ஒரு கணத்தின் நினைவு
சிந்திக்கும் மூன்றாம் கண்ணின் முன்பாக
ஒரு முக்காலி மீது உறைந்திருக்கின்றன
என் வாழ்க்கையின் துணுக்குகள்
நான் கற்பனை செய்கிறேன்
என்னை
அந்தக் கருப்பு நிறக் காமிராவில்
யோசித்துக்கொண்டே
மூன்றில் ஒரு பங்கு
இருக்க வேண்டும் நான்
ஃப்ரேமின் ஓரத்தில் அல்ல
நடுவில்
இது எனக்குக் கற்பிக்கப்பட்டது
ஒருமுறை
போட்டோகிராபியின்
ஒரு செயற்கூடத்தில்
இப்போது அதை சட்டமிடுகின்றன காயங்கள்
என் நாற்புறத்தும்
ஒரு நதியும் சில சூழ்ச்சிகளும்.
அவன் ஃபில்டர் பயன்படுத்துகிறானா என்ன?
சில நிழல்களை
அந்தக் காயங்களை
என் கழுத்தில் இருப்பதை
மறைத்துவிட?
பிலிம், போலோரைட், டிஜிட்டல்
இவை இந்த உகத்தின் தந்திரங்கள்
நிறைய காத்திருக்க வேண்டியதில்லை
க்ளாப், க்ளாப்,
கண்ணாடி, ஸ்லேப்
என் கண்கள் அசருகின்றன
அவன் தோள்கள் என்
கழுத்தைச் சுற்றி
ஊஞ்சலாடுகின்றன
நாற்புறமும் வ்யூபைண்டரில்
நான் இருக்கிறேன்
ஃபிரேமுக்கு வெளியே.
பனிமனிதன்
ஸ்ரீநகர் தரித்துக்கொண்டிருக்கிறது
இருண்ட கர்ஃப்யூவை
ஒரு விஸ்தாரமான
வெண் பரப்பின் மீது
பையன்கள் மாற்றிக்கொண்டிருக்கின்றனர்
கல்லை தேவதையாக
அவற்றை ஒரு
வரலாற்றுப் பாதையில்
எறிந்துகொண்டே
-பூம்
ஒரு துப்பாக்கி உறுமுகிறது
அப்போது உலகம்
குழந்தைகளற்று ஆகிவிடுகிறது
மறுபடியும்
நான் பார்க்கிறேன்
ஜன்னல் வழியாக வெளியே
ஒரு பனிமனிதன்
தன் கரிய கண்களினால்
உற்றுப் பார்க்கிறான் என்னை
சூரியன் உருக்கிவிட்டது
அவனுடைய தோள்களை
வெட்டிவிட்டது அவனுடைய
கைகளை
ஆனால்,
கண்கள் இருக்கின்றன
இன்னமும் ஜீவனோடு
ஒரு உடைந்த கண்ணாடித்துண்டு
பெண்களைத் தனித்தாக்குகிறது
தேவதூதர்களிடமிருந்து
கர்ஃப்யூவின்
தளர் காலங்களில்
அனைத்து ராணுவ வீரர்களும்
செல்கின்றனர் தங்கள் பேரக்ஸிற்கு
அம்மா ஹவுஸ்போட்டிலிருந்து
ஓடுகிறாள் பாலுக்காகவும் ரொட்டிக்காகவும்
அந்த சமயத்தில் நான்
ஓடுகிறேன் பனிமனிதனை
நோக்கி
நான் உணர்கிறேன் அவனின்
சுமையை – கனத்தை
என் மனதினுள் பைத்தியம்
நான் முத்தமிடுகிறேன்
அவனின் காரட் நிற உதடுகளை
அதில் நிகழவில்லை எந்த ஒரு
அசைவும்
உடல் மறைத்த ஒரு அலறல்
நாகராஜனைப் போல
உருகிப் போகிறான்
பனிமனிதன்
வருடக்கணக்கில்
நான் உடன்கட்டை ஏறி தலைகீழாக
தொங்குகிறேன்
மேலும் அவனை நான்
அடைந்தபோது
சாம்பலாக மாறிக்கொண்டிருந்த நான்
அழுதுகொண்டிருந்தேன்
அவன் எறிந்தான் என்னை
வெந்நீர் ஊற்றின் மீது
நான் யார்வான் காட்டில்
வளர்க்கப்பட்டவள்
ஒரு பறவையைப் போல
மரத்தின் மீது நான்
பாடினேன், பிரிவின் பாடலை
ஹப்பா காதுன் கூட
பாடமுடியும்
இந்தக் காட்டின் பாடலை
தங்கு தடையற்ற
காதலின் ஊமை வலியை
ஏனெனில்,
நூற்றாண்டுகளாக
உறைந்து கிடக்கிறது
இதன் பொருளணி
இப்போது வீழ்ந்துகொண்டிருக்கின்றன
அவை
ஒரு பரந்த துளையின் வழியாகச்
சென்றுவிட்டன
என் கவிதைகளோடு கூட என்னை.