மர்மத்தில் மறைந்த மர்மங்கள் – பச்சோந்தி

சென்னைப் புனித ஜார்ஜ் கோட்டையின் வடமேற்கில் உள்ள போர்ச்சுக்கீசிய தேவாலயத்திற்கு அருகில் இந்துக்களின் கல்லறை ஒன்றிருந்ததை சமரச ஆவணம் மூலம் அறியமுடிகிறது. ஆயினும் அது எங்கே இருந்தது என்பதைக் குறிபிட்டுக் காட்டும் வகையில் தற்போது ஏதுமில்லை. ஏற்கெனவே கிறித்துவர்களுக்காக அங்கே இருந்த கல்லறைதான் பின்னாளில் செயின்ட் மேரீஸ் தேவாலயத்திற்குள் இடம் பெயர்ந்தது. பிரஞ்சுப் படையெடுப்புக்குப் பிந்திய நிலப்படத்தில் கூட இந்துக்களின் கல்லறை ஏதும் வரைபடங்களில் குறிப்பிடப்பட்டுக் காட்டப்படவில்லை. அதே சமயத்தில் ஐரோப்பியக் கல்லறைகள் குறிப்பிட்டுக் காட்டப்படுகின்றன. முறைப்படுத்தப்பட்ட மயானங்கள் என்பவை பின்னாளில்தான் உருவாகியிருக்கக் கூடும் என்பது இதற்கான காரணிகளில் ஒன்றாக இருக்கும்.

1700களின் முற்பகுதியில் உள்ளூர்வாசிகள், முஸல்மான்கள் ஆகியோரை அடக்கம் செய்வதற்கும் எரியூட்டுவதற்கும் ஏற்றவகையில் மூலக்கொத்தளம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. பெயரிலிருந்தே பட்டணத்திற்குட்பட்ட ஒருமுனை என்பதே அறிந்து கொள்ள முடிகிறது. பல்வேறு குடியிருப்புப் பகுதிகளும் ரயில்வே தண்டவாளங்களும் இந்த இடுகாட்டை ஆக்கிரமித்திருந்த நிலையில் இன்றும் இது பிரமாண்டமானதாகவே இருந்துவருகிறது. இதை விடப் பெரிய சவ அடக்கம் செய்யும் நிலப்பரப்பு என்றால் ஈராக்கின் வாடி இஸ்லாம் கபர்ஸ்தானாகத்தான் இருக்க முடியும். அங்கே நாளன்றுக்குச் சராசரி ஆயிரத்து ஐந்நூறு சவ அடக்கங்கள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

– ‘சென்னப்பட்டணம் மண்ணும் மக்களும்’, ராமச்சந்திர வைத்தியநாத்

அண்மைக் காலமாக சென்னை வரலாறு குறித்த நூல்களை வாசித்துக்கொண்டிருக்கையில் மேற்குறிப்பிட்ட நூலின் இருபத்திரண்டு துணைத் தலைப்புகளில் ஒன்றான ‘களவாடப்பட்ட கல்லறை’ இக்கட்டுரை எழுதுவதற்கான வாசலைத் திறந்துவிட்டது.

நிலம், நீர், காற்று அனைத்தையும் களவாடி விட்டோம். எஞ்சியிருந்தது சுடுகாடு மட்டும்தான். அங்கும் புதைத்த இடத்தைத் தோண்டி எலும்பு, தலைமுடி, கபாலம் என ஏற்கெனவே புதைத்தவர்களைத் தூர எறிந்து புதிய எலும்புச் சதைகளை நிரப்புகிறோம். இன்னும் பல ஊர்களில் எலும்புச் சதையோடு தோண்டி எறிவதுமுண்டு. சுடுகாட்டைப் புதைத்து அங்கு பள்ளிக்கூடம் கட்டிய வரலாற்றையும் சென்னையில் அறிய முடிகிறது. ஆனால், நூற்றைம்பது ஆண்டுகாலத் தொன்மையான சுடுகாட்டை ஆக்கிரமித்து அங்கு அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டிய அவலம் கடந்த அதிமுக ஆட்சியில் நடந்திருக்கிறது. அரசப் பயங்கரவாத்தை, ஒடுக்கு முறையை எதிர்த்து ஒன்றுதிரண்ட மக்கள் போராட்டம் இங்கும் தோல்வியைத் தழுவியிருக்கிறது. அத்தோல்வியின் வடுவாய் மூலக்கொத்தளச் சுடுகாட்டின் தென்கிழக்கில் மிகப் பிரமாண்டமாய் எழுந்து நிற்கின்றன எலும்புகளின்மேல் கட்டிய அடுக்குமாடிக் குடியிருப்புகள்.

வடசென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்டது மூலக்கொத்தளம். சென்ட்ரல் ரயில் நிலையத்தின் கிழக்கே உள்ள வால்டாக்ஸ் சாலை வழியாகவும் பாரிமுனையில் இருந்து சென்றால் வள்ளலார் நகர் பேருந்து நிலையம் வழியாகவும் இங்கு செல்லலாம். சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஷேர் ஆட்டோவில் ஏறி, வால்டாக்ஸ் சாலை முடியும் இடத்தில் உள்ள கருவாட்டுச் சந்தையில் இறங்கி, எதிர்ச் சாலையைக் கடந்து சுடுகாட்டுக்கு வழிகேட்டு, ஒருவழியாகப் பாளையத்தம்மன் தெருவைப் பிடித்துச் செல்லும் போது சுடுகாட்டின் அருகே வந்திருப்பதை அறிந்தேன். மைதானத்தையும் சுடுகாட்டையும் பிரிக்கும் வகையில் அமைக்கப்பட்ட இரும்பு வேலியைத் தடுப்பாக்கிக் கைப்பந்தாட்டம் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களிடம் சுடுகாட்டுக்குள் போகும் வழியை விசாரிக்கையில் அவர்கள் கைகாட்டிய திசையில் மழைநீர் சூழ்ந்திருந்தது. எனவே, வேறு திசையைத் தெரிவு செய்ய நேர்ந்தது. சுடுகாட்டுக்குக் கிழக்கே காட்படாவும் ராமதாஸ் நகரும் மேற்கே ஸ்டாலின் நகர், நாகப்பன் நகர், அம்பேத்கர் நகரும் அமைந்துள்ளன. வடக்கே தண்டவாளங்களும் தெற்கே பெரிய பாளையத்தம்மன் தெருவும் சூழ்ந்துள்ள மூலக்கொத்தளம் சுடுகாடு சுமார் 35.43 ஏக்கர் பரப்புகொண்டது. சுடுகாட்டுக்குள் 10 ஏக்கர் அளவில் இரண்டு மைதானங்கள் உள்ளன.

புதருக்குள் மண்டிய கல்லறைகளை வேடிக்கை பார்த்தபடி நகரும்போது, கருவேல மரக்கிளை உரசியபடி இருந்த சமாதி மேட்டில் கேரம் போர்டு விளையாடிக்கொண்டிருந்தனர். காய்களின் நகர்தலை உற்றுப் பார்த்தபடி பார்வையைத் திருப்பும்போது, சிமென்ட்டினால் பூசிய சமாதியின் மேல் அமர்ந்தபடி ஒருவர் மலம் கழித்துக்கொண்டிருந்தார். அங்குமிங்குமாக இருந்த சமாதியின் மேற்பகுதி புதரைத் தாண்டி எட்டிப் பார்த்தன. இவ்வளவுதானா சுடுகாடு என்று கணத்தில் ஏமாற்ற உணர்வு தென்பட்டது. ஆனாலும், பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இங்கு மொழிப் போர் தியாகிகளின் நினைவிடத்திற்குத் தோழர்களுடன் வந்திருந்தது நினைவுக்கு வந்தது. அந்நினைவில் உழன்ற இடத்தினைத் தேடி புதர்களைத் தாண்டும் போதுதான் பரந்த நிலப்பரப்பின்  எண்ணிலிறந்த கல்லறைகளில் முதலில் சிலுவை பொறித்த கல்லறைகள் தெரிந்தன. அருகே ஆரஞ்சு நிறச் சமாதியின் நடுவே கறுப்பு நிறத்தைச் செவ்வகமாக அடித்து K.மோகன் (SBI Rtd) Foot Ball Player என்று பொறிக்கப்பட்ட கல்லறை சற்றே நிதானிக்கவைத்தது. ‘Foot Ball Player’ என்கிற சொற்களை நினைக்கையில் தரையில் எத்திய பந்து ஒன்று வானில் பறப்பதைப் போன்ற படிமம் சற்றென்று தோன்றி மறைந்தது. சில சமாதிகளைச் செடிகள் மறைத்திருந்தன. அவற்றில் ஒன்றிரண்டை விலக்கிப் பார்க்கையில் தார்ச்சாலையின் வடக்கே இருந்த ஏராளமான கல்லறைகள் சிதிலமடைந்தும் பெயர்த்தெடுக்கப்பட்டும் கிடந்தன. அதனிடையே ஆடுமாடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. ஒன்றிரண்டு ஆடுகள் தூரத்தில் ஒதுங்கி நின்ற அமரர் ஊர்தியில் தொங்கிய மலர்மாலைகளை இழுத்துக் கடித்தன.

சுடுகாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் நடராசன், தாளமுத்து கல்லறை தவிர்த்து சுற்றியிருந்த இடம் புல்பூண்டுகள் அகற்றப்பட்டு, உழுத நிலம் போல் காட்சியளித்தது. நடராசன், தாளமுத்துவின் நினைவுத் தூண்களில் படிந்த செம்மண்ணைக் கழுவிக் கொண்டிருந்த நபரிடம் “இந்த இடம் ஏன் இவ்வளவு சுத்தமாக இருக்கிறது. இங்கும் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளனவா’’ என வினவினேன். சமூக சேவை செய்துவருவதாகத் தன்னை அறிமுகப்படுத்தியவரின் பெயர் இருதயராஜ். “புதர் மண்டிக் கிடந்ததால் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு ராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஐட்ரீம் மூர்த்தி இங்கு வந்திருந்தார். கால்பந்து, கூடைப்பந்து, ஸ்கேட்டிங், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பூங்கா ஆகியவற்றைச் சுமார் 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இங்கு அமைக்கவிருப்பதாகக் கூறி அடிக்கல் நாட்டிச் சென்றார். அதிகாரியின் வார்த்தைகள் கிணற்றில் போட்ட கடப்பாரையாய் மௌனமாகக் கிடக்கின்றன. இங்கிருக்கும் மக்களுக்குச் சரியான கழிப்பறை வசதியில்லை. இரண்டு கழிப்பறையில் ஒன்று பூட்டப்பட்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான மக்களின் அடிப்படைத் தேவையை ஒரே ஒரு கழிவறை எப்படிப் பூர்த்தி செய்யும்? மேலும் சுடுகாட்டில் பழுதான தெருவிளக்குகள் உள்ளன. இருளில் சமூக விரோதக் கும்பலின் நடமாட்டம் அதிகமாகத் தொடங்கியிருக்கிறது’’ என்று அங்கிருந்த ஒட்டுமொத்த மக்களின் குரலாய் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

சுடுகாட்டின் வடகிழக்கே இடிந்துகிடந்த சிமென்ட் பில்லரைச் சம்மட்டியால் அடித்து உடைத்து இரும்புக் கம்பிகளைச் சேகரித்துக்கொண்டிருந்த வாலிபர்களின் அருகே முக்காடு போட்டிருந்த இரு பெண்கள் சுடுகாட்டில் மேயும் ஆட்டுமணிகளின் ஓசை அவ்வப்போது கேட்கின்றனவா என்றபடி கூர்ந்து நோக்கியபடி அமர்ந்திருந்தனர். சுத்தம் செய்திருந்த நிலத்தின் நடுவே மலம் கழித்துக்கொண்டிருந்த பெண்ணைக் கண்டு வடகிழக்கில் திரும்பிச் சென்றேன். அங்கே ‘பார்ப்பான் குளம்’ என்றழைக்கப்படும் குளம், இடிந்த கல்லறைகளைக் கரைகளாய்க் கொண்டிருந்தது. இக்குளத்தைத் தூர்வாரி சுற்றிச் சுவரமைக்க இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் இன்னும் அரசின் செவிசாயவில்லை என்பதை மக்களின் வழியாக அறியமுடிந்தது. அக்குளத்தின் கறுப்பு நிறத்தில் தூண்டிலிட்டுக்கொண்டிருந்தார் ஒருவர். குளத்தின் வடக்கே கொருக்குப்பேட்டை என்கிற பெயர் பொறிக்கப்பட்ட கல்லறையை அடுத்துத் தோண்டிய குழியொன்று புதிய பிணத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தது. அதனருகே ரோஜா இதழ்களின் நடுவே பிணவாசனை மண்ணிலிருந்து ஆவியாகி நாசியைத் துளைத்தது. அது பிணவாசனைதானா என்கிற சந்தேகத்தில் மீண்டும் மீண்டும் நுகர்ந்தேன். இன்னும் ஈரம் காயாத ரோஜா இதழ்களின் நறுமணத்தைத் தாண்டி தசைவாசம் காற்றில் மிதந்து நாசிக்குள் ஊடுருவியதை மீண்டும் உறுதிப்படுத்தியபடி சுடுகாட்டின் மையத்தை நோக்கி நகர்ந்தேன். குடியிருப்பு போன்றிருந்த சுவரின் பின்பக்கமாகப் புதரை விலக்கியபடி நடந்தபோது, மலம் கழித்துக்கொண்டிருந்தவர் செல்போன் திரையில் தன் முகத்தைப் பதித்திருந்தார். தூரத்துப் புதைமேட்டை நாயொன்று நக்கிக்கொண்டிருந்தது. அதனருகே சென்று பார்த்தேன். சாம்பல் நிறப் புதைகுழி மேட்டில் ஜாதி மல்லி மொட்டுகள் பரந்து உதிர்ந்துகிடந்தன. இரண்டாய் அறுத்த கொய்யாப் பழத் துண்டுகளில் ஒன்று மல்லாக்கவும் மற்றொன்று ஒருக்களித்தும் கிடந்தன. வாழைப்பத்தின் மேல் ஊன்றிய நான்கு ஊதுவத்திகள் பழத்துடன் சாய்ந்திருந்தன. உதிராச் சாம்பல் தொடுக்கிக் கொண்டிருந்தது. திறந்தநிலைத் தண்ணீர்ப் போத்தலுக்கும் தீப்பெட்டிக்கும் நடுவே உதிர்ந்து கிடந்த காராப் பூந்திகளை உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கையில் எதிரே எலும்பும் தோலுமாய் இருந்த கிழவி வெண்கோணி பிதுங்கப் பிதுங்க வேப்பிலைகளைக் கட்டி தூக்கமுடியாமல் தூக்கிச் சென்றாள். கல்லறைகளின் மீது போடப்பட்டிருந்த கருவேல முட்புதர்கள் காய்ந்து கிடக்க, அதனருகே ஆறடி நீளவாக்கில் கிடந்த புடவையில் ஓர் உடல் சதையற்று எலும்புகளாய்க் கிடந்தது. புதைக்கப்படாததா இல்லை மறைக்கப்பட்டதா இல்லை எப்படி கபாலம், நெஞ்செலும்பு, கால், கை என மொத்த எலும்புகளும் ஓர் உடல் வடிவத்தில் வெளியே அதுவும் புடவையினுள் கிடக்கின்றன என்கிற மர்மம் இன்னும் துரத்துகிறது.

நாயக்கர், முதலியார், நாடார் எனத் தனியாகக் கல்லறைகள் பிரிந்துகிடந்தன. சுடுகாட்டின் கிழக்கே வீட்டின் ஒரு பகுதியாகச் சமாதி உள்ள வீடுகளில் வசிக்கும் ராமதாஸ் நகர் உள்ளது. மூலக்கொத்தளம் சுடுகாட்டுக்குப் பிணங்கள் இந்த வழியாகத்தான் வரும். இதுதான் சுடுகாட்டுக்குச் செல்லும் மூலவழியாக இருந்தது. இப்போது சுடுகாட்டின் தெற்கும் மேற்குமாக நான்கைந்து வழிகள் உள்ளன. நாள்தோறும் பிணங்கள் செல்வதையே தங்கள் வாழ்வியலாக்கிக் கொண்ட இச்சாலையோர மக்கள் நிரந்தரமாகத் தங்குவதற்குத்தான் 2018இல் அப்போதைய அதிமுக அரசு குடியிருப்புகளைக் கட்டித்தரும் திட்டத்தைத் தொடங்கியது. ஆனால், குடியிருப்புகள் கட்ட தெரிவு செய்த இடம்தான் அதிர்ச்சியளிக்கக்கூடியது. சுடுகாட்டின் தென்கிழக்கில் இருந்த சமாதிகளை இடித்து அகற்றிதான் அங்கு குடியிருப்புகளைக் கட்ட திட்டமிட்டது. தம் மூதாதையரின் எலும்புகளின் மேல் குடியிருக்க யாருக்குத்தான் விருப்பம் இருக்கும். வலுத்தோங்கியது எதிர்ப்பு. போராட்டக் களத்தில் மக்களுடன் சில அமைப்புகளும் கட்சிகளும் துணை நின்றன. ஏனிந்தப் போராட்டம்? மூதாதையரின் கல்லறைகளை அகற்றுவது மட்டும்தான் காரணமா என்றால், இல்லை என்ற பதில்தான்.

விதவைகள் மறுமணம், கலப்பு மணம், பெண் கல்வி என இம்மூன்றிற்கும் தன் வாழ்வையே அர்ப்பணித்த மருத்துவர் தருமாம்பாள் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். 1938இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து பின் சிறையில் இறந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நடராசனின் உடல் இங்குதான் எரியூட்டப்பட்டது. அந்நிகழ்வில் அறிஞர் அண்ணா, தந்தை பெரியார், முத்தையா செட்டியார், மேயர் பசுதேவ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அதிலிருந்து கிட்டத்தட்ட அறுபது நாட்களுக்குள் மொழிக்காகத் தன் இன்னுயிரை நீத்த தாளமுத்துவின் நினைவிடமும் இங்கு தான் உள்ளது. நடராசன், தாளமுத்து இருவருக்கும் தந்தை பெரியார் தலைமையில் நினைவுச் சின்னம் கட்டப்பட்டது. தொடக்க விழாவில் பேசிய பெரியார், “நாம் இன்று கட்ட ஆரம்பித்திருக்கும் வீரர்களின் ஞாபகார்த்த கட்டடமானது அதைப் பார்க்கும்தோறும் ஒவ்வொரு தமிழனுக்கும் உண்மையிலேயே அவனது அடிமை வாழ்வும் சமூகத்தில் தான் அமிழ்ந்துகிடக்கும் சூழ்ச்சியும் நினைவுக்கு வந்து அதைத் தகர்த்தெறிய உடனே வீரனாக விளங்குவான்’’ என்று கூறியுள்ளார். `என் உடலை எரித்துவிடாதீர்கள், துருப்புச் சீட்டாக வைத்துக்கொண்டு முடிந்தவரை போராடுங்கள்’ என்று ஈழப் போரை நிறுத்தச் சொல்லிப் போராடி சென்னை சாஸ்திரி பவனில் தீக்குளித்த முத்துக்குமார் மூலக்கொத்தளச் சுடுகாட்டில்தான் எரியூட்டப்பட்டார். ஈழத் தமிழருக்காகத் தீக்குளித்த எஸ்.எம்.அமரேசன் கல்லறையும் இங்குதான் உள்ளது.

இப்படி வரலாற்றுப்பூர்வமான சுடுகாட்டை அகற்றிவிட்டு அங்கு ஆதிதிராவிட மக்களுக்குக் குடியிப்பைக் கட்டுவதாக நாடகமாடிய அப்போதைய அதிமுக அரசு, தன் அமைச்சர்களுக்கு இங்கு வீடு கட்டிக்கொடுக்குமா, அப்படியே கட்டிக்கொடுத்தாலும் அமைச்சர்கள்தான் இங்கு வசிப்பார்களா. எரியும் பிணத்தின் வாடையும் புகையும் அருகிலிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் நாசியைத் துளைப்பதாக மொத்தச் சுடுகாட்டையும் அகற்றும் நோக்கில் 1.5 ஏக்கரைச் சுற்றிவளைத்துவிட்டனர். சுடுகாட்டின் தென்கிழக்கில் தகனமேடையை மட்டும் ஒதுக்கிவிட்டு எஞ்சிய பகுதியிலிருந்த கல்லறைகளை இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளனர். இங்கு அடுக்குமாடிக் கட்டடம் கட்டித் தரப்போவதாக கடந்த ஆட்சியில் அதிகாரிகள் கூறியுள்ளனர். நிலத்தை அபகரித்ததால் எஸ்.சி/எஸ்.டி கமிஷனில் வழக்கும் தொடுக்கப்பட்டது. இதுகுறித்து மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ அப்போதைய ஆளுங்கட்சியை நோக்கி, “சுடுகாட்டை அழிப்பதன் மூலம் திராவிட இயக்கத்திற்கே கேடு விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறீர்கள். இவ்வாறு சுடுகாட்டில் கையை வைத்தால் அந்த அதிகாரம் சுடுகாட்டுக்குத்தான் போகும்’’ என்று எச்சரித்திருந்தார். இங்கு வாழும் மக்கள் பாட்டன், பூட்டன் காலத்திருந்து நான்கு தலைமுறைகளாக இறந்தவர்களை இங்குதான் அடக்கம் செய்கிறோம் எனக் கொந்தளிந்துள்ளனர். ஆனால், எதுகுறித்தும் கிஞ்சித்தும் கவலையற்ற அப்போதைய ஆளும் கட்சியான அதிமுக அரசு திட்டப் பகுதி குறித்து அரசாணை வெளியிட்டது.

அரசாணை எண்.249, நாள் 04.08.2017 சிறப்பு நிபந்தனைகள்

  1. காற்று மாசு ஏற்படாமல் அப்பகுதியைக் காத்தல்
  2. மயானத்தில் தொன்றுதொட்டுக் கடைபிடித்துவரும் பழக்க வழக்கங்களுக்குக் காப்புறுதி அளித்தல்
  3. மயானப் பகுதியில் அமைந்துள்ள கல்லறை களுக்குப் பாதிப்பு ஏற்படாதவண்ணம் பாதுகாத்தல்
  4. சாலை, பொதுக் கழிப்பிடம், பூங்கா, விளையாட்டுத் திடல்கள் தொடர்ந்து இயங்குவதற்கு உத்தரவாதம் அளித்தல்
  5. மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், பொதுக்கழிப்பிடங்கள், அலுவலகங்கள் ஆகிய வற்றுக்கு இடையூறு செய்யாமல், மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலேயே இருக்க உத்தரவாதம் அளித்தல் ஆகிய சிறப்பு நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.

சென்னை மாவட்ட ஆட்சியரின் புலதணிக்கைக் குறிப்பு, நாள் 15.12.2016 இன் படி நடைபெற்ற புலதணிக்கை ஆய்வில் திட்டப் பகுதி 1 இல், புல எண்.1802/1இல், 2 ஏக்கர் 58 சென்ட் பயன்பாட்டில் உள்ள மயானம் என்றும், திட்டப் பகுதி 2 இல் புல எண்.1802/1இல், வடக்கில் ஒரு ஏக்கர் 96 சென்ட் மயானம் மற்றும் கல்லறைகளாகப் பயன்பாட்டில் உள்ளது என்றும், கிழக்கில் ஒரு ஏக்கர் 55 சென்ட் இறந்தவர்களைப் புதைக்கும் மயானமாக இருந்து, தற்போது புதர்களாக உள்ள பகுதி என்றும், பகுதி 3 இல் ஒரு ஏக்கர் 43 சென்ட் பழைய சமாதிகள், கல்லறைகள் உள்ள பகுதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களின் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்த அப்போதைய ஆளும் கட்சியான அதிமுக 2018இல் சுடுகாட்டுக்குள் தொடங்கிய கட்டடப் பணியை 2020இல் முடித்துவிட்டது. அப்போது ராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து பின் அமைச்சராகப் பதவி வகித்த டி.ஜெயக்குமாரின் தலைமையில்தான் சுடுகாட்டின் சமாதிகள்  அகற்றப்பட்டு குடியிருப்புக் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுடுகாட்டை ஆக்கிரமித்தது திமுக ஆட்சியில் மேயராக இருந்த மா.சுப்பிரமணியன் என்றும் பின் ஆட்சி மாறியதும் குடியிருப்பைக் கட்டுவதை ஜெயக்குமார் தன் கையில் எடுத்துக்கொண்டார் என்கிற பேச்சும் அடிபடுகிறது. 2020 இல் குடியிருப்புகள் கட்டிமுடித்தாலும் இரண்டு ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் உள்ளது. 84.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 648 வீடுகள் கொண்ட ஒரு குடியிருப்பும், 54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 396 வீடுகள் கொண்ட மற்றொரு குடியிருப்பும் கட்டிமுடித்து மூன்று ஆண்டுகளாகியும் குடிநீர், கழிவுநீர், மின்சார இணைப்புகள் இன்னும் வழங்கப் படவில்லை. சென்னைப் பெருநகர வளர்ச்சி ஆணையமும் (CMDA), சுற்றுச்சூழல் துறையும் அனுமதி வழங்கவில்லை என்பதே இதன் அடிப்படைக் காரணம். மர்மத்தில் மறைந்த மர்மமாக நீள்கின்றன மூலக்கொத்தளச் சுடுகாடும் அங்கு கட்டிமுடித்துத் திறக்கப்படாத குடியிருப்புகளும்.

சின்னஞ்சிறியதாய் இருந்த சென்னப்பட்டணம் கடல் போல் விரிந்துசென்றுகொண்டே இருக்கிறது. தேசம், இனம், மொழி கடந்து உலக மக்கள் இங்கு வந்து நிலம் வாங்கிக் குடியேறும் போக்கும் அன்றாடம் அரங்கேறுகிறது. சென்னைப் பூர்வகுடி மக்களைப் பிடுங்கி நகரத்தின் வெளியே எறிவது தொடர்கதையாகி வருவது ஒருபுறம் என்றால் பக்கிம்காங் கால்வாய், கூவம் நதி இவற்றின் ஓரங்களில் வசித்த மக்களையும் எறிந்து அவ்விடத்தில் பூங்காக்கள், நடைபாதைகள் அமைக்கும் நுண்ணரசியல் மற்றொருபுறம் மிகத் துரிதமாக நடக்கின்றன. இவற்றிலிருந்து மாறுபட்ட வடிவத்தில் இப்போது சுடுகாட்டுக்குள் அடுக்குமாடிகளைக் கட்டிக்கொடுக்கும் போக்குத் தொடங்கியிருக்கிறது. இதை முனையிலேயே கிள்ளி எறிந்து சாலையோர மக்கள் வாழ மாற்று இடத்தைத் தெரிவுசெய்து தர வேண்டும்.

வனங்கள், மலைகள், கடல் என இயற்கை அனைத்தையும் கூறுபோட்டு காசு பார்த்துவிட்ட அரசுக்கு மேலும் மேலும் கோடிகளைப் பதுக்க எங்களின் மூதாதையரின் கல்லறைதான் கிடைத்ததா என்னும் கேள்வி மூலக்கொத்தள மக்களின் அடி நெஞ்சில் கனலாய் எரிகிறது. அதிமுக ஆட்சியில் நடந்த இந்த அவலத்தைத் தற்போதையைத் திராவிட மாடல் ஆட்சி தகர்த்தெறியுமா, இல்லை மொழிப் போர் தியாகிகளின் கல்லறைக்கும் அடுக்குமாடிக்கும் 500 மீட்டர் தூரம்தான் உள்ளது, சமாதியேதும் இடிக்கப்படவில்லை என்று அதிமுக சொன்ன பொய்களை வழிமொழிந்து கோடிகளைப் பங்கிடுமா?

புகைப்படங்கள்: கபிலன் சௌந்தரராஜன்

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger