பாபாசாகேப் அமர் ரஹே

- சிவராஜ் பாரதி

அதிகாலையிலேயே தட்டச்சுப் பணிகளைத் தொடங்கிவிட்டார் நானக் சந்த் ராட்டு. புத்தகம் ஒன்றோடு சில கடிதங்களையும் தட்டச்சு செய்ய வேண்டியிருந்ததால் வேகமாக இயங்கிக்கொண்டிருந்தார். புத்தகத்தின் கருத்துகளில் ஏற்படும் சந்தேகங்களையும் எழுதிவைத்துக்கொண்டார். “என்ன சீக்கிரம் எழுந்துட்ட,” என்றபடி மேசைமீது தேநீரை வைத்தார் தேவி தயாள். “நிறைய டைப் பண்ணனும், ஆஃபிசுக்கும் போகனும்ல. அதான்… சரி பாபா எழுந்துட்டாரா?”

“இன்னும் இல்ல, இப்பத்தான் நியூஸ் பேப்பர டேபிள் மேல வச்சிட்டு வரேன். நைட்டு எப்போ தூங்குனீங்க, ஒண்ணா ரெண்டா?”

“கிட்டத்தட்ட ரெண்டாயிடுச்சு. அதுக்கு மேல அவருக்கும் முடியல.” தேநீரைப் பருகியபடி சொன்னார் ராட்டு.

“உடம்பு மோசமாயிட்டே போகுது. ஆனா இவரு இன்னமும் இப்படியே இருக்காரு,” தேவி தயாளின் குரலில் வருத்தம் தெரிந்தது. சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு “அது அவருக்கும் தெரிஞ்சிருக்கு, அதனாலதான் இந்தப் புத்தகங்கள்லாம் சீக்கிரம் வெளிவரணும்னு நினைக்கறாரு. போன மாசம் நேபால்ல…” என ராட்டு சொல்லிக்கொண்டிருந்தபோது அறையினுள்ளிருந்து மணி சத்தம் கேட்டது. “சாகேப்…” என்று இருவரும் விரைந்தனர்.
———-

வெளியே எவ்வளவு வெயில் அடித்தாலும் இந்த அறை மட்டும் எப்போதும் இருட்டாகத்தான் இருக்கும் போல. பூட்டப்பட்ட புத்தக அலமாரிகளும் மிரட்சியானதொரு தோற்றத்தைத் தந்துவிடுகிறது. அலமாரிகளின் சாவியைக் கேட்டால் தொலைந்துவிட்டதென்றே சொல்கிறார்கள். அதெப்படி இந்த அலமாரிகளின் சாவிகள் மட்டும் தொலைந்துபோகும். ஒருவேளை தொலைந்துபோன சாவிகள் கிடைத்தால் அறைக்குள் வெளிச்சம் வருமோ என்னமோ! அதெல்லாம் நமக்கெதற்கு, வந்த வேலையைப் பார்ப்போம். இம்முறை எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும்.

———-

தேவி தயாளின் தோளைப்பிடித்தபடி கழிவறையிலிருந்து வந்த டாக்டர், படுக்கையில் அமர்ந்து செய்தித்தாள்கைளைப் படிக்கத் தொடங்கினார். ராட்டு படுக்கையைச் சுற்றியிருந்த மேசைகளில் அவருக்குத் தேவையான நூல்களையும் தட்டச்சுப் பிரதிகளையும் வைத்துவிட்டு தான் அலுவலகத்துக்கு கிளம்புவதாகச் சொன்னார்.

“மணி என்ன? நான் எப்போ எழுந்தேன்?” டாக்டரின் குரலில் சிறிய பதற்றம் இருந்தது.

“மணி ஒன்பதரை சாகேப், நீங்க எட்டே முக்காலுக்கு எழுந்தீங்க”

சில நொடிகள் எதையோ வெறித்துப் பார்த்தவர், ராட்டு அழைத்ததும் இயல்புநிலைக்குத் திரும்பி “சரி சரி, நீ கிளம்பு” என்றார். தொடர்ந்து செய்தித்தாள் படித்துக்கொண்டிருக்கும்போது மீண்டும் எதையோ வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தார். சுதாமா சாப்பிட அழைத்தபோது “எனக்கு ஒரு ரொட்டியும் தேநீரும் போதும்” என்று சொல்லிவிட்டு, தேவியின் தோளைப் பிடித்தபடி வராந்தாவுக்கு வந்தார். யாருமில்லாத அந்த வராந்தாவும் எதிரிலிருந்த புல் தரையும் டாக்டரை மேலும் தனிமைப்படுத்தியது; உடல் பலவீனத்தை அதிகரித்தது. நடைபயிற்சி போக மனமில்லாமல் ஹாலுக்கு வந்து சோஃபாவில் அமர்ந்தார்.

———

இம்முறையும் ஏதும் கிடைக்காவிட்டால் இத்தனை ஆண்டுகளாக மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் கற்றுக்கொண்ட வித்தைகளும் வீணென்றே பேசுவார்கள். முடிந்தவரை மூளையைக் கசக்கிப் பிழிந்துவிட்டேன் எதுவும் கடைத்தபாடில்லை. இனிவரும் பக்கங்களில் ஏதாவது இருந்தால்தான் உண்டு. இருட்டில் யாரோ நம்மை பார்த்துக்கொண்டேயிருப்பது போலவும் தோன்றுகிறது. இருக்கிற பதற்றம் போதாதென்று இந்த பயம் வேறு…

———-

புத்தரைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தார் டாக்டர். எவ்வளவு முயன்றாலும் புத்தர் இந்த மக்களைவிட்டு தள்ளியே இருப்பதாக அவருக்குத் தோன்றியது. கோசாம்பி, நரசு போன்றோரின் கருத்துகள் போதுமானதென்றாலும் அவற்றைத் தாண்டிய பிம்பமொன்று தேவைப்படுவதாகக் கருதினார். இந்த வெற்றிடத்தை நிறைவுசெய்ய இன்னும் எத்தனை காலம் ஆகுமென்று தெரியாமல் அப்படியே வெறுமையாக பார்த்துக்கொண்டிருந்தார். சில நினைவுகளை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. நூல்களை மாற்றி மாற்றி படித்தாலும், எழுதுவதும் படிப்பதுமாக இயங்கினாலும் அந்நினைவுகள் அவரது சிந்தனையைப் பாதித்தன. கண்ணில் ஏதோவொரு உருவம் நிழலாட, நரம்புகள் அதை மூளைக்குத் தாமதமாக எடுத்துச்சென்றதால் அது மாவ்லங்கர் என புரிய சில நொடிகள் ஆனது. “ஓ… எப்போ வந்தீங்க” என்று வியப்பாகக் கேட்டார் டாக்டர். புன்னகைத்த மாவ்லங்கர், “இப்போ உடம்பு எப்படியிருக்கு” எனக் கேட்டார். “மோசம்னுதான் சொல்லத் தோணுது. முக்கியமா கண் பார்வை. படிக்க முடியாம போயிடுச்சுன்னா அதுக்கு மேல ஒண்ணுமேயில்ல. இங்கயே இப்படியே கல்லறைய கட்டிடுங்க” விளையாட்டாக சொன்னாலும் அவர் கண்களிலிருந்த சோர்வு மாவ்லங்கருக்குப் புரியாமலில்லை.

———-

சிறு வயதில் பாட்டியிடம் கற்றுக்கொண்டது. அவர் அளவுக்கு செய்ய முடியாவிட்டாலும் ஓரளவுக்கு வருகிறது. பாட்டி முழுக்க முழுக்க தாந்த்ரீக முறையில் செய்வார், நான் அறிவியல் விதிகளையும் இணைத்துக்கொள்கிறேன். ஒளியை ஓரளவு கையாள முடிகிறது, ஆனால் எவ்வளவு முயன்றாலும் ஒலி மட்டும் சிக்குவதில்லை. எழுத்துகளில் மறைந்திருக்கும் வடிவங்களை விட, அவற்றில் மறைந்திருக்கும் சத்தம் வலிமையானதாம். என்ன செய்ய, இந்த எழுத்துகளுள் ஒளியைச் செலுத்தி உள்ளே மறைந்திருக்கும் எழுத்துகளை மட்டும்தான் என்னால் கண்டிறிய முடிகிறது.

———-

மாலை ராட்டு உள்ளே நுழைந்தவுடன் தேவி தயாள் அவரை சமையலறைக்கு ரகசியமாக அழைத்து “பாபாசாகேப் ரொம்ப கோவத்துல இருக்காரு. அம்மாவ திட்டிட்டாரு, மதியம் சாப்பிடக்கூட இல்ல,” மெல்லிய குரலில் சொன்னார். “அம்மா எங்க,” என்று ராட்டு கேட்கும்போதே டாக்டரின் அறையிலிருந்து மணிச் சத்தம் கேட்டது. ராட்டுவைப் பார்த்ததும் “வந்துட்டியா,” என்று சில நொடிகள் அவரையே பார்த்தவர், “சரி, இந்த பேப்பரையெல்லாம் எடுத்துக்கோ, நிறைய திருத்தியிருக்கேன். ஏதாவது சந்தேகம் இருந்தா கேளு” அருகிலிருந்த மேசையைக் காட்டி சொன்னார். பின் தேவியைப் பார்த்து “வந்துட்டாங்களா” என கேட்க, ‘இல்லை’யென்று தேவி தயாள் தலையசைத்ததும் அவரது முகம் இறுக்கமானது. அதற்குமேல் அங்கே நிற்க வேண்டாமென்று இருவரும் தங்கள் வேலைகளைப் பார்க்கச் சென்றனர். அடுத்த சில நிமிடங்களில் சூடான தேநீரை டாக்டருக்குக் கொடுத்தார் தேவி. ராட்டு தட்டச்சு செய்துகொண்டிருக்கும்போது சவீதாவும் மாவ்லங்கரும் வந்தனர். நேராக ராட்டு அறைக்கு வந்த சவீதா, எதிரேயிருந்த அறையைப் பார்த்தவாறே “எப்படி இருக்காரு” என்று மெதுவாகக் கேட்டார். “கோவமாத்தான் இருக்காரு, நீங்க எங்க போனீங்க” என்று ராட்டு கேட்டதற்கு, “மெடிசின்ஸ் வாங்க போயிருந்தோம். மதியம் நடந்ததுதான் உனக்குத் தெரியாதே… சரி அவர சமாதானப்படுத்து” என்று சொல்லிவிட்டுச் சென்றார் சவீதா. ராட்டு எழுந்து வெளியே வந்தபோது, வேலையாட்கள் இரண்டு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை டாக்டரின் அறைக்குள் கொண்டு சென்றனர்.

———-

எத்தனை முறை தேடினாலும் சின்ன இடைவெளி கூட தெரியவில்லையே. நம்மிடமுள்ள கதை உண்மைதானா? உண்மையாக இல்லாவிட்டாலும் அது தொடர்பான சின்ன பொறி கிடைத்தாலும் உள்ளே நுழைந்துவிடலாமே. பாட்டி இருந்திருந்தால் இந்நேரம் நுழைந்திருப்பார். நாடோடி பாடல் ஒன்றை மட்டுமே வைத்து ஷாஜகான் வரலாற்றுக்குள் நுழைந்து, ஷாஜகான் உடலை தாஜ் மஹாலுக்குக் கொண்டு செல்லும் வழியில் ‘நான் இருக்கும் இடத்தில் இவன் இருக்கக் கூடாது என்று அசரீரி கேட்டதும் யமுனை ஆற்றில் வௌ;ளம் பெருக்கெடுத்து ஷாஜகானின் உடலை இழுத்துச் சென்றுவிட்டதாம், தாஜ்மஹாலில் இப்போது மும்தாஜ் உடல் மட்டுமே இருப்பதாகச் சொன்னார். ஆனால் எப்படி உள்ளே நுழைந்தாரென்றுதான் தெரியவில்லை. அதை மட்டும் பாட்டி சொல்லியிருந்தால்…

———-

புத்தரின் சிலைமுன் தண்ணீர் நிறைந்த செம்பு கிண்ணத்தில் வௌ;ளைத் தாமரையைச் சுற்றி பலவகை பூக்கள் வைக்கப்பட்டிருந்தது. கிண்ணத்தைச் சுற்றி நான்கு சிறு விளக்குகள் ஒளிவீசிக்கொண்டிருந்தன. டாக்டரால் முழுமையாக தியானத்தில் ஈடுபட முடியவில்லை. ஏதோவொன்று அவரை உறுத்திக்கொண்டேயிருந்தது; மன உளைச்சலையும் தந்தது.

விபத்துக்கள் எல்லாம் தொலைந்து போகட்டும்.

நோய்கள் எல்லாம் அழிந்து போகட்டும்.

எமக்கு எந்தவித அபாயமும் நேராமலிருக்கட்டும்.

நாம் சுகமாகவும் நீண்ட ஆயுளுடனும் இருக்க அருள் கிடைக்கட்டும்.

———-

இன்னும் சில பக்கங்கள்தான், எல்லாம் முடிந்துவிட்டது. இந்த முயற்சியும் வீணாகப் போகிறது. அம்மா சொன்னது பொய்யா? இது முடியாதா! அழத்தான் தோன்றுகிறது….

———-

ராட்டு சில தாள்களுடன் வருவதைப் பார்த்ததும் சற்று உற்சாகமான டாக்டர், அவர் ஏதோ கேள்வி கேக்கப் போகிறாரென்பதை உணர்ந்து, தான் சொல்ல நினைத்ததை விட்டுவிட்டார். ‘புத்தரும் கார்ல் மார்க்ஸும்’ நூலிலிருந்து ராட்டு கேட்ட கேள்வி அவரை மேலும் உற்சாகப்படுத்தியது. “அர்ரே…! ஒன்ன நீ புரிஞ்சுக்கனும். அதீத சுதந்திரம் சமத்துவத்துக்கு எதிரானது. அதப்போல கச்சிதமான சமத்துவம் சுதந்திரத்த பாதிக்கும். ஏன்னா சமபங்கு இல்லாத சமத்துவத்தால எந்த பயனுமேயில்ல. இந்த ரெண்டையும் சமநிலையில வச்சுக்க சட்டம் மட்டும் பத்தாது, சகோதரத்துவமும் வேணும். புரியுதா?” என்று ராட்டுவை ஆர்வமாகப் பார்த்தார்.

———-

கதைகள் வழியாக வரலாற்றுக்குள் நுழைவது பாட்டிக்கு எளிதாக இருந்தது. ஒவ்வொரு எழுத்தும் பல்வேறு கதைகளை தன்னுள் மறைத்துவைத்திருப்பதாக பாட்டி சொல்வார். எழுத்தாளர் மறைக்க விரும்பிய அத்தனை கதைகளையும் எழுத்துகளும் அதன் ஒலிகளும் சுமப்பதாக அவர் நம்பினார். அப்படித்தான், அசோக் சொன்ன பொய்க் கதையை நம்பி இந்த வரலாற்றில் நுழைய முயன்று ஏமாந்துபோனேன். பாட்டியின் தாந்த்ரீகத்திற்கு எந்த ஆதாரமும் தேவையில்லை; மிகச்சரியான செயற்பாடுகள் மட்டும் போதும். என்னுடைய அறிவியலுக்கோ ஆதாரம் தேவை.

———-

அடர்ந்த காட்டின் நடுவே சிறு கல் மண்டபமொன்றில் தனக்குப் பிடித்த வெந்நிற உடையில் உற்சாகமாக அமர்ந்திருந்தார் டாக்டர். மண்டபத்தின் தரையில் மஞ்சள் நிற பூக்களும் இலைகளும் சிதறி கிடக்க, மண்டபத்துக்கு மேலே வட்ட வடிவில் வானவெளிக்கு இடம்விட்டு வளர்ந்திருந்தன மரங்கள். யாரையோ எதிர்பார்த்து அமர்ந்திருந்த டாக்டரின் முகத்தில் சட்டென்று மலர்ச்சி. பூலே, கபீர் ஆகியோர் அடுத்தடுத்து வந்து கல் மண்டபத்தில் அவருடன் இணைந்துகொண்டனர். அச்சமயம் முகமது பைகம்பரை அங்கு பார்த்ததும் டாக்டர் தடுமாறினார், அவரால் இயல்பாக இருக்கமுடியவில்லை. ‘சாகேப்’ என்று குரல் கேட்டு திரும்பிப் பார்த்தார். யாருமேயில்லை. ‘பாபாசாகேப்’ என்று சற்று உரத்த குரல் கேட்டு மீண்டும் திரும்பிப் பார்க்கவும் கல் மண்டபம் நிலைகுலையத் தொடங்கியது. சட்டென்று கண் திறந்து பார்த்தபோது ராட்டு அவர் தோளைப் பிடித்தபடி எதிரே பார்த்தார். சமண மதத் தலைவர்கள் அவரைத் தயக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். “கொஞ்சம் தண்ணி கொடு” என்று ராட்டுவைக் கேட்டார். ராட்டு கொண்டுவந்ததும், “அவங்களுக்குக் குடுத்தியா” என்று கேட்டதற்கு “குடுத்துட்டேன் சாகேப்” என்று ராட்டு சொன்னதை அவர்களும் ஆமோதித்தார்கள். பிறகு ராட்டு அங்கிருந்து விலகவும் அவர்கள் டாக்டருடன் உரையாடினார்கள். நூலொன்றை பரிசாகக் கொடுத்து, அடுத்தநாள் அவர்களின் நிகழ்ச்சிக்கு வரவேண்டுமென்ற கோரிக்கையுடன் அவர்கள் கிளம்பினர்.

———-

குடும்ப விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கையில் அம்மா அந்த கதையைச் சொன்னது நன்றாக நினைவிலிருக்கிறது. அப்படியானால் நிச்சயம் நம் குடும்பம் சார்ந்த ஏதோவொரு பொருள் இரண்டு வரலாற்றையும் இணைக்கும் பாலமாக இருக்க வேண்டும். அதைத்தான் இவ்வளவு நேரமும் தேடிக்கொண்டிருக்கிறேன், கிடைக்க மாட்டேன் என்கிறது. யாரவது பார்த்தால் திகைக்கக்கூடும், எழுத்துகளை எழுப்பி அவற்றை உலுக்கி உலுக்கி ஏதாவது மறைந்திருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

———-

நரம்புகளில் வலி பாய்ந்து உடல் நடுங்கத் தொடங்கியது; வியர்வையும் இதயத் துடிப்பும் அதிகரித்தது. நல்லவேளையாக மூச்சிரைக்கவில்லை. நடுங்கும் குரலில் ராட்டுவை அழைத்தார் டாக்டர். அவர் சோர்ந்திருப்பதைப் பார்த்ததும் வேகமாக வந்து பாதங்களை நன்றாக தேய்த்துவிட்டு பின் கால்களைப் பிடித்துவிட்டார் ராட்டு. வலி கொஞ்சம் அடங்கியது; நடுக்கம் குறைந்து முகம் இயல்பானது. மூச்சை நன்றாக இழுத்துவிட்டார். ராட்டுவின் தலைமீது கை வைத்து, “நல்லாயிருக்கு ராட்டு, அருமை, அப்படியே தலைக்கு எண்ணெ தேச்சு விடுறியா” என்றார். “இதோ வரேன் சாகேப்” என்று எழுந்துபோய் எண்ணெய் எடுத்துவந்து தலையில் தேய்த்துவிட்டார் ராட்டு. இதமாக அதை அனுபவித்தவாறு,

“ராட்டு உன்கிட்ட ஒன்னு சொல்லனும்னு நினச்சேன்.”

“சொல்லுங்க சாகேப்”

“இப்போல்லாம் வெள்ளைக்குதிர ஒன்னு என் கண்ணுக்குள்ள ஓடிகிட்டேயிருக்கு.”

“குதிரையா? வௌ;ள யானதான் கனவுல வந்தா அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க”

“நான் நல்லா தூங்கி ரொம்ப நாளாகுது ராட்டு. இந்த வலி என்ன தூங்க விட மாட்டேங்குது. இப்பல்லாம் வலிய மறக்கத்தான் படிக்கறேன், எழுதறேன். அதனால கனவெல்லாம் இல்ல. பேசிட்டே இருக்கும்போது திடீர்னு வௌ;ளக்குதிர கண் முன்னாடி வரும்…. சரி… மறுபடியும் இந்த கால கொஞ்சம் புடிச்சுவிடுறியா?”

———-

முடிந்தது, இனி கண்டுபிடிப்பதற்கென்று எதுவும் இல்லை. மிகவும் நம்பியிருந்தேன், சரி ஏமாற்றம் புதிதல்ல. அதிக பயிற்சியுடன் அடுத்த முறை முயன்று பார்க்க வேண்டும். ஏனோ திடீரென்று இந்த அறை குளிர்கிறது. கைகளிலும் ஒளி குறைந்துவிட்டது; என் அவநம்பிக்கை காரணமாகயிருக்கலாம். சரி மூடிவிடலா…. ப்பா! யாரோ கையைப் பிடித்து இழுத்தது போல் தோள்பட்டையில் வலிக்கிறது. ஏதோ ஒரு வேகத்தில் படித்துக்கொண்டிருந்த பக்கத்தில் ஓங்கி தட்டியிருக்கிறேன். எப்படியென்று புரியவில்லை. இதோ, சில எழுத்துகள் மேசையில் சிதறி கிடக்கின்றன. அதில் ஒன்று மட்டும்…

———-

சோஃபாவில் தாளம் போட்டவாறு மெல்லிய குரலில் ‘புத்தம் சரணம் கச்சாமி’ பாடலை டாக்டர் பாட, உடனே ரேடியோகிராமில் அந்தப் பாட்டை ஒலிக்கச் செய்தார் ராட்டு. உற்சாகத்தில் டாக்டரும் அதனுடன் இணைந்து பாடினார். இதைக் கேட்டு அங்கு வந்த தேவி தயாள், டாக்டரின் வயலினை எடுத்து பாட்டுக்கு இசையமைப்பது போல் பாவனை செய்ய, மேசையிலிருந்த தம்ளரை அவர் மீது வீசுவது போல் டாக்டர் கை ஓங்குவதைப் பார்த்து, உண்மையாகவே வீசுகிறாரென்று நினைத்து தேவி தடுமாறி கீழே விழ, வெடித்துச் சிரித்தார் டாக்டர். அவரது உற்சாகம் அனைவரையும் தொற்றிக்கொண்டது. அப்போது சுதாமா வந்து உணவு தயாரென்று சொன்னதும் ராட்டுவின் தோளைப் பற்றி எழுந்தார். உடலின் திடமான மேல்பாகத்திற்கு முரணாக மெலிந்துபோன கீழ் பாகத்தை நினைத்து எப்போதும் போல் வருத்தப்பட்டார் ராட்டு. சாப்பிட போகும்வழியில் புத்தக அலமாரியிலிருந்து ‘மூலதனம்’ நூலை எடுக்கச் சொன்ன டாக்டர், சட்டென்று இன்னொரு நூலைக் குறிப்பிட்டு அதையும் எடுக்கச் சொன்னார். பொன்னில் பொறிக்கப்பட்ட குர்ஆன் அது. நிச்சயம் அதை பற்றி மறந்திருப்பாரென்று நினைத்து “ஒரு நவாப் வீட்டுல இருந்து வாங்குனது,” என்று சொன்ன ராட்டுவை ஏறயிறங்கப் பார்த்து “எட்டாயிரம் ரூபாய்க்கு வாங்குனேன்” என்றார் டாக்டர். ராட்டு தலையைக் குனிந்துகொண்டார்.

———-

ஓடு ஓடு… யுரேகா… ஓடு… என்ன இங்கே பணியாளர்கள் ஒருவரையும் காணவில்லை… அதுபற்றி நமக்கென்ன… ஓடு, ஓடு… சாலையில் கூட யாருமில்லையே. விதான சபா கட்டடம் மட்டும்தான் தெளிவாக தெரிகிறது. திரும்பிப் பார்க்கலாம், அற்புதம்!… மகா பரிநிர்வாண தலம் காற்றில் அசையும் புத்தகம் போல் இருக்கிறது. இறைவனுக்கு நன்றி. ஓடு, ஓடு… இதோ வருகிறேன் பாட்டி.

சைக்கிளை வெளியில் தள்ளிக்கொண்டு வந்த ராட்டுவை நோக்கி ஓடிவந்த சுதாமா, டாக்டர் அழைப்பதாகக் கூறினார்.

“ராட்டு, ‘புத்தரும் தம்மமும்’ முன்னுரைய எடுத்துட்டு வா…. அப்படியே… ஆத்ரேவுக்கும் ஜோஷிக்கும் எழுதுன லெட்டர்ஸூம் எடுத்துட்டு வா”
அவர் கேட்ட அனைத்தையும் கொண்டுவந்து கொடுத்தார் ராட்டு.

“வேற ஏதும் வேணுமா சாகேப்”

“…….”

“சாகேப்……”

“அன்னிக்கு பகவான் தாஸ் வந்துருந்தப்போ நீயும்தான இருந்த….”

“ஆமா சாகேப்”

சில நொடிகள் யோசனைக்குப் பிறகு

“நான் இன்னும் வேற என்ன பண்ணனும்னு நினைக்கற?”

“என்னை கேட்டா… அசோகர் செஞ்ச மாரி பண்பாட்டு மாற்றங்கள் செய்யணும்னு சொல்வேன். கலை, இலக்கியம்னு பெரிய வேலயிருக்கு சாகேப்,”

“என்னால முடிஞ்சத பண்ணிருக்கேன். எகிப்துலயிருந்து யூதர்கள மீட்டுட்டு வந்த மோசே மாரி நம்ம மக்கள இவ்ளோ தூரம் கூட்டிட்டு வந்துட்டேன். ஆனா மோசேக்கு ஹாரூன் இருந்த மாரி எனக்கு யாரும் இல்லையே. எல்லாரும் ஏமாத்திட்டாங்க… இந்த வண்டி இன்னும் பத்து வருஷம் ஓடுச்சுன்னா…….”

“கவலப்படாதீங்க சாகேப், தம்மம் தோக்காது,”

“ம்ம்.. இன்னிக்கு வௌ;ள குதிர வரல ராட்டு, இனியும் வராதுன்னு நினைக்கறேன்,”

“சாகேப், நீங்க இன்னொன்னும் செய்யனும்..”

“என்னது?”

“உங்க சுயசரிதைய எழுதனும்,”

———-

‘நம்ம குடும்பத்திலேயே உங்க பாட்டிதான் மொதமுறையா மருத்துவர் ஆனாங்க. ஆங்கில முறையையும் பாரம்பரிய முறையையும் இணைச்சு புதுப்புது மருந்துங்கள உருவாக்குற ஆர்வம் அவங்களுக்கு இருந்துச்சு. ஒருநாள் அம்பேத்கர் எங்க பூர்விக வீட்டுக்கு விருந்தாளியா வந்தாரு. நவாப் வீட்டு விருந்துங்கறதால இன்னும் பல முக்கிய தலைவர்களும் வந்திருந்தாங்க. அப்போ எங்க தாத்தா, ‘பாபாசாகேப் இஸ்லாத்துக்கு வந்தா, என்னோட பொண்ணு மெஹருன்னிசாவ அவருக்கு நிக்காஹ் பண்ணிவைக்கறேன்,’ன்னு அறிவிச்சாரு. அப்போயிருந்து அம்மா அம்பேத்கரைக் காதலிக்க ஆரம்பிச்சாங்க. அம்பேத்கர் சவீதாவைக் கல்யாணம் செஞ்ச பிறகும் அவங்களோட காதல் மாறல. அம்பேத்கர் மதம் மாறுன சமயத்துல அவரோட உடல்நிலையைப் பற்றி கேள்விப்பட்டதும் அவருக்காகவே புது மருந்து ஒன்னு உருவாக்குனாங்க. அதோடு நம்ம நம்பிக்கைப்படி இறைவனோட பேர தினம் மூவாயிரம் முறை ஓதி கஸ்தூரியிலும் பன்னீரிலும் எழுதிவச்சிருந்தாங்க,’ அம்மா சொன்ன அத்தனையும் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. அம்பேத்கர் மறைந்த சில நாட்களில் பாட்டியும் இறந்ததாக அம்மா சொன்னார். சிதலமடைந்த பழைய தாள் ஒன்றை பாட்டியின் மரப்பெட்டியில் பார்த்திருக்கிறேன், இறைவன் பெயரை கஸ்தூரியிலும் பன்னீரிலும் எழுதி வைத்திருந்த தாள், அதுவாகத்தான் இருக்க வேண்டும்.

———

‘சல் கபீர் டேரா பவ் சாகர் தேரா…’ கபீர் பாடலை முணுமுணுத்துக்கொண்டே ஆத்ரேவுக்கு எழுதின கடிதத்தைத் திருத்திக்கொண்டிருந்தார் டாக்டர். சுதாமா ஒரு தட்டில் காபியையும் சில பண்டங்களையும் கொண்டுவந்து மேசையில் வைத்துவிட்டு அவரைப் பார்த்தபடி நின்றார்.

“என்ன சுதாமா, இன்னிக்கும் செகண்ட் ஷோ சினிமாவுக்குப் போனுமா?”

“இல்ல சாகேப், அது…”

“சீக்கிரம் சொல்லு,”

“சாகேப், உங்கள ஒன்னு கேக்கலாமா?”

திருத்திக்கொண்டிருந்ததை கீழே வைத்துவிட்டு,

“தாராளமா கேளு,”

“நீங்க பாட்டுக்கு மதம் மாறிட்டாங்க, இதனால மட்டும் எல்லாம் மாறிடும்னு நம்புறீங்களா? மதம் மாறினாலும் நம்ம ஜாதிய அவனுங்க மறக்க மாட்டானுங்களே,”

“இந்த மாரி கேட்டதுக்கே உனக்கு நன்றி சொல்லனும் சுதாமா. நான் மதம் மாறலப்பா, நம்ம பூர்வ மதத்துக்குத் திரும்பியிருகுகேன். அப்புறம் நம்ம மக்களோட துன்பத்துக்குக் காரணம் இந்துக்களோட அயோக்கியத்தனம் மட்டுமில்ல. நம்மளோட குருட்டு விசுவாசமும்தான். நமக்குன்னு ஒரு வழி இருந்தா, அவங்களோட வழியில போக வேண்டியதில்ல இல்லயா! அத தான் நானும் பண்ணியிருக்கேன். முதல்ல விடுதலை முக்கியமப்பா, மாற்றத்துக்கு இன்னும் உழைக்கனும். சும்மா கிடச்சிடுமா!”

”கண்டிப்பா உழைப்பேன் சாகேப்…” உற்சாகமாக விளக்கமளித்த டாக்டருக்கு நன்றி சொல்லிவிட்டு சுதாமா விடைபெற்ற சில நிமிடங்கள் கழித்து சவீதா அறைவாசலில் நின்றார்.

“வா.. ஏன் அங்கயே நிக்கற?”

“கோபம் போயிடுச்சா?”

“மதியம் இருந்த மனநிலையில அப்படி பேசிட்டேன், மத்தபடி உன் மேல என்ன கோபம்,”

“சரி, இப்போ உடம்பு எப்படியிருக்கு?”

“ப்ரீத்திங் நார்மலாயிடுச்சு. மத்தபடி நோ இம்ப்ரூவ்மெண்ட்”

“பாடி கண்டிஷன் அப்படி… அப்புறம், பாட்டெல்லாம் பாடுறீங்க!”

“கூட ஆளுங்க இருக்கும்போது நல்லாயிருக்கு. அவங்களோட பேசிட்டிருக்கும்போது வலி பத்தின நெனப்பே இல்ல. தனியா இருக்கும்போதுதான்…..”

“சைக்காட்டிரிஸ்ட்ட போலாமா?”

“யோசிக்கலாம்… ம்ம்ம்…,”

“என்னாச்சு,”

“நாளைக்கே எனக்கு ஏதாவது ஒன்னு ஆயிடுச்சுன்னா.., உன்ன பத்தித்தான் கவலையா இருக்கு,”

“இப்போ எதுக்கு தேவயில்லாம இதெல்லாம் பேசிட்டிருக்கீங்க,”

“இல்ல சவீ, உன்ன துரோகின்னு கூட சொல்லுவாங்க. இவ்ளோ நாள் நல்லா பழகுனவங்களே சொல்லுவாங்க. நீ தைரியமா இருக்கனும்,”

“அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது, நடந்தாலும் புத்தர் என்ன வழிநடத்துவார்,”

டாக்டரின் மனநிலை அறிந்து பேச்சை மாற்ற நினைத்த சவீதா மேசையில் இருந்த குர்ஆன்னைக் கவனித்தார்,

“இது என்ன புதுசா இருக்கு?”

“ஒரு நவாப் வீட்டுல பரிசா குடுத்தாங்க. தங்கத்துல செஞ்சது, இவ்ளோ விலையுயுர்ந்த பொருள பரிசா வாங்கிக்க மனசு வரல, நியாயமான விலைய குடுத்து வாங்கிட்டேன். இன்னிக்குத்தான் என்னவோ படிச்சுப் பாக்கணும்னு தோணுச்சு. அப்புறம், நாளைக்கு ஒரு மீட்டிங்குக்கு போகனும். காலையில ஞாபகப்படுத்து…” கடிதத்தைத் திருத்திக்கொண்டிருந்தவர் சட்டென்று “இன்னிக்கு என்ன தேதி, நவம்பர்… முப்பதா…?”

“மை டியர் டாக்டர்…. இது டிசம்பர் அஞ்சு…”

———-

நிறம் மட்டும்தான் மாறியிருக்கிறது. மற்றபடி கஸ்தூரியின் மணமும், பன்னீரின் மணமும் இன்னும் வீசுகிறது. எல்லா புகழும் இறைவனுக்கே! ஓடு… ஓடு… பூட்டிவிட்டால் சர்வமும் நாசம். வேகம், வேகம்… இதோ வந்துவிட்டோம் பாட்டி. போகும் போது புத்தகம் போன்று இருந்த கட்டடம், இப்போது ரைஹால் (குர்ஆன் வைக்கப்படும் பலகை) போல இருப்பது எப்படி… இந்த ரைஹாலை எங்கோ பார்த்திருக்கிறேன்… அதோ இருள் சூழ்ந்திருந்த கட்டடத்தில் நாம் படித்துக்கொண்டிருந்த அறையில் மட்டும் ஒளி வீசுகிறது, எனக்கு முன்பே அங்கே சென்று விட்டாயா மெஹருன்னிஸா பேகம்! இறைவன் மிகப்பெரியவன். வேகமா ஓடு, ஆனால்… மெல்ல மெல்ல என்னை விட்டு நான் நீங்குவது போன்ற உணர்வு. ஆம் ஒரே சமயத்தில் எழுத்தாகவும் எழுத்தாளனாகவும் இருக்கிறேன். தாந்த்ரீகத்தின் மாய விளைவை அனுபவித்துக்கொண்டே வேடிக்கைப் பார்க்கிறேன். நான்காவது பரிமாணத்திலும் நான் இருப்பதாகத் தோன்றுகிறது. பொன்னிற தாளிலிருந்து எழுத்துகள் எழுந்து சுழல்கின்றன. இந்த இடமே பொன்னிறமாக ஒளிர்கிறது. படித்துக்கொண்டிருந்த அறையை நெருங்கிவிட்டேன், நினைத்தது போலவே நடக்கிறது. புத்தக அலமாரிகள் திறந்துகொண்டன. கீழே விழுந்து புத்தகங்களின் எழுத்துகளும் காற்றில் சுழல்கின்றன… என்னைச் சுற்றி எழுத்துகளின் புயல். எல்லாம் சுழன்று மிதந்து ஓய்ந்து அதனதன் உலகியல் வடிவங்கள் பெற்றபின் பொன்னொளி மறைய சில நிமடங்கள் ஆனது. வரலாற்றுக்குள் நுழைவது இப்படித்தான் இருக்குமா! அடுத்தடுத்த ஆச்சரியங்களால் நான் முற்றுமுணர்ந்த நிப்பாண நிலையை அடைந்துவிட்டேன். இறைவனுடைய பெயர் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இப்போது ஏதோ ஓர் அறை வாசலில் நிற்கிறேன், உள்ளே பேச்சுக் குரல்கள் கேட்கின்றன. சுவரில் மாட்டப்பட்டிருந்த நாட்காட்டியில் 05.12.1956 என்றிருந்தது. இறப்பதற்கு முன் பாட்டி உருவாக்கிய மருந்து, என் கையில்…

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!