வஞ்சிநகரம் கந்தன் – பொய்யாமொழி முருகன்

‘மகத் சத்தியாகிரகப் போராட்டம்’  பாபாசாகேப் அம்பேத்கரால் 1927ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி பம்பாய் மாகாணத்தில் ராய்காட் மாவட்டத்தின் மகத் என்னும் நகரில் அமைந்துள்ள பொதுக்குளத்தில் தலித் மக்களுக்கு நீர் எடுப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம். இந்தியா போன்ற சாதியப் படிநிலையமைப்பு கொண்ட சமூகத்தில் சாதி இந்துக்கள் பயன்படுத்துகின்ற குடிநீருக்கான குளங்கள், கிணறுகள் போன்றவற்றிலும் பொது இடங்கள் என்று சொல்லப்படுகின்ற பொதுப் பாதைகள், ஊரிலுள்ள மந்தை, கோயில்கள், பொதுவெளிகள், பொதுச் சொத்துகள் போன்றவை சாதி இந்துக்களால் தலித் மக்களுக்கு மறுக்கப்பட்டன. எனவே இதற்கு எதிராக நேரடியாகவும் சட்டப்பூர்வமாகவும் பல்வேறு போராட்டங்களைத் தலித் மக்கள் முன்னெடுத்து வந்துள்ளனர். அதனால் சில இடங்களில் பாதிப்புகளும் பல இடங்களில் மாறுதல்களும் நடந்துள்ளன. பொதுவாக இத்தகைய போராட்டங்களைப் பெரிய அரசியல் கட்சிகளும் தலைவர்களும் பெருங்கூட்டத்தைக் கூட்டி நடத்துகின்ற போதுதான் அது வரலாற்றில் இடம் பெறுகிறது, ஆய்வு செய்யப்படுகிறது. ஆனால் இப்போராட்டங்கள் சிறிய அளவில் பகுதி சார்ந்தும் மக்களுடைய தேவை சார்ந்தும் உள்ளூர் அளவில் நடந்தே வந்துள்ளன. உள்ளூர்ப் போராட்டங்கள் பெரிய அமைப்புகளாலும் தலைவர்களாலும் முன்னெடுக்கப்படுவதில்லை. அது அந்தந்த ஊர் மக்களால் நடத்தப்படுகிறது. இத்தகைய போராட்டங்கள் வரலாற்றால் பதிவு செய்யப்படாமல் போயிருக்கலாம். பெரும் பேசு பொருளாக ஆகாமல் இருக்கலாம். ஆனால், உள்ளூர் அளவில் வெகுமக்கள் இத்தகைய நிகழ்வுகளை வேறு விதங்களில் அவற்றை நினைவுகூரவே செய்கின்றனர். அவ்வாறு தன்னுடைய ஊரில் தலித் மக்கள் மீது செலுத்தப்பட்ட சாதி ஆதிக்கத்திற்கு எதிராகவும் ஆதிக்கச் சாதியினருடைய செயல்பாடுகளுக்கு எதிராகவும் போராடி உயிர்நீத்த வஞ்சிநகரம் கந்தனை உள்ளூர் மக்கள் நீதிமான் என்றும் போராளி என்றும் நினைவுகூருகின்றனர். தவிர ஒருதலைமுறை கடந்தபின்னும் மக்கள் மனதில் நீங்காமல் நினைக்கப்பட்டும் வழிபடப்பட்டும் வருபவர்தான் வஞ்சிநகரம் கந்தன். இது கந்தனின் முப்பத்தைந்தாவது நினைவுதினம்.

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கக்கன் பிறந்த ஊரான தும்பைப்பட்டிக்கு அருகில் திருச்சி செல்லும் நெடுஞ்சாலையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது வஞ்சிநகரம் என்னும் கிராமம். ஊரின் தொடக்கத்தில் சாதி இந்துக்களான கள்ளர்கள், முத்தரையர் எனப்படும் வலையர்கள், நாடார்கள், செட்டியார்கள் உள்ளிட்டோரும், தலித்துகளில் பறையர் சமூகத்தவர்களும் வசித்து வருகின்றனர். ஊரின் கடைசியில் வயல்வெளிகளுக்கு அருகில் அமைந்துள்ள பறையர் குடியிருப்பு இப்போது அம்பேத்கர் நகர் என்று அழைக்கப்படுகிறது. அவ்வூரில் மேலூர் வட்டாரத்திற்கே உரிய சாதியப் பாகுபாடுகளும், தீண்டாமைச் செயல்பாடுகளும் கடைபிடிக்கப்பட்டன. இவ்வூரில் தலித் சமுதாயத்தைச் சார்ந்த வேலன் – சேவி இணையருக்கு மூன்று ஆண்களும் ஒரு பெண்ணுமாக நான்கு பிள்ளைகள். இதில் கந்தசாமி என்ற கந்தன் மூன்றாவது பையன். இவருக்கு அடுத்து சண்முகநதி என்ற தங்கையும் முருகன், சுப்பையா என்ற மூத்த சகோதரர்களும் உண்டு.

மேலூர் வட்டாரத்தின் சாதியத்தின் இருப்பு

மதுரை மாவட்டம் மேலூர் வட்டாரம் என்பது சாதிய ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில் இன்றளவும் கள்ளர்களிடையே ‘நாடு’ என்ற அமைப்பும் அதன் மூலம் சாதிய ஆதிக்கமும் கடைபிடிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. தலித் மக்கள் பொதுக் குளத்தில் குடிநீர் எடுக்க முடியாது. பொதுச் சொத்துகளில் உரிமை கோர முடியாது. வீதியில் செருப்பு அணிந்து செல்ல முடியாது. ஊர்த்தெருவில் சைக்கிளின் மீது ஏறிச் செல்லமுடியாது. தலித்துகள் திருமண ஊர்வலம் நடத்த முடியாது. இவற்றில் மீறல்கள் நடக்கும் பட்சத்தில் ஊர்க்கூட்டம் போட்டு தண்டனை மற்றும் அபராதம் விதிப்பது, மந்தையில் விழுந்து கும்பிடச் சொல்வது என்பது போன்ற ஏராளமான சாதியக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு சாதிய இறுக்கம் மிகுந்த பகுதியில்தான் வஞ்சிநகரம் கந்தன் பெரும் உடைப்பினை ஏற்படுத்தினார். அதுவரையிலும் வேலைவாய்ப்புகளுக்காகவும் விவசாயம் சார்ந்த பணிகளுக்கும் கல் குவாரி சார்ந்த பணிகளுக்கும் அப்பகுதியில் சாதி இந்துக்களையே தலித் மக்கள் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. அத்துடன் மேலூர் பகுதியில் “குடிக்கள்ளர் முறை” என்ற சாதிய நடைமுறையிருக்கிறது. இந்நடைமுறையினைப் பற்றி எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் தன்னுடைய நூலில் குறிப்பிடுகிறார். “ஒவ்வொரு கள்ளர் குடும்பமும் தங்கள் பண்ணையில் பணிபுரிய ஊரில் ஏதாவதொரு தலித் குடும்பத்தைச் சொந்தமாக்கிக் கொள்ளும். ஊரார் மத்தியில் அத்தலித் குடும்பத்திற்குப் பிரச்சனையேதும் வந்தாலும் அக்குடிக்கள்ளர் ஆதரவாய்த் தலையிடுவார். தலித் ஒருவரின் தவறினைக் கண்டிக்க விரும்பும் ஊராரும் முதலில் அக்குடிக்கள்ளர்களிடமே முறையிடும் வழக்கமுண்டு” என்று கூறுகிறார். மேலும் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இத்தகைய நடைமுறை வழக்கத்தில் இருந்திருக்கிறது. அரிசன சேவா அமைப்பினருடைய பதிவுகளில் இப்பகுதியின் சாதிய நடைமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் விரிவாகப் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. இத்தகைய பதிவுகளின் மூலம் அப்பகுதியின் சாதியாதிக்கம் தெரியவருகிறது.

தலித் மக்களின் பொதுவுரிமை, அதிகாரம் பெறுதல் தொடர்பான போராட்டங்கள்

எங்கு கட்டுப்பாடுகள் அதிகமாக உள்ளனவோ அங்குதான் அதற்கெதிரான போராட்டங்களும் மீறல்களும் அதிகமாக நடைபெறுகின்றன. அந்தவகையில் மேலூர் வட்டாரத்தில் தலித் மக்களின் பொதுவுரிமைப் போராட்டங்கள் மற்றும் பொதுச்சொத்துகளில் பங்குபெறுதல் என்பனவற்றைத் தொடங்கிவைத்தவராக வஞ்சிநகரம் கந்தனைக் குறிப்பிடலாம். வஞ்சிநகரம் கந்தன் எட்டாம் வகுப்பு வரைமட்டுமே படித்தவர். ஆனாலும் சிறுவயது முதல் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கக் கூடியவராகத் திகழ்ந்தார். நல்ல உடல் தோற்றமும் வலிமையும் மிக்கவராகவும், ஏழடி உயரமுள்ள வேலியை ஒரே தாவில் தாண்டுபராகவும் சுவரில் அழகாக ஓவியம் வரையக்கூடியவராகவும் நீதியுடன் நடந்துகொள்பவர் என்றும் அவரைப் பற்றி வஞ்சிநகரத்து மக்கள் நினைவுகூருகின்றனர். மேலும் அதற்கு முன்பு வஞ்சிநகரத்தில் உள்ள விநாயகர் கோயிலில் வரையறுக்கப்பட்டிருந்த பகுதியைத் தாண்டியதால் சுந்தரம் என்ற சாதிஇந்து கந்தனைத் தாக்கிவிடுகிறார். இதையறிந்த கந்தனின் அண்ணன் சுப்பையா அதனைத் தட்டிக்கேட்க, இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பில் சுந்தரம் தாக்கப்பட்டுக் கிணற்றுக்குள் விழுந்துவிடுகிறார். இதனால் கலவரமும் சண்டையும் வரும் என்று பயந்த கந்தனின் பெற்றோர் தங்களின் உறவினரின் ஊரான அழகர்கோவிலுக்கு அருகில் உள்ள கிடாரிப்பட்டிக்கு அனுப்பிவிடுகின்றனர். இங்குதான் கல்குவாரி தொடர்பான தொழில் நுணுக்கங்களைக் கந்தனும் அவரது சகோதரர் சுப்பையாவும் கற்றுக்கொள்கின்றனர்.

இந்தப் பின்னணியில் அவர்கள் தொழில் முனைவோராக உருவெடுக்கின்றனர். தன்னுடைய சகோதரன் முருகன் விபத்தொன்றில் இறந்துவிடவும் அவருக்கு இன்சூரன்சாக வந்த தொகையைக் கொண்டு மொட்டப்பாறையில் கச்சிராயன்பட்டி பாலுச்சாமி என்னும் கள்ளர் சமூகத்தவரிடமிருந்து கல்குவாரியைக் குத்தகைக்கு எடுத்துத் தனியாகத் தொழில் செய்கின்றனர். அதுவரை அங்கு நடைமுறையில் தலித் ஒருவர் குவாரியைக் குத்தகைக்கு எடுக்கும் வழக்கமில்லை. அவ்வாறு குத்தகைக்கு எடுத்த தலித் சமூகத்தவரான கந்தன் சகோதரர்களின் செயல்பாடுகள் கள்ளர்களுக்குப் பெரிய கோபத்தை ஏற்படுத்தியது. இதனோடு கள்ளர்களின் பண்ணைகளிலிருந்து பல காரணங்களைச் சொல்லி நிறுத்தப்பட்ட தலித் மக்களினை அழைத்துக் கொண்டு கல்குவாரி வேலைகளைச் செய்கின்றனர். சொந்தமாக லாரி ஒன்றினை எடுத்துத் தொழில் செய்யும் அளவிற்கு அவர்கள் முன்னேறுகின்றனர்.

வஞ்சிநகரம் கிராமத்தில் ஏற்கெனவே நடைமுறைப் படுத்தப்பட்டுவந்த சாதியச் செயல்பாடுகளான சைக்கிளின் மேலே தலித்தொருவர் ஏறிச் செல்லக் கூடாது; வேட்டியைக் கீழே கணுக்கால் வரையில் இறக்கிக் கட்டக் கூடாது; மேலே ஏத்தி மடித்துக் கட்டக் கூடாது; குடிநீர் எடுப்பதில் சாதிப்பாகுபாடு காட்டக் கூடாது என்று அங்குள்ள ஆதிக்கச் சாதியினரிடையே தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். இத்தகைய பாகுபாட்டுச் செயல்பாடுகளைத் தொடர்ச்சியாக அரசு அதிகாரிகளுக்கு மனுக்களாக எழுதி வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என்று தொடர்ந்து அனுப்புகின்றனர். சாதியப் பாகுபாட்டிற்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடுகிறார் கந்தன். இதன் விளைவாக அரசுத் தரப்பில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாட்டைக் குன்றக்குடி அடிகளார், தாசில்தார், டி.ஆர்.ஓ, உதவிக் கலெக்டர், டி.எஸ்.பி ஆகியோர் தலைமையில் ஏற்பாடு செய்யப் படுகிறது. இதில் தலித் பெரியவர்கள் ஆதிக்கச் சாதியினருக்கு இணையாக இருக்கையில் அமர மறுக்கும்போது கந்தன் உள்ளிட்ட இஞைர்கள் பெரியவர்களை வலியுறுத்தி இருக்கையில் அமர வைக்கின்றனர். கூட்டத்தில் தலித் மக்கள் தரப்பில் தங்களுக்கு ஊர்ப் பொதுச் சொத்துகளில் பங்கு வேண்டும், ஊர்த்தெருவில் செருப்பு அணிய உரிமை, பொதுக்குளத்தில் நீரெடுக்க உரிமை, சைக்கிளில் ஏறிச் செல்ல உரிமை உள்ளிட்ட பலவற்றைக் கேட்கின்றனர். மேற்கூறிய பாகுபாட்டு நடவடிக்கைகள் சட்டத்திற்கு எதிரானவை என்றும் அதற்கான சட்டவிதிகளைக் கூறி இனிமேல் அவ்வாறு செய்யக்கூடாது என்று அரசுத் தரப்பிலிருந்து ஆதிக்கச் சாதியினரிடம் எடுத்துக் கூறிப்பட்டது. இதற்கெல்லாம் மூலக் காரணம் கந்தன் சகோதரர்கள்தான் என்று ஆதிக்கச் சாதியினர் அவர்கள் மீது வன்மத்துடன் செயல்பட்டனர்.

பின்னாட்களில் தலித் இளைஞர்கள் அமைதிப் பேச்சுவார்த்தையில் பேசப்பட்டதை நடைமுறைப்படுத்தத் தொடங்கினர். தலித் பெரியவர்களை ஊர்த் தெருக்களில் செருப்பணிந்து செல்ல வலியுறுத்துவது, சைக்கிளின் மீதேறிச் செல்ல வலியுறுத்துவது, பறையடிக்க மறுப்பது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். இதன் உச்சமாய் கருப்பசாமிக் கோயில் ஊரணியில் தண்ணீர் எடுக்கும் செயலில் இறங்கினார் கந்தன். மற்றவற்றில் ஈடுபாடுகாட்டிய பலர் இதில் பயந்தனர். காரணம் தெய்வகுத்தம் ஆகிவிடும் என்பதுதான். ஆனால், கந்தன் குளத்தில் இறங்கி நீர் எடுப்பதில் உறுதியாக இருந்தார். காரணம் அன்றைக்கு அக்குளத்தில் தலித்துகள் இறங்கி நீர் எடுக்கமுடியாது. தானியம் அளக்கும் படியைக்கொண்டு சென்று காத்திருக்க வேண்டும் பிற சமூகத்தவர் வரும்வரைக் காத்திருந்து அவர்கள் தண்ணீர் அள்ளிப் பானையில் ஊற்றும் வரைக் காத்திருக்க வேண்டும். இதற்கு முடிவுகட்ட எண்ணிய கந்தன், தன் தங்கை சண்முகநதியை அழைத்துக்கொண்டு கருப்பசாமி கோயில் ஊரணிக்குச் சென்று தண்ணீரை அள்ளச் சொல்கிறார். சாமிக்கும் சாதிக்கும் பயந்து சண்முகநதி தயங்கி நிற்க, கந்தன் தங்கையின் கன்னத்தில் ஓங்கியறைந்து தண்ணீரை அள்ளச் சொல்லவும் சண்முகநதி அள்ளுகிறார். இந்நிகழ்விலிருந்து குடிநீர் எடுப்பதில் இருந்த சாதியப் பாகுபாடு  முடிவுக்கு வந்தது. அன்றிலிருந்து இன்றுவரை வஞ்சிநகரத்து மக்களும் சுற்றுவட்டாரத்து மக்களும் அக்குளத்தில் குடிநீரெடுத்துப் பயன்படுத்துகின்றனர். அதுபோல சிறுவயதில் பிள்ளையார் கோயிலில் வரையறுக்கப்பட்ட எல்லையை மீறிச் சென்று சுண்டல் வாங்கிய கந்தனின் கன்னத்தில் சுந்தரம் என்ற சாதி இந்து தாக்கியதில் தொடங்கிய கந்தனின் சுயமரியாதை மற்றும் கோயிலில் சமமரியாதைக்கான சாதி எதிர்ப்புப் போராட்டம் தங்களுக்கென்றுத் தனிக் கோயில் கட்டுவதில் முடிந்தது. வஞ்சிநகரம் தலித் குடியிருப்புப் பகுதியில் தலித் மக்கள் வழிபாட்டுக்கென்று தங்களுக்குள் வரிபோட்டுத் தனியாக ஆதிபராசக்தி கோயில் கட்டத் தொடங்கினர். 2001ஆம் ஆண்டு குடமுழுக்கு நடத்தி தொடர்ந்து வழிபாடு செய்யப்படுகிறது.

சிறுமுதலாளியாக உருவெடுத்த கந்தனைப் படுகொலை செய்தல்

வஞ்சிநகரத்தில் குருநாதன் என்ற இளைஞர் சிறிய கடை வைக்கிறார். கடையில் பொருட்கள் வாங்கிய ஆதிக்கச் சாதியினர், “டேய் பறப்பயலே, இறங்கி சாமான் கொடுக்க மாட்டாயா” என்று அடிக்க வருகின்றனர். குருநாதன் தலித் மக்களின் பிரச்சனைகளுக்கு முன்னிலையில் இருந்து செயல்படக்கூடிய துடிப்புமிக்க இளைஞர். பல பிரச்சனைகளில் கந்தனோடு இணைந்து செயலாற்றியவர். ஆனால், அவர் தூக்கிட்டு இறந்து விட்டார். அவரது மரணம் தற்கொலை அல்ல என்றே மக்கள் கருதுகின்றனர். இதுபோல கந்தனின் படுகொலைக்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அவ்வூரில் சிறுமுதலாளியாகக் குவாரியை ஏலம் எடுத்தல், வேலைக்குச் சொந்தமாக ஆட்களை வைத்துக் கொண்டு குவாரியில் கிடைத்த கற்களை ஆதிக்கச் சாதியினரிடம் விற்காமல் தனியாக வேறு ஆட்களிடம் விற்க ஆரம்பித்தல் போன்றவைதாம் முதன்மையானவை. தங்களிடம் அண்டிப்பிழைத்தவர்கள் தங்களுக்கு இணையாக தொழில் செய்ய ஆரம்பித்ததைச் சாதி இந்துக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மேலும் அவர்களது அதிகாரம் பறிபோகும் விதமாக உள்ளூரில் பறையடிக்க மறுப்பது, செருப்புப் போட்டு ஊர்த்தெருவினுள் செல்வது போன்றவை மறைமுகக் காரணங்களாகும். தொழிலில் பின்னுக்குத் தள்ள முடியாத நிலையில் மொத்தமாகக் காலிசெய்யத் தருணம் பார்த்திருந்த வேளையில்தான் வீரசிகாமணிபட்டி ஜல்லிக்கட்டு வந்தது. சாதி இந்துக்கள் தலித்துகளைக் கொலை செய்வதற்கு ஜல்லிக்கட்டு போன்ற விழாக்களையே தேர்ந்தெடுப்பர். காரணம், மாடுமுட்டி இறந்துவிட்டதாக் கூறிக் கொலையை மறைத்து விடலாம் என்பதுவே. இந்நிலையில் தலித் சமூகத்தவரான பெரியசாமி என்பவரைச் சாதி இந்துக்கள் தாக்கிவிட்டனர் என்ற செய்தியறிந்து கந்தன் சிறு கத்தியொன்றை எடுத்துக்கொண்டு ஜல்லிக்கட்டிற்குச் செல்லவும், இதற்காகவே காத்திருந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட கும்பல் கந்தனைத் தாக்குவதற்குத் துரத்தியது. கையில் உள்ள கத்தியின் துணையோடு கூட்டத்திலிருந்து விலகி தலித் குடியிருப்பினுள் புகுந்து தப்பிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த வன்முறைக் கும்பல்  வழியில் இருந்த கந்தனின் அண்ணன் சுப்பையாவைத் தாக்கியது. மேலும் மந்தைவரை இழுத்துச் சென்று கோயிலில் உள்ள தூணில் கட்டிவைத்து “இந்தக் கால்கள்தானே எங்களுக்கு எதிராக பெட்டிசன் கொடுக்கப் போகுது” என்று சொல்லிச் சொல்லி அடித்ததோடு மதி என்ற சாதி இந்து சுப்பையாவினுடைய காலை வெட்டினான்.

வீரசிகாமணிபட்டி ஜல்லிக்கட்டியில் ஏற்பட்ட மோதலில் ஜெயபாலன் என்ற சாதி இந்துவைக் கந்தன் கத்தியால் குத்தியதில் காயம் ஏற்பட்டிருந்தது. இதனைக் காரணம் காட்டி தலைமறைவான கந்தன், கந்தனின் அண்ணன் சுப்பையா, பெரியசாமி, ராஜா ஆகியோர் மீது கருங்காலக்குடி காவல் நிலையத்தில் கள்ளர்கள் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிகழ்வினை “உண்மைக் கருத்து. ஜெயபாலை நான் கையில் கத்தியால் குத்திய நாள் இன்று. ஞாயத்துக்காக நான் ஒரு தவறு செய்தேன்” என்று கந்தன் தன் டைரியில் பதிவுசெய்துள்ளார். இந்த வழக்கினில் ஜாமீனில் வெளிவர தலைவர் இளையபெருமாள் உதவி செய்துள்ளார். இந்நிலையில் கந்தனுக்கும் கள்ளர் சமூகத்தவரான மதிக்கும் மோதல் ஏற்படுகிறது. இதில் மதி பத்து நாட்களில் உன்னைக் கொன்றுவிடுவதாகக் கூறுகிறார். கந்தன் இதைப் பொருட்படுத்தவில்லை. இதன்பிறகுதான் கந்தனுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால், ஆதிக்கச் சாதியினர் கந்தனைக் கொல்வதற்குத் தனியாகப் பணம் ஒதுக்கினர். தொடந்து கந்தனைக் கண்காணிக்க ஆரம்பித்தனர். கருங்கலாக்குடியில் 08.10.1987 அன்று கந்தன் தனியாக வருவதை அறிந்த சாதிவெறிக் கும்பல் சாக்குப் பையால் கந்தனின் முகத்தை மூடிக் கயிறால் கட்டி அருகிலிருந்த மொள்ளாமலைக்குத் தூக்கிச் சென்று கொடூரமாகக் கொலை செய்தனர். கந்தனின் உடலில் 48 இடங்களில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர். கந்தனின் நாக்கையும் குறியையும் அறுத்தெடுத்தனர். அப்படியும் ஆத்திரம் அடங்காத சாதிவெறிக்கும்பல் கந்தனின் நெஞ்சில் பெரும்பாறையைப் போட்டுச் சிதைத்து, உடலைப் புதரில் போட்டுச் சென்றனர். படுகொலையானபோது கந்தனுக்கு 27 வயதுதான். அந்த அளவிற்கு அவருடைய வளர்ச்சியும் போராட்ட நடவடிக்கைகளும் ஆதிக்கச் சாதியினருக்குத் தொந்தரவை ஏற்படுத்தியுள்ளன.

மேலூர் வட்டாரத்தில் தொடர்ந்த சாதியக் கொலைகள்

வஞ்சிநகரம் கந்தனின் படுகொலையானது மேலூர் வட்டாரச் சாதியப் படுகொலைகளுக்கு முன்மாதிரியாக அமைந்தது. எவ்வாறெனில் கொலையாளிகளுக்குச் சாதி இந்துக்களிடமிருந்து பணம் வசூல் செய்து கொடுப்பது, கொலைவழக்குத் தொடர்பாக அனைத்து உதவிகளையும் செய்வது. ஊரே சேர்ந்து (சாதியாக) கொலையாளிகளைப் பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாயினர். 1994ஆம் ஆண்டு சென்னகரம்பட்டியில் கோயில் நிலத்தைத் தலித்துகள் குத்தகைக்கு எடுத்த காரணத்திற்காக அம்மாசி, வேலு என்ற இரு தலித்துகளை வெட்டிப் படுகொலை செய்தனர். 1995ஆம் ஆண்டு மேலூர் திருவாதவூர் அருகில் உள்ள உலகுப்பிச்சான் பட்டியில் ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்தநாளுக்கு ஒலிப்பெருக்கி வைத்து அம்பேத்கரின் பாடல்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பாடல்களையும் ஒலிக்கச் செய்ததற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பொறுப்பாளரான சந்திரனை மந்தையில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுத்தினர். ஆனால், சந்திரன் மறுத்ததால் படுகொலை செய்யப்பட்டார். இதனை அறிந்து சந்திரனுக்கு ‘வணங்காமுடிச் சந்திரன்’ என்று அடைமொழி கொடுத்து திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். அதுபோல 1996ஆம் ஆண்டு மேலவளவு ஊராட்சியில் தலித் ஒருவர் போட்டியிட்டு வென்றார் என்பதற்காக மேலவளவு முருகேசன் உள்ளிட்ட 7 தலித்துகளைப் பட்டப்பகலில் ஓடும் பேருந்தை வழிமறித்து வெட்டிக் கொன்றனர். முருகேசனின் தலையைத் தனியாகத் துண்டித்து அருகில் இருந்த கிணற்றில் வீசிச் சென்றனர். இத்தோடு சுற்றுவட்டாரத்தில் உள்ள தன் சாதிமக்களை ஒருங்கிணைத்து இத்தகைய சாதியச் செயல்களில் ஈடுபட்டனர். இதனால்தான் மேலூர் வட்டாரத்தைச் சாதிய வன்கொடுமை நிறைந்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தினார். பொதுவாக தலித் மக்கள் ஆதிக்கச் சாதியினருக்குக் கட்டுப்பட்டே இருக்க வேண்டும் என்றும் அவ்வாறு கட்டுப்படாமல் மீறுபவர்களை வெட்டிப் படுகொலை செய்வதும் இப்பகுதியில் தொடர்ந்து நடந்துவருகிறது. ஆனாலும் தலித் மக்கள் சாதிக்கெதிரான போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்தே வந்துள்ளனர்.

கந்தன் கொலைவழக்கும் தண்டனையும்

கந்தன் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி தலித் மக்கள் காவல்துறையினரை வலியுறுத்தினர். இந்த நிலையில் மேலூரில் மாபெரும் கண்டனப் பேரணியை மலைச்சாமியின் தலைமையிலான பாரதிய தலித் பேந்தர் ஆஃப் இந்தியா அமைப்பு மேற்கொண்டது. கந்தனின் அண்ணன் சுப்பையா பெரு முயற்சி செய்து மனித உரிமைக் கட்சித் தலைவர் இளையபெருமாளின் ஊருக்குச் செல்கிறார். அங்கு அவர் இல்லாததால் சென்னைக்குச் சென்று அவரைச் சந்தித்து நிலையை எடுத்துக்கூறுகிறார். தலைவர் இளையபெருமாள் சுப்பையாவோடு ஐ.ஜியைச் சந்தித்து வஞ்சிநகரத்தில் உள்ள சாதிய ஒடுக்குமுறைகள், அதற்கு எதிரான போராட்டங்கள், அதையொட்டி நடந்த கொலைகளில் கொலையாளிகள் கைது செய்யப்படாமை என விரிவான விளக்கம் கொடுத்துப் பெரும் அழுத்தம் கொடுக்கிறார். இளையபெருமாளைத் தவிர அன்றைக்கு இருந்த தலித் தலைவர்கள், அம்பேத்கர் மக்கள் இயக்கத் தலைவர் வை.பாலசுந்தரம், இந்தியக் குடியரசுக் கட்சித் தலைவர் சுந்தராஜன் ஆகியோரும் அழுத்தம் கொடுத்துள்ளனர். அதன்பிறகே வழக்கு பதிவுசெய்யப் பட்டு விசாரணை நடைபெறுகிறது. சாட்சி சொல்ல வருகின்ற தலித் மக்களை மிரட்டுதல், விலைபேசுதல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் வஞ்சிநகரத்தில் உள்ள பள்ளிச் சத்துணவு மையத்தில் அதுவரை வேலை பார்த்து வந்த தலித்துகளை வேலையிலிருந்து நீக்கிவிட்டுக் கொலையாளியின் தாயாரையும் அவர்களது உறவினர்களையும் அவ்வேலைக்கு நியமிக்கின்றனர். இதனால் பயந்துபோன மக்கள் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவரிடம் (ஆணையாளர்)  மனுகொடுக்கின்றனர். அம்மனுவில் அவர்கள் கொலைகாரர்கள் தலித் இளைஞர் கந்தனைக் கொன்றது போல் அங்கன்வாடி மற்றும் பள்ளியில் படிக்கும் தங்களின் குழந்தைகளுக்குச் சாப்பாட்டில் விசம் வைத்துக் கொன்றுவிடுவார்கள். எனவே கந்தனை இழந்ததைப் போல் எங்கள் குழந்தைகளை இழக்கமுடியாது என்றும் அவ்வேலைக்கு வெளியூரில் இருந்து வேறுநபர்களை அப்பணிக்கு நியமிக்க மனு கொடுக்கின்றனர். தங்கள் மீது இரக்கம் காட்டுங்கள் என்ற வேண்டுகோள் வைக்கின்றனர். மேலும் அந்த மனுவில் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இம்மனுவை மாவட்ட ஆட்சியர், கல்வித்துறை அமைச்சர், தமிழக முதல்வர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர்.

  1. வஞ்சிநகர தலித் மக்கள் தொடர் மனுக்கள், போராட்டங்கள் என்று சலைக்காமல் செயல்படுகின்றனர். இதனால் பெரும் நெருக்கடிகள் இருந்த போதும் பாதிக்கப்பட்ட தலித் மக்கள் உறுதியோடு இணைந்து செயலாற்றியதால் ஐந்து கொலையாளிகளுக்கு ஆயுள் தன்டனை பெற்றுத்தந்தனர். இத்தகைய தண்டனையைப் பெற்றுத் தருவதற்குக் காரணமாக இருந்த அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், அரசியல் கட்சித் தலைவர், மாவட்ட செசன்ஸ் கோர்ட் நீதிபதி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கடிதங்கள் அனுப்புகின்றனர். இதன் பிறகு கந்தனுடைய அண்ணன் சுப்பையா அம்பேத்கர் மக்கள் இயக்கத்துடன் இணைந்து செயல்படுகிறார். இக்கட்சியின் கொட்டாம்பட்டி ஒன்றியப் பொறுப்பாளராக இருந்து பணியாற்றியுள்ளார். இன்றைக்கு சுப்பையா விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் செயல்பட்டுவருகிறார்.

படுகொலைக்குப் பிறகான செயல்பாடுகள்

கந்தனுடைய படுகொலைக்குப் பிறகு அங்கு கடைபிடிக்கப்பட்டுவந்த சாதிய அடக்குமுறைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் பெற்றுள்ளது. இன்றைக்குக் கருப்பசாமி கோயில் ஊரணியில் தலித்துகளும் தண்ணீர் எடுக்கின்றனர். இயல்பான நிலை இருப்பதாக வஞ்சிநகரத்து தலித் மக்கள் குறிப்பிடுகின்றனர். அங்கு இதுவரையில் மூன்று அரசு ஊழியர்கள் உருவாகியுள்ளனர். இருவர் காவல் துறையிலும் ஒருவர் தீயணைப்புத் துறையிலும் பணியாற்றிவருகின்றனர். தீயணைப்புத்துறையில் இருப்பது கந்தனுடைய அண்ணன் சுப்பையா மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர கந்தன் இறந்து 35 ஆண்டுகள் கடந்த பின்னும் அவ்வூர் மக்களால் ‘நீதிமான் கந்தன்’, ‘சமூக நலத் தியாகி’, ‘போராளி’ என்று நினைவுகூரப்படுகிறார். அவருடைய வீட்டுக்கு அருகில் சிறிய நடுகல்நினைவுப் பலகையில் கந்தனுடைய உருவப் படத்தை வரைந்து வருடத்தின் முக்கிய நாட்களில் ஊரார் வழிபடுகின்றனர். ஊரில் நடக்கும் எந்த நல்ல நிகழ்வுகளிலும் கந்தனை வழிபடுகின்றனர். கந்தன் படுகொலை செய்யப்பட்ட பகுதியில் யாரேனும் பயந்திருந்தால் கந்தனின் அண்ணன் சுப்பையாவிடம் வந்து விபூதி பெற்றுச் செல்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும் கந்தனின் அண்ணன் குடும்பத்தினர் கந்தன் உருவப் படத்தின் முன் படையலிட்டு வழிபடுகின்றனர். அத்தோடு அம்மக்கள் அனைவருக்கும் மாலை அன்னதானம் செய்கின்றனர். அத்துடன் கந்தனின் அண்ணன் தன்னுடைய இளைய மகனுக்குக் கந்தசாமி என்று பெயர் வைத்துக் கந்தனை நினைவுகூருகின்றார். தன்னார்வமாகக் கந்தனின் போராட்டத்தையும்  தியாகத்தையும் போற்றும் விதமாக 35ஆவது நினைவு ஆண்டையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நினைவு நாள் துண்டறிக்கை, படத்திறப்பு, கலைநிகழ்வுகள் என்று கிராமமே நினைவேந்தல் செய்யவுள்ளது. தன்னலமில்லாத, சுயமரியாதைக்கான போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த போராளி கந்தனை ‘நீதிமான் கந்தன்’ என்று மக்கள் நினைவுகூருகின்றனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!