தலைநிமிர்வின் அடையாளம்: தில்லைவிடங்கன் செல்லப்பா

அருள் முத்துக்குமரன்

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டாரப் பகுதியில் பெத்தான் சாம்பான் முதலில் செயல்பட்டிருந்தாலும் நமக்குக் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் முதல் தலித் இயக்கமாக மெட்ராஸ் செடியூல்டு காஸ்ட் பெடரேசன் சுவாமி சகஜானந்தர் தலைமையிலேயே செயல்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையிலேயே எம்.சி.ராஜா, என்.சிவராஜ் போன்றோர் நந்தனார் பள்ளிக்கு வருகை தந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தக் காலகட்டத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியான கடலூர் மாலுமியார் பேட்டையில் தொடங்கி, சிதம்பரம் வட்டாரம் வரையிலுள்ள பகுதியில் வாழும் பட்டியல் சமூக மக்கள் உள்ளூர்ப் பகுதிகளில் நடைபெற்ற சாதிய வன்முறைகளிலிருந்து விடுபட்டு, பொருளாதாரப் பலம்பெற அண்டை நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டனர்.

அம்மக்கள் தன்னளவில் பொருளாதாரப் பலம் பெற்றது மட்டுமல்லாமல் புலம்பெயர்ந்த நாடுகளில் வட்டார அளவில் சிறு சிறு அமைப்புகளைத் தொடங்கினர். அதன் மூலம் உள்ளூர் அளவில் தம் மக்களுக்குச் சமூகப் பணிகளைச் செய்யத் தொடங்கினர். அப்படியாகச் சிதம்பரம் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து மலேசியா சென்றவர்கள் குறிப்பாக, தில்லைவிடங்கன் ஆ.மருதப்பா போன்றவர்கள் சக வட்டாரப் பகுதி நண்பர்களுடன் இணைந்து தன்னுடைய சொந்தக் கிராமமான தில்லைவிடங்கனில் சமூக உணர்வுடன் செயல்பட்ட செல்லப்பா மூலம் அப்பகுதியில் சாதியக்கொடுமைகளுக்குள்ளான மக்களுக்காகப் பாடுபட்டனர்.

ஆ.மருதப்பா போன்றவர்களின் உதவியுடன் தன்னுடைய சமூகப் பணியைத் தொடங்கிய செல்லப்பா, தீண்டாமைக்கு எதிராக மக்களுடன் இணைந்து பணியாற்றினார். ஒருகட்டத்தில் முதுமை காரணமாக மருதப்பாவின் உதவி நின்ற பிறகும் தொடர்ந்து பட்டியல் சமூக மக்களுக்காகப் பாடுபட்டார்.

இளமை பருவம்

செல்லப்பா, 1924ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி தில்லைவிடங்கன் கிராமத்தைச் சேர்ந்த பக்ரிசாமிக்கும் ராஜலட்சுமிக்கும் மூத்த மகனாகப் பிறந்தார். தந்தை சொந்த நிலத்துடன் குத்தகைக்குப் பயிரிட்டுவந்தார்.

ஆறு வயதில் தன் தாயை இழந்தார். கல்வி கற்பதில் ஆர்வங்கொண்ட அவர் பின்னத்தூர் அரசினர் கழகப் பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பயின்றார். பின்னர் சுவாமி சகஜானந்தா நடத்திவந்த அரசின் நந்தனார் ஆண்கள் பள்ளியில் ஆறாம் வகுப்பு வரை படித்தார். வேளாள நிலக்கிழார்களின் பேச்சைக் கேட்டு செல்லப்பாவின் படிப்புக்கு அவரது தந்தையே இடையூறு செய்தார். அதனால் ஆறாம் வகுப்பிற்கு மேல் அவரால் படிக்க இயலவில்லை. தந்தைக்கு உதவியாக விவசாய வேலைகளைச் செய்துவந்தார்.

இளம் வயதிலேயே செல்லப்பா அநீதியை எதிர்த்துப் போராடுபவராக இருந்தார். விளைவாக, அவரது தந்தையும் துன்பத்திற்கு ஆளாகவே, செல்லப்பா ஊரைவிட்டு வெளியேறும்படி வற்புறுத்தப்பட்டார். ஆதிக்கச் சாதியினரின் கொடுமையான செயல்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்று மனம் நொந்த செல்லப்பா இராணுவத்தில் சேர்ந்தார். சிறிது காலத்திலேயே மாறுபட்ட சூழ்நிலை காரணமாக மீண்டும் வீட்டிற்குத் திரும்பினார். சமுதாய சீர்திருத்தங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் முழுக் கவனத்தைச் செலுத்தினார்.

 திருமணம்

1947ஆம் ஆண்டு சீர்காழி பெடரேஷன் தலைவர் கே.பி.எஸ்.மணி தலைமையில் சிதம்பரத்துக்கு மேற்கே உள்ள வீரசோழகன் கிராமத்தில் வசித்துவந்த மதுரம்பாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு தன் இல்லற வாழ்க்கையைத் தொடங்கினார். திருமணம் சுயமரியாதையை நிலைநாட்டும் நோக்கில் நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவர்

1962ஆம் ஆண்டு பஞ்சாயத்து ஆட்சி முறை அமலுக்கு வந்தபோது நடத்தப்பட்ட தில்லைவிடங்கன் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் பட்டாபிராமன் என்பவரைத் தோற்கடித்து தில்லைவிடங்கன் ஊராட்சி மன்றத் தலைவராகத் தொடர்ந்து 30 ஆண்டுகள் செயல்பட்டார். அதன்பிறகு செல்லப்பாவின் துணைவியார் மதுரம்பாள் தேர்ந்தெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ஊராட்சி மீண்டும் பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டபோது செல்லப்பாவின் இளைய மகன் தலைவரானார். செல்லப்பாவின் பதவி காலத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம், ஆரம்பச் சுகாதார நிலையம், தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, தில்லைவிடங்கன் விவசாயக் கூட்டுறவுச் சங்கம், தபால் நிலையம், அரசு நுகர்பொருள் வழங்கு அங்காடி, கீழச்சாவடியில் கால்நடை மருத்துவமனை போன்றவை ஏற்படுத்தப்பட்டன.

கல்வித் தொண்டு

பள்ளிப் பருவத்தில் சுவாமி சகஜானந்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு ஆன்மிகவாதியாக இருந்தார். பின்னர் டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டார். தன்னுடைய கிராமத்தில் படிப்பகம் ஒன்றை அமைத்து, ‘தம்பி’, ‘திராவிட நாடு’, ‘நம்நாடு’ போன்ற பத்திரிகைகள் படிக்க வழிவகை செய்தார். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தன்னுடைய ஓர் ஏக்கர் நிலத்தைப் பள்ளிக்கூடம் கட்டுவதற்குத் தானமாக வழங்கினார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தான் அன்பளிப்பாகக் கொடுத்த நிலத்தில் எருமை மாடு வளர்க்கக் குளம் வெட்டுவதற்கு அதிமுகவினர் முயன்றபோது, அதனை எதிர்த்து ஊர் மக்களுடன் சாலை மறியல் செய்து சிறை சென்றார். நீதிமன்றத் தீர்ப்பில் செல்லப்பா தானமாகக் கொடுத்த நிலத்தில் பள்ளிக்கூடம் மட்டுமே கட்ட வேண்டும் எனத் தீர்ப்பானது.

தில்லைவிடங்கன் ஆதிதிராவிடர் விவசாயச் சங்கம் மக்களிடையே சுயமரியாதையையும் சமூகப் பொருளாதார விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் 1942ஆம் ஆண்டு தில்லைவிடங்கன் கிராமத்தில் ஆதிதிராவிடர் சீர்திருத்தச் சங்கத்தை நிறுவினார். அதை 1950ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் விவசாயச் சங்கத்துடன் இணைத்தார்.

நெருங்கிய நண்பரான தில்லைவிடங்கன் மருதப்பாவின் ஆலோசனையின் பேரில் அவர் அளித்துவந்த நிதியுதவியுடன் இச்சங்க வளர்ச்சிக்காகத் திட்டங்களைத் தீட்டினார். அச்சமயம் மலேசியாவிலிருந்த மருதப்பாவுக்குச் சங்கத்தின் செயல்பாடுகள் கடிதங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர், தொண்டு பத்திரிகையின் ஆசிரியர் திருச்சி வீராச்சாமி அவர்களுடன் தொடர்புகொண்டு சங்க வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிகரமாக இருக்க மருதப்பா கேட்டுக்கொண்டார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் எல்.இளையபெருமாள், சட்டமன்ற உறுப்பினர்கள் சீர்காழி கே.பி.எஸ்.மணி, பி.வேதமாணிக்கம் (தென்னாற்காடு மாவட்ட தாழ்த்தப்பட்டோர் லீக் தலைவர்), எஸ்.சுப்பிரமணியம் (தென்னாற்காடு மாவட்ட தாழ்த்தப்பட்டோர் லீக் துணைத் தலைவர்), ஆடூர் அரசன், சிதம்பரம் பகுதி தாழ்த்தப்பட்டோர் லீக் தலைவர் கோழிப்பள்ளம் வெங்கடாசலம், பண்ணப்பட்டு பெருமாள் ஆகியோரது ஆதரவையும் உள்ளூர் மக்களின் நம்பிக்கையையும் இச்சங்கம் பெற்றிருந்தது.

சங்கம் இரண்டு பகுதிகளாகச் செயல்பட்டது. ஒன்று, விவசாயம் சார்ந்தவை. மற்றொன்று சமூகம் சார்ந்தவை. விவசாயம் சார்ந்தது, நிலம் குத்தகை, சாகுபடி, புறம்போக்கு நிலங்களைத் தலித்துகளுக்குப் பகிர்ந்தளித்தல், விவசாயக் கூலி சம்பந்தமான பிரச்சினைகளில் கவனம் செலுத்தியது.

அதேவேளையில் சமூகம் சார்ந்தது, சீர்திருத்தத் திருமணங்களைச் செய்து வைத்தல், குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்துவைத்தல், திருட்டுச் சம்பந்தமான வழக்குகளை விசாரித்தல், பெண் கல்வியை ஊக்குவித்தல், ஏழைகளையும் முதியவர்களையும் ஆதரித்தல், இழிதொழில் செய்வதைத் தடுத்தல், தீண்டாமை ஒழிப்பு, கல்வியறிவை வளர்த்தல், உடல் நலம் பேணுதல் சம்பந்தமான பிரச்சினைகளில் கவனம் செலுத்தியது.

1952இல் அறிமுகப்படுத்தப்பட்ட தஞ்சாவூர் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம் குத்தகை சாகுபடியாளர்களுக்குச் சாதகமாக இருந்ததால் நில உரிமையாளர்கள் தந்திரத்தாலும் பண பலத்தாலும் அரசியல் செல்வாக்காலும் குத்தகை சாகுபடியாளர்களை நிலத்தைவிட்டு வெளியேற்றினர்.

இத்தகைய பிரச்சினைகள் விவசாயச் சங்கத் தலைவர் செல்லப்பாவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன. அதே சமயத்தில் நில உரிமையாளர்களுக்குக் குத்தகை சாகுபடியாளர்கள் சரிவர குத்தகை கொடுக்கவில்லை என்ற புகார்களும் செல்லப்பா கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுத் தீர்வு காணப்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் செல்லப்பாவிற்கு அளித்த மனுக்களை வாசிக்கும்போது, தலித்துகள் குத்தகை சாகுபடியில் எவ்வாறெல்லாம் நில உரிமையாளர்களால் வஞ்சிக்கப்பட்டார்கள் என்பதை அறியமுடிகிறது. செல்லப்பாவின் தலையீட்டால் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த குத்தகை சாகுபடியாளர்களின் உரிமை பாதுகாக்கப்பட்டது.

தீண்டாமை அனுபவங்கள்

1947க்கு முன்னர் கிள்ளையில் பஞ்சாயத்துக் கோர்ட் செயல்பட்டுவந்தது. கோர்ட்டில் தலித், மீனவர், முஸ்லிம், வன்னியர், பிள்ளை உள்ளிட்ட பல சாதிகளைச் சேர்ந்த ஒன்பது உறுப்பினர்கள் இருந்தனர். தலித் உறுப்பினராக செல்லப்பா இருந்தார். ஒன்பது உறுப்பினர்கள் கொண்ட பஞ்சாயத்துக் கோர்ட்டில் 8 நாற்காலிகள் மட்டுமே போடப்பட்டிருந்தன. செல்லப்பாவுக்குத் தரையில் அமர சாக்குப் போடப்பட்டிருந்தது. செல்லப்பா இதற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார். முஸ்லிம், மீனவச் சமூக உறுப்பினர்கள் ஆதரவாக வெளிநடப்புச் செய்தனர். இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் ஒன்பது நாற்காலிகள் போடப்பட்டுச் சமத்துவம் நிலைநாட்டப்பட்டது.

தாழ்த்தப்பட்டோர் லீக்

தென்னாற்காடு மாவட்டத்தில் தலித் மக்கள் செடியூல்டு காஸ்ட் பெடரேஷன் போன்ற தலித் அமைப்புகளில் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருந்தனர். மேலும், 1960இல் சிதம்பரத்தில் நடைபெற்ற சிதம்பரம் தாலுகா தாழ்த்தப்பட்டோர் லீக் மாநாடு சிறப்பாக நடைபெற முக்கியப் பங்காற்றினார். தென்னாற்காடு மாவட்டத் தாழ்த்தப்பட்டோர் லீக் தலைவர் பி.வேதமாணிக்கம், எம்.எல்.ஏ தலைமையில் அப்போதைய சென்னை மாநில மராமத்து இலாகா மற்றும் அரிசன இலாகா அமைச்சரான கக்கன் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்.இளையபெருமாள், கே.பி.எஸ். மணி, ஆர்.கனகசகப்பிள்ளை, ஆர். கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் சட்டசபை உறுப்பினர்கள் சாமிக்கண்ணு படையாட்சி, பி.அரசன், எஸ்.தங்கவேல், பி.குப்புசாமி, தென்னாற்காடு மாவட்ட தாழ்த்தப்பட்ட காங்கிரஸ் லீக் உதவி தலைவர் எஸ்.சுப்பிரமணியம், எஸ்.எம்.குப்புசாமி, நெடும்பூர் பஞ்சாயத்துப் போர்டு தலைவர், மாவட்ட காங்கிரஸ் செயலாளர் மருவாய் ஜெயராமன், தில்லைவிடங்கன் செல்லப்பா, வடமூர் ஸ்ரீரங்கம் ஆகியோர் மாநாட்டில் கலந்துகொண்டு காங்கிரஸ் மற்றும் தலித் மக்களின் வளர்ச்சி பற்றி பேசினர்.

பெடரேஷன் அமைப்பின் சார்பாக முதல் சட்டமன்றத் தேர்தலில் கடலூர் இரட்டைத் தொகுதியில் உரிமை ரத்தினம் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இப்படி மற்ற மாவட்டங்களில் இல்லாத அளவுக்கு பெடரேஷன் அமைப்பின் நெருக்கடி இங்கு காங்கிரஸுக்கு இருந்தது. இதன் காரணமாகவே தென்னாற்காடு மாவட்டப் பகுதியில் காங்கிரஸில் செயல்பட்ட தலித்துகளுக்குக் கட்சி முக்கியதுவம் கொடுக்கத் தொடங்கியது. சுவாமி சகஜானந்தா, இளையபெருமாள், வேத மாணிக்கம், சிவசுப்ரமணியன், ஆடுர் அரசன், கோழிபள்ளம் வெங்கடாசலம் போன்றவர்கள் வரிசையில் தில்லைவிடங்கன் செல்லப்பாவும் இடம்பெற்றார்.

சிதம்பரம் வட்டாரப் பகுதியில் காங்கிரஸ் தொடர்ந்து தலித்துகளை முன்னிலைப்படுத்திச் செயல்பட்டது. சுவாமியின் இறப்புக்குப் பிறகு சிதம்பரம் நகரில் நடக்கும் முதல் லீக் கூட்டம் வேத மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. 1960களில் தில்லைவிடங்கன் பிர்கா தாழ்த்தப்பட்டோர் லீக் தலைவராக செல்லப்பா செயல்பட்டார். மாநாடுகளையும் பொதுக் கூட்டங்களையும் நடத்துவதற்கு உடல் உழைப்புடன் பொருளாதார உதவியும் செய்துவந்தார்.

1960இல் நடைபெற்ற சிதம்பரம் தாலுகா தாழ்த்தப்பட்டோர் லீக் மாநாடு சிறப்பாக நடைபெற முக்கியப் பங்காற்றினார். தென்னாற்காடு மாவட்டத் தாழ்த்தப்பட்டோர் லீக் தலைவர் பி.வேதமாணிக்கம், எம்.எல்.ஏ தலைமையில் அப்போதைய சென்னை மாநில மராமத்து இலாகா மற்றும் அரிசன இலாகா அமைச்சரான கக்கன் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். மேலும் நாடாளுமன்ற  உறுப்பினர்கள் எல்.இளையபெருமாள், கே.பி.எஸ்.மணி, ஆர்.கனகசபை பிள்ளை, ஆர்.கோபால கிருஷ்ணன் ஆகியோரும் சட்டசபை உறுப்பினர்கள் சாமிக்கண்ணு படையாட்சி, பி.அரசன், எஸ்.தங்கவேல், பி.குப்புசாமி, தென்னாற்காடு மாவட்ட தாழ்த்தப்பட்ட காங்கிரஸ் லீக் உதவி தலைவர் எஸ்.சிவசுப்பிரமணியம், நெடும்பூர் பஞ்சாயத்துப் போர்டு தலைவர் எஸ்.எம்.குப்புசாமி, தென்னாற்காடு மாவட்ட தாழ்த்தப்பட்டோர் லீக் செயலாளர் மருவாய் ஜெயராமன், தில்லைவிடங்கன் செல்லப்பா, வடமூர் ஸ்ரீரங்கம் ஆகியோர் மாநாட்டில் கலந்துகொண்டு காங்கிரஸ் மற்றும் தலித் மக்களின் வளர்ச்சி பற்றிப் பேசினர்.

Illustration : Negizhan 

அம்பேத்கர் மக்கள் இயக்கம

1980ஆம் ஆண்டு வை.பாலசுந்தரம் தலைமையின் கீழ் செயல்பட்ட அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநிலத் துணைச் செயலாளராகச் செயல்பட்டார். மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, சேலம், செங்கல்பட்டு ஆகிய ஊர்களில் நடைபெற்ற அம்பேத்கர் மக்கள் இயக்கக் கூட்டங்களில் பங்குகொண்டு தலித் மக்களிடம் விழிப்புணர்வையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தினார். தீண்டாமைக் கொடுமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவது மட்டுமல்லாமல் தீண்டாமையை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

திருச்சிக்கு அருகில் உள்ள கூத்தப்பார் கிராமத்தில் தலித்துகள் வாழும் பகுதிக்கு இடுப்பளவு தண்ணீர் நிறைந்த வாய்க்காலைக் கடந்து செல்ல வேண்டியதாக இருந்தது. அச்சமயத்தில் பெண்கள் துணி இல்லாமல் வாய்க்காலை கடக்க வேண்டும் என்று சாதி இந்துக்களால் வற்புறுத்தப்பட்டனர். இதை எதிர்த்துத் திருச்சியில் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் சார்பில் மாநாடு நடத்தப்பட்டது. அக்கிராம இளைஞர்கள் எதிரியுடன் போராடவும் துணிந்தனர் எனினும் இரு தரப்பிலும் உயிர்ப்பலியைத் தவிர்க்கும் பொருட்டுத் தன் இன மக்களுடன் ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். அதில் தலித் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளையும் இழிசெயல்களையும் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் எடுத்த நடவடிக்கையினால் கூத்தப்பார் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் அனுபவித்துவந்த கொடுமைகள் முடிவுக்கு வந்தன.

இழிதொழில் ஒழிப்பு

தலித்துகள் பறையடிப்பதையும் இழிதொழில்கள் செய்வதையும் கைவிட வேண்டி தொடர்ப் பிரச்சாரம் செய்துவந்தனர். தாழ்த்தப்பட்டோர் லீக் சங்கத் தலைவர் என்ற முறையில் கிள்ளை காவல்துறை ஆய்வாளருக்கு 13.07.1962 அன்று செல்லப்பா எழுதிய புகார் கடிதம்,

“ஐயா எங்கள் கிராமத்தில் சுமார் ஐந்து வருடமாகச் செத்த பிரேதத்திற்குப் பறைமேளம் அடிக்கக் கூடாது, அது தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்குப் பெருங்கேடு என்ற எங்கள் ஸ்தாபனத்தின் அடிப்படையில் எங்கள் கிராமத்தில் உள்ள பறைமேளங்களைக் கொளுத்தி எரித்துவிட்டோம். இதைத் தெரிந்து எங்கள் கிராம சாதி இந்துக்கள் எங்களுக்கு எதிர்ப்பாக அனுவம்பட்டியில் இருந்து பறைமேளம் கொண்டுவந்து அடிப்பதும் அவர்களை “ஓராபாட்டு” (வெட்டியான் தப்படித்துக்கொண்டு இறந்துபோன சாதி இந்துவைப் புகழ்ந்து வருந்தி பாடுதல்) பாடி ஆடச் சொல்வதும் பெரிய இழிவாக இருக்கிறது. நாங்கள் தீண்டாமை நீங்கி வாழ வேண்டும் என்று காங்கிரஸ் சுதந்திர சர்க்கார் பல சட்டங்களைக் கொண்டு வந்தும் எங்களின் சாதி இழிவு நீங்கியபாடில்லை. ஆகவே, ஆதிதிராவிடர்களும் சாதி இந்துக்களும் எவ்வித கலக்கமும் இல்லாமல் வாழ தாங்கள் முன்னின்று ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன்.”

சமூகச் சீர்திருத்தவாதியான செல்லப்பாவின் விடாமுயற்சியினால் தில்லைவிடங்கன் பகுதியில் சில குடும்பங்கள் தாங்களே முன் வந்து இனி இழிதொழில்களைச் செய்வதில்லை என உறுதியளித்தனர். மேலும் செத்த மாடுகளை அப்புறப் படுத்துவது போன்ற வேலைகளை அவரவர் செய்துகொள்ள வேண்டும் என்று ஆதிதிராவிட விவசாயச் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மது ஒழிப்புப் போராட்டம்

தலித் மக்களை அறியாமையிலும் வறுமையிலும் தள்ளி சிந்தனை ஆற்றலைச் சிதைத்து உடலையும் உள்ளத்தையும் கெடுத்து, ஆயுளையும் குறைத்து, மனைவி மக்களை நிர்க்கதியாக்கி, வாழ்க்கையை இருட்டாக்கிவரும் குடிப்பழக்கத்தை அடியோடு ஒழிக்கப் பலதரப்பட்ட எதிர்ப்புகளுக்கு இடையே செல்லப்பா பல போராட்டங்களை நடத்தினார்.

குடியின் கேடு பற்றிப் பொதுமக்களிடையே எடுத்துரைத்தார். தொண்டர் படையுடன் சாராயம் காய்ச்சும் இடங்களுக்குச் சென்று சாராயப் பானைகளையும் ஊரல்களையும் உடைத் தெறிந்தார். சாராயம் காய்ச்சுபவர்கள் காவல் ஆய்வாளர் உதவியுடன் செல்லப்பா மீது பொய் வழக்குகளைப் புனைந்தனர். சாராய ஒழிப்புப் போராட்டத்தில் அன்றைய தமிழக சட்டமன்ற உறுப்பினர் சுவாமி சகஜானந்தரின் ஆதரவை செல்லப்பா பெற்றிருந்தார்.

சுவாமியிடம் தன்னுடைய பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் கூறி ஆதரவு தாருங்கள் என்று கேட்டுக்கொண்டார். அவர் செல்லப்பாவிடம் “மன தைரியத்துடன் சாராய எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்து, நான் உனக்குப் பக்கபலமாக இருப்பேன். உன்னைக் கொல்ல சதி நடக்கிறது. ஆதலால் எச்சரிக்கையாக இரு” என்று அறிவுரை கூறி அனுப்பியிருக்கிறார். பின்னர் சுவாமி தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட ஆய்வாளரை வேறு இடத்திற்கு மாற்றினார். குடியின் கேடு பற்றி சுவாமி கிராம மக்களிடம் சென்று பிரச்சாரம் செய்துவந்தார் என்பதும் குறிப்பிடதக்தாகும்.

மூட பழக்க வழக்கங்களை ஒழித்தல்

தலித் பண்ணையாட்களை நிலவுடைமையாளர்கள் இழிவாக நடத்துவதையும், பல நாட்கள் முன் சமைத்த சுகாதாரமற்ற உணவைச் சாப்பிடக் கட்டாயப்படுத்துவதையும், விழாக்காலங்களில் வேளாளர்கள் வீடுகளில் தலித் இளம்பெண்கள் கும்மியடிக்கும் பழக்கத்தையும் முடிவுக்குக் கொண்டுவந்தார். வேளாளர்கள் தலித் இல்லத் திருமணங்களில் தலித்களை அடிமையாகக் கரு தலையிடுவதையும் தடுத்து நிறுத்தினார்.

தலித்துகளின் சடலத்தை வயல்வெளி வழியாக எடுத்துச் செல்லும் வழக்கத்தை மாற்றி வீதி வழியே கொண்டுசெல்லுமாறு மக்களிடம் கூறினார். 1970இல் தில்லைவிடங்கன் ஊராட்சிக்கு உட்பட்ட கீழச்சாவடியில் தலித் மக்களின் சடலத்தை வீதி வழியாக எடுத்துச் செல்வதற்கு வன்னியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதே ஆண்டில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெருமாள் இறந்தபோது வன்னியர்கள் எதிர்ப்பையும் மீறி வீதி வழியே செல்லப்பா தன் நண்பர்களுடன் சேர்ந்து எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்தார். அதன்பிறகே தலித்துகளின் சடலத்தைத் தெரு வழியே எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

தில்லைவிடங்கனில் பொன்னியம்மன் திருவிழாவின்போது தலித்துகள் பொன்னியம்மனையும் வேளாளர்களையும் புகழ்ந்து பாடுவதையும், வெட்டியான் தாளம் தப்பிப் பறையடிக்கும்போது புளியங்குச்சியால் அடிக்கப்படுவதையும் தடை செய்யப் போராடினார். பொன்னியம்மனைப் புகழ்ந்து பாடும் பாடல்களில் ஒன்றை தில்லைவிடங்கன் கிராம மக்கள் இன்றும் நினைவுகூர்கிறார்கள்.

பாடல்

‘வறுத்த பயிராம் வராத பயிராம் வாரிக் கொட்டின செம்பயிராம் தொடுத்த மாலை தொங்கத் தொங்கத் தேருமேல எறுவாளாம் பொன்னியாயி…’

விவசாயத்தைச் செழிப்புறச் செய்து வேளாளர்களின் வாழ்வில் வளத்தைக் கூட்டும் தெய்வம் பொன்னியம்மன் என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பதை மேலே குறிப்பிட்ட பாடல் தெளிவுபடுத்துகிறது. தலித் சமுதாயத்தைக் இழிவுபடுத்தும் கன்னி ஆட்டத்தைப் பெரும் முயற்சி செய்து ஒழித்துக்கட்டினார். செல்லப்பாவின் இத்தகைய சீர்திருத்தங்களுக்கு ஊக்கமூட்டுபவராக சுவாமி சகஜானந்தா இருந்தார்.

சாட்டையடிக் கொடுத்துக் கன்னி ஆடச் செய்வது, தீச்சட்டி எடுத்துச் செல்வது போன்ற பழக்கங்களைத் தலித்துகள் கைவிட வேண்டும் என்றும், ஏனைய மக்களைப் போன்று அமைதியான முறையில் கடல் நீராடி வர வேண்டும் என்றும் கடற்கரையில் நடைபெறும் கூட்டங்களில் சுவாமி சகஜானந்தா பேசிவந்தார். தலித் சமூகத் தலைவர்களின் உதவியுடன் சீர்திருத்தக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தார். தைக்கால், நஞ்சமங்கத்து வாழ்க்கை, தில்லைவிடங்கன் போன்ற கடற்கரை கிராமங்களில் மாசி திருவிழா காலங்களில் கூட்டங்களை நடத்தி தலித் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

சுவாமியின் சீர்திருத்தங்களுக்கு செல்லப்பாவின் ஒத்துழைப்பு மிகவும் உதவியாக இருந்தது. இந்துச் சமயத்தின் பேரால் தலித்துகள் திருவிழாவில் இழிவுபடுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் சுவாமி சகஜானந்தருடன் இணைந்து செயல்பட்டார்.

தில்லைவிடங்கன் ஊராட்சிப் பகுதி மட்டுமின்றிச் சிதம்பரம் வட்டாரத்தில் உள்ள பிற பகுதிகளிலும் தலித் விவசாயக் கூலிகளின் கொடுமைகளை எதிர்க்கும் பணிகளை பலத்த எதிர்ப்புக்கு இடையே செல்லப்பா செய்துவந்தார். சிதம்பரம் வட்டம் புவனகிரியை அடுத்துள்ள பெருமாத்தூரில் சுமார் 20 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை மீட்டு 25 தலித் பயனாளிகளுக்குப் பிரித்துக்கொடுத்தார். இதுபோன்ற பல ஆக்கப்பூர்வமான பணிகளைச் சிதம்பரம் வட்டாரப் பகுதியில் செய்துவந்தார்.

பொதுவுடமை இயக்கத்துடன்

கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயத் தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்டிருந்ததாலும், தீண்டாமைக்கு எதிராகப் போராடிவந்ததாலும் செல்லப்பா வெளியில் இருந்து ஆதரவளித்திருக்கிறார். இதன் காரணமாக 1940களில் சிதம்பரம் தாலுகா நிலக்கிழார்கள் மூலம் விவசாயத் தொழிலாளர்களின் ஆதரவாளர்களுக்கு மறைமுகக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டன.

கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிரச் செயற்பாட்டாளர் பின்னலூர் மருதையாவுக்கும் நிலக்கிழார்களுக்கும் நடந்த போராட்டத்தில் மருதையா படுகொலை செய்யப்பட்டார். இதைப் பொருட்படுத்தாமல் செல்லப்பா துணிந்து கோட்டூர் ராசு, மணலி கந்தசாமி போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் தொடர்புகொண்டு விவசாயத் தொழிலாளர்களின் மாநாடுகளை நடத்தினார். 1952இல் மணலி கந்தசாமியுடன் இணைந்து நடத்திய கம்யூனிஸ்ட் விவசாயத் தொழிலாளர் சங்கம் மாநாடு குமராட்சி மற்றும் தில்லைவிடங்கன் கிராமங்களில் நடத்தப்பட்டது. மாநாட்டில் சுவாமி சகஜானந்தா கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பத்துத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தலைவர் செல்லப்பாவின் கரத்தைப் பலப்படுத்திய சிதம்பர வட்டார தலித் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் நஞ்சமங்கத்து வாழ்க்கை கண்ணுசாமி, குண்டுமேடு கோவிந்தராசு, மடுவங்கரை மிட்டாய் கோவிந்தசாமி, மடுவங்கரை ஜெயராமன், புலவர் ஆறுமுகம், புலவர் நாகப்பன், ஜம்புலிங்கம் போன்றோரைச் சொல்லலாம். செல்லப்பாவின் அயராத உழைப்பாலும் விடாமுயற்சியாலும் தில்லைவிடங்கன் ஊராட்சிப் பகுதியில் பண்ணையடிமை முறையும் தீண்டாமைக் கொடுமைகளும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன. இப்படியாகத் தொடர்ந்து சமூகப் பணியில் தன் வாழ்நாள் முழுதும் பாடுபட்ட செல்லப்பா 24 ஜனவரி 2011இல் இயற்கை எய்தினார். தென்னாற்காடு வட்டாரப் பகுதியில் பெத்தான் சாம்பான் தொடங்கி சுவாமி சகஜானந்தா, இளையபெருமாள், செல்லப்பா போன்றவர்களின் உழைப்பால் சிதம்பரம் தாலுகாவில் சாதிய வன்கொடுமைகள் ஒரளவு குறைந்துள்ளன.

l [email protected]

Previous
திரை

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!