ரயான் கூக்ளர் மார்வெல் ஸ்டூடியோவுக்குப் படம் இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையப்பமிடுகிறார். அது மார்வெல்லுக்கும் கூக்ளருக்கும் மறக்க முடியாத தினமாகிவிட்டது. இந்தத் தயாரிப்பு நிறுவனம் முதன்முறையாக இளம் இயக்குநர் மேல் நம்பிக்கை வைத்துப் பெருங் கதையைச் சொல்ல நினைத்தது. அது அந்தக் கதையின் மீதான நம்பிக்கை மட்டுமல்ல, கூக்ளர் அந்தக் கதையை மிகச்சரியாக, உணர்வுப்பூர்வமாகக் காட்டிவிடுவார் என்பதில் கொண்டிருந்த நம்பிக்கை.
படத்திற்கு ‘The Black Panther’ என்றே பெயர் வைத்தார்கள். பல சாதனைகளைப் படம் தொடங்கி வைத்தது. படத்தின் இயக்குநர் ரயான் கூக்ளரின் பெயர் என்றென்றைக்குமாய்ச் சாதனையாளராகப் பதிவு செய்யப்பட்டது. அப்படி இந்தத் திரைப்படம் செய்த சாதனையில் முக்கியமானது ஆப்பிரிக்க, அமெரிக்க இயக்குநர் இயக்கிய படங்களில் அதிக வசூலைப் பெற்றுத் தந்த படமாக இருந்தது என்பதுதான். இதனை அத்தனை முக்கியத்துவப் படுத்துவதற்குக் காரணம் உள்ளது.
திரைப்படம் தோன்றிய காலந்தொட்டுத் திரையில் கறுப்பின மக்கள் கூலிக்காரர்களாக, வீட்டுப் பணியாளர்களாக, அடிமைகளாகத் தொடர்ந்து காட்டப்பட்டு வந்தனர். அவர்களுக்கு வசனங்கள் கூடத் தரப்பட்டதில்லை. தரப்பட்ட வசனங்களும் கூட ‘வந்தேன் எஜமான்… சொல்லுங்க எஜமான்’; பாணி வசனங்களே. அல்லது அவர்களைச் சேரிகளில் வாழும் சுத்தமற்றவர்களாகவும் போதைப் பழக்கம் கொண்டவர்களாகவும், திருடர்களாகவுமே திரையில் கொண்டு வந்தார்கள். ஏனெனில் திரைப்படங்களை இயக்குவதும் தயாரிப்பதும் வெள்ளை இன மக்களாக இருந்ததினால், பார்வையாளர்களும் அவர்களேதான். தங்கள் வாழக்கைக்குத் தொடர்பில்லாத திரைப்படத்தைச் சொந்த மண்ணிலேயே பார்க்க வேண்டிய நிலை கறுப்பின மக்களுக்கு வெகு காலங்களாக இருந்தது.
கறுப்பின மக்கள் தங்களின் குரலை, வாழ்க்கையைத் திரையில் சொல்ல வேண்டுமெனில் முதலில் எவையெல்லாம் தேவைப்பட்டிருக்கும்., தயாரிப்பு நிறுவனம், அதன்பிறகு தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் இவர்கள் எல்லோரையும் ஒருங்கிணைத்த பின்னர் அவர்களுக்குத் தங்கள் படத்தினைப் பார்க்க பார்வையாளர்கள் வேண்டும் இல்லையா? வெள்ளை இன மக்கள் கறுப்பின மக்கள் இயக்கியப் படங்களைப் பார்க்க பல ஆண்டுகளாக விரும்பவில்லை. இப்பின்னணியில் ‘The Black Panther’ படத்தினை பொருத்திப் பார்த்தால், வசூலில் அது பெருமளவு வெற்றி பெற்றதைப் பெரும் சாதனையாகக் குறிப்பிட்டுக் கூறுவதின் நோக்கம் புரியும்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then