தன்பாலினத் திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்த வழக்கில் இருவர் மாறுபட்ட தீர்ப்பை வழங்க, பெரும்பான்மை அடிப்படையில் மூவர் அளித்த தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ‘திருமணத்திற்கான சட்ட அங்கீகாரத்தை வழங்குவது குறித்து நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். நீதிமன்றத்தால் சட்டத்தை உருவாக்க முடியாது, சட்டத்தைப் பாதுகாக்கத்தான் இயலும்’ என்று விளக்கினார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்.
இவ்வழக்கின் பின்னணியைத் தெரிந்துகொள்வதற்கு முன் பால்புதுமையினர் பற்றிய உரையாடல் இங்கு எந்த அளவிற்கு நடந்துள்ளது என்பதை விவாதிப்பது முக்கியம். வரலாற்றுக் காலம் தொட்டே பால்புதுமையினர் இருந்துள்ளனர் என்பதைப் பல்வேறு ஆவணங்கள் கவனப்படுத்தியிருக்கின்றன. பக்தி இலக்கியங்களும், நவநீதப் பாட்டியல் போன்ற இலக்கண நூல்களும் பால்புதுமையினருக்குச் சிறப்பான இடத்தைத் தந்துள்ளன. ஆனால், சமூக அளவில் இவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பது கேள்விக்குறியே. பால்புதுமையினர் குறித்த வசவுச் சொற்கள் அதிகம் புழங்குவதிலிருந்து, அவர்கள் பெரும் சமூக ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருப்பதைத் தெரிந்துகொள்ளலாம். அவர்களுக்கான நாகரிகமான பெயரைக் கண்டடைவதற்கே 21 நூற்றாண்டுகள் கடந்துவிட்டன என்பது நம் மொழிப் பெருமை, பண்பாட்டுப் பெருமை ஆகியவற்றுக்கு நேர்ந்த இழிவு.
இந்தியத் தண்டனைச் சட்டம் (இபிகோ) பிரிவு 377 குறித்தும், சிறப்புத் திருமணச் சட்டம் (1954) குறித்தும் தெரிந்துகொள்வது முக்கியம். ‘தன்பாலுறவு, மிருகத்துடனான உறவு போன்ற இயற்கைக்கு மாறான புணர்ச்சி குற்றமாகும். இதற்கு ஆயுள் தண்டனை அல்லது அபராதத்துடன் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும்’ என்கிறது இபிகோ 377 பிரிவு. நம் கலாச்சாரக் காவலர்களும் மதத் தலைவர்களும் இதே கருத்தைத்தான் முன்வைக்கிறார்கள். இயற்கைக்கு மாறானது என்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. பரிணாம வளர்ச்சியில் நாம் உடை அணிந்ததும், விவசாயம் செய்ததும், உணவைச் சமைத்ததும்தான் இயற்கைக்கு மாறானவை, உடலுறவு அல்ல. அதேவேளை விலங்குகளுடன் உறவுகொள்வது, குழந்தைகளை வன்கொடுமை செய்வது, விருப்பமில்லாதவருடன் உறவுகொள்வது போன்றவற்றைக் கருத்தில்கொண்டே இச்சட்டத்தை அணுக வேண்டும். இந்திய அரசும் இந்தப் புரிந்துகொள்ளலுடன்தான் செயலாற்றியிருக்கிறது. நீண்டகாலப் போராட்டத்திற்குப் பிறகு 2009ஆம் ஆண்டு தன்பாலுறவு குற்றமல்ல என்று தீர்ப்பு வழங்கியது டெல்லி உயர் நீதிமன்றம். அதை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டு, இறுதியில் 2018ஆம் ஆண்டு இத்தீர்ப்பை உறுதிசெய்தது உச்ச நீதிமன்றம். தன்பாலுறவைக் குற்றவிலக்குச் செய்த 125ஆவது நாடு என்ற ‘பெருமை’ பெற்றது இந்தியா.
சாதி – மத மறுப்புத் திருமணங்களை அங்கீகரிக்கும் வகையில் சிறப்புத் திருமணச் சட்டம் (1954) இயற்றப்பட்டது. வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் இச்சட்டம் பொருந்தும். இந்தச் சட்டத்தின் கீழ் திருமணமானவர்கள் மற்றும் அவர்களது குழந்தைகளின் சொத்துகள் இந்திய வாரிசுரிமைச் சட்டத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. இச்சட்டத்தின் பிரிவு 4 – இல் ‘Any two persons’ என்று உள்ளது. அதில் இணைப்பதன் மூலம் தங்கள் திருமணமும் அங்கீகரிக்கப்படும் என்பதுதான் தன்பாலீர்ப்பாளர்களின் கோரிக்கை. இதை எதிர்ப்பதன் மூலம், இதன் ஆதாரமான சிறப்புத் திருமணச் சட்டத்தை ரத்து செய்யக் கோருவதன் மூலம் சாதி – மத மறுப்புத் திருமணங்களை இல்லாமலாக்குவதுதான் மதவாதிகளின் நோக்கம்.
பால்புதுமையினர் இன்று அடைந்திருக்கும் நிலையானது, நெடும் போராட்டத்திற்குக் கிடைத்த சிறு வெற்றி என்பதே உண்மை. இதில் சில என்ஜிஓக்களின் பணி முதன்மையானது. 1988ஆம் தொடங்கப்பட்ட ஏபிவிஏ (ABVA) என்ற அமைப்பு இந்தியாவின் முதல் எய்ட்ஸ் பாகுபாடு எதிர்ப்பு இயக்கமாகும். இந்தியாவில் உள்ள தன்பாலீர்ப்பாளர்களின் நிலை குறித்து 1991இல் இவ்வமைப்புச் சமர்ப்பித்த ‘Less than Gay’ அறிக்கை, திருமணம் உள்ளிட்ட பால்புதுமையினரின் உரிமைகளைப் பொதுவெளியில் கோரியது. இம்மாதிரியான உரையாடல்களே நம் தேசத்தின் ஜனநாயகத் தன்மையை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. சமூக வளர்ச்சிக்கான ஆய்வு மையமும் (CSDS) அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வில், இந்தியாவில் 19 சதவீத மக்களே தன்பாலின திருமணங்களை ஆதரிக்கின்றனர். நகரங்களில் வாழ்பவர்களே அதிகம் எதிர்க்கின்றனர் என்பது கூடுதல் செய்தி. மத ரீதியாகவும் அவர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள். அதிகபட்சமாகக் கிறித்தவர்களும் (70%), குறைந்தபட்சமாக இந்துக்களும் (22%) தன்பாலினத் திருமணங்களை எதிர்க்கின்றனர்.
உலக அளவில் 34 நாடுகள் மட்டுமே தன்பாலினத் திருமணங்களை அங்கீகரித்திருக்கின்றன. வல்லரசு நாடுகள், விடுதலை கருத்தியல்களை முன்வைத்த நாடுகள் எனப் பலவும் பால்புதுமையினர் குறித்த போதிய புரிதலின்மையோடுதான் இருக்கின்றன என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. ஆசிய நாடுகளில் பிலிப்பைன்ஸ், ஜப்பான் ஆகியவை தவிர பிற நாடுகள் தன்பாலீர்ப்பைக் கடுமையாக எதிர்க்கின்றன என்கிறது பியூ ஆராய்ச்சி மையம் (Pew). அந்த வகையில் அரசியலமைப்புச் சட்டத்தாலும் ஜனநாயகத் தன்மையிலான உரையாடல்களாலும் இந்தியா சற்றே முதிர்ச்சியான மனநிலையில்தான் இருக்கிறது என்பது சற்றே ஆறுதல். குறிப்பாக, தமிழ்நாட்டில் திருநர்களுக்கான நலவாரியம், அரசு மருத்துவமனைகளில் (சென்னை, மதுரை) அவர்களுக்கான அறுவைச் சிகிச்சை வசதிகள், பால்புதுமையினரை அணுகும் முறை குறித்து எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் அளித்திருக்கும் பயிற்சி ஆகியவை முன்மாதிரியான நடவடிக்கைகள்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்திருக்கும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட், ‘ஒருவர் தன்னுடைய வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை என்பது, சுதந்திரமாக வாழ்தலுக்கான அரசியலமைப்புப் பிரிவு 21இன் கீழ் வருகிறது. எனவே, தன்பாலீர்ப்பாளர்கள் உட்பட அனைவரும் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க உரிமை உண்டு. பிற தம்பதிகளுக்கு வழங்கப்படும் உரிமைகள் தன்பாலினத் தம்பதிகளுக்கு மறுக்கப்படுவது அவர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும்.
ஒருவேளை சிறப்புத் திருமணச் சட்டம் ரத்து செய்யப்பட்டால், அது நாட்டைச் சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்துக்கு அழைத்துச் செல்லும். எனவே, சிறப்புத் திருமணச் சட்டத்தில் மாற்றம் வேண்டுமா என்பதை நாடாளுமன்றமே முடிவு செய்ய வேண்டும்’ என்று தெரிவித்திருப்பது நீதித்துறை மீதான நம்பிக்கையைக் காப்பாற்றியிருக்கிறது. அரசு சார்பாக வாதாடிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘தன்பாலினத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் கேட்பது நகர்ப்புற மேல்தட்டுப் பார்வை’ என்றுரைத்ததற்கு சந்திரசூட் அளித்த பதிலும் நம் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. துஷார் மேத்தாவின் கூற்று வேறுவகையில் முக்கியமானது. ஒருவேளை இந்த வழக்கில் பால்புதுமையினர் வெற்றி பெற்றிருந்தாலும் நகர்ப்புறங்களில் உள்ளவர்களே அதிகம் பயன்பெறுவர் என்பதை மறுக்க முடியாது.
முன்பே குறிப்பிட்டதுபோல் பால்புதுமையினர் இன்று அடைந்திருக்கும் நிலையென்பது, சாதாரணமாகக் கிடைத்ததல்ல. இந்தத் தீர்ப்பும் அத்தகையதே. இப்போது யாரும் தங்கள் அடையாளத்தை மறைக்க விரும்புவதில்லை. தன்பாலினம் குறித்த குழப்பம் உள்ளவர்களும் அதை வெளிப்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. இவ்வுரையாடல் அடுத்தகட்டத்திற்குச் செல்ல வேண்டிய தருணம் வந்துவிட்டது. பள்ளிகள்தோறும், கிராமங்கள்தோறும், அலுவலகங்கள்தோறும் பால்புதுமையினர் பற்றிப் பேசியாக வேண்டும். ஆண்டுதோறும் நடைபெறும் பிரைட் பேரணி கிராமங்களிலும் நடைபெற வேண்டும். பள்ளிகளிலும் அலுவலகங்களிலும் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற வேண்டும். பல்வேறு வசைச் சொற்களிலிருந்து திருநர் என்ற சமூக ஏற்புக்கு வந்துவிட்டோம். இதை இன்னும் சற்று விரிவாக்கி பால்புதுமையினரில் உள்ள அனைத்துச் சொல்லாடல்களையும் பொதுவெளிக்குள் புழங்க வைப்பதில்தான் நமக்கான வெற்றி இருக்கிறது. சட்ட அங்கீகாரம் என்பது முதல் படிதான். அதன்மூலம் சில உரிமைகளைப் பெற முடியும். ஆனால், அதையும் தாண்டிப் பயணிக்க வேண்டியுள்ளது. பாதையை உருவாக்கி வைப்போம்…