நான் அண்டை வெட்டுவேன்
களை பறிப்பேன் மரமேறுவேன்
மரமறுப்பேன் குழிவெட்டுவேன்
தென்னம்பிள்ளைகளுக்குத் தண்ணீ கட்டுவேன்
நிலாக்காய்கையில் பன்றியாகி
நிலம் மறைத்த கிழங்கு பிறாண்டுவேன்
அதெல்லாம் பிறருக்குத்தான்
யாராவது செத்தால் குழி வெட்டுவேன்
என் இரு கைகளையும்
எனக்காக என் வாழ்வில்
நான் பயன்படுத்தவேயில்லை என்ற வருத்தம் இங்கே
தகிரியமாகச் சொல்லும் விதமாக
என் ஆண்டை செத்துப் போனார்
நான் அவருக்குக் குழி வெட்டப் பணிக்கப்பட்டேன்
கொஞ்சம் துணிச்சலாகக் கூட
ஓர் ஆள் வேணும் என்டேன்
கடப்பாறையால் குத்த ஒருவனும்
மண்வெட்டியால் வாறிப்போட ஒருவனுமாக…
மூடிக்கிட்டுப் போய் நீயே குத்து
நீயே பொறுமையா வாறிப்போடு
ஒருத்தன் குத்த ஒருத்தன் வாறிப்போட
நடுவுல நிக்கற நேரம் ஊம்பப் போறீங்களா
போடா போய் ஆழமா நீயே வெட்டு
இது அப்பன் சொன்னது என்றான்கள்
செரியென ஆழ ஆழ மிக ஆழ
அந்த ஆழம்
திரும்பி வரமாட்டான் எனும் திருப்தி அல்லாருக்கும்
வெட்டும் போது
கிடைத்த கறையான்களின்
வெள்ளிக் கூட்டை நுணுக்கி
ஆண்டையின் கண்ணில் பொடி தூவலாம்
எனத் தூவினால்
செத்த பிணத்தின் மூடிய தாயோளி
நொல்லைக் கண்ணுக்கு
ஜரிகையாகி விட்டது போங்கள்…
ஐயா எசமான்களே…
குமார் அம்பாயிரம்