ஒவ்வோர் அறுவடைப் பருவத்தின் தொடக்கத்திலும்
ஈசான்ய மூலையில் அறுத்த கதிரைக்
கூலிகளுக்குப் புதிராகக் கொடுப்பார் பண்ணை
அப்பா வாங்கி வரும் புதிரை
சாமிபடத்தில் சாற்றிக் கும்பிடுவாள் அம்மா
பின்னந்தக் கதிர்களைக் குஞ்சங்களாக்கி
நிலைப்படியில் தொங்கவிடுவோம்
எத்தனை எத்தனை அறுவடைப் பருவங்கள் கடந்தோடின
கறுக்குவிட முடியாதபடி
அப்பாவின் அறுப்பரிவாளும் மெலிந்துவிட்டது
வாழ்வின் தேய்மானத்தை விலை தந்து
அரிச்சந்திர நதியோரத்தில் வாங்கிய துண்டு நிலத்திலிருந்து
இந்த அறுவடைப் பருவத்தின் புதிரை
ஒரு குழந்தையைப் போல் கொண்டு வருகிறார் அப்பா
குளித்து முழுகிய அம்மா குத்துவிளக்கு ஏற்றுகிறாள்
அரிச்சந்திர நதியோரம் – நிலாதரன்
Image Courtesy: Gabriel Orozco