தனக்கு முலையூட்டியவளையும்
தன் மகனுக்கு முலையூட்டுபவளையும்
தழல் வெளிச்சத்தில் கண்ட கரியன்,
அவர்தம் கண்களில் தெரிந்த
தவிக்கும் பாவைகளை
காணத் தவறவில்லை;
தாயின் முகத்தில் கூடுதல் பயிர்ப்பு;
காதல் கிழத்தியின் சருகலத்தில்
குளிர்கால நடுக்கம்;
ஓர் ஆழ்ந்த பெருமூச்சுக்குப் பின்
இனக்குழு நோக்கிய கரியன்
ஓர்ப்புடன் பேசினான்-
“மறவோனே…
இக்காட்டின் ஆதித் தகப்பன்
புலியின் முதுகெலும்பை
வில்லாக வனைந்தவன் என்று
கதைகள் கேட்டிருக்கிறோம் ;
நீருக்குள் துண்டிக்கப்பட்ட
தன் தொப்புள் கொடியை
வெயிலில் காய வைத்தெடுத்துக்
கொலைக்கருவிகள் செய்தவள்
நமது ஆதித் தாய் என்ற பண்
இன்றளவும் நம் சடங்கில் ஒலிக்கிறது;
நம்முடைய குலச்சின்னம்
பகைக் குழுக்களுக்கு
அச்சத்தை விளைவிக்கும் ஒன்றாக
இருப்பதை யாமறிவோம்;
பனைகளை வேரொடு பெயர்க்கும்
வலு கொண்ட புயங்கள் எமது;
இந்தப் புதிய எதிரிகள்
பூண்டுச் செடிகளைப் போன்றவர்கள்;
சொடுக்குப் போடும் நேரத்தில்
பிடுங்கிக் குவித்துவிடுவோம்;
ஆயிரம் சிட்டுக்குருவிகள்
கூட்டமாக எழுந்து பறக்கும்போது
பேரொலியொன்று எழுமே அறிவீர்!
அஃதே போல் பறக்கக் கூடியவை
நமது அம்புகள்;
நாம் விசையுடன் எறியும் ஈட்டி
தரையில் போய் குத்தினால்
எதிரிகளின் குதிரைகள்
பயத்தில் புழுக்கை போட்டுவிடும்;
காட்டுச் சகதியில்
ஓட்டப்பந்தயம் நடத்தும்
நமது குதிகால் பலம் பற்றி
அவர்கள்
அறிந்திருக்க வாய்ப்பில்லை;
மறவோனே!
பருந்துகள் தங்கும் போரையில்
பாம்புகளால் வசிக்க முடியாது;
தீரமேற்றும் கதைப்பாடல்களை
பாணர்களை இயற்றச் சொல்லுங்கள்;
பறைகளை முழங்கச் சொல்லுங்கள்;
கொம்புகளை ஊதச் சொல்லுங்கள்;
கள் நாறும் பனங்காட்டில்
கொண்டாடும் வாகைக்காக
அடையாளப் பூக்களை
நம் காடு மலரச் செய்யட்டும்.”
♦
“பண்டுவரே…
உணவில் மருந்துள்ளபோதும்
நம் தினவுக்கு மருந்தறியுங்கள்;
கிழங்கிலும் வேரிலும்
சாறிலும் நீரிலும்
ஊனிலும் குருதியிலும்
எலும்பிலும் நிணத்திலும்
பூ இலை காய் கனி விதையிலும்
நீயறியும் மருந்துகள் நானறிவேன்;
இருப்பினும்,
பண்டுவம் முடிவில்லாதது என்பதும்
உன் தேடல் எல்லையற்றது என்பதும்
ஊரறியும்;
வீரமும் கலைகளும்
வளர்ந்த போதிலிருந்தே
கூடவே வளர்ந்தது பண்டுவம்;
அத்துறையின்
மரபு வழி அறிவுச் சேகரம்
உம்மிடம் இருக்கிறது;
உன் மூக்கும் நாக்கும்
மருந்தறியும் நுட்பங்களை
விலங்கறியவும் வாய்ப்பில்லை;
சுவை மணம் நிறம் பொழுது பருவம்
அனைத்தும் உனக்கு உதவும்;
பண்டுவரே!
எப்போது வேண்டுமானாலும்
செருக்களம் புகக்கூடும்
இப்போதிலிருந்தே
குடிகளின் சருகலம்
படிக்கத் தொடங்குங்கள்.”
♦
“கணியரே…
நம்மை வழிநடத்தும் நட்சத்திரங்கள்
வானில் தெரிகின்றனவா ?
நம் இதயத்தின் மொழியறிந்த நற்குறி
எத்திசையில் இருக்கிறது?
அதோ…
அங்கே கேட்கிறதே
அந்த ஆலா பறவைகளின் குரல்,
அதன் பொருள் என்னவோ?
இதோ…
இங்கே ஒளிர்கிறதே
மின்மினிக் கூட்டம்,
அதன் வெளிச்சத்தில்
எதை உணர்ந்தீர்?
வடக்கு நோக்கித் தலையுயர்த்தி
நாய் ஊளையிடுகிறதே
நாட்டார் தெய்வங்கள்
அங்கே நிற்கின்றனவா?
இருளோடு இருளாக இருந்து
நம்மைக் கண்ணுறும்
காகங்களின் மௌனமான கண்கள்
ஏதேனும் தீ நிமித்தம் அறிந்தவையா?
புதர்களைக் குலுக்கிவிட்டு ஓடும் விலங்கு
எதை அறிவுறுத்துகிறது?
தொலைவில் கேட்கும் ஓலம்
நமக்குரியதா,
நம் எதிரிக்குரியதா?
கணியரே! கூறுங்கள்.
காலம் நமது பக்கம் நிற்கிறதா?
அப்படியானால்
நமது அம்புகளிலும் ஈட்டிகளிலும்
உறைந்துள்ள குருதிகளின்
துருவை நீக்க வேண்டும்;
சொல்லுங்கள்…
குதிரையின் கவுட்டியில் புகுந்து
நெஞ்செலும்பை நொறுக்கும்
வேட்டை நாய்களின் பற்களை
கூர் தீட்ட வேண்டும்;”
♦
பாணரே…
முருகியல் மொழி
முறுக்கிய பறை
உயிர் தொடும் பாட்டு
உணர்வெழும் கூத்து
வாழ இது போதும்;
தினை விளையும் காடு
குடி மகிழும் வீடு
சிறு குருவிகள் கூடு
சின்னஞ் சிறியதே வாழ்வு
வாழ்த்த இது போதும்;
ஆனால்,
பாணரே…
போர் வெறியைத் தூண்ட
இது போதாது;
வாளெறிய ஒரு பாட்டு
அம்பு சீற ஒரு பாட்டு
ஈட்டி பாய ஒரு பாட்டு
எட்டித் தாக்க ஒரு பாட்டு
முட்டித் தூக்க ஒரு பாட்டு
முறித்துப் போட ஒரு பாட்டு
வெட்டிச் சாய்க்க ஒரு பாட்டு
வெகுண்டு மோத ஒரு பாட்டு
புனையுங்கள் பாணரே;
கோட்டுப் பறையால்- ஒரு
வேட்டை நடத்துவோம்;”
♦
“பங்காளிகளே…
மாட்டுக் கொம்புபோல்
வலு கொண்ட கணுக்கால்களால்
ஒரே உதையில்
எதிரியின்
விலா எலும்பை முறிக்கும்
மறத்திமிர் கொண்டவர்களே…
உடும்பு புரண்டெழுந்த காட்டில்
முயலைத் துரத்தும்
நமது வேட்டை நாய்கள்
ஆகாயத்தை மூடும் அளவுக்குப்
புழுதியைக் கிளப்பும் என்பதை
எதிரி அறியான்;
தொடைக்கறி தின்று வளரும்
வேட்டை நாய்களின் சினத்துக்கு முன்
புற்களைப் பிடுங்கித் தின்னும்
குதிரைகள் எம்மாத்திரம்?
அங்காளிகளே….
இந்தக் காட்டுக்குள்
நமது வெறுங்கால்களைப் போல
அவர்களுடைய சப்பாத்துகளோ,
குளம்புகளோ
ஓட முடியாது என்பது
எதிரிக்குத் தெரியாது;
சாரைப் பாம்பின் கொழுப்பைப் பூசி
கால்களை உரமேற்றுங்கள்.
(தொடரும்….)
Art by : subhash vyam