அரசியல் என்பது தேர்தல் அரசியல் மட்டுமேயல்ல

தலையங்கம்

ந்தியா தனது நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கிறது, ஐந்து மாநில தேர்தலோடு சேர்ந்து முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தல் வரக்கூடுமோ என்கிற விவாதமும் ஒருபுறம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் ஜனநாயகத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியில் நீடித்தால் ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பாக இருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும். இதற்கான முன்னோட்டங்களை நிகழ்காலத்தில் பார்த்துவருகிறோம். இத்தகைய சூழல் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸுக்குப் பின்னடைவோ இல்லையோ பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வருவது, பழங்குடி – தலித் மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின்  அரசியலுக்கும் பெரும் பின்னடைவாக அமையும் ஆபத்து இருக்கிறது.

தமிழக அரசியல் சூழலையே கருப்பொருளாக எடுத்துக்கொண்டு பார்த்தால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னே அதிமுக நிழலில் தன்னை ஊன்றிக்கொண்டது பாஜக. ஊடகம் மற்றும் சமூகவலைதள கருத்துருவாக்கத்தால் கிட்டத்தட்ட எதிர்க்கட்சியைப் போல முன்னிறுத்தப்படுகிறது பாஜக. தமிழக அரசியல் சூழலே திமுகவுக்கும் பாஜகவுக்குமானதாக மாறியிருக்கிறது. அதிமுக சிதறுண்டதும் ஊடகங்களில் பாஜகவுக்குக் கொடுக்கப்படுகிற முக்கியத்துவம் உள்ளிட்டவை முக்கிய காரணிகளாக இருக்கிற அதே வேளையில், மற்றுமொரு கோணத்திலும் இதை அணுக வேண்டியிருக்கிறது. 2021இல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு  திமுகவுக்கும் அதிமுகவுக்கும் அவ்வப்போது அறிக்கைப் போர் நிகழ்ந்தாலும் அது சம்பிரதாயமாகவே இருந்திருக்கிறது. உட்கட்சி சண்டை, சட்டப்போராட்டம் என தலைமையைக் கைப்பற்றவே அதிமுகவுக்குச் சரியாக இருந்தது. அதைத் தவிர, வேறெந்த அரசியல் செயல்பாடுகளிலும் அது ஈடுபடவில்லை. இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்ட பாஜக, திமுக அரசின் அன்றாட அரசியலை விமர்சிப்பதின் மூலம் தன்னை எதிர்க்கட்சியாகப் பாவித்துக்கொண்டது. தமிழகத்தின் இருபெரும் கட்சிகளுக்கு இணையாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்வதை முதற்படியாகக் கருதும் பாஜக, அதன் தொடர்ச்சியாக எதிர்க்கட்சி அந்தஸ்தை அடைவதற்கான முன்னோட்டமாகவும் இதைப் பயன்படுத்திக்கொண்டுள்ளது. மாநில அரசின் கொள்கைகள், திட்டங்கள், சமூகச் சிக்கல்களைக் கையாளுவதில் இருக்கும் பிரச்சினைகள் ஆகியவை குறித்து மக்கள் நலன் சார்ந்து கூர்மையான விமர்சனங்களை வைக்கக்கூடிய கட்சிகள் யாவும் திமுக கூட்டணியில் இருப்பதால் ஆரோக்கியமான அரசியல் சூழல் இல்லாத நிலையே நிலவுகிறது.

வெகுஜன மக்களிடத்திலும் அரசியல் களத்திலும் பாஜகவுக்குப் போதிய செல்வாக்கு இல்லாதிருப்பது ஆசுவாசத்தைக் கொடுத்தாலும் திமுக – பாஜக எனக் கட்டமைக்கப்பட்டிருக்கும் இருமை அரசியல், தமிழக நலன் சார்ந்து சிந்திக்கும்போது ஆபத்தான போக்காகவே தெரிகிறது. திமுகவுக்கு நிகரான எதிர்க்கட்சி என்ற இடத்தில் முற்போக்கான ஒரு கட்சி நிலைத்திருப்பதுதான் தமிழகத்திற்கு அரணாக இருக்க முடியும். அரசியல் களத்தில் அதிமுக எந்தவொரு  தாக்கத்தையும் ஏற்படுத்தாத சூழலில், வீரியமாகச் செயற்படும் விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் போன்ற கூட்டணிக் கட்சிகள் எதிர்க்கட்சி இடத்தைப் பிடிப்பதற்கான சாத்தியங்களும் தற்போதைக்கு இல்லை. நாட்டின் சூழல் கருதி கூட்டணியைத் தக்க வைக்க வேண்டிய பொறுப்புத் தங்களுக்கு இருப்பதால் விமர்சன அளவில் கூட கூர்மை இல்லாமல்தான் சமீப ஆண்டுகளாகக் கூட்டணிக் கட்சியினரின் நடவடிக்கைகள் இருக்கின்றன.

தற்காலிகமாக இதுவொன்றே தீர்வு என்பது நிதர்சன மானாலும் மொத்த அரசியல் எதிர்காலத்திற்கும் இப்போக்கு ஆரோக்கியமானதல்ல. பாஜக துடைத்தெறியப்பட வேண்டும் என்கிற ஒற்றை நலன்தான் இத்தனை சமரசங்களுக்கும் வழிவகுக்கிறது. 2024இல் பாஜக வீழ்த்தப்பட்டால்தான், பேசப்படாமல் இருக்கும் விடயங்களை முன்வைத்து அரசியல் செய்யும் ஆரோக்கியமான போக்கு நீடிக்கும். இல்லையெனில், நூறாண்டுக்கும் மேலான சமூக, அரசியல் போராட்டத்தின் விளைவாய் இங்கே நடந்த எல்லா மாற்றங்களையும் மீண்டும் பின்னுக்குத் தள்ளி மதச்சார்பின்மை, ஜனநாயகம், இட ஒதுக்கீடு, அரசியலமைப்புச் சட்டம் போன்றவற்றை மீட்பதிலேயே முற்போக்குச் சக்திகளின் ஆற்றல் வீணடிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும்.

பழங்குடி, தலித் மக்களின் அரசியல் என்பது வெறும் அரசு திட்டங்களைக் கண்காணிப்பது, விடுபடும் உரிமைகளை மீட்டெடுப்பது மட்டுமேயல்ல. சமூக – அரசியல் – பொருளாதார ரீதியாக இம்மக்கள் அடைய வேண்டிய விடுதலை என்பது இன்னும் தொலைதூரத்தில் இருக்கிறது. அரசியல் சூழல் கருதி நமக்கிருக்கும் நியாயமான விமர்சனங்களை, விடுபடல்களை, போதாமைகளைப் பதிவு செய்வதிலிருந்து சுருக்கிக்கொள்ளும் நெருக்கடிக்குள் தள்ளப்படுகிறோம். ஒருபுறம் பாஜக தனது கிளை அமைப்புகளைக் கொண்டு மக்கள் எதைப் பேச வேண்டும், எதற்குப் போராட வேண்டும் எனத் தீர்மானிக்கிறது. மறுபுறம் பாஜகவை அரசியல் ரீதியாக மட்டுமே எதிர்க்கும் பலருக்கும் இந்தச் சூழல் சாதகமாக இருக்கிறது. பாஜக எதிர்ப்பு என்ற பெயரில் இன்னபிற ஆரோக்கியமான விமர்சனங்களையும், பதற்றமான அரசியல் சூழல் என்கிற காரணிகளைக் கொண்டே புறந்தள்ளுகின்றனர். குறிப்பாக, தலித் அரசியல் தளத்திலிருந்துவரும் விமர்சனங்களில் உள்ள நியாயமான கருத்தையும் தட்டிக்கழிக்கின்றனர். பாஜக எதிர்ப்பு என்பதில் அணியமாக வேண்டிய அவசியம் இருந்தாலும் சமூக யதார்த்தத்தில் சாதி இந்துக்கள் தங்களின் சாதியக் கட்டமைப்புக்கும் வர்க்க நலன்களுக்கும் கீறல் விழாதபடியே அரசியலைக் கட்டமைக்கிறார்கள். இந்த இடைக்காலப் போராட்டத்திற்காக நம் நெடுங்காலப் போராட்டத்தை அவ்வப்போது தற்காலிகமாக ஒத்தி வைத்தாலும் மீண்டும் அவை முன்னெப்போதைக் காட்டிலும் புதிய வேகத்தில் பரிணமிக்க வேண்டியதாகிறது.

புரட்சியாளர் அம்பேத்கர் நவீன சமூகச் சிந்தனை கொண்ட உறுதிமொழிகளோடு பௌத்தம் தழுவிய மாதம் இது. தேர்தல் அரசியல் மட்டுமே சமூகத்திற்கு ஒட்டுமொத்தத் தீர்வை அளிக்கும் என்று நம்பியவரல்லர் அவர். ‘அரசியல் எனது அவ்வப்போதைய செயல்பாடாக இருந்திருக்கிறதே ஒழிய சமூக மாற்றம் சார்ந்து சிந்திக்கும், பேசும் தளங்களில் இருப்பதையே நான் பெரிதும் விரும்புகிறேன்’ என்றவர்.. பார்ப்பனிய சிந்தனைவாத மயக்கம் கொண்ட இந்நாட்டில் அரசியல் என்பது தேர்தல் அரசியல் மட்டுமேயல்ல. பண்பாடு உள்ளிட்ட பல தளங்களில் முற்போக்குச் சக்திகள் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. அரசியல் அதிகாரத்தின் மூலம் அதைத் தடை செய்துகொண்டிருக்கும் பாஜகவைப் போன்ற பாசிச சக்திகளை வீழ்த்திக்கொண்டே புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்துக்கொடுத்த சமத்துவச் சமூகத்தை அடைவதற்கான எல்லா வழிகளையும் கண்டடைவோம். தொடர்ந்து இயங்குதல் ஒன்றே அதைச் சாத்தியமாக்கும். ஜெய்பீம்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!