பனைமரங்கள் பறையறையும் காட்டில்
தொடைச்சதைகள்
நலுங்காமல்
நடப்பது தகுமா!
எக்காளம் இல்லாத நடை
களிப்பாகுமா?
எலே பங்காளி
நம்
முதுகில் ஊறும் உப்புத்தண்ணி
குதிகால் சதையில் விழுந்து
இந்தக் கொதிக்கும் நிலத்தில் தெறித்தால்
செத்துப்போன செடிகளெல்லாம்
உயிர் பிழைக்க வேண்டும்
பூமிக்குள் புதைந்ததெல்லாம்
மூச்சு விடவேண்டும்
நடையைக் கூத்தாக்குடா நண்பா!
பாலையாகக் காட்சி தரும் காடு
நாம் வழித்தெறியும் வியர்வைக்குக்
கொஞ்சம்
நாக்கு நனைத்துக்கொள்ளட்டும்
அதோ
முயல் மணத்தை மோந்துவிட்ட
வேட்டைநாயின் பாய்ச்சலில்
தொன்மை நடனம் தெரிகிறது காண்
அந்தக் கும்மாள ஓட்டத்துக்குத் தோதாகக்
குதிக்கும் மொழியில் பாடுக பாணா!
கழுதைப் புலியைப்போல் சிரிக்கும்
எதிரியின் கொட்டம்
உதையால் மட்டுமல்ல
நம் கலையாலும் அடங்கும்.
எகத்தாளம் கொண்டவனை
எக்காளக் கூத்தாடி
புறங்காட்டி ஓடவிடலாம்
எருமைக் கொம்பெடுத்து
ஏழுரும் கேட்கும்படி
ஊதித் தெறிக்கவிடலாம்
எலே பங்காளி
கூத்தும் பாட்டும்
வீரத்தை வளர்க்கும்
குருவியும் புலியைக்
குத்திக் கிழிக்கும்
எலும்பைக் கடித்துத் தின்னும்போதும்
நறநறவென்றதில் இசையும் பிறக்கும்
நம் வாழ்வில்
சகலத்திலும் கலையுள்ளது – நம்
சருகலம் முற்றிலும் கலையாலானது.
காட்டுச் சிறுக்கியின்
காதல் தலைவா !
நம் மூக்கு விடைக்கிறது காண்
அது வெறும் விடைப்பல்ல
வாசனைத் துளைப்பதால்
மூக்காடும் ஆட்டம்.
பன்றி முண்டியதால்
பிதுங்கிக் கிடக்கின்ற
கோரைக் கிழங்கின் மணம்
காற்றில் நிரம்பியிருக்கிறது
அல்லியும் கொட்டியும்
விளைந்துள்ள குளத்தில்
வேர்களைத் தழுவும் நத்தைகள் உண்டு
கள்ளுண்டு களித்த பின்னே
நீர்நிலை வேட்டை ஆடுவோமா?
அதோ பாரடா!
கரிசல் நிலமெங்கும்
கழுகுகளின் நிழல்கள்.
நம் காதற்கிழத்திகளின்
பாதச்சுவடுகளைப் பார்ப்பது போலவே இருக்கின்றன காண்.
உவமையைக் கேட்டால்
காடைகள் முட்டை வைத்த
புதர்களுக்குள்
பகற்குறிக்கு இடம் பார்ப்பது போலுள்ளதே!
ஆகட்டும் காட்டுராசா…
உன் கூரைக்கு மேலே
கொண்டலைத் திரட்டி வை
கோழிக் கொண்டைக்காரிக்குப்
பூசணிப்பூ நிறம்
கனத்த இருட்டிலும் ஒளிர்வாள்
நற்குறியாக இன்று
மழை பொழியட்டும் மூக்கா…
கள் வாடையை மோந்ததற்கே
அகப்பாடலில் உச்சத்தை எட்டுகிறாய்
மொந்தையைக் கண்டுவிட்டால்
ஊருக்கு நாலு காமக்கிழத்திகளைக் கோருவாய் போலே…
அடேய் உடன் பங்காளி !
கள்ளிப் பழத்தின் உள்ளேயிருக்கும்
ஒற்றை முள்ளைப்போல்
தன் காமம் வளர்ப்பவள்
என் தலைவி
கூடை நிறைய நத்தைகளைக்
கொண்டு போய்க் கொட்டினால் போதும்
வேகவைத்த கறியில்
கறிவேப்பிலையைக் கிள்ளிப்போடும் விரல்களால்
என் இரவின் மீது
வாசனையை நிரப்புவாள்
ஊருக்குப் புரையேற வைத்துவிட்டு
மூக்கு முட்ட மோகம் வளர்ப்போம்.
என் களவு வாழ்க்கைக்குத்
துணை நின்ற பாங்கனே
என் பங்காளியே
உனக்குத் தெரியாதா என்ன?
நம் கரிசக்காட்டு மேடுகளில்
ஒரு முயலைத் துரத்துவதற்கு
எவ்வளவு பலம் தேவையோ
அதைவிட அதிக பலத்தோடு
நம் கால்கள் ஓடிய மணற்காடு அவளுடையது.
நம் இரவுக்குறியில்
ஊருக்குத் துர் நிமித்தமாக இருந்த ஆந்தைகள்
நமக்கு நன்னிமித்தமாக இருந்ததை
அறிவாய்
எத்தனை விரியன்களைப்
பாதையில் கண்டிருப்போம்!
கோடைக்கால நடுப்பகலை விட
குளிர்கால சாமங்கள் கொடுமையானவை என்று
பாடல் புனைந்தாயே
நினைவிருக்கிறதா பாணா?
எலும்புகளைத் துளைபோடும்
பனிக்காற்றை
எனக்காக எதிர்கொண்டாய்
மறப்பேனா…
நட்புக்கு எப்போதும் உப்பிடுவேன்.
கோட்டுப்பறையை
வேட்டுப்பறையாக இசைப்பவனே…
கள் நாறும் காட்டில்
மூக்கு விடைக்காமல்
காதுகள் விடைக்கின்றனவே ஏன்?
எதிரிகள் நட்ட கொம்பில்
உறைந்திருந்த குருதியில்
நாக்கைப் புரட்டிய காட்டுப்பூனைகள்
கத்துவது கேட்கிறதா?
ஈட்டிகளை நிற்க வைத்தாற்போல் தோற்றம் தரும்
கம்பங்கதிர்கள் வளர்ந்த காட்டில்
புலி கூடப் புகாது என்பார்கள்
ஆனால்,
பன்றிகள் புகுந்து ஓடும்
நரம்பை முறுக்கேற்றும்
அந்த நிலக்காட்சியிலிருந்து
வெளியே வா!
அதோ…
நமக்காகக் கள் பானையை
இறக்குகிறான் நம் தோழன்
நுரைத்த பனங்கள்ளை
ஒரே மூச்சில் உறிஞ்சினால்
புறமுதுகிட்டு ஓடும் எதிரிகளெல்லாம்
நம் வீரயுகத்தைப் பாடுவார்கள்…
(தொடரும்…)