இந்திய நவீன ஓவியக் கலைவின் தந்தையாகக் கருதப்படும் மக்கபூல் பிடா ஹுசைன் அல்லது எம்.எஃப். ஹுசைனின் ஓவியங்கள் இந்தியர்களிடம் மட்டுமல்லாது உலக அளவில் பெரும் புகழ் கொண்டவை. அதனாலே அவர் இந்தியாவின் பிக்காஸோ என்றழைக்கப்பட்டார். காலனியத்துக்குப் பின்னரான இந்திய ஓவியக் கலையின் முதன்மையான கலைஞர்களில் ஒருவராக ஹுசைன் விளங்கினார். அடர்த்தியான வர்ணங்கள், திரவக் கோடுகள், பரிமாணமான வடிவங்களைக் கொண்டு வரையப்பட்ட அவரது ஓவியங்கள் இந்திய உருவங்களையும், சமகால கலையின் அழகியலையும் வெளிப்படுத்துபவையாக இருக்கின்றன.
ஹுசைன் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். ஹிந்தி திரைப்படங்களின் விளம்பர ஓவியங்களை வரைய ஆரம்பித்து, பின்பு முழுநேர ஓவியராக மாறினார். இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக் கலவரங்கள் உண்டாக்கிய தாக்கத்தால், வங்கக் கலைப் பள்ளியின் தேசிய அடையாளங்களைக் கடந்த புதிய பரிசோதனை ஓவிய வகைமைகள் உருவாகின. இந்த எழுச்சி பம்பாய் முற்போக்கு கலைஞர்கள் குழுவின் உருவாக்கத்துக்குக் காரணமாக அமைந்தது. பம்பாய் முற்போக்கு கலைஞர்கள் குழுவின் தொடக்கக் காலத்தில் அதனுடன் இணைந்து நெருக்கமாகப் பயணித்ததின் காரணமாக மேற்கத்திய ஓவியக் கலையின் புதிய சிந்தனைகளின் அறிமுகத்தைப் பெற்றார் ஹுசைன்.
அந்த அறிமுகமே அவர் அறிந்த இந்திய நிலவியலை உள்ளடக்கிய கியூபிச ஓவியங்களாக வெளிப்பட்டன. கிட்டத்தட்ட 10,000க்கும் மேற்பட்ட ஓவியங்களைத் தன் வாழ்நாளில் வரைந்திருக்கிறார். அதுமட்டுமல்லாது சுவரோவியங்கள், பொம்மைகள், சினிமாக்கள், நகை வடிவங்கள் என்று பல்வேறு பரிமாணங்கள் கொண்ட கலைஞராகத் திகழ்ந்தார். அவர் வரைந்த ஓவியங்களில், கீழ்வருபவை மிக முக்கியமானவையாகக் கலை விமர்சகர்களால் முன்வைக்கப்படுகினற்ன:
- மதர் தெரேசா
- ஹஷ்மிக்கு அஞ்சலி
- கிருஷ்ணா
- பாரத மாதா
- இந்தியத் திருவிழாக்கள்
- குதிரை
- மாதுரி தீட்சித்
பிறப்பால் இசுலாமியராக இருந்தாலும், பல மதங்களின் பண்பாட்டு, நம்பிக்கை வடிவங்கள் சார்ந்த ஓவியங்களை வரைந்தார். அதன் காரணமாகச் சர்ச்சைகள் அவரைச் சூழ்ந்தே இருந்தன. குறிப்பாக, அவர் வரைந்த நிர்வாணமான பாரத மாதா ஓவியம், வலதுசாரிகளின் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளானது. பின்னர் இந்தியாவை விட்டு வெளியேறி இறுதி காலங்களைக் கத்தாரிய குடிமகனாக வாழ்ந்து, லண்டனில் மறைந்தார்.
ஹுசைனின் ஓவியங்களில் நிறங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. அவர் அடிக்கடி வெளிப்படையான சிவப்பு, பச்சை, மஞ்சள் போன்ற வண்ணங்களைப் பயன்படுத்தினார். அந்நிறங்கள் ஓவியங்களின் மனநிலையை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், அதன் வழியாகச் சமூக உளவியலையும் வெளிப்படுத்தின.
இந்திய மெய்யியலையும், பண்பாட்டு வெளிப்பாடுகளையும் தனது படைப்புகளில் முன்வைத்த ஹுசைன் அதை வெளிப்படுத்தும் கருவிகளாக இந்திய புராணங்களையும், மத அடையாளங்களையும் கையாண்டார். குறிப்பாக மஹாபாரதம், இராமாயணம் போன்ற புராணக் கதைகளை நேரடியாகவும், சில சமயங்களில் பூடகமாகவும் வரைந்தார். மேலும், ஹுசைனின் ஓவியங்கள் பெரும்பாலும் இந்திய நிலவியலின் அன்றாட வாழ்க்கையின் காட்சிகளைச் சித்திரிக்கின்றன, பரபரப்பான சந்தைகள் முதல் வண்ணமயமான திருவிழாக்கள் வரையிலான இந்தியத்தையே வெளிப்படுத்துகின்றன.
கலையின் அழகியலைத் தாண்டி, ஓவியங்கள் வழியாக ஹுசைன் கையாண்ட கருப்பொருள் ஆய்வுகளும், அரசியல் – சமூகப் பிரச்சினைகளும் பெரிதும் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஹுசைன் ஓவியங்களில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று, அவரது கித்தானில் இயங்கும் ஆற்றலும், ஓவியங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளும். அவரது தூரிகை வெளிப்படுத்திய கோடுகள் மற்றும் வடிவங்களின் ஆற்றல் பார்வையாளனின் மானுட உணர்வைத் தூண்டும் வினையூக்கிகளாக இருக்கின்றன.
ஹுசைன் தனது படைப்புகளால் பல்வேறு விவாதங்களிலும் சிக்கினார். சில படைப்புகள் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும், அவை சர்ச்சைகளை உருவாக்கியதாகவும் கூறப்பட்டன. குறிப்பாக, இந்து கடவுள்களின் நவீன காட்சி வடிவங்களில் அவர் வரைந்த ஓவியங்கள் பெருமளவில் சர்ச்சைகளை உருவாக்கின.
ஆனால், இந்த விமர்சனங்கள் அனைத்தையும் படைப்புச் சுதந்திரம் எனும் ஒற்றை உரையாடலில் கடந்தார். மேலும், அது கலைஞர்கள் தங்கள் சிந்தனைகளை வெளிப்படுத்தும் உரிமையைப் பற்றிப் பெரிய விவாதங்களைக் கிளப்பியது. கலைக்கு மத – சமூக வரம்புகளைப் போட்டால் கலைஞர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது என்பதில் அவர் நிலை கொண்டார்.
அவர் இந்திய அரசியலின் மீதான விமர்சனங்களைத் தனது படைப்புகள் மூலம் வெளிப்படுத்தினார். சமூகத்தில் நிலவும் வேற்றுமைகள், அரசியல் பிரச்சினைகள் ஆகியவற்றையும் தனது ஓவியங்களின் வெளிப்பாடுகளாக முன்வைத்தார்.
இதை எல்லாம் தாண்டி, எம்.எப். ஹுசைன் தனது காலகட்டத்தில் மிகவும் மதிக்கப்படும் ஓவியராக விளங்கினார். அவரின் படைப்புகள் இந்தியக் கலையின் முதன்மையான பகுதியாகவே இருந்தன. அவரின் கலைப்பணிகள் இந்தியக் கலை வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்புச் செய்தன. அவரது படைப்புகள் இந்திய நவீன ஓவியக் கலைக்கு அடையாளமாகவும், உலகளாவிய கலையின் முக்கிய அங்கமாகவும் திகழ்கின்றன. மேலும், இன்றைய கலைஞர்கள் பலரின் நம்பிக்கையாக அவரது படைப்புகள் இருக்கின்றன.
எம்.எஃப். ஹுசைனின் ஓவியங்கள் இந்திய நிலவியல் பின்புலம் மற்றும் நவீனத்துவத்தின் துடிப்பான கலவையை உள்ளடக்கியவை; இந்தியாவின் பன்முகக் கலாச்சாரத்தைத் தைரியத்துடனும் திறமையுடனும் படம்பிடித்திருப்பவை. விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டாலும், அவரது கலைப் பார்வையும் படைப்பாற்றலும் மனித ஆன்மாவின் உணர்வுகளைத் தூண்டுபவையாக இருக்கின்றன. மேலும், கலை வெளிப்பாட்டின் எல்லைகள் என்று வரையறைக்கப்பட்ட அனைத்தையும் மீறுவதற்கான சான்றாக உள்ளன. தனது ஆற்றல்மிக்க, வெளிப்படையான கித்தான்களைக் கொண்டு மனித அனுபவத்தின் சிக்கலான மன உணர்வுகளையும், பன்முகத்தன்மை கொண்ட இந்திய அடையாளத்தையும் ஆய்வு செய்ய ஹுசைன் நம்மை அழைக்கிறார். அது கலை உலகில் ஓர் அழியாத முத்திரையை விட்டுச் செல்கிறது.
நூல் பட்டியல்:
- சுதந்திர இந்தியாவின் ஓவியக் கலை வரலாறு – எம்.எஃப். ஹுசைன் பற்றிய ஆய்வு.
- வெறுங்காலுடன் தேசம் முழுவதும், சுமதி ராமசாமி.