இலக்கியக் களமும் கருத்துரிமைக் களமும்

பெருமாள்முருகன்

விடுதலை சிகப்பி எழுதிக் கவியரங்கில் வாசித்த ‘மலக்குழி மரணங்கள்’ கவிதை  கடவுளை இழிவுபடுத்துகிறது எனவும் தங்களைப் புண்படுத்துகிறது எனவும் இந்துத்துவக் குழுக்கள் அளித்த புகார் காரணமாக அவர் மீது வழக்கு பதிவு  செய்யப்பட்டிருக்கிறது. எதிர்ப்போர் பல வகைகளில் அதை வெளிப்படுத்துகின்றனர். இதுவரைக்கும் பொதுவெளியில் சிறுகவனமும் பெறாத, பெயர்கூடத் தெரியாத, எந்த அடையாளமும் இல்லாத அமைப்புகள் அறிக்கைகள் விடுகின்றன. முகம் தெரியாதவர்கள் எல்லாம் அவர் கவிதைக்கு எதிராகப் பேசுகிறார்கள். அவரும் அவர் குடும்பத்தாரும் மிரட்டப்படுகின்றனர்.

அக்கவிதை எழுதியதற்காக என்ன தண்டனை என்பதைக் கூடச் சிலர் தீர்மானித்து அறிவிக்கிறார்கள். தங்களுக்குப் பிடிக்காத கருத்தைக் கூறுவோர் அனைவருக்கும் தூக்குத் தண்டனை கொடுத்துவிட வேண்டும் என்றால் மனித குலமே மிஞ்சாது. கடைசி மனிதன் மட்டுமே எஞ்சுவான். அவனும் தனியாக வாழ முடியாமல் தற்கொலை செய்துகொள்ளக் கூடும். ஐந்தறிவு உயிர்களுக்கே உடல்ரீதியாகவும் செயல்பாடுகளிலும் பல வேறுபாடுகள் உள்ளன. ஒன்றைப் போல மற்றொன்று இருப்பதில்லை. ஒன்று சுறுசுறுப்பு; மற்றொன்று சோம்பேறி. ஒன்று ஓடும்; ஒன்று நடக்கும். உயிர்கள் எவையும் அச்சில் வார்த்தவை அல்ல.

பன்றி மேய்ப்பவர் ஒருவரை எனக்குத் தெரியும். கிட்டத்தட்ட நாற்பது பன்றிகள் இருக்கும் கூட்டம். வெளியில் இருந்து பார்ப்பவருக்கு எல்லாம் ஒரேமாதிரி தெரியும். ஒவ்வொன்றுக்குமான வித்தியாசத்தை அவர் அறிவார். முன்னோடும் பிள்ளை எது, பிரச்சினையை உருவாக்குவது எது என்பதெல்லாம் அவருக்குத் தெரியும். அவற்றின் மேல் கவனம் குவித்திருப்பார். பெயர் சூட்டி அடையாளப்படுத்தியிருப்பார். ஒன்றின் பெயரை அவர் சத்தமாக உச்சரித்தால் அது தலைதூக்கிப் பார்க்கும். அவர் இடும் கட்டளைகளை ஏற்கும். ஆட்டு மந்தைகளிலும் இந்த நடைமுறைகளைப் பார்க்கலாம். விலங்குகளிலேயே இப்படி என்றால், சிந்திக்கும் திறனுடைய மனிதர்களில் எத்தனையோ விதங்களைப் பார்க்கலாம். அதுவும் கருத்துகள் என்று வந்துவிட்டால் பல வண்ணங்கள்தான். கருத்து வேறுபாடுகள், மோதல்கள், விவாதங்களுக்கு இடையேதான் வாழ்கிறோம். கருத்துகளில் ஒற்றுமை ஏற்பட்டாலும் செயல், வழிமுறை, பார்வை ஆகியவற்றில் கட்டாயம் வேறுபாடு இருக்கும். இதுதான் இயல்பு.

கருத்துரிமையை எதிர்ப்போருக்கு இந்த அடிப்படைக் கூறு புரிவதில்லை. தம் கருத்தின் மீது ஓர் அடி விழுந்தால் உடனே பதறிப் போகின்றனர். அது தம் கருத்தின் அடிநிலையையே தகர்த்துவிடும் என்று அஞ்சுகின்றனர். அந்தக் கருத்தே அவர்களுக்கு அரசியல் அதிகாரத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. அதுவே அவர்களுக்கு ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. கருத்து தகர்ந்தால் தம் நலன்கள் எல்லாம் தகர்ந்துவிடும் என்பதை உணர்ந்துள்ளனர். அக்கருத்தினால் பலன் பெற்றவர்கள் எல்லோரும் உடனே ஒன்றிணைந்து குரல் எழுப்புகின்றனர். அவ்வாறு குரல் எழுப்புவதால் தமக்குப் பலன் கிடைக்கக் கூடும் என்னும் எதிர்பார்ப்பும் இருக்கிறது.

அப்படித்தான் ‘மலக்குழி மரணம்’  கவிதையை எதிர்ப்போர் அனைவரும் ஓரணியில் திரண்டு ஒரே குரலில் பேசுகின்றனர். அவர்களோடு இணங்கும் உயர்நிலை அதிகாரம் தாம்  பேசாமல் மௌனம் காத்து எதிர்ப்புக்கு ஆதரவளிக்கின்றது. இச்சூழலில் கருத்துரிமையை ஆதரிப்போர்தான் பல குரல்களில் பேசுகின்றனர். எப்போதுமே அறிவுத்தளத்தில் செயல்படுவோரிடையே கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் வலுவாக இருப்பது இயல்புதான்.  ஆனால் நடைமுறையின் பரிமாணத்தைக் கவனத்தில் கொள்ளாமல் இத்தகைய விவாதங்கள் நடப்பது வருத்தத்திற்குரியது.

விடுதலை சிகப்பி எழுதியிருப்பது கவிதையே இல்லை என்று ஒருவர் சொல்லலாம். அது நல்ல கவிதை இல்லை என்று இன்னொருவர் சொல்லலாம். இந்த விவாதங்கள் கவிதை சார்ந்தவை என்பதில் சந்தேகமில்லை.  ஆனால் இக்கவிதைக்கும் எழுதியவருக்கும் கருத்துரிமை சார்ந்த பிரச்சினை வந்திருக்கும் சந்தர்ப்பத்தில் விவாதித்துக் கொண்டிருப்பது பொருத்தமானதல்ல.  அது எதிர்தரப்புக்கே ஆதரவாகச் செல்லும்.  “இசை’யின் முகநூல் பதிவு இது: ‘தோழர் விடுதலை சிகப்பியின் படைப்பு வெளிப்பாட்டு உரிமைக்காக அவர் பக்கம் நிற்கிறேன்; ஒரு கவிதை மாணவனாக அது நல்ல கவிதை இல்லை என்றும் கூறிக் கொள்கிறேன்” (10.05.23). ‘அது நல்ல கவிதை இல்லை’ என்று அவர் சொல்லட்டும். அதை ‘படைப்பு வெளிப்பாட்டு உரிமைக்காக அவர் பக்கம் நிற்கிறேன்’ என்பதைச் சொல்லும்போது சேர்த்துச் சொல்ல வேண்டியதில்லை.

அப்பதிவில் கருத்திட்டுள்ள கவின்மலர் “அதைச் சொல்லித்தான் உங்க ஆதரவைச் சொல்லணும்னு அவசியம் இல்லை. ஆதரவு தெரிவித்தால் உங்க இலக்கியத் தூய்மைக்குப் பங்கம் வந்துடுமோ என்கிற பயம் தேவையில்லாதது. உங்க போஸ்ட் மார்ட்டத்தை அப்புறமா வேறொரு நேரத்தில் செய்யலாமே?” என்று சொல்லியிருந்தார். அதே போல க.மோகனரங்கன் “கவிதை மாத்திரம் அல்ல எல்லாக் கலைப் படைப்புகளுமே subjective ஆனவைதான். அலைவரிசையைப் பொருத்து ஆளுக்கு ஆள் அதன் சுவையும் பொருளும் தரமும் மாறுபடும். நாம் தொடங்கிய காலத்தில் கவிதை என்று நம்பி நாம் வாசித்தவற்றையும் எழுதியவற்றையும் இப்போது நினைத்தால் நமக்கே கொஞ்சம் கூச்சமாகத்தான் இருக்கும். தமிழ் கூறு நல்லுலகில் அலட்சியமாகப் பார்க்கப்படுவதும் ஆகக்குறைவாகப் படிக்கப்படுவதுமான இலக்கிய வடிவம் கவிதையாகவே இருக்கும் என்பது என் யூகம். அதை எழுதியதற்காக ஒருவர் மீது வழக்கு பதிவது சரியா என்பதே நாம் விவாதிக்க வேண்டியது. மற்றபடி அது நல்லதா அல்லவா என்பதைக் காலம் தீர்மானிக்கும்” என்று கூறியிருந்தார்.

மேற்கண்ட கருத்துகள் நடைமுறையைக் கருத்தில் கொண்டு சொன்னவை. அவற்றோடு என்னால் முழுமையாக இயைய முடிந்தது.  இலக்கியம் எங்கும் ஓடிவிடப் போவதில்லை. அதைக் காப்பாற்ற யாரும் வரிந்து கட்டிக்கொண்டு நிற்க வேண்டியதுமில்லை. ஆனால் கருத்துரிமைப் பிரச்சினையில் படைப்பாளரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. அவரது அன்றாட வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. ஓடி ஒளிந்து வாழ நேர்கிறது. காவல் நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் நடையாய் நடக்க வேண்டியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் எம்.எம்.கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர்  கௌரி லங்கேஷ் ஆகியோருக்கு நடந்ததை நாமறிவோம். மத அடிப்படைவாதம் எப்படிச் செயல்படுகிறது என்பதற்குச் சமகாலச் சாட்சியங்கள் அவர்கள்.

பக்தி இலக்கியக் காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு சோலை சுந்தர பெருமாள் எழுதிய ‘தாண்டவபுரம்’ நாவலுக்கு ஏற்பட்ட எதிர்ப்பைத் தொடர்ந்து அவர் இறப்பு வரைக்கும் பெரும் அச்சத்தில் வாழ்ந்தார். நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி ஏறிச் சோர்ந்து போனார். துரை.குணா, புலியூர் முருகேசன் உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் படும் பாடுகளைக் கண்டு கொண்டிருக்கிறோம். வலுவான அரசியல் பின்புலம் கொண்டவராக இருந்தும் மனுஷ்யபுத்திரன் தாம் எழுதிய ஒரு கவிதைக்காகப் பிரச்சினைகளை எதிர்கொண்டதும் சமீப காலத்தில்தான். இந்தியா முழுக்க இப்படிப் பலவற்றை எடுத்துக் காட்டலாம். சாதி, மத அடிப்படைவாதிகளால் ஓர் எழுத்தாளருக்குப் பிரச்சினை ஏற்படுகிறது என்றால் பாதிக்கப்பட்ட பலரையும் மனதில் நிறுத்தி அதை நாம் அணுக வேண்டும். எழுதியவர் நிலையை மறந்துவிட்டு எழுத்தின் மேல் விமர்சனம் வைப்பது சரியான அணுகுமுறை ஆகாது.

சர்ச்சைக்கு உள்ளான கவிதையை விளக்க வந்த டி.தருமராஜ் (யாதும் காடே, யாவரும் மிருகம் #21, நீல ஆரவாரம், 15.05.23) அது தலித்தியத்திற்கு எதிரான கவிதை என்று வாசிக்கிறார். தொன்மங்களை மறுவாசிப்புச் செய்யும்போது பலவிதமான சாத்தியங்கள் இருக்கின்றன. கவிதையில் கடவுளைச் சாதாரண மனிதராக்கிவிடுவதுதான் பிரச்சினை என்கிறார். கவிதையில் கடவுளுக்கு மனிதச் செயல்களை ஏற்றினாலும் ‘அவர் கடவுள்’ என்னும் நினைவு சிறிதும்  அகலவில்லை. அதற்குக் கவிதையில் வரும் வில், அம்பு, கதாயுதம், இலங்கை ஆகிய சொற்கள் பயன்படுகின்றன. வாசிப்போர் ஓரிடத்திலும் சாதாரண மனிதரைக் காண்பது போலக் கடவுளைக் காண வழியேயில்லை. கடவுள் என்னும் அடையாளமும் நினைவும் அழியாமல் தொடர்கின்றன. மலக்குழிக்குள்  இறக்கிவிடுவது என்பது கடவுளைக் காலி செய்வதற்கான ஒரு உத்தி. சீதை ஏன் மலக்குழியை மூடினாள்? தன் வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்ள சீதைக்கும் இதுதான் சரியான சந்தர்ப்பம். கவிதைக்குள் ஒருசேரப் பல விஷயங்கள் நடக்கின்றன. எல்லாவற்றுக்கும் பின்னணிக் காரணங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரின் கருத்துநிலைக்கு ஏற்பவும் கவிதையை வாசிக்கலாம்; விளக்கலாம். கவியரங்கில் அக்கவிதையை வாசித்தபோது எழுந்த ஆரவாரத்தையும் கைத்தட்டலையும் டி.தருமராஜ் எதிராகவே காண்கிறார். சாதிப் படிநிலையைக் கவிதை தலைகீழாக்குவது ஒன்றே ஆரவாரத்திற்குப் போதுமானது. கவிதையின் நுட்பங்கள் ஒருபக்கம் கிடக்கட்டும். இந்தத் தலைகீழாக்கம் சாதாரண விஷயமல்ல. எத்தனையோ அவதாரம் எடுத்த கடவுளை யாரும் சிந்தித்தே பார்க்க இயலாத ஓர் அவதாரமாக்குகிறது கவிதை. அதுதான் ஒருபக்கம் வரவேற்பு; இன்னொரு பக்கம் எதிர்ப்பு. வரவேற்போர் வாசிப்பு எப்படி இருக்கிறது என்பதற்கு முக்கியத்துவம் தரட்டும். எதிர்ப்போர் நோக்கிலிருந்து அவர்கள் வாசிப்பின் லட்சணத்தை எடுத்துப் பேசி ‘இந்த வாசிப்பு தவறு’ என்று வலுவாகச் சொல்ல ஏன் முடியவில்லை? அதுதானே இப்போதைய தேவை?

டி.தருமராஜின் வாசிப்பும் விளக்கமும் சரியாகவே இருக்கட்டும். எனினும் கவிஞரின் இருப்பு பிரச்சினைக்கு உள்ளாகியிருக்கும் சந்தர்ப்பத்தில் கவிதை மீதான எதிர்வாசிப்பை நிகழ்த்த வேண்டியதில்லை. எதிர்ப்போர், கவிதையை எதிர்க்கிறோம் என்னும் போர்வையில் கவிஞரையே குறிவைக்கின்றனர். அவர்கள் கவிதை தொடர்பான ஆய்வு, விளக்கம் எதிலும் ஈடுபடுவதும் இல்லை. நாம் விளக்கம் சொன்னாலும் அதைக் காது கொடுத்துக் கேட்கும் மனநிலையிலும் இருப்பதில்லை. எனினும் எதிர்ப்போரை நோக்கியே நம் குரல்கள் இருக்க வேண்டும். கவிஞரை நோக்கியும் கவிதையை ஆதரிப்பவர்களை நோக்கியும் குரலுயர்த்துவதால் யாருக்குப் பயன்?

இலக்கியவாதிகள் இந்தச் சமயத்தில் கவிஞரின் நிலையைப் புரிந்துகொண்டு தம் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும். அது நடைமுறையில் கவிஞருக்கு உதவும். கருத்துரிமையை ஆதரிப்பதே கவிஞருக்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாது, அவர் தம் சிக்கல்களில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காகத்தான்.  என் ஆதரவையும் தெரிவித்துவிட்டேன் என்று திருப்திப்பட்டுக் கொள்வதற்காக அல்ல. நம் ஆதரவும் எழுத்தும் பாதிக்கப்பட்டவருக்கு ஏதாவது ஒருவகையில் உதவக்கூடும் என்னும் எண்ணம் மனதில் இருக்க வேண்டும். எழுத்தின் வலிமையை நடைமுறை சார்ந்து நம் இலக்கியவாதிகள் இன்னும் சரியாக உணரவில்லை என்றே தோன்றுகிறது. தாம் இயங்கும் பத்திருபது பேர் கொண்ட குழுவுக்குள் தான் நம் கருத்துகள் செல்லும் என்று நினைப்பது நடைமுறையை உணராத குறுகலான பார்வை.

நான் மீண்டும் மீண்டும் நடைமுறை, நடைமுறை என்று ஏன் சொல்கிறேன் என்றால் ‘மாதொருபாகன்’ பிரச்சினை சார்ந்த அனுபவம்தான் காரணம். அவ்வழக்கின் தீர்ப்பு முழுமையாக இணையத்தில் கிடைக்கிறது. ஆங்கிலத்திலான அத்தீர்ப்பு வீ.பா.கணேசன் மொழிபெயர்ப்பில் ‘வழக்கு எண் 1215/2015’ என்னும் தலைப்பில் நூலாகவும் வெளியாகியுள்ளது. எழுத்தாளர்கள் அனைவரும் அத்தீர்ப்பை வாசிக்க வேண்டும். 150 பக்கங்களுக்கு மேல் விரியும் அத்தீர்ப்பில் நீதிபதிகள் பல மேற்கோள்களைக் காட்டியுள்ளனர்.  ‘மாதொருபாகன்’ நாவல் பற்றித் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியான பல மதிப்புரைகள், கட்டுரைகளை எல்லாம் வாசித்து அவற்றிலிருந்து மேற்கோள்களை எடுத்தாண்டுள்ளனர். தியடோர் பாஸ்கரன், அ.கா.பெருமாள், அம்பை, லாவண்யா சுந்தரராஜன், நந்தினி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கருத்துகளையும் நீதிபதிகள் பயன்படுத்தியுள்ளனர். அறிஞர்கள் பலரின் நூல்களை எடுத்துக் காட்டியுள்ளனர். அவற்றை எல்லாம் கொண்டுதான் அவர்கள் ஓர் முடிவுக்கு வந்துள்ளனர்.

விடுதலை சிகப்பி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அது நடந்து முடிய மாதங்களோ ஆண்டுகளோ ஆகும். நீதிபதிகள் அந்தரத்திலிருந்து தீர்ப்புச் சொல்ல முடியாது. அவர்களுக்குப் பல சான்றுகள் தேவை. இந்தக் கவிதை பற்றி எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு குறிப்பும் சான்றாகப் பயன்படக் கூடும். கவிதைக்கு ஆதரவான கருத்துகள் கணக்கில் கொள்ளப்படும். கடவுள் என்னும் தொன்மத்தை மறுவாசிப்புச் செய்தல் தொடர்பான கருத்துகள், கோட்பாடுகள், நூல்கள் ஆகியவை வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் பெரிய அளவில் உதவும். வழக்கறிஞர்கள் தம் வாதத்திற்கு ஆதரவாக இலக்கியவாதிகளின் கருத்துகளை எடுத்துக் காட்டுவர். அவற்றை ஆதாரங்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பர். இலக்கியவாதிகளின் கருத்துகளுக்கு அந்த அளவு முக்கியத்துவம் உண்டு.

கருத்துரிமையை ஆதரிப்போர் இது கவிதையா, நல்ல கவிதையா, இது எத்தகைய பொருள் தருகிறது என்றெல்லாம் பார்க்காமல் தம் ஆதரவை வழங்க வேண்டும். இலக்கியக் களம் வேறு; கருத்துரிமைக் களம் வேறு. இலக்கியக் களத்தில் உரையாடலாம்; விவாதிக்கலாம்; முரண்படலாம்; வாளெடுத்துச் சண்டை செய்யலாம். கருத்துரிமைக் களம் அப்படியானதல்ல. இலக்கியத்திற்குச் சிறிதும் தொடர்பில்லாத எதிராளிகள் பல ஆயுதங்களோடு நம் முன் நிற்கின்றனர். இழிவு செய்கிறது, அவமானப்படுத்துகிறது, புண்படுத்துகிறது என்றெல்லாம் சொல்லிக்கொண்டு ஆக்ரோசம் காட்டுகின்றனர். அவர்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் படைப்பாளர் இருக்கிறார். அவரைத் தனித்து விட்டுவிடக் கூடாது. இலக்கியத்திற்குள் இருக்கும் வேறுபாடுகளை எல்லாம் கடந்து எல்லா வகையிலும் படைப்பாளரோடு நாம் நிற்க வேண்டும்.  ஆம், எந்த இலக்கிய  நிபந்தனையும் விதிக்காமல் படைப்பாளரை ஆதரித்து நிற்க வேண்டிய களம் கருத்துரிமைக் களம்.

பயன்பட்டவை:

  1. வீ.பா.கணேசன் (மொ.ஆ.), வழக்கு எண் 1215/2015, ‘மாதொருபாகன்’ வழக்குத் தீர்ப்புரை, 2016, சென்னை, பாரதி புத்தகாலயம்.
  2. கிழக்கு டுடே இணைய இதழ்.

[email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!