எங்கோ மலையுச்சியிலிருந்து
ஓநாயின் குரல் கேட்கிறது.
வானெங்கும் நிறைந்திருக்கும்
நிலவு வெளிச்சத்தில் நின்று
மோவாயைத் தூக்கி ஊளையிடும் அது
தன் மூதாதையர்களை
வருந்தி அழைப்பதுபோல் உள்ளது.
மறவோன் கலக்கமடைந்தார்;
வழிநடத்த ஆளின்றி
முன்னோரின் ஆன்மா தேவைப்பட்ட
கொடூரமான கடந்தகால இரவு
நினைவுக்கு வந்து
அவரை வருத்துகின்றது.
எல்லையில் நடப்பட்டிருந்த
குருதி தோய்ந்த கொம்புகளில்
பூனைகள் நாக்கைப் புரட்டும் காட்சி
குறுக்கும் நெடுக்குமாய்
அவர் மனதில் ஓடுகிறது.
பரந்து விரிந்திருந்த காடுகள்
கொஞ்சம் கொஞ்சமாகச் சுருங்கி
தங்கள் கைகளை விட்டுப் போனதை
அவர் மறந்துவிடவில்லை;
சமவெளிகள் அதிகமாகி
மேய்ச்சல் நிலங்களாக விரிந்ததும்
இருபுறமும் காடு கொண்டு
ஓடிக்கொண்டிருந்த நதி
மறு கரையின் வெறுமையைக்
காணச் சகியாது கலங்கியதையும்
நேரில் கண்ட வாதை
இன்னும் அவரது
நெஞ்சை விட்டுப் போகவில்லை.
♦
தனது மார் மீது படுத்துக்கொண்டு
அன்றாடம் கதை கேட்டு வளரும் பேரனிடம்
இன்று
எந்தக் கதையைச் சொல்வதெனத்
தவித்துக்கொண்டிருந்த மூப்பன்
நூறு பன்றிகளின் பலம் கொண்ட
ஒரு மறவனைப் பற்றியும்;
அவனுடைய காலடிகளைப் பின் தொடர்ந்து
தமது இனம் நடந்தது பற்றியும்;
ஒரு தலைமை ஓநாய்க்கு இருக்கும்
வழி நடத்தும் பண்பு
அவனிடம் இருந்தது பற்றியும்;
வேட்டை நாய்கள் அவனுடைய குரலுக்குக்
கட்டுப்பட்டிருந்தது இயல்பு; ஆனால்,
ஒரு மாபெரும் காடே
அவனுக்குக் கட்டுப்பட்டிருந்த வியப்பு குறித்தும்;
குதிரையின் குளம்படிச் சத்தம்
காட்டுக்கு வெளியே
கேட்கத் தொடங்கிய ஒருநாள்
அவனுடைய சூரியும் ஈட்டியும்
துரு நீக்கப்பட்டது பற்றியும்;
குருதித் துகள்களின் நாற்றம்
ஊரெங்கும் வீசியது பற்றியும்;
காட்டின் உயரமான மரங்களின்
உச்சியில் அமர்ந்து
புல்வெளிகளை உண்ணும் மாடுகளின் எண்ணிக்கையைத்
தாங்கள் கண்காணித்ததைப் பற்றியும்;
மேய்ச்சல் நிலங்களில்
அடிக்கப்பட்டுள்ள கூடாரத்தில்
பதுக்கப்பட்டிருக்கும் கொலைக் கருவிகளை
முறிக்கும் வலிமையை
உடம்பில் ஏற்றிக்கொண்ட பயிற்சிகள் குறித்தும்;
அவர் சொல்லத் தொடங்கினார்.
♦
காய்ந்த புல்வெளி மீது கிடக்கும்
ஓர் உடும்பைப் போல்
மூப்பனின் மார் மீது படுத்திருந்த பேரன்,
சாகசங்களும் போராட்டங்களும் நிறைந்த
வரலாற்றுச் சுவடுகளில்
இறங்கி நடந்துகொண்டிருந்தான்;
கதையின் போக்கு
அவனது கற்பனையை
விரியச் செய்துகொண்டிருந்தது;
தன் நெஞ்சின் மீது
ஒரு மலரைப்போல் கிடந்த பேரன்
மாபெரும் காட்டு மரத்தைப் போல்
கனத்ததை மூப்பன் உணர்ந்தார்;
அவருக்கு மூச்சடைத்தது;
ஆம்,
அவர் சொல்லிக்கொண்டிருந்த கதை
நூறு பன்றிகளின் பலம் கொண்டவனாய்
அச்சிறுவனை மாற்றிக்கொண்டிருந்தது;
அவர்
மெல்ல மெல்ல
கதையின் துயரமான இடத்தைத் தொட்டார்;
குரல் கம்முகிறது;
கண்கள் பனிக்கின்றன;
உடம்பு தளர்கிறது;
தாத்தாவின் குரல்
கதையிடையே உடைவதை உணர்ந்து
இருளில் அவரது
கண்களின் ஓரத்தைத் துடைக்கிறான் பேரன்;
அவன் தொட்டுணர்ந்த நீர்மை
மீண்டும் அவனை மலராக்குகிறது;
ஒரு வண்ணத்துப்பூச்சியின்
எடை கொண்டவனாக
அவன் மாறினான்;
♦
குடிலைப் போர்த்தியிருக்கும்
கூரைக்கு மேலே
சாம்பல் பூத்துக் கிடந்தது வானம்;
இரவைப் பகலாக
ஒளிரச் செய்துகொண்டிருந்தது நிலவு;
சிறுநீர் கழிக்க வெளியே வந்த
மூப்பனும் பேரனும்
வெவ்வேறு உருவங்களாகத்
தோற்றம் கொள்ளும் மேகங்கள்
ஓநாய்களாக மாறித்
தரையிறங்குதைக் காண்கிறார்கள்;
முதல் சாமத்தின் குளிர்ந்த காற்றுக்குத்
தம்மை ஒப்புக்கொடுத்தபடி நிற்கும்
இரண்டு உருவங்களையும் கண்டு
அந்த நேரத்திற்குரிய வலசைப் பறவைகள்
குரல் கொடுத்தபடி கடக்கின்றன;
ஊரின் நித்திரை கலையாதவாறு
குயில் பாடுகிறது;
♦
“தாத்தா..!
அந்த மறவனின் பெயர் என்ன?
நம் காட்டிலிருக்கும் நடுகற்களில்
அவருடையது எது?
இதோ…
இந்த ஆகாயத்தில் நகரும்
நட்சத்திரங்களில்
சற்றுத் தொலைவாய்
நம்மையே பார்த்தபடி ஒளிர்கிறதே
அவர்தானா அது?
எதிரிகளின் குடல்களைச் சரியச் செய்த
அவருடைய ஈட்டியை
எங்கே பத்திரப்படுத்தியிருக்கிறீர்கள்?
என்னை வேட்டைக்குப் பழக்கும்போது
அந்த மறவனின் ஆவியை
எனக்குள் ஏவி விடுவீர்களா?
நமது காட்டைத் தொந்தரவு செய்யும்
புதிய பகைவர்களை
நான் விரட்டுகிறேன்.
சொல்லுங்கள்…
கதை கேட்டு வளர்கின்ற நான்
இனம் காக்கத் துடிக்கிறேன்.”
“காட்டு மரத்தின் விதை
சிறிய புற்களையா உருவாக்கும்!
என் குருதியுறவே!
என் குட்டிக்குப் பிறந்த குட்டியே!
அந்த மறவனின் பெயர் சொல்கிறேன் கேள்!
அவன் பெயர்…
அந்த மாவீரனின் பெயர்…
அந்த நட்சத்திரத்தின் பெயர்…
“கரியன்”
(தொடரும்….)