நிறுத்தம் என்பதெல்லாம் சும்மா ஒரு பாவனைக்குத்தான், அங்கே மிகச்சரியாக நின்றாகவேண்டிய கட்டாயமொன்றுமில்லை என்று சொல்லிச் செய்யப்பட்டது அப்பேருந்து. அதன்படி சம்பந்தமேயில்லாத ஓரிடத்தில் நிறுத்தி இறங்கவேண்டியவர்களுக்கு மட்டுமேயான தனது கருணையைக் காண்பித்துக் கொண்டிருந்தது. கூட்டத்திலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு, எட்டிப்பிடிக்கச் சாத்தியமேயில்லாத தூரத்திலிருந்த பேருந்தை நோக்கி நடக்க முற்பட்டான். “அது எங்க நிக்கிது ஏன்டா? நீ போயி ஏறிடுவியா?” என்றவள் அவனது கைப்பிடித்து நிறுத்தினாள். அதனுள் பலமுறை விழுந்து நொறுங்கிய கோப்பையின் ஒலி அவசரமாக ஒளித்து வைக்கப்பட்டது. அவனை அன்றுதான் முதன்முதலில் பார்த்தேன். இயல்பின் எதிர்ச்சொல் உருவத்திலிருந்தான். மற்றவர்களுக்கும் பேருந்துக்கும் இடையேயான தூரத்தை எவ்வளவு சுருக்கியும் நீட்டியும் கூட, அது அவனுக்கும் பேருந்துக்குமான தூரத்தோடு பொருந்திப் போகாமலிருந்ததே அவனது பிறவி சிக்கல். கைகளைப் பற்றிக்கொண்டு அவனருகே நின்றிருந்தவளை நன்கு அறிவேன். அவள் எனது மேலதிகாரி. பஞ்சகாலத்தில் பசியாறத் திறக்கப்பட்ட கதவுகள், அப்படிக்கட்டுகள். அதில் தொங்கிக்கொண்டிருந்த ஆட்களோடு பேருந்து எங்களைக் கடந்துபோனது. பிறகு போராடி வேறொரு பேருந்திலேறி அலுவலகம் வந்து சேர்ந்தோம்.
m
ஊரிலிருந்து அழைப்பு வந்ததுமே நினைத்தது நடந்துவிட்டது என்ற பெருமித உணர்வு ஒருகணம் தோன்றி மறைந்ததை எண்ணி நெளிந்தேன். நடந்திருக்கக்கூடிய சாத்தியங்கள் அனைத்தையும் ஊருக்குச் சென்றுசேரும் வரைக்கும் கற்பனை செய்துகொண்டே போனேன். அதில் பாதி, நிஜத்தில் நிகழ்ந்திருந்தால்கூட அப்பாவைக் காப்பாற்றிவிடமுடியும் என நம்பினேன். அவருக்கு அடையாளம் தெரியவில்லை, தங்கையின் பெயரைச்சொல்லி என்னை அழைத்தார். என்ன ஆனது என்பதை ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது.
அதிகமில்லை, ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருக்கலாம். பலமுறை தலை தூக்கிப் பார்த்தும், கயிற்றுக்கட்டிலில் படுத்துக்கிடந்த தாத்தாவுக்கு அப்பாவை அடையாளம் தெரியவில்லை. அன்றுதான் அவர்களிருவரது உடல்களும் ஒன்றையொன்று அறிந்து கொண்டிருக்கவேண்டும். பார்வையிழந்த மாடு, தான் ஈன்றதை நாவால் அறிய விரும்புவது போல ஒருவரையொருவர் நீவிக்கொண்டனர். அன்று ஏனோ எனக்குத் தோன்றியது, அப்பாவும் ஒருநாள் இதே போன்ற காட்சியில் இருப்பார் என.
எனக்கு அவரருகில் போக விருப்பமில்லை. அப்பாவின் சிறுநீரில் மிதமிஞ்சிய தொற்று இருப்பதை மருத்துவமனையில் உறுதி செய்தார்கள். வாய் குழறியது, அடையாளக் குழப்பங்களெல்லாம் அதன் அறிகுறிகள்தான் என்றார் மருத்துவர். மூன்றுநாள் கவனிப்புக்குப் பிறகு, எனக்காக மட்டும் அவர் சேகரிப்பில் எப்போதுமிருக்கும் புன்னகையைத் தந்தார்.
ஊரை நீங்கும்போது நினைத்துக்கொண்டேன், “விதியென்பது முன்னது ஒன்றின் தொடர்ச்சி மட்டும்தான்”
m
வயதில் சிறியவளது இருக்கையிலிருந்து இறங்கும் படிகளில் கடைசிக்கும் கீழே அமர்ந்து வேலை பார்ப்பதில் சில சங்கடங்கள் உண்டு. அதில் முதன்மையானது, காலையில் வணக்கம் சொல்லும் சடங்கு. சாபம் பெற்றுக் கல்லாகிக் கிடக்கும் ஒன்றிடம், அன்றாடம் வழிகேட்பதற்கு நிகரானது அச்சடங்கு. தூரத்தில் வணக்கம் வைக்க வருபவனை உறுதிசெய்த பிறகு, தவறவிட்டுவிடக் கூடாத இலக்கை கண்டறிந்த வேட்டை மிருகத்தின் கண்களோடு ஆழ்ந்து சிந்திப்பவர்கள் கொண்டிருக்கும் முகபாவத்தையும் சேர்த்து, கச்சிதமாக நான் பணிந்து நிற்பதற்கு எதிர்த்திசையில் திரும்பிக்கொள்வாள். காத்திருந்து நிகழ்த்தவேண்டிய சடங்கு என்பதால் உடனடியாக எதையும் எதிர்பாராமல் வணக்கத்தை அவள் பெற்றுக்கொண்டதற்கான சிறு அசைவிற்காகக் காத்திருப்பேன்.
அவள் இன்னொருவரோடு கொண்டிருக்கும் உரையாடலின் பொருட்டு நானும் அழைக்கப்படுவேன். அவர்களின் வட்டத்திற்குள் உரையாடலின் ஓரேழுத்துச் சொல்லாகக்கூட என்னால் நுழைய இயலாது. மேஜைக் காற்றாடியைப்போல அவர்களை மாறிமாறி பார்த்துவிட்டுச் சங்கிலி அவிழும் வரை பொறுமையாகக் காத்திருந்து, பிறகு நன்றியுரைத்து திரும்புவேன். அலுவலகத்தில் இப்படி மரியாதை நிமித்தம் பங்கெடுக்கும் போதெல்லாம் என் உள்ளாடையின் பொத்தல் வழி ஒளியொன்று அகலவாக்கில் பாய்கிறது.
குழுவாக சாப்பிடச் செல்கையில், நான் விழுங்கும் கவளங்களை கவனமாக எண்ணி அதன் மதிப்பை, பரிமாறியவனுக்குச் சில்லறையாகத் தருவாள். அதன் எதிரொலியை வயிற்றுக்குள் அடக்கம்செய்ய, அடுத்த அரைமணி நேரத்திற்குள்ளாக ஒரு காப்பி அருந்துவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.
அவளுக்கு இப்படியொரு மகன் இருப்பதை அறிந்தபோது வெளியே கொஞ்சம் வானிலை மாறியிருந்தது.
m
அன்று முழுவதும் அவன் அலுவலகத்தில் இருக்கப்போவதாகச் சொன்னார்கள், அதிகாரிக்கு மாடியில் வருடாந்திர சந்திப்பாம். வெள்ளைத் தாள்களும் வண்ணங்களும் தரப்பட்டு மகன் தனியாக அமர வைக்கப்பட்டான். அவனது கண்களைத் தொடர்ச்சியாகப் பார்க்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தேன். அவனுக்குப் பயன்படாத சலுகைகளைத் தந்து பணியாளர்கள் தங்களது விசுவாசத்தைக் காண்பித்துக் கொண்டிருந்தனர். அவனது விருப்பமெல்லாம் வெள்ளைத்தாளுக்கு வெளியேதான் இருந்தது. புலன்களைக் கொண்டு கூடுமானவரை அலுவலகத்தை அறிய முயன்று கொண்டிருந்தான். அவ்விடத்தில் வேறெதையும் விடச் சுவர்களின் மீதுதான் அவனது வியப்பு படர்ந்திருந்தது, அதையொட்டியே நடந்துகொண்டிருந்தான். அவனுக்கும் சுவருக்குமான உரையாடலை அங்கிருந்தவர்கள் எவருமே கண்டுகொள்ளவில்லை. மதிய உணவுக்காக மாடிக்குச் சென்றுவந்தவனை அதன்பிறகு பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அலுவலக அடுக்கின் அடிப்படையில் என்னிடம் வந்தது.
என் மேஜையிலிருந்த பேப்பர் வெயிட் அவனை மிகவும் கவர்ந்தது. அதில் கண்களை வைத்துப் பார்த்து அசிங்கமாகச் சிரித்தான். அதை உருட்டி விளையாடுவதற்கென்றே ஒரு நாற்காலியை எடுத்து என்னருகே அமர்ந்தான். என் சம்பளத்தில் பாதியிருக்கும் அவன் உடை, இருந்தும் அவனை மறைக்க அது போதாமல் தானிருந்தது. எட்டாவது படிப்பவனுக்கு உண்டான மொழியல்ல அது, மொழியே அல்ல அது. அவன் சொல்லவருவதைப் பெற்று, அதைக் கோத்து மீண்டும் சொன்னால் சரியா தவறா என்பதை மட்டும் தொந்தரவு (முன்பற்கள் இரண்டு உடைந்திருந்தது இதற்குக் காரணமல்ல) செய்யும் ஒரு சிரிப்பால் சொல்லிக்கொண்டிருந்தான். அவனுக்கான நேரத்தைத் தராமலிருப்பது ஒன்றே, பல ஆண்டுகள் இந்த அலுவலகத்தில் வேண்டி விரும்பும் ஆசுவாசத்தை எனக்குத் தருமென்று நம்பினேன், பிறகு அவன்மூலம் சிலதை சொல்ல வேண்டியிருந்ததால் பேச ஆரம்பித்தேன்.
Illustration : KeemoArchive
உடல் உறுப்புகளைச் சொல்லித்தர ஆசிரியர்களுக்குப் பயன்படும் வண்ணப் பலகையொன்று வடிவமைப்பு அலுவலகத்திலிருந்ததில் ஆச்சரியமொன்றுமில்லை. அதை எடுத்து, என் மேஜையில் வைத்தேன். அவன் சிரித்தான். அதீத கருமை நிறத்திலிருந்த கேசத்தை அப்படத்தில் தொட்டேன். ஓயாமல் அலையடித்துக்கொண்டிருக்கும் கரங்களை நீட்டி என் தலையை நோக்கிவந்தான். பின்னால் சாய்ந்து “உன்னோட… உன்னோட…” என்றேன். தளைப்பதற்கு முன்பே பொசுங்கிய மயிர்களைக்கொண்ட மண்டையைத் தொட்டான். இடுங்கிப்போன கண்களையும் கன்னங்களையும் அவன் தொட்டுக்கொண்டிருந்தபோது, நான் படத்திலிருந்த விரல்களில் கைவைத்திருந்தேன். அதைத் தொடர்ந்து, தன் இரு கை விரல்களையும் தலைக்கு நேரே கொண்டுவந்து பார்க்க முயன்றான். எவ்வளவு முயற்சித்தும் அவனுக்கு அது சாத்தியப்படவில்லை. அத்தருணத்தில் நான் சாய்ந்தமர்ந்திருக்க வேண்டும், ஆனாலும் நுனியிலமர்ந்து தான் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
உயரமானவன் எனினும் முப்பதுகளின் இறுதியில்தான் எனக்குத் திருமணம் முடிந்தது. அவனைவிடவும் மூன்று வயது இளையவனான என் மகனது நிழற்படத்தைத் திறன்பேசியில் காண்பித்தேன். அவனது ஒவ்வோர் அங்கங்களையும் திரையைத்தொட்டு பெரிதாக்கினேன். என் மகன் குறித்த பெருமிதம் நிறையவே உண்டு என்னிடம். அதை முகத்தில் கொண்டுவந்து அவனுக்கு அறிமுகம் செய்தேன். அதற்கும் சிரித்தான். நான் கடத்தவருவதைப் புரிந்துகொண்டவன் போல ஆவேசமாக இருக்கையிலிருந்து எழுந்து சுற்றியிருந்த பொருட்களை ஒவ்வொன்றாகத் தொட்டுத்தொட்டு பெரிதாக்க முயன்றான். அவன் தொட்டதும் விரிந்தவற்றை எனக்குக் காண்பித்தான், சிரித்தான்.
அலுவலகக் கழிவறை சுத்தத்திற்குப் பெயர்போனது. தரையிலிருந்து ஒரு சிறிய மேடை அமைத்து அதன் சுவரில் நான்கு வெண்ணிற மூத்திர சட்டிகளைப் பதித்திருப்பார்கள். டைல்ஸ் கற்களுக்கு இடையேயான அந்த இடைவெளி, இன்னும் சிறிதுநேரம் நின்றாலென்ன என்று நினைக்கவைப்பது. அவனை அங்கே அழைத்துச்சென்றேன். வழக்கத்திற்கு மாறாக மேடை மீதேறாமல் தரையிலிருந்தே சிறுநீர் கழித்தேன். அதன் ஓட்டத்தின் நீளத்தை அவனுக்குக் காட்டினேன், சிரித்தான். அவனை அங்கேயே விட்டுவிட்டு இருக்கைக்குத் திரும்பினேன்.
கழிவறையிலிருந்து அவன் திரும்புவதற்காகக் காத்திருந்தேன். எதிர்பார்த்ததற்கு மாறாகக் கால்சட்டை நனையாமல் என்னருகே வந்தமர்ந்தான்.
m
இன்று அவன் வருந்திய கணங்கள் என்று அநேகமாக எதுவுமில்லை. அவனால் இயலாதவை எல்லாம் அவன் உலகிற்கு வெளியே தானிருந்தன. அவனுக்கு நான் நிகழ்த்திக் காட்டியவை எல்லாமும் சாகசங்கள், மனிதனுக்காக இயற்கை வான்பிளந்து வெட்டும் மின்னல்போல. அவனைக்காட்ட நீட்டிய நிலைக்கண்ணாடியில் என்னுடைய பிம்பம் தான் மாறி மாறி விழுந்துகொண்டேயிருந்தது.
m
கிளம்ப இன்னும் ஒரு மணிநேரம் இருக்கையில் அவனது டைரியை என்னிடம் தந்தான். பெரும்பாலான பக்கங்களில் நீலநிற பால்பாயிண்ட் பேனாவைக் கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் மட்டுமே இருந்தன. அவனிடமில்லாத திருத்தம் அவற்றிலிருந்தது. நிஜங்களின் பிரதிபலிப்பாக அவை இல்லை. நிகழ வாய்ப்பில்லாத கனவாகவோ கற்பனையாகவோதான் அவை தோற்றம் கொண்டிருந்தன. கிட்டத்தட்ட அவனது நாற்பது ஓவியங்களிலிருந்து நான் அறிந்துகொண்டவை இவை:
- தெருவில் நாம் அலட்சியமாகக் கடந்துபோகும் உருவில்தான் கடவுள் இருக்கிறார்.
- அவரது கரங்கள்தான் வெளியே மிதந்துகொண்டிருக்கும் மனிதர்களைப் பூமிக்கு உள்ளே இழுத்துப்போடுகின்றன.
- அவன் தனது பின்னங்கழுத்தில் ஒரு மலையைத் தாங்கிக்கொண்டிருக்கிறான். அதன் உச்சியில் கடவுள் இடதுகையில் உடுக்கையோடு ஆடிக்கொண்டிருக்கிறார்.
- அவனது அடிவயிற்றிலும் கால்களுக்கு இடையேயும் கும்பலாக நின்று உதைத்தவர்கள், நான்கு பக்கங்கள் கடந்து கடவுளுக்கு முன்பாக நின்றிருந்தார்கள். அவர் அவர்களை மன்னிக்கும் அல்லது ஆசிர்வதிக்கும் முகபாவத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
- குடல் சரிந்த நாய்க்குட்டியை மடியில் படுக்கவைத்து முலையூட்டிக் கொண்டிருக்கிறான். அவனது மற்றொரு காம்பு சிறுத்து, இயல்பாக இருக்கிறது.
- அவன் உடலில் ஒடுங்கியிருந்த, சூம்பியிருந்த பாகங்களுக்கு, கடவுள் மருதாணி வைத்துக்கொண்டிருக்கிறார்.
- பூமிக்கு வெளியே மிதந்துகொண்டிருந்த இவனை, ஜேசிபி இயந்திரத்தின் கரங்களையொத்த ஒரு கை பின்னங்கழுத்தைப் பிடித்து உள்ளே இழுத்தது.
- சாலையோரப் பள்ளங்களெல்லாம் தனக்குப் பசிக்கும்போது கடவுள் தோண்டி உண்டவை.
- அவனது தலையளவு துளையிட்டு, ஐஸ் பெட்டிக்குள் நுழைந்து, அதனுள் படுத்திருந்தவரின் வலது காதருகே பலூன் ஊதிக்கொண்டிருக்கிறான்.
- கடவுள் அவனை பூமியின் உச்சி வரைக்கும் தூக்கிப்போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்.
- இரண்டு ராட்சத இராட்டினங்களைச் சுற்றி, தனது முட்டிக்கு அருகே கிழிந்திருந்த கால்சட்டையைக் கடவுள் தைத்துக் கொண்டிருக்கிறார்.
- காதுகளை கடவுள் கழட்டிவைக்கும் தருணங்கள்தான் பூமியில் இரவாக மலர்கிறது.
- கடவுள் பருகியது போக மிச்சமிருக்கும் தண்ணீரை கத்தரிக்கோலால் சிறிது சிறிதாக நறுக்கி பூமிக்கு மழையாக அனுப்புகிறார்.
- பறவையின் இரு சிறகுகளில் ஆளுக்கொரு பக்கம் அமர்ந்து, அருவியின் பின்பக்கமாகச் செல்கிறார்கள் கடவுளும் இவனும்.
- கடவுள் இல்லாத பக்கங்களில் எல்லாம் மண்டியிட்டு, அவன் தன்னைத்தானே மன்னித்துக் கொள்கிறான்.
மாடியிலிருந்து அவள் பார்ப்பது போலிருந்தது.
m
விதியென்பது முன்னது ஒன்றின் தொடர்ச்சி மட்டுமல்ல.