தலித் வரலாற்று ஆவணங்கள்

தேர்வும் தொகுப்பும்: ஸ்டாலின் ராஜாங்கம்

1920 மே.. 23 ஆதிவாரம் திருப்பத்தூரில் மகா ஸ்ரீ, C.K.சின்னபுட்டு சாமியார் அவர்களின் அக்கிராசனத்தின் கீழ் கூடிய திராவிட மகாநாடு சபையில் தீர்மானம் செய்யப்பட்டதும், 1920 சூலை 18, திருப்பத்தூரில் மகா ஸ்ரீ, A.P.பெரியசாமி புலவர் அவர்களின் அக்கிராசனத்தின் கீழ் கூடிய திராவிட மகாநாடு சபையில் வாசிக்கப்பட்டு எகோபித்து அங்கீகாரஞ் செய்யப்பட்டதுமான மசோதாக்கள்.

1. காருண்ய பிரிட்டிஷ் கவர்ன்மெண்டாரிடம் திராவிடர்கள் இதுவரை பெற்று வரும் அனந்த நன்மைகளுக்காக வணக்கத்துடன் நன்றி செலுத்தி, மகா காருண்ய சக்ரவர்த்தியாரவர்களுக்கு எங்களுடைய இராஜ பக்தி விசுவாசத்தை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

2. கானிஷ்மாரி (Census), கவர்ன்மெண்டு, ரெவினியூ, லோகல்போர்டு, முனிசிபல் சகல ரிகார்டுகளிலும் பறையர் பஞ்சமர்யென்னும் தீழ்ப்பான பதங்களை நீக்கி அவைகளுக்குப்பதிலாக “திராவிடர்” யென்று தாக்கல் செய்யவேண்டுமாய் தாழ்மையாய் கேட்டுக்கொள்ளுகிறோம்.

3. திருப்பத்தூர் முனிசிபாலிட்டியில் திராவிடர் வாசஞ்செய்யும் இடங்களுக்கு பறச் சேரியென்னும் பெயரை மாற்றி பெரிய பறச்சேரிக்கு “கௌதமபேட்டையென்றும், சின்னபறச்சேரிக்கு “ஜியார்ஜ்பேட்டையென்றும், வெங்களாபுரம் பறச்சேரிக்கு “அருணாசலசாமிபேட்டை” யென்றும் முனிசிபல் கவர்ன்மெண்டு ரிகார்டுகளில் தாக்கல் செய்யகேட்டுக்கொள்ளுகிறோம்.

4. திருப்பத்தூர் முனிசிபாலிட்டியில் தற்காலம் திராவிடரின் ஜனத்தொகை சுமார் இரண்டாயிரத்துக்குமேலிருப்பதால், திருப்பத்தூர் முனிசிபல் கவுன்சிலில் திராவிடர்களுக்கென்று இரண்டு ஸ்தானங்கள் நாமினேஷன் மூலமாய் கிடைக்கவேண்டுமென்றும், அவ்விரண்டு ஸ்தானங்களுக்கும் திராவிடர்களையே நேமகம் செய்யப்படவேண்டுமென்றும் இதர ஜாதியாரை அவர்களுக்கு பிரதிநிதிகளாக ஏற்படுத்தக்கூடாதென்றும் கேட்டுக்கொள்ளப் படுகிறது.

5. நார்த் ஆற்காடு ஜில்லா போர்டிலும், எல்லா தாலூகா போர்டுகளிலும், முனிசிபல் கவுன்சில்களிலும் திராவிடர்க்கென்று பிரத்தியேகமாய் நாமினேஷன் ஸ்தானங்கள் வைக்கப்பட வேண்டும்.

6. திருப்பத்தூரில் திராவிடர்களில் இருவரை பென்சு மாஜிஸ்டிரேட்டுகளாக நியமிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

7. (பெரிய பறச்சேரி) கௌதமபேட்டையிலிருக்கும் மிஷன் பள்ளிக்கூடத்தில் சரியான டிரெயினிங் பெற்ற உபாத்தியாயர்கள் இல்லாமையாலும், சரியான மேற்பார்வை யில்லாமையாலும் திராவிடப்பிள்ளைகள் முன்னுக்குவர யிடமில்லை. இந்த பள்ளிக்கூடத்தை கவர்ன்மெண்டு அல்லது முனிசிபல் ஸ்கூலாக்கி மூன்றாவது பாரம் வரை உயர்த்தி விர்த்திக்குக் கொண்டுவரவேண்டும்.

8. எல்லாப்பள்ளிகூடங்களிலும் திராவிடப்பிள்ளைகளை சம்பளமில்லாம் சேர்க்க உத்திரவாகவேண்டும்.

9. (பெரிய பறச்சேரி) கௌதமபேட்டையில் மிஷன் ஸ்கூலுக்கும் போலீஸ் லயனுக்கும் மத்தியில் ராஜா ரஸ்தா ஓரம் இருக்கும் மாடடிக்கும் கட்டமும் (Slaughter house) கக்கூசும் சுகாதாரத்துக்குப் பிரதிகூலமும் திராவிடருடைய தற்கால முன்னேற்றத்துக்கு தடையாகவுமிருப்பதால் அதை உடனே அப்புறப்படுத்தவேண்டியது. நாங்கள் பலமுறை வேண்டிக்கொண்டும் திருப்பத்தூர் முனிசிபல் சங்கத்தார் கவனிக்காமலிருப்பது விசனிக்கத்தக்கதாயிருக்கிறது.

10. வெங்களாபுரத்தில் திராவிட பிள்ளைகளுக்கென்று ஓர் பள்ளிக்கூடம் ஏற்பாடு செய்ய வேண்டியது.

11. திருப்பத்தூரில் அடியில்கண்ட திராவிடர்கள், முனிசிபல் கவுன்சிலர், ஜில்லா, தாலூகா போர்டு மெம்பர், பென்சு மாஜிஸ்டிரேட்டு ஸ்தானங்களை வகிக்க, கல்வியிலும், நிலமையிலும் யோக்கியதையுடையவர்களாக இருக்கிறார்களென்பதை அதிகவணக்கமாய் தெரியப்படுத்துகிறோம்.

• மகா ஸ்ரீ, A.P.பெரியசாமி புலவர் அவர்கள், கௌதமபேட்டை, திருப்பத்தூர்.

• மகா ஸ்ரீ, C.K.சின்னபுட்டு சாமியார் அவர்கள், கௌதமபேட்டை, திருப்பத்தூர்.

• மகா ஸ்ரீ, C.K.கருவர் அவர்கள், கௌதமபேட்டை, திருப்பத்தூர்.

• மகா ஸ்ரீ, K.C.கிருஷ்ண சாமியார் அவர்கள், கௌதமபேட்டை, திருப்பத்தூர்.

• மகா ஸ்ரீ, தலைமை நாட்டாண்மை S.M.முனிசாமியார் அவர்கள், ஜிபார்ஜ்பேட்டை, திருப்பத்தூர்.

• மகா ஸ்ரீ, T.பாணாசூரர் முனிசாமியார் அவர்கள், ஜியார்ஜ்பேட்டை, திருப்பத்தூர்.

• மகா ஸ்ரீ, இராம மேஸ்திரி அவர்கள், ஜியார்ஜ்பேட்டை, திருப்பத்தூர்.

• மகா ஸ்ரீ, T.S.தர்மலிங்கம் பிள்ளை அவர்கள், ஜியார்ஜ்பேட்டை, திருப்பத்தூர்.

• மகா ஸ்ரீ, P.அருணாஜல சாமியார் அவர்கள், வெங்களாபுரம், திருப்பத்தூர்.

• மகா ஸ்ரீ, T.N.அனுமந்து உபாசகர் அவர்கள், சவுடேகுப்பம், திருப்பத்தூர்.

12. மேற்கண்ட தீர்மானங்களை கவர்ன்மெண்டாருக்கும், கல்வியிலாகா, தலைவருக்கும், நார்த் ஆற்காடு ஜில்லா கலெக்டர், திருப்பத்தூர் சப்-கலெக்டர், திருப்பத்தூர் முனிசிபல் சேர்மென் முதலிய அதிகாரிகளுக்கு, அனுப்பி மேற்காட்டிய விஷயங்களைக்குறித்து கடித போக்கு வரவு செய்ய இந்த மகா சபை நாயகர் ஸ்ரீ, A.P.பெரியசாமி புலவர் அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

திருப்பத்தூர்,
18.07.2020.

(கையப்பம்) A.P.பெரியசாமி புலவர்,
பிரசிடெண்டு

அன்பு பொன்னோவியத்தின் அறவுரை இதழில் நடந்த கடித உரையாடல்

அன்புள்ள திரு.ரி.கிருஷ்ண குமார் அவர்களுக்கு,

அன்புடையீர்,

தங்களுடைய 25.6.92ந் தேதி கடிதத்தை வரப்பெற்றோம். தாங்கள் அறவுரை பத்திரிகையைப் பார்த்துப் படித்து மகிழ்ந்ததை அறிந்து மகிழ்ச்சியடைந்தோம். தங்கள் நெஞ்சைத் தொட்டதை நினைத்துப் பெருமிதம் கொண்டோம், நெருடியதைக் கேட்டு நிலைத்தடுமாறினோம். அந்த “நெருடல்”, தங்கள் நீட்டோலையைத் துல்லியமாக ஆராய வழிகோலியது. கேள்விகள் அறிவையும் தூண்டும் ஆயாசப்படவும் – என்று பெரியவர் கூறுவார்கள். தங்கள் கேள்விகள் எங்களை ஆராயத் தூண்டியிருக்கிறது என்றால் மிகையாகாது. இந்த “அறியும் போர்” பகைமைக்கு இட்டுச் செல்லாமல், வெற்றுத் தோழமைக்கும் உள்ளாக்காமல் “உறவு”க்கு மட்டுமே அழைத்துச் செல்ல “எல்லாம் வல்ல” அண்ணலின் அறிவுரை நமக்கு உதுவுமாக!

தங்கள் நெருடலுக்கு எங்களின் இதமான வருடல்:

“என் நெஞ்சை நெருடிய… “மூத்தவர் மூவர் என்ற தலைப்பில் திருமிகு. எம்.சி.ராஜா அவர்களைப் பற்றி எழுதப்பட்டுள்ளதேயாகும்…”

நெருடல்” என்ற வார்த்தையைத் தாங்கள் நிச்சயமாக “வஞ்சனை” என்ற பொருளில் கையாண்டிருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறோம். எனவே அதை “கோணல்” என்று பொருளில் எடுத்துக் கொள்ளலாமா? ஏனெனில் நாம் தமிழுக்கு முந்தியவர்கள் – தமிழைப் பெற்றவர்களும் நாம்தான், அதைக் கைவிட்டவர்களும் நாம்தான் – என்பதால் திரிந்தும் தெரிந்துமுள்ள தமிழிலேயே பேசுவோம். எனவே அந்த நெருடலைக் கோணல் மாணலான கருத்தாக நாம் எடுத்துக் கொள்வோம்.

கோணல் மாணல் – அதாவது தெளிவற்ற கருத்தாக, விளக்கமில்லாத – அல்லது உண்மையில்லாத கருத்தாக இருப்பதாக தாங்கள் கருதினால், அதைத் தெளிவாக்குவது எங்கள் பொறுப்பும் அறமுமாகும்.

நாம் சிலவற்றை அறிய, அலசி ஆராய்ந்து தெரிந்துகொள்ள 200 (இருநூறு) ஆண்டுகளின் வரலாற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், நூறு ஆண்டுகளின் நிகழ்ச்சிகளே ‘எழுத்தால்’ காட்டும் வரலாறாக நமக்குக் கிடைக்கின்றன. ஆயினும் இந்த எழுத்தால் 125 ஆண்டு வரலாற்றைப் பார்க்க முடியும். இந்த 125 ஆண்டுகளுக்கு முன்பு நமக்காகப் பாடுபட்ட பலருடைய பெயர்களைத்தான் தெரியும். அவர்கள் செய்ததற்கான ஆதாரங்களைக் காண முடியவில்லை. அவை செவி வழிச் செய்திகளாகி விட்டன. பலர் ஏதோ செய்திருக்கிறார்கள், அவர்களுடைய இனம் மட்டும் தெரிகிறது; ஊர், பெயர் தெரிந்துகொள்ள வழியில்லை. செய்த சிலருடைய ஊரும், பேரும், இனமும் தெரியும், அவர்கள் நமது பெரியார்கள்தான் என்றும் ஐயமற தெரியும் என்றாலும், அதை எடுத்துக் கூற ஆற்றலோ, அக்கரையோ இல்லாமல் போய்விட்டன. இப்படிப் பல பல நமது வரலாறு.

போகட்டும்! நமது தந்தையார், பாட்டன்மார்கள் காலத்தில் – பார்த்து அறிந்த பெருமக்களின் பேருழைபைப் பற்றி நமக்கு ஏதோ ஒரு வகையில் ‘துப்பு’ கிடைத்திருக்கின்றன. அவற்றில் சில அசைக்க முடியாத – ஆணித்தரமான – சான்றுகளோடு கிடைத்துள்ளன. அவர்களில் சிறந்தோரும் மூத்தோருமான மூவரைப் பற்றி நாம் ‘அறவுரை’ பத்திரிகையில் ஒரு சில வரிகளில் மட்டுமே கோடிட்டுக் காட்டியிருந்தோம்.

அம்மூவரில் ஒருவர் அறிவுக்கு மட்டுமே முதலிடம் தந்து உழைத்தவர். மற்றொருவர் சமுதாய நலனை மட்டுமே நினைத்துப் பாடுபட்டவர். பிரிதொருவர் அரசியல் அதிகார வாய்ப்பிற்காகவே பணியாற்றியவர். மூன்று வெவ்வேறான வாழ்க்கைத் திறத்தை அவர்கள் தனித்தனியே வலியுறுத்தினாலும், ஒன்றுக்குள் மற்ற இரண்டும் அடங்குவன போன்ற தன்மையுடையவைகளாகும் என்பது உண்மையாகும். உதாரணமாக இயல் இசை நாடகம் என்ற மூன்றும் தனித்தனியானவர்களின் தொழிலறிவாக இருந்தாலும் அம் மூன்றும் ஒருவரிடத்திலேயே காணப்படுமாயின் அவரை ‘அம்மூவர்’ என்று குறிப்பிடுவது பண்டைய தமிழர் மரபு. இந்த வகையில் நாம் குறித்த அருந்தமிழ்ச் செல்வர் அயோத்திதாசர், முதுபெரும் தலைவர் இரட்டைமலை சீனிவாசனார், பெருந்தலைவர் எம்.சி.ராஜா ஆகியோர் நமது வணக்கத்திற்கு உரியவர்களாவார்கள்.

இந்த மூவரும் காலத்தால் முந்தியவர்கள், அவர்களது தொண்டை கணித்தால் அயோத்திதாசரைப் போல் அவருக்கு முன் யாரும் இருந்ததில்லை. அதே போல சீனிவாசனார், ராஜா ஆகியவர்களைப் போன்றும் பணியாற்றி யவர்கள் இல்லை. எனவேதான் அவர்களை மூத்தவர்கள் என்பதற்காகவும், முதல் நற்பணி தொண்டர்கள் – தொண்டாற்றியவர்கள் – என்பதற்காகவும் நினைவுகூர்ந்தோம்.

குறிப்பாக M.C.ராஜா அவர்களை எடுத்துக்கொண்டால் அவரைப் போல அவருக்கு முன்பு அயோத்திதாசரோ, சீனிவாசனாரோ ஆளுமையைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. அயோத்திதாசர் கல்வியறிவையும் அறநெறியையும் வலியுறுத்தியதைப் போல சமுதாயக் கட்டமைப்பையோ அரசியல் வாய்ப்பையோ வலியுறுத்தவில்லை. சீனிவாசனார் சமுதாய வாய்ப்பு வசதி வளர்ச்சி போன்றவற்றைப் பேசியதைப் போல அறிவையோ அறநெறியைப் பற்றியோ அரசியலைப் பற்றியோ கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ராஜா அரசியல் வாய்ப்பும் வசதியும் இருந்தால் அந்த அதிகாரத்தால் கல்வியையும் பெறலாம் சமுதாயத்தையும் முன்னேற்றலாம் என்று எண்ணினார். இந்த மூவரில் முனைப்பாகத் தொண்டாற்றியவர் யார் என்றோ எவருடைய பணி சிறப்பானது உவப்பானது உண்மையானது என்றோ, அளந்து குறிப்பிட்டுக் கூற எங்களுக்குத் தகுதியில்லை. ஆயினும் அவர்களுடைய தொண்டு சிறப்பானதாகவே ஏற்கிறோம். எனவே இந்த மூவரும் யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வரலாற்றுப்படி வணக்கத்திற்கு உரியவர்களே ஆகும்.

“ஒரு மனிதரை அதிலும் பொதுவாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மனிதரைப் பற்றிப் பாராட்டுவதோ – புகழுரையோ – எழுதுமுன் அவரது ‘வாழ்வு’ முழுவதையும் கணக்கில் எடுத்துக் கொள்வதே அவரைப் பற்றிய சரியான கணிப்பினை வெளியிட உதவும் என்று எண்ணுகிறேன்…”

ஒருவரைப் பாராட்ட – புகழ, எது காரணமாக அமைகிறது. ஏன் ஒருவரைப் போற்றவேண்டும் அல்லது தூற்றவேண்டும்? ஒருவருடைய நல்ல தொண்டே அவரைப் பாராட்ட வைக்கிறது. இல்லையென்றால் ஏன் பாராட்டப் போகிறார்கள். சரியாகக் கணிக்காமலும் ஒருவரைப் பாராட்ட முடியாது. புகழுவதற்கு அடிப்படையே கணிப்புதான். இல்லையென்றால் பாராட்ட மனம் வராது. எனவே, ஒருவரைப் புகழும் முன் அவரைப் பற்றிக் கணித்தாக வேண்டும். ஆகவே, எம்.சி.ராஜாவைப் பற்றி நாங்கள் கணித்ததில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.

“அளவுகோலின்படி பார்ப்போமேயானால் திருமிகு. M.C.ராஜா அவர்களின் முற்பகுதி வாழ்வு போற்றுதலுக்குரியது. ஐயமில்லை. ஆனால் வட்ட மேஜை மாநாடுகளில் தாம் பங்குகொள்ள இயலாமற் போனதற்குக் காரணம் நமது இரட்சகர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள்தான் எனத் தவறாக ஒரு கருத்தினைத் தனது மனதிற் கொண்டு…”

ஒருவரது வாழ்வு முழுவதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள உண்மையை ஆராய்ந்து அறிந்து கொள்வதுதான் அளவு கோலாகும். இந்த நிகழ்ச்சியை முழுமையாக யாரும் ஆராய்ந்ததாகத் தெரியவில்லை. ஆயினும், “திருமிகு.M.C.ராஜா அவர்களின் முற்பகுதி வாழ்வு போற்றுதலுக்குரியது ஐயமில்லை” என்று கூறுகிறீர்கள் அதற்காகப் பாராட்டுகிறோம்.

ராஜா அவர்களைக் குறிப்பிடும் எல்லா இடங்களிலும் “திருமிகு” என்ற அடைமொழியால் சிறப்பிக்கிறீர்கள். இப்பண்பைக் கொண்டிருக்கும் தங்களைப் பெருமையாக நினைக்கிறோம். ‘திரு ராஜா’ என்றோ அல்லது வெறும் ‘ராஜா’ என்றோ குறிப்பிட்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு கூறாமல் திருமிகு.ராஜா என்று குறிப்பிடும் மரியாதை பண்பு தங்களுக்கு எப்படி வந்தது? ஏனென்றால் “விதையன்று போட்டால் சுரை ஒன்று காய்க்காது” என்று முதுமொழிப்படி – எங்களுக்குத் தானை தளபதியாகவும் தலைவராகவும் இருந்த பெருமகனாரின் வழிவந்தவர் நீங்கள் என்பதால் அப்பண்பு தங்களுக்கு இருக்கிறது!

இதே பண்பு எங்களுக்கும் இருக்கலாம் அல்லவா? அதனால் ராஜா அவர்களின் சிறந்த தொண்டிற்காக நாங்கள் அஞ்சலி செய்யலாமல்லவா?

முற்பகுதி – பிற்பகுதி அல்லது முதல் இடை கடை பகுதி தொண்டுகள் என்றெல்லாம் கணித்தோ வரையறுத்தோ, அதனதன் தன்மைக்கேற்ப பாராட்டுவது மரபல்ல. பெருந் தொண்டாற்றியவர் – ஒருவேளை – சிறு தவற்றைச் செய்ய நேர்ந்தால் அவர் ஒதுக்கப்படத்தான் வேண்டுமா? அந்தச் சிறு தவறும் அந்தக் காலத்தின் விளைவுகளை ஆராய்ந்து அதனுடைய இன்றைய விளைவுகளையும் பின்விளைவுகளையும் நாம் கணித்துப் பார்த்தோமா? அவற்றைத் தெளிவுபடக் கூற இன்று நம்மிடையே யாராவது இருக்கிறார்களா? தந்தையாருக்குப் பிறகு தளபதியாருக்குப் பிறகு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை என்றே கருதுகிறோம். அந்த நேரத்தில் பெருந்தலைவர் ராஜா மட்டுமல்ல பலர் பாபாசாகேப்பை எதிர்த்தார்கள். அன்று கொடிகட்டிப் பறந்த ஜெயகர், அசைக்க முடியவில்லை. இதை வட்டமேஜை மாநாட்டுக்கால நடவடிக்கைகள் முழுவதையும் படித்து உணர்ந்தவர்களுக்குத் தெரியும் – இந்த நிலையில் ராஜா அவர்கள் எதிர்ப்பால் பாபாசாகேப் அவர்களுக்கோ, நமது சமுதாயத்திற்கு இழிவோ அழிவோ நேர்ந்துவிடவில்லை. சமுதாயப் பலவீனங்களும் மக்களிடையே தொலை நோக்கு இன்மையும், தலைவர்களுக்கு வசதி இல்லாததும், குறிப்பாக தின, வார, மாத வெளியீடுகள் இல்லாமையும் நமது அன்றைய, இன்றைய வரலாறுகளைத் தெரிந்துகொள்ள முடியாதவர்களாக இருக்கிறோம் – இளந் தலைமுறையினருக்கு எடுத்துக் கூற முந்தைய தலைமுறையினர் இல்லாததும் ஒரு காரணமுமாகும். எம்.சி.ராஜா அவர்கள் தனது 25-வது வயதில் 1908-ல் பொதுத் தொண்டில் ஈடுபட்டார். 36-வயது வயதில் 1919ல் சட்டமன்ற உறுப்பினரானார். பிறகு 1927-ல் நாடாளுமன்ற உறுப்பினரானார். நமது சமுதாயத்தின் முதல் சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமைக்குரியவர். இவரைப் பற்றிய செவி வழிக் கதையை நம்பி இவரை வெறுப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? செவி வழிக் கதைகள் எல்லாமே உண்மையாகி விடுவதில்லையே!

இருவர் ஒரு கணக்கை போட்டார்கள்: இரண்டு இரண்டு ஒன்று சேர்ந்தால் எவ்வளவு என்று கேட்டார் ஒருவர். நான்கு என்றார் மற்றவர். இல்லை ஐந்து என்றார் – நிகழ்காலச் சூழ்நிலையை எதிர்கால விளைவுகளோடு இருவர் வெவ்வேறு கோணங்களில் நோக்கினார்கள். அவர்கள் கண்ட முடிவு ஒன்றாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மாறுபடலாம் – மாறுபட்டது. தவறு அவர்களுடையது அல்ல அதை வைத்துக் கொண்டு கணக்குப் போடும் நம்முடையதாகவும் இருக்குமல்லவா? இறுதியில் அண்ணலும் பெருந்தலைவரும் ஒன்றாகிவிட்டதைப் பார்க்கும்போது அவர்களுடைய பிணக்குத் தற்காலிகமானது காலத்தின் அவசியமானது என்றே தோன்றுகிறது. இதை அறிந்துகொள்ள முயற்சியுங்கள்.

“நம் சமுதாய நலன் கருதி அண்ணல் எடுத்த ஒவ்வொரு முடிவினையும் எதிர்ப்பதையே தன் வாழ்வின் நோக்கமாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த திருமிகு.ராஜா அவர்களின் பிற்பகுதி வாழ்வை எப்படிப் போற்ற முடியும்? புகழ முடியும்?

பெருந்தலைவர் எம்.சி.ராஜா அவர்களின் முற்பகுதி என்பதை 1908-1930 வரை என்று வரையறை செய்யலாம். அதாவது 47 ஆண்டுகளின் அவரது அயராத பணியால் சமுதாயம் பயன் கண்டிருக்கிறது. 1930-32 ஆகிய இரண்டாண்டுகள் அவரது அரசியல் பணி வேறுபட்டது என்றே வைத்துக் கொண்டாலும் இந்த இரண்டாண்டில் பழங்குடிச் சமுதாயத்திற்கு என்ன இழப்பு நேரிட்டது? 1938 வரையிலுங்கூட அவரது பணிகள் பாழ்பட்டுவிட்டது என்று வதைத்துக் கொண்டாலும் கூட அதனால் சமுதாயம் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அண்ணல் பாபாசாகேப் அவர்களுக்கு ஏதும் கெடுதல் நேர்ந்ததாகவும் தோன்றவில்லை.

குறிப்பாகக் காங்கிரஸ்காரர்களின் சூதாட்டமும் அவர்களது பத்திரிகைகளின் குறும்புத்தனமும் மக்களைத் திகைக்க வைத்தன. அதுவும் இரண்டொரு ஆண்டுகள்தான்!

முதலில் தனித் தொகுதியையும் சிறிது காலத்திற்குப் பிறகு கூட்டுத் தொகுதியும் கேட்ட பெருந்தலைவர் எம்.சி.ராஜாவின் கருத்தையும் – முதலில் தனித் தொகுதியைக் கேட்டு பிறகு காந்தியாரின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற இரக்கக் குணத்தால் கூட்டுத் தொகுதிக்கு இணங்கிய அண்ணல் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களுடைய நிலையையும் தனித்தனியாக ஆராய்ந்து பாருங்கள் – பிறகு சிந்தியுங்கள்! பிறகு முடிவு செய்யுங்கள்.

“நான் இந்துவாகப் பிறந்தேன் – நான் இந்துவாகவே இறப்பேன்” என அண்ணலின் மதமாற்ற உரைக்கு மறுப்பு அறிக்கை கொடுத்ததோடல்லாமல்..!

நாம் இந்துக்களா இல்லையா என்பதை இன்றுவரை நமது சமுதாய மக்கள் முடிவு செய்யவில்லை. நாம் ஒத்துக்கொண்டாலும் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் நம்மை ‘இந்து’ என்றே முத்திரை குத்திக் கொண்டிருக்கிறார்கள். நூறு ஆண்டுகளாக இந்தப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டு வருகிறது. பௌத்தர்களாகி விட்டவர்களை இந்து சட்டத்தின் கீழ்தான் கண்காணிக்கிறார்கள் – இதற்கு ஒரு முடிவு எடுத்திருக்க வேண்டும் இதை அருந்தமிழ்ச் செல்வர் அயோத்தி தாசர், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் இரட்டைமலை சீனிவாசனார், பெருந்தலைவர் ராஜா போன்றோர்களே முடிவு செய்திருக்க வேண்டும். அதற்குரிய ஆதாரங்களோடு வரலாற்றைப் படைத்திருக்க வேண்டும். ஆனால் அதை அவர்களால் செய்ய முடியாமல் போய்விட்டது. இதற்குச் சில காரணங்கள்:

1. ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கும் வரலாற்றில் உள்ள தடுமாற்றங்கள்

2. பொய்யான கதைகள், கற்பனையான நிகழ்ச்சிகள், மதங்களின் அடிப்படையில் எழுந்துவிட்ட படைப்புகள்

3. இலக்கியங்களில் ஒரு சார்பான விவரங்கள்

4. காலத்தால் முற்பட்டு எழுதப்பட்டு விட்டவற்றைக் காரண – காரியங்களோடு ஒப்பிட்டுத் திருத்த அல்லது மாற்ற முடியாத நிலை.

5. நமது தலைவர்கள் காலத்தில் உண்மை வரலாற்றுக்கான ஆதாரங்கள் (Source Materials) கிடைக்காமை.

6. எழுவதிலும் கருத்தை வெளியிடுவதிலும் மேலின மக்களோடு போட்டி போட இயலாமை.

7. வெளியீடுகள், நூல்கள் போன்றவற்றை அதிக அளவில் வெளியிட்டும் வாய்ப்புகள் இல்லாமை.

8. வெளிவரும் வெளியீடுகளான பத்திரிகை, நூல்கள் போன்றவைகளை அதிக அளவில் சமுதாய மக்கள் வாங்காமை

9. சமுதாயத்தைப் பற்றிய உண்மையான வரலாறுகளைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய முடியாமை.

10. நமது தலைவர்களுக்கு நேரம், காலம், வசதி போதாமை

11. சமுதாயத்திற்கு வலிமையான மைய அமைப்பு இல்லாமை – அதில் அனைத்து மக்களும் ஒன்றுபட்ட கருத்துடன் இயங்காமை.

12. தகுதி பெற்ற ஒருதலைமையை ஏற்காமை தலைவர்களின் அறிவுரைப்படி நடக்காமை

13. சமுதாய மக்கள் தங்கள் சமுதாய நலனிற்காக நேரத்தையும் உழைப்பையும் பொருளையும் உதவ முன் வராமை.

14. அந்நியத் தலைவர்களின் அறிவுரையோடு நமது சமுதாய இடர்பாடுகளை ஒப்பு நோக்காமை.

15. நமது சமுதாய நலனிற்காகத் தியாகம் செய்ய விரும்பாமை.

இவ்வாறு இன்னும் பல சங்கடங்கள் நமது சமுதாயத் தலைவர்களுக்கு இருந்தன. எனவே, அப்பெருமக்களால் அவர்கள் காலத்திலேயே சிறந்த வரலாற்றைச் செய்து முடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால், அந்த வணக்கத்திற் குரியவர்களால் பெற்ற நன்மைகளால் முன்னேறி இருக்கும் இன்றைய படித்த மக்கள் – நாம் இந்துக்களா, பௌத்தர்களா – என்பதைப் பற்றியெல்லாம் ஆராய்ந்து அறிந்து கூறவேண்டும். அத்தகைய அக்கரை கொண்டவர்களைக் காணமுடியவில்லை. பாபாசாகேப் அவர்கள் ஓர் தெளிவான பாதையைக் காட்டியுங்கூட இன்றைய மக்கள் பௌத்தத்தைத் தழுவத் தயங்குகிறார்கள் என்றால் 60 ஆண்டுகளுக்கு முன்பு பெருந்தலைவர் மதத்தைப் பற்றி ஒரு முடிவுக்கும் வராததில் வியப்பில்லை. அண்ணல் அவர்களும் பெருந்தலைவர் மறைவிற்குப் பிறகுதான் பௌத்த நெறியை ஏற்றார் என்பதை நினைவுபடுத்திக் கொண்டால் பெருந்தலைவர் ராஜா அவர்களைக் குறைக்கூறுவதில் பயனில்லை. மேலும் எம்.சி.ராஜா இந்துவாக இறப்பேன் என்று கூறியது. 11.11.1935-ல் தான். அப்போது அண்ணலும் இந்துவாகத்தான் இருந்தார் என்பதை மனம் கொள்ள வேண்டும். 13.10.1935 அண்ணல் பௌத்தம் தழுவ விரும்பியதையும் நினைவுகொள்ள வேண்டும். சைமன் கமிஷன் வந்திருந்தபோது அண்ணலிடம் நீங்கள் ஒரு இந்துவா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் அப்படித்தான் சொல்லப்படுகிறது என்றார் – பெருந்தலைவர் ராஜா அவர்களும் தாம் காந்தியாருக்கு எழுதிய கடிதத்தில்.

“If we are not free to enter into Hindu Temples, we are no Hindus, and if we are not Hindus why should we be in a joint electorate with them?”

என்று குறிப்பிட்டிருந்தார். இதே கருத்துபோல முதுபெரும் தலைவர் சீனிவாசனாரும் When a Depressed classes member is permitted to enter with the castes Hindu Temples he would not taken into any one of the four castes, but treated as men of firth or lost or the lowest caste என்று மதமாற்ற விவாதத்தின் போது ஓர் அறிக்கையில் கூறியிருந்தார். இந்த இரண்டு ஆதாரங்களையும் பாபாசாகேப் அவர்கள் தனது நூலிலும் குறிப்பிட்டிருக்கின்றார் (Writings + Speeches – Vol. V, P.361, 385). இதையெல்லாம் பார்க்கிறபோது, முதுபெருந் தலைவரும் பெருந்தலைவரும் தங்களை இறுதிவரை இந்துவாகவே நடத்திக் கொண்டாலும், அவர்கள் அதற்கு நேர் மாறாகவே செயல்பட்டார்கள் என்பது விளங்கும். ஏன் பாபா சாகேப் அவர்களையும் 1956 வரை இந்துவாகத்தானே மற்றவர்கள் பார்த்தார்கள் ஒருவேளை 1935ல் பாபா சாகேப் கூறியதைப் போலவே மதம் மாறியிருந்தால் நிலைமை எவ்வாறு அமைந்திருக்கும் என்று இன்று சொல்ல இயலாது.

“ஜாதி இந்து அல்லாதவர், பிராட்டஸ்டென்ட் இந்து, அல்லது பொருத்தமான வேறொரு, பெயரை இந்த வகுப்பினருக்குக் கொடுக்க வேண்டும். எந்த ஒரு குறிப்பிட்ட பெயரையும் கேட்க எங்களுக்கு அதிகாரமில்லை…”

“வருங்கால அச்சமைப்பின் உருவம் குறித்துத் தீர்மானிக்கும்; எந்தவித அதிகாரத்தையும் என் சமூகத்தார் எனக்கு வழங்கவில்லை”..

ஓர் உண்மையான பிரதிநிதித்துவ ஆட்சியமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்னும் விஷயத்தில் நான் என் சமுதாயத்தின் முழு அதிகாரத்தையும் பெற்றிருக்கிறேன்.

என்று பாபாசாகேப் வட்டமேஜை மாநாட்டில் கூறிய கருத்துகளை ஒருமுறை தொகுத்துப் பார்த்துச் சிந்தியுங்கள். ஒரு பெயரை வைக்கவும் வருங்கால அரசியலைக் குறித்துத் தீர்மானிக்கவும் தங்களுக்கு அதிகாரமில்லை என்று ஏன் கூறினார். ஓர் உண்மையான அறிவாளி, ஜனநாயகவாதி அப்படித்தான் கூறவேண்டும், மக்களை மதித்து, மக்களின் கருத்திற்கு மதிப்பளிப்பவர்தான் உண்மையான ஜனநாயகவாதியாக இருக்க முடியும் அண்ணல் அப்படித்தான் இருந்தார்.

பாபாசாகேப் அவர்கள் 1930 லியே மதம் மாறும் முடிவிற்கு வந்துவிட்டார். இந்தப் பிரச்சனையைச் சர் முகம்மது சா, டாக்டர் முஞ்சே போன்றவர்கள் வட்ட மேஜை மாநாட்டிலேயே இதைப்பற்றிப் பேசினார்கள் — மதம் மாற்றத்திற்கு 1956 வரை 26 ஆண்டுகள் இருந்ததற்குக் காரணம் மதத்தைப் பற்றி ஆராயவும் மக்களின் விருப்பங்களை அறியவும் – சூழ்நிலை உருவாகுமா, உருவாக்கப்பட வேண்டுமா என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கால் நூறாண்டு அவர் காத்திருக்க வேண்டியிருந்தது. அவசரம் சில சமயங்களில் ஆபத்தையும் விளைவிக்கும் என்பது அவரது நிதானத்தால் அறியலாம். மிகவும் நம்பகமான ஒரு பாதுகாப்பை நம்பி அழிவுறுவதைவிட மிகவும் ஐயத்திற்குரிய அச்சங்களை எழுப்பி வசவு பெறுவது மேலானது”

மிகவும் பைத்தியக்காரத்தனமான பாதுகாப்பை நம்பி ஏமாறுவதை விட மிகுந்த கவலையுள்ள பயத்தைக் கொண்டு காரியம் சாதிப்பது மேலானது…”

என்ற அண்ணலுடைய உரைகளை நோக்கும் போது அவர் ஏன் 26 ஆண்டுகள் மத மாற்றத்திற்காகக் காத்திருந்தார் என்று நமக்குப் புரியவேண்டும். அதுமட்டுமல்ல, அவர் மக்களுடைய கருத்திற்கும் விருப்பத்திற்கும் முதலிடம் தந்தார் என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அவர் விரும்பி இருந்தால் 1935 லிலேயே நமக்கு ஒரு பெயரை வைத்திருக்கலாம் – மதம் மாறச் செய்திருக்கலாம் யாரும் தடை செய்யப் போவதில்லை – அன்றைய ஆங்கிலேயர் ஆட்சியிலும், இன்றைய குடியரசு ஆட்சியிலேயும் ‘இந்து’ ஆட்சிதான் நடைபெறுகிறது. நம்மில் பலரை இந்துவாகவே வைத்துக்கொண்டு நம்மைக் கொடுமைப்படுத்தும் அபாயமும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை இன்னும் மோசமாக இருந்தது. இச்சூழ்நிலையில் எம்.சி.ராஜா அவர்கள் இந்துவாகவே இறப்பேன்’ என்று கூறியதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அதனால் சமுதாயத்திற்கோ தலைவர்களுக்கோ ஒன்றும் சேர்ந்துவிடவில்லை. முதுபெரும் தலைவர் இரட்டைமலை சீனிவாசனார் அவர்களும், தந்தை சிவராஜ் அவர்களும் கூட பாபாசாகேப் அவர்களின் மதமாற்றத்தை ஆதரிக்கவில்லையே, இவர்களையும் ஒதுக்கிவிட முடியுமா?

நமது மக்களுடைய வாழ்க்கையைச் சிந்தித்துப் பாருங்கள். உண்ணவும் உடுக்கவும் இல்லாதவர்கள் – படுக்கவும் சொந்தமான இடமில்லாதவர்கள். பயிரிடவும் நிலமில்லாதவர்கள் – அன்றாடக் கஞ்சிக்கு மேல் சாதிக்காரர்களை எதிர்பார்த்துக் கிடக்கும் ஏழைகள் – அரசு துறைகளையும் தனியார் துறைகளையும் கைப்பற்றிக் கொண்டிருக்கும் மேல்சாதிக்காரர்களிடம் நாம் படித்து – தொழில் தெரிந்தவர்களாக இருந்தாலும் போட்டி போட முடியாது என்பதை நாம் அறிவோம் – ஒரு வேளை 50 ஆண்டுகளுக்கு முன்பு நமது தலைவர்கள் எல்லாம் மதம் மாறி, மக்களும் அவர்களைத் தொடர்ந்து மதம் மாறி இருந்தால் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று ஊகித்துப் பாருங்கள் – நம்மையார் பாதுகாத்திருப்பார்கள் – ஆங்கிலேயே ஆட்சி மதப்பிரச்சினை என்று நம்மைக் கைவிட்டிருப்பார்கள்!

விளைவு!

அடுப்பைப் பற்ற வைக்கக்கூட தீப்பெட்டி கிடைத்திருக்காது விளக்கேற்ற மண்ணெண்ணை கிடைக்காது – எல்லாக் கடைகளிலும் எல்லாப் பொருள்களும் மறுக்கப்படும். சொந்த நிலமுள்ளவர்களுக்கும் தொழிலுள்ளவர்களுக்கும் தொல்லைகள் வரும். வசதியற்ற சிறுபான்மை மக்களை வசதிகள் பெற்றிருக்கும் மேல் சாதிக்காரர்கள் அடித்துக் கொல்லத் தேவையில்லை, பட்டினி போட்டு வேலை கொடுக்காமல் கொன்று விடுவார்கள். பாபாசாகேப் 26 ஆண்டுகள் பொருத்திருந்தது குறிப்பாக சுதந்திரம் பெற்று பத்தாண்டுகள் வரை பொருத்திருந்ததற்குப் பல காரணங்களில் இதுவும் ஒன்றாக இருக்கக் கூடுமல்லவா?

எனவே, நான் இந்துவாகப் பிறந்தேன், இந்துவாகவே இறப்பேன்” என்று பெருந்தலைவர் எம்.சி.ராஜா உண்மையாகவே கூறியிருந்தாலும் கூட பாபாசாகேப் அவர்களுக்கு எந்தவித இடைஞ்சலும் ஏற்கப்படுவதில்லை – சமுதாயத்திற்கோ சமுதாய அரசியலுக்கோ ஏதும் நேர்ந்து விடவில்லை. “இந்துவாகவே இறப்பேன்” என்று பிராமணர் பத்திரிகைகள்தான் வெளியிட்டன. ராஜா அவர்கள் விருப்பமுள்ளவர்கள் மாறலாம் என்றும், சிவசண்முகனார் அவசரப்பட வேண்டாம் என்றுதான் கூறினார்கள். (இணைப்பைப் பார்க்க ஹிந்து 11.11.1935). எப்படியிருப்பினும் இந்நிகழ்ச்சியால், ஆதிதிராவிடச் சமுதாயத்திற்குத் தடங்கல் நேர்ந்ததாகச் சான்றுகள் இல்லை. ஆகவே இதைப் பெரிதுபடுத்திப் பேசுவதில் பயனில்லை. அவருடைய 47 ஆண்டுகால உழைப்பைக் கணக்கிட்டு – இரண்டாண்டு கால சிறு கொள்கை மாற்றத்தால் சமுதாயத்தை நிச்சயமாகப் பாதிக்கவில்லை என்பதால் பெருந்தலைவருடைய பிற்கால வாழ்க்கையைத் தாங்கள் பாராட்டாமல் போனாலும், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குறைக்கூறவும் போவதில்லை. எனவே, அன்புகூர்ந்து பெருந்தலைவர் எம்.சி.ராஜா அவர்களைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள முயற்சியுங்கள்.

“மாற்று அரசியல் இயக்கத் தலைவர்களைக் காட்டிலும், மாற்றுச் சமுதாயத்தினரைக் காட்டிலும் அதிகமாக அண்ணலுக்குச் சிரமம் கொடுத்த பெருமை இவரையே சாரும்…”

அண்ணல் பாபாசாகேப்பும் பெருந்தலைவரும் நேரிடையாக மோதிக் கொண்டதோ, சாடிக் கொண்டதோ அல்லது அறிக்கைகளால் தாக்கிக் கொண்டதோ பற்றித் தகவல்கள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. கிடைத்த விவரங்கள் கூட பிற சாதியினர், கட்சியினர் பத்திரிகைகள் மிகைப்படுத்திக் கூறியவற்றையே பார்க்க நேர்ந்தது. தாங்கள் இந்த முடிவிற்கு வந்ததின் காரணம் தனஞ்செய் கீர் (Life and Mission, P.196, 202, 203, 279-80) செய்திகளை ஆதாரமாக எடுத்துக்கொண்டீர்கள் போலும், ஏனெனில் பாபாசாகேப் தனிப்பட்ட வகையில் பெருந்தலைவரைப் பற்றி ஓரிரு இடங்களைத் தவிர (Writings and Speeches – Vol. V.P. 356-358) வேறெங்கும் கடுமையாகக் குறைக் கூறியதாகத் தெரியவில்லை. கீர் அவர்கள் சுவைக்காகவும் (பாபாசாகேப்பை மகிழ்விக்கக் கூட) மிகைப்படக் கூடக் கூறியுமிருக்கலாம் – பாபாசாகேப் அவர்கள் பெருந்தலைவர் ராஜா அவர்களை வட்ட மேஜை மாநாட்டிற்குத் தேர்ந்தெடுக்காததற்கான காரணத்தை (Writings and Speeches – Vol. V. P. 356) தெளிவாகக் கூறியுள்ளார். ஆயினும் பெருந்தலைவர் அவர்களுக்குப் பாபாசாகேப் அவர்கள் மீது கோபப்படக் காரணம் இல்லை.; முதுபெரும் தலைவர் சீனிவாசனார் மீதுதான் கோபம் என்பது சிலருக்குத்தான் தெரியும் – அதை இங்கு விளக்கத் தேவையில்லை என்று கருதுகிறோம். அது கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லை எறிவது போன்றதாகும்.

எப்படி இருப்பினும், அண்ணலுக்கும் பெருந்தலைவருக்கும் மன வேற்றுமை உண்டு என்று கூறும் கீர் அவர்களுடைய கருத்தை எடுத்துக் கொண்ட தாங்கள், அதே கீர் அப்பெரியார்கள் ஒன்று சேர்ந்ததாக (Life and Mission – P.342-343) கூறியிருப்பதை ஏன் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறீர்கள் என்று எங்களுக்குப் புரியவில்லை. அண்ணலும் பெருந்தலைவரும் ஒன்று சேர்ந்து 1942 ல் கிரிம்ஸ் பெருமகனாரைப் பார்க்கச் சென்றதையும், அதே ஆண்டில் இருவரும் ஒன்றுசேர்ந்து ஒரே மேடையில் மாநாட்டில் உரையாற்றியதையும் தாங்கள் ஏற்கத் தயங்குவது ஏன்? அன்றே ஒன்று கூடிவிட்டவர்களைப் பற்றி விவாதிப்பேன்.

ஒன்றை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் – சமுதாயத்தை மையப்படுத்தி நடைபெறும் நிகழ்ச்சிகளை ஐயத்திற்கு இடமில்லாமல் தெரிந்துகொள்ள வேண்டும் – குடும்பப் பெரியவர்கள் ஏதோ காரணத்தால் பிணங்கினால் அதைப் பெரிதுபடுத்திக் குடும்பத்தைப் பிளவு படுத்த நினைப்பது ஒரு நிறைவான சமுதாயப் பணியாகாது – மற்ற இனத்தார். இயக்கத்தார் நம்மைப் பார்த்துச் சிரிக்கவே அது வழிகோலும்!

ஒரு கதை

ஒரு ஏழைப் புலவனுக்குச் சிவபெருமான் ஒரு கவிதையை எழுதிக் கொடுத்துப் பரிசு பெற அனுப்பினான். அந்தப் புலவன் அதை அமைச்சரவையில் படித்துக் காட்டினான். அவைப் புலவன் நக்கீரன் அந்தக் கவிதையில் தவறு இருப்பதாகக் குற்றம் சாட்டினான் – ஏழைப் புலவன் மீண்டும் வந்து சிவனாரிடம் முறையிட, சிவனே அவைக்குச் சென்று வாத மிட்டான். இருப்பினும் நக்கீரன் தவறுதான் என்று கூறிவிட்டான். சிவன் மூன்றாவது கண்ணைத் திறந்து காட்டினான். அப்போதும் குற்றம் குற்றமே என்று வாதாடினான் நக்கீரன். சிவனுக்கு ஒன்றும் புரியவில்லை. வாதாடவும் முடியவில்லை, பேச்சை மாற்றினான்.

சங்கு அறுக்கும் குலத்தவனே நீயா என்னைக் குற்றம் காண்பது என்று குத்தலாகக் கேட்டான் – ஏனென்றால் நக்கீரன் பாண – பறையர் இனத்தைச் சார்ந்தவன்.

அதற்கு நக்கீரன், எனக்காகிலும் குலம் என்று ஒன்று இருக்கிறது. சிவனாரே “உமக்கேது குலம்” என்றான் – ஏனெனில் சிவன் சுடுகாட்டிலும் இடுகாட்டிலும் பறையடித்துக்கொண்டு பாட்டும் கூத்துமாக உழலும் பித்தன். அவன் காலில் ஒரு மணி கட்டப்பட்டிருக்கும். கீழ் சாதியான் வருவதைப் பிறர் தெரிந்துகொள்ள அணிந்து கொள்ளும் அணி அது என்று கூறி சிவன் சுடுகாட்டுப் பறையன் என்று நக்கீரன் கூறுவதாகத் தமிழர் கதைப்பார்கள்.

சிவனோ வேதங்களைப் படைத்தவன் – புலவனும் புரவலனுமாகத் திகழ்ந்தவன் – சிவன் தமிழைப் பெற்றவன் – நக்கீரன் தமிழைக் கற்றவன். இருவருமே பறையர்கள்தான்! இந்தக் கதைக்கு என்ன பொருள்?

ஆரியம், இரண்டு புலவர்களை மோதவிட்டு அவர்கள் இனத்தைப் பழித்து அவர்கள் மொழியை இழிவுபடுத்தி, அவர்களுக்குள் மிகுந்த ஒற்றுமையையும் உணர்வையும் உறவையும் சாகடித்துவிட்டார்கள். இந்தக் கதையையும் அதே இனத்தைச் சார்ந்தவனால் எழுதவும் செய்து விட்டார்கள். பக்தி சொட்டச் சொட்ட சேக்கிழான் என்று கைக்கோளப் பறையன் எழுதிய அறுபத்தி மூவர் “மா கதை”யைப் படித்துப் புரிந்து கொண்டால்… நாம் எல்லாவற்றையும் புரிந்து கொண்டவர்களாகி விடுவோம்.

“அண்ணலின் பெயரால் நூற்றுக்கணக்கான சமுதாய அமைப்புகள் அரசியல் அமைப்புகள் – மன்றங்கள் பெயரளவில் இருந்து வருகின்றன…”

இதற்குப் படித்தவர்களையும் வசதி படைத்தவர்களையும்தான் குற்றம் சொல்ல வேண்டும். படித்தவர்கள் தங்கள் நேரத்தையும் உழைப்பையும் சமுதாயத்திற்குத் தர முன்வர வெண்டும். வசதி படைத்தோர்கள் தங்கள் பங்கினை நல்க வேண்டும் – இருதரப்பாரும் ஒன்றுபட்டுச் சமுதாய வளர்ச்சியையே முக்கியமானதாக எண்ணி தியாக உணர்வுடன் உழைக்க முன்வர வேண்டும். இதற்கெல்லாம் நாம்தான் முன் நிற்க வேண்டும் – பிறரை குறை கூறுவதில் பயனில்லை.

பல சமுதாய அமைப்புகள், தலைவர் பேரால் இயங்கும் அமைப்புகள், வேறு கட்சிகளின் ஆதரவு அமைப்புகளாக இயங்குவதற்கு என்ன காரணம்? நாம் அவர்களிடையே நம் கொள்கைகளைப் பரப்பவில்லை – நமது தலைவர்களின் அறிவு, ஆற்றல் தொண்டுகளைச் சொல்லவில்லை. எனவே நமது சமூக மக்கள் மாற்றார்களிடம் பேசுகிறார்கள். இதை இன்றாவது புரிந்துகொண்டு உழைக்க முயற்சிப்போமா?

“ஆராய முற்பட்டால் “அஞ்சலி” பகுதியில் இடம் பெற்றுள்ளவர்களில் பல பேர் அடிபட்டுப் போகிறார்கள். காரணம், அவர்கள் எல்லாம் பால பாடத்தை “செட்யூல்டு கேஸ்ட் பெடரேஷன்” என்ற பாடசாலையில் படித்துவிட்டுப் பதவிக்காக – சுய வாழ்வு சுகத்திற்காக பெடரேஷனைத் துறந்து மாற்றுக் கட்சிக்குச் சென்றவர்கள்.

நாம் எந்த வண்ணக் கண்காடி அணிந்து பார்க்கிறோமோ அந்த வண்ணத்தில்தான் உலகம் தெரியும் – உள்ளமும் உணர்வும் பார்வையும் வெண்மையாகவே இருந்துவிட்டால் உண்மை தெரியும் அமைதி கிடைக்கும் – தாங்கள் வாதத்திற்கு யாரையாவது இரண்டொருவரைக் குறிப்பிட்டுக்காட்டியிருந்தால் அவருடைய “ஜாதகம்” எப்படி என்று ஆலை ஏதுவாக இருந்திருக்கும். இருப்பினம் இல்லை எடுத்துக் கொள்வோம். இவர்களிடம் படித்தவர்களாக பெரியவர்களாக இருந்தவர்களையே எடுத்துக்கொண்டு ஆராய்வது பயனுள்ளதாக அமையும் என்று கருதுகிறோம்.

ஜெ.சிவ சண்முகம் பிள்ளை எம்.சி., மேயர், எம்.எல்ஏ., ஸ்பீக்கர், எம்.பி

சுவாமி சகஜானந்தர், எம்.எல்சி.

ஈ.எம்.ரத்தினசாமி, எம்.பி.

பி.பரமேசுவரன், பி.எ.,

ஏ.ஜெயராமன், எம்.பி., எம்.எல்.ஏ.மினிஸ்டர்

முதலியோர்களைத் தங்கள் வாதத்திற்கு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளலாமா? மற்றவர்கள் எல்லாம் கிட்டத்தட்ட உதிரிகள்தாம்!

திரு.ம.பரமேஸ்வரனை எடுத்துக்கொள்வோம்! இவர் முதுபெருந் தலைவர் இரட்டைமலை சீனிவாசனாரின் பேரர். பி.ஏ, படித்தவர். பெடரேஷனில் அதிகப்படியான சலுகைகளையும் உதவிகளையும் எதிர்பார்த்தார். பதவிகளிலும் மோகம் உள்ளவராதலால் பெடரேசனில் சாதாரணமானவராக இருக்க நேர்ந்தது. அத்துடன் 1935ன் அரசியல் அலையும் அதைத் தொடர்ந்து செட்யூல்டு இன மக்களை இழுக்க வேண்டுமென்ற தவிர்க்க முடியாத காங்கிரஸ் இயக்கத்தின் நிலையும் – காந்தியாரின் ‘ஹரிஜன்’ நாடகமும் புயல் வேகத்தில் செயல்பட்டது – காய்ந்து போனவர்களுக்கு கொரிக்க அடிக்கடி கிடைக்க வேண்டுமே அது நம்மிடம் இல்லை – அது தேவைப்பட்டவர்கள் மாற்றார் போட்ட தூண்டில் சிக்கினர் – இதுதான் பெரும்பாலானோர் நிலை – பிஞ்சி ஏ.ஜெயராமன், மக்கியமாநகர் ஏ.எம்.ரத்தினசாமி எல்லாம் இத்தகையவர்களே, இல்லையென்றால் இவர்களுக்கு எம்.எல்.ஏ. எம்.பி பதவிகளோ மற்றவையோ கிடைக்க வழியில்லை!. ஆனாலும் அவர்கள் நல்லவர்கள். பரமேசுவரன் 1944ல் பெடரேசன் செயலாளராக இருந்து அண்ணலை வரவேற்றவர்…. நல்ல பெடரேஷனிஸ்ட்!?

சுவாமி சகஜானந்தர் – தூய்மையான ஒரு துறவி. நமது சமுதாய மக்களைக் கல்வித் துறையில் கடையேற்ற வேண்டுமென்று முயன்று வெற்றி கண்டவர். அவர் பணிக்கு நமது செல்வந்தர், செல்வாக்காளர், அரசியலாளர், பொதுமக்கள் ஆகியோர் உதவ முடியவில்லை. ஆதிதிராவிடர் மகாஜன சபை போன்ற பல்வேறு சமுதாய அமைப்புகளில் தீவிரமாக இருந்தவர். ஹரிஜன் என்ற பெயரால் ஏதாவது கிடைத்தால் நந்தனார் பள்ளியை நல்லவிதமாக நடத்திச் சமுதாய மக்களுக்குப் பயன்படச் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தார். பலன் கிடைத்தது – நந்தனார் மடத்திற்கே வந்து ஆசிர் வழங்கிய காந்தியாரின் பிடியிலிருந்து மிள முடியாமற் போயிற்று – அவ்வப்போது தந்தை சிவராஜ் போன்றவர்களைத் தாக்கினால் ‘அந்தப் பக்கத்திலிருந்து” கொஞ்சம் கிடைக்கும் – நந்தனார் மடம் வளரும். இது தவிர்க்க முடியாததாகவிட்டது. ஆரம்ப காலத்தில் காந்தியாரை எதிர்த்த அவர் அகில இந்திய தேசியத்தில் ஐக்கியமாகிவிட்டார். தவறில்லை. அவரைக் குற்றம் கூறிப் பயனில்லை. இன்று அவர் ஏற்படுத்திய கல்விக் கூடங்கள் பலபேருடைய கண்களை திறந்து கொண்டிருக்கின்றன.

அண்ணல் பாபாசாகேப் அவர்கள் அறக்கட்டளை மூலம் பல கல்வி, தொழிற் கல்வி நிலையங்களைத் தொடங்கியதும், அதற்காக அவர்பட்ட இன்னல்களையும் நாமறிவோம். நமது சமுதாய மக்கள் அதற்காக ஒரு பைசா கொடுத்திருப்பார்களா என்பது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. அதே முறையைத் தந்தை பேராசிரியர் முயன்று கண்ட அவல நிலையையும் நாம் பார்த்தவர்கள். எனவே, சமுதாய அமைப்பாக இருந்தாலும், அரசியல் அமைப்பாக இருந்தாலும் அவை நிலைத்து நிற்க பொருள் அத்தியாவசியமானது. அது மட்டும் நம்மிடையெ கிடைப்பது மிக அரிது! நம்மிடம் எப்போது பணமும் மனமும் இருக்கும் என்று சொல்ல முடியாது. பொருளும், புகழும் வேண்டுவோருக்கு ‘இரை’ போட பெடரேஷனில் என்ன இருந்தது? அவர்கள் இரை தேடிப் பறந்த புறாக்கள்!

தந்தை சிவசண்முகனார் பெடரேஷனிலிருந்த முக்கியத் தலைவர்களில் ஒருவர். எம்.ஏ.பட்டதாரி. அவர் பி.ஏ. படித்துக்கொண்டிருந்த போதே பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இவர்தந்தை சிவராஜ் அவர்களோடு இறுதிவரையில் இணைந்து செயல்பட்டிருந்தால் சிறப்பாகவே இருந்திருக்கும். அதே போல் முதுபெருந்தலைவர் சீனிவாசனாரும், பெருந்தலைவர் எம்.சி.ராஜாவும் ஒருங்கிணைந்து பணியாற்றி யிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அல்லது இந்த நான்கு பேருமே சேர்ந்து செயல்பட்டிருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். அது வாய்க்காமல் போய்விட்டது! காங்கிரஸ் தலைவர் திரு.சத்தியமூர்த்தி சிவசண்முகனாரைக் காங்கிரஸ் இயக்கத்தில் சேரும்படியாகக் கேட்டார். சிவசண்முகனார் மறுத்துவிட்டார் என்று 15.12.1934 சுதேசமித்திரன் எழுதியது.

1936-ம் ஆண்டு தேர்தல் நேரம், அன்றுவரை ஒன்றாகவும் நன்றாகவும் இருந்த பெடரேஷனில் சிறிது விரிசல் ஏற்பட்டது. தந்தை சிவசண்முகனாரும் அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்களும் ஒரே தொகுதியில் வேட்பாளர்களாக நிற்க விரும்பினார்கள் இருவருக்கும் ஆயிரம்விளக்கு தொகுதியில் மிக்க செல்வாக்கு உண்டு. தொகுதி மக்களும் இந்த நிலையை வருத்தத்தோடு கண்டு குழம்பினார்கள். அன்னையார் பிடிவாதமாக இருந்தார். தந்தை சிவராஜ் அவர்களால் சமாதானம் செய்ய முடியாத நிலை. ஆயினும் அன்னையாருக்கு இதமாக எடுத்துக்கூறி, விட்டுக்கொடுக்கும்படி ஆலோசனை கூறினார். அன்னையார் அப்போதும் தந்தை சிவசண்முகனார் விட்டுத்தரும்படி ஒரு வேண்டுதல் கடிதம் கொடுத்தால் விட்டுக் கொடுப்பதாகக் கூறினார். தந்தை சிவராஜ் இதைத் தந்தை சிவசண்முகனாரிடம் எடுத்துச் சொன்னார். தங்கையை விட்டுக் கொடுக்கும்படி கேட்க நான் வெட்கப்படவில்லை என்று கூறி எழுதிய கடிதத்தோடு அன்னையாரை நேரில் சந்தித்துக் கேட்டுக் கொண்டார். அன்னையாரும் ‘வாபஸ்’ வாங்கிக் கொண்டார். இரண்டு தரப்பினரும் பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்துக் கொண்டார்கள் என்று எல்லோரும் நம்பினார்கள். ஆனால், அது இருவருடமும் ஆறாத புண்ணாக ஆகிவிட்டது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு தந்தை சிவசண்முகனார் பெடரேஷனிலிருந்து விலகி – சிறிது காலம் நீதிக் கட்சியில் இருந்துவிட்டு – அவர் பிடிக்க அலைந்துகொண்டிருந்த – காங்கிரஸ் கட்சியில் அடைக்கலமானார். இது தவிர்க்க முடியாத நிலையாகிவிட்டது.

1922 லேயே காந்தியாரை மிகக் கடுமையாக எதிர்த்த தந்தை சிவசண்முகனாருக்குக் கடைசிப் புகலிடம் இந்த ‘கர்ப கிரகம்’ தானா என்று வருந்தியவர்கள் உண்டு. என்ன செய்வது நம்மவரை நமது திண்ணையில் அமரக்கூட நாம் அனுமதிக்கவில்லையென்றால் அவர்கள் எதிர்த்தவீட்டு வாசலுக்குத்தானே செல்லுவார்கள். இதை நாம் இன்றாவது உணருவோமா – இருப்பினும் சில காலத்திற்குப் பிறகு அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்கள் ஆயிரம் விளக்கில் காங்கிரஸ் சார்பில் பொதுத் தொகுதியில் நின்றபோது தந்தை சிவசண்முகனார் அன்னைக்காகத் தேர்தலில் ‘உழைத்தார்’ பழைய பகைமை அவர்களிடத்தில் எங்களால் பார்க்க முடியவில்லை.

அஞ்சலி பகுதியில் குறிப்பிட்டவர்களில் மிக முக்கியமானவர்கள் தந்தை சிவசண்முகனார்தான். அவரை நாம்தான் துரத்தினோம். தவறு அவருடையதல்ல. அறிந்தவர்க்கு மட்டுமே இது புரியும். எனவே, ‘அஞ்சலி’ பகுதியில் இடம் பெற்றவர்களில் பலபேர் அடிப்பட்டுப் போகிறார்கள் என்ற தங்கள் கருத்து ஏற்புடையதல்ல.

R.P.I.யை எடுத்துக் கொள்வோம். தந்தை காலத்திலேயே தொடங்கிவிட்ட பிணக்குகள், தாதாசாகேப் காலத்தில் வலுவடைந்தது – தந்தையால் அடக்கி வைக்கப்பட்டவர்கள் தாதாசாகேப் காலத்தில் அதிக பாடுபடுத்தினார்கள் – தாதாசாகேப் நோய்வாய்ப்பட்டிருந்தார் – இயலாமை விரிசலை அகலப்படுத்தியது. அமைப்பில் பெரும் புள்ளிகளாக இருந்த (காபரகம், மௌரியா, ரூபவதை, பண்டாரை, யஷ்வந்த், சுட்டி, கவாஷ், அனைவரும் இந்த விரிசல்களால் பிரிந்து சிதறிப் போனார்கள். இதிலும் கூட சிலவற்றை வெளியில் சொல்ல முடியவில்லை. ஏனென்றால், கண்ணாடி முன் நின்றுகொண்டு காணும் உருவத்தைத் திட்டுவதற்கு ஒப்பாகிவிடும்!

குறைவாகவே இருக்கிறார்கள். இதை நாம் ஒத்துக்கொள்வதில் தயக்கம் காட்டத் தேவையில்லை – வெட்கப்பட அவசியமுமில்லை.

அறப்போராட்டம் என்று தாங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள்? அண்ணல் நடத்திய சவ்தார் குளம் போராட்டமும் கலாராம் கோயில் போராட்டமும் அறப் போராட்டங்களா? உரிமைப் போராட்டங்களா? இன்று நமக்குத் தேவைப்படுவது எது? அந்த இரண்டு போராட்டங்களுக்குப் பிறகு அண்ணல் ஏன் வேறு போராட்டங்களில் இரங்கவில்லை. அதுபோன்ற காரணங்களை எல்லாம் ஆராய்ந்து கூற, தெளிவுப்படுத்த இன்று நம்மிடையே யாராவது இருக்கிறார்களா?

ஒவ்வொருவரும் அண்ணலின் கொள்கைகளைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவர்களுடைய கடமையாகும். இருப்பினும் அண்ணலின் கொள்கைவழி நின்று வெற்றி பெறக் கூடியவர்களாய் மாறுவோர்களை ‘அறவுரை’ குழப்பாமல் அரசியல் கொள்கையை நிச்சயம் தெளிவுபடுத்தும் என்று மட்டும் நாங்கள் உறுதிகூறுவோம். நாங்கள் என்றுமே அண்ணலின் கொள்கைகளில் குழப்பமில்லாதவர்கள் – கொள்கை விளக்கு வாதவிடுவதில் தடுமாறாதவர்கள். அண்ணலின் அரசியல் கொள்கைகளை முதன் முதலில் நூல் வடிவில் வெளியிட்டவர்கள். இதில யாருக்கும் ஐயம் தேவையில்லை.

“நமது சமுதாயத்தில் வாழுகின்ற அனைத்துத் தரப்பு மக்களையும் திருப்திப்படுத்த முயலுகின்ற காரியத்தைக் காட்டிலும், அண்ணலின் இலட்சியங்களுக்காக – அந்த இலட்சியங்களை வென்றெடுக்குப் பாடுபடுகின்ற அண்ணல் உருவாக்கிய அரசியல் இயக்கத்திற்காக – அவ்வியக்கத்தைத் தலைமையேற்று நடத்துகின்ற தலைமைக்காக அந்தத் தலைமை உயர்த்திப் பிடிக்கின்ற நீலவண்ணக் கொடிக்காக தங்களின் பத்திரிகையைப் பயன்படுத்துவது – ஏன் அர்ப்பணிப்பது சிறப்பான செயலாக அமையும்…”

திருப்திப்படுத்த முயலுகின்றோம் என்ற தங்கள் கருத்தே தவறானதாகும். எந்த இடத்தில் எவரைத் திருப்திப்படுத்த முயன்றிருக்கிறோம் என்பதைத் தாங்கள் சுட்டிக் காட்டியிருக்க வேண்டும். இதில் மறைத்துக் கூறத் தேவையில்லை! சமுதாய முன்னேற்றத்தை மையப் படுத்திப் பேசும்போது `சிலேடை’யில் பேசுவதில் பயனில்லை. குறை கூறுவதாக இருந்தாலும் அது நேரிடையாக இருக்க வேண்டும். அப்போதுதான் கருத்துப் பரிமாற்றங்களுக்கு உண்மையான விளக்கம் கிடைக்கும். சமுதாயப் பிரச்சினைகளை மேலும் மேலும் ஆராய அது வழிகோலும்.

நாங்கள் தாக்கவோ, தழுவவோ நினைக்கவில்லை – விரும்பவுமில்லை – அது எங்களுக்குத் தேவையுமில்லை. தாங்கள் ‘அனைத்துத் தரப்பு’ என்பது இனங்களையா இயக்கங்களையா என்று ஊகிக்க முடியவில்லை.

இனம் என்று கருதினால் நமது இயக்கம் ஒரு குறிப்பிட்ட இனத்திற்காக ஏற்படுத்தியதல்ல. ஜனநாயக சமுதாய அமைப்பில் இது விரும்பத்தக்கதல்ல. ஆனால் ஒரு குறிப்பிட்ட இனத்தார் ஆளுமையில் ஓர் இயக்கம் இருக்கலாம். தவிர்க்க முடியாத நிலையின்போது – கட்சி என்று தாங்கள் கருதினால், அனைத்து இயக்கங்களிலிருந்தும் நமது சமுதாயச் சகோதரர்களை நாம் அழைத்து வர அல்ல – இழுத்துவர முயற்சி செய்ய வேண்டும். நமது சகோதரர்கள் மற்ற இயக்கங்களில் இருப்பது அவர்களுடைய தவறுதான். என்றாலும் கூட அவர்களை அங்கே விட்டு வைப்பதும் நமது தவறுதான் என்பதை நாம் வெட்கப்படாமல் ஒப்புக்கொள்ள வேண்டும். அவர்களை அந்நியரிடத்தில் விட்டு வைப்பது நமக்கு இழப்பு மட்டுமல்ல ஆபத்தும் கூட, சமுதாய மற்றும் பாசமும் மறக்கப்படுமானால் அவர்களே நமக்கு எதிரிகளாவார்கள். அல்லது அந்நியர் அவர்களைப் பயன்படுத்தி நம்மை அழித்துவிட முயற்சிப்பார்கள். இதுபோன்ற நிலைகளை நாம் வரலாறு முழுவதிலும் காணலாம். இதை நாம் விரைவாக உணர்ந்தாக வேண்டும்.

மகாபாரதக் கதையை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட கோளாறு பல குடும்பங்களை அழித்ததைக் காணலாம். இராமாயணத்தைப் படியுங்கள். இது இரு குடும்பங்களின் பகைமைதான். இருவேறு இனங்கள் – மாநிலத்தவர் இரண்டே பேர் பலரைக் கொன்று நாட்டை அழித்திருக்கிறார்கள். இது எவ்வாறு முடிந்தது? வீமனன், அனுமன், வாலி போன்றவர்கள் அந்நியரோடு சேர்ந்து உறவினரைக் காட்டிக் கொடுத்ததும் – இராவணனும் வாலியும் தம் சகோதரர்களை அந்நியரிடம் செல்ல வைத்த முட்டாள்தனமும் தான் குடும்பம், உற்றார் உறவினர், நாடு அழியக் காரணமாக அமைந்ததை இக்கதையால் அறியலாம்.

ஆதிதிராவிடர்களின் சமுதாய – அரசியல் வீழ்ச்சிகளுக்கு ஆதிதிராவிடர்களும் ஓரளவுக்குக் காரணம் என்றால் மிகையாகாது. பிற இயக்கங்களுக்குச் சென்றவர்கள் போக மிகுதி இருந்தவர்கள் – இருப்பவர்களாவது அமைப்பை வளர்த்திருக்கலாம். இதற்கு யாரைக் குறைக்கூறுவது, பொறுப்பாக்குவது, பிற கட்சிகளில் இருக்கும் நமது ஆதிதிராவிடச் சகோதரர்கள் நமக்குப் பகைவர்களா? இந்தியக் குடியரசு என்ற பெயரில் பல அமைப்புகளில் இருப்போர் நமது உறவினரா?

இவர்களை எல்லாம் ‘திருப்தி’யடைய வைப்பதற்கு அறவுரை முயற்சிக்கிறது என்று எண்ணுகிறீர்களா? ‘திருப்திப்படுத்த’ என்ற சொல் கொடுமையானது ஆதாயத்தை எதிர்பார்த்துச் செய்வது, சுயநலமிக்கது, காட்டிக் கொடுப்பது, அழிப்பது என்ற வகையைச் சேர்ந்ததாகும். இத்தகைய வலிவான வார்த்தையைக் கேட்டு வருந்துகிறோம். யாரையும் திருப்திப்படுத்தும் கட்டாயம் எங்களுக்கு இல்லை. அந்த நிலை ஏற்பட்டால் அறவுரை பத்திரிகையை நிறுத்திக் கொள்வோம்.

1956க்கு முன்னும் பின்னும் நாங்கள் அண்ணல் பாபாசாகேப் அவர்களுடைய தூய வழியில் இருந்தவர்கள் – இருப்பவர்கள். எனவே, அவர் வகுத்த வழியிலேயே அறவுரை பத்திரிகையை நடத்துவோம். இதில் எந்தவித ஐயமும் தேவையில்லை. எங்கள் அறிவிற்கும் அனுபவத்திற்கும் ஏற்ற வகையில் சமுதாய, அரசியல், சமயத் துறைகளில் அண்ணல் கொள்கையை மக்களுக்குக் காட்டிட முயல்வோம் – சகோதரர்கள் விரும்பி ஏற்றால் மகிழ்வோம். குறைகளைச் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்வோம் – இறுதியாக “பத்திரிகைப் பயணத்தைத் துவக்கியுள்ள தாங்கள் தங்கள் பாதையையும் சரியாகவே அமைத்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப உண்டு” என்று தாங்கள் எங்கள் மீத ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருப்பதைக் கண்டு பெருமிதமடைகிறோம். எங்களது சீரிய பயணம் வெற்றியடைய தங்கள் இதய வாழ்த்தை ஏற்று அறவுரை பத்திரிகைக் குழுவினர் என்றும் அண்ணல் கொள்கைக்கு இழுக்கு வராமல் நடந்து கொள்வார்கள் என்று உறுதி கூறுகிறோம்.

 

அன்புடன்

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!