சமையலறையின் வலதுபுற சுவர் அலமாரியில்
வட்டில்கள் மசாலா டப்பாக்கள் டம்ளர்கள் ஏனங்கள் என்றிருக்கும்.
வாயகன்ற தடித்துக் கனத்தக் கண்ணாடிக் குவளையொன்று
அம்மாவோடு வந்து சேர்ந்தது.
யாரும் அதை உபயோகிப்பதில்லை.
அம்மாவுங்கூட
பச்சையிலைகளும் மஞ்சள் பூக்களும்
உருப்பிடித்திருந்த அதைக் காணும்போதெல்லாம்
அழிவற்ற அற்புதமான கடந்தகாலமொன்று உணர்விலேறும்.
நாக்கை உலர்த்தும் கோடையில்
சிலவேளை நானந்தக் குவளையில் மோர் அருந்துவேன்.
அப்போதெனக்கு ஏனோ அப்பாவின் ஞாபகம் வரும்.
(அப்பா மோர் குடிப்பதை ஒருநாளும் கண்டதில்லை)
முன்னும் பின்னும் தள்ளும்போது
பலமுறை விழுந்து தப்பித்த அது
சமீபத்திலொருநாள்
தவறி உடைந்தது.
சலனமில்லை எனக்கு.
பீங்கான் துண்டுகள்
ஒற்றியெடுத்து அறையைத் துடைத்துவிட்டேன்.
Courtesy: Sitaara Ren Stodel
ஆனால்,
நிலக்கடலை டப்பா எங்கே
குழம்பு பாத்திரம் எங்கே
என்றெல்லாம் பிள்ளைகள் கேட்கையில்
தடித்த குவளையிருந்த தட்டில்
மேலாகவோ கீழாகவோ
வலது புறமாகவோ இடதாகவோ
இப்போதும் நான் அடையாளம் சொல்கிறேன்.
குழந்தைகளுக்கும் புரிந்துவிடுகிறது.
(அது நொறுங்கியதை அவர்களும் கண்டிருந்தனர்)
யாருக்கும் தேவையற்று
ஒரேயிடத்திலிருந்த
அந்தக் கண்ணாடிக் குவளையைச் சுற்றியே
அடுக்களை அலமாரி எங்களுக்குள் உருவேறியிருந்தது
எப்படியென அதிசயிக்கிறேன்.
மெல்ல என்னைத் தீண்டுகிறது
கோடையும் குளிருமற்ற
ஏதோ ஒன்று.
அப்பா இறந்த பகல்பொழுது திரும்பவும் வருகிறது.
வெளியே பெருமழை!
கிழிந்த பச்சையிலைகளும் மஞ்சள் இதழ்களுமுள்ள
கண்ணாடித் துண்டுகளை அடித்துச் செல்கிறது வெள்ளம்.
எனக்கு இந்தக் கார்காலத்திலும் கடுந்தாகமெடுக்கிறது.
மோர் தாகம்.
ஒருவரின் கவனத்திற்கும்
சாத்தியமேயில்லாத அந்தத்
தடித்த கண்ணாடிக் குவளையைத் தேடி
கடைகடையாய் ஏறி இறங்குகிறேன்.