முதல் அறக்குரல்: அம்பேத்கர் – பிரதாப் பானு மெஹ்தா

‘மனித உரிமை இயக்கம் தொடர்பான வரலாற்று ரீதியிலான பைபிள்’ என மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் குறிப்பிட்ட ‘தி ஸ்ட்ரேஞ்ச் கேரியர் ஆஃப் ஜிம் க்ரோ’ (The Strange Career of Jim Crow) புத்தகத்தின் ஆசிரியரும் மிகச் சிறந்த வரலாற்று அறிஞருமான சி.வான் வுட்வார்ட் தனது சுயசரிதைப் புத்தகத்தில் ‘தீண்டப்படாதவர்களுக்கான’ போராட்டத்தின் அடையாளப் பிம்பமாக மட்டுமே அம்பேத்கரைக் குறிப்பிடவில்லை. அந்தப் புத்தகத்தின் எழுத்தாக்கம் எப்படியோர் அசாதாரணச் சந்திப்பின் மூலமாக உருவாகத் துவங்கியது என்பதையும் எழுதியுள்ளார்:

“இரண்டாம் உலகப் போரின்போது இந்தியாவில் நான் கடற்படையில் இருந்தேன். அப்போது வேறொரு தேசத்தைச் சேர்ந்த முற்றிலும் புதிய மற்றும் அசாதாரணமான பார்வைக் கோணம் ஒன்றை அறியும்படி நேர்ந்தது. ஓர் அறிமுகக் கடிதத்தைக் கையிலெடுத்துக்கொண்டு தீண்டப்படாதவர்களுக்கான மாபெரும் தலைவரும் பின்னாளில் இந்திய அரசியலமைப்பு வரலாற்றில் முதன்மையாளராகக் கருதப்பட்டவருமான பீமாராவ் ராம்ஜி அம்பேத்கரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். புது தில்லியில் உள்ள தனது இல்லத்தில் மிகுதி அன்புடன் என்னை வரவேற்ற அவர், ‘கறுப்பினத் தீண்டப்படாதவர்கள்’ பற்றி நிறைய கேள்விகளைக் கேட்டார். அவர்களுக்கும் தனது தேசத்தில் தீண்டப்படாதவர்களாகக் கருதப்படுபவர்களுக்குமான ஒற்றுமைகளைப் பற்றியும் அறிந்துகொள்வதில் ஆர்வத்துடன் காணப்பட்டார். எங்களுக்கிடையிலான உரையாடல் பலமணி நேரம் நீடித்தது. காலாகாலமாகச் சாதிவாரியாக மக்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டனர், அந்த அமைப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் அதை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதையெல்லாம் அவர் எனக்குப் புரிய வைத்தார்.”

அம்பேத்கரை வுட்வார்ட் கண்டடைந்ததில் ஆச்சரியமில்லை. அம்பேத்கருடனான அவரது சந்திப்பு நிகழ்வதற்குப் பலகாலம் முன்பிருந்தே, இந்தியாவிலுள்ள சாதிய ஒடுக்குமுறையையும் அமெரிக்காவிலுள்ள இன ஒடுக்குமுறையையும் ஒப்பிட்டும், இவ்விரண்டிற்கும் இடையிலுள்ள வேறுபாடுகளை ஆராய்ந்தும் இரண்டு தேசங்களிலும் உயிரோட்டமான அறிவுசார் மற்றும் அரசியல் பாரம்பரியம் வளர்ச்சியுற்றிருந்தது. இந்த உரையாடலில் டபிள்யூ.இ.பி.டுபோய்ஸ், இந்திய தேசியவாதியான லாலா லஜ்பத் ராய் போன்ற முக்கியமானவர்களும் இடம்பெற்றிருந்தார்கள். வுட்வார்ட் மிகச் சரியாக அம்பேத்கரின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டார். அவர் அம்பேத்கரைத் ‘தீண்டத்தகாதவர்களுக்கான’ அடையாளப் பிம்பமாக மட்டுமே பார்க்கவில்லை. டபிள்யூ.இ.பி.டுபோய்ஸ், மேடிசன் ஆகியோரைப் போல முக்கியத்துவம் வாய்ந்த அரசியலமைப்புத் தலைவராகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பன்னெடுங்காலமாக நிலவிவந்த இதுபோன்ற விவாதங்களுக்கும் இவர்களுக்கிடையில் நிலவிய உரையாடலுக்கும் இடையிலான அதிமுக்கியமான ‘அறிவுசார் தனித்துவம்’ என்பது இனமும் சாதியும் ஒடுக்குமுறை அமைப்புகளாக இயங்கும் முறைகளுக்கிடையில் உள்ள ஒப்புமைகளை ஆராய்வது மட்டுமே அல்ல. ஜிம் க்ரோ குறித்து வுட்வார்ட் எழுதிய புத்தகத்தின் மையப் பொருட்பாடு என்னவெனில், மக்களில் சிலரை இனரீதியாகப் பாகுபடுத்தும் இயங்குமுறை முன்பே நீடித்திருந்ததுதான் என்றாலும் ஆப்ரஹாம் லிங்கனால் வெளியிடப்பட்ட ‘விடுதலைப் பிரகடன’த்திற்குப் (Emancipation Proclamation) பிறகு அந்த இயங்குமுறை தன்னைப் புதுப்பித்துக் கொண்டு, மறுவரையறையாக்கம் செய்துகொண்டது எனும் கருத்தியலை முன்வைத்ததுதான். அரசியல் ஜனநாயகத்தை இந்தியா தழுவும் வேளையில், ‘தீண்டத்தகாதவர்களுக்கான பாகுபாட்டிற்கும் கீழ்நிலையாக்கலுக்குமான இயங்குமுறையை’ வழக்கமான சில அரசியல் உரிமைகளை வழங்குவதன் மூலமாக மட்டுமே கடந்துவிட முடியாது எனும் உண்மையை அம்பேத்கர் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார். அதனால், இந்தச் சந்திப்பென்பது வெறுமனே இரண்டு ஒடுக்குமுறை அமைப்புகளையும் ஒப்பீடு செய்வது என்பதாக மட்டுமே இல்லாமல், பாய்ச்சல் மிகுந்த கேள்வியை முன்வைப்பதாகவும் இருந்தது: ஜனநாயகத்தின் மாபெரும் சோதனைக் களமாகத் திகழும் இந்தியாவும் அமெரிக்காவும் தங்கள் அடிப்படைகளைக் கட்டியெழுப்பிய காலத்தில் அவர்கள் செய்த பாவக் காரியத்தை ஏன் இன்னமும் கடக்க முடியாமல் இருக்கிறார்கள்? இந்தியாவின் சாதியமைப்பும் அமெரிக்காவின் இன ஒடுக்குமுறையும் ஏன் இன்னமும் நிலவுகிறது?

பதிலின் ஒரு பகுதி, சமத்துவத்தை ஏற்பது என்பது எப்போதுமே முரட்டுத்தனமான உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்வதாகவும் இருக்கிறது. அதாவது, பிற மதிப்புகளுக்குக் கீழ்படிய ஒப்புதல் அளித்தால் மட்டுமே சமத்துவத்தை ஏற்பது என்பது விவாதப் பொருளாக முன்னிலை பெறும். 1945இல் வெளிவந்த ‘காந்தியும் காங்கிரஸும் தீண்டத்தகாதவர்களுக்கு என்ன செய்தார்கள்?’ எனும் புத்தகத்தில் அம்பேத்கர் கடுமையான குரலில் பின்வரும் முடிவுகளை முன்வைத்தார்:

சுயாட்சி மற்றும் தீண்டத்தகாதவர்கள் மீதான காந்தியின் மனோபாவம் என்பது கறுப்பினத்தவர் மற்றும் யூனியன் பற்றிய கேள்விக்கு லிங்கன் எத்தகைய அணுகுமுறையைக் கையாண்டாரோ அதனை ஒத்ததாகவே இருக்கிறது. காந்திக்கு எப்படிச் சுயாட்சி தேவையாய் இருந்ததோ அதேபோல லிங்கனுக்கு யூனியன் தேவையாய் இருந்தது. தீண்டத்தகாதவர்களுக்கான அரசியல் விடுதலைக்குத் தடையாகக் கருதப்படும் மதக் கட்டமைப்பைச் சீர்குலைத்த பின்னரே சுயாட்சியை அடைய வேண்டுமெனக் காந்தி கருதவில்லை. போலவே, யூனியனைக் கட்டியெழுப்ப கறுப்பினத்தவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிடுக்க வேண்டிய அவசியமில்லாததால் லிங்கன் அவர்களை விடுவிக்க விரும்பவில்லை”.

இதற்குச் சில வரிகளுக்கு முன்னதாக லிங்கன் குறித்து அம்பேத்கர் பின்வருமாறு எழுதியிருந்தார், “மக்களின் அரசு, மக்களுடைய அரசு, மக்களுக்கான அரசு என கெஸ்டிஸ்பெர்க் சொற்பொழிவில் கருத்துரைத்த லிங்கன், ‘யூனியனின் மூலமாகக் கறுப்பினத்தவர்களை வெள்ளையினத்தவர் ஆள்வது’ எனும் பொருளில் அவருடைய அறிக்கை வடிவத்தை எட்டியிருந்தால் அதைப் பொருட்படுத்தியிருக்க மாட்டார்.” அம்பேத்கர் சிறிது ஆசுவாசத்துடன் மேலும், “யூனியனைக் காப்பாற்றுவது அவசியமானால், அதற்காகக் கறுப்பினத்தவர்களை விடுவிடுக்க லிங்கன் தயாராக இருந்தார். ஆனால், காந்தியின் அணுகுமுறை இதற்கு முற்றிலும் எதிர்மறையானது. சுயாட்சியைக் கைப்பற்ற இன்றியமையாததாக இருந்தாலும்கூட தீண்டத்தகாதவர்களுக்கான அரசியல் விடுதலையை அவர் ஏற்கவில்லை” என்றார்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!