசு அதிகாரிகள் மூலமாக நெருக்குதல் கொடுத்தார்களோ அங்குதான் பிரச்சினையின் ஆரம்பமே. அரசு அதிகாரிகள் பலம் பொருந்தியவர்கள். அவர்கள்தான் இதில் முடிவெடுப்பார்கள் என்று வரும்போதுதான் பிரச்சினை வருகிறது. இது தவறென்று நான் எதிர்க்க ஆரம்பிக்கிறேன். செய்யக்கூடாது என்று வரும்போதுதான் எனக்கும் அந்த அதிகாரிக்கும் வாதம் (confrontation) வருகிறது. அதுவரை அதிகாரிகள் எல்லாம் “ஜவகர்நேசன் பரவால்ல, நம்ம பாத்துக்கலாம்” என்றிருக்கிறார்கள். ஆனால், மீதி உள்ள பத்துப் பேர்களும் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஏனென்றால், அது அவர்கள் அமைத்த குழு. அதனால் அரசு அதிகாரிகளுக்கு அவர்கள் ஆதரவாக இருக்கிறார்கள். இதில் நாங்கள் மட்டுமே எதிர்வினையாற்றும்போது தவறாகச் சித்திரிக்கப்பட்டோம். அதனால் தொடர்ந்து அதை எதிர்த்துப் போராட ஆரம்பித்துவிட்டோம். மூன்று நான்கு மாதங்களாகப் போராடியிருக்கிறோம். அதாவது ஜனவரி மாதத்திலிருந்து கடுமையான போராட்டம். பல இடர்பாடுகள், அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள். இதுபோன்ற விஷயங்கள் நான்கு ஐந்து மாதங்களாக நடந்தன. அதன் விளைவுதான் இன்றைக்கு இந்த முடிவுக்கு என்னைத் தள்ளியிருக்கிறது.

நீங்கள் சொல்வதிலிருந்து இரண்டு விஷியங்கள் புலப்படுகிறது. ஒன்று, தேசிய கல்விக்கொள்கையில் இருப்பதை நேரடியாகக்  கொண்டுவரத் தொடங்கியிருக்கிறார்கள், அடுத்து நீங்கள் முன்வைக்கக்கூடிய பரிந்துரைகளை நிராகரித்திருக்கிறார்கள். அப்படியானால், இந்தத் குழுவின் நோக்கம்தான் என்ன?

மாநிலத்திற்கென்று ஒரு கல்விக்கொள்கையை உருவாக்குவது அவசியம் என்கிற வரையில் அரசுக்கு இதில் ஆர்வமிருக்கிறது, ஆனால் அதிலுள்ள பிரச்சினைகளைக் களைய விருப்பமில்லாமல் எதற்காக இக்குழு அமைக்கப்பட்டது என்கிற உங்களின் கேள்விக்கு அரசுதான் பதில் சொல்ல வேண்டும். ஏனென்றால், அரசு அதிகாரிகளும் குழுவினுடைய தலைமையும் விலை போய்விட்டனர். இத்தகைய சூழலில் தனிநபர் இதில் ஒன்றும் செய்ய முடியாது. அரசுதான் இதைப் பரிசீலனை செய்து, எங்கு திருத்தங்கள் தேவையோ அதைச் செய்திருக்க வேண்டும். எப்போதுமே ஒரு கல்விக் கொள்கையில், பொதுக் கொள்கைகளை (public policy) உருவாக்கும்போது அரசு அதிகாரிகள் தலையிட மாட்டார்கள். காரணம் என்னவென்றால், அதில் அவர்களுடைய சிந்தனை தான் வெளிப்படும்.

இது உலகளாவிய நடைமுறை. அதுபோன்று இருந்திருந்தால் இது நன்றாக வந்திருக்கக் கூடும். அப்படி இல்லாதபோதுதான் இருக்கின்றவர்கள் எல்லோரும் எரிச்சலடைகிறார்கள். இத்தருணத்தில் இதை எதிர்த்து நான் மட்டும் தனியாகப் போராடும்போது, ஓரளவுக்கு மேல் போராட முடியாமல் போகிறது. நான் முதலமைச்சருக்கும் நிறைய ஆதாரங்களோடு இதுபற்றி எழுதிக் கொடுத்திருக்கிறேன். அதைக் கொடுத்து மூன்று வாரங்கள் ஆகிவிட்ட சூழலில் இதுநாள் வரைக்கும் முதல்வரிடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை.

முதல்வரிடம் குறிப்பாக எதைப் பற்றியெல்லாம் முறையிட்டிருக்கிறீர்கள்?

முதலில் இந்தக் குழு தவறாக நடத்தப்படுகிறது என்று இருநூற்றைம்பது பக்க அளவில் அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கிறேன். குறிப்பாக அதில், இந்தத் தலைமை ரகசியமாகச் செயல்படுகிறது, வெளிப்படைத்தன்மை இல்ல, ஜனநாயகம் இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறேன். கல்விக் கொள்கையை யார் இயக்குகிறார்களோ அவருக்காகவே தலைமை செயல்படுகிறது என அதை இயக்குகின்ற நபரின் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறேன். அவர்தான் அதிகாரமிக்கத் தன்னுடைய பதவியை வைத்துக்கொண்டு இந்தக் குழுவைச் செயல்பட விடாமல் தடுக்கிறார். அதே நேரம், அவர் நினைப்பதை நான் செயல்படுத்தாதபோது என்னை மிரட்டுகிறார், அச்சுறுத்துகிறார். மறைமுகமாகத் தேசியக் கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள அனைத்து அம்சங்களையும் கொண்டுவர முனைகிறார்.

தேசியக் கல்விக் கொள்கையின் எந்த விதியில் இதைக் கொண்டுவர வேண்டுமென்று நினைக்கிறார்கள்?

அதில் விதிகள் கிடையாது. பரிந்துரை மட்டும்தான். குறிப்பிட்ட பரிந்துரைக் கொள்கை விவாதத்திற்கு வந்தால் மட்டும்தான் நான் பேச முடியும். ஆனால், அவர்கள் “தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள பிரதானமான சில விஷயங்களைத் தவிர அனைத்துமே நம் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தியாக வேண்டும், வேறு வழி இல்லை.” என்றுதான் பேசுவார்கள். எதிர்க் கருத்து வைக்கும்போது,  குறிப்பிட்ட ஒன்றை மட்டும் செய்யலாமா வேண்டாமா என்கிற பேச்சுக்குப் போவார்கள். அப்போது, “நமக்குள் உட்கார்ந்து பேசுவோம், பன்னிரண்டு பேரும் பேசுவோம். அரசு அதிகாரிகளை வெளிய அனுப்புங்க” என்று நான் சொன்னால் பேச மாட்டார்கள்.  என்னுடன் விவாதித்தால் என் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாது என்ற காரணத்தினால் என்னைப் புறக்கணித்துவிட்டு நான் இல்லாதபோது என்னைப் பற்றிப் பேசுவார்கள். ஒட்டுமொத்தமாகத் தேசியக் கல்விக் கொள்கையில் ஒன்றிரண்டைத் தவிர, அதாவது மும்மொழி கொள்கை, நீட் இதையெல்லாம் ஒதுக்கிவிட்டு மீதி எல்லாவற்றையும் கொண்டுவந்துவிடலாம், வேறு வழி இல்லை என்பார்கள்.

கிட்டத்தட்ட தேசியக் கல்விக் கொள்கையில் இருப்பதை அப்படியே நடைமுறைப்படுத்துவதில் இங்கிருக்கும் அதிகாரிகளும் அரசும் தயாராக இருக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?

அரசு பற்றி எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் அவர்களோடு நான் உரையாடியதில்லை. அதிகாரிகளும், இந்தக் குழுவில் உள்ள பெரும்பாலானவர்களும் அப்படித்தான் யோசிக்கிறார்கள்.

அரசையும் அதிகார அமைப்பையும் அப்படிப் பிரித்துப் பார்க்க முடியுமா?

அது எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்த வரையில் அரசு என்பது, நான் கொடுத்த அறிக்கையில் எழுதியிருக்கிறேன், அமைச்சுக் குழு (நிர்வாக அமைப்பு), மக்கள் பிரதிநிதிகள் ஏற்படுத்தியதொரு நிர்வாகம், அவர்கள்தான் பொறுப்பு. ஏனென்றால் இவர்கள்தான் சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள்தான் முதல்வரைத் தேர்வு செய்கிறார்கள். இவர்கள்தான் அதிகாரம் உள்ளவர்கள். இவர்களுக்கு உதவி செய்கிற இந்த அலுவலகப் பணியாளர்கள்தான் ஐஏஎஸ் அதிகாரிகள். இவர்கள் முடிவெடுக்கக் கூடாது. அமைச்சுக் குழு வந்து இவர்களிடம் ஒப்படைத்துவிட்டால் இவர்கள் தவறு செய்துகொண்டுதான் இருப்பார்கள். அமைச்சர்களே இருந்து நடத்தலாம், நடத்தியிருக்கலாம். இப்பிரச்சினை இல்லாது போயிருக்கும். அதைச் செய்யாமல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கும்போது அவர்கள் ஆடுகிறார்கள். இதில் விஷயம் தெரியாமல் யாரை நாம் குறை சொல்வது. ஆனால், அரசு இதைச் செய்திருக்கலாம். அரசினுடைய கவனமின்மை என்றுதான் நினைக்கிறேன்.

இந்த எல்லாப் பிரச்சினைகளையும் குறித்து இருநூற்றைம்பது பக்கத்துக்கு அறிக்கை தயார் செய்து முதல்வரிடம் கொடுத்திருக்கிறீர்கள். முதல்வரிடமிருந்து ஏதாவது பதில் வந்ததா?

இல்லையே. வந்தால் நான் எதற்குப் பத்திரிகையாளர் சந்திப்பிற்குப் போகிறேன். உதயச்சந்திரனாவது “வாங்க நான் ஏதோ தவறுதலா பேசிட்டேன், கோவத்துல திட்டிட்டேன், மிரட்டிட்டேன். வாங்க நம்ம பேசலாம்” என்று அழைத்திருக்கலாமே. எனக்கும் அவருக்கும் பகை எதுவும் இல்லையே. அதுபோன்று இங்குள்ள உறுப்பினர்களுக்கும் நமக்கும் என்ன உறவு இருக்கிறது. எல்லோரும் மக்களுக்காகப் பாடுபடுகிறோம். நமக்குள் ஈகோ எதுவும் தேவையில்லை, நான் அப்படித்தான் இருக்கிறேன். ஆனால், எந்த வகையிலுமே நான் எடுத்த முயற்சிகள் எதுவும் பரிசீலனை செய்யப்படவில்லை. இம்மாதிரியான சூழலில் யாரிடமிருந்தும் எனக்குப் பதில் வரவில்லை. கடைசி வரைக்கும் நாம் இப்படியே இருந்துவிட்டோம் எனில் மக்களுக்குத் துரோகம் செய்ததாக ஆகிவிடும். மக்களுக்கு எதிரான ஒரு கொள்கை நடைமுறைக்கு வரும்போது, நாளை யாராவது என்னைப் பார்த்து, “ஜவகர்நேசன் பத்து மாசம் இருந்தாப்ல அந்தக் குழுவில். அவர்கூட எதுவும் பேசலையா, இந்த ஆளு ஏதாவது சொல்லி இருந்தா மக்கள் எல்லாம் கொஞ்சம் விழிப்படைந்திருப்போம்” என்று கேட்பார்கள். கடைசி நேரத்தில் இப்படிச் சொல்கிறாரே என்று மக்களை நினைக்க வைத்துவிடக்கூடாது. மேலும் குழுவில் இருந்து நல்லது செய்ய வேண்டுமென்று நினைத்தோம், அது நடக்கவில்லை. அதனால் மேலும் மேலும் தவறு நடந்து விடக்கூடாது என்பதற்காக வெளியில் வந்துவிட்டேன். அதிலிருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறேன். நான் வெளியே வந்த பிறகு மக்கள் யோசிப்பார்களல்லவா; இவர் வெளியே சென்ற பிறகும் அதே வழியில் போனதென்றால் நாம் மாட்டிக்கொள்வோம் என்று உள்ளிருப்பவர்கள் கொஞ்சமாவது யோசிப்பார்களல்லவா. ஒரு கடிவாளம் இருக்கலாம். அதனால் வெளியில் இருந்து கொஞ்சம் அழுத்தத்தைக் கொடுப்போம்.

இருநூற்று முப்பத்திரண்டு பக்கத்திற்கு என்ன எழுதியிருக்கிறேன் என்றால், தமிழ்நாட்டு மக்களுடைய கல்விக் கொள்கைக்கான பிரச்சினைகள் என்ன, அவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன, இங்கு இருக்கிற தனித்துவமான கேள்விகள் என்ன, இதற்கும் இந்தியாவுக்கும் சம்பந்தம் இருக்கா, இது இந்த மாநிலத்திற்கானது, எதற்கு, இந்த ஒவ்வொரு பிரச்சினைக்கும் என்ன வழிகாட்டுதல் என்பது பற்றியதுதான் அது. இம்மாதிரி ஒருநிலையில் கொண்டுவந்து நிறுத்திவிட்டாவது நாம் வெளியில வந்துவிடுவோம். இதுகூட இல்லாமல் இருந்திருந்தால், இன்று நான் இவ்வளவு உழைப்பையும் கொடுத்துவிட்டுப் பாதியில் வந்த மாதிரி போயிருக்கும்.

இந்தக் கொள்கையினுடைய இன்றைய நிலை என்ன? முடிந்துவிட்டதா?

பதினொரு மாதங்கள் கழித்து இப்போதுதான் பேச ஆரம்பித்திருக்கிறோம். வரைவு எதுவுமே இல்லையே. ஒன்றுமே ஆரம்பிக்கவில்லையே.  எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். ஜூன் முதல் நவம்பர் வரை நேரம் எடுத்துக்கொண்டீர்கள். நவம்பருக்குப் பிறகாவது ஏதாவது செய்யலாம் என்று சொன்னேன். அதற்கும் வரவில்லை. பிறகு இந்த உதவிக்குழு அமைத்து, ஆய்வு செய்து, அதிலிருந்து தரவுகள் எடுத்துத் தினமும் வேலை செய்யும்போது கலந்துரையாடலுக்கு வருவார்கள், சாப்பிட்டுவிட்டுக் கிளம்பிவிடுவார்கள். நான் மட்டும் உழைத்துக்கொண்டிருப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவ்வப்போது நான் அறிக்கை தருவது மாதிரி எல்லோரும் கொடுத்திருந்தால், அவற்றில் எது சரி, தவறு என்று வாதம் செய்து, அதை ஒற்றை அறிக்கையாகக் கொடுத்திருக்கலாம். நான் மட்டும் எதற்காகக் கொடுக்கிறேன் என்றுதான் அவர்களுக்குக் கோபம் வருகிறது. இவர்கள் வேலை செய்ய மாட்டார்கள் என்ற நிலைக்கு வந்தாயிற்று. அரசு தரவுகள் கேட்டது. இவர்கள் அனைவரும் கதை எழுதுவது போல் ஆளுக்கு இரண்டு பக்கம், ஐந்து பக்கம் எழுதிக்கொண்டு வந்தார்கள். நானும் அப்படிச் செய்ய வேண்டுமென்றுதான் எதிர்பார்க்கிறார்கள். இதுதான் ஈகோ சிஸ்டம். இப்படியாகக் கடைசி ஒரு மாதத்தில் எல்லா விவாதங்களையும் முடித்து, ஜூன் மாதத்தில் வரைவறிக்கை கொடுத்துவிடுவோம் என்றால், கல்விக் கொள்கை அவ்வளவு எளிதானாதா? இது நீட் கிடையாது. நீட் அறிக்கையை நான்தான் எழுதினேன். 165 பக்கம். ஒரே மாதத்தில் எழுதினேன். நீட் என்கிற ஒரேயொரு  தேர்வுக்காக எழுதினது. அதில் ஓராயிரம் விஷயங்கள் இருக்கின்றன. பத்து மாதங்களை வீணாகக் கழித்துவிட்டு, பதினொராவது மாதம் விவாதித்துப் பன்னிரண்டாவது மாதம் அறிக்கை எழுதிக் கொடுத்துவிடுவீர்கள் என்றால், அவ்வளவு தகவல்களையும் ஒரே மாதத்தில் எப்படி விவாதம் செய்வீர்கள்? முடியாது. அப்படியானால் தேசியக் கல்விக் கொள்கையில் சில இடைச்சொற்களை இணைத்து ஒரே மாதத்தில் அறிக்கை கொடுத்திடலாமென்று இருந்துவிட்டீர்கள். என்னால் அது முடியாது. இதுதான் பிரச்சினை.

ஏற்கெனவே இது சார்ந்து பணி செய்துகொண்டிருப்பதினால் உங்களுக்கு அனுபவம் இருக்கிறது. அதனால்தான் இந்தக் குழுவிலும் உங்களை நியமித்திருக்கிறார்கள். உட்பிரச்சினைகள் இருந்தாலும் நாம் ஒரு வரைவறிக்கையைக் கொடுப்போம், அதை அரசு பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்கிறதோ இல்லையோ எதிர்காலத்தில் வேறு விஷயங்களுக்காவது பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லது ஒரு முன்மாதிரியாக அதை நீங்கள் பொதுவெளியில் வெளியிடலாம். அப்படிச் செய்யாமல், குழுவிலிருந்து வெளியேறியதன் மூலமாக எதை உணர்த்த நினைக்கிறீர்கள்?

ஒரு குழுவில் ஓர் உறுப்பினர் இருக்கிறார் என்று சொன்னால், அது சேர்மனோ, உறுப்பினரோ யாராக இருந்தாலும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதைச் சமாளித்து, இறுதி இலக்கு என்னவோ அதையும் வெற்றியுடன் முடித்துவிட்டுத்தான் அவர் வெளியேற வேண்டும். அதுதான் ஒரு சிறந்த பங்களிப்பவனுக்கும் உகந்தது. அதையும் மீறி ஒருவர் வெளியே வருகிறார் என்றால் காரணம் என்னவென்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தேசியக் கல்விக் கொள்கையை நாம் முதலாளித்துவக் கல்விக் கொள்கை என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், அங்கு சுதந்திரமான, ஜனநாயகப்பூர்வமான கருத்துகளை உள்வாங்கக்கூடிய நிலையில் ஓர் உறுப்பினருக்குக் குறைந்தபட்சப் பாதுகாப்பு அந்தக் குழுவில் இல்லை எனும்போது கடைசி நேரத்தில் எதையாவது எழுதிக் கொடுத்துவிட்டு வந்திடலாம். ஆனால், ஜனநாயகத்தை நம்பும் நாம் அதைச் செய்ய முடியாது. இங்கே ஒருபக்கம் திணிப்பு நடக்கிறது. அவர்கள் சித்தாந்தத்தைத் திணிக்கிறார்கள். அதிகார வர்க்கம் அதற்குத் துணை போகிறது. அந்த அதிகார வர்க்கம் நம்மை அச்சுறுத்துகிறது. இன்னொரு பக்கம்,  குழுவில் வெளிப்படைத் தன்மை இல்லை, ஜனநாயகத் தன்மை இல்லை. நிறையத் தவறுகள் நடக்கின்றன. நான் கொடுக்கும் தரவுகளைப் பதிவு செய்ய மாட்டார்கள். அதற்கொரு கடிதம் எழுதி நிர்பந்தம் கொடுத்துப் பதிவு செய்யச் சொல்ல வேண்டும். இந்த நிலையில்தான் குழு இருக்கிறது.

கடந்த நான்கைந்து மாதங்களாக இது நடந்துகொண்டிருக்கிறது. அன்றைக்கே வெளியேறியிருந்தால் கூட யாரும் கேட்கப் போவதில்லை. இருந்தாலும் நம்மை நியமித்த நோக்கத்திற்காக எப்படியாவது கடைசிவரைக்கும் இருந்து, ஒரு வரைவைக் கொடுத்துவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். குறைந்தபட்சம் ஒரு வழிகாட்டும் அறிக்கையையாவது கொடுத்துவிட்டு, பின்னர் வெளியேறி மக்களிடம் இப்படி நடக்கிறதென்று சொல்லும்போது, தேசியக் கல்விக் கொள்கையைப் அமல்படுத்துவதற்கா நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள் என்று மக்கள் அழுத்தம் கொடுப்பார்கள் என்று கருதித்தான் நான் வெளியேறினேன்.

சுயமரியாதை அற்ற நிலையில் ஒரு வேலையை எவ்வாறு செய்ய முடியும்? கல்விக் கொள்கையை உருவாக்குபவரை ஒருவர் மிரட்டுகிறார் எனும்போது எனக்கென்று சுயமரியாதை இருக்கிறதல்லவா. அவர்கள் உதைப்பார்கள், அடிப்பார்கள், அடிமையாக நடந்துவார்கள், அதைத் தாங்கிக்கொண்டு கொடுத்த வேலையை முடி என்பதையா பெரியார் நமக்குக் கற்றுத் தந்தார்?

நீங்கள் வெளியேறிய பிறகு உங்களோடு குழுவில் பணிபுரிந்தவர்களின் மனநிலை எப்படி இருந்தது?

ஒருசிலர் என்று சொல்வதைவிட ஒருவர் என்று சொல்லலாம். அவர் ரொம்ப வருத்தப்பட்டு, நியாயமாக உள்ளுக்குள் இருந்து குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார். பெரும்பாலானவர்கள் அதிகார வர்க்கத்தினுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கும் சுயநலமா என்பது தெரியவில்லை. ஆனால், நியாயத்திற்காக யாரும் இல்லை. நானும் அவர்களிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை.

மக்களின் நலனையும் கல்வியையும் கருத்திற்கொண்டு கல்விப் புலத்தில் வேலை செய்துகொண்டிருப்பவர்களை ஒருங்கிணைத்து இதையொரு மக்கள் இயக்கமாக முன்னெடுப்பது குறித்த யோசனைகள் ஏதும் இருக்கிறதா?

இதுவரை அப்படியொரு திட்டம் இல்லை, ஆனால் ஒன்றில் மட்டும் உறுதியாக இருக்கிறேன். இதற்காகத் திரட்டப்பட்ட தரவுகளை முழுமையாகத் தொகுத்து ஒரு மாநிலக் கல்விக் கொள்கை வரைவை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஜனநாயகத்தின் மீதி எனக்கிருக்கும் நம்பிக்கையிலிருந்தும் பொறுப்பிலிருந்தும் அந்த வரைவுத் திட்டத்தை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும், அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவர்கள் விருப்பம்.

m

எழுத்தாக்கம் : இலஞ்சி அ.கண்ணன்

[email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!