நோய் நாடி நோய் முதல் நாடி

தலையங்கம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டாரத்தில் உள்ள தென்முடியனூர் கிராமத்தின் மாரியம்மன் கோயில் வழிபாட்டில் நிலவும் சாதி பாகுபாட்டுக்கு எதிராக அங்கிருக்கும் தலித் வகுப்பினர் இரண்டாண்டுகளுக்கு முன் போராட்டத்தைத் தொடங்கினர். தொடர் போராட்டத்தின் விளைவாக மாவட்ட நிர்வாகம் அம்மக்களோடு பிறரும் சேர்ந்து வழிபடுவதற்கான ஏற்பாட்டை அப்போது செய்துதந்தது.

இதற்குப் பிறகு இருதரப்பாரும் சேர்ந்து அக்கோயிலில் வழிபட்டிருக்க வேண்டும். இந்தியாவை ஆளும் சட்டம் அதற்கு வழிகாட்டியிருக்கிறது. ஆனால், அங்கு அவ்வாறு நடக்கவில்லை. சாதி இந்துக்கள் அக்கோயிலில் வழிபட வருவதைக் குறைத்துக்கொண்டனர். நாளடைவில் வருவதையே நிறுத்திக்கொண்டனர். இப்போது அது தலித்துகள் மட்டும் வழிபடும் கோயிலாகி இருக்கிறது. இரண்டு தரப்பாரும் ஒன்றாக வழிபட வேண்டும் என்பதே தலித் மக்கள் போராட்டத்தின் நோக்கமாக இருந்தது. அதனை சாதி இந்து தரப்பு புறக்கணித்துவருகிறது. பாகுபாடு கூடாது என்பதை உறுதிபடுத்த முடிந்த சட்டத்தால் வர விரும்பாதவர்களை நிர்பந்திக்க இயலாது.

இன்றைக்குச் சாதி முழுக்க முழுக்க மனப்பான்மை சார்ந்த விசயமாகவும் ஆகிவிட்டது. பாபாசாகேப் அம்பேத்கர் சாதி எவ்வாறு ஒரு குணாம்சமாக இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார். அது ஒரு மனநிலை என்பதை விவரித்திருக்கிறார். அதனையே நாம் இங்கு பார்க்கிறோம். சுதந்திர இந்தியாவில் தலித்துகளுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு சட்டம்தான். அதன் துணை கொண்டு பாகுபாடுகளுக்கு எதிராகப் பாதுகாப்பை உருவாக்கிக்கொள்கின்றனர். ஆனால், சாதி இந்துக்கள் சட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாக வளைத்துக்கொள்ளும் வரை அதற்குள் இயங்குகின்றனர். ஒருகட்டத்தில் சட்டத்தை மீறி எதுவும் செய்ய முடியாது என்ற நிலை வரும்போது – அவற்றை ஏற்றாக வேண்டிய இடம் வரும்போது – அவற்றிலிருந்து விலகிக்கொள்ள முயற்சிக்கின்றனர். உடனே தங்களைப் பாதிக்கப்பட்டவர்களாகக் கட்டமைத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். அதன் வழியாக மீண்டும் தங்கள் சாதியினரை அரசியல் ரீதியாகத் திரட்டிக்கொள்ள விரும்புகின்றனர். இதுவொரு வித்தியாசமான போக்கு மட்டுமல்ல, மிரட்டல் என்றே சொல்ல வேண்டும். எங்கெல்லாம் சிறிய அளவு சட்டத்தின் ஆட்சி நிறுவப்பட்டதோ அங்கெல்லாம் இதுபோன்றே நடக்கத் தொடங்கியிருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு உத்தபுரம் தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்டபோது அதை எதிர்த்து அங்கிருந்த அதிகார சாதியினர் மலையில் சென்று குடியேறியதைப் பார்த்தோம். பாகுபாட்டிற்கு எதிரான சட்டம் இயற்றப்பட்டதன் நோக்கம் இதுவல்ல. எல்லோரும் சமத்துவமாக வாழ வேண்டும் என்பதே அதன் நோக்கம். இதனைப் புரிந்துகொள்ளவோ எதிர்கொள்ளவோ நம் அரசியல் சூழலிடம் எந்த யோசனையும் இல்லை என்பதுதான் பெரும் பிரச்சினை.

தலித்துகள் பிரச்சினையில் தலித்துகள் போராடினார்களா, இல்லையா, எப்படிப் போராடினார்கள், எங்கு முன்னகர்ந்தார்கள், எங்கு விடுபடல் நடந்தது என்று பார்க்கப்படுகிறதே ஒழிய சிவில் சமூகம் இதிலிருந்து முற்றிலும் விலகிக்கொள்கிறது. சமூக வலைதள விவாதங்களும் இத்தகைய கேள்விகளோடு முடிந்துவிடுகின்றன. இவற்றிலிருந்து சாதி பாகுபாட்டைக் கடைபிடிக்கும் – பிரச்சினைகளுக்குக் காரணமான சாதி இந்துக்கள் முற்றிலும் தப்பித்துவிடுகின்றனர். தங்களால் உண்டாக்கப்படாத – தாங்களே பாதிக்கப்படுகிற பிரச்சினைக்குத் தலித்துகளே பொறுப்பேற்றுக்கொள்கிற போக்கே இங்கு நிலவுகிறது. இதன் மூலம் சாதி ஆதிக்கம் என்பது தலித்துகளின் பிரச்சினை என்பது போல மீண்டும் மீண்டும் நிறுவப்படுகிறது. முதலில் இந்தச் சொல்லாடலிலிருந்து தலித்துகள் வெளியேற வேண்டும். இன்றைய பிரச்சினைகளுக்குத் தலித் அல்லாதவர்களைப் பொறுப்பேற்கச் செய்கிற சொல்லாடல்களை – நிர்பந்தங்களை உருவாக்க வேண்டும். சாதி என்பது ஒட்டுமொத்த சமூகத்தின் குறிப்பாக, தலித் அல்லாதவர்களின் நோய் என்பது உணர்த்தப்பட வேண்டும். நியாயப்படி பார்த்தால் சமூகநீதி மண்ணாகச் சொல்லப்படும் தமிழகத்தில்தான் இன்றைய தலித் வன்முறைகளுக்கு எதிரான செயற்பாடுகள் உருவாகியிருக்க வேண்டும். ஆனால், அப்படியொன்று இங்கு எழவில்லை என்றால் நிலவும் முற்போக்குச் சொல்லாடல்களின் நிலை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

சாதிய மனப்போக்குக் கொண்ட தலித் அல்லாதவர்கள் இடையேதான் இன்றைக்கு வேலைகள் நடைபெற வேண்டியிருக்கிறது. அதைத் தலித்துகள் செய்வதைக் காட்டிலும் தலித் அல்லாத சாதியைச் சேர்ந்த அமைப்புகளோ, ஆளுமைகளோ செய்வதுதான் எளிமையானது. சுயசாதிகளுக்கு இடையே பணியாற்றுவது தேவைப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் அப்படியோர் இயக்கமோ, தலைமையோ ஒன்று கூட இல்லை என்று நாம் சொன்னால் அதை மிகையென்று கூற முடியுமா? தமிழ்நாட்டில் நேர்மையான, அர்ப்பணிப்பு மிக்க பணிகளோ தலைமைகளோ இருந்திருக்கவில்லை, இப்போதும் இல்லை என்று நாம் சொல்லவில்லை. அப்படியான வரலாறு தமிழகத்திற்கு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால், அது தலித் அல்லாதவர்களிடையே சென்று அவர்களின் தலித் எதிர்ப்பு மனநிலைக்கு எதிராகச் செயற்படவில்லை என்பதை யோசிக்கக் கோருகிறோம். சமூக நீதி பயணத்தில் நாம் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம், இருக்கும் இடத்திலேயே திருப்தி கண்டு அடுத்த கட்டம் நோக்கிப் போக மறுக்கிறோம் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இந்தப் பயணத்தில் இன்னும் செல்லாத இடத்தில் இருப்பவர்களாக தலித்துகளே இருக்கின்றனர். சாதி விசயத்தில் உள்ளூர் அரசியல் கட்சிகளின் பாதையையே மதவாத பாஜகவும் பின்பற்றுகிறது.

தமிழ்நாட்டில் எவ்வளவோ ‘பணிகள்’ நடந்திருப்பதாக வரலாறு காட்டிக்கொண்டிருக்கிறோம். ஆனால், பாகுபாடுகள் குறைவதற்கு மாறாக அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது என்றால் இதுவரையிலான பயணத்தைக் குறித்துப் பரிசீலனையும் சுயவிமர்சனமும் மேற்கொள்ள வேண்டும். இத்தகைய தொடர் அனுபவங்களின் விளைவாகத் தலித்துகள் ‘பிழை’யான வேகத்தை வெளிப்படுத்தினால் உடனே அவைதாம் மொத்த பிரச்சினையின் மையம் என்பது போலாக்கும் போக்குதான் இங்கு இருக்கிறது. இதுவும் தங்களுக்குரிய பிழைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளும் மற்றொரு தந்திரம்தான். காந்தியும் பெரியாரும் தலித்துகளுக்குச் செய்ததைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருப்பதைக் காட்டிலும், அவர்களை விமர்சனப்பூர்வமாக ஏற்கிறோம் என்றாலும் இவர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கான செயற்பாடுகளிலாவது இறங்குங்கள் என்று கேட்கிறோம். வைக்கம் பற்றியும், நவகாளி பற்றியும் சொல்லிக்கொண்டிருப்பதைக் காட்டிலும் இன்றைய மேல்பாதியிலும், தென் முடியனூரிலும் எந்தத் தலித் அல்லாதவரும் வந்து சாதிக்குக் காரணமானோரிடம் ஏன் பேசவில்லை என்று கேட்கிறோம்.

Previous
மூளி

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger