சூரைக்காற்று வந்துபோன காடுபோல்
மாறிக் கிடந்தது ஊர்;
தம் இனத்தை
விழுங்கிக்கொண்டிருந்த
சுடுகாட்டின் தொண்டையில்
கால் வைத்து அழுத்தி
அதற்கு மேல் ஓருயிரும்
உள்ளே இறங்காமல் தடுத்தான் கரியன்;
குகைக்குள் புகும் புலி
பாறையில் வரையப்பட்டிருக்கும்
ஈட்டி ஏந்திய வீரனைக்கண்டு
நடுங்குவதைப்போல்
கரியனைக் கண்டு அஞ்சிய காலன்
பிடறியில் கால் தெறிக்க
ஊரை நீங்கி ஓடினான்;
காப்பவன் கொடுக்கும் மருந்து
குலதெய்வத்தின் அருள் என்று
உணர்ந்தது ஊர்;
அதன் குருதியில் கலந்திருந்த நோய்
மெல்ல அழிந்தது;
மீண்டும்…
உடும்புகள் புரண்ட தடங்களையும்
பன்றிகள் குழுமிய புதர்களையும்
மலைத்தேன்களையும்
கள்ளிப்பழங்களையும்
கெளுத்தி மீன்களின் சினைகளையும்
காடை முட்டைகளையும்
முயல்களின் காலடிச் சுவடுகளையும்
தினைகளையும் கிழங்குகளையும்
வேட்டுவக் குடிகள்
தேடி நடந்ததைக் கண்ட பிறகே
கரியன் சமநிலையடைந்தான்;
♦
இயல்புக்குத் திரும்பியது ஊர்;
வேட்டை நாய்களின் வால்கள்
முறுக்கேறி நின்றன;
விடைத்த காதுகளை
அவைகள் தளர விடவில்லை;
பொழுதுக்கும் வேட்டை
பொழுது போனால் கதையென்று
மகிழ்ந்து வாழ்ந்தனர் மாந்தர்;
பாடல் இயற்றினர் பாணர்கள்;
கொம்பெடுத்து ஊதினர் கூத்தர்;
முன்னோரை வணங்கிய மறவோன்
பானையில் கள்ளும்
பாக்கு இலையில் குருதிப் பொரியலும் வைத்துக்
குலக்குறிப் போற்றினார்;
முதுகணியன் வாக்குச் சொன்னார்:
“குடிகளே… கேளீர்.
இன்னொரு இடர்
இப்பிறவியில் இல்லை;
மண்ணில் புதைந்துள்ள
நம் முன்னோர்களின் எலும்புகள்
இனி,
எம்மை நினைத்துக்
கேவிக் கேவி அழவேண்டியதில்லை;
ஆயிரம் ஆண்டுகள் ஆனபோதிலும்
அடியெடுத்து வைக்க அஞ்சும் அளவுக்கு
ஊரிலிருந்து நோயை விரட்டியுள்ளான்
நம் கரியன்;
நூறாண்டுகளுக்கு ஒருமுறைதான்
கரியன்கள் பிறப்பார்கள்;
அவர்கள் –
கூடவே வாழும் தெய்வங்கள்;”
♦
பன்றியும் மிளாவும்
உடும்பும் முயலும்
ஒவ்வொரு நாளும் உணவில் கலந்தன;
வரகும் சோளமும் அட்டிலில் மணக்க
மிளகும் மல்லியும் அம்மியில் மணக்க
கறி சமைக்கும் வாசம்
காற்றில் நிரம்பிக் கிடந்தது;
சுவை பொருள் அரைத்த கிழத்தியர்
அம்மிக்கல்லையும் சாந்தாக உருட்டினர்;
குழவிக்கல்லைத் தழுவித் தழுவி
கொதிக்கும் குழம்பில்
ருசியைக் கூட்டினர்;
சோறும் கறியும் சமமாய்க் கலந்து
முழங்கை வரைக்கும் பிசைந்தனர் காதலர்;
உண்டு களித்தது ஊர்.
♦
அம்மியை அணைத்த
தொடைகளின் தழும்பை
மஞ்சளைப் பூசி மெழுகிய ஒருத்தி
கரியனைக் காமுறும் பாதகத்தி;
கொட்டிக் கிழங்கைப்போல் கொங்கைகள் கொண்டவள்;
கள்ளிப் பழங்களை
முள்ளோடு பறித்துத்
தலைவனைக் கூடாத தனிமையைப் பாடி
உறங்கா உடம்பெங்கும்
தொய்யில் எழுதுபவள்;
மார்புக்கு நடுவே
கூந்தலைப் போட்டு
தேம்பும் நெஞ்சுக்கூட்டின்
கேவலை மறைப்பவள்;
எள்ளுப்பூ நாசியில் இறங்கும் பெருமூச்சால்
உந்தியில் தீ பிடிக்கும்
வாதையைத் தேர்ந்து கொண்டவள்;
காது மடல்களில் நுழைந்து
சருகலத்தை ஆட்டும் பனியைத்
தன்னைத் தானே அணைந்து
அனலேற்றித் தணிபவள்;
தண்டுவட எலும்புகளைக்
குலக்குறிக்கு நேந்து விடுபவள்;
ஈச்சம் புதர் மறைவில்
குதிகாலால் தடம் வரைந்த
பகற்குறியின் நினைவுகளால் துயரப்படுபவள்;
கரியன் முகம் காணக் காத்திருந்தாள்.
♦
இனக்குழு காப்பதில் கவனம் கொண்டு
தன் காதலை
மறந்துபோயிருந்தான் கரியன்;
ஊதக்காற்றில் கலந்திருந்த
அவள் ஈரச்சேலையின் வாசம்
மூக்கைத் துளைத்தபோதும்,
கிழங்கு மஞ்சளின் கறை படிந்த வேட்டியைப்
ஒவ்வோர் இரவும்
போர்த்திப் படுத்த போதும்,
மண் பானையில் நண்டூறுவதுபோல்
நெஞ்சில் அவள் நினைவூறிய போதும்
கரியன் சலனம் கொள்ளவில்லை.
‘நீ ஊரின் மகன்’ என்று
இதயத்தில் கேட்கும் குரலுக்குத்
தன்னை ஒப்புக் கொடுத்துவிட்டான்.
♦
பசலை உண்ணும் சருகலத்தைக்
காமம் விளைந்த நாட்களின்
நினைவுகளால் தேற்றியவள்,
தன்னிடமிருக்கும்
கரியனின் பழைய வேட்டியால்
உயிரைப் பிடித்து வைத்திருந்தாள்;
அந்த வேட்டியால் அவளுக்கு
ஆயிரம் பயன்கள் உண்டு;
பகலோ இரவோ எதுவோ எங்கோ
ஏகாந்தமாய் விரித்துப் படுக்க,
பால் கட்டிய சோளக்கதிர்களை
உள் நாக்கில் ருசி பார்த்து
மூட்டைக் கட்ட,
கெண்டைக்கால் எலும்பு புடைக்க
துரத்திப் பிடித்த
வேட்டை விலங்கை முடிந்து வைக்க,
மழைக்கும் வெயிலுக்கும்
விரித்துப் பிடித்துக்கொள்ள,
குளிரில் போர்த்திக்கொள்ள,
சாரக்காத்து வீசும்போது
பனையோலைப் படலில் கட்டிவிட,
ருதுகால நாட்களில்
கட்டாந்தரையில் விரித்துக்கொள்ள,
கிணற்றில் நீரெடுக்கக்
குடத்தின் கழுத்தில் கோத்துக்கொள்ள,
பச்சை விறகுக்குக்
கட்டுக்கொடியாக,
தானியங்கள் காய வைக்க,
ஆற்றில் மீன் பிடிக்க,
சொல்லொண்ணாத் துயரம் வந்து
ஓவென்று அழத்தோன்றினால்
மண்டியிட்டு மூடிக்கொண்டு கதற,
இப்படி எத்தனையோ பயனுண்டு
கரியனின் வேட்டிக்கு;
அந்த வேட்டியின்
அழுக்குக்கும் நாற்றத்துக்கும்
சொக்கிக் கிடந்தாள் அவள்;
அந்த வேட்டி கிடைத்த
சிறுபொழுதை நினைவுகூர்ந்து சொல்கிறாள் தோழியிடம்:
“உயிரோடு துள்ளும்
நூறு கெளுத்திகளை
மார்பில் அள்ளிப்போட்டுக் கொண்டதைப்போல் இருந்தது
பலம் கொண்ட அவன் காமம்”
கொடியில் தொங்கிய வேட்டியை
வைத்த கண் எடுக்காமல் சொல்கிறாள்:
“படுத்துக்கொள்ள
போர்த்திக்கொள்ள
உடுத்திக்கொள்ள
எல்லாமே இந்த வேட்டிதான்.
கடைசியில்
சாகும்போது தன்னைக்
கிடத்திச் செல்லவும்
அதுபோதும்”
தோளில் சாய்த்துத் தேற்றினாள் தோழி.
(தொடரும்…)